Wednesday, December 29, 2004

மீட்பு நடவடிக்கையில் மந்தம்

ஆட்கள் பற்றாக்குறையினால் பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளின் வேகம் குறைந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அழுகிப்போன சடலங்களும், தொற்று வியாதி குறித்த பயங்களும் பலரை நெருங்க விடாமல் செய்து வருகின்றன. வாணகிரி கிராமத்தில் மீட்பு நடவடிக்கைகளுக்காக வந்த என்ஜிஓ அமைப்பை சேர்ந்தவர்களை மக்கள், கிராமத்தின் உள்ளே விட மறுத்ததாக ஒரு செய்தி.



பெரும்பாலான முகாம்களில் தேவைக்கதிகமான உடைகளும், உணவுகளும் தேங்கியிருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். உணவு, அரிசி, உடைகளை ஏற்றிவரும் லாரிகளில் அந்தந்த முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, குளச்சல் போன்ற இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடிந்து விட்டன.



தமிழகம் முழுவதும் 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல உணவு அளிக்கப்படுகிறது. முகாம்களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அரசு உதவி கிடைக்கும் என்று கிளம்பிய செய்தியினால் பெரும்பாலானோர் முகாம்களை விட்டு வெளியே வருவதில்லை.



நாகப்பட்டினத்தில் டெட்டனஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு உடம்பு சரியில்லாத போனதன் காரணத்தால் பெரும்பாலான நாகை மாவட்டத்து கல்லூரிகள் மீட்பு நடவடிக்கைகளிலிருந்து தங்களது மாணவர்களை திரும்ப அழைத்துக்கொண்டுள்ளனர்.



கடலூரில் மீட்பு நடவடிக்கைகளுக்காக ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைத்தாலும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவும் ஒரு செய்தி.



நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் இதுவரை உயரிழிந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 4 ஆயிரம் பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தினர்களுக்கு வேஷ்டி, சேலை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 60 கிலோ அரிசி, இரண்டு பெட்ஷீட், இது தவிர குடும்பத்திற்கு தேவையான அத்தியாசிய பொருட்களான சமையல் பாத்திரங்கள், ஸ்டவ் உள்ளிட்ட சாமான்கள் வாங்க என ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4912 ரூபாய் நாளை முதல் அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வழங்கப்படுகிறது.

இது தவிர மீனவர்களின் படகு, கட்டுமரம் போன்றவற்றை பழுதுபார்க்கவும், புதிதாக வாங்கவும் அரசின் சார்பில் 65 கோடி ருபாய் செலவிடப்படுகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவில் சிறு மாற்றம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

ஆக, உதவ விரும்பும் உள்ளங்கள் கொஞ்சம் நிதானம் காப்பது நல்லது என்றே தோன்றுகிறது.