Friday, December 31, 2004

பூம்புகார் பகுதி நிலவரங்கள்



சென்னையில் வந்த புது சுனாமி பரபரப்பினால் நேற்றிரவே மயிலாடுதுறை வந்துவிட்டேன். கிழக்கு கடற்கரையோரம் வழியாக செல்லும் பேருந்துகள் சுனாமி பயத்தால் தாம்பரம் வழியாக திருப்பிவிடப்பட்டிருந்தன. பாண்டிச்சேரி வரையிலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை. ஏறக்குறைய ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு லாரி நிறுத்தப்பட்டு அதில் பழைய பொருட்களை மக்களிடம் சேகரித்துக்கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. கூடவே பயணித்த நபர் சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்தவராம். குடும்பம் காரைக்கால் பக்கத்தில் இருக்கிறதாம். இரண்டு இடங்களிலுமே சுனாமி அச்சுறுத்தல்கள் என்பதால் குடும்பத்தோடு இருப்பதே நல்லது என்று முடிவெடுத்து பஸ் ஏறிவிட்டார். பாண்டிச்சேரியில் கடற்கரையோரமாக இருந்த மக்கள், வீடுகளை பூட்டிவிட்டு நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். ஆக்ரோஷ அலைகள் எதுவுமில்லை என்றாலும் கடலில் தண்ணீர் வரத்து அதிகமாகவே இருப்பதாக பாண்டிச்சேரியில் எனக்கு செய்தி கிடைத்தபோது இரவு மணி ஒன்பது.

சுனாமி அச்சுறுத்தல்கள் இருந்தாலும் பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி என வழியெங்கும் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்புமில்லை என்பது தெரிந்தது. இன்று காலையில் மயிலாடுதுறையிலிருக்கும் இரண்டு முகாம்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தேன். வாசலில இரண்டு லாரிகள். திருவள்ளூர் மாவட்டத்திலிருந்தும் சேலத்திலிருந்தும் தனியார் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட துணிமணிகள், அரிசி மூட்டைகள் உள்ளே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டு மணிநேரத்திற்கொருமுறை இதுபோல ஏதாவது ஒரு லாரி வந்து இறங்குவதாக வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸ்காரர் குறிப்பிட்டார். முகாம்களில் அதிகமாக கூட்டமில்லை. காலை சாப்பாட்டிற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. குழந்தைகள் அன்பர்கள் கொண்டு வந்து கொடுத்த புடவைகளை உத்திரத்தில் கட்டி தொங்கவிட்டு அதில் ஏறி உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சென்னைக்கு தொடர்புகொண்டு பாராவிடமும் பிரசன்னாவிடம் நிலைமையை தெரிவித்தேன். ஒருபக்கம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியிலிருந்து வந்த மாணவர்கள் குழு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தனர். நேற்றுவரை டிஸ்போஸிபிள் சிரிஞ்சுகளுக்கு தட்டுப்பாடு இருந்ததாக தெரிவித்தனர். மீட்பு நடவடிக்கை நடைபெறும் இடத்திற்கு அருகிலிருக்கும் முகாம்களில் இத்தகைய சிரிஞ்சுகள் இல்லாமல் ஓரே ஊசியை வெந்நீரில் போட்டு உபயோகப்படுத்திக் கொண்டிருந்ததாக கூட வந்த நண்பர் சொன்னார். (ஆனால், மாலையில் கிடைத்த தகவலின் படி இன்று காலையை மாநில அரசின் சுகாதாரத்துறை அனைத்து இடங்களிலிலும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு கிடைக்க வழி செய்திருந்தது)

பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் படுத்து தூங்க சரியான பாய் இல்லை என்று தெரிவித்தார்கள். அவர்களில் சிலர் இன்று பாய்களும், போர்வைகளும் விநியோகிக்கப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்கள். நண்பர்களிடம் பேசி நாளைக்குள் 50 பாய்கள் கிடைக்கும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறேன். மற்றபடி துணிமணிகள், சாப்பாடு போன்றவற்றில் எந்தக் குறையுமில்லை. அங்கிருந்து கிளம்பி தேரழுந்தூர் பக்கமிருக்கும் இன்னொரு முகாமுக்கு சென்றபோது காலை மணி பத்து. முகாமில் ஐம்பதுக்கும் குறைவானவர்களே இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சோகத்தினாலோ, அசதியினாலே உறங்கிக் கொண்டிருந்தார்கள். இங்கேயும் டிஸ்போஸிபிள் சிரிஞ்சு பற்றி பேச்சு எழுந்ததால் நண்பர்களோடு ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று இங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டேன். பின்னர் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு பூம்புகாரை நோக்கி பயணமானோம்.

பூம்புகார், மயிலாடுதுறையிலிருந்து கிழக்குபுறமாக சரியாக 24கிமீ தொலைவிலிருக்கிறது. மயிலாடுதுறை-பூம்புகார் சாலையும் சீர்காழி-காரைக்கால் சாலையும் சந்திக்குமிடம்தான் மேலையூர். மேலையூரில் சாலையோரத்திலேயே இருக்கும் சீனிவாச மேல்நிலைப்பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்கள் கிட்டதட்ட 300 பேர் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் வாகனங்களால் சாலையில் போக்குவரத்து நெருக்கடி. ஒரு பக்கம் உணவுப் பொட்டலங்கள், இன்னொரு பக்கம் புத்தம் புதிய பெட்ஷிட்கள் என்று ஏரியாவே பரபரப்பாக இருந்தது. பள்ளியின் ஒரு மூலையில் தமிழகத்தின் பல மூலைகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய துணிகள் பரப்பி வைக்கப்பட்டு பிள்ளைகள் அதன் மீதேறி விளையாடிக்கொண்டிருந்தனர். புதிதாக துணி கொண்டுவருபவர்களை அந்த இடத்தில் வைத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்வதாக முகாமில் மக்கள் தொடர்பு வேலையிலிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லையென்பதை உறுதி செய்துகொண்டு பூம்புகாருக்கு கிளம்பினோம்.


ஊருக்குள் நுழைந்ததுமே வந்த கெட்ட துர்நாற்றம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்தவிட்டோம் என்பதை அறிவித்துவிட்டது. சுற்றுலாபயணிகளின் வருகையால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சிலப்பதிகா கலைக்கூடத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டு பூட்டுகள் தொங்கிக்கொண்டிருந்தன. அருகிலிருந்து பூங்காவின் காம்பவுண்டுகள் எல்லாமே சிதைந்து நொறுங்கிப்போய் ரோட்டில் கிடந்தன. கடலிலிருந்து 700 மீட்டர் தூரம் வரை கடல்நீர் உள்ளே புகுந்திருந்ததாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். உள்ளே புகுந்த கடல்நீரால் பூங்காவிலிருந்த செடி, கொடிகள் எல்லாமே பட்டுப்போய் பச்சை நிறங்களை இழந்திருப்பதை காண முடிந்தது. நிலநடுக்கம் வந்தால் வெட்டவெளியில் நிற்பது என்கிற விஷயம் இங்கே தலைகீழாக மாறியிருக்கிறது. மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கட்டிடத்தில் தஞ்சமடைவதையே விரும்புகின்றனர்.

கடலோரத்திலிருந்த நீச்சல் குளத்திற்கு பலத்த சேதம். நீச்சல் குளத்திலிருந்து இடது புறமாக கிராமத்தினுள் நடந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இங்கே ஒரு தெரு இருந்தது என்று நண்பர் கைகாட்டிய இடத்தில் நான்கு ஓலைகளும் இரண்டு குடங்களும் மட்டுமே இருந்தன. சிமெண்ட் கொண்டு அரை அடி சைஸில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் கூட சுக்குநூறாக உடைந்து கிடந்திருந்தன. நிறைய மச்சு வீடுகள் திறந்தே கிடந்தன. இங்கிருந்தும் ஒரு சடலத்தை எடுத்தோம் என்று நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் காய்ந்து போன நான்கு இட்லிகளும் இன்னும் பிரிக்கப்படாத சாம்பார் பாக்கெட்டும் கிடந்ததை மறக்க முடியாது.


அங்கிருந்து புதுக்குப்பம் என்கிற கிராமத்திற்கு நடந்தே சென்றோம். இருநூறு வீடுகள் இருந்த இடங்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்ட மாதிரி இருந்தன. இடம் முழுவதும் மஞ்சள் நிற மண்களை கறுப்பு நிற போர்வையால் மறைத்தது மாதிரி இருந்தது. 100 சதவீதம் சடலங்களை அகற்றி விட்டதாக சொன்னாலும் அதிகமான துர்நாற்றத்தினால் ஒரு அளவுக்கு மேல் கிராமத்தினுள் உள்ளே சென்று பார்க்கமுடியாது போய்விட்டது. திரும்பி வரும்போது இன்னொரு சின்ன கிராமம். பெயர் தெரியவில்லை. ஊர் முழுவதும் பிளீச்சிங் பவுடரை இறைத்துகொண்டிருந்தார்கள். இங்கேயும் தெரு முனையில் பழைய துணிமணிகள் மக்களின் உபயோகத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்தது. எனக்கென்னவோ இதே நிலைமை தொடரும் பட்சத்தில் குவியும் பழைய துணிகளை அகற்றுவதிலும் பிரச்னை ஏற்படும் என்றே தோன்றுகிறது.

அங்கிருந்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் செலவழித்து பாதிக்கப்ட்ட மக்களை பார்த்து பேசிவிட்டு திரும்பவும் காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு காட்சியையும் பார்க்க முடிந்தது. திருப்பூரிலிருந்து வந்த நண்பர்கள் குழு ஒன்று பாலிதீன் பேக்கில் புத்தம் புதிய போர்வைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நான்கு பேர் நின்று வாங்கிக்கொண்டிருந்தார்கள். அதற்கு பின்னர் அடுத்த அரைமணி நேரத்திற்கு யாருமே வாங்க வரவில்லை. உதவும் மனப்பான்மையோடு வெகுதொலைவிலிருந்து வந்தவர்களுக்கு இதெல்லாமே ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கும்.


அங்கிருந்து நாங்கள் போன இடம் நான் ஏற்கனவே பலமுறை போயிருந்த வாணகிரி கிராமம். பூம்புகாரிலிருந்து கடல்வழியாக இது மூன்று கிலோ மீட்டரில் இருக்கிறது. ஆனால், சாலை வழியாக சென்றால் 8 கிமீ தூரத்தை கடந்தாகவேண்டும். நவக்கிரக யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஊர் பிரபலம். இங்கிருந்து ஒரு கிமீ தூரத்தில்தான் கேது பகவானின் ஸ்தலமான கீழப்பெரும்பள்ளம் இருக்கிறது. வாணகிரி கிராமத்தின் மற்ற பகுதிகளில் அதிகமான பாதிப்பில்லை. மீனவர்களின் குப்பத்திற்குதான் பாதிப்பு. இந்த கிராமத்தில் மட்டும் 60 பேர் இறந்து போனதாக தகவல். ஆனாலும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிகொண்டிருக்கிறார்கள். கடலிலிருந்து ஒரு கிமீ தூரத்திலிருக்கும் வெட்டவெளியில் ஓலைக் குடிசைகளையும் துணிகளையும் வைத்து வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தின் எந்த தெருவிற்கு போனாலும் ஏதாவதொரு தொண்டு நிறுவனம் ஏதாவதொரு உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தது. சேலம் பக்கத்திலிருந்து வந்திருந்த மெடிக்கல் டீம் தன்னுடைய பணிகளையெல்லாம் முடித்துவிட்டு கடல்கொந்தளிப்பு பற்றி மக்களிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

குப்பங்களின் உள்ளே சென்று நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறை 300 வீடுகள் இருக்கும். பெரும்பாலானவர்கள் சி¨த்ந்த வீடுகளின் வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். முகாம் வாழ்க்கை அவர்களை சலிப்பில் தள்ளிவிட்டிருக்கக்கூடும். முகாமில் சாப்பிட்டுவிட்டு பகல் முழுவதும் இங்கேயே உட்கார்ந்துவிட்டு இரவு நேரத்தில்தான் முகாமுக்கு திரும்புகிறார்கள். முடிந்தளவுக்கு காமிராவால் படமெடுத்துக்கொண்டுவிட்டேன். எல்லாவற்றையும் அப்லோட் செய்ய இரண்டொரு நாட்கள் ஆகும்.

சாலையோரங்களில் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பங்களை நட்டுக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இரண்டொரு நாட்களில் பகுதிகக்கு மின்சாரம் வந்துவிடும் என்றார்கள். ஒரு வீட்டில் கடல் தண்ணீரில் ஊறிப்போன மூன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கையில் நான் எடுத்து பார்த்தும் வீட்டு வாசலிலி உட்கார்ந்திருந்த பெண்மணிக்கு அழுகை தாங்கமுடியவில்லை. அவருடைய பையனின் பாடப்புத்தகம் என்று கூட இருந்த பெண்மணி சொன்னதும் தர்மசங்கடமாகிவிட்டது எனக்கு.

கடல் தண்ணீரே வாழ்க்கையாக இருந்தவர்களுக்கு இதெல்லாமே புதிதான எதிர்பாராத விஷயம்தான். மழை, புயல்களையெல்லாம் எதிர்கொண்டவர்களுக்கு இதுவொரு மோசமான அனுபவம். ராட்சத புயல் வந்திருந்தால் கூட அவர்களால் தப்பித்திருக்க முடியும். சிலரின் கருத்துக்கள் புதுவிதம்¡க இருந்தது. வந்தது கடல் தண்ணீர் மாதிரியே இல்லை. கருப்பு கலரில் சாக்கடைத்தண்ணீர் போல எங்கள் மீது பாய்ந்து வந்தது என்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மைதான் என்பதுபோலவே கடற்கரை முழுவதும் கருமணலாகவே காட்சியளிக்கிறது. சுனாமி அலைகள் வருவதற்கு முன்பாக படகுகள் ஓன்றையொன்று மோதிக்கொண்டதாக சொன்னார்கள். கரையில் தலைக்குப்புற கிடக்கும் படகுகள் எல்லாமே மரக்காணம், நாகப்பட்டினம் என வெவ்வேறு இடங்களிலிருந்து அடித்துவரப்பட்டவை.

கிளம்பும்போது மகளில் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் தனது சோக கதையை சொல்லிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் பேசினோம். மொழிதெரியாதவர்களெல்லாம் சாப்பாடும், துணிமணிகளும் கைநிறைய கொடுப்பதாக சொன்னார். பேச்சின் இடையே தன்னுடைய ஒரு பேரனும், மருமகளும் இறந்துவிட்டதாக சொன்னார். தான் மார்க்கெட்டுக்கு போனதால்தான் தன்னால் தப்பிக்க முடிந்தது என்றார். பாய், போர்வை வேண்டுமா என்று கேட்டதற்கு சிதைந்து போயிருந்த தனது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த போர்வையை காட்டி அது போதும் என்றார். கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்துகொண்டிருந்தது. அவர் வசிக்கும் தெருவில் எத்தனை பேர் இறந்தார்கள், எப்போது உதவி கிடைத்தது என்பதையெல்லாம் விவரமாக சொன்னார். உடம்பை பார்த்துக்கோ பாட்டின்னு சொல்லிவிட்டு கிளம்பும்போது அவர் சொன்ன வார்த்தைதாடன் என் கண்களில் கண்ணீரை முட்டிக்கொண்டு வரவழைத்துவிட்டது.

'சாப்பிட்டு போங்கய்யா....'