Saturday, July 31, 2004

காந்தீய விழுமியங்கள்

...ஆரிய சமாஜம், இந்து மதத்தின் ஒரு பகுதியென என்னைப்போல ஆரிய சமாஜிகளும் நம்பினால் இந்துக்களை, இந்து தருமங்களை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். சகிப்புதன்மை என்பதை கருத்துக்கள் ஒன்றுபடுவது என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் சமாஜிகள். சகிப்புத்தன்மைக்கு அதெல்லாம் தேவையில்லை. ஆரிய சமாஜம், தனது சமூக சீர்திருத்த நடவடிகைக்கைகளை துரிதப்படுத்தி தேசிய, மத இயக்கங்களுக்கு உதவ வேண்டும் என்பதால் தான் குறை கூறினேன். ஆரிய சமாஜிகளின் நோக்கத்தை குறுகியதாக வைத்துக்கொள்ளாமல் விசாலாமாக்குவர்களேயானால் ஆரிய சமாஜத்திற்கு எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

தொடர்ந்து படிக்க... தமிழோவியத்தில்

Thursday, July 29, 2004

தலைகீழ் விகிதங்கள்!

பாமர நடையிலும் சரி, பட்டணத்து புரொபசர் நடையும் சரி வெளுத்து வாங்கிறார் இராம.கி வாத்தியார். சாம்பிளுக்கு சில.

"பணம்'னா என்னாண்ணே?"

"என்ன கேள்வி இது இந்த நேரத்துலே? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே, நீ¦ என்ன நக்கல் பண்றியா? 'ஏதோ கிடைச்ச வேலையைச் செய்ஞ்சமா, பணத்தைச் சம்பாரிச்சமா, செலவு பண்ணமா'ன்னு இல்லாம இப்படிக் கேள்வி கேட்டு என்னத்தைக் கண்டே? தவிர, இதெல்லாம் இங்கிலீசு படிக்கலைன்னா யாருக்குத் தெரியும்?"

"அண்ணே, அப்படிச் சொல்லாதீக, என்னன்னு தெரியாமலேயே, விளங்காமலேயே, ஒண்ணைப் புழங்கிட்டு இருந்தா, நம்மளை முட்டாப் பயகன்னு சொல்லமாட்டாய்ங்க? அன்னாடம் புழங்குறதுக்கு, இதையெல்லாம் புரிஞ்சுக்குற தேவை இல்லைதான். அதுக்காக இப்படி நெடுகப் புரியாமலே இருந்தா, இந்தக் காலத்திலே குப்பை கொட்ட முடியுமா? நம்மளத் தூக்கிச் சாப்பிட்ற மாட்டாய்ங்க! வாழ்க்கையிலே பொருளாதாரம், பணம்கிறது புரியணும்ணே! எல்லாம் இங்கிலிசுலே படிச்சாத்தான் முடியும்னு நாமளும் சும்மா இருந்துட்டோம்; அப்படி ரொம்ப நாளைக்கு இருக்கப்படாது."

http://www.thinnai.com/pl0520048.html

மானுறுத்தம் என்று சொல்லும் போது, "சில பொருள்கள் நேரடியாக மானுறுத்தத்தில் உள்ளே சேருகின்றன, சில பொருள்கள் நேரடியாகச் சேருவதில்லை" என்று நாம் அறிவோம். இதனால் ஓராண்டின் மானுறுத்தக் கொளுதகையை (manufacturing cost) அல்லது செலவை ஆண்டிற்கான நேரடி மானுறுத்தக் கொளுதகை (annual direct manufacturing cost), நேரிலா மானுறத்தக் கொளுதகை (annual indirect manufacturing cost) என இரண்டு கொளுதகைகளின் கூட்டுத் தொகையாய் பார்க்க வேண்டும்.

ஆண்டின் நேரடி மானுறுத்தக் கொளுதகை என்பது பொருள்களை உருவாக்கும் புதுக்க இயக்கத்தில் (production operation) நேரடியாய் நடக்கும் செலவு. சரி, இதில் ஏதெல்லாம் அடங்கும்? இந்தச் சரவரிசை கொஞ்சம் நீளமானது. கீழே வருவதைப் படிக்குமுன் சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முதலில் வருவது, நம் வளாகத்திற்குள் கொண்டுசேர்க்கும் வரையில் ஆகும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் சேர்ந்த இயற்பொருட்களுக்கான செலவு (expenses on raw materials till delivery);

Courtesy : http://valavu.blogspot.com

Wednesday, July 28, 2004

டிக்கெட்டோபியா!

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கும் நடராஜா சர்வீஸை நம்பியிருப்பவர்களுக்கும் இந்த வியாதி வரவே வராதுன்னு தலையிலடிச்சு சொல்லலாம். பஸ்ஸில் உள்ளே நுழைந்ததும் ஐம்பது ரூபாயை நீட்டினால் கண்டக்டர்  புன்னகையை தொலைப்பார். சிடுசிடு கண்டக்டர் கொடுக்கிற டிக்கெட்டை வாங்கிறதுங்கிறது சத்தியமா ஒரு தனி கலை. சென்னைக்கு வந்த புதுசில் இந்த வித்தை தெரியாமல் டிக்கெட்டை காற்றில் பறக்கவிட்டபோதுதான் பேட்டையின் பிரபல கெட்ட வார்த்தை எனக்கு பரிச்சயமானது. அதற்கப்புறம்தான் நண்பனின் மூடுமந்திரம் வொர்க் அவுட்டானது. 'டிக்கெட்டை எந்த கண்டக்டரும் கையில தரமாட்டான்டா. திணிப்பான். நீதான் சரியாக புடிச்சுக்கணும்'

கண்டக்டர் எச்சில் தடவி மேப் போட்ட டிக்கெட்டை வாங்கி மேல் சட்டை பாக்கெட்டில் வெச்சுக்கறதுதான் நம்ம பழக்கம். நெருக்கியடிக்கிற கூட்டத்தில் இடுப்பையே (சத்தியமா என் இடுப்புதானுங்கோ!) தேட முடியாதபோது பாண்ட் பாக்கெட்டை எங்கே தேடுறது? வாராவாரம் அழுக்குச் சட்டையை தண்ணியில் முக்கி எடுக்கும்போது கொச கொசவென பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், சிவப்பு என சகல வர்ணங்களிலும் சட்டை பாக்கெட்டில் முத்திரை குத்தப்பட்டிருக்கும். ட்ரீட்மெண்ட் குடுக்கிறதுக்கு மிஸ்டர் ரின் இல்லாட்டி மிஸ்டர் வொயிட்தான் வரணும். வந்தாலும் ரொம்ப நேரம் மல்லு கட்டியாகணும். சரி, வாங்குற டிக்கெட்டை எங்கேதான் வெச்சுக்கணும்? இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாத சங்கதி.

மட்டமான பிரிண்டிங் குவாலிட்டியோட தம்மா துண்டு சீட்டை எவன் கண்டுபிடிச்சதுன்னு எக்குதப்பா கேள்வி கேட்க உங்களுக்கும் தோணும். ஆனா, பஸ்ஸை விட்டு இறங்கினதும் எல்லா மறந்துடும். மறக்காம அந்த டிக்கெட்டை¨யும் எடுத்து கடாசிட்டா பிரச்சினையில்லைதான். ஆனா, யாரு ஞாபகம் வெச்சுக்கிறது? அஞ்சு ரூபா டிக்கெட் வாங்கிட்டு சைதாப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் போனாலே பிரமாதமான சைஸ்ல கெட்டியான கடிதாசியில டிக்கெட் தர்றானுங்க நம்ம லல்லுவோட சிஷ்யனுங்க. ஆனால், நூத்து பத்து ரூவாய்க்கு மாயவரத்துக்கு டிக்கெட் வாங்குனாலும் இந்த மாதிரி மஞ்சள், பச்சை கலர் ஜிங்குசான்னு காத்துல பறக்குற மாதிரி ஒரு டிக்கெட்டை கொடுத்து அதையும் கஷ்டப்பட்டு ஒரு எட்டு மணி நேரமாவது பத்திரமா வெச்சுக்கிறது சாதாரண விஷயமா என்ன? ராத்திரி நேரத்துல அவசரத்துக்கு எங்க இறங்கினாலும் பாக்கெட்டை தொட்டு இருக்குதா இல்லையான்னு பத்திரமா பார்த்துக்கிட்டே இருக்கணும்.  தாம்பரம் வர்றதுக்கு முன்னாடியே எப்பவாது செக்கிங் இன்ஸ்பெக்டருங்க வேற நம்ம கோழி தூக்கத்தை கலைச்சுட்டு இந்த வஸ்து இருக்குதான்னு அதிகாலை நேரத்துலேயும் பொறுப்பா கடமையை கவனிப்பாங்க.

என்னதான் இண்டர்நெட்டு, கம்ப்யூட்டரு, தஸ்சு புஸ்சு இங்கீலசுக்காரங்க வந்தாலும் இதெல்லாம் மாத்த முடியாத சமாச்சாரம்னு நினைச்சு நானும் நொந்துகிட்டு டிக்கெட் வைச்சுக்கிறதுக்கு ஒரு இடத்தை தேடிக்கிட்டேயிருக்கேன். நல்ல இடமா தெரிஞ்சா நீங்களும் எனக்கு சொல்லுங்க பாஸ்!

Monday, July 26, 2004

சிங்கார சென்னை டூ சிங்கப் பெருமாள் கோயில்மதம் என்பதை வெறும் கோட்பாடாகவோ அல்லது கருத்தியலாகவோ கருதும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இல்லை. மதம் என்றாலே சடங்குகளும் நம்பிக்கைகளும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. ஓட்டு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகளுக்கோ மதம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.  உண்மையான நாத்திகம், மதத்தின் பெயரால் நடக்கும் சடங்குகளை விமர்சிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் மதத்தை விட நாத்திகம் நலிந்து போய்விட்டதாகத்தான் சொல்ல வேண்டும். மதத்தின் உள்ளார்ந்த தத்துவம் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு கோயில் என்பது மன நிம்மதியை அள்ளித் தரும் ஒரு ஸ்தலம் மட்டுமே. அப்படியொரு நிம்மதி தாம்பரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சல்லிசாக கிடைப்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சென்னைக்கு திரும்பும் வழியில் சிங்கப் பெருமாள் கோயிலை கடக்கும்போதெல்லாம் அரைத் தூக்கத்தில்தான் இருந்திருக்கிறேன். ஊருக்கு போகும்போதும் அப்படியே. மலைக்கோயில்னு பாரா ஸார் சொன்னதும் மெயின் ரோடிலிருந்து லோக்கல் பஸ், வேன் பிடித்து குறைந்த பட்சம் ரெண்டு வாய்க்கால் ரெண்டு மலையாவது தாண்டிதான் போக வேண்டியிருக்க வேண்டும் என்கிற நினைப்பு பஸ்ஸிலிருந்து இறங்கிய இரண்டாவது நிமிஷத்திலேயே பஸ்பமானது.  

மலையை மறைத்து கோட்டைச்சுவர் கட்டிக்கொண்டு ஜம்மென்று மெயின் ரோட்டுக்கு ரொம்ப பக்கமாகவே  சிம்பிளாக காட்சி தருகிறார் பாடலாத்ரி நரசிம்மர். மலையை குடைந்து கட்டிய கோயில் மாதிரிதான் தெரிகிறது. மெயின் ரோட்டுக்கு பக்கத்திலிருந்தும் கோயில் அநியாயத்துக்கு அமைதியாய் இருக்கிறது. திருவல்லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் மணிக்கணக்கில் நின்று நெருக்கியடிக்கும் கூட்டத்தில் நீந்தி சந்நிதிக்கு போய் ஆத்மார்த்த தரிசனமாக இல்லாமல் அவசர சடங்காக செய்யும் விஷயமெல்லாம் சட்டென மனசுக்குள் வந்து போகிறது. கூட்டமும் கூச்சலும் இல்லாமல் சென்னைக்கு வெகு சமீபத்திலிருக்கும் இதுவோ என்னைப்போலவே பலருக்கும் (முக்கியமாக சக கோயிந்தசாமிக்களான சுவடு ஷங்கருக்கும் கிருபா ஷங்கருக்கும்) ஆச்சரியங்களை அள்ளிக் கொடுக்கிறது. 

காலத்தின் கட்டாயம், கோயிலின் உள்தரையை மொசைக்கால் மொழுக வைத்திருக்கிறது. பச்சைமா மலைதான்னு நினைக்கிற மாதிரி எங்கு பார்த்தாலும் சந்நிதிக்குள்ளேயே துளசியின் படையெடுப்பு. பாராவின் உபயத்தால் பிரசாதமாக வந்த தோசையை பிய்க்கும்போதுதான் ஸ்ரீரங்கத்து ஞாபகம் வந்தது.

திருச்சிக்கு போகும்போதெல்லாம் அப்பா ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போவார். ஸ்ரீரங்கம், அப்பா பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவின் கைப்பிடித்து பிரத்யட்சனம் வந்தால் சக்கரத்தாழ்வார் சந்நிதி வாசலில் தோசை கிடைக்கும். ஆறிப்போய் காய்ந்து இருந்தாலும் தோசையில் கமகம வாசனைக்கு குறைவிருக்காது. தொட்டுக்கொள்ள என்று எதுவும் தேவையே இல்லை. மறக்காமல் ரெண்டு வாங்கி பத்திரமாய் பையில் மடித்து வைத்துக்கொள்ளும் அப்பாவை பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கும்.  அம்மா வார்த்த தேசை வேகாமலிருந்தாலே விசிறியடிக்கும் அப்பாவா இது!  இன்றைக்கும் திருச்சிக்கு போகும்போதெல்லாம் ஸ்ரீரங்கத்து தோசைக்கு அப்பா, ஆட்டோகிரா·ப் போட மறப்பதேயில்லை.

சிங்கப் பெருமாள் உறையும் கோயில், சின்னக் கோயில்தான். ஆனால், மலையோடு ஈஷிக்கொண்டிருக்கும் கோயிலும் வித்தியாசமான விஸ்தார பிரகாரமும் மனசை ஈர்க்கிறது. மலைக்கோயில் என்றாலே எனக்கொரு தனி கிரேஸ். எங்க ஊர்ப்பக்கம் இல்லாத சமாச்சாரம் என்பதாலோ என்னவோ!  ஆலமரத்தடி பிள்ளையாரிலிருந்து கெங்கையம்மன் கோயில் வரை எங்கும் நிறைந்திருக்கும் அதே சங்கதி இங்கும் உண்டு.  கல்யாணமாகாதவர்களுக்கும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் தொட்டில் கட்டினால் உடனடி பலன் உண்டாம்.  எல்லா செண்டரிலும் எடுபட்டாகணுமேன்னு ஐட்டம் வைக்கும் கமர்ஷியல் மசாலா டைரக்டரின் குயுக்தி!

திரும்பி வரும்போதும் நரசிம்மரின் தேஜஸ் மனசில் நிற்கிறது. பஸ் பிடிச்சு பேட்டைக்கு வந்து தண்ணீர் புடிச்சு துணி துவைச்சாக வேண்டும்!

இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோ கமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு தொலைநோக்குப் பார்வை ஜாஸ்திதான். இல்லாட்டா சென்னை மாதிரியான இந்திரலோகத்துக்கு போகவே மாட்டேன்னு ஜகா வாங்கியிருக்க மாட்டாரே!

Saturday, July 24, 2004

துக்ளக் கார்ட்'டூமால்'

"KEEP LEFT" போர்டு பார்த்து முச்சந்தியில் மிரண்டு போய் நிற்கும் மன்மோகன் சிங் :-
'தெரியும்..தெரியும்.. கீப் லெ·ப்ட்டுதானே...தலையெழுத்து. அதைத்தானே பண்ணிக்கிட்டிருக்கோம். இதையே தெருவுக்கு தெரு போர்டு வெச்சு வேற காட்டணுமா?  வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுற மாதிரி இருக்கே!'
 
 
நான் மிதவாதிகளின் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டேன் என்று வரும் விமர்சனங்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. அவர்கள் எனது நண்பர்கள். ஆனால், அவர்களுக்கு பலம் இல்லை. என்னிடம் என்றும் தவறாத பலம் இருக்கிறது. கலகங்கள் நடந்தபோது தவறியது அந்த பலம் அல்ல. ஆக்கப்பூர்வமான உண்மையான பலத்தை கொண்டிருக்கும் அகிம்சையை அதை ஏற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் ஸ்தாபனம் சரியாக அனுசரிக்க தவறியதுதான் காரணம்' 

தொடர்ந்து படிக்க... தமிழோவியத்தில்...

Wednesday, July 21, 2004

காந்தீய விழுமியங்கள்

சென்னைக்கு வந்த காந்திஜியும் கஸ்தூரிரங்க ஐயங்காரின் பங்களாவிலேயே தங்கி ராஜாஜியுடன் ரெளலட் சட்டம் பற்றிய விவாதங்களை நடத்தியிருக்கிறார்கள். அகிம்சை முறையில் சட்ட மறுப்பு செய்யவது என்கிற முடிவில் காந்திஜி இருந்தாலும் அதை எப்படிச் செய்வது என்பதை முறைப்படுத்தி காந்திஜிக்கு நிறைய ஆலோசனைகள் சொன்னது ராஜாஜி, கஸ்தூரிரங்க ஐயங்கார், விஜயராகவாச்சாரியர் போன்றவர்கள்தான். ஒரு வழியாக 1919ம் ஆண்டு ஏப்ரல் 6ம்தேதி சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்துவிடலாம் என்கிற முடிவை காந்திஜி எடுத்தது சென்னையில்தான்..

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - II

Monday, July 19, 2004

பாரதி கூட்டிய Blogger's Meet

காலையில் கிருபாவின் அபூர்வ வாகனத்திலேறி மாலையில் நம்ம பேட்டைக்கு பத்திரமாய் திரும்பி வரும்வரை கண்டதையும் கேட்டதையும் பத்தி பத்து பக்கத்துக்கு எழுதிவிடலாம். சரக்கு ஜாஸ்தியாவே கிடைச்சது! 'பாரதி'யின் பெயரால் ஒரு எழுத்தாளர்கள் கூட்டத்திற்கே ஏற்பாடு பண்ணியிருந்தார் பாரா. மாலன், இரா.முருகன், வெங்கடேஷ், பத்ரி, ரூமி, ஹரிகிருஷ்ணன், யுகபாரதி மாதிரி பெரியவங்க இருக்குற இடத்துல வாலை சுருட்டிக்கிட்டு அமைதியா உட்கார்றது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. வெயில் நேரத்தில் கிடைச்ச கூல்டிரிங்ஸை கூச்சப்படாமல் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு ரெண்டு தடவை வாங்கி ஊத்திக்கிட்டோம். ஆனாலும். ஒரு கையில் கூல்டிரிங்ஸ் இன்னொரு கையில் காபி சகிதம் வெளுத்து வாங்கியவர் பத்தி நான் எதுவும் சொல்லப் போவதில்லை! வழக்கம் போல மாப்பிள்ளையாட்டம் வந்ததொரு பூனை. ஆனா, இருக்குற சுவடு தெரியாம இருந்ததென்னவோ சித்திரன்தான். துறு துறு பிரகாஷையும் ஷங்கரையும் கோஆர்டினேட் பண்ணி அழைச்சுட்டு வந்துட்டு, வந்த இடத்தில் சித்திரனோட போட்டி போட்டது முத்துராமன். திருக்குறள் புஸ்தகம் வைத்த தாம்பூல தட்டோடு திரும்பும்போதுதான் சின்ன வருத்தம். மதிய சாப்பாட்டில், பாராவின் பூரணம் வைத்த பூரி இல்லையே!

Saturday, July 17, 2004

அதெல்லாம் ஒரு காலம்!

 

 
ஒரு கிளாஸ்க்கு நாலு ஜன்னல். ரெண்டு கதவுன்னு விஸ்தாரமா இருக்கும்.  ரெண்டு மூணு தடவை திருடனெல்லாம் வந்து சத்துணவுக் கூடத்துல இருக்குற பிசாத்து அரிசி, எண்ணெயெல்லாம் தூக்கிட்டு போயிருக்கான். மத்தபடி மழை, புயல், வெள்ளம், காத்து எது வந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் மொட்டை மாடிதான். அதில் கீத்துக் கொட்டகை எதுவுமில்லை.  தீடீர்னு தீப்பிடிக்க சான்ஸே இல்லை. மாடிப்படிகளில் ஏறுவதற்கே மாணவர்களுக்கு அனுமதியில்லை. வகுப்பறைக்கும், சமையல் கூடத்துக்கும் கிட்டதட்ட நூறடி தூரம். வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனி டாய்லெட். பள்ளிக்கூடத்தை ஓட்டின மாதிரி சின்ன வாய்க்கால். அதில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கும். வாய்க்காலின் கரையை ஓட்டின மாதிரி எலந்தை மரம். முள் குத்தினாலும் மீறிக்கொண்டு எலந்தை காயை பறிச்சு தின்னுகிட்டே ஒரு வாக் போயிட்டு வர்றதுக்கு ஒரு தோட்டம். அதில் விளையாட்டு நேரத்தில் வேலியடைத்து பயிரிட்ட வெண்டைக்காய், தக்காளி செடிகள். அதையொட்டி பரந்து விரிந்திருக்கும் விஸ்தாரமான இடம், விளையாடுவதற்காக மட்டும். அங்கிருந்தே மாயூரநாத சுவாமியை பார்த்து ஒரு கும்பிடு போட்டுக்கலாம். இப்படியொரு ஸ்கூலை கட்டி வாடகை எதுவும் வாங்காமல் ரொம்ப நாள் தானமாக கொடுத்த தருமபுரம் ஆதினத்துக்கும் நன்றி சொல்லியாகணும்.
இதுதான் நான் படிச்ச ஆரம்ப பள்ளிக் கூடம். இப்போ ஆள் அரவமற்ற இடமாகிவிட்டது. மாயவரத்து மாபியா கும்பலால் இடத்தை கரெக்டா கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறேன்! இப்படியொரு பள்ளிக் கூடத்தில் படிச்சுட்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூலை டிவியில் பார்க்கவே வயித்தெரிச்சலாகத்தான் இருக்கு!

Wednesday, July 14, 2004

"உண்மை"யின் குரல்

"அந்தப் பொடிப் பையனின் ஒரு நாள் உணவுப் பட்டிய லைக் கேட்டால் தலை சுற்று கிறது. அதிகாலை தேன் கலந்த வெந்நீரில் ஆரம்பித்து இரவு பூரி மசால், மசாலாபால், செவ்வாழைப் பழம் என்று ஒரு நீண்டப் பட்டி யல் இருக்கிறது.

பெற்றோர்களை விட்டு நீங்கி விட்டான் - பந்தம் என்கிற கட்டை அவிழ்த்துக் கொண்டு விட்டான். சந்நியாசம் வாங்கியவன் பெற் றோர்களிடம் எப்படி தங்க முடியும்?

பெற்றோர்களிடம் சமாதானமாகி விட்டது என்று ஒரு செய்தி வெளி வந்து அதன் ஈரப்பசை காய்வதற்குள்ளாகவே இல்லை- இல்லை - அது சுத்த பொய் என்று மற்றொரு செய்தி மறுப்பாக வெளிவருகிறது.

மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் பரபரப்புத் தீனி தேவைப்படுகிறது. அப்பொழுது தானே அவர்கள் வியாபாரம் போனியாகும். ஒரு பார்ப்பனச் சிறுவன் என்ப தாலே இவ்வளவு முக்கியத்துவம் - பாலசந்நியாசி என்கிற கிரீடம்.

ஆன்மீகம் தவிர்த்து வேறு துறைகளில் இவ்வளவுக் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருந்திருந்தால் என்னென்னவெல்லாம் `சோ’ ராமசாமி கிறுக்கி இருப் பார். `தினமலர்’ எப்படி எல்லாம் தினவெடுத்து எழுதும்!

பார்வதி தேவியார் தங்கக் கரண் டியில் ஞானப்பாலைப் பிழிந்து கொடுத்தார் - அந்தக் கரண்டி இது தான் என்று சோடித்து இருக்க மாட்டார்களா? உப்பு கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பாத்தி போல அவாள் கூட்டம் திருதிருவென்று முழக்கிறது. ஆன்மீகத்தின் பேரால் பெரும் கொள்ளை - பணக்குவிப்பு செய்ய ஒரு மோசமான கூட்டம் இதன் திரைமறைவில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

பொடியனின் பெற்றோர்களும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தன் மகன் உயிருக்கு ஆபத்து என்று புலம்புகின்றனர். இதில் யாருக்குப் பங்கு என்பதில் ஏற்பட்ட மோதலால்தான் இவ்வளவு தூரம் கதை நாறிப் போய் விட்டது போலும்! இந்தப் போட்டி மட்டும் இல்லாமல் போயிருந்தால், அடேயப்பா, இதற்குள் பொடியன் பரணிதரன்பற்றி புதுப் புது தலப்புராணங்கள் எழுதப் பட்டு இருக்கும். ஆன்மீகம், சாமியார் கதை என்றாலே குத்தலாக மக்கள் பேசும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

நியாயமாக காவல்துறை மூலம் இதன் பின்னணியைக் கண்டு பிடித்து புரட்டல்காரர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும் கடமையை அரசு செய்திருக்க வேண்டும். பக்திக்குப் பக்தவத்சலத்தையே தோற்கடிக்கும் அரசு அல்லவா நடந்து கொண்டிருக்கிறது - அதனிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா?"


வெறுமனே அசை போட்டுக்கிட்டிருந்த வாய்க்கு அவல் கிடைச்சா சும்மா விடுமா? மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் பிரமாதமாக முடிச்சு போட உண்மையால் மட்டுமே முடியும். சரி இதெல்லாம் கிடக்கட்டும். ஆளுங்கட்சியிடமிருந்து வல்லம் இடத்தை காப்பாத்திக்க சுயமரியாதைச் சிங்கம் வீரமணி அய்யா கலைஞர் காதுல ஏதோ கிசுகிசுக்குறாரே... அதான் மேட்டரு!

Tuesday, July 13, 2004

தென்னிந்திய மோகம் - I

தென்னாப்பிரிக்க தமிழர்கள்தான் காந்திஜியை அசத்தினார்கள் என்றால் இந்தியாவிலிருக்கும் தமிழர்களும் காந்திஜியை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. இந்தியாவிற்கு வந்த பின்பு பம்பாயில் சில காலம் இருந்துவிட்டு பூனா வந்தவர், அதற்கு பின்னர் போக நினைத்த இடம் சென்னைதான்.

சென்னைக்கு வந்த காந்திஜி தனக்கு இப்படியொரு கூட்டம் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. தனது பிரசங்கத்தை அச்சிட்டு கையோடு எடுத்து வந்திருந்தார். தான் அந்த பிரசங்கத்தை வாசித்து காட்டும்போதும் மக்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டுக்கொண்டதாகவும் போகும்போது மறக்காமல் பச்சைத் துண்டில் அச்சடித்த பிரசுரத்தை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போனதாகவும் காந்திஜி சொல்கிறார். அப்போதே 10,000 பிரதிகள் விற்பனையானதாம்! ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்த காந்திஜிக்கு, இந்தியாவிலேயே ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பது சென்னையில்தான் என்கிற நினைப்பையும் தந்தது அந்த பிரசங்க கூட்டம்தான்

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - I

Sunday, July 11, 2004

ஆங்!

திருதிருவென முழித்து 'ஆங்' சொல்லும் அரசியல்வாதி, பெரிய உதடுகளுடன் பல்லிளிக்கும் மூப்பனார், கருப்புக் கண்ணாடியையும் மீறி கலைஞரின் கண்களில் தெரியும் சாணக்கியம், ஆந்தையின் முகத்தை ஞாபகப்படுத்தும் ஜெயலலலிதா என உதயனின் கார்ட்டூன்கள் குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம். உதயம் மறைந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. 1995 இறுதிகளிலிருந்து 1996 எலெக்ஷன் முடியும் வரை தினமணி தலையங்கத்தின் எதிர்ப்புறம் மூலையில் உதயனின் ராஜ்ஜியம் உச்சியிலிருந்தது. ஜெயலலிதா அரசின் அராஜகங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள் வரிசையில் சுப்ரமணியம் சுவாமி, ரஜினி, சோ வரிசையில் உதயனும் உண்டு. உதயனுக்கு அப்புறம்தான் மூப்பனாரையெல்லாம் வரிசையிலேயே சேர்க்கவேண்டும். தேர்தலுக்கு பின்னரும் மத்தியில் நடந்து கூத்துக்களை கார்ட்டூனாக்கி பரபரப்புடன் பக்கங்களை திருப்ப வைத்த உதயன் என்ன காரணத்தினாலோ தினமணியை விட்டுவிட்டு நக்கீரனிடம் சேர்ந்துவிட்டார். கொஞ்ச காலம் உதயனின் கார்ட்டூனுக்காகவே நான் நக்கீரன் வாங்கும்படி நேர்ந்தது. மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மறக்காமல் ஓவியர் அரஸ் கூட்டம் கூட்டியிருந்த செய்தி சமீபத்தில் என்னை நெகிழ வைத்தது. தகவல் கிடைத்திருந்தால் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டாவது வந்து சேர்ந்திருப்பேன். தற்போது உதயனின் தினமணி கார்ட்டூன்களை நக்கீரன் கோபால் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறாராம். ஆனால், வீரப்பனை அரக்கனாக காட்டிய உதயனின் தினமணி கார்ட்டூன் தொகுப்பில் இருக்க உத்திரவாதமில்லை!

Friday, July 09, 2004

எனக்கொரு கவிதை வேணுமடா

எனக்கொரு கவிதை வேணுமடா
இல்லாட்டி போனா
வலைப்பூ நாறுமடா!

எல்லோரையும் படிக்க வைச்சு
ஏகாந்தமாய் சிரிக்க வைச்சு
தலையில்
எலுமிச்சை தேய்க்க வைக்க...
எனக்கொரு கவிதை வேணுமடா!

ஏண்டா எழுத வந்தேன்னு
இருக்கிறதை தூக்கிக்கிட்டு
எல்லோரும் என்னை
இல்லாம ஆக்கிவிட...
எனக்கொரு கவிதை வேணுமடா!

ஷங்கர் பூனையையெல்லாம்
சதாய்ச்சுட்டு,
இருக்குதா இல்லையான்னு
சுவடு தெரியாம
சுத்தமா ஓரங்கட்ட...
எனக்கொரு கவிதை வேணுமடா!

காலாகாலத்துக்கும்
கவிதையே எழுதுமாட்டேன்னு
மீனாக்ஸெல்லாம் மன்னிப்பு கேட்டு
மீளாத்துயருக்கு போய்டற மாதிரி...
எனக்கொரு கவிதை வேணுமடா!

கிருபா ஷங்கரெல்லாம்
கிறுகிறுத்துப் போய்
கரும்பு ஜூஸை கட் பண்ணிட்டு
ஜாம் பஜாருக்கு ஜகா வாங்கிக்க...
எனக்கொரு கவிதை வேணுமடா!

புதுக்கோட்டைக்கு போன எம்கேகுமார்
புதுசா, கவிதைப் பேட்டைக்கு வந்திருக்கும்
கரையானை அழிக்க
புதுக்கட்டையுடன் ஓடி வர்றமாதிரி...
எனக்கொரு கவிதை வேணுமடா!

பேஸ்தடிக்க வைக்கும் பேரா படிச்சு
பாரா பேஜாராகி...
கழுதை எழுதிய கவிதைன்னு
மனசுக்குள் டைட்டில் போட்டு
மானத்தை வாங்காமல்
கவிதைப் பேட்டைக்குள்
கா(மெண்ட்ஸ்)லடி வைக்காதேன்னு
பதினெட்டுப்பட்டிக்கும்
பதிமூணாவது கட்டளை போட...
எனக்கொரு கவிதை வேணுமடா!

Tuesday, July 06, 2004

வாங்க..வாங்க!

ஒரு வழியா நம்ம ஆளும் வலை பதிக்க ஆரம்பிச்சுட்டாரு! இவருதான் எனக்கு மரத்தடிக்கும் ராயர் கிளப்புக்கெல்லாம் என் மவுசை காண்பிச்சாரு. அடுத்தடுத்த வந்த மெயில் விசாரிப்புகள் மூலமாகத்தான் எங்க ஊர்க்காரர், அதுவும் நான் படிச்ச ஸ்கூல், காலேஜில் படிச்சவருங்கறது....அதைவிட நம்மளை மாதிரியே பத்திரிகை உலகத்தோட சம்பந்தப்பட்டவர்னு தெரிய வந்துச்சு. நம்ம மூக்கு மாதிரியே விகடன் மாணவர் டீமிலிருந்து வந்தவர். ஜூனியர் விகடனின் செல்லப்பிள்ளை. இப்பவும் ஹாங்காங்கில் உட்கார்ந்துகிட்டு ஜூ.விக்காக எழுதித் தள்ளும் ஸ்பெஷல் ஆசாமி! மயிலாடுதுறைக்காக பிரத்யேகமாக ஒரு வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார். எப்பவோ பிளாக்ஸ் பக்கம் வந்திருக்க வேண்டியவரு. லேட்டா வந்தாலும்... யெஸ்! அதே டயலாக்தான் சொல்றாரு. நேர்ல பார்க்கும்போதெல்லாம் அடிக்கடி கையை தூக்கி மேலே வேற காட்டுறாரு. பாமக காவல் தெய்வங்கள் இவரையும் கொஞ்சம் கவனிக்கலாம்!

வெல்கம் சுபிக்ஷா ஸார்!