Saturday, May 29, 2004

டாப் 20 படங்கள்

சினிமா நடிகருக்கு தீவிர ரசிகரா இருந்தாலும் சினிமாவை பத்தி மூச்சே விட மாட்டேங்கிறீங்களேன்னு 2,3 விசாரிப்புகள். (ஓழுங்கா தெரிஞ்சாத்தானே மூச்சு விட முடியும்!) நான் பார்த்து, ஏதோ ஒரு காரணத்துனால எனக்கு பிடிச்ச படங்களை மட்டுமே இங்கே லிஸ்ட்டியிருக்கேன்! ஜம்முனு உட்கார்ந்துகிட்டு கால் மேல கால் போட்டு நான் சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு படிச்சுத் தொலைங்க!

20. கலங்கரை விளக்கம்

எம்.ஜி.ஆர் நடித்து நான் பார்த்த மூணு படங்களில் இதுவும் ஒண்ணு. திரில்லர் சப்ஜெக்ட். சரோஜாதேவியை தேடி அலையும் கச்சிதமான கேரக்டர் டாக்டர். எம்ஜிஆருக்கு. (நிஜமாவே படத்துல டாக்டர்தான்!) சோகமான பாடலை கூட ஜாலியாக பாடி நடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். நெருடவே இல்லை. உம் 'காற்று வாங்கப் போனேன்'. படத்தின் இன்னொரு பாடலில் கூட லேசான சோக டச்சிங் / 'பொன்னெழில் பூத்தது புதுவானில்'. அப்போதெல்லாம் பாரதிதாசன் பாடல்களை சினிமாவில் வைச்சே ஆகணும்னு எம்ஜிஆருக்கு ஒரு ஆர்வமாம்! இங்கே ஒரு 'சங்கே முழுங்கு'. படத்தை விட பாடல்களும், பாடல் காட்சிகளும்தான் டாப்!

19. டார்லிங் டார்லிங் டார்லிங்

எத்தனையோ படங்களை சர்வசாதாரணமாக எடுத்து மெகா வெற்றி பெற்ற பாக்யராஜ் கஷ்டப்பட்டு செஞ்ச படம் எடுபடாமல் போனது இண்டஸ்டிரிக்கே ஒரு ஷாக்தான். இந்த காலத்து 'அழகி', 'ஆட்டோகிராப்' கதையையெல்லாம் அப்பவே அழகா சொல்லியிருக்கார். அப்பாவியா வந்து பாட்டு பாடி, கராத்தே சண்டை போட்டாலும் பொருத்தமான வேஷம் பாக்யராஜ் ஸாருக்கு. சின்ன வயசு காதலை நியாயப்படுத்தாம கண்டிச்சு ஒரு டயலாக் வைச்சிருந்திருக்கலாம்.

18. வருஷம் 16

பிறந்த ஊருக்கு ஒரு ஜாலியான ·பேமிலி டிரிப் போன திருப்தி. தாத்தா, மாமா, சித்தப்பாட என உறவுகள் உரசிக் கொண்டு சுகிர்த்த அனுபவம். தமிழ் சினிமாவின் 'ஹம் ஆப்கே ஹை கெளன்'. பீம்சிங்கின் காலத்து படத்தையும் எந்தவித திருப்பமுமில்லாமல் இதமாக சொல்ல பாசிலுக்கு தெரிந்திருக்கிறது. 'பழமுதிர்ச்சோலை' பாடல் மட்டுமல்லாமல் டூயட் பாட்டு கூட சந்தோஷ மூடுக்கு உத்திரவாதம் தரும்.

17. இதயம்

இந்தப் படம் வரும்போது தமிழ் சினிமா டிரெண்ட் எப்படியிருந்துச்சுன்னு எல்லோருக்கும் தெரியும். மோகன் காலத்துக்கு பின்னாடி காதலை மையப்படுத்தி வர்ற சீசஸனை இது ஆரம்பிச்சு வைச்சப்ப, நான் பதினோராம் கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். திரைக்கதை கொஞ்சம் குழப்பினாலும் படம் முழுவதும் வர்ற இசையும் காதலைச் சொல்ல இயக்குநர் கையாண்ட டீஸெண்டான யுக்தியும் என்னவோ....என்னவோ... பிடிச்சிருக்கு!

16. கர்ணன்

அந்தக் காலத்து 'ஷங்கர்' படம். அதாவது பிரம்மாண்டம்! மகாபாரதத்தை நல்லா படிச்சு தெரிஞ்சுகிட்டது இந்தப் படத்தை பார்த்த பின்னாடிதான். அதனால், இன்னிக்கு வரைக்கும் கர்ணன் வில்லன்களோட கூடாரத்துல இருந்தாலும் நம்மளைப் பொறுத்த வரையில் ஹீரோதான். எம்.எஸ்வி இசையில் கண்ணதாசனின் பாடலில் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரம் காட்டிய பாடல்கள்தான், படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

15. ஜானி

ஹீரோ, டபுள் ஆக்ட் என்றாலே கதையை சினிமா டிக்கெட்டின் பின்புறத்தில் எழுதிவிடலாம். இதிலும் அப்படித்தான். வழக்கமான ஆள்மாறாட்டமாக இருந்தாலும் ட்ரீட்மெண்ட் வித்தியாசமாக இருக்கும். மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இளையராஜாவும் தன் பங்குக்கு வெறும் பெண்குரலை வைத்தே எல்லா பாட்டையும் கம்போஸ் பண்ணி அசத்தியிருப்பார்.

14. தளபதி

ஏகப்பட்ட கிளைக் கதைகள் இருந்ததால் குமுதத்தால் 'தொளபதி' என விமர்சிக்கப்பட்டது. ரஜினி படங்களில் டெக்னிக்கல் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ஆரம்பித்தது தளபதிக்கு பின்னர்தான். எளிமையான காஸ்ட்யூம், ஆர்ப்பாட்டமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு என தமிழ் சினிமாவுக்கே ஒரு 'ஷோலே' இது.

13. பூவிழி வாசலிலே

ஒரு குழந்தையையும் குடிகாரனையும் வைத்துக் கொண்டு ஒரு ஆக்ஷன் திரில்லரை படு அமைதியாக எடுக்க பாசிலை விட்டால் வேறு யாருமில்லை. திடுக்கிடும் திருப்பங்களுக்கும், ஒட்டாத காட்சிகளுக்கும் 'நோ' சொல்லிவிட்டு இளைய ராஜாவின் இசையை படம் முழுவதும் இழைய விட்டு அசத்தியிருப்பார்கள். ஜேசுதாஸ் குரலில் வரும் இரண்டு சோகப் பாடல்களும் மாஸ்டர் பீஸ்.

12. ஒரு தலை ராகம்

எங்க ஊர்க்காரர் எடுத்த இந்த காதல் காவியத்தை இன்னிக்கு வரைக்கும் ரசிக்க முடியவில்லை. காரணம், 'இதான் நம்ம காலேஜ், இதான் தருமபுரம் கோயிலு. இதான் நம்ம தெருவு'ன்னு வர்ற கமெண்ட்ஸ்தான். என்னதான் இருந்தாலும். 25 வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் எப்படியிருந்ததுங்கிறதை இதைப் பார்த்தாலே தெரிஞ்சுக்க முடியும்.

11. மகாநதி

'ஜெண்டில் மேனு'க்கு அப்புறம் ரஜினி படங்கள் தவிர வேறதையும் பார்த்ததில்லை, மகாநதியை தவிர. அதுவும் சமீபத்தில்தான் டிவியில் மகாநதியை பார்த்தேன். கமல் ஒரு பெரிய நடிகர் என்பதெல்லாம் உலகத்துக்கே தெரியும். ஆனா, எனக்கு புடிச்ச விஷயம் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதே. மகனிடம் தெரியும் அந்நியத்தனம், மகளை மீட்டெடுக்கும் போது அவரிடம் வரும் கேவலும் மனதை உலுக்கி போட்ட விஷயம். படத்தில் வரும் திருவிடைமருதூர் ஏரியா காட்சிகள் எனக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.


மத்த '10' பத்தி நாளைக்கு பார்ப்போம்!

Wednesday, May 26, 2004

மறுபடியும் தள்ளாட்டத்தில்!

சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின்படி உலகிலேயே சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானம் ஈட்டிய நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. இது கடந்த ஆண்டுகளில் இந்தியாவுக்கு கிடைத்திராத கெளரவம். முதலிடத்தை இலங்கையும் இரண்டாமிடத்தை நேபாளம் பெற்றிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு நிகழ்ந்த ஈராக் போர் மற்றும் சார்ஸ் பீதியினால் உலகிலேயே அமைதியான பகுதியாக தெற்கு ஆசிய நாடுகள் இருந்ததுதான் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்க காரணம். இதனால் இலங்கையில் 23.7 சதவீதமும் நேபாளத்தில் 14.8 சதவீதமும் இந்தியாவில் 14.6 சதவீத வளர்ச்சியும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் சுறுசுறுப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணியில் 23 சதவீத ஏற்றம் ஏற்பட்டிருக்கிறது. போர் பற்றிய பயங்களெல்லாம் இலங்கையில் நீங்கிவிட்டது. இந்தியா இரண்டாமிடத்தை மிகக்குறைந்த புள்ளிகளில்தான் கோட்டை விட்டிருக்கிறது. ஆகா, நமக்கு நல்ல காலம் ஆரம்பித்துவிட்ட மாதிரிதான் தெரிகிறது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் தமிழோவியத்துல எழுதியிருந்தேன். போன வருஷம் சுற்றுலா வளர்ச்சி கிடுகிடுவினு உயர்ந்த மாதிரி இருந்ததுக்கு காரணம் வாஜ்பாய் அரசு அல்ல; சார்ஸ் பீதிதான் தெளிவா தெரியுது. உலகத்திலேயே பாரிஸ் நகருக்குதான் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமா இருக்குதாம். 80 மில்லியன் மக்கள் பாரீஸ் பார்க்கிறதுக்கு வர்றாங்களாம். நம்மூருக்கு வர்றவங்கள வெறும் 3 மில்லியன் மட்டும்தான். கம்யூனிஸ கோட்டை மாதிரி இறுக்கமா இருந்தாலும் சீனா, இந்தியாவை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டது. 33 மில்லியன் மக்கள், சீனாவை சுத்திப் பார்க்க வர்றாங்கங்கிறது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.

சுற்றுலாத்துறையின் மூலம் உலகெங்கிலும் கிடைக்கும் வருமானம் 4.6 டிரில்லியன் என்கிறது ஒரு என்டிடிவியின் செய்தி. இதில் இந்தியாவின் பங்கு வெறும் 4 பில்லியன் மட்டும்தான். இருப்பினும் இந்தியா சுற்றுலாத்துறையில் இன்னும் ஒரு 15% வளர்ச்சி பெறமுடியும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது அதே செய்தி. ஆனால், வெளியுறவு, உள்துறை, சுற்றுச்சுழல், நிதி எனப் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் மட்டுமே இது சாத்தியம்.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஆந்திராவின் அதிரடி அரசியல்வாதி ரேணுகா செளத்ரியின் பொறுப்பில் தற்போது சுற்றுலாத்துறை. எதிர்பார்ப்பது போல 15% வளர்ச்சி இந்திய சுற்றுலாத்துறைக்கு கிடைக்குமா என்கிற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.... சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் ஈட்டும் யுக்தியே இந்தியாவுக்கு புதுசுதானே என்கிறார். ஜம்பது ஆண்டுகளில் காங்கிரஸால் செய்ய முடியாததை ஜந்து ஆண்டுகளில் பாஜக செய்திருக்கிறது என்ற பிரமோத் மகாஜனின் காமெடிக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

Tuesday, May 25, 2004

காணாமல் போன காஸி!

தெற்காசியாவின் முதல் நீர்மூழ்கி கப்பல் முப்பது வருஷத்துக்கு முந்தி விசாகப்பட்டினம் கரையோரம் ஜல சமாதியடைந்து இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கிறது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே ஆச்சரியமாக சங்கதிதான். டயாப்ளோ என்று நாமகரணம் சூட்டி இரண்டாம் உலகப்போரின் போது அறிமுகப்படுத்தப்பட்ட நீர்மூழ்கி கப்பல்தான் அறுபதுகளில் பாகிஸ்தானுக்கு குத்தகை விடப்பட்டு, ஒரு சில மாற்றங்களுடன் காஸி என்று பெயரிடப்பட்டு பாகிஸ்தானின் முக்கியமான அஸ்திரமாக இருந்து வந்திருக்கிறது.

1971 ஆம் ஆண்டின் இறுதிகளில் இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தை தவிடு பொடியாக்க சத்தம் போடாமல் விசாகப்பட்டினத்திலிருந்து வெகு தொலைவில் மையம் கொண்டிருந்ததாக ஒரு சிலரும் இந்தியாவின் யுத்த கப்பலான விக்ராந்தை தகர்க்க காராச்சியிலிருந்து புறப்பட்ட காஸி, வழி தெரியாமல் விசாகப்பட்டினத்திற்கு வந்து தொலைந்ததாக இன்னும் சிலரும் சொல்கின்றனர். எதுக்காக இந்தப் பக்கம் வந்தது என்பது யாருக்குமே தெளிவாக தெரியவில்லை.

300 மீட்டர் நீளமுடைய காஸியால் 11,000 கடல் மைல்கள் வரை விடாமல் டிராவல் பண்ணி தொடர்ந்து 75 நாட்கள் வரை கடலிலேயே இருக்க முடியுமாம். எதிரியை ஒழிப்பதற்காக வெகு து¡ரம் பயணம் செய்து வந்து காத்திருந்த காஸி, இந்திய எல்லையில் போர் துவங்குவதற்கு முன்னாலேயே வங்காள விரிகுடாமல் ஜல சமாதியாகி அட்ரஸ் இல்லாமலே போய்விட்டது. பாகிஸ்தானிலும் எமர்ஜென்ஸி வந்து யுத்தத்திற்கு தயாரானதால் காஸியை பத்தி பேசவே யாரும் முன்வரவில்லை. இன்று வரை தெற்காசியாவின் மிகப் பெரிய புதிராகவே காஸி இருந்து வருகிறது.

காஸி எப்படி மூழ்கியது? இந்திய கப்பற்படையின் பங்கு என்ன என்கிற விடை தெரியாத கேள்விகள் முப்பது வருஷமாக தொடர்ந்து இருந்து வருகிறதாம். இந்திய படையின் அதிரடி தாக்குதல்தான் காரணம் என்று ஒரு குரூப்பும் கப்பலில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து என்று பாகிஸ்தானும் பக்கமும் சொல்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. சம்பவம் நடந்த போது எத்தனை பேர் இருந்தார்கள் சடலங்கள் கிடைத்ததா இல்லையா என்பதை பற்றியெல்லாம் பாகிஸ்தான் மூச்சு விட மறுக்கிறது. இந்தியாவும் காஸி மூழ்கிய இடத்தில் தேடிக்கொண்டே இருக்கிறது. அட்லீஸ்ட், நம்ம பேரனுங்களுக்காவது விஷயம் தெரிய வரும்னு நம்பிக்கை வைப்போம்!

இதையும் படிச்சுடுங்க!

வாய்ஸ் தந்த மாஸ்


முத்தமிழ் தந்த வாய்ஸ்

Saturday, May 22, 2004

அதிர்ஷ்டக்கார ஆளுங்கப்பா!

டெண்டுல்கர் கடைசி ஓவரை மட்டும் என் பையன் விளையாடுவான்னு சொல்லிட்டு ஜகா வாங்குறாருன்னு வெச்சுக்கோங்க! அவரோட வாரிசும் ·பீல்டுல இறங்கி, வர்ற ஸ்லோ பாலை சமாளிக்க மட்டையை ஏக்குதப்பாய் வைக்க, பந்து பவுண்டரிக்கு பறந்து போய் சிக்ஸரானா எப்படியிருக்கும்?! வேணாம்... இந்த கற்பனை. நிசமாவே ஒரு சீன் காட்டுறேன் பார்த்துக்கோங்கோ! தாத்தா, அப்பா, மாமா, மச்சான், எல்லோரும் கட்சியில முக்கியமான புள்ளிங்க. குங்குமம் ஆபிசுல பேருக்கு பொறுப்புல இருக்குறச்ச ஓரே ஒரு எலெக்ஷன்ல நின்னு ஓரேயடியா உசரத்துக்கு போவோன்னு இந்த பேரன் நினைச்சிருக்க மாட்டார்!
இப்போ இந்தியாவின் இன்னொரு IT முகம். மெயில் ஜடி கிடைச்சா அனுப்பி வைங்கப்பா! வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு வைக்கணும்!

மரம் வெட்டின பாவத்தை கழுவ மரம் நட்டு வெச்சு ஹெல்த் பத்தி கிளாஸ் எடுத்தவர் இப்போ நிஜமாவே ஹெல்த் மினிஸ்டர்! இதுவரைக்கும் எந்த பதவியிலும் இல்லாம நேரடியா கேபினட் மினிஸ்டராயிட்டார். சிகரெட், சினிமாவுல மட்டும் பிடிக்கக்கூடாதுன்னு சொல்லாம பொது விடங்களிலும் ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டா நல்லாயிருக்கும். கூடவே மதுவிலக்கு பத்தி கொஞ்சம் லெக்சர் கொடுத்தா தேவலை. சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வெச்சுகிட்டு ஊரை சுத்தும் உருப்படாத விசிலடிச்சான் குஞ்சான்கள் இனிமே Health பத்திரமா பார்த்துக்கறது நல்லது. எதையும் செய்ய துணிஞ்ச அப்பா இருக்கிறச்ச இந்த சின்ன அய்யாவுக்கு என்ன கவலை?

தன்மானப் பேரவைன்னு ஒண்ணு ஆரம்பிச்சு தனி ஆவர்த்தனம் நடத்த முடியாமல் தவிச்சுப் போய் நின்னுக்கிட்டிருந்தவரின் மீது அன்னையின் அருட்பார்வை பட, இப்போது காமர்ஸ் மினிஸ்டர். இனிமே கட்சியை கலைச்சுட்டு காங்கிரஸோடு சேர்ந்துடுவாரான்னு சின்ன புள்ளையாட்டம் கேட்டுப்புடாதீங்க! என்ன செய்வார்; எப்ப செய்வார்னு யாருக்குமே தெரியாது. ஆனா செய்ய வேண்டிய நேரத்துல கரெக்டா எல்லாத்தையும் செஞ்சுடுவார். (பழக்க தோஷம் அவ்வளவு சீக்கிரம் போய்டுமா?) ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம். காங்கிரஸ் தலைமையில் தமிழ்நாட்டுல மூணாவது அணின்னு கீறல் விழுந்த ரெக்கார்டை அவ்வளவு சீக்கிரம் திரும்ப ஆரம்பிக்கமாட்டார்!

தடா கேஸ், விடுதலைப்புலிகள் ஆதரவுன்னு ராஜீவ் படுகொலைக்கு பின்னாடி ஆள் ஆட்ரஸே இல்லாம இருந்த அம்மா, இன்னிக்கு சொற்பமான பெண் மத்திய அமைச்சர்களில் ஒருத்தர். விடுதலைப்புலிகள் பத்தி பேசறது 'கூட்டணி தர்ம'த்துக்கு இடைஞ்சலான விஷயங்கிற சின்ன மேட்டர் கூடவா காங்கிரஸ்க்கு தெரியாது?

அம்மா கட்சி வேட்பாளரை அறிவிச்சதுமே அந்த 'மில்க் மேன்' எப்படியும் ஜெயிச்சுடுவாருன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க! அய்யா கட்சி சார்பா அவர் ஜெயிச்சதுமே அவர்தான் மினிஸ்ட்ருன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க! எந்தக் கூட்டணி எப்ப ஆட்சிக்கு வந்தாலும் நம்மவர் மினிஸ்டராயிடுவாரு!

எப்படியோ அதிர்ஷ்டக்கார ஆளுங்களுக்கு வாழ்த்து சொல்லி வைப்போம்! நிறைய பேர் அப்பாவிங்க லிஸ்டுல இருக்காங்க... இருந்தாலும் எனக்கு பிடிச்ச அப்பாவி.... ஏகே மூர்த்திதான்! ஹி...ஹி!

Friday, May 21, 2004

எதுவும் நிரந்தரமில்லை!

'காலப் போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது என்ற விஞ்ஞான உண்மையை வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதே சொல்லிவிட்டார்கள். 'மாறும் வரை பொறுத்திரு' என்பதே இந்து மதத்தின் உபதேசம். வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒரு நாள் பக்குவம் பெறுவான், அதுவரை அவனை நாம் சகிப்போம் என்பதே இந்து மதத்தின் சாரம். இந்து மதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக்கொண்டு போகும்போது வேறு மதங்களுக்கு அந்த சிறப்பில்லை என்று கருதக்கூடாது. நான் ஒர் இந்து என்ற முறையில் எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன். அவை பிற மதங்களில் இருக்கலாம் நான் மறுக்கவில்லை. 'சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதன்று எண்ணி ஆராவாரம் செய்கிறான். உண்மை ஞானம் உதித்துவிட்டால், பிற மதங்களை அரவணைக்கிறான்' என்கிறார் பரமஹம்சர். உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்து மதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருதக்கூடாது. 'என் மனைவி அழகானவள்' என்று சொன்னால் 'அவன் மனைவி கோரமானவள்' என்று அர்த்தமல்ல'

- கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமத'த்திலிருந்து...

கண்ணதாசனால் ஏசு காவியத்தையும் எழுத முடியும்; இந்து மதத்தின் அருமை பெருமைகளை பற்றியும் ஏழுத முடியும் என்பது அசாதாரணமான விஷயம். வெறும் சினிமா பாடலாசிரியராகவே இருந்துவிடாமல் வேறு தளங்களிலும் புயலென புகுந்து புறப்பட்ட கண்ணதாசனின் பன்முகத்தன்மை சிலிர்க்க வைக்கிறது. கண்ணதாசனுக்கு பிறகு வந்து வைரமுத்து அவ்வப்போது சில ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார். சினிமா தவிர விகடனில் வந்து அசத்துவதோடு நின்று விடுகிறார் வாலி.

புதிய தலைமுறை பாடலாசிரியர்களோ சினிமா உலகத்தை தாண்டி வர முயற்சிப்பதேயில்லை. சினிமாவில் கூட ஒரே பந்தில் சிக்ஸர் அடித்த மு.மேத்தாவுக்கு கிடைத்த மாதிரியான வாய்ப்புகள் (உ.ம் 'வேலைக்காரன்') மற்ற பாடலாசிரியர்களுக்கு கிடைப்பதும் இல்லை. இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு நாலைந்து கவிஞர்கள் பாட்டெழுதுகிறார்கள். இளையராஜாவுக்கு பின்னர் இசையமைப்பாளர்களும் பாட்டெழுதுவதில் போட்டிக்கு வந்துவிட்டார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தரமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தாராம் முன்னாள் கம்யூனிஸ்ட் பழனிபாரதி! பொழப்புக்காகத்தான் பாட்டெழுதுகிறேன்னு காளிதாசன் வெளிப்படையாக சொன்னாலும் லட்சியம் எதையும் வெறும் பேச்சளவுக்காவது வெச்சுக்கக் கூடாதா? கபிலனும் தாமரையும் நம்பிக்கையளித்தாலும் தொடர்ச்சியான படைப்புகளை தருவதில்லையே!

எது எப்படியோ, வாலிக்கும் வைரமுத்துவுக்கும் சரியான வாரிசுகள் இதுவரைக்கும் வரவில்லை. அதைத்தான் நம்பவே முடியவில்லை!

Tuesday, May 18, 2004

பொது சவால் சட்டம்?!

பொது சிவில் சட்டத்தை 1937க்கு முன்னாலே கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு அது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்திருக்காது என்பது சில பேரின் கருத்து. பொது சிவில் சட்டம் என்றவுடன் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரான விஷயம் என்கிற கருத்து மீடியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற சிறுபான்மை மதத்தினர் வாய்திறக்காமல் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

மதம் என்பது வெறும் கேட்பாடு மட்டுமல்ல சடங்ககுகளும் அதன் உள்ளடக்கம்தான். கோட்பாடுகளை ஏற்கும்போது சடங்குகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. மத வித்தியாசமின்றி எல்லா சடங்குகளையும் விமர்சிக்கும் துணிச்சல் இன்று யாருக்குமில்லை. மத கோட்பாடுகளைப் பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம். மூட நம்பிக்கையை ஏன் நம்மால் விமர்சிக்கமுடியவில்லை? ஒரு மதவாதியாக இருந்துகொண்டே தனது மதத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கவே முடியாதா? நம்பிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது. தனது மதத்தில் இருக்கும் ஓட்டைகளை விமர்சித்த மகாத்மா காந்திஜியையே விமர்சனம் செய்து தாளித்து விட்ட நாடு இது.

இந்து மதத்தில்தான் அதிகமான மூட நம்பிக்கைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணுரிமை சம்பந்தபட்டவற்றில் இஸ்லாம் தான் இந்த விஷயத்தில் முன்னுக்கு நிற்கிறது. எல்லா மதத்திலுமே சடங்குகள் பெண்ணுக்கு எதிராகவே இருக்கின்றன என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு மாதர் சங்கங்களும் மூடி மறைத்துவிடுகின்றன. அப்படியே எதிர்ப்பவர்களும் தலாக் விவாகரத்து முறையை மட்டும்தான் கண்டிக்கிறார்கள். உண்மையில் தலாக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சமுதாய பெரியவர்கள் முன்னிலையில் சொன்னால் மட்டுமே இது சாத்தியம். தலாக் சொல்ல விரும்பும் தம்பதிகளுக்கு இடையே பெற்றோர்கள் சமரசம் செய்து வைத்தாக வேண்டும் என்பதும் ஒரு கட்டாயம். இன்னொரு விஷயம் முஸ்லீம் ஆண்டுகள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'தலாக்' என்னும் வார்த்தைப் பதம்தான் எல்லோருக்கும் பரிச்சயம். முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'ரகுலரி' பற்றி சுத்தமாக யாருக்கும் தெரிவதில்லை.

சரி, பொது சிவில் சட்டம் எப்போது சாத்தியப்படும்? அது தேவைதானா? சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அது 2037க்கு மேலும் தொடரக்கூடும் என்பதுதான் வேடிக்கை.

Saturday, May 15, 2004

சுத்தமான இலக்கியம்?!

வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு மசாலா சினிமா என்கிற மாதிரி ஜெயமோகன் கொஞ்ச நாளைக்கு முன்பு தீம்தரிகிடவில் சொல்லியிருந்தது பத்தி எலெக்ஷன் நேரத்து டென்ஷனில் எழுத மறந்துவிட்டேன். நல்ல இலக்கியம் என்பது வெகுஜன ரசிகர்களால் படித்து, புரிந்து, ரசிக்க முடியாத லட்சணத்தில் இருக்கவேண்டும் என்பதை யார் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை! ஜே.பி. சாணக்கியாவின் 'படித்துறை' பத்தி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை.

எந்த ஒரு படைப்பாளியையும் எல்லோரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று யதார்த்தமாய் பேசும் ஜெயமோகன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தை சிறந்த நாவல்களில் ஒன்று என்று சொல்வதற்காக வல்லிக்கண்ணனை வம்புக்கு இழுப்பது முரண்பாடு. எந்த துறையாக இருந்தாலும் அனுபவமிக்கவர்கள், தற்கால படைப்புகளின் தரம் குறித்து திருப்தி இல்லையென்றாலும் கூட புதிதாக வரும் படைப்பாளர்களை பாராட்டி அங்கீகாரம் தருவதுதான் நடைமுறை. ஜம்பதுகளிலிருந்து எழுதி வரும் வல்லிக்கண்ணனும் தி.க.சியும் அதே நடைமுறைகளை பின்பற்றுவதில் ஜெயமோகன் குறை காண்பதுதான் புரியவில்லை.

கள்ளிக்காட்டு இதிகாசம், வெகுஜன இதழான ஆனந்த விகடனில் வெளியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு சாகித்ய அகாதமி கிடைக்கும் என்று வைரமுத்து நம்பியிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால், ஜெயமோகன் சொல்லியிருக்கும் அளவுகோல்களுக்கு ஏற்றவாறு இட்டு நிரப்பி அவார்டு வாங்குமளவுக்கு வைரமுத்துவுக்கு செல்வாக்கிருக்கிறது. வெகுசிலர் மட்டுமே வாசிக்கிறார்கள் என்பது தமிழிலிருக்கும் அவல நிலை என்று சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. இலக்கியத்தரமுள்ள படைப்புகளை சற்று மாற்றி வெகுஜன ஊடகங்களில் எழுதும்போது அவார்டு கிடைக்காமல் போனாலும் சொல்ல வந்த கருத்துக்கள் சேர வேண்டிய இடத்தை போய்ச் சேரும். தரமான இலக்கியப் படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற கருத்தை தகர்த்தெறிந்திருக்கும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும் எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்தை'யும் வரவேற்காமலிருப்பதுதான் தமிழ் இலக்கியத்துக்கு நாம் செய்யும் கேடு என்பது என்னுடைய தாழ்வான அபிப்பிராயம்.

Friday, May 14, 2004

தனி மரம்!

இங்கே ஒரு தனி மரம் வெட்டப்படுவதற்காக காத்திருக்கிறது!


என்னைத்தான் 'கவன'¢க்கிறதா நினைச்சு டாக்டர் அய்யாவோட தொண்டர்கள் வேற யாரையாவது 'கவனி'ச்சு பின்னாடி கஷ்டப்படக்கூடாதுங்கிறதுக்காகவே என்னோட வண்ண புகைப்படத்தை இங்கே போட்டிருக்கேன். வசதியான இடத்துக்கு கூப்பிட்டு கவனிக்க வேணும்னு நினைச்சாலும் 98400 95437 என்கிற செல்போனை அழைக்கலாம்!


இந்த வாரத்து காந்தீய விழுமியங்கள்... தமிழோவியத்தில்!

(கேட்கக்கூடாத) கேள்விகள் ஆயிரம்!

'ஆண்டனியோ' சோனியா காந்தி

இந்தியா இன்னும் மூணு மாசத்துல ஒளிர ஆரம்பிச்சுடுமா?

'வேர்ல்டு டூர்' வாஜ்பாய்

தமிழ்நாட்டுல எங்க அய்யா அசெம்பளிக்கு வராம இருக்குற மாதிரி நீங்களும் பார்லிமெண்ட்டுக்கு வரமாட்டீங்களாமே?

'தூக்க தேவன்' தேவ கெளடா

சோனியாதான் பிரதமர், கிருஷ்ணாதான் முதல்வர்னு நீங்க தூங்கிட்டிருக்கும்போதே சொன்னதா காங்கிரஸ்காரங்க சொல்றாங்களே?

'ஹை ஜம்ப்' ஹர்கிஷன் சிங் சுர்ஜித்

சோனியாதான் பிரதமர்னு உடனே ஒத்துக்கிட்டா அடுத்த எலெக்ஷன்ல வெஸ்ட் பெங்கால்ல என்ன பண்ணுவீங்க?

'வெறுத்துப் போன' வெங்கய்யா நாயுடு

வேற வழியில்லேன்னுதான் ஜெயலலிதா கூட கூட்டு வெச்சுக்கிட்டோம்னு சொன்னது சந்திரபாபு நாயுடு பத்தி இல்லையே?

'நிரந்தர முதல்வர்' ஜெயலலிதாவிடம்

தோத்துப் போனதுக்கு காரணம் வாஜ்பாய் மட்டும்தான் காரணம்னு செல்லுவீங்களா அல்லது திருநாவுக்கரசரையும் சேர்த்துக்குவீங்களா?

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கருணாநிதியிடம்

தயாநிதி மாறனுக்கு கேபினட்டில் என்ன பொறுப்பு கிடைக்கும் அய்யா?

'சமூக நீதி' டாக்டர் ராமதாஸிடம்

சினிமா, தமிழ் கலாச்சாரத்தை கெடுத்துக் கொண்டிருப்பதை எப்போ திரும்பவும் தடுக்கப் போறீங்க?

'செயல் வீரர்' ஜி.கே.வாசனிடம்


ஈ.வி.கே.எஸ் ஆளுங்களுக்கு மினிஸ்டர் பதவி கிடைக்குமா?

'கேரளாத்துக் காளை' கருணாகரன்

தோத்ததுக்கு அந்தோணிதான் காரணம்னு இன்னுமா சொல்லாம இருக்கீங்க?

'கணக்கு வாத்தியார்' ப. சிதம்பரம்

மூணாவது அணி பத்தின மேட்டரையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு காபினட் மினிஸ்டராகி டெல்லிவாசியாகப் போறீங்களாமே?

'அப்பாவி' பொது ஜனம்

யாருக்கோ பனிஷ்மெண்ட் கொடுக்கணும்னு நினைச்சு யாருக்கோ அள்ளிக் கொடுத்துட்டு திருதிருன்னு நிக்கிற நீங்கதான் மிஸ்டர் அப்புசாமியா?

Wednesday, May 12, 2004

பேராசை பெருநஷ்டம்!



ஆந்திரத்தில் நாயுடுகாரு கவுந்து போனதற்கு காரணமென்ன எல்லா பத்திரிக்கைகளும் பத்தி பத்தியா எழுத ஆரம்பிச்சுட்டாங்க! மக்கள் சக்தி மகத்தான சக்தி; மக்களை யாரும் ஏமாத்த முடியாதுன்னு தனி பில்டப் வேற. நேத்து வரைக்கும் தேறுவோமான்னு சந்தேகத்துலேயே இருந்த காங்கிரஸ் கோஷ்டிங்க இன்னிக்கு ஜிவ்வுன்னு பறக்குறாங்க. எலெக்ஷனுக்கு முன்னாலேயும் சரி முடிஞ்சப்புறம் சரி காங்கிஸ் சார்பா யாரு முதல்வராவறதுங்கிறதுல பிரச்சினை ஆரம்பிச்சாச்சு! டெல்லி அம்மா ஷிலா தீட்சித்தையே டீல்ல வுட்டவங்க ஆந்திராவுல மட்டும் சும்மாயிருப்பாங்களா?

ஆறேழு தலை உருண்டாளும் ஆறு வருஷமா லைம் லைட்டில் இருந்த ராஜசேகர ரெட்டிக்குதான் பிரகாசமான வாய்ப்பு. தெலுங்கானா வேணும்னு கேட்டு கட்சி ஆரம்பிச்சு டி.ஆர்.எஸ்ஸை காங்கிரஸ் பக்கத்துல வெச்சுக்குமா அல்லது கழட்டி வுட்டுடுமா? சென்னை மக்களுக்கு கிருஷ்ணா தண்ணி வருமா? ஹைதராபாத், தெலுங்கானா பக்கம் போயிட்டா ஆந்திராவோட தலைநகர் திருப்பதியா விசாகப்பட்டினமான்னு தனியா பட்டிமன்றம் ஆரம்பிச்சாச்சு!

ஒரு பழைய சினிமாதான் ஞாபகத்துக்கு வருது. முகமது பின் துக்ளக்கில் எலெக்ஷன் முடிந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் துக்ளக் (சோ) பேசுவதாக ஒரு காட்சி.

'மக்கள் முட்டாள்கள்!'

'என்னது?'

'ஆம். மக்கள் முட்டாள்கள். என்னையே தேர்ந்தெடுத்து விட்டார்களே!'

Saturday, May 08, 2004

முன் தேதியிட்ட நாட்குறிப்பு!

Friday, May 14, 2004

நான் எதிர்பார்த்திருந்த மாதிரியே தேர்தல் முடிவுகளும் அமைந்து விட்டன. என்னோட சர்வே ரெண்டே விஷயத்தைதான் அடிப்படையா வெச்சு, உட்கார்ந்த இடத்திலிருந்தே எடுத்தது.

1. எலெக்ஷன் அன்னிக்கு ஒட்டு போடறது பொது மக்கள் அல்ல; கட்சித் தொண்டர்கள்தான்

2. காந்தி நோட்டுக்கும் பிரியாணி பொட்டலத்துக்கும் 'ஓட்டு' போட்ட பின்னர்தான் நிறைய பேர் ஓட்டுச் சாவடிக்கே வர்றது

சரி, ரிசல்ட் எப்படி?

வட சென்னை - குப்புசாமி (திமுக)
தென் சென்னை - டி. ஆர். பாலு (திமுக)
சீறிபெரும்புதூ¡ர் - கிருஷ்ணசாமி (திமுக
கடலூர் - வெங்கடபதி (திமுக)
கிருஷ்ணகிரி - சுகவனம் (திமுக)
வேலூர் - காதர் மொகைதீன் (திமுக)
திருப்பத்தூர் - வேணுகோபால் (திமுக)
திருச்செங்கோடு - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
கரூர் - பழனிச்சாமி (திமுக)
நாகப்பட்டினம் - விஜயன் (திமுக)
தஞ்சாவூர் - பழனிமாணிக்கம் (திமுக)
புதுக்கோட்டை - ரகுபதி (திமுக)
பெரம்பலூர் - ராஜா (திமுக)
திருச்செந்தூர் - ராதிகா செல்வி (திமுக)

வந்தவாசி - ராஜலெட்சுமி ராஜன் (அதிமுக)
மத்திய சென்னை - பாலகங்கா (அதிமுக)
திண்டிவனம் - அருண்மொழித்தேவன் (அதிமுக)
அரக்கோணம் - சண்முகம் (அதிமுக)
ராசிபுரம் - அன்பழகன் (அதிமுக)
ராமநாதபுரம் - முருகேசன் (அதிமுக)
நெல்லை - அமிர்த கணேசன் (அதிமுக)
தென்காசி - முருகேசன் (அதிமுக)


மயிலாடுதுறை - மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)
சிவகங்கை - ப. சிதம்பரம் (காங்கிரஸ்)
சேலம் - தங்கபாலு (காங்கிரஸ்)
நீலகிரி - பிரபு (காங்கிரஸ்)
கோபிச்செட்டிப்பாளையம் - ஈவிகேஎஸ் இளங்கோவன் (காங்கிரஸ்)
பழநி - கார்வேந்தன் (காங்கிரஸ்)
திண்டுக்கல் - சித்தன் (காங்கிரஸ்)
பெரியகுளம் - ஹாரூண் (காங்கிரஸ்)

பொள்ளாச்சி - கிருஷ்ணன் (மதிமுக)
திருச்சி - கணேசன் (மதிமுக)
சிவகாசி - ரவிச்சந்திரன் (மதிமுக)

தருமபுரி - செந்தில் (பாமக)
செங்கல்பட்டு - ஏகே மூர்த்தி (பாமக)

நாகர்கோவில் - ராதாகிருஷ்ணன் (பாஜக)
பாண்டிச்சேரி - லலிதா குமாரமங்கலம் (பாஜக)

கோவை சுப்பராயன் - (கம்யூனிஸ்ட்)
மதுரை மோகன் - (கம்யூனிஸ்ட்)
சிதம்பரம் - திருமாவளவன்(விடுதலைச் சிறுத்தைகள்)


நிஜமான லக்கி பிரைஸ் திமுகவுக்குதான்; போட்டியிட்ட 15க்கு 14 இடம். அதிமுகவுக்கு திமுகதான் மாற்று என்கிற மேட்டரை திரும்பவும் சொல்லியிருக்காங்க மக்கள்.

இனிமேலாவது மக்களை நினைச்சு கொஞ்சமாவது பயப்படுறதுதான் அதிமுகவுக்கு நல்லது. இல்லாட்டா வர்ற சட்டமன்ற தேர்தலின் முடிவுகள், 2001ல் திமுக கிடைச்ச மாதிரி அல்ல; 1991ல் திமுகவுக்கு கிடைச்ச தோல்வி மாதிரி மோசமா போய்விடும்.

ஏகப்பட்ட கோஷ்டியா இருந்து இப்போ ரெண்டே கோஷ்டியா இருக்கும் காங்கிரஸ், இனிமே மூன்றாவது அணி பத்தி யோசிக்க ஆரம்பிக்கலாம் அல்லது குறைந்த பட்சம் திமுகவுடன் ஓட்டிக் கொண்டாவது இருக்கலாம்.

பாஜகவால் எனக்கு எந்த லாபமுமில்லைன்னு அம்மா சொன்னாலும் அது நிஜமில்லை. ஆனா, அதே சமயத்துல அதிமுகவால எந்த லாபமுமில்லைங்கிற நிஜத்தை புரிஞ்சுக்கிட்டு சவாரி பண்ணாம தனி ரூட் போட்டு கொஞ்சாமாவது வோட் பேங்க வெச்சுக்கிறதுதான பாஜகவுக்கு நல்லது

சினிமா மக்களை சீரழிக்குதுன்னு சொல்லி ஓவரா கவலைப்படாம, மத்த ஜாதிக்காரங்க ஓட்டை எப்படி கவர் பண்றது பத்தி யோசிக்கிறதுதான் பாமகவுக்கு நல்லது.

இனிமேலும் இலங்கைப்பிரச்சினையிலிருந்து பாலஸ்தீன பிரச்சினை வரை பேசி பிலிம் காட்டாம உள்ளூர் பிரச்சினையை பத்தி மட்டும் பேசி, திமுகவுல சேர்ந்து கலைஞருக்கு கை கொடுக்குறதுதான் வைகோவுக்கு நல்லது.

மத்த ஜாதிக் கட்சிகளை எதிர்க்கறதே முக்கியமான வேலையாக நினைக்காம தலித் மக்களை பத்தி ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிஜமான அக்கறையுடன் ஏதாவது செஞ்சாத்தான் திருமாவளவன், கிருஷ்ணசாமி கோஷ்டிகளுக்கு அரசியலில் எதிர்காலம்.

பின்குறிப்பு இது மீடியாக்காரங்களுக்கு....
நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகளை ரஜினியின் செல்வாக்கு பற்றிய அலசலாக முன்வைப்பதுதான் புத்திசாலித்தனம். குறைந்த பட்சம் திராவிடக்கட்சிகளின் அருட்கடாட்சம் கிடைக்கும். பாமகவின் ஆத்திரத்திலிருந்து தப்பிக்கலாம். எல்லாவற்றையும் விட சர்க்குலேஷனை ஜம்முன்னு ஏத்திப்புடலாம்!

Thursday, May 06, 2004

எப்படி இருந்த காவிரி....இப்படி ஆனதே!

ரெண்டு மாசத்துக்கு முந்தி வலைப்பூக்களில் கொஞ்சம் தண்ணீரோடு பார்த்த எங்க ஊர் காவிரி ஆத்தங்கரையின் லேட்டஸ்ட் ஸ்டேட்டஸ் இதுதான்!


Monday, May 03, 2004

சனிக்கிழமை ஒரு சாகசப் பயணம்!

ஓழுங்கா டிரெயின் புடிச்சு பழவந்தாங்கல் வந்து பாதயாத்திரை பண்ணியிருக்கலாம். சனிக்கிழமை சாயந்திரம் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்த ஆஞ்சநேயர், பஸ்க்கு வெயிட் பண்ணாம டிரெயின்ல வான்னு ஜடியா குடுத்திருக்கலாம். எப்பவாவது தானே வர்றான்னு கஷ்டப்பட்டு வரட்டுமேன்னு நினைச்சுட்டார் போலிருக்குது! நம்ம ஊர்ப்பக்கம் குக்குராமத்துல இருக்குற கோயிலுக்கு கூட ரெண்டே மணிநேரத்துல போய்ச் சேர்ந்த எனக்கு, சைதாப்பேட்டை பஸ்டாண்டுல 52L, ,52Mக்கு வெயிட் பண்ண நேரத்துல படையப்பா படத்தை இன்னொரு தபா பார்த்து முடிச்சிருக்கலாம்! கொண்டாட்டும் பார்த்துட்டு கிளம்பின நான் ஏழு மணி வரைக்கும் சைதாப்பேட்டை பஸ்டாண்டே கதிங்கிற மாதிரி நின்னுட்டிருந்தேன். ரெண்டு மணி நேரமா டைம் கீப்பர் தெரியாதுங்கிற ஒரே புராணத்தையே பாடிட்டிருந்தார். சனிக்கிழமை மாதிரியான நாட்களிலேயே இப்படின்னா மத்த நாள்ல பஸ்ஸ¥க்கு வெயிட் பண்ணியே பாதிவயசாயிடும் போலிருக்கேன்னு புலம்பிட்டிருக்கும் போதே வந்தே விட்டது. அதுக்கப்புறம் வந்த ஒரு அட்வென்ச்சர் ஜர்னியை மறக்கவே மடியாது. வாழ்க்கைன்னா மேடு, பள்ளம், குழப்பம், கூச்சல்னு எல்லாமே இருக்கும்னு அப்பத்தான் தெரிஞ்சுது! கிண்டி மேம்பாலத்திலேயே ஒரு பதினைஞ்சு நிமிஷம் டிராபிக் ஜாம். ஹைவேஸ்காரர்கள் வெட்டி வைத்த குழி, டெலிபோன்காரர்கள் வெட்டி வைத்த குழின்னு விவேக் அடுக்குறமாதிரி ரோட்டோரம் குழியா வெட்டி வெச்சதால் பஸ், ஆதம்பாக்கத்து இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட ஆரம்பித்தது ஒரு வழியா வானுவம்பேட்டை வந்து சேர்ந்தது. அதுக்கப்புறம் நங்கநல்லூர் போய் சேர்ந்து ஆஞ்சிநேயரை பார்க்கிறதுக்குள்ளே எட்டரை ஆயிடுச்சு. வரும்போது மறக்காம நடந்தே பழவந்தாங்கல் வந்து டிரெயின் புடிச்சு இருபதே நிமிஷத்தில் சைதாப்பேட்டை வந்து சேர்ந்தேன்.

ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர் மாதிரியான ஏரியாக்களில் ரோடே சரியில்லை. சென்னையின் பிஸியான குடியிருப்பு பகுதிகளில் இப்போதே இப்படின்னா திருவான்மியூர்-வேளச்சேரி-கிண்டி ரயில்வே லைன் கம்ப்ளீட் ஆகும் பட்சத்தில் இன்னமும் குழப்பம்தான் ஜாஸ்தியாகும். ஒரு காலத்தில் சென்னையின் மையப்பகுதியாக இருந்த சைதாப்பேட்டையிலிருந்து பஸ் வசதி குறைந்து கொண்டே போவது ஆச்சரியம். நங்கநல்லூரை விடுங்க.... கோயம்பேடு போகணும்னு நான் நினைச்சா குறைந்த பட்சம் ரெண்டுமணி நேரமாவது ஆகிவிடும். பஸ்ஸோட தரம், வசதியெல்லம் பத்தி கேள்வியே கேட்டுடாதீங்க. நானும் சென்னை, மும்பை, டெல்லி மூணு மெட்ரோ பஸ்ஸில் டிரிப் போன அனுபவம் எனக்கு உண்டு. ஒரே ஒத்துமை என்னான்னா மாகர பஸ்களின் கண்றாவி கோலம்தான். வெளிநாட்டிலிருந்து வர்றவங்க பளிச்சுன்னு கண்ணுல படுறது இந்த அழுக்கு கோலம் தான். பெங்களுர், ஹைதராபாத்திலும் இதே நிலைமைதான். கடலூரிலிருந்து மஞ்சக்குப்பம் போற பஸ் கூட லட்சணமா இருக்கு. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை போகும் தனியார் பஸ்ஸின் டெகரேஷன், ஆம்னி பஸ்ஸையே தோற்கடிச்சுடும். அதெல்லாம் வுடுங்க... பஸ் எப்படியிருந்தா என்ன.. டைமுக்கு வந்தாலே போதும்னு சென்னைவாசி நினைக்கிறான். என்னோட சமீபத்திய அனுபவத்துல அது நியாயமான விஷயம்னுதான் தெரிஞ்சுகிட்டேன்!