Monday, December 27, 2004

நீண்ட இரவு

தூக்கம் தொலைந்த இரவில் திரளாக ஓடிவரும் அலைதான் கண்முன் நிற்கிறது. இன்னமும் நம்பமுடியாத திகிலாகத்தான் இருக்கிறது. நிலநடுக்க பேச்சுக்கள் முடிந்து விஜய் டிவியில் மதன்ஸ் பார்வையில் லயித்திருந்தபோதுதான் வந்தது அந்த செய்தி.



சன் நியூஸ் பார்த்து கிளம்பி மந்தவெளி வழியாக பட்டினப்பாக்கம் அடைந்தபோது அலைகளின் கோரத்தாண்டவத்தை உணர்ந்துகொள்ள முடிந்தது. பிளாட்பாரமெங்கும் பெண்களும், குழந்தைகளும். கையில் மூட்டை முடிச்சுகளுடன் கண்ககளில் வழிந்தோடும் கண்ணீரை துடைத்தபடி... ஓரே நாளில் சென்னை மக்களின் வாழ்க்கையை கடல் நீர் புரட்டிப் போட்டுவிட்டது.



பட்டினப்பாக்கம் அரசுக்குடியிருப்பில் மருந்துக்கு கூட ஆளில்லை. முழுங்காலில் பாதியளவு கூட தண்ணீர் இல்லை. ஆனாலும், ஆங்காங்கே மிதக்கும் குடங்களும், பிளாஸ்டிக் வாளிகளும் நிலைமையின் விபரீதத்தை சொல்லிவிடுகின்றன. குடியிருப்புகளைய தாண்டி மீனவர்களின் குப்பத்தை வந்தடைவதற்குள் துணியால் மூடப்பட்ட இரண்டு பிணங்களை பார்க்க முடிந்தது. வழக்கத்திற்கு மாறாக கடல் சுருங்கியிருப்பது போல கரையிலிருந்து இருநூறு அடி தூரம் தள்ளி தனது வழக்கமான வேலையை செய்துகொண்டிருந்தது. நெருங்க ஆரம்பித்த ஐந்தே நிமிடத்தில் ராட்சஸ அலைகள் மேலேழும்பி துரத்த ஆரம்பிக்க பின்வாங்கி ஓடிவந்தேன். இதெல்லாம் ஓரிரு நிமிஷங்கள்தான். மிரட்டிவிட்டு போவதைப் போல திரும்பவும் இருநூறு அடி தள்ளி சாதுபோல நின்று கொண்டது.
அப்போதும் கூட நிலைமையின் சீரியஸ்னஸ் புரியவில்லை. அழகழகான சங்குகள், கிளிஞ்சல்கள் கையில் கிடைத்ததால் மெரீனா கரையோரமாக கண்ணகி சிலை இருந்த இடம் வரை வாக் போய்விட்டு சந்தோம் சர்ச் வரும்போதுதான் கடலூர், பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் பகுதி தகவல்கள் கிடைத்தன. வழக்கம்போல சன்டிவியும் ஜெயாடிவியும் அரசியல் செய்ய, உதவிக்கு வந்தது என்டிவியும் ஆஜ்தக்கும்தான்.



இதுவரை தமிழகத்தில் 2400 பேர் உயிரிழிந்திருக்கிறார்கள். (அதிகாரபூர்வமாக 1742 பேர்). இதுவரை உயிரிழந்தவர்களின் விபரம் மாவட்டரீதியாக. சென்னை 243, நாகப்பட்டினம் 788, கடலுர் 300, பாண்டிச்சேரி 280, காஞ்சிபுரம் 58, கன்னியாகுமரி 300.



ராணிமேரி கல்லூரி எதிரில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளின் நிலை தெரியவில்லை. அதற்கு பக்கத்திலேயே கடற்கரைக்கு வந்திருந்த இரண்டு லவ் ஜோடிகளும், வாக்கிங் வந்தவர்களையும் காணவில்லை. கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் மாட்டிக்கொண்ட 500 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். பரங்கிப்பேட்டையில் பெங்களூரை சேர்ந்த பயணிகளின் பஸ் சேதமடைந்து 60 பேர் உயிரிழப்பு. வேளாங்கண்ணி கடற்கரையில் சர்ச்சை தவிர மற்ற கடைகளெல்லாம் சின்னபின்னமாகியிருக்கின்றன. கொஞ்சநஞ்சமிருந்த தரங்கம்பாடி மாசிலநாதர்கோயில் போன இடம் தெரியவில்லை. தரங்கம்பாடியில் தண்ணீர் நுழைவாயிலை தாண்டி வெளியே வந்திருக்கிறது. சுற்றுவட்டார வயல்களெல்லாம் கடல் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன.



பூம்புகாரில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்குளம் நாசமாகிவிட்டது. நாகப்பட்டினம் மெதுவாக காலியாகிக் கொண்டிருக்கிறது. பஸ், ரயிலை பிடித்து மக்கள் மயிலாடுதுறைக்கும், திருவாரூக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான கடலோரப் பகுதிகளில் தொலைதொடர்பும், மின் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளன. அரசின் மீட்பு நடவடிக்கைகளில் வேகமோ, மந்தமோ இல்லையென்றாலும் தலைவலியாக இருப்பது கொந்தளிப்பு திரும்பவும் வரக்கூடும் என்று பரவிவரும் செய்திகளால்தான். வானிலைச் செய்திகளைத்தான் அரசினால் துல்லியாக கணிக்கமுடியவில்லை. நிலநடுக்கம், கடல்கொந்தளிப்பு விஷயத்திலுமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்!