Wednesday, June 30, 2004

கருப்புச் சட்டைகளின் கன்னித் தீவு கதை

காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா? தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்குமா? ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்கிற லிஸ்ட்டில் சேருமோ என்கிற சந்தேகத்தில் இருந்தது - உயர்நீதி மன்ற கிளையை மதுரையில் ஆரம்பிச்சுடுவாங்களா? மாதாமாதம் ஒரு தேதியை சொல்வார்கள். அந்த தேதியில் ஒன்றுமே நடக்காது. திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது என்றுகூட டிவியில் சொல்ல மாட்டார்கள். நாகர்கோயிலில் ஒருத்தனை வெட்டிவிட்டு சென்னை வரை கேஸ் சம்பந்தமாக அலைய நேருவது என்பது கிட்டதட்ட ஆயுள் தண்டனையை அனுபவிப்பது மாதிரிதான். உயர்நீதிமன்றத்தின் கிளை சென்னையிலேயே இருக்கும் பட்சத்தில் சமானியர்களுக்கு மேல் முறையீடு என்பதெல்லாம் காஸ்ட்லி சமாச்சாரம்.

மதுரையில் ஒரு கிளை வரப்போகிறது என்கிற அறிவிப்பை பார்த்ததுமே பலருக்கு கிலி வந்துவிட்டது. முதலில் உயர்நீதிமன்ற ஊழியர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பு வந்தது. ஜூனியர்களும், இன்னும் திருமணமாகதவர்களும் மதுரைக்கு மூட்டை கட்டியே ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்லி கிட்டதட்ட மிரட்டி வைத்தார்கள். பெரும்பாலான ஊழியர்கள் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் பிரச்சினை பெரிதாகவில்லை. ஏற்கனவே நிறைய கேபின்கள் காத்து வாங்குவதால் நீதிபதிகளை மதுரைக்கு அனுப்புவதிலும் ஒரு பிரச்சினை. நடுவே சம்மர் ஹாலிடேஸ் வேறு வந்து தொலைத்தது. ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து வந்தால் இப்போது வழக்கறிஞர்களின் போராட்டம்.

கன்னியாகுமரியிலிருந்து ஆரம்பித்து கொள்ளிடம் வரைக்கும் உள்ள மாவட்டங்கள் மதுரை கிளையின் வரம்புக்குள் வருகின்றன. வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், கோவை, வேலு¡ர் போன்ற மாவட்டங்களும் சென்னையை சேர்ந்த பகுதிகள் மட்டும்தான் சென்னை உயர்நீதிமன்ற கிளையின் வரம்புக்குள் வருகின்றன. மதுரைக்கு மாற்றக்கூடாது என்று சென்னை வழக்கறிஞர்களும் மதுரை கிளையை உடனே ஆரம்பிக்க வேண்டுமென்று மதுரை பகுதி வழக்கறிஞர்களும் போராடுகிறார்கள்.

சரி, இதில் வழக்கறிஞர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்? கிளையண்டுக்கு நல்ல காலம்னா வக்கீலுக்குதான் கஷ்டகாலமாச்சே!

தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில்தான் கலவரம், வெட்டு குத்து எல்லாம் அடிக்கடி நடந்து கிரிமினல் வழக்கெல்லாம் ஜாஸ்தியா இருக்குமாம். நம்ம பொழப்பை கெடுக்கிறாங்கப்பான்னு சென்னை வக்கீல்களுக்கு ஒரு ஆதங்கம். நம்ம பொழப்பை இன்னும் கெடுக்கிறாங்களேன்னு மதுரை வக்கீல்களுக்கு ஆதங்கம். அட தேவுடா! கருப்பு சட்டைங்க கிட்டேயிருந்து மக்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்!

Saturday, June 26, 2004

படித்ததும் கேட்டதும்

முதல்ல ஒரு சந்தோஷமான விஷயம். அதிகாலை ஏழரை மணிக்கே பாரா ஸாருக்கு அப்பாவாக ஆண்டவன் பிரமோஷன் குடுத்த மேட்டர் தெரிஞ்சது. பாராட்டுக்கள் பாரா ஸார்... வாழ்த்த வயதில்லைன்னாலும்...!

அடுத்த ஒரு ஆச்சரியமான விஷயம். எப்பவும் ஜூனியர் விகடன் வாங்கினவுடனே கழுகார், பூனையார்னு ஒரு ரவுண்டு வந்தப்புறம்தான் மதனோட ஏரியாவுக்கு வருவேன். அது தப்புன்னு இன்னிக்குதான் தெரிஞ்சது. இன்னிக்கு வந்த இஷ்யூவில் அட்டகாசமான ஒரு மேட்டர் சொல்லியிருக்கார் மதன். Pre Frontal Cortex!

முன்கோபம் - இப்பெல்லாம் பெருமைக்குரிய விஷயமா மாறிடுச்சு இது! 'ஸாருக்கு... ஷார்ட் டெம்பர்' அப்படீன்னு சொல்லி பில்டப் குடுக்கிறது இங்கே சகஜமப்பா...! அரசியலுக்கு வந்தே ஆகணும்னு முடிவோட இருக்குற நம்மூர் ஹீரோக்களுக்கு அடிக்கடி வரும் விஷயமிது. எனக்கு முன்கோபம் ஜாஸ்தின்னு சொல்றதுல யாருக்கும் எப்பவும் தயக்கமோ கூச்சமோ இருக்கிறதில்லை. அதுதான் ஏன்?

முன்கோபத்துக்கு காரணம் வளர்ந்த சூழல் அல்லது சைக்காலஜிக்கல் சங்கதியா இருக்கும்னுதான் இன்னிக்கு வரைக்கும் நினைச்சிட்டிருந்தேன். மதன் pre Frontal Cortexதான் அதுக்கு காரணம்னு சொல்றார்.

பகுத்தறிவு (கருப்புச்சட்டைக்காரர்கள் ஞாபகத்துக்கு வருதா? ஆனா, இது வேற) அதாவது பகுத்தறியும் திறன் வந்தவுடன்தான் மனுஷனின் மூளைக்கு முழு வளர்ச்சி கிடைச்சுதாம். சிந்திக்கும் சக்தி வந்த பின்னாடி மனுஷனுக்கு உணர்ச்சிகளை கண்ட்ரோல் பண்ண முடிஞ்சதாம். கண்ட்ரோல் யூனிட் இருக்குற இடம் மூளையின் முன்பகுதிதான். இதுக்குதான் Pre Frontal Cortexன்னு பேரு. எதையும் யோசித்து பார்க்குறதுக்கு இதுதான் காரணமாம். இவன் கூட சண்டை போட்டா நமக்கு ஆப்பு வெச்சுடுவான்னு சிலபேருகிட்டேயிருந்து ஜகா வாங்குறோமில்ல.. அதுக்கு இதுதான் காரணமாம்!

இனிமே யாராவது 'ஏய்... எனக்கு முன்கோபம் ஜாஸ்தி'ன்னு டயலாக் வுட்டா, நெத்தியை சுருக்கி என் கருப்பு மூஞ்சியை சுளிக்க வைக்கப் போறேன். நீங்க எப்படி?

Friday, June 18, 2004

மோட்சம்

மறு பிறப்பு, மோட்சம் போன்றவற்றிற்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்தாகவேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார் காந்திஜி.

'கடவுளே இல்லையென்றால் மோட்சம் எப்படி இருக்க முடியும் என்று கேட்பது மோட்சத்தை புரிந்து கொள்ள தவறுவதாகும். மோட்சம் என்பதன் பொருளின் ஒரு பகுதியைத்தான் நம்மால் கிரகிக்க முடியும்; மீதியை அனுபவத்தால்தான் அறிய வேண்டும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முடிவற்ற பல்வேறு ஜன்மங்களை எடுப்பதிலிருந்தும் அதன் விளைவான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுதல் என்பது அதன் பொருள். ஆனால், கடவுள் இருக்கிறார் என்பதை மறுப்பது தேவையில்லை.

தமிழோவியத்தில்

Thursday, June 17, 2004

இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்

திங்கட்கிழமை (14.06.2004) ஆம்பூரில் இஸ்லாம் புத்தகத்துக்கு வெளியீட்டு விழா, நீ பேசறீயா என்று பா.ராகவன் கேட்க, ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன். புத்தகம் சென்ற புதன்கிழமை என்னிடம்
வந்தது. வெள்ளியிரவுதான் தொட முடிந்தது. 560 பக்கங்கள். குட்டி சைஸ் தலையணை. திங்கட்கிழமை ஆம்பூர் போய்ச் சேரும்வரை படித்துக்கொண்டே இருந்தேன். தேர்வுகளுக்குக் கூட இப்படி படித்திருக்க
மாட்டேன்!!!

ஆனால், அற்புதமான வாசிப்பு. எளிமையான மொழியில், மதரீதியான பிரயோகங்களைப் பெருமளவு குறைத்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், ஒரு முக்கியப் பணியைச் செய்யவே உருவாகியிருக்கிறது.

இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் உலவும் பல்வேறு தவறான எண்ணங்கள்,கருத்துக்களுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது.

1. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
2. திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா?
3. இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை. உண்மையா?
4. இஸ்லாம் அடிமைத்தனத்தைப் பேணுகிறது. உண்மையா?
5. இஸ்லாத்தில் கவிதைக்கு இடமில்லை. உண்மையா?

மிகமிக விரிவாக, ஒவ்வொரு கேள்வியை எடுத்துக்கொண்டு, இந்தக் கேள்வி தோன்றியிருக்கக்கூடிய பின்னணி, அதனுடைய டிப்படையின்மை, பொருத்தமின்மை ஆகியவைகளை, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் துணையோடு தெளிவுபடுத்தியிருக்கிறார், இதன் ஆசிரியரான நாகூர் ரூமி.

இதில் உள்ள தர்க்க நியாயங்களை நீங்கள் படித்துத்ரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வதைவிட, ரூமி சொல்வதை நீங்கள் படித்தால்தான் அதன் நுட்பங்கள் புரியும். என்னை சிந்திக்கத் தூண்டியது, ரூமியின் உழைப்பு. எத்தனை எத்தனை எத்தனை மேற்கோள்கள், உதாரணங்கள், கருத்துக்கள். எண்ணற்ற நூல்களின் ஆழ்ந்த வாசிப்பே, இந்த நூலை எழுத வைத்திருக்கிறது.

அத்துடன், எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம், தொனி. படிப்பவனை மாற்றிவிடவேண்டும் என்ற துடிப்பெல்லாம் இந்த எழுத்தில் இல்லை. இதுதான் உண்மை. உங்கள் தவறான அபிப்பிராயங்களை இங்கே உரசிப்
பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தமுறை, "இஸ்லாமிய தீவிரவாதி" எங்கேனும் எழுதும்படியோ படிக்கும்படியோ நேருமானால், அதற்குள் இருக்கும் முரண் சட்டென எனக்கு உறைக்கும். அதற்கு நிச்சயம் நான் ரூமிக்கே நன்றி சொல்வேன்.

இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்
நாகூர் ரூமி
கிழக்குப் பதிப்பகம்
16 கற்பகாம்பாள் நகர்
மயிலாப்பூர்
சென்னை 4
விலை ரூ.200/-


நன்றி - வெங்கடேஷ், சென்னை

Wednesday, June 16, 2004

அப்துல் கலாமின் ஆத்மா!

தலைவர்கள் என்றாலே அரசியல் தலைவர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்கிற காலத்தில் ஒரு பெரிய தலைவரால் அரசியல் பேசாமலே இருக்கமுடியுமாங்கிற ஆச்சரியத்தை அடிக்கடி கொடுத்துட்டு வர்றவர் நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம். லேட்டஸ்டா ஒவ்வொருத்தரும் குறைந்த பட்சம் 5 பேர் படிக்க ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்னு சொல்லியிருக்காரு. கூடவே மரம் வளர்க்கவேண்டும், ஆண் பெண் பாகுபாடு கூடாதுன்னும் சொல்லி இதையெல்லாம் செஞ்சாலே நாட்டை கட்டியமைப்பதில் பெரிய ரோல் செஞ்ச மாதிரிதான் சொல்லி உற்சாகப்படுத்துறாரு. ஒவ்வொரு நாளும் குறைந்தது அஞ்சு லட்சம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்கு போகும் பழக்கமிருப்பதால் அதில் ஒரு 10 சதவீத பேர் இதுமாதிரி செய்ய ஆரம்பித்தாலே போதும். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் என்கிறார். இதையெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் ஒரு அறிவிப்பாகவே வைக்கவேண்டும் என்கிறார். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதுமாதிரி சிந்திக்க முடியும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு அட்வைஸ் பண்றதுக்காவது ஒரு தலைவர் நமக்கு வேண்டுமே! அசத்துறீங்க அப்துல் கலாம் ஸார்!

மகாத்மா காந்திஜியின் ஆத்மா... தமிழோவியத்தில்

Monday, June 14, 2004

தவிக்கும் தலித்தியம்

மறுபடியும் மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சிகளாலும் தீண்டத்தகாத கட்சிகளாகியிருக்கின்றன தலித் கட்சிகள். 1980 முதல் ஜாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியல்வானில் ஆக்ரமித்து வந்தாலும் தலித் கட்சிகளுக்கு மட்டும் தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததற்கு தெளிவான காரணங்கள் தென்படாவிட்டாலும் திராவிடக் கட்சிகளின் கருணைப் பார்வை கிட்டாததை முக்கியமான காரணமாக சொல்ல முடியும். எண்பதுகளில் வன்னியர் சங்கமாக தொடங்கப்பட்டு தமிழக அரசியல் வானில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இன்று பாமக உருவெடுத்திருப்பதற்கு திராவிடக் கட்சிகளுடனான அதன் அணுகுமுறையே காரணம். 1916ல் நீதிக் கட்சியால் தொடங்கப்பட்ட சுய மரியாதை இயக்கம் பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் அரங்கிற்கு கொண்டுவந்தாலும் அடுத்து வந்த 50 ஆண்டுகளில் இனம், மொழி, பொருளாதார விஷயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டதால் ஜாதீய ஏற்றத்தாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. திராவிடக் கட்சிகளின் பிராமணீய எதிர்ப்பு என்பது ஜாதி அடிப்படையிலான சமூகத்தை மாற்றுவதற்கு அல்ல; அதிகாரத்தை பிடிப்பதற்கு மட்டும்தான் என்பதை தலித் மக்கள் புரிந்து கொள்வதற்குள் திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாத சக்தியாக ஆகிவிட்டன.

தொடர்ந்து படிக்க... தவிக்கும் தலித்தியம்.. திசைகள் - ஜூன் 2004

Thursday, June 10, 2004

கீதை காட்டும் கிருஷ்ணர்

'வரலாறு காட்டும் கிருஷ்ணரும், கீதை உபதேசம் செய்யும் கிருஷ்ணரையும் நாம் ஒன்றுக்கொன்று குழப்பிக் கொள்கிறோம். கீதையின் கிருஷ்ணர்
வன்முறை, அகிம்சை என்கிற பிரச்சினைகளை பற்றி விவாதிக்கவில்லை. மற்றவர்களை கொல்வதை அர்ஜூனன் பொதுவான முறையில் வெறுக்கவில்லை. தனது சொந்த உறவினகர்களை கொல்வதையே பெறுத்தான். ஆதலால் ஒருவன் தனது கடமையை செய்யும் போது உறவினர்களை மற்ற மக்களிலிருந்து வித்தியாசமாக நடத்தக்கூடாது என்று கிருஷ்ணர் அறிவுரை கூறினார். போர் தொடுக்கலாமா தொடுக்கக்கூடாதா என்கிற பிரச்சினையை கீதையின் காலத்தில் முக்கியமானவர்கள் யாரும் எழுப்பவில்லை. சமீபகாலத்தில்தான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக தோன்றுகிறது.

காந்தீய விழுமியங்கள் : கீதை காட்டும் கிருஷ்ணர்

Friday, June 04, 2004

துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்

சோ எடுத்த தேர்தல் நிலைப்பாடு பற்றிய பொது ஜனத்தின் கமெண்ட்

'மக்கள் இந்த ஆள் ஏன் எழுதறான். எதுக்காக எழுதறான். யாருக்காக எழுதறான்னே இத்தனை நாள் புரியாம இருந்துச்சு. இப்போதானே தெரியுது. தானே எழுதி, தானே படிச்சுக்கறான்யா அவன்!'

*****************************************************************

பொன்னையன் -

'ரேஷன் கடையில் அரிசி இலவசம், மின்சாரக் கம்பியிலிருந்து யார் வேண்டுமானாலும் கரண்ட் இழுத்துக் கொள்ளலாம், அரசு ஊழியர்கள் வேலைக்கு வரத் தேவையில்லை-சம்பளம் மாதாமாதம் மணியார்டரில் அனுப்பி வைக்கப்படும், ஆடு கோழி பலி போல யாருக்காவது வேண்டுதால் இருந்தால் அவர்கள் நரபலி கொடுக்கலாம், போன் செய்தால் அரசு பஸ் வீடு தேடி வரும்- பயணம் இலவசம்ம்னு நீங்க போட்ட உத்தரவையெல்லாம் ஒரு பட்டியலா எழுதிட்டேம்மா... பாக்கறீங்களா?'

ஜெ -
'இதையெல்லாம் செஞ்சு அடுத்த எலெக்ஷன்ல ஜெயிச்சா, சரி. ஜெயிக்கலேன்னாலும் கவலையில்லை. அடுத்து ஆட்சிக்கு வர்றவங்க நல்லா மாட்டிகிட்டு சாவட்டும்! நமக்கென்ன!'

Thursday, June 03, 2004

கலைஞருக்கு முத்துவிழா!
முத்துவேலர் கருணாநிதிக்கு இன்று முத்துவிழா. வாழ்த்த வயதில்லையென்றாலும் தமிழினத்தின் மூத்த தலைவரை வணங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!

Cross Talk!

நேத்து இவன் ஏணி
இன்று இவன் ஞானி
ஆளை கரை சேர்க்க
ஆடும் நல்ல தோணி!

சொந்தமே ஒரு வானவில்
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்...
வேப்பிலை கருவேப்பிலை
அது யாரோ...
நான் தானோ?

Tuesday, June 01, 2004

அடுத்த '10' படங்கள்!

முன்னாடியே நான் ஜகா வாங்கிட்டேன். ரஜினி படங்களை தவிர நான் அதிகமா வேற சினிமா எதுவும் பார்த்ததில்லைன்னு! நான் பார்க்காத நல்ல படங்களின் காட்சிகள் டிவியில் வரும்போது எனக்கும் ஆர்வமாகத்தான் இருக்கும். முக்கியமாக காமெடி காட்சிகள்! நான் போட்ட லிஸ்ட் எல்லாத்துக்கும் உள்ள ஒரே ஒத்துமை... எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்க சலிக்காததுங்கிற ஒரே விஷயம் தான்!

இப்போ டாப் டென்!

10. ஸ்ரீராகவேந்திரர்

தமிழ் சினிமாவில் பக்திப் படம் என்றாலே சிவாஜி நடித்த புராணப் படங்களும், ராமநாரயணன் காலத்து கிராபிக்ஸ் கலக்கல்களும்தான் ஞாபத்துக்கு வரும். பெரும்பாலும் அவை கடவுளர்களின் மகியையும், பக்தர்களுக்கு தரும் சோதனைகளையுமே மையப்படுத்தியிருப்பார்கள். பக்திப் படமாக இருந்தாலும் அவற்றிலும் டூயட், சண்டை, காமெடிக்கு பஞ்சமிருக்காது. மகான்கள், ரிஷிகள் பற்றி வந்த படங்களெல்லாம் ரொம்ப கம்மி. முடிந்த அளவு ராகவேந்திரரின் அற்புதங்களை தவிர்த்துவிட்டு இயல்பாக சொல்ல முயற்சித்த வகையில் இது வித்தியாசமான படம். பதினெட்டு வரிகளில் ராமகாவியத்தை வாலி சுருக்கமாக சொல்லி கலக்கியிருப்பார்...ஜேசுதாஸின் உதவியுடன்!

9. வீடு

சொந்த வீடு கட்டும்போது எல்லோரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்னு இதை சொல்லலாம். கல்யாணம் செய்வதை விட கஷ்டமான காரியம் வீடு கட்டுவது. ஒரு வீடு கட்டும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை ரொம்ப சிம்பிளாக காட்டி நடப்பதை அப்படியே காமிராவில் பிடிப்பது என்கிற விஷயத்தில் தெளிவாக இருந்து பாலுமகேந்திரா அசத்தியிருப்பார். தள்ளாத வயதில் வீடு கட்டுவதற்காக தானும் கஷ்டப்பட்டு கலங்க வைக்கும் சொக்கலிங்க பாகவதரின் நடிப்பு ஏ ஒன். கிளைமாக்ஸில் ஆசையெல்லாம் நிராசையாகும்போது மனசு கொஞ்சம் பாரமாகும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தானிருக்கும்!

8. மூன்று முடிச்சு

கமலும் ஸ்ரீதேவியும் துணி துவைக்கும் காட்சியிலேயே கதையின் முடிச்சை அவிழ்த்துவிடுகிறார் கே.பி. தமிழ் சினிமாவின் வில்லனை அழாத, பயப்படாத, நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத பாத்திரமாகவே காட்டி பழக்கப்படுத்திவிட்டவர்களுக்கு யதார்த்தமான, வித்தியாசமான நடிப்பின் மூலம் மக்களிடமிருந்து கைதட்டல் வாங்கிய ரஜினி ஒரு பெரிய ஆச்சரியமாக இருந்தார் என்றால் அதற்கு காரணம் கே.பி டச்! 'மன வினைகள்' கண்ணதாசனும் பின்னணி இசையில் எம்.எஸ்.வியும் அசத்தியிருப்பார்கள்.

7. உன்னால் முடியும் தம்பி


வெறும் நல்ல விஷயங்களை மட்டுமே பாஸிடிவாக சினிமாவில் காட்ட முடியாது என்கிற நினைப்பை கே.பியும், கமலும் தூக்கி கடாசியிருப்பார்கள். கமலின் உதயமூர்த்தி பாத்திரம் மீது எனக்கொரு பொறாமையே உண்டு. ஏதோ முடிக்கவேண்டுமே என்பதற்காக வரும் கிளைமாக்ஸை போல இல்லாமல் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து அசத்தியிருப்பார்கள். 'முதல்வனு'க்கு அடுத்தது ரஜினி மிஸ் பண்ணிய படம் எதுவென்றால் இதைத்தான் நான் சொல்வேன். கடைசிக்காலம் வரைக்கும் மரம் நடுவதேயிலேயே குறியாக இருக்கும் அந்த தாத்தா கேரக்டர் இன்னும் மனசுக்குள்ளே இருக்கிறது.

6. முகம்மது பின் துக்ளக்

தமிழ்நாட்டு அரசியல் பத்தி அலட்டிக்காமல தெரிஞ்சுக்கணும்னா இதை அவசியம் பார்த்தே ஆகணும். பக்கா அரசியல் படத்தையும் படு காமெடியாக தரும் துணிச்சல் சோவுக்கு மட்டுமே உண்டு. இப்ப மட்டுமல்ல ஒரு 30 வருஷம் கழிச்சு பார்த்தாலும் படத்தின் காட்சிகள் அன்றைய அரசியலுக்கு பொருத்தமாகத்தான் இருக்கும். எந்தக் கட்சியையும் விட்டுவைக்காமல் சகட்டு மேனிக்கு சகலரையும் சோ வறுத்தெடுத்த காலம் அது!

5. தண்ணீர் தண்ணீர்


இருபது வருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் சினிமாவின் 'லகான்'. எத்தனையோ கிராமத்து ராசாக்கள் இருந்தாலும் கே.பியின் இந்தப்படம் மாதிரியான நிஜமான கிராமத்தை யாருமே காட்டியதில்லை. தண்ணீர் பிரச்சினையை பற்றி மேடையில் முழுங்குபவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய பாடம். கோமல் சுவாமிநாதனின் டயலாக்கும் அவரது டயலாக் டெலிவரியும் மெச்சப்பட வேண்டியவை. ஒரு குடம் தண்ணீரை சினிமா மோகத்தால் சிதறடித்துவிட்டு அழும் சிறுவன் வரும் ஆரம்பக்கட்சிகளில் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும். ஒரு நெகடிவ் அப்ரோச் இருந்தாலும் ரியாலிடி சினிமா என்ற பெயரில் நம்மை இம்சை படுத்துபவர்களுக்கு இதை அவசியம் பார்க்க வேண்டிய படம்.

4. பாபா


'உழைப்பாளி'யிலேருந்து 'பணக்காரன்' வரைக்கும் எல்லாமும் ஓடியிருக்கும்போது இது ஏன் தோத்துப்போனதுங்கிறதுக்கு இன்னிக்கு வரைக்கும் உருப்படியான பதில் கிடைக்காதது ஒரு ஆச்சரியம். 'அருணாச்சல'த்தோடு வந்திருக்கவேண்டிய படம் ரொம்ப லேட்டா வந்ததுதான் பிரச்சினையோ? ஆன்மீகம்னா ஏதோ பெரிய விஷயம்; அதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படணும்னு சொல்லி ஓதுங்கிறவங்கதான் ஜாஸ்தி. இப்படியும் ஆன்மீகத்தை நடைமுறை வாழ்க்கையில கொண்டுவரலாம்னு ஒரு அருமையான விஷயத்தை சொல்ல வந்த படம். எந்தப் படத்திலும் இல்லாமல் இந்தப்படத்தில்தான் ரஜினி நிறைய விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லி ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது!

3. தில்லு முல்லு


ஓரு ஆக்ஷன் ஹீரோவை நம்பி தம்மாத்துண்டு மீசையை வெச்சுக்கிட்டு ஆள்மாறாட்டம் காமெடியை இந்தியிலிருந்து இறக்குமதி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைத்த கே.பியின் வித்தியாசமான படம்! விசுவின் வசனமும் ரஜினியின் நடிப்பும் கே.பியை ஓரங்கட்டியதை சொல்லியே ஆகவேண்டும். சைலண்டாக எழுந்திரிச்சு கண்ணாடியின் முன்னாடி நின்னு உனக்கு இது தேவையான்னு கேட்டு தலையணையில் முட்டிக் கொண்டு ரஜினி காட்டும் டென்ஷன் படு நேச்சுரல்...இன்னிக்கும்!

2. பாட்ஷா

ரஜினி என்கிற தனிப்பட்ட நடிகரின் செல்வாக்கை உச்சிக்கு உயர்த்திய படம். ரஜினி ரசிகர்களின் ஓட்டுமொத்த ஒரே சாய்ஸ். 'ஹம்' அளவிற்கு பண்ணினாலே பெரிய விஷயம்னு நினைச்சிட்டிருந்தவனின் புருவத்தை உயர வைத்தது மட்டுமல்லாமல் எப்போது பார்த்தாலும் பூஸ்ட் குடிச்ச எபெக்டை தரும் ஒரே படம். ரசிகர்களை தாண்டி மக்களையும் எனர்ஜிடிக்கா உணர வைத்து இளைய தலைமுறை நடிகர்களுக்கு பெரிய இன்ஸ்பிரஷேனாக இன்னும் இருக்கும் படம்.

1. முள்ளும் மலரும்

புரட்சிகரமான கதையமைப்போ, இழுவையான காட்சிகளோ இல்லாத தமிழின் முழுமையான யதார்த்த சினிமாவாக இதைச் சொல்லலாம். சண்டைக் காட்சியிலிருந்து சோகக் காட்சி வரை எதையும் மிகைப்படுத்தாமல் எப்போது பார்த்தாலும் உறுத்தாத ஒளியமைப்பு நம்முடைய பேரனையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். மகேந்திரன், ரஜினிகாந்த், இளையராஜா, பாலுமகேந்திரா, ஷோபா என பல பெரிய கைகளின் திறமைக்கு முழு தீனி போட்ட படம். இதைப் பத்தி அதிகமாக எழுதவேண்டிய அவசியமேயில்லை. படத்தை ஓட வைத்ததற்கு எம்ஜிஆரிலிருந்து கமல் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்!