Thursday, February 26, 2004

ரகசியமாய்....

சமீபத்தில் வெளியான புகான் கமிக்ஷனின் அறிக்கை அரசியல் ரீதியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ¥க்கு வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுதங்கள் வாங்கியதில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென்று ஓரேயடியாக ஆளுங்கட்சி மறுத்ததாலும் எதிர்க்கட்சிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னும் தனிநபர் தாக்குதலோடு நிறுத்திக் கொண்டதாலும் இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான குளறுபடிகளை தீர விசாரிக்க யாருக்கும் அக்கறையில்லை என்கிற அவநம்பிக்கைதான் இன்று மிஞ்சி நின்றது.

ஆயதங்கள் வாங்குவதில் ஆயிரெத்தெட்டு விவகாரங்கள் இருப்பது பற்றிய பயங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு போபார்ஸ் வழக்கு. ராஜீவ் விடுவிக்கப்பட்டதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற காங்கிரஸின் நினைப்பில் மண். சிபிஜ மேல்முறையீடு செய்வதால் தேர்தல் நேரத்தில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுக்கு நல்லதொரு வாய்ப்பு. போபர்ஸ் சர்ச்சை இன்னும் எத்தனை தேர்தலில் முன்வைக்கப்படுகிறதோ என்கிற மலைப்பு மக்களுக்கு.

நம்முர் நிலைமை இப்படியென்றால் பக்கத்து வீட்டு நிலைமையே ரொம்ப மோசம். பாகிஸ்தானில் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்னும் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு நிழலக தாதா போன்று நடந்து கொண்ட விஞ்ஞானியை பாகிஸ்தானிய மக்கள் மன்னிக்கும் காட்சியை விட அணு ஆயுத பீதியை கிளப்ப காரணமாகிவிட்ட பாகிஸ்தான் அரசை மட்டும் அமெரிக்கா வழக்கம் போலவே கண்டும் காணாமலிருப்பதுதான் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.

Wednesday, February 18, 2004

பெரியாரும் தலித்துகளும்
''தமிழர்களைப் பொறுத்தவரையில் இறந்து போனவர்கள் அனைவருமே அமரர்கள். தம் பெரும் மதிப்பிற்கு உரியவர்கள். விமர்சனங்கள், மாறுபாடுகள், எதிர்க்கருத்துகள் போன்றவைகளிலிருந்து விடுபட்டு வேறு தளத்திற்குக் கொண்டு போகப்பட்டு, பீடத்தில் பிரதிண்டை செய்யப் பட்டவர்கள். அவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம், கவிஞர்களாக இருக்கலாம், முக்கியமான அரசியல் தலைவர்களாக இருக்கலாம்.

தற்போது தமிழகத்தில் பெரியாரைப் பற்றிய சில விமர்சனங்கள் தலைது¡க்க ஆரம்பித்திருக்கின்றன. திராவிடர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கிய அவரைத் தலித்துகளின் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாது; அவரது கருத்துகளைப் பற்றிய ஒரு மீள்பார்வை அவசியம் என்ற கருத்து வலுக்கிறது.

நம் சமுகத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சிந்தனைகள் என்பதும் அவற்றின் தாக்கங்கள் என்பதும் ஒரு போதும் ஒதுக்கிவிட முடியாத ஒன்று. எத்தனையோ கருத்துடைப்புகளுக்கும் சமுகக் கட்டுடைப்புகளுக்கும் காரணமானவர் அவர். பெண் சுதந்திரம் பற்றிய அவரது கருத்துகளுக்கு இணையான கருத்துகள் இன்றுவரை வேறு யாரிடமிருந்தும் வரவில்லை.

ஆனால், தலித் மக்களையும் இஸ்லாமியச் சமுகத்தினரையும் அவர் தமிழர்கள் என்றே கருதவில்லை. அவர்களைத் தனது சொல்லாடலின் விளிம்பிலேயே வைத்திருந்தார் என்பதற்கு பெரியா¡¢ன் வார்த்தைகளையே சில தலித் விமர்சகர்கள் மேற்கொள் காட்டுகின்றனர்.

பெரியார் என்ன சொன்னார், எதைப் பற்றிப் பேசினார், என்பது பற்றிக் கவலை இல்லை. அந்த கருத்துகளைப் பற்றிய புரிதலோ அல்லது அதைப் பற்றிய தெளிவோ அவசியமற்றதாகிவிட்டன.

நான் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாதீர்கள், சுயமாகச் சிந்தியுங்கள் என்று கூறியவரின் கருத்துகளும் அவரோடு சேர்ந்து பீடம் ஏற்றப்பட்டிருக்கின்றன. இன்று தமிழ்க் கட்சிகளின் கொள்கைகள் பெரியாரிடத்திலிருந்து விலகி இப்படி நீர்த்துப் போனதன் காரணம் என்ன? பெரும்பாலான கட்சிகளில் இன்னும் தலித்துகளுக்கு உரிய இடமளிக்கப்படவில்லை. இந்தக் குறை பெரியாரில் ஆரம்பித்ததா என்பது போன்ற கேள்விகளுக்கு நேர்மையான பதிலைத் தேடுபது அவரை அவமதிப்பாகாது. பெரியாரை உண்மையாக உணர இது ஒரு சந்தர்ப்பம்.''

- கனிமொழி மே - ஜூன் 2003 காலச் சுவடு இதழில்

எனக்கு 'க்', 'ப்' எங்கெங்கே போடுவது என்பதெல்லாம் கை வராத கலை. கனிமொழியக்கா அளவுக்கு அதிகமாகவே அள்ளிவிட்டிருப்பது மாதிரி தெரியுது. யாராவது பரிசோதித்து சொல்ல முடியுமா?

- ஜெ. ரஜினி ராம்கி

Tuesday, February 17, 2004

காங்கிரஸ் Vs பாஜக

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்கிற கேள்வி பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. அதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்கின்றனர் காங்கிரஸின் பெருந்தலைகள். ஒருவேளை காங்கிரஸ் ஜெயிக்கவே ஜெயிக்காது என்று முடிவே கட்டிவிட்டார்களோ?! மன்மோகன் சிங் போன்ற பொருளாதார மாற்றத்துக்கு வித்திட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை சோனியா ஏன் முன்னிறுத்த கூடாது? இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாது என்கிற நிலையிலிருக்கும் காங்கிரஸை புத்துணர்ச்சியுடன் களமிறக்க சோனியா செய்ய வேண்டியது பா.ஜ.க.வின் குறைகளை மட்டும் பட்டியலிடாமல், பாரதத்தின் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் பயன்படுத்தி, நாட்டை மேம்படுத்தும் வாக்குறுதிகளை முன்வைப்பதுதான். காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம் உட்கட்சிப் பூசல்கள்தான். இன்னொரு பக்கம் முரண்பாடான கொள்கைகளையுடைய கூட்டாளிகளாக இருந்தாலும் நம்பகமான ஆட்கள். கூட்டணிக் கட்சிகளை சமாளிப்பதில் காங்கிரஸ்க்கு நிகர் காங்கிரஸ்தான். யார் என்ன சொன்னாலும் கண்டுக்காததுதன் அதன் ரகசியம்!

பாஜக ஆட்சியில் குறைகளே இல்லையென்கிற பிரமை இன்று முன்னிறுத்தப்படுகிறது. குஜராத் கலவரங்களை திராவிடக் கட்சிகள் மறந்து விடலாம். கூட்டணிக் கட்சிகளை சங்கடப்படுத்த தயங்கும் காங்கிரஸ் கூட வாய் திறக்க மறுக்கலாம். ஆனால் மக்களால் மறந்து விட முடியாத அவமானம் அது. பாஜகவின் ஆட்சி இந்தியாவை மத உணர்வுகளால் முழ்கடித்த காலம் என்று தாராளமாக சொல்லலாம். இது பற்றி பாஜகவினருக்கும் துளியும் குற்ற உணர்வே இல்லாததுதான் அதிர்ச்சியான சங்கதி. 300 இடங்களுக்கு மேல் ஜெயித்து பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பெரிய அபாயமே காத்திருக்கிறது. குறைந்த பட்சம் மக்கள், கூட்டணிக் கட்சிகளை சார்ந்து பாஜக இருந்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினாலே போதும். கூட்டாளிகள் என்னும்போது அவர்கள் மிரட்டாமல் இருந்தாகவும் வேண்டும். போன முறையாவது சந்திரபாபு நாயுடு தனியாக மிரட்டிக் கொண்டிருந்தார். இம்முறை காவிரி தந்த கலைச் செல்வி.. நம்முர் அம்மா!

காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒரு விசயத்தை தெளிவாக சொல்லாமலிருப்பதுதான் குழப்புகிறது. சோனியா , வாஜ்பாய்க்கு பின்னர் யார் என்கிற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது. எது எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் திராவிடக்கட்சிகளையும் ஜாதிக்கட்சிகளையும் தவிர்த்து இவ்விரண்டு தேசியக் கட்சிகளை ஆதரிப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் தேர்தலுக்கு பின்னர் மிரட்டல் டயலாக் விடும் தமிழக தலைவர்களால் அடுத்தவர்களின் சாபம் நமக்குதான் வந்து சேரும்!

- ஜெ. ரஜினி ராம்கி

Friday, February 13, 2004

இலக்கியப்பட்டி சிவகாமி!

"தீராநதி: தலித் எழுத்துக்கள், தலித் அல்லாத எழுத்துக்கள் என்கிற இந்தப் பிரிவை, நிரந்தரமான ஒன்றாக கருதுகிறீர்களா அல்லது ஏதோ ஒரு கட்டத்தில் பிரிக்கும் கோடு மறைந்துவிடுமா?

சிவகாமி: சாதி எவ்வளவுக்கெவ்வளவு நிரந்தரமோ, அவ்வளவுக்கவ்வளவு இந்த பிரிவும் நிரந்தரமானது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு பட்டறையில், ஒரு தலித் எழுத்தாளர், ‘‘நாம் எவ்வளவு நாளைக்கு இப்படி தனியாகவே இருப்பது. பொதுத் தளத்துக்கு எப்போதுதான் போய்ச் சேருவது?’’ என்று கேட்டார். நான் அவரிடம் கேட்டேன்: ‘‘ஏன் பொதுத் தளத்தோடு போய் சேர வேண்டும். அங்கு நமக்காக என்ன வைத்திருக்கிறார்கள். நம்மிடம் இல்லாத எதை நாம் அவர்களிடம் இருந்து பெற முடியும் என்று நினைக்கிறீர்கள்’’. என்னைப் பொறுத்தவரைக்கும் தலித்துகள்தான் பொதுத்தளம். சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் இல்லாத ஒரு சமூகம்தான் பொதுசமூகம் என்றால், அந்தச் சமூகம் எனக்குத் தேவையில்லை. மற்றபடி இரண்டுக்குமிடையே பரிமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.


தீராநதி: பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுவது தற்போது பெண்கள் கவிதைகளில் அதிகரித்திருக்கிறது. அதிர்ச்சிக்காகத்தான் இது செய்யப்படுகிறது என்றும் ஒரு சிலர் இதுபற்றிச் சொல்கிறார்கள். உங்களது நிலைப்பாடு என்ன?

சிவகாமி: பாலியல் உணர்வுகளை ஆண்கள் வெளிப்படுத்தலாம்; பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதை மீற வேண்டும் என்பதை நோக்கிய ஒரு செயலாக இது இருக்கலாம். அதிர்ச்சிக்காகத்தான் செய்கிறார்களா, இல்லையா என்பது பற்றி அவர்களைத்தான் கேட்க வேண்டும். நான் படித்த வரைக்கும், நடப்பவற்றைத்தான் எழுதுகிறார்கள். நடக்காதவற்றை எதையும் அவர்கள் எழுதுவதில்லை. ஆனால், அவர்கள் ஏன் நடப்பவற்றை எழுதுகிறார்கள், அதற்கான அவசியத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதை அவர்களின் கவிதைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியவில்லை."

நன்றி - தீராநதி

தலித் இலக்கியமோ பெண் இலக்கியமோ எல்லாமே தறிகெட்டு போய்ட்ட மாதிரிதான் தெரியுது. நாலு பேரு திரும்பி பார்க்கிற மாதிரி எழுதறதும் பேசறதும்தான் இப்போது ஸ்டைல். இதுக்கு வாயில நுழையாத வார்த்தையை சொல்லி அதுக்கும் ஒரு வியாக்கினம் கொடுக்கிறது. சிவகாமியம்மா தாழ்த்தப்பட்ட குடும்பத்திலிருந்து படித்து வளர்ந்து பெரிய ஜ.ஏ.எஸ் அதிகாரியாகி ஜப்பான் வரை சென்று வெளியுறவுத் துறையில் பணிபுரிந்த அனுபவஸ்தர். விண் டிவியில் வந்த சிவகாமியுடனான வாஸந்தியின் சந்திப்பை இன்னும் மறக்க முடியவில்லை. தலித் என்னும் அடையாளம்தான் தன்னை இன்னும் பரபரப்பான, பிரபலமான ஏழுத்தாளராகவே வைத்திருக்கிறது என்பதை சிவகாமியம்மா நிச்சயம் மறுக்க மாட்டார்!

- ஜெ. ரஜினி ராம்கி

Wednesday, February 11, 2004

ஜெயா வணக்கம்

காலையில் சீக்கிரமா எழுந்திருக்கிறதெல்லாம் நமக்கு பழக்கமே இல்லாத சமாச்சாரம். ஏழு மணி என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை அதிகாலை நேரம்! இன்னிக்கு அபூர்வமா சீக்கிரமா எழுந்து டி.வி ரிமோட்டை கையிலேடுத்தேன். சன் டிவியில் வெறுமாண்டியா போக வேண்டிய விருமாண்டியை விறுவிறுமாண்டியாக்கிய ஆர்ட் டைரக்டர் பிரபாகர் ஏதோ சொல்லிட்டிருந்தார். விஜய் டிவியில் ரதியிடம் அரெஜ்டு மேரேஜா லவ் மேரஜாங்கிற அதி முக்கியமான கேள்வியை கேட்டுட்டிருந்தாங்க. தமிழன் டிவியில் டாக்டர் அய்யா பொங்கல் கொண்டாடிக் கொண்டிருந்தார். ஜெயா டிவியில் பளிச்சென்று ஒரு முகம் பேசிக்கொண்டிருந்தது. அது கோவையின் பிரபல தொழிலதிபர் வானவாராயர் தான் அது!

அவரது பேச்சிலிருந்து சில ஹைலைட்டான சங்கதிகள்

* சுவாமி விவேகானந்தர் தன்னை அதிகமாக பாதித்திருப்பதாக சொன்னார். விவேகானந்தர் சொன்ன ஆன்மீ£கத்தில் தெளிவு இருந்தது தேடல் இருந்தது.. அதெல்லாம் இந்த காலத்தில் குறைஞ்சுகிட்டே வருது என்றார்

* பாரதீய வித்யாபவனின் தலைவராக இருந்து கொண்டு இந்திய கல்வி முறையை மாற்றியமைக்கும் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியிருப்பதாக சொன்னார். விஞ்ஞானத்தோடு மெய்ஞானமும் இணைந்து செயல்பட்டே ஆகவேண்டும். அதை முன்னெடுத்து செல்ல இந்தியா போன்ற ஆன்மீக கலாசாரத்தை அடிப்படையாக தேசத்தால்தான் முடியும் என்று சொல்லி நிமிர வைத்தார்

* உலகத்திலேயே இந்தியக் கலாசாரம் இன்னும் நீர்த்து போகாமைக்கு காரணம் அது ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டிருப்பதுதான் என்று சொன்னவர் விவேகானந்தர் சொன்ன ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்ட கல்வியை வலியுறுத்துவதில் தப்பில்லை என்றார்

* இந்தியா தனக்கென்று லட்சியம் எதையும் கொள்ளாததுதான் நமது பிரச்சினை என்றவர் மகாத்மா காந்திஜியின் பொருளாதார கொள்கைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரும் என்றார்.

* இன்றைய பெற்றோர்களுக்கு பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் நாளை எப்படியிருந்தாலும் அதற்கேற்ப பிள்ளைகள் தங்களை தயார்படுத்திக் கொள்ளுமளவுக்கு ஊக்கப்படுத்துதல் அவசியம் என்றார். அடிக்கடி அவர் சொன்ன 'அமர் பாரதம்' வார்த்தை பதம்தான் புரியவில்லை.

ஒரு அருமையான, தெளிவான சொற்பொழிவை கேட்டதில் மனசு சுறுசுறுப்பானது. ஜெயா டிவிக்கு ஜே!
Friday, February 06, 2004

ஸ்டேட் மிஸ் அடிப்பாங்க!

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை நெறிமுறைகள் தேர்தல் நேர பரபரப்பில் அமுங்கிப் போய்விட்டது மாதிரிதான் தெரிகிறது. அரசு ஊழியர்கள் கலை இலக்கிய சங்கதிகளில் பங்கு கொள்வதற்கும் தங்களது படைப்புகளை பிரசுரிப்பதற்கும் முன் அனுமதி பெறவேண்டும் என்ற நடவடிக்கை நிச்சயமாக கருத்து சுதந்திரத்தை கேலிக்கூத்தாகுகிறது. தமிழகத்தில் கலை இலக்கிய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்கு எவ்விதமான பொருளாதார லாபம் எதுவுமில்லை. இங்கே எழுதுபவர்கள் வேறு தொழில்களை மேற்கொண்டிருந்தால் மட்டுமே எழுத்து தொழிலில் பிழைக்க முடியும். கதை எழுதியும் தபால் தலை ஓட்டியும் காலியானவர்கள் நிறைய பேர். வருடாவருடம் ஏறும் தபால் செலவையும் தாக்குப்பிடித்து எழுதித் தள்ளுவதென்பது சாதாரண காரியமல்ல. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுதுவதற்கு காரணம் பொறுப்புணர்வு, புகழ், சமுக பிரக்ஞை என்றெல்லாம் சொல்ல முடியுமே தவிர காசு என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியாது.

அந்த காலத்தில் சட்டத்தை மீறுவதற்கு து¡ண்டக்கூடிய எழுத்துக்களையும் தேச விரோதமாக சித்தரிக்கப்பட்டவைகளை எழுத்துக்களையும் தடை செய்ய ஆங்கில அரசு கையாண்ட யுக்திகள் வேறு ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது. சுதந்திரத்திற்கு பின்னரும் இது போன்ற சட்டங்கள் வழக்கில் இருந்தாலும் நடைமுறையில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்களையே யாரும் பொருட்படுத்தியதில்லை. சுதந்திர இந்தியாவில் ஜனநாயகத்தின்பால் நம்பிக்கை கொண்ட ஆட்சியாளர்களால் து¡க்கியெறியப்பட்ட இது போன்ற சட்டங்கள் மீண்டும் உலா வருவதன் காரணம்தான் புரியவில்லை. தனக்கு மீடியாவின் ஆதரவு இல்லையென்பதற்காக அம்மா மீடியாவை மண்டிபோட வைக்கும் ஸ்கூல் டீச்சர் வேலை பார்க்க நினைக்கிறாரோ?

தமிழில் தீவிரமாக எழுதிவரும் எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர்கள் வர்க்கத்தை சார்ந்தவர்கள். இதில் 'அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் தேவையற்றது அம்மாவின் ட்ரீட்மெண்ட் சரிதான்' என்று சொன்னவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் கூட இத்தகைய கட்டுப்பாடுகளை ஊழியர்களுக்கு விதிப்பதில்லை. இந்நிலையில் இப்படியரு கட்டுப்பாடுகளை விதிப்பதன் முலம் ஜெ அரசு சாதிக்கப் போவது எதை?

எது எப்படியோ, தமிழகத்தில் தனிநபர் அரசியல் உச்சத்திற்கு போய்விட்டது. உங்கள் தெருவில் லைட் இல்லையென்று முரசொலியில் கலைஞர் எழுதினால் உங்களுக்கு உபத்திரம் ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். அரசு ஊழியர் ஸ்டிரைக்கில் தீவிரமாக இருந்து நுலிழையில் வேலையை மிஸ் பண்ணாமலிருந்த என் நண்பனை இலக்கிய கூட்டத்திற்கு அழைத்தால் அரண்டு போகமாட்டானா? "பத்திரிக்கை, எழுத்து, தமிழ், இலக்கியம், தனித்தமிழ், தமிழர் தேசியம், தீவிரவாதம், பொடா, செண்ட்ரல் ஜெயில்.....அய்யோ.. யாரு களி திங்கிறது? எழுதறதா... படிக்கிறதோட நிறுத்திக்க வேண்டியதுதான்..!"

- ஜெ. ரஜினி ராம்கி

Wednesday, February 04, 2004

கூட்டணி தர்மம்?!

சர்வ வல்லவை பொருந்திய பலமுள்ள கட்சியாக கருதப்படும் ஆளும் பாஜக, தமிழகத்தில் அரசியல் அனாதையாக இருப்பது காலத்தின் கோலம்தான். ஒரு திராவிடக் கட்சி கதவை முடினால் இன்னொரு திராவிடக் கட்சி கதவை திறந்து வைக்கும் என்கிற எதிர்பார்ப்பு முற்றிலுமாக பொய்த்து போகாவிட்டாலும் பாஜக போன்ற தேசியக் கட்சிக்கு இது பின்னடைவுதான். ஆனாலும் அதிமுகவின் பெருந்தன்மையால் பாஜக பிழைத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது. ஆக, இந்த முறை அனாதைகளானது 'பெயர் மாற்ற' புகழ் திருமாவளவனும் 'சண்டியர்' கிருஷ்ணசாமியும்தான்.

இவ்வளவு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தும் திமுக பெற்ற பலன் என்னவென்று கேட்டால் வெறுமைதான் பதிலாக மிஞ்சுகிறது. குஜராத்தின் இனக்கலவரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த திமுக இன்று தனது தலைமையிலான கூட்டணிக்கு மதநல்லிணக்க அணியென்று பெயரிடுவது முரணாண விஷயம். திமுகவுக்கும் காங்கிஸ¨க்கும் இடையே பரஸ்பர புரிதல் உண்மையிலேயே இருக்கிறதா என்பது தொகுதி பங்கீட்டின் போதே தெரிந்துவிட்டது..

அடிக்கடி அமைச்சரவை மாற்றமும் அதிமுக நிர்வாகிகள் நேர்காணலின் முலம் தேர்ந்தெடுக்கப்படுவதும் ஆரோக்கியமான ஜனநாயக அணுகுமுறை இல்லையென்றாலும் ஆபத்தான நிலையிலிருக்கும் உள்கட்சி அரசியல் பிரச்சினைகளை அதிரடியாக முடிவுக்கு கொண்டுவர இதைவிட வேறு வழியில்லை. கோஷ்டிப் பிரச்சினைகளுக்கு பெயர் பெற்ற கட்சியின் தலைவர்கள் அம்மாவிடமிருந்து அவசியம் படிக்க வேண்டிய பாடம் இது. அதீத தன்னம்பிக்கையால் நாற்பதும் எனக்கேன்னு அம்மா பகல் கனவு காண்பது குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம்!

குழப்பமும் குளறுபடியுமாக இருக்கும் தமிழக அரசியலை புரிந்து கொண்டு மக்கள் ஏதாவதொரு கூட்டணிக்கோ கட்சிக்கோ பெரும்பான்மையான இடங்களை அள்ளிக் கொடுத்தால் அது ஆச்சரியம் அல்ல... அதிர்ச்சி!

- ஜெ. ரஜினி ராம்கி