Friday, December 31, 2004

பூம்புகார் பகுதி நிலவரங்கள்சென்னையில் வந்த புது சுனாமி பரபரப்பினால் நேற்றிரவே மயிலாடுதுறை வந்துவிட்டேன். கிழக்கு கடற்கரையோரம் வழியாக செல்லும் பேருந்துகள் சுனாமி பயத்தால் தாம்பரம் வழியாக திருப்பிவிடப்பட்டிருந்தன. பாண்டிச்சேரி வரையிலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லாரி நிறுத்தப்பட்டு அதில் பழைய பொருட்களை மக்களிடம் சேகரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. கூடவே பயணித்த நபர் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம். குடும்பம் காரைக்கால் பக்கத்தில் இருக்கிறதாம். இரண்டு இடங்களிலுமே சுனாமி அச்சுறுத்தல்கள் என்பதால் குடும்பத்தோடு இருப்பதே நல்லது என்று முடிவெடுத்து பஸ் ஏறிவிட்டார். பாண்டிச்சேரியில் கடற்கரையோரமாக இருந்த மக்கள், வீடுகளை பூட்டிவிட்டு நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். ஆக்ரோஷ அலைகள் எதுவுமில்லை என்றாலும் கடலில் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதாக பாண்டிச்சேரியில் எனக்கு செய்தி கிடைத்தபோது இரவு மணி ஒன்பது.

சுனாமி அச்சுறுத்தல்கள் இருந்தாலும் பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என வழியெங்கும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை என்பது தெரிந்தது. இன்று காலையில் மயிலாடுதுறையிலிருக்கும் இரண்டு முகாம்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தேன். வாசலில இரண்டு லாரிகள். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் தனியார் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட துணிமணிகள், அரிசி மூட்டைகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு மணிநேரத்திற்கொருமுறை இதுபோல ஏதாவது ஒரு லாரி வந்து இறங்குவதாக வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் குறிப்பிட்டார். முகாம்களில் அதிகமாக கூட்டமில்லை. காலை சாப்பாட்டிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குழந்தைகள் அன்பர்கள் கொண்டு வந்து கொடுத்த புடவைகளை உத்திரத்தில் கட்டி தொங்கவிட்டு அதில் ஏறி உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சென்னைக்கு தொடர்புகொண்டு பாராவிடமும் பிரசன்னாவிடம் நிலைமையை தெரிவித்தேன். ஒருபக்கம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து வந்த மாணவர்கள் குழு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். நேற்றுவரை டிஸ்போஸிபிள் சிரிஞ்சுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாக தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகிலிருக்கும் முகாம்களில் இத்தகைய சிரிஞ்சுகள் இல்லாமல் ஓரே ஊசியை வெந்நீரில் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததாக கூட வந்த நண்பர் சொன்னார். (ஆனால், மாலையில் கிடைத்த தகவலின் படி இன்று காலையை மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து இடங்களிலிலும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு கிடைக்க வழி செய்திருந்தது)

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் படுத்து தூங்க சரியான பாய் இல்லை என்று தெரிவித்தார்கள். அவர்களில் சிலர் இன்று பாய்களும், போர்வைகளும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்கள். நண்பர்களிடம் பேசி நாளைக்குள் 50 பாய்கள் கிடைக்கும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறேன். மற்றபடி துணிமணிகள், சாப்பாடு போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் பக்கமிருக்கும் இன்னொரு முகாமுக்கு சென்றபோது காலை மணி பத்து. முகாமில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சோகத்தினாலோ, அசதியினாலே உறங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு பற்றி பேச்சு எழுந்ததால் நண்பர்களோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று இங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பின்னர் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பூம்புகாரை நோக்கி பயணமானோம்.

பூம்புகார், மயிலாடுதுறையிலிருந்து கிழக்குபுறமாக சரியாக 24கிமீ தொலைவிலிருக்கிறது. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையும் சீர்காழி-காரைக்கால் சாலையும் சந்திக்குமிடம்தான் மேலையூர். மேலையூரில் சாலையோரத்திலேயே இருக்கும் சீனிவாச மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்கள் கிட்டதட்ட 300 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி. ஒரு பக்கம் உணவுப் பொட்டலங்கள், இன்னொரு பக்கம் புத்தம் புதிய பெட்ஷிட்கள் என்று ஏரியாவே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் ஒரு மூலையில் தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய துணிகள் பரப்பி வைக்கப்பட்டு பிள்ளைகள் அதன் மீதேறி விளையாடிக்கொண்டிருந்தனர். புதிதாக துணி கொண்டுவருபவர்களை அந்த இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வதாக முகாமில் மக்கள் தொடர்பு வேலையிலிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு பூம்புகாருக்கு கிளம்பினோம்.


ஊருக்குள் நுழைந்ததுமே வந்த கெட்ட துர்நாற்றம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தவிட்டோம் என்பதை அறிவித்துவிட்டது. சுற்றுலாபயணிகளின் வருகையால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சிலப்பதிகா கலைக்கூடத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அருகிலிருந்து பூங்காவின் காம்பவுண்டுகள் எல்லாமே சிதைந்து நொறுங்கிப்போய் ரோட்டில் கிடந்தன. கடலிலிருந்து 700 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உள்ளே புகுந்திருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். உள்ளே புகுந்த கடல்நீரால் பூங்காவிலிருந்த செடி, கொடிகள் எல்லாமே பட்டுப்போய் பச்சை நிறங்களை இழந்திருப்பதை காண முடிந்தது. நிலநடுக்கம் வந்தால் வெட்டவெளியில் நிற்பது என்கிற விஷயம் இங்கே தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டிடத்தில் தஞ்சமடைவதையே விரும்புகின்றனர்.

கடலோரத்திலிருந்த நீச்சல் குளத்திற்கு பலத்த சேதம். நீச்சல் குளத்திலிருந்து இடது புறமாக கிராமத்தினுள் நடந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இங்கே ஒரு தெரு இருந்தது என்று நண்பர் கைகாட்டிய இடத்தில் நான்கு ஓலைகளும் இரண்டு குடங்களும் மட்டுமே இருந்தன. சிமெண்ட் கொண்டு அரை அடி சைஸில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கூட சுக்குநூறாக உடைந்து கிடந்திருந்தன. நிறைய மச்சு வீடுகள் திறந்தே கிடந்தன. இங்கிருந்தும் ஒரு சடலத்தை எடுத்தோம் என்று நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் காய்ந்து போன நான்கு இட்லிகளும் இன்னும் பிரிக்கப்படாத சாம்பார் பாக்கெட்டும் கிடந்ததை மறக்க முடியாது.


அங்கிருந்து புதுக்குப்பம் என்கிற கிராமத்திற்கு நடந்தே சென்றோம். இருநூறு வீடுகள் இருந்த இடங்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்ட மாதிரி இருந்தன. இடம் முழுவதும் மஞ்சள் நிற மண்களை கறுப்பு நிற போர்வையால் மறைத்தது மாதிரி இருந்தது. 100 சதவீதம் சடலங்களை அகற்றி விட்டதாக சொன்னாலும் அதிகமான துர்நாற்றத்தினால் ஒரு அளவுக்கு மேல் கிராமத்தினுள் உள்ளே சென்று பார்க்கமுடியாது போய்விட்டது. திரும்பி வரும்போது இன்னொரு சின்ன கிராமம். பெயர் தெரியவில்லை. ஊர் முழுவதும் பிளீச்சிங் பவுடரை இறைத்துகொண்டிருந்தார்கள். இங்கேயும் தெரு முனையில் பழைய துணிமணிகள் மக்களின் உபயோகத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கென்னவோ இதே நிலைமை தொடரும் பட்சத்தில் குவியும் பழைய துணிகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் செலவழித்து பாதிக்கப்ட்ட மக்களை பார்த்து பேசிவிட்டு திரும்பவும் காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு காட்சியையும் பார்க்க முடிந்தது. திருப்பூரிலிருந்து வந்த நண்பர்கள் குழு ஒன்று பாலிதீன் பேக்கில் புத்தம் புதிய போர்வைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நான்கு பேர் நின்று வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பின்னர் அடுத்த அரைமணி நேரத்திற்கு யாருமே வாங்க வரவில்லை. உதவும் மனப்பான்மையோடு வெகுதொலைவிலிருந்து வந்தவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.


அங்கிருந்து நாங்கள் போன இடம் நான் ஏற்கனவே பலமுறை போயிருந்த வாணகிரி கிராமம். பூம்புகாரிலிருந்து கடல்வழியாக இது மூன்று கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆனால், சாலை வழியாக சென்றால் 8 கிமீ தூரத்தை கடந்தாகவேண்டும். நவக்கிரக யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஊர் பிரபலம். இங்கிருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் கேது பகவானின் ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் இருக்கிறது. வாணகிரி கிராமத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான பாதிப்பில்லை. மீனவர்களின் குப்பத்திற்குதான் பாதிப்பு. இந்த கிராமத்தில் மட்டும் 60 பேர் இறந்து போனதாக தகவல். ஆனாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிகொண்டிருக்கிறார்கள். கடலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கும் வெட்டவெளியில் ஓலைக் குடிசைகளையும் துணிகளையும் வைத்து வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தின் எந்த தெருவிற்கு போனாலும் ஏதாவதொரு தொண்டு நிறுவனம் ஏதாவதொரு உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தது. சேலம் பக்கத்திலிருந்து வந்திருந்த மெடிக்கல் டீம் தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு கடல்கொந்தளிப்பு பற்றி மக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

குப்பங்களின் உள்ளே சென்று நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறை 300 வீடுகள் இருக்கும். பெரும்பாலானவர்கள் சி¨த்ந்த வீடுகளின் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். முகாம் வாழ்க்கை அவர்களை சலிப்பில் தள்ளிவிட்டிருக்கக்கூடும். முகாமில் சாப்பிட்டுவிட்டு பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்துவிட்டு இரவு நேரத்தில்தான் முகாமுக்கு திரும்புகிறார்கள். முடிந்தளவுக்கு காமிராவால் படமெடுத்துக்கொண்டுவிட்டேன். எல்லாவற்றையும் அப்லோட் செய்ய இரண்டொரு நாட்கள் ஆகும்.

சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்களை நட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இரண்டொரு நாட்களில் பகுதிகக்கு மின்சாரம் வந்துவிடும் என்றார்கள். ஒரு வீட்டில் கடல் தண்ணீரில் ஊறிப்போன மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கையில் நான் எடுத்து பார்த்தும் வீட்டு வாசலிலி உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு அழுகை தாங்கமுடியவில்லை. அவருடைய பையனின் பாடப்புத்தகம் என்று கூட இருந்த பெண்மணி சொன்னதும் தர்மசங்கடமாகிவிட்டது எனக்கு.

கடல் தண்ணீரே வாழ்க்கையாக இருந்தவர்களுக்கு இதெல்லாமே புதிதான எதிர்பாராத விஷயம்தான். மழை, புயல்களையெல்லாம் எதிர்கொண்டவர்களுக்கு இதுவொரு மோசமான அனுபவம். ராட்சத புயல் வந்திருந்தால் கூட அவர்களால் தப்பித்திருக்க முடியும். சிலரின் கருத்துக்கள் புதுவிதம்¡க இருந்தது. வந்தது கடல் தண்ணீர் மாதிரியே இல்லை. கருப்பு கலரில் சாக்கடைத்தண்ணீர் போல எங்கள் மீது பாய்ந்து வந்தது என்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதுபோலவே கடற்கரை முழுவதும் கருமணலாகவே காட்சியளிக்கிறது. சுனாமி அலைகள் வருவதற்கு முன்பாக படகுகள் ஓன்றையொன்று மோதிக்கொண்டதாக சொன்னார்கள். கரையில் தலைக்குப்புற கிடக்கும் படகுகள் எல்லாமே மரக்காணம், நாகப்பட்டினம் என வெவ்வேறு இடங்களிலிருந்து அடித்துவரப்பட்டவை.

கிளம்பும்போது மகளில் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் தனது சோக கதையை சொல்லிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் பேசினோம். மொழிதெரியாதவர்களெல்லாம் சாப்பாடும், துணிமணிகளும் கைநிறைய கொடுப்பதாக சொன்னார். பேச்சின் இடையே தன்னுடைய ஒரு பேரனும், மருமகளும் இறந்துவிட்டதாக சொன்னார். தான் மார்க்கெட்டுக்கு போனதால்தான் தன்னால் தப்பிக்க முடிந்தது என்றார். பாய், போர்வை வேண்டுமா என்று கேட்டதற்கு சிதைந்து போயிருந்த தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்வையை காட்டி அது போதும் என்றார். கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. அவர் வசிக்கும் தெருவில் எத்தனை பேர் இறந்தார்கள், எப்போது உதவி கிடைத்தது என்பதையெல்லாம் விவரமாக சொன்னார். உடம்பை பார்த்துக்கோ பாட்டின்னு சொல்லிவிட்டு கிளம்பும்போது அவர் சொன்ன வார்த்தைதாடன் என் கண்களில் கண்ணீரை முட்டிக்கொண்டு வரவழைத்துவிட்டது.

'சாப்பிட்டு போங்கய்யா....'

Wednesday, December 29, 2004

மீட்பு நடவடிக்கையில் மந்தம்

ஆட்கள் பற்றாக்குறையினால் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அழுகிப்போன சடலங்களும், தொற்று வியாதி குறித்த பயங்களும் பலரை நெருங்க விடாமல் செய்து வருகின்றன. வாணகிரி கிராமத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக வந்த என்ஜிஓ அமைப்பை சேர்ந்தவர்களை மக்கள், கிராமத்தின் உள்ளே விட மறுத்ததாக ஒரு செய்தி.பெரும்பாலான முகாம்களில் தேவைக்கதிகமான உடைகளும், உணவுகளும் தேங்கியிருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். உணவு, அரிசி, உடைகளை ஏற்றிவரும் லாரிகளில் அந்தந்த முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, குளச்சல் போன்ற இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டன.தமிழகம் முழுவதும் 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல உணவு அளிக்கப்படுகிறது. முகாம்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு உதவி கிடைக்கும் என்று கிளம்பிய செய்தியினால் பெரும்பாலானோர் முகாம்களை விட்டு வெளியே வருவதில்லை.நாகப்பட்டினத்தில் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு உடம்பு சரியில்லாத போனதன் காரணத்தால் பெரும்பாலான நாகை மாவட்டத்து கல்லூரிகள் மீட்பு நடவடிக்கைகளிலிருந்து தங்களது மாணவர்களை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளனர்.கடலூரில் மீட்பு நடவடிக்கைகளுக்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் ஒரு செய்தி.நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை உயரிழிந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர்களுக்கு வேஷ்டி, சேலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60 கிலோ அரிசி, இரண்டு பெட்ஷீட், இது தவிர குடும்பத்திற்கு தேவையான அத்தியாசிய பொருட்களான சமையல் பாத்திரங்கள், ஸ்டவ் உள்ளிட்ட சாமான்கள் வாங்க என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4912 ரூபாய் நாளை முதல் அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வழங்கப்படுகிறது.

இது தவிர மீனவர்களின் படகு, கட்டுமரம் போன்றவற்றை பழுதுபார்க்கவும், புதிதாக வாங்கவும் அரசின் சார்பில் 65 கோடி ருபாய் செலவிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவில் சிறு மாற்றம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

ஆக, உதவ விரும்பும் உள்ளங்கள் கொஞ்சம் நிதானம் காப்பது நல்லது என்றே தோன்றுகிறது.

கடலோர கிராமங்கள் - தற்போதைய நிலவரம்கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற பகுதிகளிலிருக்கும் முகாம்களில் உணவு, உடை, மருந்துகள் போன்ற உதவிகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உடைகளை பொறுத்தவரையில் ஏராளமாக குவிவதால் மேற்கொண்டு சேகரிப்பது....தற்போதைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன். எனவே, அன்பர்கள் சேகரித்த பழைய ஆடைகளை ஆங்காங்கே வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் நேரத்தில் நானே வந்து வாங்கிக்கொள்கிறேன். இவ்வார இறுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்துபின்பு நம்மால் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

வெளிநாடுகளிலிருந்து இணைய நண்பர்கள் போன் மூலம் தங்களது அனுதாபங்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். நண்பர் பி.கே.சிவகுமாரின் உதவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க ஆயிரம் பெட்ஷீட்கள் இணைய நண்பர்கள் சார்பாக கரூரிலிருந்து பெறப்பட்டு பூம்புகார் மற்றும் தரங்கம்பாடியை ஒட்டியுள்ள கடற்கரையோர கிராமங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இரண்டு நாட்களில் முழுமை பெற்றுவிடும்.

சீர்காழி பகுதியில் புதுக்குப்பம் என்ற கிராமத்தில் மீனவர் குப்பம் அழிந்ததால் 600 பேர் இறந்துவிட்டனர். பூம்புகாரை சுற்றியிருக்கும் மேலையூர், வாணகிரி போன்ற கிராமப்பகுதிகளிலும் வெகு சிலரே எஞ்சி இருக்கின்றனர். சீர்காழியிலிருந்து தரங்கம்பாடி வரையுள்ள கிழக்கு கடற்கரையோர கிராமத்தில் 500 மீட்டர் தொலைவிலிருக்கும் எல்லா இருப்பிடங்களும் அழிந்து விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றுடன் அனைத்து சடலங்களையும் மீட்டுவிட முடியும் என்றே சம்பந்தப்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தற்போது போதுமான உதவிகள் கிடைத்துவருகின்றன. இதே நிலை இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று நம்பலாம்.

எனவே, இணைய நண்பர்கள் நிதியுதவி செய்வதற்கு கால அவகாசம் நிறைய இருக்கிறது. பத்து நாட்களில் நிஜமான நிலை தெரிந்து விடும். அதற்கு பின்னர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமத்தை தத்தெடுத்து அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது நல்ல யோசனையாக இருக்கும் என்று நம்புகிறேன். இணைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

Tuesday, December 28, 2004

ஒரு வேண்டுகோள்

மேலையூர், திருவங்காடு உள்ளிட்ட பூம்புகாருக்கும் தரங்கம்பாடிக்கும் இடைப்பட்ட கடற்கரையோர கிராமங்களில் உணவு, உடையின்றி மக்கள் தவிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை அன்பர்களிடமிருந்து பழைய துணிகளை சேகரித்துக்கொண்டு வியாழன் இரவு மயிலாடுதுறை செல்லலாம் என்றிருக்கிறேன்.

பழைய துணிகளை வைத்திருக்கும் அன்பர்கள் எனது சைதாப்பேட்டை இல்லத்தில் வந்து கொடுத்தால் செளகரியமாக இருக்கும். முடியாதவர்கள் என்னை செல்போனில் அழைத்தால் அவர்களது இடத்துக்கே வந்து வாங்கிக்கொள்கிறேன்.

வெளிநாட்டு அன்பர்கள் இங்கிருக்கும் உள்ளூர் அன்பர்களை தொடர்புகொண்டு இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கோர கேட்டுக்கொள்கிறேன். பழைய துணிகளை வியாழன் மாலைக்குள் எனக்கு கிடைக்கும்படி செய்யவும்.

எனது முகவரி

ராம்கி, புது எண் 100 பழைய எண் 50, நாகா மெடிக்கல்ஸ் மாடி, இரண்டாவது தளம், ஜோன்ஸ் ரோடு,
சைதாப்பேட்டை, சென்னை - 15.

எனது செல் நம்பர்
நிதியுதவி செய்ய விரும்பும் அன்பர்களுக்காக எனது ICICI வங்கி கணக்கு விபரங்களை கொடுத்துள்ளேன். டெபாசிட் செய்ததும் விபரங்களை தயவு செய்து எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கவும்

Monday, December 27, 2004

கரை மேல் பிறக்க வைத்தான்.. கண்ணீரில் மிதக்க வைத்தான்...

நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட கரையோர இடங்களில் இன்று அதிகாலை முதல் மழை. நாகப்பட்டினம் வெறிச்சோடி இருப்பதாக செய்தி. காலை ஆறு மணிக்கு அந்தமான் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு இருந்ததாக ஆஜ்தக் தெரிவிக்கிறது.
கல்பாக்கம் அணுமின் நிலைய உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு க¨யோர மாவட்டங்களில் எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டுள்ளது.தனுஷ்கோடியும் அதனைச் சுற்றியுள்ள சிறு தீவுகளும் தகவல் தொடர்பின்றி துண்டிக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த போதுமான விபரங்கள் இல்லை.


கடற்கரையோர மாவட்டங்களில் ஜெயலலிதா, மணிசங்கர் அய்யர் சுற்றுப்பயணம். சிவராஜ் பாட்டீல், அத்வானி சென்னை வருகை.
அந்தமான் நிகோபர் உள்ளிட்ட தீவுகளின் தகவல்தொடர்பு தொடர்ந்து துண்டிப்பு. இலங்கையில் 6000 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்.

நாகப்பட்டினம், வேளாங்கண்ணி பகுதியிலிருந்த மீனவர் குப்பங்கள் அடையாளம் தெரியாத வகையில் சிதைவு.

காரைக்கால் கடற்கரையோர பகுதிகளில் மீட்புநடவடிக்கைகளுக்கு ஆளில்லை. மீனவர் அமைப்புகளும், ரசிகர்மன்றங்களும் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

புதிதாக கட்டப்பட்டிருக்கும் நாகை மேம்பாலம் சேதம். வாகனங்கள் ஊருக்குள் நுழைய முடியாத நிலை.

கன்னியாகுமரியில் சாமி கும்பிட வந்த ஐயப்ப பக்தர்கள் 12 பேரை காணவில்லை.
சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கும் கடற்கரையோர சாலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

நாகை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 1000 பேர். அதில் பாதிப் பேர் வேளாங்கண்ணியை சேர்ந்தவர்கள்.

தரங்கம்பாடி கோட்டைக்கு அருகிலிருக்கும் குட்டையிலிருந்து 15 உடல்கள் மீட்பு. கரையோரத்திலிருந்த கல்லறைகள் சேதம்.அரசு மீட்பு நடவடிக்கைகளில் மந்தம். நாகை அரசு மருத்துவமனையில் 150 அடையாளம் காணப்படாத உடல்கள் அடுக்கி வைப்பு. மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

நீண்ட இரவு

தூக்கம் தொலைந்த இரவில் திரளாக ஓடிவரும் அலைதான் கண்முன் நிற்கிறது. இன்னமும் நம்பமுடியாத திகிலாகத்தான் இருக்கிறது. நிலநடுக்க பேச்சுக்கள் முடிந்து விஜய் டிவியில் மதன்ஸ் பார்வையில் லயித்திருந்தபோதுதான் வந்தது அந்த செய்தி.சன் நியூஸ் பார்த்து கிளம்பி மந்தவெளி வழியாக பட்டினப்பாக்கம் அடைந்தபோது அலைகளின் கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. பிளாட்பாரமெங்கும் பெண்களும், குழந்தைகளும். கையில் மூட்டை முடிச்சுகளுடன் கண்ககளில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி... ஓரே நாளில் சென்னை மக்களின் வாழ்க்கையை கடல் நீர் புரட்டிப் போட்டுவிட்டது.பட்டினப்பாக்கம் அரசுக்குடியிருப்பில் மருந்துக்கு கூட ஆளில்லை. முழுங்காலில் பாதியளவு கூட தண்ணீர் இல்லை. ஆனாலும், ஆங்காங்கே மிதக்கும் குடங்களும், பிளாஸ்டிக் வாளிகளும் நிலைமையின் விபரீதத்தை சொல்லிவிடுகின்றன. குடியிருப்புகளைய தாண்டி மீனவர்களின் குப்பத்தை வந்தடைவதற்குள் துணியால் மூடப்பட்ட இரண்டு பிணங்களை பார்க்க முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக கடல் சுருங்கியிருப்பது போல கரையிலிருந்து இருநூறு அடி தூரம் தள்ளி தனது வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தது. நெருங்க ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் ராட்சஸ அலைகள் மேலேழும்பி துரத்த ஆரம்பிக்க பின்வாங்கி ஓடிவந்தேன். இதெல்லாம் ஓரிரு நிமிஷங்கள்தான். மிரட்டிவிட்டு போவதைப் போல திரும்பவும் இருநூறு அடி தள்ளி சாதுபோல நின்று கொண்டது.
அப்போதும் கூட நிலைமையின் சீரியஸ்னஸ் புரியவில்லை. அழகழகான சங்குகள், கிளிஞ்சல்கள் கையில் கிடைத்ததால் மெரீனா கரையோரமாக கண்ணகி சிலை இருந்த இடம் வரை வாக் போய்விட்டு சந்தோம் சர்ச் வரும்போதுதான் கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் பகுதி தகவல்கள் கிடைத்தன. வழக்கம்போல சன்டிவியும் ஜெயாடிவியும் அரசியல் செய்ய, உதவிக்கு வந்தது என்டிவியும் ஆஜ்தக்கும்தான்.இதுவரை தமிழகத்தில் 2400 பேர் உயிரிழிந்திருக்கிறார்கள். (அதிகாரபூர்வமாக 1742 பேர்). இதுவரை உயிரிழந்தவர்களின் விபரம் மாவட்டரீதியாக. சென்னை 243, நாகப்பட்டினம் 788, கடலுர் 300, பாண்டிச்சேரி 280, காஞ்சிபுரம் 58, கன்னியாகுமரி 300.ராணிமேரி கல்லூரி எதிரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் நிலை தெரியவில்லை. அதற்கு பக்கத்திலேயே கடற்கரைக்கு வந்திருந்த இரண்டு லவ் ஜோடிகளும், வாக்கிங் வந்தவர்களையும் காணவில்லை. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மாட்டிக்கொண்ட 500 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பெங்களூரை சேர்ந்த பயணிகளின் பஸ் சேதமடைந்து 60 பேர் உயிரிழப்பு. வேளாங்கண்ணி கடற்கரையில் சர்ச்சை தவிர மற்ற கடைகளெல்லாம் சின்னபின்னமாகியிருக்கின்றன. கொஞ்சநஞ்சமிருந்த தரங்கம்பாடி மாசிலநாதர்கோயில் போன இடம் தெரியவில்லை. தரங்கம்பாடியில் தண்ணீர் நுழைவாயிலை தாண்டி வெளியே வந்திருக்கிறது. சுற்றுவட்டார வயல்களெல்லாம் கடல் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன.பூம்புகாரில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்குளம் நாசமாகிவிட்டது. நாகப்பட்டினம் மெதுவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. பஸ், ரயிலை பிடித்து மக்கள் மயிலாடுதுறைக்கும், திருவாரூக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் தொலைதொடர்பும், மின் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கைகளில் வேகமோ, மந்தமோ இல்லையென்றாலும் தலைவலியாக இருப்பது கொந்தளிப்பு திரும்பவும் வரக்கூடும் என்று பரவிவரும் செய்திகளால்தான். வானிலைச் செய்திகளைத்தான் அரசினால் துல்லியாக கணிக்கமுடியவில்லை. நிலநடுக்கம், கடல்கொந்தளிப்பு விஷயத்திலுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!

Wednesday, December 22, 2004

காலத்தின் கோலம்எமர்ஜென்ஸி வார்டில் இருக்கும் பேஷண்ட் மாதிரி இழுத்து கட்டிவிட்ட மப்ளரையும் மீறி வரும் கடுங்குளிரை தாங்காமல் அப்படியே போர்வையை உடம்பில் சுத்திக்கொண்டு அம்மாவோடு களமிறங்கி, காய வைத்த காபி பொடியை தூவி விட்ட காலமெல்லாம் நினைவுக்கு வருகிறது. கோலம் போடுவது என்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. சின்ன வயதில் குடியிருந்த தெருவில் சொற்ப வீடுகளென்றாலும் எல்லோருடைய வீட்டிலும் கலர் கலரான கோலங்கள் காணக் கிடைக்கும். கலரில் கோலம் போடுவதற்கு அம்மாவுக்கு வராது. ஆனால், சிக்கலான மாவு கோலத்தையே மணிக்கணக்கில் சிரத்தையாக போடுவாள். பெரும்பாலான நாட்கள் கலர் இல்லாமல் மாவு கோலமாக இருப்பதால் சக நண்பர்களின் டெய்லி விசிட்டில் எங்கள் வீட்டு கோலம் வரவே வராது. எங்க அம்மா மாதிரி யாருக்கும் சிக்கலான கோலம் போட வராது என்று நான்தான் வலியப் போய் சொல்லி 'கொள்கை பரப்பு செயலாளர்' வேலை பண்ணுவேன். அதெல்லாம் அந்த காலம்.கொஞ்ச காலத்தில் அந்த மாவு கோலத்தில் இருக்கும் ஆர்வமும் போய், மகள் போடும் கோலத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள் அம்மா. உடன்பிறப்புக்கோ முதல்நாள் ராத்திரியே பேப்பரில் பிராக்டீஸ் பண்ணிக்கொண்டு களத்திலிறங்குமளவுக்கு ஆர்வம். இப்போது குடியிருக்கும் தெருவில் யாருக்கும் கோலம் போடுவதில் பெரிதாக ஆர்வமில்லை. அதனால் போட்டியில்லாமல் ஏதோ பெயருக்கொரு கோலம். நாளைக்கு என்னவெல்லாம் மாறப்போகிறதோ?மார்கழி ஆரம்பிச்சு இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் எங்க பேட்டையில் ஒரு கலர் கோலத்தை கூட கண்ணில் பார்க்க முடியவில்லை. போன வாரம் நங்கநல்லூர் போய்விட்டு பேட்டை திரும்ப ராத்திரி பதினோரு மணியாகிவிட்டது. அந்த ராத்திரி நேரத்திலும் சீரியல் பார்த்துவிட்டு தாய்க்குலங்கள் சிரத்தையாக கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ராத்திரியே 'முறைவாசல்' பண்ணி கோலம் போட்டுவிட்டு படுத்துவிடுவதுதான் சிட்டி ஸ்டைலாம்! கஷ்டப்பட்டு அம்மா போடும் கோலத்தை உடன்பிறப்பு கடைக்குட்டி பத்தே நிமிஷத்தில் சைக்கிள் விட்டு அழித்த காலம் நினைவுக்கு வருகிறது. சிட்டி அம்மாக்கள் போடும் கோலம் எப்படியும் பத்து மணி நேரமாவது இருக்குமே!

காலம் காலமாக பின்பற்றி வரும் கலாசாரத்தை விட்டுவிடாமல் இப்போதைய லை·ப் ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி பின்பற்றும் நம்மூர் சிட்டி அம்மாக்களை நினைத்தால் பெருமையாத்தான் இருக்குது!

Monday, December 20, 2004

பெரியாரும் தமிழிசையும்

"தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றித் தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். அதை யார்தான் ஆகட்டும், ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் குறை கூறவேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன், ஏன் மறுக்க வேண்டும்? இது மிக மிக அதிகமானதும், தமிழனால் மிக மிக வருந்தத்தக்கதுமாகும்.

தமிழன் - தமிழ் மக்கள், தமிழில் பாட்டுக் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். பணம் கொடுப்பவன் , தனக்குத் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட வேண்டுமென்று ஆசைப்படுகிறான்; பாட்டுக்கேட்பவன் தமிழில் பாட்டுப் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறான். இந்த ஆசையில் பழந்தமிழர் அல்லாதார் அதை மறுக்கவே, குறைகூறவோ குற்றம் சொல்லவோ எப்படி உரிமையுடையவர்கள் என்று கேட்கிறேன்.

‘தமிழரென்றும், தமிழரல்லாதவர் என்றும் பேதம் பாராட்டக்கூடாது’ என்பதா கத் தமிழர்களுக்கு அறிவுரை கூறும் இந்தப் பெருமான்களே, ‘தமிழில் பாடவேண்டும் என்பது பொது நலத்துக்குக் கேடு, கலைக்குக் கேடு, கலைநலத்துக்குக் கேடு’ என்று சொல்லவந்தால் - இவர்கள் உண்மையில் தமிழர்- தமிழரல்லாதவர் என்கின்ற உணர்ச்சியைக் குறையச் செய்பவர்களாக, அல்லது நெருப்பில் நெய்யை ஊற்றி எரியச் செய்யும்படியான மாதிரியில் வளரச் செய்பவர்களா என்று கேட்கிறேன். அன்றியும், இப்படிப்பட்ட இவர்கள் தங்களைத் தமிழர்களென்று சொல்லிக்கொள்ளக்கூடுமா? தமிழில் பாடினால் இசை கெட்டுப்போகும் என்றால், மேற்கூறிய தமிழர் அல்லாத தோழர்களைவிட இராஜா சர்.அண்ணாமலை செட்டியார், சர்.சண்முகம் செட்டியார் போன்றவர்கள் குறைந்த அளவு கலை அறிவோ பொது அறிவோ உடையவர்கள் என்பது இவர்கள் எண்ணமா என்று கேட்கிறேன்.

காது, கண், மனம் ஆகியவை எல்லா விஷயங்களுக்கும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருக்க முடியாது என்பது அறிஞர் ஒப்பமுடிந்த விஷயமாகும்.
‘தமிழில் பாடு!’ என்றால், சிலர் - அதுவும் ஒரு வகுப்பாரே பெரிதும் ஆட்சேபணை சொல்ல வந்ததாலேயே , ‘தமிழ் இசை இயக்கம்’ வகுப்புத் துவேஷத்தையும் உண்டு பண்ணக்கூடிய இயக்கமாகவும், பலாத்காரத்தை உபயோகித்தாவது தமிழ் இசையை வளர்க்க வேண்டிய இயக்கமாகவும் ஆக வேண்டியதாய் விட்டது.


அறிஞர்களே! நமக்குப் பாட்டுக் கேட்கக்கூடத் தெரியாது என்றும், நம் மொழியானது பாட்டு இசைக்கக்கூடப் பயன் படாது என்றும் சொன்னால், இந்த இழிமொழி - நம் உயிரைப் போயல்லவா கவ்வுகிறதாயிருக்கிறது என்று மிக்க வேத னையோடு கூறுகிறேன். தமிழ்த் துரோகத்தால் வாழவேண்டியவ னும், வள்ளுவர் சொன்னதுபோல் - ‘குலத்திலே அய்யப்பட வேண்டி யவனுமான தமிழ் மகன்களுக்கு, இது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்வும் நம் எதிரிகளின் புகழுமே அவர்களுக்கு அணியாகவும் அலங்காரமாகவும் முக்கிய இலட்சியமாகவும் இருக்கும்.

தமிழிசை முயற்சி அல்லது கிளர்ச்சி என்றால் என்ன? தமிழ்நாட்டில் தமிழர்கள் இடையில் இசைத் தொழில் வாழ்க்கை நடத்தவோ அல்லது பொருள் திரட்ட ஒரு வியாபார முறையாகவோ கொண்டுள்ள இசைத் தொழிலாளி அல்லது இசை வியாபாரியை இந்த நாட்டானும் பொருள் கொடுப்பவனும் இசையை அனுபவிப்பவனுமானவன், ‘இசை என் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணம் இருக்கவேண்டும்’ என்று சொல்லி விரும்புவதேயாகும். இதில் எவ்வித விவாதமோ, வெறுப்போ ஏற்படச் சிறிதும் இட மில்லை. இந்த முயற்சியும், கிளர்ச்சியும், இத்தனை நாள் பொறுத்து ஏற்பட்டதேன் என்பது தான் அதிசயிக்கத்தக்கதாகும். அன்றியும் எங்களுக்கு இப்படிப்பட்ட இசைச் சரக்குதான் இருக்கவேண்டும் என்று, கொள்வோரும் நுகர்வோரும் கேட்டால் அதைத் தர்க்கித்து ‘நீ இதைத்தான் கொள்ள வேண் டும்’ என்று சொல்லுவது இசைப் பிழைப்பாரின் ஆதிக்கத்தையும், இசை வியாபாரியின் ஆதிக்கத் தையும்-கொள்வோரின் இழிதன்மையையும், வலிவற்ற, மானமற்ற தன்மையையும் காட்டும் அறிகுறியாகும்"

பெரியார். நன்றி - உண்மை மாத இதழ்

விடை தெரியாத சில கேள்விகள் :-

பெரியார், தமிழிசையை ஆதரிக்க காரணம் தமிழ்ப்பற்றா? பிராமண எதிர்ப்பா?

தமிழ் பற்றி பேசும்போதெல்லாம் வெங்காயத்தை கூப்பிட்ட பெரியாருக்கு தமிழ்ப்பற்று உண்மையிலேயே உண்டா, இல்லையா?

தமிழிசையை வளர்க்கவேண்டுமென்றால் முதலில் கர்நாடக இசையின் ஆதிக்கத்தை ஒழித்தாகவேண்டுமா?

Thursday, December 16, 2004

திருந்திட்டேன்!

"என்னப்பா? என்னது உன் கையில?"

"யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க சாமி... நான் சாகப் போறேன்!

"அப்படியா? அப்ப சரி.... ஆனா, எதுக்காக நீ சாகணும்?"

"இல்ல சாமி, இனிமே வாழ்க்கையில என்னால சந்தோஷமா இருக்க முடியாது. அதான்"

"ஒகே, ஓகே....உன் உடம்பு நல்லாத்தானே இருக்குது. உனக்கு அப்படியென்னதான் பிரச்னை?"

"வெச்சிருந்த பணத்தையெல்லாம் செலவழிச்சே அழிச்சுட்டுனே சாமி!"

"சரி, எவ்ளோ பணம்?"

"அதிருக்கும் லட்சக்கணக்குல.."

"அப்படி என்னதான் பண்ணுனே? குடிச்சுட்டு சூதாடி எல்லாத்தையும் தோத்துட்டியா?"

"அய்யோ...அதில்ல சாமி. பிஸினஸ் பண்ணதால வந்த வினை"

"என்னதான் ஆச்சு? புரியுற மாதிரி சொல்லுப்பா!"

"பணத்துக்காக பிஸினஸ் ஆரம்பிச்சேன் சாமி... லாஸ் ஆயிடுச்சு..... வுட்டதை புடிக்க திரும்பவும் பணத்தை இன்வெஸ்ட் பண்ணிணேன். திரும்பவும் லாஸ் ஆயிடுச்சு. இப்ப எல்லோரும் என் சட்டைய புடிக்கிறாங்க.. என்கிட்ட பணம்னு எதுவுமேயில்லை. செத்துப் போயிடலாம்னு தோணுது"

"ப்பூ.. அவ்வளவுதானே? சில லட்சம் லாஸ் வந்ததுனால செத்துப்போயிடலாம்னு முடிவே பண்ணிட்டியா?"

"ஆமா சாமி. உங்களுக்கு வேணும்னா அது சில லட்சமா இருக்கலாம். நீங்க சன்னியாசி. உங்களுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, எனக்கு அது பெரிய விஷயம் சாமி"

"சரி, அந்தப் பணத்தை உனக்கு யாராவது கொடுக்கச் சொல்லி சொல்லிடவா?"

"நிஜமாவா? எப்போ சாமி?"

"நாளைக்கு"

"நிஜமாவா?"

"சத்தியமா"

"எப்போ, நான் திருப்பிக் கொடுக்கணும் சாமி?"

"தேவையில்லை. உனக்கு தேவையானது கிடைச்சப்புறம் எப்போ கொடுக்கணும்னு தோணுதோ அப்ப திருப்பிக் கொடுத்தா போதும்"

"நிஜமாவா? அப்ப என்ன வட்டி கொடுக்கணும் சாமி?"

"வட்டியெல்லாம் எதுவும் கிடையாது. இது வட்டி இல்லாத ·ப்ரீ லோன்"

"ரொம்ப தாங்க்ஸ் சாமி. எல்லா பணமும் கிடைச்சதும் நிச்சயம் நான் திருப்பி தந்துடுவேன்."

மனுஷங்க எப்போதும் உணர்ச்சி வசப்படற ஆளுங்கதான். எப்போ வேணா, என்ன வேணாலும் செய்வாங்க. ஏன்னா எல்லோரும் இந்த உலகத்துல வசதியா, சந்தோஷமா வாழணும்னுதான் நினைக்கிறான். அது முடியாதுங்கிற பட்சத்துலதான செத்துப்போயிடலாம்னு முடிவு எடுக்கிறான். பணம் மட்டும் கிடைச்சுட்டா தனக்கு நல்ல எதிர்காலம் இருக்குதுன்னு எல்லோருமே நினைச்சுட்டிருக்கான். அது தேவைக்கு அதிகமா இருக்கும்போதோ அல்லது சுத்தமா இல்லாதபோதோ எதை வேணும்னாலும் செய்வான்!

- சுவாமி தயானந்த சரஸ்வதியின் பகவத் கீதை உரையிலிருந்து

Friday, December 03, 2004

மொட்டை

ஏர் பிடித்த உழவன் மாதிரி லாவகமாக கத்தியை வைத்து சரசரவென்று இழுத்து போய்க்கொண்டே இருப்பார். தலையிலிருந்து பொத் பொத்தென்று முடிக்கற்றைகளாக தரையில் விழும். கூடவே கண்ணீர் துளிகளும். ஆரம்பத்தில் கொஞ்சம் அசெளகர்யமாக இருக்கும். நாலே நிமிஷத்தில் 'முடிஞ்சுடுச்சுப்பா'ன்னு சொல்லும்போது இன்னும் கொஞ்சம் இழுக்கக்கூடாதான்னு சின்னதா ஒரு ஏக்கம்! சட்டையில்லாத உடம்பில் ஒட்டிக்கொண்ட முடிகளை தட்டி தூக்கிவிட்டுவிட்டு நிற்பவரிடம் சில சில்லறைகளை(?) நீட்டுவார் அப்பா. சோகமாய் சட்டையை சுருட்டிக்கொண்டே அப்படியே நடத்தியே அழைச்சுக்கிட்டு கோயில் குளத்தை நோக்கி நடக்கும்போது இப்பவே குல்லா வாங்கி தரமாட்டாரான்னு தோணும். ஆனா, மனுஷன் வாயே திறக்காம குளத்துக்கு போய் மிச்சம் மீது இருக்கும் டவுசரையும் கழட்டி விட்டு பொம்பளைங்க முன்னாடியே குளத்தில் இறங்கி குளிக்கச் சொல்வார். முங்கி எழுந்து வந்ததும் கையோடு கொண்டு வந்திருக்கும் அரைச்ச சந்தனத்தை தலையில்.... தடவ மாட்டார், சின்னதம்பி பிரபு மாதிரி மொட்டைத் தலையையே மிருதங்கமாக்கிவிடுவார். சந்தனத்தின் குளிர்ச்சியும், கொஞ்ச நாளைக்கு எண்ணெய் தடவி தலையை சீவ வேண்டாமே என்கிற நினைப்பும் சந்தோஷமாத்தான் இருக்கும். ஆனா, அடுத்த நாள் ஸ்கூலில் சக மாணவியர்கள் முகத்தில் வரும் நமுட்டுச் சிரிப்பை பார்க்கும்போது முகமே பேஸ்தடிச்சு போய்டும்!

ஆனாலும் ஒவ்வொருத்தருக்கும் மொட்டை ஒரு இனிய அனுபவம்தான். மொட்டை என்கிற சடங்கு சரியா, தப்பான்னு தெரியலை. இந்து மதம் என்றில்லாமல் மற்ற மதங்களிலும் நேர்த்திக்கடனாக மொட்டை போடுவதில் ஏதோ சைக்காலஜிக்கல் காரணம் இருக்கும்னுதான் நினைக்கிறேன். மொட்டை அடிப்பது இப்போ கொஞ்சம் காஸ்ட்லியான விஷயமாகிவிட்டது. கலோக்கியலா பேசும்போது மொட்டையடிக்கிறது என்பதற்கே வேற அர்த்தம் வந்துவிட்டது. சின்ன வயசில் நிறைய தடவை மொட்டை போட்டிருக்கேன் (போடும்படி ஆக்கப்பட்டிருக்கேன்!). வைத்தீஸ்வரன் கோயிலில் ஆரம்பிச்சு, பழனி, சமயபுரம்னு எட்டாங்கிளாஸ் வர்றதுக்குள்ளேயே நாலு மொட்டை. நாடு இருக்குற இன்றைய நிலைமையில முக்கியமான மொட்டையாக நான் நினைக்கிறது நாகூரில் அடிச்சதைத்தான். லேட்டஸ்ட் மொட்டை, போன வருஷம் திருப்பதியில் 'கவனிச்சு' போட்டது! திருப்பதியில் மட்டும் ஏன்தான் மொட்டையடிச்சதும் சந்தனம் தடவ மாட்டேங்கறாங்களோ தெரியலை! கடலூர் பக்கம் கெமிக்கல் கம்பெனியில் வேலைசெய்யும் என்னோட ·பிரண்ட், முடியிலிருந்துதான் நிறைய கம்பெனியில் பிஸ்கெட் தயாரிக்க புரோட்டீன் எடுக்கிறாங்கன்னு ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு 'உவ்வே' வரவழைச்சான். எத்தனையோ கேள்விகளை ஆனந்த விகடனில் மதனிடம் கேட்டிருந்தாலும் இன்னும் என் நண்பர்களின் ஞாபகத்திலிருக்கும் ஓரே கேள்வி...

'மொட்டையடித்தால் மீசையையும் எடுக்க வேண்டுமா?'

'லேடீஸ் என்றால் அவசியமில்லை!''ப்பூ.... வலைப்பூ ஆரம்பிச்சு இன்னியோட ஒரு வருஷமாச்சே! இன்னிக்கு பார்த்தா இப்படியொரு மேட்டர் எழுதறது?!'

Wednesday, December 01, 2004

கேள்வியின் நாயகனே!

"சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்! ஏன் மத்திய அமைச்சர்கள்மீதும், மற்ற தலைவர்கள்மீதும் இப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்டாலே அவர்கள் வகிக்கும் பதவியிலிருந்து விலகவேண்டும். அல்லது விலக்கப்பட வேண்டும் என்று கூறும் பலர், இந்த சங்கராச்சாரியாரை அவர் வகிக்கும் மடாதி பதி பதவியிலிருந்து உடனடியாக நீக்கி வைக்கவேண்டியது, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமை யாகும்! சட்டம் வளையக் கூடாது என்றோம்; அப்படி யாராவது வளைக்க முயன்றால் அவர்களை மக்களும், உண்மை நாடுவோரும் கடைசிவரைக் கண் காணித்தலும் அவசிய மாகும்! இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாடே எதிர்பார்க்கிறது."

தி.க. தலைவர் கி.வீரமணி அறிக்கையில்...

சில கேள்விகள்

* ஜெயிலில் இருக்கும் ஜெயந்திரரை, விஜயேந்திரர் பார்க்க மறுப்பது ஏன்? இவ்வளவு நடந்தபின்பும் மடாதிபதி பதவியிலிருந்து ஜெயந்திரரை விலக்க முடியாதது ஏன்?

* இந்து சமய அறநிலைய பாதுகாப்புத்துறையால் ஜெயந்திரர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? இந்து அறநிலையத்துறையின் அதிகார வரம்பை எல்லா சமயக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த முடியாதது ஏன்?

* ஜெயந்திரர் கைதை எதிர்க்கும் பிராமண சங்கத்திற்கும் மற்ற ஜாதி சங்கங்களுக்கும் வித்தியாசம் உண்டா?

* சங்கரராமன் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சத்தை அள்ளிக் கொடுத்ததன் மூலம் ஜெயலலிதா சாதிக்க நினைத்தது எதை?

* ஜெயந்திரர் பதவிக்கு வந்த காலத்திலிருந்தே விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸின் கோரிக்கை குறித்து கலைஞர் வாய்திறக்காதது ஏன்?

* எத்தனை நாளைக்குத்தான் ஜெயந்திரர் விஷயத்தில் மெளனச் சாமியாராக இருக்கப்போகிறது காங்கிரஸ்?

* கடைசியாக ஒரு மஜா......! மெய்யாலுமே சொர்ணமால்யா மேட்டர் உண்மைதானுங்களா?!"அய்யோ... சில்லறை இல்லேன்னா ஆளை வுடு சாமி.... தோண்டி துருவாதே! நான் அந்த மாதிரி சாமியாரில்லை!"

Monday, November 29, 2004

திருக்கார்த்திகை தீபம்

தீபத்திருநாள்தான் நமக்கெல்லாம் நிஜமான தீபாவளி! மண்பாண்டத்தில் செய்யப்பட்ட விளக்கு, நல்லெண்ணெய் வாசம், தீபாவளிக்கு வாங்கி வெடிக்காமல் நமத்துப்போயிருக்கும் பட்டாசு, பிசுபிசுவென்று கையில் ஒட்டிக்கொண்டாலும் இனிக்க வைக்கும் பொரி, பெரிய கோயில் சொக்கப்பானை, அதில் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு எடுத்துவரும் கரித்துண்டுன்னு சுவராசியமான நினைவுகள்...

போன வருஷம் திருக்கார்த்திகைக்கு பஸ்ஸில் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே திருவண்ணாமலை போய் சேர்ந்து ஏதோ ஒரு தெரு முனையில் நின்று அண்ணாந்து பார்த்து அண்ணாமலை தரிசனம் செஞ்சதை விட கூடுதல் திருப்தி 'ஜெயா' டிவியின் புண்ணியத்தில் இந்த வருஷம் வீட்டிலிருந்தபடியே கிடைத்துவிட்டது. திருவண்ணாமலைக்கு போனால் கூட கோயில் பிராகாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளை பார்க்க முடியாது. அதுவும் தீபம் ஏற்றியவுடன் திருவண்ணாமலை நகரத்துக்கே வெளிச்சம் வரும் காட்சியை தெருவில் நின்று பார்ப்பதைவிட வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து டிவியில் பார்ப்பதில் பரவசம். அகிலா கிரேனில் சரசரவென்று ஆக்ஷன் படம் மாதிரி காமிரா இயங்கி, எறும்பு போல ஊர்ந்து போகும் மக்களை படம்பிடித்தது அசத்தல். சன்டிவியாக இருந்திருந்தால் டெக்னாலஜியில் இன்னும் அசத்தியிருப்பார்கள். தடையாக இருப்பது பகுத்தறிவு கொள்கையா, சீரியலில் வரும் பணமான்னுதான் தெரியவில்லை! நமக்கெதுக்கு அரசியல்?!

சாம்பிளுக்கு குவாலிட்டி இல்லாத ஸ்டில்ஸ் கொஞ்சம். ஜெயாடிவியிலிருந்து சுட்டவை!

திருவண்ணாமலை சாயங்கால நேரம்...உண்ணாமலை அம்மன் உற்சவத்துக்கு ஆஜர்...கவுண்டிங் ஸ்டார்ட்ஸ்....சிக்னல் கொடுத்தாச்சு!மலை மீது தீபம்!பிரகாசமாய் கொழுந்துவிட்டு...கீழே, கோயில் பிரகாரத்தில் தீபம்...லைட்ஸ் ஆன்..!ஜொலிக்குதே...தங்கம் போல் ஜொலிக்குதே!எறும்பு போல பக்தர்கள், அண்ணாமலையாரை சுற்றி!அண்ணாமலையாருக்கு அரோஹரா!

Wednesday, November 24, 2004

தேவை - ஓரு தியரி

(19.9.2004 நாளிட்ட கல்கி வார இதழில் வெளியானது)

இந்த உலகத்துல எல்லோரும் எதையாவது தேடிக்கிட்டேதான் இருக்கோம். வசதியில்லாதவன் பணத்தை தேடி அலையறான். பணம் நிறைய வெச்சிருக்கிறவன் பேரு வேணும்னு அலையறான். எல்லோரும் ஏதாவது ஒண்ணை தேடிக்கிட்டே இருக்கிறதுலேயே நம்ம வாழ்க்கை அப்படியே 'வணக்கம்' போடறவரைக்கும் போயிடறது. அப்படியே தேவையானது கிடைச்சாலும் மனசு புல்ஸ்டாப் போட மறுத்துவிடும். ஜட்டி வாங்குலாம்னு சென்னை சில்க்ஸ் போய்ட்டு அரை டஜன் டிஷர்ட்டும் நாலும் பேன்ட் பிட்டும் வாங்கிட்டு வர்றது சகஜம்தானுங்களே!

இதையெல்லாம் 'மகனே, எதை நீ தேடுகிறாய்'னு ரமணர் கேட்டு பதில் சொன்னாலும் ஏதோ ஸ்பிரிச்சுவல் மேட்டர்னு நினைச்சு எஸ்கேப்பாகிவிடுகிறோம். நம்ம ஆளுங்களும் மனுஷனோட தேவைகளை பத்தி கரெக்டா தப்பான்னு வெறும் தத்துவமாவே பேசிட்டு போயி சேர்ந்துட்டாங்க. ஆனா, ஏ.எச். மாஸ்லோன்னு ஒரு ஆசாமி மனுஷனோட வெவ்வேறு தேவைகளுக்கு நடுவே ஏதோ ஒரு தொடர்பு இருக்குறதா அடிக்கடி மோட்டுவளையை பார்த்து யோசிக்க ஆரம்பிச்சு சீக்கிரமா ஒரு முடிவுக்கும் வந்ததுனால கிடைச்சதுதான் மாஸ்லோவோட 'தேவை' தியரி. எம்சிஏ படிக்கிறச்ச Behavioural Theory பேப்பரில் என் மண்டையில ஏறின விஷயத்துல இதுவும் ஒண்ணு.

ஏ.எச் மாஸ்லோ, மனுஷனோட விதவிதமான தேவை எல்லாத்தையும் ஒரு லிஸ்ட் எடுத்து அதுல ஏதோ ஒரு ஒத்துமை இருக்கிறதையும் கண்டுபிடிச்சுட்டாரு. அதுவுமில்லாம எல்லா மனுஷனும் ஒரு தேவையான விஷயங்கள் கிடைச்ச பின்னாடிதான் அடுத்த தேவையை தேடி அலையறாங்கிறாங்கிற சிம்பிளான விஷயத்துலேர்ந்து எந்தெந்த தேவைக்குக்கெல்லாம் முதல்ல முன்னுரிமை கொடுக்கிறாங்கிறதையும் விலாவாரியா தியரியில சொல்லியிருக்காரு. எல்லா மனுஷனுக்குமே முதல்ல தன்னுடைய தேவைகளெல்லாம் கரெக்டா கிடைச்சுட்டான்னு முதல்ல பார்த்துக்குறானாம். அப்புறமாதான் சமூக சேவை அது இதுன்னு அலைய ஆரம்பிக்கிறான்னு மாஸ்லோ சொல்றாரு. சரி, கொஞ்சம் டீடெய்லாவே பார்த்துடலாம்.

முதல்ல அவரு சொல்றது. அடிப்படை தேவை. அதாவது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். கூடவே தண்ணியையும் சேர்த்துக்கலாம். சென்னைவாசியாயிருந்தா வாட்டர் டேங்க் சத்தம் கேட்டவுடனே மேலே சொன்ன ஐட்டத்தையெல்லாம் மறந்துட்டு ஓடுவான் பாருங்க.. ஒரு ஓட்டம். அது தனி கதை...சொந்த கதை, சோக கதை!

ரெண்டாவது, பாதுகாப்பு தேவை. நமக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா என்னா பண்றதுங்கிற கேள்விதான் மனுஷனை ரொம்பவே ஆட்டிப்படைக்குது. சில அதிசிய பிறவிங்க கல்லறையெல்லாம் கட்டி வைக்குதுங்க. செத்துப்போனா நல்ல இடத்துல கொண்டுபோய் வைப்பானுங்களோ இல்லையோங்கிற பயத்துல. கொஞ்சம் காசு கையில வந்ததும் பேங்குல போட்டு வைக்கிறது, எல்ஐசி ஏஜெண்டுகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இதெல்லாமே பாதுகாப்பு தேவைதாங்க!

மூணாவது தேவை, துணை. அதாவது மொத இரண்டும் கிளிக் ஆயிடுச்சுன்னாலே மனுஷனுக்கு பயங்கர கஷ்டமெல்லாம் வந்துடும். அதாவது வந்துட்ட மாதிரி ஒரு ·பீலிங். நாட்டுல நம்மளை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறானேன்னு ஒரு கவலை. யாராவது நம்மளை முதுகுல தட்டிக்கொடுக்க மாட்டாங்களான்னு ஒரு ஏக்கம். அதுக்குத்தான் ஒத்தாசைக்கு ஒரு நண்பர்கள் வட்டாரம். ஒரு சிங்கிள் டீ அடிச்சுட்டு தினத்தந்தி படிச்சுட்டு கதை கதையா அடுத்தவனுக்கு சொல்றதுல ஆரம்பிச்சு இலக்கிய கூட்டம் போடறது வரைக்கும் இதுதான் காரணம்.

நாலாவது தேவை. பாராட்டு, பிரஸ்டீஜ். மேலே சொன்னது மேட்டரிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமான ஈகோ மேட்டர். சொஸைட்டியிலே ஒரு ஸ்டேட்ஸ் கிடைக்கணுங்கிறதுக்காக எதையாவது செஞ்சு வைக்கிறது. ·பிரண்டோட அப்பாவோட பிறந்த நாளுக்கு அவரோட பேரை விட தன்னோட பேரை பெரிசா போட்டு போஸ்டர் அடிச்சு ஒட்டறது. நான் யாரையும் ·பாலோ பண்ணமாட்டேன்னு தனி வழியில போறது எல்லாமே லிஸ்ட்டுல உண்டு. பெரும்பாலும் அடுத்தவன் செய்யறான்கிறதுக்காக குக்கர் உதைச்சு எதையாவது செஞ்சுட்டு திரியறது.

கடைசியா சுய பரிசோதனை. நாலு தேவையும் பூர்த்தியான பிறகுதான் மனுஷனுக்கு ஞானாதேயமே வருது. ஏதாவது உருப்படியா சேலன்ஜிங்கா செய்யணுமேன்னு. தனக்கும் உருப்படியா இந்த சொஸைட்டிக்கும் உருப்படியா ஏதாவது செய்யணும்னு நினைக்கிறது. நிஜமாவே நமக்கு என்ன தெரியும் அதை வெச்சு உருப்படியா என்ன பண்ணலாம்னு யோசிச்சு பண்றது.

சிலபேரு அடிப்படை தேவை கிடைச்சதுமே மத்ததை பத்தி நினைக்காம சொஸைட்டிக்காக ஏதாவது பண்ண நினைக்கிறதும் உண்டும். அதையெல்லாம் 'தெய்வ மச்சான்' லிஸ்டில்தான் சேர்த்ததாகணும். ஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு தேவை முக்கியமா இருக்கிறதுக்கிறதுக்கு காரணம் சைக்காலஜி, வளர்ந்து சூழல், படிச்ச படிப்பு எல்லாமே காரணம்தான்னு மாஸ்லோ சொல்றார். இதெல்லாம் இருக்கட்டும். ஏதோ ஒரு 'தேவை'யை மனசுல வெச்சிக்கிட்டு நம்மளை சுத்தி வரும் பார்ட்டிகளிடமிருந்து எஸ்கேப்பாக ஏதாவது தியரி இருக்குதா ஸார்?

Monday, November 22, 2004

காமெடி டைம்முங்கோ!

ஜெயா டிவியில் ரேடியோ விளம்பரத்தை உல்ட்டா பண்ணும் மாறன் கோஷ்டி

'லேட்டா வந்துட்டேன்னு கோவமா'?

'ஆமா, இனிமே லேட்டா வந்தா....'

'லேட்டா வந்தா...'

'அர்ச்சனாவோடதான் வரணும்'

'கூப்பிட்டு பார்த்தேனே... அவ புருஷன் ஒத்துக்க மாட்டேன்னுட்டான்'

கே டிவியில் ஏதோ ஒரு படத்தில் கவுண்டமணி-செந்தில் கோஷ்டி

'சே... சுவரேறி குதிச்சு திருடறது வெறுத்துப்போயிடுச்சுண்ணே..அதனால..'

'அதனால...'

'அரசியல்ல குதிக்கலாம்னு முடிவுபண்ணிட்டேன்..'

'அட, நாயே..ரெண்டும் ஒண்ணுதாண்டா..'

கொஞ்சம் சீரியஸான காமெடி. என்டிடிவியில் முலாயம்சிங் யாதவ்

'நல்ல வசதிகளுடன் இருக்கும் தனி வீட்டில் காஞ்சி சங்கராச்சாரியரை தங்க வைத்து விசாரிப்பதை விட்டுவிட்டு அந்த புனிதமானவரை சிறையிலடைப்பது இந்துக்களை புண்படுத்திவிடும்'

Thursday, November 18, 2004

யாரோடு யார்...

யாரோடு யார்தான் என்பது
உண்டாகும்போதே உள்ளது.
வானோடு நீலம் சேர்ந்தது
வாழ்வோடு இன்பம் சேர்ந்தது.
கங்கை நதி வந்ததென்ன...
காவிரியும் சேர்ந்ததென்ன...

Wednesday, November 17, 2004

நிலமெல்லாம் ரத்தம்!

கேட்டது

முதன் முதலாக ரொம்ப சிக்கலான கேஸை டீல் பண்ணப் போகிறீர்கள் என்று நினைக்கிறேன் என்கிற முஸ்தீபோடு ஆரம்பித்த என்டிடிவி ராஜீவை இடைமறித்து.... ரொம்ப சிம்பிளான கேஸ்தான் என்றார் ராம்ஜெட்மலானி. சங்கராச்சாரியார் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வி கேட்டால் அவரை கைது செய்த விதம் சரியில்லை என்று சொன்னார். கடைசி வரை சப்ஜெக்டுக்கு வரவேயில்லை. யாருக்கு தெரியும் அந்த ரகசியம்?! வேலூர் சிறைக்குள் போன முரளி மனோகர் ஜோஷியும், ஜார்ஜூம் 'உண்மையிலேயே உங்களுக்கு தொடர்பு உண்டா'ன்னு சங்கரச்சாரியாரை கேட்டிருக்க மாட்டார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

நள்ளிரவு கைதுகள் சரியா தவறான்னு திமுக தலைவரால் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலை. கலைஞர் கைதின் போது எல்லோரும் பேருக்கு 'உச்' சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கப் போய்விட்டார்கள். சங்கராச்சரியாரின் கைதுக்கு காவிப்படையோ நாடு முழுவதும் கழி, குச்சி சகிதம் அலைந்து கொண்டிருக்கிறது. காஞ்சிபுரமே நார்மலாக இருக்கும்போது கேரளாவில் கடையடைப்பாம்! அவசரமாய் ஹைகோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருந்த நண்பரிடம் கேட்டேன். 'ஹைகோர்ட் ஜாமீன் கொடுக்க மறுத்தால் சுப்ரீம்கோர்ட்... எப்படியும் சாமியார் வார இறுதியில் காஞ்சிபுரத்தில் இருப்பார்'னு சொன்னார். பெரிய இடத்து சமாச்சாரமுங்கோ!

படித்தது

எங்க ஊர் நேஷனல் ஹைஸ்கூல் சேஷாத்திரி வாத்தியார் ரொம்ப பிரபலம். ஆசிரியர் சங்க மீட்டிங், போராட்டம் என்று எப்போதும் பிஸியாகவே இருப்பார். எப்போதாவது வரலாறு கிளாஸ் எடுத்து வாய் பிளக்க வைப்பார். அவர் உலகப் பிரச்னைகளை புத்தகத்தில் இல்லாத சங்கதிகளோடு விவரிப்பதே சுவராசியமாக இருக்கும். இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினை பற்றி எனக்கு புரியும்படியாக சொன்னவர் அவர் ஒருவர்தான். அப்போதே டிஎம்கே, ஏடிஎம்கே, அமெரிக்க, ரஷ்யா என்று சார்பு நிலை எடுத்தே பழக்கப்பட்டனுக்கு யார் பக்கமும் சாயாமல் பிரச்னையை அவர் எடுத்து சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. பாலஸ்தீனர்கள் படும்பாட்டை உருக்கமாக சொல்பவர் அதே வேகத்தில் உலகத்தில் இஸ்ரேலில் இருப்பதை விட பிரமாதமான பாதுகாப்பு படைகள் எங்கும் கிடையாது என்பார். அதற்கப்புறம் வாராவாரம் இஸ்ரேலில் நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி கேட்டும் படித்தும் ரொம்ப காலமாய் அலுத்துப் போய்விட்டது.

பாக் ஒரு புதிரில் ஆரம்பித்து டாலர் தேசத்தை விவரித்து செப்டம்பர் 9/11 அறிக்கையையே குட்டி திரைக்கதையாக்கிய பா.ராகவன் இஸ்ரேல்-பாலஸ்தீனத்து பிரச்னையை சுவராசியமாக சொல்ல வருகிறார். திரும்பவும் குமுதம் ரிப்போர்ட்டரில்! அடுத்த வாரத்திலிருந்து கலக்கப்போகிறாராம். காலையில் ரிப்போர்ட்டரை படித்து நான் தெரிந்து கொண்ட சங்கதி இது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் பாரா ஸார்!

Wednesday, November 10, 2004

தீபாவளி வேலை!

கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது. தமிழகம் முழுவதிலிருந்தும் வந்த விண்ணப்பங்களை பரிசிலீத்து, அப்ளிகேஷனில் தரப்பட்ட விபரங்களை மன்ற உறுப்பினர்கள் மூலம் உறுதி செய்து, லிஸ்ட் தயார் பண்ணி, எஸ்டிமேட் எடுத்து, இரவு பகல் பாராமல் ராகவேந்திரா மண்டபத்திலேயே உட்கார்ந்து வேலை செய்தது மறக்க முடியாத விஷயம். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ('அனாதை குழந்தைகள்னு எழுதாதீங்க... ஆதரவற்ற குழந்தைகள்னு எழுதுங்கப்பா!' / தகவல் உபயம் - சத்தியநாராயணா.)

குமரன் சில்க்ஸ் டிரெஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சிவகாசியிலிருந்து வரவழைக்கப்பட்ட பட்டாசுகளை பேக்கிங்கில் அடைத்து ஒவ்வொரு ஆசிரமமாக டோர் டெலிவரி செய்ய ஆட்களை ஏற்பாடு செய்வதில் கடைசி இரண்டு நாட்கள் வேலை படு மும்முரமாக இருந்தது. இதெல்லாம் வழக்கமாக ஒவ்வொரு வருஷமும் நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இந்த முறை விழா நடத்த வேண்டும் என்று முடிவு செய்ததும் வேலை இரண்டு மடங்காகிவிட்டது. கூடவே தீபாவளியன்று ஆசிரமங்களில் ராகவேந்திரா டிரஸ்ட் சார்பாக மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யும் வேலை வேறு. சென்னை நகரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட எட்டு ஆசிரமங்களிலிருந்து குழந்தைகளை மண்டபத்திற்கு கூட்டி வந்து நிகழ்ச்சி முடிந்து திரும்பவும் பத்திரமாக அனுப்புவது வரை வேலை கடுமையாக இருந்தாலும் மனசுக்கு நிறைவாக இருந்தது. (இன்னும் எனக்கு தீபாவளி டிரஸ் எடுத்துக்கலை! டைம் லேது?!)

எத்தனை குழந்தைகளுக்கு, எந்தெந்த ஆசிரமங்களுக்கு உதவி செய்யப்பட்டது என்பது குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதில் வழக்கம் போல மீடியாவுக்கு ஆர்வமில்லை. இருந்தாலும் ஆசிரமங்களின் பெயர் மற்றும் விபரங்கள் எங்களின் WWW.RAJINIFANS.COM இணையத்தளத்தில் வெளியாகும். பிறந்தநாளை ஆசிரமத்தில் கொண்டாட நினைப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

மூன்று வயது குழந்தைகளிலிருந்து எழுபது வயது முதியவர் வரை விதவிதமான வண்ணங்களில். இடுப்பில் ஒரு குழந்தை கையிலொரு குழந்தை சகிதம் வந்த அந்த இரண்டு ·பாரின் பெண்மணிகளும் கடைசி வரை குழந்தைகளை கொஞ்சுவதிலேயே 'கருமமே கண்ணாய்' இருந்தது மெகா அட்ராக்ஷன்! தரையில் புரண்டு அழுது அடம்பிடித்த அந்த மீசை முளைத்த குழந்தைக்கு வயது முப்பதைந்தாம்! வந்தவர்களில் சிலர் மனநலம் குன்றிய, போலீயோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ஆனாலும் முகத்தில் மலர்ச்சிக்கும் சிரிப்புக்கும் பஞ்சமில்லை.

திரும்பி ஆசிரமம் போவதற்காக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்த பின்னரும் 'ரஜினி வரவே மாட்டாரா'ன்னு அந்த சின்னக் குழந்தை கேட்ட கேள்வியைத்தான் எதிர்கொள்ள முடியவில்லை.

Monday, November 08, 2004

பியர்லஸ் தியேட்டர்
மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

அரசியல்வாதிகள் வந்துபோகும் இடமாக இருந்து பின்னர் பஸ் ஸ்டாண்டாக மாறி, தற்போது சகலமுமாக (அதாவது சாக்கடை!) இருக்கும் நகரப்பூங்கா. அதற்கு எதிராக ஓடாத தண்ணீரோடு ஒரு சாக்கடை கால்வாய். கால்வாயின் கரையோரத்தில் பல ஹீரோக்களை பள்ளிக்கொள்ள செய்த இந்த தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு நாற்பது வருஷமாகப்போகிறது. எண்பதுகளின் வெள்ளி விழாப்படங்கள் இங்கேதான் வெளியாகின. திரிசூலம், சகலகலாவல்லவன், முந்தானை முடிச்சு, அம்மன் கோயில் கிழக்காலே, மனிதன், வேலைக்காரன், தளபதி, எஜமான், பாட்டி சொல்லை தட்டாதே, தேவர் மகன், பாட்ஷா, முத்து, படையப்பா... லிஸ்ட் கொஞ்சம் பெரிசு.

சாதாரண நடிகர் நடித்த படம் கூட இரண்டு வாரம் ஓடும். தீபாவளி, பொங்கல் பண்டிகை சமயத்தில் பியர்லஸ் தியேட்டரில் படம் பார்ப்பதும் ஒரு சம்பிரதாயம். அப்படிப்பட்ட நாட்களில் கியூவில் நின்று அடித்து பிடித்து படம்பார்ப்பவர்களில் நிறைய பேர் வடகரை முஸ்லீமாக இருப்பார்கள். இரண்டாம் கிளாஸ் படிக்கும்போது அம்மா, அப்பா சகிதம் 'சகலகலாவல்லவன்' படம் பார்த்திலிருந்து 'படையப்பா' கடைசிநாள் கடைசிகாட்சி பார்த்தது வரை தியேட்டரோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களை நினைத்துப் பார்ப்பதே சுகமாக இருக்கும். பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி தீபாவளி நாளில் 'தளபதி'யை தரிசிக்கப் போய் கூட்ட நெரிசலில் சட்டையை கிழித்துக்கொண்டதை தீபாவளி நேரங்களில் அவ்வப்போது ஞாபகத்துக்கு வரும்.

இதுவரைக்கும் பலான படம் எதுவும் இந்த தியேட்டரில் ரீலிஸாகவில்லை என்பது ரொக்கார்ட். மேற்காணும் ஸ்டில் 'போஸ்' என்னும் புதுப்படம் ரீலிஸான ஒரு சனிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்கு எடுத்தது என்பதை சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். எந்தப்படமாக இருந்தாலும் ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

இப்போதும் 'பியர்லஸ்' அப்படியேதான் இருக்கிறது. ஆனால், பார்க்க வருகிறவர்கள்தான் குறைந்து போய்விட்டார்கள். என்றைக்காவது ஒரு நாள் படம் பார்க்க என்றில்லாவிட்டாலும் தியேட்டரை பார்க்கவாது உள்ளே போய் பார்த்துட்டு வரணும்!

Monday, November 01, 2004

கேள்விகள் ஆயிரம்!

மும்முரமா பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கும் ஹாலில் விளையாடிக்கொண்டிருக்கும் மகனுக்கும் நடக்கும் உரையாடல் :-

"அப்பா, சூரியனை யார் கண்டுபிடிச்சாங்க?"

"கடவுள்"

"கடவுள் எங்கேப்பா இருக்காரு?"

"சொர்க்கத்துல"

"நீங்க சொர்க்கத்துக்கு போய் பார்த்துட்டு வந்தீங்களாப்பா?"

"இல்லே".

"பின்னே, அவர் சொர்க்கத்துலதான் இருக்காருன்னு எப்படி சொல்றீங்க?"

"கடவுள் சொர்க்கத்துல இருக்கார்னு எல்லோரும் சொல்வாங்க"

"அப்ப சொர்க்கத்தை கண்டுபிடிச்சது யாரு?"

"கடவுள்"

"அப்ப, அதுவும் கடவுள்தானா?"

"ஆமா"

"கடவுள், அதுக்கு முன்னாடி எங்கே இருந்தாரு?"

"ஷட் அப்... நீ ரொம்ப பேசுறே! போய் ஹோம் வொர்க் பண்ற வேலையை பாரு.."

நீதி - உலகத்துல எந்த கேள்விக்குமே சரியான பதில் கிடைக்கவே கிடைக்காது!

(சொன்னது - சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிஜி)

Wednesday, October 27, 2004

பிரிவு
இணைவதும் பிரிவதும்
இயற்கையின் நியதி.

தண்டவாளம் சொல்லும்
வாழ்க்கையின் வண்டவாளம்!

Monday, October 18, 2004

மவுண்ட் ரோட்டில் ஒரு மழைக்காலம்!

இப்போதைக்கு என்னோட பேராசை, பெரிய லட்சியம், குறிக்கோள் எல்லாமே நடுஹாலில் நாலு தடவை அங்கப்பிரதட்சணம் செய்றதுதான். ஒருக்களித்து படுத்து ஒரு மாசமாகப்போகிறது. கையை பதினாறு வயதினிலே சப்பாணி ஸ்டைலில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதுதான் பத்துநாள் வரைக்கும் பழக்கமாக இருந்தது. போன மாதம் ஒரு சுபயோக தினத்தில், எமகண்ட நேரத்தில், ஆபீஸ் போகும் அவசரத்தில் ஜீட் விட்ட ரூம்மேட்டை மெனக்கெட்டு செல்லடித்து வரவழைத்து டூவீலரில் ஏறிக்கொண்டு மழையின் புண்ணியத்தால் வழுவழுன்னு இருந்த மவுண்ட் ரோட்டில் சடாரென்ற பிரேக்கினால் பேலன்ஸ் தடுமாறி இரண்டடி தூரம் சறுக்கியபடியே பயணித்து பின்னர் குப்புற விழுந்து ரோட்டுக்கு ரத்த தானம் பண்ணியது ஏதோ நேற்று நடந்தது போலத்தான் இருக்கிறது. அவசரமாய் பிரேக் அடிக்க காரணமாக இருந்து இப்படியொரு சம்பவம் நடந்தைப்பற்றி தெரிந்து கொள்ளாமலே வேகமாய் முன்னால் போய்விட்ட அந்த ஸ்கூட்டர்காரனை விடுங்கள். தலைக்குப்புற விழுந்தும் சொற்ப காயங்களோடு தப்பித்துக்கொண்ட ரூம்மேட்டும், சின்ன கீறல் கூட விழு¡த டூவீலரும் ஆச்சர்யங்கள் என்றால் கைத்தாங்கலாய் அழைத்துப்போய் தண்ணீர் கொடுத்த அந்த கடைக்காரர்தான் சென்னை மழையைவிட ஆச்சர்யமான அதிசயம்.

அடிபட்ட அதிர்ச்சியில் கண்ணை மூடிக்கொண்டு ரோட்டை கிராஸ் பண்ணியதால் யாரோ உதிர்த்த சென்னையில் பிரபல கெட்ட வார்த்தையை உதாசீனப்படுத்திவிட்டு கிழிந்த சட்டையை கழட்டி பார்த்தபின்புதான் தெரிந்தது, ஓமக்குச்சி மாதிரியிருந்த புஜம், சரத்குமார் சைஸ¥க்கு கும்மென்று வந்திருந்தது. இடது கையின் உதவியோடுதான் வலதுகையை தூக்கமுடியும் என்கிற நிலைமையை பார்ததும் இனி முள்ளும் மலரும் காளியின் கதிதான் என்கிற முடிவுக்கே வந்துவிட்டேன். போக் ரோடு, மலர் ஆஸ்பிடல், மயிலாடுதுறை பட்டமங்கலத்தெரு என பல இடங்களில் குடிகொண்டிருக்கும் ஆர்த்தோக்களுக்கு மொய் வைத்து ஒரு வழியாக 'இழந்த சொர்க்கம்' மீண்டுவருகிறது. மாவுக்கட்டு, வெந்நீர் ஒத்தடம், எலெக்ட்ரிக் ஷாக் என்று தொடர் தாக்குதலில் வலதுகை புஜம், ஓமக்குச்சியைவிட மோசமான நிலைக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் ·புல் ·பார்முக்கு வந்துடலாம்னுதான் தோணுது. செம்மொழிக்கு பாடுபட்ட கலைஞர், தங்கத்தாரகை முதல்வர், வைகோ வேணாம்னு சொல்லும் உயிர்மை தலையங்கம், புத்தகக்கடையை பலசரக்கு கடையாக்கிய குங்குமம்னு எழுதறதுக்கு மேட்டர் இருந்தும் எழுத முடியாம மனசு ஹீட்டா இருக்குது. இதோ, பொதுவாழ்க்கைக்கு திரும்பவும் வந்துட்டே இருக்கேன்!

Saturday, October 02, 2004

பாபுஜி - 135

உலகமெலாம் பருவ மழை ஒத்தபடி பெய்யட்டும்

உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்

பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்

நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும்

நம் கடமை அறவாழ்வில் நாட்டத்தே சிறக்கட்டும்

வாழ்க வையகம்; வாழ்க வளமுடன்

Saturday, September 25, 2004

எழுத்து மயக்கம் ?!

ஐகாரஸ் பிரகாஷீக்கு வந்த எழுத்து மயக்கம் ஆச்சர்யமளிப்பதாக மூக்கன் கருத்து தெரிவித்திருக்கிறார். மேய்ச்சல் நிலமாக இருந்த தனது வலைப்பூவை இத்தனை காலம் தரிசு நிலமாக்கி வைத்திருந்தது இதற்குத்தானா என்கிற அவரது ஆதங்கத்தில் நியாயமிருப்பது உண்மைதான். ஆனால், போகிற போக்கில் வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதுவதை சர்வசாதாரணமான விஷயமாக மூக்கன் சொல்லியிருப்பதுதான் உறுத்தலான விஷயம்.

இணையத்தில் வரும் எழுத்துக்களில் அறுபது சதவீதம் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. வெகுஜன பத்திரிக்கைகளில் வருபவையெல்லாமே தரமான எழுத்துக்கள்தான் என்று வக்காலத்து வாங்கி உங்களை நான் சிரிக்க வைக்கப் போவதுமில்லை. சிறுபத்திரிக்கையோ, வெகுஜன பத்திரிக்கையோ கட்டுப்பாடுகள் ஜாஸ்திதான். இணையத்தோடு ஒப்பிடும்போது எதிர்வினைகள் கூட குறைவுதான். ஆனாலும் அச்சு ஊடகத்தின் மீதான காதல் மக்களிடையே அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இல்லாவிட்டால் நாலு முன்னணி புலனாய்வு இதழ்கள், 3 ஆன்மீகப் பத்திரிக்கைகள், மருத்துவத்திற்கென்றும், பெண்களுக்கென்றும் பிரத்யேக பத்திரிக்கைகள் என நாளுக்குநாள் வந்துகொண்டேயிருக்காது. தினமணி சென்றடையாத ஊரில் கூட தினத்தந்தியும் ராணியும் அமோகமாக விற்பனையாகின்றன. முப்பது பக்கத்தில் வரும் இந்தியா டுடேவை பத்து ரூபாய் கொடுத்து வாங்கி படிக்கவும் ஆளிருக்கிறார்கள்.

பிரகாஷாவது கட்டுரை எழுதியிருக்கிறார். எட்டு வருஷமாக எல்லா பத்திரிக்கைகளிலும் வாசகர் கடிதம் எழுதியிருந்தும் அந்த மயக்கம் எனக்கு இன்னும் மிச்சமிருக்கிறது. பத்திரிக்கையில் நமது எழுத்துக்கள் பிரசுரமாவது என்பது சினிமா மாதிரி. திறமையை மட்டுமல்ல அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது அது. வாசகர் கடிதத்திற்கே நாலு பேர் படித்துப் பார்த்து விஷயத்தோடு இருந்தால் மட்டுமே என்ட்ரி கிடைக்கும். பத்திரிக்கை படிக்கும் பத்து பேரில் நாலு பேர் கூட வாசகர் கடிதம் பகுதியை திரும்பி பார்க்கமாட்டார்கள். பைசா நஹி, பேரும் நஹி! பெரிதாக அங்கீகாரம் எதுவும் கிடையாது. எழுதுவதும் வளவளவென்று இருக்காமல் உருப்படியாக இருக்கவேண்டும். யாரையும் தாக்கியும் இருக்கக்கூடாது. நடக்கப்போறதையோ அல்லது நடந்த விஷயத்தையோ எழுதிவிடக்கூடாது. அநாவசிய வார்த்தை அலங்காரம் இருக்கக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில் எழுதக்கூடாது. சில பத்திரிக்கைகளுக்கு ஒருமையில்தான் எழுதியாகணும். இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். வாசகர் கடிதத்திற்கே இப்படியென்றால் கதை, கட்டுரை பற்றி கேட்கவே வேண்டாம். ஆபிஸில் ஆளாளுக்கு கத்தரியும் பிளாஸ்திரியுமாக அலைந்து கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் மீறி பிரசவித்து, அதை வாசகன் படித்து, அதற்கொரு எதிர் வினை வந்தால் நிச்சயம் முற்றும் துறந்த ஞானிக்கு கூட போதை வரும்.

நீங்க எழுதியிருந்ததை பார்த்தேன்னு சொல்றவங்களை விட நீங்களும் எழுதுவீங்களான்னு கேட்கறவங்கதான் அதிகமா இருப்பாங்க. பக்கத்து வூட்ல இருக்கிறவருக்கு கூட விஷயம் தெரியாது. பத்து வருஷம் எழுதினா பத்திரிக்கை ஆபிஸ் உள்ளே மட்டும்தான் பெயர் பரிச்சயமா இருக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசகர் கடிதமா நான் வரைஞ்சு தள்ளினதுக்கு காரணம், நாலு வரியில நச்னு சொல்ற விஷயம் எனக்கு ஏனோ பிடித்திருந்தது. அதுவே கொஞ்சம் அலுத்து போன சமயத்தில்தான் வலைப்பூ மீது வந்தது காதல். இப்போது என்னுடைய நலம் விரும்பிகள் வாசகர் கடிதம் எழுதினா கையை ஒடித்துவிடுவதாக பல்லைக் கடித்தாலும் பழக்க தோஷத்தை விடமுடியவில்லை!

இணையத்தில் வரும் எழுத்துக்கள் பத்து வருஷம் ஆனாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பரிச்சயமாகப் போவதில்லை என்கிற நிலையில் வெகுஜன பத்திரிக்கைகளின் பார்வை நமக்கு அவசியம் தேவை. கல்கியில் அவர்களாகவே தேடிக் கண்டுபிடித்து எங்களது வலைத்தளத்தை பற்றி எழுதியிருந்ததால் வந்த ரெஸ்பான்ஸ் என்னை மலைக்க வைத்தது. சினிமா மாதிரி வெகுஜன பத்திரிக்கைகளுக்கும் கமர்ஷியல் கட்டாயம் இருக்கலாம். அதற்காக எல்லாவற்றையுமே குப்பையாக ஒதுக்கிவிட முடியாது. மேட்டர் கிடைக்காத நேரத்தில் பத்திரிக்கையுலக ஜம்பவான்களெல்லாம் இணையத்தைதான் மேய வருகிறார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறேன். இணைய பத்திரிக்கைகள் என்கிற வட்டத்துக்குள் நம்மை அடக்கிக்கொண்டு வெகுஜன பத்திரிக்கைகளிலிருந்து நாமெல்லோரும் விலகிப்போய்விட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். அதற்காக இப்படி நீட்டி முழக்கி சுயபுராணம் பேசியதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்னு உங்க மனசுக்குள்ள பிராம்ப்டர் ஓடறதை இங்கிருந்தே என்னால படிக்க முடியுதே!

Wednesday, September 22, 2004

ஆட்கள் வேலை செய்கிறார்கள்!மறக்க முடியாத நான்குவழி பாதைகளின் சந்திப்பு அது. எங்க ஊர்ப்பக்கம் 'முக்கூட்டு'ன்னு சொல்வோம். வீட்டுக்கு போகிற வழியில் இருப்பதால் முச்சந்தியையும் அதில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரையும் எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாது. ஊருக்கு வரும்போதெல்லாம் இரண்டு வி.ஐ.பிக்கள் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருத்தர் விஜய டி.ராஜேந்தர். இன்னொருத்தர் ஹி...ஹி.. நான்தான்! இருபது வருஷத்துக்கு முந்தி சைக்கிளில் வந்த அப்பா மீது லாரி மோதி, கட்டைவிரலில் அடிப்பட்டதிலிருந்து நிறைய ஆக்ஸிடென்டகளை இந்த முக்கூட்டில் பார்த்திருக்கிறேன். இப்பவும் அப்பாவின் கட்டைவிரலை ஆட்டிக்காட்டும்போது பிரபுதேவாவின் டான்ஸ் ஞாபகத்துக்கு வரும். ஒரு பக்கம் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி, இன்னொரு பக்கம் தாலுகா ஆபிஸ், இன்னொரு பக்கம் மயிலாடுதுறை ஜெயில் என வித்தியாசமான காம்பினேஷனும் இந்த முக்கூட்டில் உண்டு. காலேஜ் போக பஸ் வர காத்திருக்கும்போதெல்லாம் ரோட்டை நன்றாக கவனித்திருக்கிறேன். நிறையபேர் காரிலிருந்தபடியே காரைக்கால் போக வழி கேட்பார்கள். இரண்டு வழியிலும் போகலாம் என்பதால் கொஞ்ச நேரம் முழித்துக்கொண்டு நிற்பேன். பெரிய அளவுக்கு டிராபிக்கெல்லாம் இருக்காது. ஆனாலும், மக்கள் ஏதோ பிள்ளையார் கோயிலையே சுத்தி சுத்தி வருவது மாதிரி இருக்கும். என்னைக் கேட்டால் மயிலாடுதுறையின் இதயமான பகுதி இதுதான்னு சொல்வேன். ஆனால், இப்போது பாதாள சாக்கடைக்காக பாதையையே பிரித்து போட்டிருக்கிறார்கள். ஆறு மாசமாக ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் திரும்பவும் பார்முக்கு வர ஒரு வருஷம் ஆயிடும்!முக்கூட்டில் எனக்கு புடிச்ச முக்கியமான விஷயம். ஒரு பக்கம் பிள்ளையார் கோயில், இன்னொரு பக்கம் தர்கா. இரண்டுக்குமிடையே ஒரு ரோடு. ரோட்டை காவல் காத்துக்கொண்டிருப்பது மாதிரி கையில் தடியோடு காந்தியின் சிலை!

Tuesday, September 21, 2004

வர்க்கப்புரட்சி

அந்த குறுகலான சந்திலிருக்கும் கீற்று கூரையுடன் கூடிய கட்டிடத்தில் வெளுத்துப்போன சிவப்புக்கொடி பறக்கிறது. சுவற்றில் ஸ்டாலின் தொடங்கி வாயில் நுழையாத பெயர் அடிக்குறிப்புடன் அயல்நாட்டு பிரபலங்களின் கருப்பு வெள்ளை படங்கள் பளிச்சிடுகின்றன. ஆங்காங்கே, பிட் நோட்டீஸ்களும், முதலாளிகளை எதிர்க்கும் டீஸெண்டான கண்டனக் குரல்களும் சுவற்றில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ கட்சி அலுவலகங்கள் நிறைய உண்டு. இது போன்ற அலுவலகத்தை எட்டிக்கூட பார்க்காதவர்களுக்கும் இந்தியாவின் எந்த மூலையிலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலும் தென்படும் புரட்சிகர வாசகங்களை படித்த அனுபவம் நிச்சயமாக இருக்கும்.

நாடு சுதந்திரமடைவதற்கு முன்னபாகவே இந்தியாவிலும் ஒரு வர்க்கப்புரட்சி நிச்சயம் நடக்கும் என்று நிறையபேர் நினைத்திருந்தார்கள். வெள்ளையர்களை வெளியேறிய பின்னர் நிச்சயம் இது நிகழக்கூடும் என்றுதான் சாமானியர்களிலிருந்து ஜவர்ஹலால் நேரு வரை எல்லோருமே நினைத்திருந்தார்கள். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகள் கம்யூனிஸ கொள்கையில்தான் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். ஆனார்ல, காந்திஜியோ அப்போதே வர்க்கப்போராட்டம் எதுவும் தேவையில்லை என்பதை அழுத்தி சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார். இந்தியா போன்ற நாடுகளில் பெரிதாக வர்க்கப்புரட்சி எதுவும் தேவையில்லை. சம்பந்தப்பட்ட இரு தரப்பிலும் நல்ல மனமாற்றம் இருந்தாலே போதும் என்பதுதான் அவரது கருத்து.

'வர்க்கப்புரட்சி என்பது இந்திய மண்ணிற்கு அந்நியமான விஷயம். அடிப்படை உரிமைகளை பரந்த நிலைத்தளமாக கொண்டு அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் ஒரு புதுவடிவான கம்யூனிஸத்தை உருவாக்கும் திறமை நமக்கு இருக்கிறது' (Collected Works of Mahatma Gandhiji)

காந்தீய விழுமியங்கள் : வர்க்கப்புரட்சி

Friday, September 17, 2004

ரீ வியூ - மூன்று முடிச்சு

ஒரு பக்கம் ஹீரோ துணி துவைக்கிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினும் துணி துவைக்கிறார். 'டப்' ஓசை மெல்லிதாக ஆரம்பித்து பெரிதாக வளர்ந்து ஒத்திசைவாக உயரும்போது மாடியிலிருந்து ஒரு கருப்பு உருவம் வெறுப்போடு பார்த்து ஸ்டைலாக சிகரெட் பிடிக்கிறது. படமும் சூடு பிடிக்கிறது.

நண்பனின் காதல் மனதில் ஏற்படுத்தி வைத்த சபலம் விபரீதமாகி மோகம் மூச்சை முட்ட வெறித்தனம் விஸ்வரூபமெடுக்க ஒரு சமானியன் அடுக்கடுக்காய் செய்யும் தவறுகளையே வரிசையாக காட்சிகளாக்கி, மாறிய உறவு சமன்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத மனக் கிலேசத்தை மையமாக்கிய சைக்காலஜிகல் ட்ரீட்மெண்ட் தமிழ் சினிமாவுக்கு புதுசு. அதுவும் தமிழ் சினிமாவின் கெமிஸ்ட்ரியை மாற்றியமைத்து, வில்லனை மையப்படுத்திய மூன்று முடிச்சு, பாலசந்தரின் பரீட்சார்த்த முயற்சியில் வந்த ஒரு யதார்த்த சினிமா.

கலைந்த தலையும் கருப்பு நிறமுமாக ஒரு பையனுக்கும், கூரான மூக்குடன் பெரிய கண்களுடன் ஒரு புதுமுக பெண்ணிற்கும்தான் வெயிட்டான ரோல் என்று டைரக்டர் சொன்னதும் புரொட்யூசர் நிச்சயம் ஒரு மராத்தானுக்கு முயற்சி பண்ணியிருந்திருப்பார். இடைவேளை வரைக்கும் கமல்ஹாசன் ஒருவர்தான் மக்களுக்கு தெரிந்த முகம். இருந்தும் படம் ஜெயித்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்ததற்கு காரணம் கே.பி-ரஜினி-ஸ்ரீதேவி கூட்டணி.

தன்னுடைய மனைவியாக வரவேண்டியவள் அம்மாவாக வந்தால் என்ன ஆகும் என்கிற விபரீத கற்பனை கே.பியின் வழக்கமான டச். மூன்று முடிச்சில் புதுசாக கே.பி சொல்லியிருப்பது எந்தவொரு மனிதனையும் குற்றவுணர்ச்சி தப்ப விடுவதில்லை என்பதுதான். மனசாட்சியே வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து துரத்திக்கொண்டு வந்து நெருஞ்சிமுள்ளாய் நெஞ்சில் குத்துவதை வெற்றிகரமாக காட்சிப்படுத்தியிருப்பார். ஹே இரைச்சலுடன் அருவியின் பின்னணியில் கமலும் ஸ்ரீதேவியும் மவுத் ஆர்ஹான் வாசித்து நெருங்கி வரும் ரொமாண்டிக் ஸீன் படத்தின் இளமை துள்ளல்.

அமைதியாக, அழகாக வந்து ரஜினிக்கு நல்ல நண்பனாய் ஸ்ரீதேவியுடன் டீஸெண்டாய் ஒரு டூயட் பாடி பரிதாபமாய் செத்துப்போகும் சின்ன பாத்திரத்தில் கமல். கமலின் சாவுக்கு காரணம் தவறி விழுந்ததா அல்லது துடுப்பு போடுவதை நிறுத்திய ரஜினியா என்று பட்டிமன்றம் நடத்தினாலும் பதில் கிடைக்காத விஷயம். அந்த குழப்பம்தான் ரஜினி காரெக்ட¨ரை தூக்கி நிறுத்த காரணமாகிறது. ரஜினியின் பாத்திரம் வலியப் போய் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாது. ஆனால், வாய்ப்புகள் வரும்போது சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிடாது.

முதல் படத்திலேயே படு மெச்சூரான ரோலில் ஸ்ரீதேவி. கமல் வாங்கி தந்த புடவையை தீக்குச்சிக்கு தின்னக் கொடுத்துவிட்டு அதே டிஸைன் புடவையை கொடுத்து கட்டிக்க சொல்லும் ரஜினியை அருவெறுப்பாக பார்க்கும் ஸ்ரீதேவியின் முக பாவங்கள், ரஜினியை பார்க்கும்போதெல்லாம் சிரிப்பை தொலைத்துவிட்டு இறுக்கமாகும் முகம் என ஸ்ரீதேவி என நிறையவே ஆச்சரியப்படுத்தியிருப்பார். குடும்ப சூழ்நிலையின் காரணமாக அப்பா வயதிலிருப்பவரின் மனைவியாகும்போது கூடவே முதிர்ச்சியும் ஒட்டிக்கொள்கிறது.

காதலியாக இருந்தவரை அம்மாவாக பார்த்த அதிர்ச்சியில் ரஜினி உறைந்து நிற்கும்போது 'என்னடா கண்ணா...அப்படி பார்க்குறே.. நான் உன் அம்மா மாதிரிடா'ன்னு வசனம் பேசும்போது காட்டும் லாவகம் தனி ரகம். ஆனால், மிரட்டலுக்கு பயந்தோ அல்லது மிரட்டியவனை முக்குடைப்பதற்காக அம்மாவாக மாறுவது என யதார்த்ததை மீறிய கற்பனை, கதையோடு ஒட்டவில்லை. அப்பாவாக வந்து ரஜினியை திருத்தும் Calcutta Viswanathan, வயதுக்கு வந்த மகனிடம் தான் கல்யாணம் செய்துகொண்ட விஷயத்தை சொல்லும்போது காட்டும் தவிப்பில் பளிச்சிடுகிறார். நாகேஷை ஞாபகப்படுத்தும் ரஜினியின் தாத்தா கேரக்டரும் கலகலப்புக்கு உத்தரவாதம்.

தவறு மேல் தவறு செய்துவிட்டு குற்றவுணர்ச்சியை மறைக்க முடியாமல் தவிக்கும் நெகடிவ் பாத்திரம் ரஜினிக்கு. படத்தில் வசனத்தை விட ரஜினியின் கைகளுக்குதான் அதிக வேலை. பயத்தையும் அதிர்ச்சியையும் வெளிக்காட்டாமலிருக்க சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடித்த ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் காட்சியும், டேபிளின் மீது வைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை எடுப்பதா, வேண்டாமா என்கிற மனப்போராட்டத்தை டைட் குளோஸப்பில் வெளிப்படுத்தும் காட்சியிலும் ரஜினியின் உள்ளிருக்கும் நல்ல நடிகர் எட்டி பார்ப்பார்.

கமலின் இழப்பை நினைத்து டேபிளில் தலைவைத்து குலுங்கி அழும் காட்சி, படகிலிருந்து தவறி விழுந்த அப்பாவை காப்பாற்ற முடியாமல் தவிக்கும் நேரத்திலும் கொஞ்சம் பரிதாபத்தை வரவழைத்திருப்பார். ஆரம்ப காட்சிகளில் அமைதியாக வந்துவிட்டு, தனது குரூர வில்லத்தனத்தை காட்டி கிளைமாக்ஸில் பரிதாபமாய் திருந்திவிட்டதாக அழும் காட்சிகளில் சடார், சடாரென்று மாறும் முகபாவங்கள்தான் தமிழ் சினிமா ஆடியன்ஸீக்கும் வில்லனுக்கும் இருந்த இடைவெளியை குறைக்க ஆரம்பித்த விஷயங்கள்.
கமலின் முதுகை நோட்டீஸ் போர்டாக்கி ரஜினியும் ஸ்ரீதேவியும் மோதிக்கொள்வதும் ஸ்ரீதேவியின் மீதிருக்கும் கோபத்தில் வேலைக்காரியிடம் தவறாக நடந்துகொள்வது அக்மார்க் வில்லத்தனம் என்றால் ஸ்ரீதேவி தன்னைவிட்டு எங்கும் போய்விட முடியாது என்கிற அதீத தன்னம்பிக்கையுடன் அநாயசமாக ரஜினியிடமிருந்து வரும் சிரிப்பு வழக்கமான பி.எஸ் வீரப்பா ஸ்டைல்.

பாத்ரூமில் குளிக்கும் ஒய். விஜயாவின் கோர முகத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து போய் ஓடும் காட்சி படத்துக்கு தேவையில்லை என்றாலும் கே.பியின் அழுத்தமான டச் மனதை தொடுகிறது. வசந்த கால நதியினிலே, ஆடி வெள்ளி என எம்.எஸ்.வி-கண்ணதாசன் கூட்டணிக்கு இன்னொரு பெயர் சொல்லும் படம். காதலனை இழந்துவிட்டு கலங்கி நிற்கும் பெண்ணிற்கு ஆறுதல் சொல்ல மாயவனை துணைக்கு அழைக்கிறார்.

மன வினைகள் யாருடனோ
மாயவனின் விதி வகைகள்
விதிவகைகள் முடிவு செய்யும்
வசந்த கால நீரலைகள்...

வாழ்க்கையின் தாத்பரியத்தை நாலே வரிக்குள் மடித்து அடக்கிவிட்ட கண்ணதாசன் நிஜமாகவே கிரேட்தான்!

Thursday, September 16, 2004

கணக்கு வாத்தியார்!

நிஜமான பெயர் - சிவகங்கை சின்னப் பையன்

உத்தியோகம் - கழுவுற தண்ணியில நழுவுற மீன்

வயசு - அரசியலில் முன்னுக்கு வர ஆரம்பிக்கும் வயசு

சமீபத்திய சாதனை - துண்டு போடும் வேலைக்கு துண்டு போட்டு பிடிச்சது

அரசியல் எதிரிகள் - தேர்தல் நேரத்தில் போயஸ் தோட்டத்து அல்லிராணி மத்த நேரத்தில் கோபாலபுரத்து கிருஷ்ணர்

சமீபத்திய வருத்தம் - போயஸ் தோட்டத்து மெளனச் சாமியார் கைகழுவியது

சமீபத்திய எரிச்சல்- புரசை பிஸ்தா தேசியத்திலிருந்து திராவிடத்துக்கு நழுவியது

ஜனநாயகப் பேரவை - ஒன் மேன் ஷோ

மூன்றாவது அணி - யாரும் கண்டுக்காதபோது முணுமுணுக்கும் மந்திரம்

திடீர் நண்பர் - தைலா தோட்டத்து மரத் தமிழன்

குறைந்தபட்ச செயல்திட்டம் - ஜக்குபாய் பட வெளியீட்டு விழாவில் தலைகாட்டுவது

நீண்டகால செயல்திட்டம் - கார்த்திக் சிதம்பரத்தை காபினட் அமைச்சராக்குவது

நீண்டகால சாதனை - அறிவு ஜீவி இமேஜ் அடிபடாமல் அரசியல் நடத்துவது

ஹேப்பி பர்த்டே ஸார்!

Monday, September 13, 2004

சாருநிவேதிதாவின் மெயின் லைன்!

தொண்ணூறுகளில் சாருநிவேதிதாவின் எக்ஸ்டென்ஷியலிஸம் வெகு பிரபலம். சாருவின் எழுத்துக்கள் எனக்கு பரிச்சயமானது தினமலர் அந்துமணியின் பா.கே.ப மூலமாகத்தான். அவரது ஸீரோ டிகிரியின் சில பக்கங்களை மட்டும் படிக்க நேர்ந்தபோது கூசிப்போனேன். என்னைப் பொறுத்தவரை சாருவின் படைப்புகள் என்றால் சென்ற ஆண்டில் இந்தியா டுடேவில் எழுதிய கட்டுரைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆபாசமான வார்த்தைகளை டிக்ஷனரியாக தொகுக்க நினைப்பவர்கள் சாருவை தவிர்க்க முடியாது. எழுத்தில் மட்டுமல்ல நேரிலும் சாரு கட்டுப்பாடில்லாத சுதந்திரமான மனிதர்தான். ஆனால், தனது படைப்புகளின் மூலம் வாசகனையும் ஆபாசம்தான் முக்கியமான அம்சம் என்கிற கட்டுப்பாட்டிலேயே அவர் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்விக்குதான் பதிலில்லை. 'நேநோ'வை அசோகமித்திரன் புகழ்ந்து தள்ளியிருப்பதற்கும் உயிர்மை ஆண்டுவிழாவில் அசோகமித்திரனின் பேச்சை மட்டும் ஆவலாக கேட்டுவிட்டு சாரு இடத்தை விட்டு நகர்ந்ததற்கும் சம்பந்தமில்லையென்றுதான் நான் நினைக்கிறேன். சாருவை குறை சொல்லி புண்ணியமில்லை. ஒரு காலத்தில் 'மஜா'வான எழுத்துக்களுக்கு பேர் போன சாருநிவேதிதாவுக்கு போட்டியாக சில பெண் கவிதாயினிகள் வந்ததுதான் காலத்தின் கோலம்.

சமீபத்தில் 'படித்துறை'யை இன்னொருவர் படிக்க பக்கத்திலிருந்து பார்த்தபோது ஒரு கவிதாயினி எழுதிய மொழிபெயர்ப்புக் கவிதைகள்தான் கண்ணில் தட்டுப்பட்டன. வழக்கம்போல நாமெல்லோரும் எதிர்பார்க்கும் 'சுதந்திரமான' சிந்தனைகளாகவே கவிதையும் இருந்தது. பத்ரியின் ஆதங்கத்தில் நியாயமிருக்கிறது. புணர்தல் சம்பந்தமாக எதையாவது எழுதி வைத்தால்தான் ஜென்மம் சாபல்யமடையும் என்கிற வியாதி இன்று இலக்கியவாதிகளுக்கு மத்தியில் பரவி வருகிறது. சாருவுக்கு நம்ம பிரகாஷ் வேறு வக்காலத்து வாங்குகிறார். சாரு ஆரம்பத்தில் நல்ல சிறுகதைகளை எழுதினார் என்பதற்காக இப்போது எந்த சாக்கடையை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்கிற ஆதங்கத்தை பிரகாஷ் கூட புரிந்துகொள்ளவில்லையே! ஆனால், சாருவிடம் 'எழுத்து திருட்டு' இருக்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் திறமை இருக்கிறது என்பது வெளிப்படை. அவரது நடையும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஜீரணிக்க முடியாத விஷயம், மறைக்க வேண்டிய விஷயத்தையெல்லாம் வேண்டுமென்றே பரபரப்பிற்காக முச்சந்தியில் போட்டு உடைத்து அலம்பல் பண்ணுவதுதான்!

Wednesday, September 08, 2004

ரீ-வியூ - அபூர்வ ராகங்கள்வாணிஜெயராமின் கணீர் குரலில் 'கேள்வியின் நாயகனே...' என்று ஸ்ரீவித்யா வாயசைக்கும் காட்சிதான் ஒரு வழியாக கத்தியின்றி யுத்தமின்றி கிளைமாக்ஸ் கலாட்டா எதுவுமின்றி நம்மை ஸீட் நுனிக்கு வரவழைக்கும். படத்தின் கதையையும் ஓரே பாட்டில் சொல்லிவிடும்! தமிழ்க் கலாசாரத்தின் (தமிழ் சினிமாவின் ?) சமன்பாடுகளை கலைத்துப்போட்டுவிட்டு பின்னர் குழம்பிப் போய் ஒழுங்காக அடுக்கி வைக்கும் குழப்பமான கிளைமாக்ஸாக இருந்தாலும் அபூர்வ ராகங்கள் நிச்சயம் அபூர்வமான படம்தான்.

கணவனை பிரிந்திருக்கும் கர்நாடக பின்னணி பாடகியின் மீது ஒரு ரசிகனுக்கு வெறித்தனமான காதல். பாடகியின் ஒரே செல்லப் பெண்ணிற்கோ அதே ரசிகனின் அப்பாவின் மீது காதல். இளைய தலைமுறை, முதிய தலைமுறையை விரும்பும் டேஸ்ட்டை டீஸெண்டாக சொல்லிவிட்டு நம்மூர் கலாச்சாரத்தை நினைத்து கவலைப்பட்டு மேட்டரை அப்படியே கைகழுவி விட்டு எஸ்கேப்பாகிவிடுகிறார் டைரக்டர் கே. பாலசந்தர்.

அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் என்று வெற்றிப்படிகளில் நின்று கொண்டிருந்த கே.பியின் உயரத்தை தக்க வைத்து தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஸ்ரீதர் கிடைத்திருக்கிறார் என்கிற செய்தியை இந்திய சினிமாவுக்கு சொன்னது அபூர்வ ராகங்கள். ·பார்முலா படங்களில் சிக்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவில் அன்னக்கிளி கொண்டு வந்திருந்த மாற்றத்தை உறுதிப்படுத்தி இயக்குனர்களின் யுகம் தொடங்கிவிட்டத்தை உறுதிப்படுத்தியது அபூர்வராகங்கள்தான்.

பிரபல வசவு வார்த்தையோடு அறிமுகமாகும் கமல்ஹாசன் படத்தின் நிஜமான அமுல்பேபி. சின்ன விஷயத்திற்கெல்லாம் ஏகத்துக்கும் கோபப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு... கமலின் நடிப்புக்கு நல்ல தீனி. இருபத்து நாலு படங்களில் வராத மெச்சூரிட்டியை அபூர்வ ராகங்கள் அள்ளிக் கொடுத்திருக்கிறது. ஹீரோவாக பிரமோஷன் என்றாலும் ஸ்ரீவித்யாவை கவருவதற்காக வில்லங்கமான விஷயங்களை செய்துவிட்டு மனசாட்சி உறுத்தல்களையும் வெளிப்படையாக காட்டியது ஹீரோ என்பதை விட நல்ல குணச்சித்திர ரோலாகவே மனதில் நிற்கிறது.

பவுடர் மேல் பவுடர் பூசியும் மேக்கப் எடுபடாத வேடத்தில் மேஜர் சுந்தராஜனை திணித்து ஜெயசுதாவுக்கு அவர் மீது வரும் காதலை நியாயப்படுத்த காட்சிகள் எதுவுமில்லாது படத்தின் பெரிய குறை. தேசிய கீதத்திற்கு யாரோ சரியான மரியாதை செய்யாததால் கமலுக்கு வரும் கோபம் படு செயற்கை. வெறித்தனமாக ரசிகனை பாடகி வீட்டுக்குள்ளே வைத்திருக்கவேண்டிய அவசியமென்ன என்கிற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. ஆனாலும், ஏழு கேரக்டர்களை வைத்துக்கொண்டு படத்தை ஜிவ்வென்று இழுத்து ஒவ்வொரு ரீலிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை காட்டினாலும் தாளம் தப்பவில்லை.

கமல், ஸ்ரீவித்யா தவிர டாக்டர் வைத்தியாக வரும் நாகேஷ¥ம் கவியரசுவாகவே வரும் கண்ணதாசனும் நிறையவே ஸ்கோர் பண்ணுகிறார்கள். சினிமா புள்ளிவிவர கணக்குகளுடன் எப்போதும் தொண தொணக்கும் நாகேஷ், எப்போது கேட்டாலும் கவிதை படிக்கும் கண்ணதாசனும் ரசிகர்களின் மனதில் ரொம்ப நாள் இருந்தார்கள். 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்...' என்று கண்ணதாசனும் எம்.எஸ்வியும் ஆச்சரியப்படுத்தியிருப்பார்கள். அதே கூட்டணியில் 'அதிசய ராகம்..' சொல்லும் ஜேசுதாஸின் குரலில் வரும் பாடல் இன்னும் ஜீவித்திருக்கிறது.

இப்படியெல்லாம் படத்தை பற்றி விமர்சித்தாலும் வெகு சாதாரணமாக சித்தரிக்கப்பட்ட அந்த புதுமுகத்தின் அறிமுகம்தான் தமிழ் சினிமாவின் சகாப்தத்தில் அபூர்வ ராகங்களின் பெயரை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த புதுமுகத்தின் பெயரை குறிப்பிட மறந்த பத்திரிக்கை விமர்சனங்கள் நிறைய. படத்தின் வெற்றிவிழாவில் கலைஞரின் கையால் விருது கிடைக்கும் வாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்ட அந்த புதுமுகத்தின் முதல் படமாக மட்டுமே அபூர்வ ராகங்கள் இன்று சினிமா ஆய்வாளர்களால் எடுத்தாளப்படுவது வேடிக்கை.

'சுருதிபேதம்' டைட்டில் கார்டுடன் அறிமுகமாவதிலிருந்து ஆடியன்ஸோடு ஆடியன்ஸாக இருட்டிலிருந்தபடியே செத்துப்போகும் கிளைமாக்ஸ் வரை சொற்ப காட்சிகளில் கருப்புக் கோட்டு சகிதம் கலைந்த முடியுடன் ஸ்ரீவித்யாவின் திருந்திய கணவராக வரும் அந்த கருப்பு முகத்தில் பிரகாசமான ஒளி எதுவும் தென்படாது. 'பைரவி வீடு இதுதானே..' என்று கேட்கும் முதல் டயலாக்கில் பரிதாபம் கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும்.

படத்தில் டாக்டர் வைத்தியாக வரும் நகேஷ், அந்த கருப்பு கோட்டு கணவரிடம் பிரேம் நஸீர் நடித்த நூறாவது படம் எது என்று கேட்டு, தவறான பதிலில் முகம் சுளித்து இதுவே உனக்கு கடைசியாக இருக்கட்டுமென்று சபித்துவிட்டு போய்விடுவார்.

நல்லவேளை....அபூர்வ ராகம், கடைசி ராகமாகிவிடாமல் இன்னும் சுகமான ராகமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது!

Friday, September 03, 2004

இன்னிக்கு படிச்சதுல புடிச்சது!

இரா.முருகன் பேட்டி

முத்துராமன் கதை

ராஜீவ் கொலை பற்றிய பத்ரியின் பதிவு

காந்தீய விழுமியங்கள் - தொழிலாளர் நலன்

துக்ளக்கில் சத்யாவின் கைவண்ணம். சாம்பிளுக்கு சில...

அன்பழகன், கருணாநிதியிடம்

'ரொம்ப டயர்டா இருக்குது. அடிக்கடி மாநாடு, மீட்டிங்னு கூப்பிடாதீங்க. ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்னு இந்த டேப்ல பேசியிருக்கேன். எத்தனை தடவை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்குங்க..'


ஜெயலட்சுமியிடம் நீதிபதி

'என்னம்மா, பட்டியல் சின்னதா இருக்குது? யார் மிரட்டலுக்கும் பயப்படாம உண்மையை சொல்லு..'

'இல்லை ஸார், இந்த பட்டியல்ல இருக்குற போலீஸ் தவிர மத்தவங்க எல்லாம் எனக்கு அநீதி இழைச்சிருக்காங்க..'

Tuesday, August 31, 2004

காலச்சுவடும் காமாலை வியாதியும்

எந்தப் பத்திரிக்கையில் பெண்களின் கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சமாச்சாரம் பற்றி அதிகமான கதைகள் வரும் என்று போட்டி வைத்தால் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெறப்போவது காலச்சுவடுதான். முலைவரி கட்டாத பெண்களின் மேற்படி சமாச்சரத்தை அகற்றிவிட கட்டளையிட்ட அந்தக்காலத்து மன்னர்கள் பற்றிய கதைகள்தான் இருந்துவிட்டு போகட்டுமே....அதைப்பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வதால் சொஸைட்டிக்கு என்ன பிரயோசனம் என்றெல்லாம் அப்பாவியாக கேள்வி கேட்டுவிடாதீர்கள். நாம் படிப்பது இலக்கியம். சரோஜாதேவி டைப் கதையல்ல என்கிற உணர்வு உள்ளுக்குள்ளே இருந்தாதான் உண்மையான இலக்கிய ஆர்வலராக இருக்கமுடியும். படிக்கும்போது மனசுக்குள் மஜாவா இருந்தாலும் முகத்துல ஒரு சீரியஸ்னஸ் கொண்டுவரணும்.

முலைவரி வந்த (இன்ப) அதிர்ச்சி போதாது என்று நம்மூர் மகளிர் அணி வேறு படையெடுத்து பெண்குறியை பத்தியெல்லாம் சுதந்திரமாக எழுதி, பிறாண்டிவிட்டு போனது. அதையெல்லாம் எதிர்ப்பது பின்னாளில் ஆணாதிக்கமாகவும் மாறிப்போனது. அப்போது நமக்கேன் வம்பு என்று வாய்மூடிக்கொண்ட இலக்கியவாதிகள்தான் அதிகம். போன வருஷம் நடந்த இளைய தலைமுறையினருக்கான கதைப்போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை ஆராய்ந்த பின்னர் முதல் பரிசை ஜே.பி. சாணக்கியாவின் படித்துறைக்கு கொடுத்துவிட்டு குஜால் பத்திரிக்கை என்கிற பெயரை தனக்கென்று பத்திரப்படுத்திக்கொண்டது காலச்சுவடு. அதற்கப்புறம் அவ்வப்போது காலச்சுவடு படிக்கும்போதெல்லாம் காமாலை வியாதி வந்துபோகிறது.

இப்போது ஒரு ஸ்டோரியின் கதை. எழுதியவர், இலக்கிய உலகில் பெரிய பிஸ்தாவான சுந்தர ராமசாமி. கதை ரொம்ப சிம்பிள். தெருமுனையில் ஒரு ஸ்தூபி வெடித்து அழகான ஒரு மங்கையின் சிலை வெளிப்படுகிறது. ஈகிள் பத்திரிக்கையின் நிருபர் அதையெல்லாம் கவர் செய்து போட்டோ எடுத்து பிரிண்ட் போடும்போதுதான் ஒரு விஷயத்தை கவனிக்கிறார். எல்லா போட்டோவிலும் மேற்படி சமாச்சாரம் இல்லையாம்! சுந்தர ராமசாமி, கதையில் என்ன சொல்ல வருகிறார் என்பது என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கு புரியவில்லை என்றாலும் ஜிகுஜிகுவென்று வரும் வர்ணணைகள் மட்டும் நன்றாகவே புரிகிறது. சாம்பிளுக்கு சில. வாடாமல்லியையொத்த....

இந்த இடத்தில்தான் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதிய ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாமலே போய்விடுகிறது... ஒருவேளை என்னை மாதிரியான சில்லுண்டிகளுக்கு மட்டுமோ?!

Thursday, August 26, 2004

கம்பனும் கருப்புச்சட்டைகளும்

தமிழினக் காவலர் டாக்டர் வீரமணி, கம்பனுக்கும் கம்பன் விழாவுக்கும் நோ சொல்கிறார். காரணம்? கம்பன், இராவணன் என்கிற திராவிடனை வில்லனாக காண்பித்ததுதானாம்! பகுத்தறிவு அய்யா, ராமன் ஆரியன் என்றும் கைபர் கணவாய் கிராஸ் பண்ணி வந்தவன் என்றெல்லாம் ஏற்கனவே பிதற்றியவர்தான். இப்போது கம்பன் மீது பாய்ந்திருக்கிறார். (நன்றி - உண்மை மாத இதழ்)

கம்பன் என்ற புலவனைப் புகழ்வது, பாராட்டுவது, பெருமைப்படுத்துவது, அவனுக்கு விழா எடுப்பது என்பது, தமிழர், திராவிடப் பண்பாட்டையும், நாகரீகத்தையும் இழிவுபடுத்தும் மிகப்பெரிய பண்பாட்டுச் சீரழிவு ஆகும்!
கம்பன் அடிப்பொடிகளும், கம்பனைத் தூக்கி நிறுத்த முயலும் கொம்பன்களும் சிந்திக்க வேண்டும்.


காப்பி அடித்த கம்பனின் இராமன்- கடவுள் அவதாரம்!

“ஆரிய இராமனை உயர்த்தவே, இராவணன் அரக்கனாக்கப்பட்டான் - எதனால்? இராமன் தெய்வமாக்கப்படல் வேண்டும் என்பதற்காக” (‘இராவண காவிய’, மதிப்புரை) தந்தை பெரியார் அவர்கள் கம்பன் செய்த இனத் துரோகம்பற்றி ‘குடிஅரசு’ வார ஏட்டில் 1946-இல் எழுதினார்!

“வசிஷ்டர் இராமனிடம் சென்று கீழ்க்கண்டபடி (மனு) நீதி உரைக்கின்றார் - ‘எப்படி ஆட்சி நடத்த வேண்டும்’ என்று?”

“கரிய மாலினும் கண்ணுதல் ஆனினும்
உரிய தாமரை மேலுறை வானிலும்
விரியும் பூதமோர், அய்ந்தினும் மெய்யினும்
பெரியார் அந்தணர் பேணுதி உள்ளத்தால்!”

இதன் பொருள் (துளசிதாசர் இராமாயணத்திலும் இது உள்ளது) “திருமால், சிவன், பிரம்மா, அய்ம்பூதங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒன்று உண்டு என்று சொன்னால் ‘உண்மை’ என்று தத்துவம் சொல்வார்கள். அந்த உண்மையை விட உலகில் உயர்ந்தவர் யார் என்றால் அவர் பார்ப்பனரே!
எனவே அவர்களை பார்ப்பனரை வணங்கி அனுதினமும் ஆட்சி நடத்து” என்று கம்பர் எழுதுகிறார் என்றால்.. இதைவிடக் கொடுமை - பச்சைப் பார்ப்பனீய வர்ணாசிரம உயர்வு பிரச்சாரம் வேறு உண்டா?

இந்தக் கம்பனை மானங்கெட்ட தமிழர்கள் தலையில் வைத்து விழாக் கொண்டாடுவதை விட இந்த இனத்தின் எழுச்சியைத் தடுத்து, மீட்சிக் கிடைக்காவண்ணம் வீழ்ச்சியுறச் செய்தல் வேறு உண்டா?


அட தேவுடா!

Monday, August 23, 2004

பெண் பெரியார்

பெண்களைப் பற்றிப் பேசுகிற எந்த இந்திய வரலாறும் தேவதாசிகளைப் பற்றிப் பேசாமல் இருந்துவிட முடியாது. தேவதாசி முறையை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்த முன்னோடிகளில் முக்கியமானவர் மூவாலூர் ராமாமிர்தம் அம்மையார். ஐந்து வயதுக் குழந்தையாக இருந்த போது வறுமையின் காரணமாக பத்து ரூபாய்க்கும் ஒரு பழம் புடவைக்கும் ஒரு தாசிப் பெண்ணிடம் விற்கப்பட்டவர். அவர் ஒரு இளம் பெண்ணாக வளர்ச்சி அடைந்த போது அவரை தாசித் தொழிலில் ஈடுபடுத்த மற்றவர்கள் முனைந்த போது சீறியெழிந்து பொட்டுக் கட்டும் வழக்கத்தை எதிர்த்துப் போராடியவர். சுய முயற்சியால் தமிழும் சமஸ்கிருதமும் படித்தவர். தமிழ் எழுத்தாளர். 'தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' (1936) 'தமயந்தி' (1945) ஆகிய நாவல்களை எழுதியவர். புரோகிதர் மறுப்புக் கல்யாணங்களில் திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களைச் சொல்லிக் காட்டி அதன் பொருள் என்ன என்று விளக்கும் அளவிற்கு சமஸ்கிருத அறிவு பெற்றிருந்தார். காங்கிரஸ் கொடியைப் பொது இடங்களுக்கு எடுத்துக் கொண்டுவரத் தடையிருந்த போது கொடியையே சேலையாக உடுத்திக் கொண்டு மேடையேறிப் பேசியவர். பெரியாரின் சீடர். இவரே ஒரு பெண் பெரியார்.

அது 1987ம் வருஷம் என்று ஞாபகம். கலைஞரை முதல் முறையாக அப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நகராட்சிப் பூங்காவில் புதிதாக கட்டப்பட்டிருந்த கட்டிடத்தை திறந்து வைக்க மயிலாடுதுறைக்கு வந்திருந்தார். மேடையில் உள்ளூர் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் கொண்டுவந்த ஒரு பொருளன்றை பிரித்து வாயில் போட்டுக் கொள்கிறார். 'பாருப்பா... சாக்லேட் சாப்பிடுறாரு...' ஆச்சரியமாய் நானும் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அது சாக்லேட் அல்ல விக்ஸ் என்பது ரொம்ப வருஷம் கழித்துதான் தெரிய வந்தது. கலைஞர் திறந்து வைத்த கட்டிடமும் பழசாகிப் போய் போன வாரம் மயிலாடுதுறை நகராட்சியினர் இடித்து இம்சித்துக் கொண்டிருந்தார்கள். சொல்ல மறந்து விட்டேன். அந்த விக்ஸ் மாதிரியே நான் மிஸ் பண்ணிய இன்னொரு விஷயம், அந்த கட்டிடத்திற்கு கலைஞர் சூட்டியிருந்த பெயர்! மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் வணிக வளாகம்.
யார் இந்த மூவலூர் அம்மையார்? இப்படித்தான் பெரியாரும் ஆரம்பத்தில் கேட்டிருப்பார். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் பெண் பேச்சாளராக இருந்தவர் ராமாமிர்தம் அம்மையார். மயிலாடுதுறைக்கு அருகில் மூவலூர் கிராமத்தில் பிறந்து வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை பெரியாரின் உண்மையான சீடராகவே இருந்தவர் என்பதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயமிருக்கிறது. ராமாமிர்தம் அம்மையார் அடிப்படையில் தாசி குலத்தை சேர்ந்தவர். தேவதாசி முறையை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்க தீவிரமாக இருந்தவர்.
சோழர்களுக்கு பிந்தைய காலத்தில் தஞ்சை மாவட்டம் அந்நியர்களின் வருகையால் கலாச்சார பண்பாட்டு சிதைவுக்கு உள்ளாகி அடிமைப்பட்டு அடங்கி கிடந்த நேரம்தான் தேவதாசி முறை உச்சத்தில் இருந்த நேரம் என்று சொல்கிறார்கள். உள்ளூர் நிலவுடைமை பண்ணையார்களின் ஆளுகை பல விபரீதங்களை ஏற்படுத்தி வைத்திருந்தது. நல்ல தலைவர்களெல்லாம் அந்நிய சக்திகளின் அடக்குமுறைக்கு எதிராக அணிதிரண்ட குரல் கொடுத்துக் கொண்டிருந்தபோது சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளை கண்டும் ஒரு கூட்டம் பொங்கியெழுந்தது. அவர்களுக்கு சுயமரியாதை பிரச்சாரங்கள்தான் துணை நின்றன. தேவதாசி குடும்பத்தில் பிறந்து குலத் தொழிலை வெறுத்து ஒதுக்கி அப்படிப்பட்ட பெண்களின் நிலையை சமூகத்தில் உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் ராமாமிர்தம் அம்மையாருக்கு தீவிரமாக எழுந்தது. டாக்டர் முத்து லெட்சுமியின் துணையும் அவருக்கு கிடைத்தது. தேவதாசிகள் முன்னேற்ற சங்கமும் உருவாகி முழுமூச்சாக களமிறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் மேடையேறிப் பேசவே மக்கள் தயங்கிக் கொண்டிருந்த காலத்தில் முதன் முதலில் மேடையேறி சுயமரியாதை பிரசங்கம் செய்த முதல் பெண் இவராகத்தான் இருக்கமுடியும். தாசி குலத்தொழிலாக தொடர உள்ளூர் ஆதிக்க சக்திகளான பண்ணையார்களும், செல்வந்தர்களும்தான் காரணம் என்பதை ராமார்மிதம் அம்மையார் தனது எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். ஜோதிடம், மந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்த்து மேடையேறி முழுங்கி பெரியாரின் முழுமையான சிஷ்யையாகவும் இருந்திருக்கிறார். தாசிகளே இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் திராவிட இயக்கத்திற்குதான் முக்கிய பங்கு இருந்திருக்கிறது.
தேவதாசிகளை ஒழிப்பதில் தேசிய அளவில் காந்திஜியுடன் முன்நின்றவர்களில் பெரியார் ராஜாஜி, திரு.வி.க. டாக்டர் முத்துலெட்சுமி, வரதராஜுலு நாயுடு என்கிற தலைவர்களின் பெரிய லிஸ்ட்டில் திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போன்ற கலைஞர்களையும் நாம் சேர்த்தாக வேண்டும். அவற்றில் கடவுளுக்கு தாலி கட்டி விட்டு பக்தர்களிடம் போவது என்று தாசிகளையும் விமர்சித்துவிட்டு எத்தனை புருஷரோடு சல்லாபித்தாலும் விபசார தோஷமில்லை என்று தாசிகளை ஊக்குவிக்கும் சமூகத்தையும் விமர்சித்து நடுநிலையான விமர்சனங்களை முன்வைத்தவர்களில் ஒருவர் ராமாமிர்தம் அம்மையார்.
தேவதாசி முறையை ஒழிப்பது தெய்வ குற்றம் என்பதிலிருந்து தேவதாசி முறையை ஒழித்து விடுவது புராதான இசைக்கலையான பரதநாட்டியத்துக்கு இழுக்கு என்றெல்லாம் பேசியவர்கள் பிற்பாடு ராமாமிர்தம் அம்மையாரின் மேடைப் பேச்சுக்கு பயந்தார்கள். பெண்கள், தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. தாசிகளும் பெண்கள்தானே....அவர்களுக்கு சமூகத்தில் ஏன் சம அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்று ராமாமிர்தம் அம்மையார் முன்வைத்த கேள்விகள்தான் இன்று தேவதாசி முறை முற்றிலுமாக ஓழிவதற்கு காரணம். தேவதாசிகளின் அலங்கோலமான வாழ்க்கைமுறையை வெளிப்படையாக மக்களுக்கு சொன்னதும் இவர்தான். இருந்தும் சமூகத்தில் தாசிகள் கீழ்த்தரமான மக்களாகவே நடத்தப்பட்டார்கள். ஐம்பதுகளின் இறுதிவரை தமிழ் சினிமாவின் வில்லன் பாத்திரம் பெரும்பாலும் தாசிகளாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
ராமாமிர்தம் அம்மையாரின் கருத்துப்படி திருமணம் என்பது சுயம்வரம் நடத்தி மணமகள், மணமகனை தேர்ந்தெடுப்பதுதான். நமது கலாச்சாரம், காதலை அடிப்படையாக கொண்டது என்கிறார் அவர். கட்டாய திருமணங்கள்தான் தாசிகள் என்கிற அமைப்பையும் விபச்சாரத்தையும் நமது கலாச்சாரத்துக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது என்பது அவரது நம்பிக்கை. தாசிகளுடன் சேர்ந்து இருந்ததன் காரணமாக அவர்களைப் பற்றிய உளவியல் ரீதியிலான புரிதல்களும் அவருக்கு இருந்தது.
தாசித் தொழில் ஒரு வியாபார முறை. தாசியிடம்போதுமான அளவு பணம் சேர்ந்தாலும் தொழிலை விட முடியாது. என்கிற யதார்த்ததையெல்லாம் அறிந்து வைத்திருந்தார் அவர். காம உணர்ச்சியை எழுப்பும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும் என்கிற அவரது கருத்து தாசித் தொழில் ஊக்குவிக்கப்படக்கூடாது என்கிற ஆதங்கத்தால் விளைந்தது என்றுதான் அர்த்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தேவதாசிகள் என்கிற கருத்தியலே ஆரியர்களின் வருகைக்கு அப்புறம்தான் என்றெல்லாம் திராவிட இயக்க ரீதியிலான கொள்கைகளையே இவரும் முன்வைக்கிறார். தேவதாசி, பரத்தை என்கிற நடைமுறைகளெல்லாம் ஆரியர்களின் படையெடுப்புக்கு முன்னாலே இருந்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.
ஆனால் தாசிகள் கோயில்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளூர் பெரியவர்களுக்கு விருந்தாக்கப்பட்டது மேல் சாதியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்த காலத்தில்தான். கோயில் குருக்களிலிருந்து செல்வந்தர்கள் வரை ஆண்டவனின் பெயராலும் கலையின் பெயராலும் பெண் சமூகத்தை விபசாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டிருந்தது. தமிழகத்தின் கலாசார நடனமான பரதநாட்டியத்திற்கும் இழுக்கு வந்ததற்கு சில சுயநல சக்திகளின் பெண் பித்துதான் காரணம்.
தனக்கு கடவுள் நம்பிக்கையில்லாமல் போனதற்கு ராமாமிர்தம் அம்மையார்சொல்லும் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது. தேவதாசி முறையை பண்டைக்கால சித்தர்களும் சாமியார்களும் கண்டிப்பதை விட சுயமாரியாதைக்காரர்கள்தான் கண்டித்துவிட்டார்கள். அதானால்தான் தான் கடவுளை மறுத்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து கொண்டதாக சொல்கிறார். கடவுள் உண்டா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாத ஒன்றை பற்றி நாம் ஏன் பேசவேண்டும்? கண்ணுக்கு தெரிந்த விஷயங்களையும் பிரச்சினைகளையும் மட்டுமே பேசுவோம் என்கிற அவரது கருத்தும் நியாயமான விஷயம்தான்.
ராமாமிர்தம் அம்மையாரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய குறிப்புகள் பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. அவரது போட்டோவை கூட மயிலாடுதுறை திமுக கட்சி அலுவலகத்தில் பார்த்த மாதிரி ஞாபகம். ஆணுக்கும் பெண்ணும் அறிவு போன்றவற்றில் வித்தியாசமில்லை என்பது மாதிரி சம்சாரிக்கும் தாசிக்கும் வாழ்க்கையில் எவ்வித வித்தியாசமில்லை என்கிற அம்மையாரின் கருத்தை படிக்கும்போது பாரதி கண்ட புதுமைப்பெண்ணாகத்தான் அவரை பார்க்கத் தோன்றுகிறது.

Courtesy : www.thisaigal.com

Thursday, August 19, 2004

அரசியல் அரக்கனும் அல்வா கொடுக்கும் தமிழனும்

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியர்களிடமும் இன்னபிற வெளிநாட்டு இறக்குமதி சாதியினரிடமும் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழனை தட்டியெழுப்பி பச்சைத் தமிழனை உசந்த நாற்காலியில் உட்கார வைக்கும் பணிக்காக கொள்கை கோமானும் சமூக நீதிக் காவலரும் சமீபத்தில் கைகோர்த்து கொண்டார்கள். தென் தமிழ்நாட்டை இன்னமும் அமைதியாக வைத்திருக்கும் சேதுராமனும் சமீபத்தில் பச்சை தமிழர்களுக்கு எதிரான சதியில் மாட்டிக்கொண்ட, திருச்சி நிஷாவோட உடன்பிறவா சகோதரன் தங்கர்பச்சானும்தான் கைகோர்த்த கரங்களை பேஸ்ட் போட்டு ஓட்டினார்கள்.

மதுரையில் மையம் கொண்டிருந்த தொல். திருமாவை வட தமிழ்நாட்டுக்கு அழைச்சிட்டு வந்து சமூக நீதிக்காக போராடச் சொன்னதே மருத்துவர் ராமதாசுதானாம். (டாக்டருக்கு படிச்ச அய்யாவை மருத்துவர்னு விளிக்கலாம். டாக்டருக்கு படிக்காத கலைஞரை எப்படி விளிக்கிறதுன்னு... திருமா, ஒரு கிளாஸ் எடுமா!)

தமிழர்களுக்கு 'காந்த்'கள் மூலம் காயடிக்கும் வேலை கனகச்சிதமாக நடந்து கொண்டிருப்பதாக திருமா சொன்னார். (காயடிக்கிறதுன்னா இன்னான்னு ·பிரெண்டுகிட்ட கேட்டா முகத்தை சுளிச்சுக்கிறான்....இது கூட தெரியாதான்னு ஒரு பார்வை வேற. அப்படியென்ன மேட்டரு அது?)

இப்போதைக்கு தமிழர்களின் ஓரே உருப்படியான முன்னோடி இலங்கை காட்டிலிருக்கும் ஒரு வேங்கையாம்! (கலைருக்கு வந்த நேரமடா சாமி! உண்மையான இனமானக் காவலர் வவுனியா தம்பியா, திண்டிவனம் அய்யாவா, காட்டுராஜா வீரப்பனான்னு ஒரு வாக்கெடுப்பு எடுத்தா என்ன?)

அரசியல் என்னும் அரக்கனால் தமிழ்த் தாயை கவனிக்கமுடியாமல் போய்விட்டது...தாயை கவனிச்சு தாலாட்ட நேரம் வந்துடுச்சுன்னு சொன்னார். (இந்தியாவையும் தாய்னு சொல்றான்... தமிழையும் தாய்னு சொல்றான்...எந்த தாய் உண்மையான தாய்னு உங்களுக்கு தெர்யுமாப்பா?) தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தமிழர்களின் இழந்த உரிமையை மீட்டெடுக்கும் இயக்கமாம்..(மீட்டெடுப்பதற்குள்ளாக ஏதாவது எலெக்ஷன் வந்து தொலையாமல் இருக்கட்டும்!)

அரசியல் ரீதியாக அய்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கலாம். ஆனால், உணர்வு ரீதியாக நாங்க எல்லோரும் ஒண்ணாத்தான் இருக்கோம்னு சொன்ன திருமா, தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரம் பச்சைத் தமிழனுக்கு மட்டும்தான் கிடைக்கவேண்டும்னு சொன்னார். பிரதமரை இறக்குமதி செஞ்சா, தப்பில்லே. முதல்வரைத்தான் இறக்குமதி பண்ணக்கூடாதுன்னு அய்யா வழியிலேயே தம்பியும் சிந்திச்சு சொல்லியிருந்தார். (ரொம்ப ஓவரா பேசற தம்பின்னு மருத்துவர் அய்யாவுக்கு கடைசிவரைக்கும் காதுல புகை வரலைங்கிறது முக்கியமான விஷயம்!)

மைக் பிடிச்ச இனமானக் காவலரும் தமிழ் பண்பாட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு எச்சரிக்கை சொன்னார். இனிமே சின்னத்திரை பெரிய திரையில் தமிழில்தான் எல்லாமும் வரவேண்டுமாம். (உடன்பிறப்பே, அய்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க இனி K டிவி க டிவி என்கிற பெயரில் அழைக்கப்படும் என்கிற செய்தி உனக்கு கிட்டியதா?)

ஆலயப்பிரவேசம் செய்து தமிழில்தான் மந்திரங்கள் ஓதப்படும் என்கிற நிலை வருமாம். (ஆலயப் பிரவேசம்னா, இந்து கோயில்கள் மட்டும்தான். சர்ச்சில் இங்கிலீஷ் வருமா, மசூதியில உருது வருமான்னு எசகுபிசகாய் கேள்வி கேட்கக் கூடாது!)

தமிழில் கற்றுக்கொடுக்காத பள்ளிகளில் முன்னால் தமிழ் உணர்வு கொண்டவர்கள் போராட்டத்தில் இறங்குவார்களாம். (டான்பாஸ்கோ, பிஷப் ஸ்கூல் முன்னாடி இதெல்லாம் நடக்குமான்னு கேள்வி கேட்டா...சத்தியமா நீ ஒரு ஸ்கூல் பையன்தான் ராசா!)

தமிழில் திருமணம் நடக்காவிட்டால் திருமண மண்டபத்தின் முன்னால் அமைதியாக உட்கார்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெறுமாம். (தமிழில் நடந்தால் தமிழ் உணர்வுள்ளவர்கள் மொய் வைக்க வருவாங்களான்னு....நீ கேட்கமாட்டேன்னு எனக்கு தெரியுமப்பா!)

இனிமேலாவது எங்களை மாதிரியான பச்சைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்காரனுங்க அல்வா கொடுக்கிறதை நிறுத்திட்டு பொழைக்க ஏதாவது ஏற்பாடு செஞ்சு கொடுன்னு ஒரு உறுதிமொழியும் கூட்டத்துல எடுத்துக்கிட்டு நடையை கட்டுனாங்களாம்.

இவனுங்களுக்கு ஆப்பு வைக்க ஏதாவது சினிமாக்காரன் வந்தாதான் ஆச்சுன்னு சொல்லவேண்டாம். எவனாவது நல்ல அரசியல்வாதி, பத்திரிக்கைகாரன் வந்தாகூடப் போதும்! முக்கியமான தகுதி... எந்த ஜாதியிலும் பொறந்திருக்கக்கூடாது!

Monday, August 16, 2004

ஓசாகாவில் உறையும் தமிழ்டெட்சுனொசுகெ - பெயரைச் சரியாக சொல்ல மட்டுமல்ல இவரிடம் பேசவும் கஷ்டப்படவேண்டும். ஒரு ஐப்பான்காரரிடம் ஜப்பானிஸ், இங்கிலீஷில் பேசுவதற்கு அல்ல. தமிழில் பேசுவதற்குத்தான்! உரைநடை தமிழில் வெளுத்து வாங்குகிறார். டெட்சுனொசுகெ, ஜப்பானின் ஓசாகா நகரில் சொந்தமாக கடை வைத்திருக்கிறார். எங்களது வலைத்தளத்தின் (www.rajinifans.com) உறுப்பினர். இணையத்தின் மூலம் ஓரளவு பரிச்சயம் இருந்தாலும் நேரில் பார்த்தபோதுதான் தமிழ் மீதும் ரஜினி மீதும் டெட்சுனொசுகெ வைத்திருக்கும் பிரியத்தை புரிந்து கொள்ள முடிந்தது. http://www.osaka-rajni.net/

ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தவனை இடைமறித்து தனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது என்று இலக்கிய சுத்தமாக தமிழில் பேச ஆரம்பித்தார். கூடவே ·பாலோ அப் பண்ணி சரளமாக உரை நடை தமிழில் பேச என்னால் முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை. நம்மூர் சேட்டுகள் மாதிரி தமிழ் பேசுவார்கள் என்று நான் நினைத்திருந்ததை தவிடு பொடியாக்கினார்கள். தமிழில் பேசுவதோடு எழுத படிக்கவும் தெரிந்திருக்கிறது.

டெட்சுனொசுகெ, கூட வந்திருந்த மனைவியையும் மற்ற உறவினர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். எல்லோருமே ஓரளாவது தடுமாறியாவது தமிழில் பேசுகிறார்கள். 'எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும்' என்கிற வாசகத்தோடு ரஜினி படம் போட்ட டீஷர்ட்டில் குறுக்கும் நெடுக்குமாக அலைவதை பார்த்து அருணாச்சலா இன் ஹோட்டல் ஊழியர்கள் அதிசியமாகத்தான் பார்க்கிறார்கள். வைரமுத்து, செந்தில், மீனா, ஜனகராஜ் என்று தமிழ் கலைஞர்களை ரொம்பவும் ரசிக்கிறார்கள். காலையில் வைரமுத்துவை சந்தித்துவிட்டு மதியம் ஜனகராஜை பார்த்துவிட்டு சாயந்திரம் கில்லி படம் பார்த்துவிட்டு இப்போதுதான் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள் என்கிறார் அவர்களுடன் கூடவே இருக்கும் மதன்.

நிஐமாகவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவை முக்கியமாக ரஜினி படங்களை ஐப்பானில் எப்படி ரசிக்கிறார்கள் என்பது அல்ல. (இதே கேள்வியை பாரதிராஜா கேட்டு இவர்கள் சொல்லியிருக்கும் பதிலை கூடிய சீக்கிரம் செல்வமணியின் தமிழ் திரை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கலாம்!) ஆச்சரியப்பட வேண்டிய விஷயம், தமிழ்க் கலாசாரம் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஜப்பானியர்கள் காட்டும் ஈடுபாடு.

தமிழகத்தின் ஆன்மீக விஷயங்கள், உணவுவகை, பொழுதுபோக்கு, சினிமா மற்றும் தியேட்டர் கலாசாரம் எல்லாமே ஐப்பானியர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொள்வதற்காகவே மெனக்கெட்டு அங்கேயே தமிழ் கற்றுக்கொள்கிறார்கள். பரதநாட்டியத்தை ரொம்பவும் ரசிக்கிறார்கள். நல்லவேளை தமிழ்நாட்டின் அரசியல் இன்னும் அத்துப்படியாகவில்லை. அரசியலை பத்தி எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தையும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தரிசித்து வந்தது பற்றி பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். வலைத்தளமெல்லாம் தமிழில் இருந்தால் தங்களுக்கு படிக்க வசதியாக இருக்கும் என்கிறார்கள். வைரமுத்து ரஜினிக்காக எழுதிய பாடல்களை அட்சரம் பிசகாமல் பாட தெரிகிறது.

கிளம்பும்போது ரஜினி படம் போட்ட டீஷர்ட், ஸ்டிக்கர் என்று நம் கைகளில் திணித்து நன்றி சொல்கிறார்கள். அவர்கள் ஸ்டைலில் நாம் குனிந்து வணக்கம் சொல்ல முயல்வதற்கு முன்பாகவே நம்மூர் ஸ்டைலில் இருகரம் கூப்பி நன்றி சொல்கிறார்கள். கூட்டத்திலிருந்த ஒரு பெண்மணி தன்னுடைய விசிடிங் கார்டை கொடுத்துவிட்டு செளந்தர்யாவை ரொம்பப் பிடிக்கும் என்கிறார். விசிடிங் கார்டில் கண்ணை மூடியபடி கலர்·புல்லாக செளந்தர்யா!

இன்னொரு வயதானவர் தன்னை ரஜினியின் ரசிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். (ஆளைப் பார்த்தால் ஐம்பதுகளில் இருப்பவர் போல தெரிகிறது!) தனக்கு தமிழில் பேசவும் படிக்கவும் தெரியும் என்றாலும் சரளமாக பேச வராது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன விஷயம் கேட்டு எனக்கு மயக்கம் வராத குறைதான்.
'ஜக்குபாய் ரீலிஸ்....அப்போது....எ(ன்)னால் நன்றா(க) தமிழ் பேச முடியும்!'

Wednesday, August 11, 2004

தமிழ்நாடு கமர்ஷியல் காம்பளக்ஸ்

அறிவாலயம் பூக்கடை

இங்கே சகலவிதமான உதிரிப் பூக்களும் கதம்ப மாலைகளும் கிடைக்கும். காவி நிறத்தில் இருக்கும் கனகாம்பரம் தற்சமயம் விற்பனைக்கு இல்லை. பூக்கடையாக இருந்தாலும் சைடில் கருவேப்பிலை வியாபாரமும் உண்டு. எலெக்ஷன் நேரத்தில் மட்டும் ரேட் எக்குத்தப்பாய் இருக்கும். அப்பா, பிள்ளை, மாமா, மச்சான் என் சகலரும் ஓரே கடையில் வேலை பார்ப்பதால் படு சுறுசுறுப்பான சர்வீஸ் உண்டு. பூமாலைகளில் ஜிகினா வேலைப்பாடு படு நேர்த்தியாக இருக்கும். கல்யாணமோ, இழவோ எதுவாக இருந்தாலும் எல்லோரும் கடைக்கு வந்துதான் ஆகவேண்டும்.

லாயிட்ஸ் ரோடு காய்கறி மார்க்கெட்

பச்சை காய்கறிகள் சகாய விலைக்கு கிடைக்கும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தவிர அனைவருக்கும் ஒரு கிலோ காய்கறி இலவசமாக வழங்கப்படும். பூக்கடை பக்கம் போகாத எவருக்கும் பிரியாணி பொட்டலம் கூப்பிட்டுக் கொடுக்கப்படும். சுண்டைக்காய், முந்திரி கொட்டை, கத்தரிக்காய் போன்றவை எப்போதும் விற்கப்பட மாட்டாது. தற்சமயம் மாம்பழம் விற்பனைக்கு இல்லை. காய்கறிக்காரரே நேரடியாக களத்திலிறங்கி விற்பனை செய்வார். கடைக்காரர் கொஞ்சம் முசுடு என்பதால் கத்தரிக்காயின் காம்பு மாதிரி புடலங்காய் கூட சுருண்டுதான் கிடக்கும்.

தைலாபுரம் மெடிக்கல்ஸ்

தவறான மாத்திரைகளாக இருந்து உயிரும் போய்விட்டால் தாராளமாக சவுக்கடி கொடுக்கலாம். சினிமாக்காரர்களுக்கு இலவசமாக பேதி மருந்து கொடுக்கப்படும். மரம் வெட்டும் தொழிலாளர்களுக்கும் இன மான காவலர்களுக்கும் இலவசமாக பேண்டேஜ் வழங்கப்படும். ஜாதியுணர்வு ரத்தத்தில் இருந்தால் மெடிக்கல் சீட் வாங்கித்தரப்படும். எலெக்ஷன் நேரத்தில் சூழ்நிலைக்கு தகுந்தபடி பூ வாங்கினாலோ காய்கறி வாங்கினாலோ கன்ஸஷன் தரப்படும். வியாபாரத்தை கெடுக்க வருபவர்களுக்கு கடை வாசலிலேயே எளிய முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும்.

தேனாம்பேட்டை மளிகைக்கடை

இங்கு உப்பு, புளி, மிளகாய் போன்றவை டெல்லி ஆபிஸின் ஆர்டரின் பேரில் வழங்கப்படும். எலெக்ஷன் நேரம் தவிர எப்போதும் கடை மூடப்பட்டே இருக்கும். யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து தேவையானதை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு. கடையின் உண்மையான நிர்வாகி பற்றிய குழப்பம் நீடிப்பதால் தற்சமயம் கடையின் சாவி, பூக்கடைக்காரரின் கைவசம். கடையிலிருந்து வரும் கூச்சல், கதறல், கொடும்பாவி எரிப்பு சண்டைகளையெல்லாம் கஸ்டமர்கள் கண்டுக்காமல் இருப்பது நலம்.

மயிலாப்பூர் லேத் பட்டறை

இங்கு சகலவிதமான கத்தி, கடப்பாறை, கழி போன்றவைகளும் காக்கி டவுசர்களும் வாடகைக்கு கிடைக்கும். வார இறுதிகளில் கடையின் வாசலில் இலவச தியானம், யோகா வகுப்புகளும் உண்டு. அதே நேரத்தில் கடையின் உள்ளே மோடி மஸ்தான் வித்தைகளும் கற்றுத் தரப்படும். ஷைனிங் காட்டுபவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

கலிங்கப்பட்டி போட் சர்வீஸ்

இங்கே சகாய விலைக்கு படகுகளும் ஸ்பீக்கர்களும் வாடகைக்கு கிடைக்கும். ஏற்கனவே பூ கட்டுவதில் அனுபவமுள்ளவர்களால் படகுகள் கட்டப்படுவதால் வேலையில் நேர்த்தி ஜாஸ்தி. படகுகள் தண்ணீரில் விடப்பட்டதும் இலங்கையை நோக்கி செல்வதுபோல் வடிவமைக்கப்படுவது தனிச்சிறப்பு. திக்கு தெரியாமல் படகு ஓட்டவேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு டிரெயினிங் கொடுக்க நிறைய அனுபவஸ்தர்களும் உண்டு.

ஜக்குபாய் அடகுக்கடை

இங்கே சகல விதமான கோபங்களும் அரசியல் ஆசைகளும் அடகு வைக்கப்பட்டு ஆண்டவனுக்கு அனுப்பப்படும். அடகுப்பொருள் மூழ்கிப் போனாலும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

Monday, August 09, 2004

பத்திரிக்கை சுதந்திரமும் பாட்டாளி மக்கள் கட்சியும்

சென்ற வருடம் ஜனநாயகத்தின் தூண்களின் ஒன்றாகிய பத்திரிகையின் குரல்வளை நெரிக்கப்பட்டதற்க்காக நாடே அமளிப்பட்டது. காபி கிளப்பிலும் அனல் பறந்தது. தமிழ்நாட்டின் அனைத்து எதிர்க்கட்சிகளும், பத்திரிகைகளும், கொதித்து எழுந்தன. நேற்று தமிழ்நாட்டில் ஒரு தினசரி தாக்கப்பட்டிருக்கிறது. அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்தமுறையும் ஆளும் கட்சியினாரால்தான் தாக்கப் பட்டிருக்கிறது, ஆனால் மத்தியில் உள்ளஆட்சியினரால். மாநிலத்து எதிர்க்கட்சியினரால். ஆனால் அதற்காக கண்டனம் தெரிவிப்பதற்கோ, அனுதாபம் தெரிவிப்பதற்கோதான் ஆளில்லாமல் போய் விட்டது. என்னஇருந்தாலும் தினமலர், கேவலம், ஒருசாரார் நடத்தப்படும் தமிழ் நாளிதழ்தானே?

சென்ற முறை பத்திரிகை சுதந்திரம் பறி போனபோது, ஜனநாயகக் காவலன், பத்திரிகைகளின் காவலன், தமிழ்நாட்டின் தானைத்தலைவன் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தினார். மனிதச் சங்கிலிகள் என்ன, ஊர்வலங்கள் என்ன, டெல்லிக்குப்படையெடுப்பென்ன என்று பத்திரிகைச் சுதந்திரத்தைக் காக்க தனது தள்ளாத வயதிலும்போராட்டம் நடத்தியதைக் கண்டு நாடே புல்லரித்துக் கிடந்தது. ஆனால் இன்று ஒருமுணுமுணுப்பைக் கூடக் காணோம். ஒரு வேளை, கடலூர் பதிப்பகம் ஒன்றுமட்டும்தானே தாக்கப்பட்டுள்ளது, மற்ற கிளைகளையெல்லாம் கொளுத்தாமல் விட்டு விட்டார்களே என்ற வருத்தத்தில் உள்ளாரோ என்னவோ இந்த பத்திரிகை உலகக்காவலர்? அல்லது அவரது கண்டனச் செய்திகள் என் கண்ணுக்குத்தான் படவில்லையோஎன்னவோ?

நாளைக்கு, உடன் பிறப்பே, நயவஞ்சகர்கள் போடும் நாடகத்தினைநம்பி, மீண்டும் அந்தப் பாழாய்ப்போன பத்திரிகையைப் படிக்கத் துணிந்திடாதே, அருமை நண்பர் ராமதாஸ் தமிழர் மானம் காக்கப் புறப்பட்டிருக்கிறார், அதற்குத் தோள் கொடு,எனக்குத்தான் வயதாகிவிட்டது அந்த நாட்களில் குமுதத்தையும், துக்ளக்கையும், நவசக்தியையும் நாங்கள் அடித்து நொறுக்கிய அளவிற்கு, ராமதாஸின் தொண்டர்கள் செயல்படவில்லையெனினும், எதோ தமிழர்கள் மானம் காக்க தன்னால் ஆன தொண்டினைசெய்துள்ளார்கள், அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையெனினும், கனவில் கூட கண்டித்துவிடாதே என்று தம்பிகளுக்கு கடிதம் எழுதினாலும் எழுதுவார். ஏற்கனவே தினமலரைப்படித்திடாதே என்றும் வாங்கிக் கொளுத்து என்றும் சனநாயக முறைப்படி கட்டளையிட்டகலைஞர்தான் அவர். அவர் மொளனத்திலும் எனக்கு ஒன்றும் ஆச்சரியமில்லை.

முதலைமைச்சரைப் பொருத்தவரை ஒன்றும் பெரிதாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. 'நமது எம்ஜியார்' தவிர வேறு எந்தப் பத்திரிகை தாக்கப் பட்டாலும் அவருக்குமகிழ்ச்சியே. ஆக அவரைப் பொருத்தவரை இரட்டை நிலை எல்லாம் கிடையாது. என்றுஒரே நிலையே. மேலும் ராமதாஸ் அடுத்த தேர்தலின் பொழுது மீண்டும் உடன் பிறவாசகோதரராக மாற மாட்டார் என்று என்ன நிச்சயம்? அதனால் அம்மாவும் அடக்கி வாசிக்கிறார். புரிகிறது.

'ஹிந்து' பிரச்சினையின் போது எமர்ஜென்ஸி என்று ஒன்றே நடவாதது போல் இந்தகாங்கிரஸ்காரர்கள் குதித்த குதி இருக்கிறதே. அடடா, சும்மா சொல்லக்கூடாது. அந்தஇளங்கோவனும், வாசனும், சோ பாவும் இன்றைக்கு எங்கு காணாமல் போய் விட்டார்களோ தெரியவில்லை. அடித்தது அம்மையார் அல்லவே, எங்கள் கூட்டணிக் கட்சிதானே, இதற்கெல்லாம் போயா கண்டனம் தெரிவிப்பார்கள். அட போங்கப்ப்பாஎங்களுக்கு, கிழிஞ்ச வேட்டிகளை தைக்கவே நேரத்தைக் காணோம் என்றுகூறி, அன்னையைத் தரிசிக்க டெல்லிக்குப் போய் விட்டார்கள் போலும்.

ஆக, மிஞ்சி உள்ள வை கோ,கணேசன், நல்லக்கண்ணு, மற்றும் பல லெட்டர் பேடுகட்சியினர், ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவித்து விட்டுத் தன் ஜனநாயகக் கடமையைமுடித்துக் கொண்டு விட்டர்கள், அவர்களும் மருந்துக்குக்கூட மருத்துவரைக் கண்டிக்கவில்லை. ராமதாஸின் அட்டூழியங்களையும், ரவுடித்தனத்தையும், அரஜாகங்களையும்,கண்டிப்பதற்கு இந்தியாவில் நாதியே இல்லாமல் போய் விட்டது.

ஒரு வேளை இதெல்லாம் பெரிது படுத்தக்கூடிய ஒரு விஷயமே இல்லையோ? தமிழகசட்டசபையின் சர்வாதிகாரத் தீர்ப்பின் மூலம் பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப் பட்டபொழுதுமட்டும்தான், எல்லோரும் சேர்ந்து எதிர்ப்பார்களோ என்னவோ? அல்லது ஜெயலலிதாசெய்தால் மட்டும்தான், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கப் புறப்பட வேண்டுமோஎன்னவோ? மற்றபடி பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்பட்டாலோ, நிருபர்கள்கொல்லப்பட்டாலோ, கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டுமோ என்னவோ? ஒருவேளை நான்தான் விவரம் தெரியாமல் எழுதுகிறேனோ என்று பலத்த சந்தேகத்துக்கிடையில் இதை எழுதுகிறேன். பத்திரிகைக் குரல் வளையை நெரிக்கும் கையைப்பொறுத்துதான் எதிர்க்க வேண்டுமா அல்லது கண்டு கொள்ளாமல் விட வேண்டுமாஎன்பது முடிவு செய்யப்படும் போலிருக்கிறது.

ஜெயலலிதா சட்டசபையில் உள்ள தன் பலத்தை துர்ப்பிரயோகம் செய்து ஹிந்துப் பத்திரிகை மீது நடவடிக்கை எடுத்தற்கு சந்றும் குறைந்ததல்ல இந்த அராஜகம். மத்தியில்ஆளுவதாலும், இவர் கட்சியின் தயவு மத்திய அரசுக்கு தேவை என்பதாலும், ராமதாஸின்இந்த ரவுடித்தனமும், அதிகாரத்திலுள்ள மமதையின் வெளிப்பாடே. என்னைப் பொருத்தவரை, ஹிந்து பிரச்சினையில் ஜெயின் எதோச்சதிகாரம் கண்டிக்கப் பட்டது போன்றே,ராமதாஸின் இந்த அராஜகமும் கண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். அன்று மாநில அரசு,இன்று மறைமுகமாக மத்திய அரசு பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது.

ஐயாவை எதிர்ப்பவர்கள் யாராயினும் அடி, உதை, வெட்டுக் குத்துதான். அப்படி அடிஉதை விழுமளவிற்கு என்ன எழுதி விட்டது தினமலர்? இவரது அன்பின் மணியான வாரிசு, மத்திய அரசில் கேபினட் மந்திரி. அதுவும் சுகாதரத்துறை மந்திரி. அதுவும் முறையாகமருத்துவருக்குப் படித்த மந்திரி (இவர் நிஜமாகவே எதுவும் மருத்துவக் கல்லூரியில்படித்தாரா அல்லது சோனியா, ராகுல், தயாநிதி வரிசையில் எதுவும் டுபாக்கூர் டிகிரியாஎன்று பலத்த சந்தேகம் எனக்கு உள்ளது). அப்படிப் பட்ட மாண்புமிகு மருத்துவம்படித்த மந்திரி, தொழுநோய் ஒரு தொற்று நோய் என்று மேல்சபையில் அறிவித்து விட்டார், அதுவும் ஒரு முறை அல்ல இரு முறை. மருத்துவம் படிக்காத ஜோஷியும், சுஷ்மாவும் திருத்த வேண்டி வந்தது. இந்த உண்மையை தினமலர் செய்தியாக வெளியிட்டு அன்பு மணியின் தகுதியையை வெட்ட வெளிச்சமாக்கியதற்குத்தான் இந்தத் தாக்குதல்.என்னதான் செயலாலர்கள் எழுதிக் கொடுத்ததை இவர் படித்ததாக வைத்துக்கொண்டாலும், முறையாக மருத்துவம் படித்த ஒரு மந்திரி திருத்திப் படித்திருக்கவேண்டுமல்லவா? அட அப்படியே ஒரு டென்ஷனில் படித்திருந்தாலும், இரண்டாம் முறைதிருத்தியிருக்க வேண்டுமா அல்லவா? அதே தவறை மீண்டும், மீண்டும் செய்ததிலிருந்தும் இவரது அடிப்படைக் கல்வி மற்றும் அறிவு குறித்தே கேள்வி எழுகின்றது.

இதேதவறை முந்தய சுகாதார மந்திரியாகிய சத்ருகன் செய்திருந்தாலாவது மன்னித்து விடலாம். அவர் ஒரு நடிகர் மட்டும்தான், டாக்க்ட்ட்டர் சத்ருகன் சின்கா அல்ல. அன்புமணிபுரிந்த தவறை தினமலர் வெளியிடுகிறது. இந்தச் செய்தியில் உண்மையில்லாதிருந்திருக்கும்பட்சத்தில், ராமதாஸ் முறையாக வழக்குத் தொடர்ந்திருக்கலாம். அல்லது அன்புமணி தன்தவறை பெருந்தன்மையாக, அது ஒரு தகவல் பிழை, பின் நான் சரி செய்து விட்டேன்என்று பதிலளித்திருக்கலாம்.

பா மா க வின் அரஜாகம் தொடர்ந்து அத்து மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. மரம்வெட்டினார்கள், மனிதனை வெட்டினார்கள், படப்பெட்டியைக் கொளுத்தினார்கள், பத்திரிகைகளைக் கொளுத்தினார்கள், எல்லாவற்றையும் சுயநலம் பிடித்த பிற அரசியல்வாதிகளும், யாருக்கு வந்தால் எனக்கென்ன என்று மக்களும், கண்டிக்காமலும்,கண்டுகொள்ளாமலும் செல்கிறார்கள். இந்த விஷ வித்தை முளையிலேயே கிள்ளி எறியாததன் விளைவு எதில் முடியப்போகிறதோ? வன்னியர்களின் பாதையில் நாளைதேவர்களும், நாடார்களும், கவுண்டர்களும் சென்றால் தமிழ்நாடு தாங்குமா?

எனக்கும் கூட தினமலரின் ஒரு சில செய்தி வெளியிடுமும் முறைகளில் ஒப்புதல் கிடையாது. இன்று ஒரு அநாதைப் பத்திரிகை போல் பரிதாபமாக நிற்கிறது. இன்று தமிழகப்பத்திரிகைகளிலேயே அதிகம் தாக்கப் பட்ட, பாதிக்கப் பட்ட நாளிதழ் தினமலராகத்தான்இருக்கும் என நினைக்கிறேன். ஒரு முறை சக நாளிதழ் ஒன்றின் ஊழியர்களேகுண்டர்களாக மாறித் தாக்கினார்கள். ஒரு முறை குண்டு வைக்கப் பட்டது.இதையெல்லாம் யாராவது கண்டிக்கலாம் என்று பார்த்தால், பாவம் அது ஒரு ஆங்கிலநாளிதழாக இல்லாமல் போய்விட்டது, மேலும் இந்த அரஜாகத்தைப் புரிந்தவர் ஜெயாகவேறு இல்லாமல் போய் விட்டார். அப்படி இருக்கும் பொழுது, யாருக்குத்தான் இந்த அநியாயத்தைக் கண்டிக்க மனசு வரும்? எப்படி இந்த அநியாயத்தைக் கண்டிக்கமுடியும்? அனைவரும் சேர்ந்து கண்டிப்பதற்கும் ஒரு தராதரம் வேண்டாமா? பாவம்,நமது அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும், ஜனநாயகக் காவலர்களும் வேறுஎன்னதான் செய்வார்கள்? ஹிந்து பத்திரிகையில் இது குறித்தான ஒரு சிறு செய்தியைக்கூட நான் இதுவரைக் கண்டிலேன். வாழ்க பத்திரிகை தர்மம். வாழ்க பத்திரிகை சுதந்திரம். இப்பொழுது ஓய்வுவெடுத்துக் கொண்டிருக்கும் இவர்கள் யாவரும் அடுத்த முறை ஜெபத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் பொழுது பொங்கி எழுவார்கள் என்பதில் எனக்குஎந்தவொரு ஐயமுமில்லை. என்ன இருந்தாலும் ஜனநாயகத்தின் ஒரு தூண் அல்லவா பத்திரிகை?

மற்றவர்கள் அனைவரும் ஓய்வெடுத்துவிட்டதால், இந்த முறை, எனக்கு என்னவோஇதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆகவே அரசியல்வாதிகளின், குறிப்பாக ராமதாஸின் வன்முறைப் போக்குகளின் மீதான எனது கடுமையான கண்டனத்தைஇங்கு பதிவு செய்திருக்கிறேன், அவ்வளவுதான். வேற என்ன செய்ய முடியும்?

நன்றி - நண்பர் திரு. ச.திருமலை