Wednesday, September 22, 2004

ஆட்கள் வேலை செய்கிறார்கள்!



மறக்க முடியாத நான்குவழி பாதைகளின் சந்திப்பு அது. எங்க ஊர்ப்பக்கம் 'முக்கூட்டு'ன்னு சொல்வோம். வீட்டுக்கு போகிற வழியில் இருப்பதால் முச்சந்தியையும் அதில் ஜம்மென்று உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரையும் எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாது. ஊருக்கு வரும்போதெல்லாம் இரண்டு வி.ஐ.பிக்கள் பிள்ளையார் கோயிலுக்கு வராமல் போவதில்லை. ஒருத்தர் விஜய டி.ராஜேந்தர். இன்னொருத்தர் ஹி...ஹி.. நான்தான்! இருபது வருஷத்துக்கு முந்தி சைக்கிளில் வந்த அப்பா மீது லாரி மோதி, கட்டைவிரலில் அடிப்பட்டதிலிருந்து நிறைய ஆக்ஸிடென்டகளை இந்த முக்கூட்டில் பார்த்திருக்கிறேன். இப்பவும் அப்பாவின் கட்டைவிரலை ஆட்டிக்காட்டும்போது பிரபுதேவாவின் டான்ஸ் ஞாபகத்துக்கு வரும். ஒரு பக்கம் மயிலாடுதுறை முனிசிபாலிட்டி, இன்னொரு பக்கம் தாலுகா ஆபிஸ், இன்னொரு பக்கம் மயிலாடுதுறை ஜெயில் என வித்தியாசமான காம்பினேஷனும் இந்த முக்கூட்டில் உண்டு. காலேஜ் போக பஸ் வர காத்திருக்கும்போதெல்லாம் ரோட்டை நன்றாக கவனித்திருக்கிறேன். நிறையபேர் காரிலிருந்தபடியே காரைக்கால் போக வழி கேட்பார்கள். இரண்டு வழியிலும் போகலாம் என்பதால் கொஞ்ச நேரம் முழித்துக்கொண்டு நிற்பேன். பெரிய அளவுக்கு டிராபிக்கெல்லாம் இருக்காது. ஆனாலும், மக்கள் ஏதோ பிள்ளையார் கோயிலையே சுத்தி சுத்தி வருவது மாதிரி இருக்கும். என்னைக் கேட்டால் மயிலாடுதுறையின் இதயமான பகுதி இதுதான்னு சொல்வேன். ஆனால், இப்போது பாதாள சாக்கடைக்காக பாதையையே பிரித்து போட்டிருக்கிறார்கள். ஆறு மாசமாக ஆட்கள் வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். எப்படியும் திரும்பவும் பார்முக்கு வர ஒரு வருஷம் ஆயிடும்!



முக்கூட்டில் எனக்கு புடிச்ச முக்கியமான விஷயம். ஒரு பக்கம் பிள்ளையார் கோயில், இன்னொரு பக்கம் தர்கா. இரண்டுக்குமிடையே ஒரு ரோடு. ரோட்டை காவல் காத்துக்கொண்டிருப்பது மாதிரி கையில் தடியோடு காந்தியின் சிலை!