Wednesday, January 28, 2004

காந்தி தாத்தா

சின்ன வயசிலிருந்தே மகாத்மா காந்தின்னா ரொம்ப பிரியம். In India, எனக்கு தெரிஞ்சு அரசியல், ஆன்மீகம், எழுத்துன்னு பல தளங்களில் இயங்கிய பெருந்தலைவர் காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. இந்திய மண்ணுக்கே உரிய அகிம்சை என்னும் ஆயுத்தை மீட்டெடுத்து தந்த மகான் அவர். காந்தி பத்தி பாட புத்தகங்களில் நிறைய படிச்சிருந்தாலும் பசக்னு மனசுல ஒட்டிக்கிட்டது கூட நலாங்கிளாஸ் படிக்கிறச்ச பார்த்த 'காந்தி' படம்தான். இன்னிக்கும் எனக்கு சுதந்ததிர தினம், குடியரசு தினத்தை விட முக்கியமான நாளா தெரியறது காந்தி ஜெயந்திதான்.

மகாத்மாவை பற்றிய வலைத்தளங்கள் ஏகப்பட்டது இருந்தாலும், மகாத்மாவின் கொள்கைகளையும் வாழ்க்கை முறையையும் அலசும் விவாதக் குழுக்கள் இணையத்தில் இருப்பது மாதிரி எனக்கு தெரியவில்லை. ரொம்ப நாள் தேடி.... களைத்த பின்னர் எனக்கு தோன்றியதுதான் - 'ஏன் நாமளே ஒரு விவாதக் குழுவை ஆரம்பிக்க கூடாது' http://groups.yahoo.com/group/Mahatma_Gandhiji

ஆரம்பிச்சு இரண்டு வருஷமானாலும் இன்னும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை. இதில் பாதிப்பேர் என்னுடைய அன்பான (தொல்லை?!) அழைப்பை ஏற்று வந்தவர்கள். திடீரென்று இரண்டு வடஇந்தியர்கள் உறுப்பினரானதும் ஏற்பட்ட சந்தோஷம், ஓரினச் சேர்க்கை பற்றிய வலைத்தளத்தை சிபாரிசு செய்து அவர்கள் மெயில் அனுப்பியதும் மாயமானது!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். காந்தி என்றதும் மரியாதை காட்டுபவர்கள் கூட சில சமயம் அலட்சியப்படுத்துவதுதான் புரியவில்லை. உதாரணத்துக்கு 'காந்தி கணக்கு' என்கிற சொல் பதம். சமீபத்தில் எம்டிவி போட்டுக் காட்டிய 'காந்தி டான்ஸ்'. காந்தி பற்றிய கிண்டல்கள் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கின்றன. The people who like Gandhi do not like Gandhiji's principles. காந்தியை எல்லோருக்கும் பிடிச்சிருந்தாலும் யாரும் காந்திக்கும் காந்தீயத்துக்கும் நெருக்கமாக இருக்க விரும்பவில்லை என்பது உண்மைதானோ?

Thursday, January 22, 2004

வலைப்பூங்காவில் ஒரு உலா
பத்ரியின் பக்கம் - பத்திரிக்கை உலகத்தில் நிஜமாவே இது ஒரு புது முயற்சிதான். மனிதருக்கு சினிமாவே புடிக்காது போலிருக்கு. துரிதம், துல்லியம் இரண்டும்தான் இந்த மனிதரின் வெற்றி ரகசியம். இணையத் தமிழ் படிக்க வர்றவங்களை மொதல்ல பத்ரியின் பக்கத்தைத்தான் பார்க்கச் சொல்லணும். இன்னும் விதவிதமான கலரை யூஸ் பண்ணினா நல்லாயிருக்கும்!

பாலா - பாஸ்டன் பாலாஜிங்கிற பேர்ல இணையத்தில் கதைகளும் நாவல்களும் எழுதுற இவரது வலைத்தளம்தான் சுருக்கமா எழுதறது எப்படின்னு கத்துக் கொடுக்குது

உருமி மேளம் பாலாஜி - ஏகப்பட்ட பாரிக்கள் இருக்கும்போது இப்படி குழப்பறாரேன்னு நாம நினைக்கிறதையே இவரும் எழுதி வெச்சிருக்காரு. அரசியல், ஆன்மீகம், சினிமா பத்தி எழுதவே கூடாதுன்னு முடிவே பண்ணிட்டாரோ?

உயிர்ப்பு சந்திரலேகா - பொங்கல் கொண்டாடுவதைப் பத்தி அழகாக தெளிவாக எழுதியிருக்கிறது இவர் மட்டும்தான்னு நினைக்கிறேன். அந்த செம்பருத்தி பூ அழகாத்தான் இருக்கு. ஆனா, சின்னதா இருந்தா இன்னும் அழகா இருக்கும்.

ஓடை - கவிதைக்கும் எனக்கும் ஏனோ அலர்ஜி. தமிழோவியத்தின் தங்கச்சி பக்கம்னு இதைச் சொல்லலாமா?

இட்லி வடை - எழுதுறது யாருன்னு மண்டையை பிச்சுக்காதவங்களே கிடையாது. எப்போதாவது வர்ற போஸ்டை பார்த்தா அன்னார் வேற ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சிட்டார்னுதான் தெரியுது!

கண்ணனின் என் மடல் - நிறைய எழுதறாரு. ஆனா font பிரச்சினையால எனக்குதான் சரியா படிக்க கிடைக்கமாட்டேங்குது. படிச்சதில் 'ஒரு யோகியின் சுயசரிதை' பத்தி (அதாங்க நம்ம பாபாவோட பாபா பத்தி சொல்லும் புத்தகம்) எழுதியிருந்தது பிடிச்சது!

பரணியின் பூ மனசு - முன்னாடியே சொன்ன மாதி¡ கவிதைக்கும் எனக்கும் ரொம்ப து¡ரம். அன்னார் எப்போது தொடர் எழுதுவார்னு எதிர்பார்த்து காத்திருக்கேன்.

காசி ஆறுமுகம் - நான் வலைப்பக்கம் பத்தி நான் தெரிஞ்சுகிட்டதே இவரோட பக்கத்துக்கு போன பின்னாடிதான். Wiresless Communication பத்தி இவர் எழுதியிருந்ததை பிரிண்ட் எடுத்து என் பிரண்ட் கிட்ட கொடுத்த போது அசந்து போய்ட்டான். இப்பெல்லாம் என் friend என்னுடைய பக்கத்தை பார்க்கறானோ இல்லையோ காசியை மிஸ் பண்றதேயில்லை!

குமாரின் நெஞ்சின் அலைகள் - திடீரென ஆர்ப்பரிக்கும் அலை போல, அப்பப்ப வந்து அலையடிக்கிற மாதிரி ஏதாவது செஞ்சிட்டு போறாரு. லேட்டஸ்டா விருமாண்டி விமர்சனம். மீனாட்சி சங்கருக்கு சரியான போட்டி சினிமா விமர்சனத்தில்!

குருவிகள் - அற்புதமான அறிவியல் விந்ததைகளை ரொம்பவும் சிரத்தையுடன் செதுக்கும் இந்த அறிவு குருவி யார்ங்கிறது பத்தி எந்தக் குறிப்பும் இல்லையே!

மதி கந்தசாமி மேடம் ஆங்கில பட விமர்சனமெல்லாமே அட்டகாசமா இருக்குது. தமிழ் படங்களை பத்தி எழுத மாட்டாங்களா அல்லது எழுதினது என் கண்ணில் மாட்டலையா?

மதி கந்தசாமியின் குறிப்புகள் சில சமயம் வேம்படி கூட வேம்படிதடியா மாறி விடுகிறது. அதாங்க, லேட்டஸ்டா ரஜினி Vs கமல் பத்தி எழுதியிருந்ததை சொல்றேன்!

மீனாக்ஸ் கலர்புல்லா பக்கத்தை கலக்கி எடுத்து பெங்களுரில் பொங்கல் அனுபவத்தை புட்டு புட்டு வெச்சிருந்தது வெரிகுட். விருமாண்டி பட விமர்சனம்... வழக்கம் போலவே!

முத்து ஒரு தடவை Ip address பத்தி எழுதியிருந்தார் பாருங்க... சுவராசியமா இருந்துச்சு. பட், நிறைய விரிவா எழுதியிருக்கலாம்!

நவன் தமிழ் ஆங்கிலம்னு தனித்தனியே பதிவு செஞ்சு தமிங்கிலிஸில் எழுதுற என்னை மாதிரி ஆளுங்களை கவனிக்க வெச்சிருக்கார். எந்த விசயத்தையும் எழுதறதுக்கு முன்னாடி எந்த மொழியில் எழுதுனா நல்லா இருக்கும்னு யோசிச்சு அதுக்கு தகுந்த மாதிரி எழுதறது நல்லதுன்னு எனக்கு தோணுது!

பரிமேலழகர் ரொம்ப பிரபலமான ஆளு. என்கூட இவரும் ஒரு மாசம் படிச்சது போன மாசம்தான் தெரியவந்தது. இவர் போட்டோ ஏதாவது கிடைக்காதான்னு தேடி...தேடிட்டே இருக்கேன்! கண்ணுல மாட்ட மாட்டேங்குது!

பவித்ரா சீனிவாசன் சிவகாமியின் சபதத்தை¨ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செஞ்சிருக்காரு. ரொம்ப எளிமையா என்னை மாதிரி ஆளுங்களும் புரிஞ்சுக்கற மாதிரி இருக்குது. அடுத்து என்ன பண்ணப் போறீங்க மேடம்?


பெயரிலி கலகக்கார வலைப்பூன்னு சொன்னா அது இதுதான். இங்கே நிறைய பேர் மண்டை உருளுது. யார் எழுதுறான்னு தெரியாம... பயங்கர வேடிக்கை!

பிரகாIcarus - இவர் பதிவு செஞ்சி வெச்சிருக்கும் தமிழ் பத்திரிக்கைகளின் மீதான பாராவின் விமர்சனத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. துணையெழுத்து விகடனின் இமேஜை து¡க்கிப்பிடித்திருக்கிறது. தலையங்கத்துக்காகவே கல்கியை வாங்கலாம். அப்பப்ப யார்கிட்டயேவாது ஒரு கேள்வியைக்கேட்டு பதில் வாங்கி போடுற ஸ்டைல்...ரொம்பவும் புடிச்சிருக்கு

புதுமை விரும்பும் பித்தன் சபா - சாப விமோசனம் பெயர்க்காரணம் மிரள வைக்குது. என்னதான் சொல்ல வர்றீங்க சார்?

நினைவோடை ராதா - தமிழ்நாட்டில் மட்டும்தான் பட்டப்பெயர் வைக்கிறாங்களான்னு கேட்டிருக்காரு. காலேஜ், பள்ளிக்கூட பசங்களின் கைங்கர்யங்களை சம்பந்தப்பட்டவங்களே ரசிக்கிறாங்க... பட்டப்பெயர் வைக்கிறதுக்கு welcome சொல்லலாமா?

பாராவின் மனத்துக்கண் - இவரை பத்தி சொல்லவே வேணாம். பெரிய பெரிய பத்திரிக்கைகளின் வேலை செஞ்சவரு. இவரோட டாலர் தேசம், சுஜாதா, மதன் வரிசையில் இவரையும் கொண்டு வந்துடுச்சு!


ரவியின் கதிர்கள் - வர்ற புதுவருடத்தில் 107 வலைப்பூக்கள் வரும். அதில் 50 காணாமல் போய்டும்னு சொல்லியிருக்கிற தீ¡க்கதரிசி. இவரோட வார்த்தையை பொய்யாக்கி புண்ணியம் கட்டிக் கொள்ளுங்க!


ரவி சீனிவாஸ் - சிறுபத்திரிக்கைகள் இன்னமும் இலக்கியம்., சமுகம்னு சிறு வட்டத்துக்குள்ளேதான் இருக்குங்குறாரு. வாஸ்தவம்தான். தீம்தரிகிட மாதிரி சில வித்தியாசமான பத்திரிக்கைகள் இருந்தாலும் பொதுவா இவர் சொல்ற வட்டத்துக்குள்ளேதானே எல்லாமும் இருக்கு. இதுல இன்னொரு சங்கதி பல பத்திரிக்கைகள் காலச்சுவடு மாதிரியே இருப்பதுதான்.


நினைவுத்தடங்கள் சபாநாயகம் - இருப்பதிலேயே Sr. most writer இவர்தான்னு நினைக்கிறேன். சரியா மதி மேடம்? ஜம்பது வருடத்துக்கு முந்தைய சங்கதிகளை தொடர்ந்து சுவையா சொல்றார்.


சங்கரின் சுவடு - ஆளு சென்னைவாசிங்கிறதனால நிறைய லோக்கல் செய்திகளை எதிர்பார்க்கலாம். புத்தக கண்காட்சி ஆரம்பிச்ச உடனே சூடா மேட்டர் கொடுத்தாரு. அதுக்கப்புறம் ஆளையே காணோம். இப்ப வாத்தியார் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாரு!


செல்வராஜின் கிறுக்கல்கள் - ஒரு மாசமா சத்தத்தையே காணோம். ஊ¡ருக்கு போய்ட்டாரோ?


சித்து - பக்கம் ரொம்பவும் அகலமா போய் தேடிக் கண்டு பிடிச்சு படிக்கிற மாதிரி ஆக்கிட்டிங்களே! அடிக்கடி எழுதமாட்டீங்களா?


சுபாவின் மலேசியா பார்வை - கண்ணைப் பறிக்கும் கலரில் கலக்குறீங்க மேடம்!


சுந்தரவடிவேல் - 'மாட்டுப் பொங்கல்னா என்ன டாடி?' உங்க சன் கேட்டா, இவரோட பக்கத்தை பிரவுஸ் பண்ணச் சொல்லுங்க... அருமையா எழுதியிருக்காரு!


சுரதா - சுராதா இல்லாட்டி நிறைய வலைப்பூக்களே கிடையாது. புதுசா இணையத்தில் எழுத வர்றவங்களுக்கு நல்லதொரு ஏணி.

தங்கமணியின் முரசு - பிராந்திய கட்சிகள் மீது அப்படி என்னவொரு பாசமோ அண்ணாச்சிக்கு! ரஜினி மேட்டரில் பத்திரிக்கை ஏன் இப்படி நடந்துக்குறாங்கிறது எல்லலோருக்கும் தெரிஞ்ச சங்கதிதானே!


உமரின் தென்றல் - ஏனோ இந்த பக்கத்தை மட்டும் என்னால படிக்க முடியலே. ஏதோ font problem. படிச்சிட்டு சொல்றேன். அதே மாதிரி அமலா சிங்கின் பக்கத்தையும் என்னால படிக்க முடியலை.

வாமதேவன் - அருமையான புனைப்பெயர். புனைப்பெயர் வெச்சுக்க வேண்டிய அவசியம் பத்தி இவர் எழுதியிருக்கிறதில் எனக்கு உடன்பாடில்லை. இவரோடு பக்கத்தில் அட்டகசமான ஆபூர்வ படங்கள். எப்படித்தான் இவருக்கு கிடைக்கிறதோ?

வாசனின் கொள்ளிடம் - எங்க ஊரில் கொள்ளிடம்னு சொன்னா வறண்ட பாலைவனம்னு அர்த்தம். ஆனா இவரோடு பக்கத்தில் மேட்டருக்கு பஞ்சமேயில்லை!

வெங்கட் - தமிழ், லீனக்ஸ், வலைப்பக்கம்னு சில சங்கதிகளை பத்தி பேசும்போது கட்டாயம் .இவரைப்பத்தியும் பேசியே ஆகணும். நடமாடும் இணைய களஞ்சியம்னு சொல்லலாம்.

வினோபாவின் பரிசல் - அந்த முறுக்கு வியாபாரியை மறக்க முடியாது. சில வாரங்களில் வந்துடறேன்னு சொன்னவரை ஆளையே காணோமே!. இவருக்கு மட்டும் சில வாரங்கள் என்பது சில மாதங்களோ!

அருணாவின் அலைகள்- ரெண்டு மாசம் முந்தி வரைக்கும் ரொம்பவும் ஆக்டிவ்வா இருந்தவரை இப்போ காணோமே. அலைகளும் ஓயுமோ?

சில பக்கங்கள் விடுபட்டிருக்கலாம். யாராவது சொன்னால் ஒரு விசிட் அடித்து தெரிந்து கொள்கிறேன்

- ஜெ. ரஜினி ராம்கி


Friday, January 16, 2004

கண்டேன் ரஜினியை!

இரண்டு நாட்களாக தேவதைககள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.

வள்ளி படம் பார்த்துவிட்டு நான் எழுதிய கருத்தை பாராட்டி மனிதன் பட போட்டோவில் கையெழுத்துடன் வந்த பதில் கடிதம்தான் பத்தாவது பரீட்சையில் வகுப்பில் முதலாவதாக வந்த சந்தோஷத்தை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்ட நேரங்கள்.

95ன் இறுதியில் தியானம் பற்றி நான் கேட்டிருந்த கேள்விக்கு தூர்தர்ஷனில் ரஜினி சொன்ன பதிலால் அன்றிரவு என் தூக்கம் போனது. சந்ததோஷத்தில் நான் பேச முடியாமல் திணறியதை இன்றும் என் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள். அடுத்த நாள் காலேஜில் புரஃபோசர் என்னை தட்டிக் கொடுத்த போது காலேஜூக்கே ஹிரோ ஆன மாதிரி நினைப்பு. அன்னிக்க ஆரம்பிச்ச கிறுக்கல்கள்தான் இன்னிக்கும் தொடருது....

இதே போகி தினம், 2001. படையப்பாவுக்காக விருதை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ரஜினியை கலைஞருடன் சேர்த்து 4 அடி தூரத்தில் முதல் முதலாக நான் பார்த்த பிரமிப்பை ஊர் வந்து சேரும் வரை மறக்க முடியவில்லை. அதற்கப்புறம் எவ்வளவோ விழாக்கள், எவ்வளவோ சந்தர்ப்பங்கள், தலைவரின் தரிசனம் தாராளமாய் கிடைத்தது.

அதே போகி தினம், 2004. இம்முறை காந்தப்புயலின் உரசலில் சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன். ரொம்பவும் நெருக்கமாக பார்த்த பிரமிப்பில் நாக்கு பின்னிக் கொள்ள பேச்சு வரவில்லை. வெளியில் வரும்போது முதல் ஆளாய் கைகொடுத்துவிட்டு Happy pongal sir என்ற சுருதி குறைந்த குரலுக்கு 'ஹேப்பி பொங்கல்...எல்லார்க்கும்...எல்லார்க்கும்' தனக்கே உரிய ஸ்டைலில் மின்னல் வேகத்தில் ஒரு பதில். ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்திருந்த விசிடிங் கார்டை (இந்த நேரம் பார்த்துதான் நம்ம கையில் ஒண்ணுமே இருக்காது) கொடுத்தவுடன் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார். அலைமோதிய கூட்டமும் ஆளுக்கொரு பொருளை கொடுத்தது. கூட்ட நெரிசல் தங்கமுடியாமல் என்னை உரசியபோது மனசில் சந்தோஷ மத்தாப்புகள். டக்கென்று அவரின் இடது கையை பற்றிக் கொண்டேன். கூட வந்த செக்யூரிட்டி பிரிக்கும் வரை கையை அவரும் உதறவில்லை. நானும் விடவில்லை. மின்னல் போல எல்லாமே சில வினாடிகளில்...

அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்னைத் தவிர. எப்போதுமில்லாமல் கூட்ட நெரிசலை தவிர்க்க பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜந்து மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. இரண்டு மணி நேரமும் ரஜினியை நின்று கொண்டே ரசிப்பதற்காக எனது சீட்டையே தியாகம் செய்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு மனைவி மற்றும் மைத்துனர் சகிதம் உள்ளே நுழைந்தவர் பார்வையாளர்களுக்கு பொதுவாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு இல. கணேசனுக்கு கை கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார். தமிழக அரசியலையே புரட்டி போட்ட கடந்த வருட சம்பவங்களோடு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் குறை சொன்ன சோவின் பேச்சுக்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அதே சமயத்தில் சோ
பாராட்டியபோதெல்லாம் மறக்காமல் ஆடியன்ஸ§ட்ன் சேர்ந்து கைதட்டினார். அருகிலிருந்த யாரிடமும் பேசாமல் நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்தவர்,ரொம்பும் ரிலாக்ஸாகத்தான் இருந்தார். மேக்கப்பில்லாத முகத்தில் மெல்லிய திருநீறு. டை அடித்த மீசையுடன் அதே பழுப்பு கலர் குர்தாவில் பூசினாற் போல தெரிந்தார்.

பாபாவில் நல்ல அரசியில்வாதியாக வந்து கிளைமாக்ஸில் இறந்து போகிறமாதிரி நடித்தவரை இந்த கூட்டத்திலும் பார்க்க முடிந்தது. போன வாரம் தி.நகரில் நடந்த தமிழ் இலக்கியம் 2004 விழாவுக்கும் வந்திருந்து ரொம்ப நேரம் எனக்கு முன்வரிசையில்தான் அமர்ந்திருந்தார். பெயர் சரிவர தெரியாமல் பேசுவதற்கு தயக்கமாக இருந்ததால் ஒரு புன்னகையுடன் வந்துவிட்டேன்.

நிகழ்ச்சியின் நடுவே பார்வையாளர்கள் பக்கத்திலிருந்து நல்ல பூஸ்ட்டில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று எழுந்து விஜபி வரிசைக்கு போய் இல.கணேசனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ரஜினியை பார்த்து பெரிய கும்பிடு போட்டார். பின்னர் கையை உயர்த்தி ஆகாயத்தை காட்டி ஏதோ சொல்ல, ஆடியன்ஸ் பக்கத்திலிருந்து பயங்கர எதிர்ப்புக்குரல்கள். அதை சோ டைமிங்காய் சமாளித்ததுதான் டாப்!

'போனா போறார் வுட்றோங்கோ... பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்னு நினைக்கிறேன்'

Wednesday, January 14, 2004

சென்னை புத்தக கண்காட்சி - ஒரு ரவுண்ட் அப்

எதிர்பார்த்தது மாதிரியே போன வருஷத்தை விட இந்த வருஷம் கூட்டம் ஜாஸ்திதான். காலேஜ் பசங்களோட இல்லத்தரசிகளும் குழந்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு புத்தகம் வாங்கி தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

குமுதம், விகடன் ஸ்டால்களில் 'நோ ஸ்டாக்' போர்டு வைக்காததுதான் குறை. ஹிக்கின் பாதம்ஸையும் காலச்சுவடு பதிப்பகத்தையும் கடந்து போகவே எனக்கு ஒரு மணி நேரமாகியது. தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்ங்கிற மாதிரி எல்லா இடத்திலும் ஜெயமோகனின் காடு, ஒரு யோகியின் கதை, கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் (எல்லா தொகுதியும் ஒரே புக்கில் வர்ற மாதிரி பண்ணக்கூடாதா?) அப்புறம் சமையற்கலை குறிப்புகள், குழந்தைகளுக்கான புக்ஸ்....நிறைய.

இலக்கியவாதிகளில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும்தான் ஹாட் கேக். மத்தபடி எழுத்தாளர்களின் படைப்புகளை விட எழுத்தாளர்களை பற்றிய குறிப்புகளை கொண்ட புத்தகங்கள்தான் அதிகமாக இருந்தது.

கண்ணில் மாட்டிய ஒரே விஐபி நக்கீரன் கோபால். அதைப் பற்றிய எனது பதிவு.

நிறைய எழுதணும்னு நினைச்சேன். ஆனா டயம் தான் கிடைக்கலே. திரும்பவும் ஒரு ரவுண்டு போயிட்டு வந்தப்புறம் எழுதுறேன்.

எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

- ஜெ. ரஜினி ராம்கி

Tuesday, January 13, 2004

இரும்பு பட்டறையில் இலக்கிய ஈ
பொதுவா 'தமிழ் இலக்கியம் 2004' மாதிரி எனக்கு சம்பந்தமில்லாத இடங்களுக்கெல்லாம் போகிறதுக்கு அவ்வளவா துணிச்சல் கிடையாது. போனா நம்மளை மாதிரி ஆளுங்களுக்கு பாட்டு உண்டுகின்றதனாலதான்! பாபா, உப பாண்ட புகழ் ராமகிருட்டிணனை நேரில் பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை. போய் சேருவதற்குள் ரொம்ப லேட்டாயிடுச்சு! ஏமாற்றமாக இருந்தாலும் இதுவரை எழுத்தில் மட்டுமே நான் பார்த்த முகங்களை நேரில் பார்க்கமுடிந்தது.

சாவித்ரி கண்ணன்ங்கிறது துக்ளக்கில் இருந்த சுமதி கண்ணன் மாதிரி யாரோ லேடீஸ்னு நினைச்சிருந்தேன். ஆள் பார்க்க சீரியஸா இருந்தாலும் காமெடியா எழுதுபவர். இந்த வார துக்ளக்கில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் நடக்கும் குளறுபடிகளை சீரியஸாக தெளிவாக எழுதியிருக்கிறார்.

ஜெயந்தீசனின் விடுதலைப்புலிகள் பற்றிய புத்தகத்தை கவனமாக விமர்சித்து பாராட்டிய பா.ரவிக்குமாரின் பேச்சு என்னை மாதிரியான சாதாரண மக்களுக்கும் புரியறது மாதிரி இருந்துச்சு! நிகழ்ச்சியின் அமைப்பாளராக இருந்த காரணத்தால் நிறைய அமர்வுகளில் substitute வேலை பார்த்தார்.

எஸ். பொ பற்றி ஏற்கனவே காலச்சுவடில் ஒருமுறை படித்திருக்கிறேன். மைக்கை பிடித்ததும் அழகு இலங்கைத் தமிழில் பேசி அசத்திவிட்டார். நிகழ்ச்சியின் கடைசியாக நன்றியுரை பேச வந்த டைரக்டர் மகேந்திரன் கூட எஸ்.பொவின் தமிழை ரொம்பவும் சிலாகித்திருந்தார்.

சா. கந்தசாமியையும் அப்துல் ஜப்பாரையும் ஏற்கனவே மயிலாடுதுறையில் சந்தித்திருக்கிறேன். இன்குலாபையும் இந்திரா பார்த்தசாரதியையும் இப்போதுதான் பார்க்கிறேன். இன்குலாப் இரவு பத்துமணி வரை இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்துவிட்டுதான் கிளம்பினார்.

அதுக்கப்புறம் ஒரு யதார்த்த நாடகம். நடித்தவர்கள் இலங்கைத் தமிழில் ஏதோ கத்தினார்கள். எல்லோரும் புரிந்த மாதிரி முகத்தை வைத்திருந்தார்கள். so, நானும் அப்படியே!

கவிதை, நாடக திறனாய்வில் வெப்பம் தெறித்தது. சிற்பி பாலசுப்ரமணியத்தின் பேச்சு போரடிக்கவில்லை. மரபுக்கவிதை புதுக்கவிதையாகவும் ஹைக்கூ முதலான வடிவங்களாக மாறும்போது நாடகமும் சினிமாவாகவும் டிவி நாடகமாகவும் மாறுவதில் தப்பில்லைன்னுதான் எனக்கு தோணியது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக பேசினார் பஞ்சாங்கம். எழுத்தாளார்களெல்லாம் நாவல் எழுதிவிட்டு போன் பண்ணி லாபி பண்ணுகிறார்கள்னு பெரிய குண்டை து¡க்கி போட்டார். ஏகப்பட்ட கைதட்டல். பா. ரவிக்குமார் ரொம்பும் வளவளவென்று பேசாமல் கூட்டத்தின் பல்ஸை புரிந்து வைத்திருப்பதை திரும்பவும் நிருபித்தார். சினிமா பிரபலங்கள் அரங்கிற்கு வர ஆரம்பித்ததும் மேடையிலிருப்பவர்களும் சினிமாவை தொட்டு பேச மறக்கவில்லை!

இறுதியாக ஒன்பதரை மணிக்கு மேல் மைக்கை பிடித்தனர் திரையுலக பிரபலங்கள். வழக்கம் போல உணர்ச்சிகரமாக பேசிய பாரதிராஜா, மகேந்திரனை பற்றி பேசுவது என்பதும் அவரது படைப்பை பற்றி பேசுவதும் ஒன்றுதான் என்றார். வாஸ்தவம்தான். உணர்ச்சி வேகத்தில் நம்ம பத்ரியையும் வையவனையும் போட்டு குழப்பிக் கொண்டார். மரபுப்படி புத்தகத்தை வாங்கிக் கொண்டவர்கள் பேசக்கூடாதாம். பத்ரியின் எண்ணங்களை பேசி கேட்க முடியவில்லை. வையவன் பேசியதையெல்லாம் பத்ரி பேசியதாக பாரதிராஜா நிறைய தடைவை சொன்னார். இலக்கியவாதிகள் எங்களை ஒதுக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஆடு புலி ஆட்டத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியவர்தான் இந்த மகேந்திரன் என்றார். ஏன் அவ்வளவு மட்டமான படமாக நினைக்கிறாரோ? ரெண்டு லீடிங் ஸ்டார்களை வைத்து போரடிக்காமல் ஒரு மசாலா படத்தை இயக்குவது மட்டமான ரசனைன்னு சொல்லிகிட்டாதான் நம்மளை பத்தி உயர்வா நினைப்பாங்கங்கிறது காலம் காலமாக இருந்து வரும் சடங்கு!

நம்ம கட்சி மாதிரி எதிலும் இருப்புக் கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்த பாக்யராஜ், கடைசியில் மைக்கை பிடித்ததும் வெளுத்து வாங்கினார். 'கிழக்கே போகும் ரயிலில்' நிகழ்ந்த சம்பவங்களையும் 'புதிய வார்ப்புகள்' புது அவதாரம் தரித்த சங்கதியையும் கலோக்கியலாக பேசி கைதட்டல் வாங்கிக் கொண்டா¡. சம்பந்தமில்லாத விடயங்களை அடுக்கினாலும் பத்தரை மணிக்கு மேல் நம்முடைய பொறுமையை சோதிப்பது நல்லதல்லன்னு நல்லாவே தெரிஞ்சு வைச்சிருந்தார்.

கடைசியா நன்றியுரை சொல்ல வந்த மகேந்திரன் இலக்கியவாதிகளுக்கு பெரிய சவாலே விட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் திரையுலகத்தை தமிழ் இலக்கியவாதிகள் பாராட்டும் காலம் வரும் என்று ஆருடம் சொன்னார். திட்டம் போடாமல் எதையும் செய்யும் தனது பழக்கத்தை யாரும் பின்பற்ற வேண்டாம்னு கூட்டத்தை கேட்டுக் கொண்டார். காலையிலிருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் கவனித்து வருவதாக சொன்னவர், புத்தகத்தை இரண்டேமாதத்தில் எழுதி முடித்ததாக சொன்னார். இதே காலகட்டத்தில் இன்னொரு பதிப்பகத்துக்கும் ஒரு புத்தகம் எழுதியிருப்பதாக கூடுதல் தகவலையும் சொன்னார். இலக்கியவாதிகளெல்லாம் சினிமாவை ஒதுக்குவதாக குறைபட்டுக் கொண்டவர் கூடிய விரைவில் சிறப்பான இலக்கிய படைப்பை படைக்க வல்லவர்கள் சினிமாக்காரர்களா அல்லது எழுத்தாளர்களா என்கிற போட்டி வரும் என்றார். மகேந்திரன் பற்றியும் அவரது 'சினிமாவும் நானும்' பற்றியும் தனியாவே நிறைய எழதலாம்னு இருக்கேன். கூடிய விரைவில்!

நிகழ்ச்சி முடிந்ததும் நம்ம பத்ரியை பார்த்து பேசலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, மகேந்திரன் மைக்கை பிடித்த உடனேயே எஸ்கேப்பாகிவிட்டார். என்னிடம் மாட்டாமல் தப்பித்தது அவரது நல்ல நேரம்!

பதினோரு மணிக்கு எல்லாம் முடிஞ்சு வெளியே வந்தபோது ஏனோ ஒரு சந்தோசம். இதையே வருடாவருடம் தொடர்ந்து நடத்தினால் எல்லா இலக்கியவாதிகளுக்கும் ஒரு அறிமுகம் கிடைக்கும். பல விசயங்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

ஏனோ புலம் பெயர்ந்து தமிழர்களால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்னு நம்முரு ஆளுங்க நிருபிச்சிடுவாங்களோ? அப்படியெல்லாம் நடக்காது. அட, யாரா இருந்தா என்ன... தமிழ்... தமிழ்தான். ஆனாலும் இது மாதிரி நிகழ்ச்சி நடக்கும்போது சில பேச்சாளர்கள் உணர்ச்சி வேகத்தில் பேச ஆரம்பிக்கும்போது வாச¨லை பார்த்துகிட்டே இருக்கணும். இல்லாட்டி பொடா போலீசார் உள்ளே வந்து நம்மளையும் உள்ளே வெச்சிடுவாங்க!

- ஜெ. ரஜினி ராம்கி

Friday, January 09, 2004

ஊருக்குப் போனால் கோயில் குளம்னு எங்காவது போகத் தோணும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் "கொ..கொ..கொண்டாட்டம்" பார்த்துவிட்டு ஜில் தண்ணியில் ஜம்னு ஒரு குளியலை போட்டுட்டு டு-வீலரை எடுத்துக்கிட்டு போனா... திரும்பி வர நைட் ஒன்பது ஆகிவிடும். ஆனா இந்த தடவை நண்பர்கள் குழுவை திரட்டி கிளம்புவதற்கு ரொம்பதான் நேரமாயிடுச்சு!

எப்போதும் போல இந்த முறை நேராக திருபுவனம் போய் சரபேஸ்வரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதுதான் நண்பர் சொன்னார். "ஏன் நாம ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் போகக்கூடாது ?" நல்ல ஜடியாதான். கும்பகோணம் போகாமலே ஒரு குறுக்கு வழியில் பத்தே நிமிஷத்தில் திருநாகேஸ்வரம்!

திருநாகேஸ்வரத்தை பத்தி சொல்லவே வேணாம். அசுரத் தலையும் நாக உடலும் கொண்ட நவக்கிரக நாயகரான ராகு சிவனை பூஜித்த தலமாம் இது. எல்லா சிவன் கோயிலுக்கும் உரிய லட்சணத்துடன் கூடவே ஒரு கூடுதல் இணைப்பு மாதிரி ராகுவின் சன்னதி. ராகு கால நேரத்தில் இந்த ஏரியா பக்கமே தலைகாட்ட முடியாத கூட்டமிருக்குமாம். சனீஸ்வரருக்கு அடுத்தபடியாக நம்கூட ரொம்ப காலம் இருப்பவர் ராகுதானாம். பிரபலமான ஷேத்திரமாக இருந்தாலும் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பிரமாதம்னு மெச்சிக்கிற மாதிரி இல்லை. தஞ்சாவூர் கோயில்களுக்கே உரிய மங்கலான வெளிச்சம் கோயிலின் பல பகுதிகளில் இருந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. முலவர் நாகநாத சுவாமியை வலம் வந்து விட்டு வெளியே வந்தால் தனியாக அம்மன் சன்னதி. கிரிகுஜாம்பிகை அம்பாள் டிரிபிள் ரோலில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என் முன்று வடிவமாகவும் காட்சி தருகிறார்.

இங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் இருப்பவர்தான் உப்பிலியப்பன்...ஸாரி... ஒப்பிலியப்பன்! நாங்கள் போனது வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் என்பதால் கூட்டத்துக்கும் குறைவில்லை. முர்த்தி சின்னதா இருந்தாலும் கீர்த்தி பெரிசுன்னு சொல்ற மாதிரி சின்ன கோவிலாக இருந்தாலும் பெருமாள் ஏக பிரபலம். சின்ன பாலாஜின்னு செல்லமா கூப்பிட்டுக்கலாம். திருப்பதி போயிட்டு இந்த சின்ன திருப்பதிக்கும் ஒரு விசிட் அடிச்சாத்தான் புண்ணியம்னு யாரும் இன்னுமா Rules frame பண்ணாம இருக்காங்க?!

எட்டடி உயரத்தில் ஒப்பிலியப்பனின் அழகே தனிதான். அப்படியே திருவல்லிக்கேணியில் உறையும் பார்த்தசாரதிக்கு அண்ணன் மாதிரி ஒரு தேஜஸ். அப்படியே வலம் வரும்போது கைநிறைய புளியோதரையை வாங்கிட்டு நடந்தால் சுவரெங்கிலும் ஒப்பிலியப்பனின் புராணம் சித்திரங்களாக வரைந்து தள்ளியிருந்தார்கள். (புளியோதரையில் உப்பில்லேன்னாலும் செம டேஸ்ட்!)

வெளியில் வந்ததும் தான் சொன்னார்கள் இன்னொரு முக்கியமான தலம் இதே ஏரியாவில்தான் இருக்கு என்பதை. அது ஐவர்வாடி என்னுமிடத்தில் பிரத்தியங்கரா தேவி கோவில். அங்கிருந்து ஒரு பத்து நிமிஷம் ஆக்ஸிலேட்ட முடுக்கினால் ஊரை விட்டு ஓதுங்கி அழகான, எளிமையான ஹைடெக்கான கோயில். வாசலிலேயே சிவன் தவமிருக்கும் மெகா சிலை. நாங்கள் போன நேரத்தில் (எட்டு மணி) கோயிலை சாத்திக்கொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் அம்மனை வலம் வந்தவிட்டு திரும்போதுதான் அர்ச்சகர் ஒரு முக்கியமான information அள்ளி விட்டுக்கொண்டிருந்தார். இங்கே வந்தபின்புதான் 'அம்மா'வுக்கு அரசியலில் சுக்கிர தசை ஆரம்பிச்சுதாம். அமாவாசை அன்னிக்கு கோயிலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டமிருக்குமாம். நாங்க போன நேரத்திலேயே கண்ணாடியை ஏற்றிவிட்டபடி கார்கள் பறந்து கொண்டிருந்தன. எந்த அரசியல் விஜபியோ... என்ன வேண்டுதலோ?!

திரும்பி வரும்போது பல விஷயங்களை பற்றி யோசித்துக்கொண்டே தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். ரெண்டே கி.மீ இடைவெளியில் எப்படி இத்தனை கோயில்கள்! சின்ன சின்ன, எளிமையான கோயில்களே இவ்வளவு பிரபலமாக இருக்கும்போது கண்ணுக்கு தெரியாத கலை அம்சங்களையும் அதிசியங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு இதே ஏரியாவில் எத்தனை பெரிய கோயில்கள் இருக்கின்றனவோ? இந்த ஏரியாவில் பொறந்து வளர்ந்த நமக்கே நிறைய விஷயம் தெரியலையே... மத்தவங்களுக்கு எப்படி இந்த கோயில்களை பத்தி தெரியப்போவது....

கூட வந்த நண்பரிடம் என்னுடைய ஆச்சரியத்தை வெளிக்காட்டிய போது வந்த பதில்,

'ஏதோ வந்தோமோ பார்த்தோமோ சாமியை கூப்பிட்டுட்டு போனோமோன்னு இருக்கணும். இல்லாட்டி நமக்கும் காவி சுத்தி கையில் ஒரு சூலாயுதத்தையும் கொடுத்துட்டு ஆர்.எஸ்.எஸ் ஆளுங்கன்னு சொல்லிடுவானுங்க!'