Monday, January 31, 2005

சின்னங்குடியும் சீட்டாட்டமும்



சின்னங்குடி. ஆக்கூர் முக்கூட்டிலிருந்து இடது புறமாக திரும்பி பொறையார் சாலையில் தொடராமல் நேராக வண்டியை விட்டால் கிட்டதட்ட திருக்கடையூர் கோயிலுக்கு பின்புறமாக ஆறாவது கிலோ மீட்டரில் அமைதியான மீனவர் குப்பம். ஊர் எல்லையிலேயே பழைய துணிகளை குவித்து வைத்திருந்தாக வேண்டும் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை.



ஊர் எல்லையிலேயே பெரிய சைஸில் புயல் பாதுகாப்பு மையம் இருக்கிறது. மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் நான் பார்த்திராத விஷயம். ஆனாலும் இந்த மெகா சைஸ் மண்டபத்தின் வாசலில் ஒரே ஒரு ஆட்டை தவிர வேறு ஜந்துக்களே இல்லை.



கடல் நீர் உள்ளே புகுந்துவிட்டதால் மோட்டார் வைத்து நீரை இறைப்பதை தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் நிவாரண உதவி எதுவுமில்லை என்பதால் புலம்பல்கள் கொஞ்சம் ஜாஸ்திதான். பக்கத்திலிருக்கும் தரிசு நிலத்தை திரும்பிக்கூட பார்க்காமல் விளைச்சல் நிலத்தின் மீது சுனாமி அலைகள் கண் வைத்ததுதான் சோகம்.



சுனாமியால் பாதிக்கப்பட்ட 140 குடும்பங்களுக்கு தனியாக தற்காலிக குடியிருப்பு கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். யார் செய்தார்கள், எப்போது செய்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் எந்தக் குறிப்புமில்லை. உள்ளூர்காரர்களிடம் விசாரித்தால் எல்லாம் தன்னார்வ அமைப்புகளின் பணிகள் என்கிறார்கள். கஷ்டப்பட்டு தனியார் தொண்டு நிறுவனங்கள் குடியிருப்பை கட்டி
முடித்ததும், தமிழ் சினிமாவில் கிளைமாக்ஸ் முடிந்து வரும் போலீஸ் மாதிரி அரசு ஜீப்பில் அதிகாரிகள் வந்து 'தமிழ்நாடு அரசு' சீல் வைத்துவிட்டு போகிறார்கள்!



'எல்லாம் கிடைக்கிறது ஸார். நேத்து கூட யாரே வந்து வேஷ்டி சேலையெல்லாம் கொடுத்துட்டு போனாங்க... ஆரம்பத்துல எல்லோருக்கும் ஒரு பெட்ஷிட் கொடுத்தாங்க.. அதுக்கப்புறம் ஒண்ணுமில்லை. நீங்க கொடுங்க.. யூஸ்·புல்லா இருக்கும்'னு ஒரு +2 சிறுசு கொடுத்த ரெக்கமெண்டஷனால் தெம்பாகி மாரியம்மன் கோயில் வாசலில் வைத்து வேலையை ஆரம்பித்தோம்.



அடுத்த கடற்கரையோர ரவுண்ட் அப். மீன்பிடி தொழில் அதிகமாக இல்லாத இடம் என்பதை கடற்கரையோரத்தில் உலா வரும்போதே தெரிந்து விடுகிறது. மீனவர் குப்பத்திற்கும் கரைக்கும் இடையே தடுப்புச்சுவர் போல கருவேலம் செடி புதர்களாகி அண்டி கிடக்கின்றன. புதர்களுக்கிடையே ஆங்காங்கே சில படகுகளும் சிக்கி கிடக்கின்றன. 'நிறைய பொணம் இங்கே புதர்ல மாட்டிக்கிடந்துச்சு'ன்னு காதோரமாய் வந்த தகவலால் படகுகள், மனித சடலங்கள் மாதிரி கண்ணில் பட்டு பயமுறுத்தின.



புதர்களையெல்லாம் கொளுத்தியிருந்தால் கூட இந்தளவுக்கு இருந்திருக்காது என்று சொல்லும் விதமாக கடல் அலைகள் புதர்களை மூழ்கடித்து பட்டுப் போக வைத்திருக்கின்றன. சுனாமி அலையின் வேகத்தை மட்டுப்படுத்திய இந்த கருவேலம் செடிகளின் தியாகத்தால்தான் சின்னங்குடியில் சில உயிர்கள் நடமாடுகின்றன என்பதை மறுக்க முடியாது.



இது ஐம்பது வருஷத்துக்கு முந்தி கட்டப்பட்ட கோயில். புயல், மழையெல்லாம் கோயிலை இந்த கதிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஏற்கனவே இங்கிருந்த மாரியம்மனுக்கு புதிதாக ஊருக்கு நடுவே கோயில் கட்டியிருக்கிறார்கள். அதன் வாசலில் வைத்துதான் நாம் போர்வை, தரைவிரிப்புகளை விநியோகம் செய்திருந்தோம். பக்கத்திலிருந்த வீடுகளும் தண்ணீர் தொட்டிகளும், மீன்கள் காய வைக்கும் இடமெல்லாம் சுனாமி தாக்குதலில் சுக்குநூறாக ஆயிருந்தாலும் இந்த பழைய கோயிலை மட்டும் அலைகளால் அசைக்க முடியவில்லை.

200 பேர் வசிப்பதற்கென்று குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் பல பேர் ரோட்டோரமாய் உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். இளவட்டங்கள் ஊர் எல்லையிலேயே ஏதாவது நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வேன் வருமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அறுபது ரூபாய் பாய், இருபது ருபாய்க்கு பெட்டிக்கடையிலேயே கிடைப்பதுதான் சுனாமியின் பெரிய தாக்கம்!



ஒரு பக்கம் எங்கிருந்தோ வந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர்கள் பள்ளத்தைத் தோண்டி மூங்கிலை நட்டு மீனவர்களுக்கான குடியிருப்பு வேலைகளில் மும்முரமாக இருக்க இன்னொரு பக்கம் பொழுது போகாமல் மீனவர்கள் சீட்டாடிக்கொண்டிருக்கும் காட்சியைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை!

Saturday, January 29, 2005

காந்தி அஞ்சலி




'...தங்களுடைய மகள் சுலோசனாவின் மரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். நான் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை. மரணம் ஒரு உண்மையான நண்பன். நமது அறியாமையானாலேயே மரணத்தினால் நமக்கு துக்கம் ஏற்படுகிறது. சுலோசனாவின் ஆன்மா நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். உடல் இறந்துதான் தீரவேண்டும். சுலோசனா தன்னுடைய குறைகளைத்தான் தன்னுடன் எடுத்து சென்றிருக்கிறாள்; நல்ல விஷயங்களை இங்கேயே விட்டு சென்றிருக்கிறான். அதையெல்லாம் நாம் மறக்கக்கூடாது. நம்முடைய கடமைகள் இனிமேல்தான் ஆரம்பமாகின்றன. கடமையை நிறைவேற்றுவதில் இன்னும் உறுதியுடன் செயலில் இறங்கவேண்டும்...'

சென்னையை சேர்ந்த தனது நண்பருக்கு 29.01.1948 அன்று இரவு காந்திஜி எழுதிய கடிதத்திலிருந்து... (ஹரிஜன், 22.02.1948)

(30.01.2005 - மகாத்மா காந்திஜியின் 57வது நினைவுநாள்)

Thursday, January 27, 2005

மயிலாடுதுறையின் அறிவகம்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி போகும் சாலையில் கொத்த தெரு பெரிய மாரியப்மமன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கொஞ்சம் உள்ளடங்கியே இருக்கிறது அறிவகம். தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையினால் நிர்வகிக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம். 90களில் நான் பள்ளி வாழ்க்கையில் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட காப்பகம். நாற்பது குழந்தைகளோடு ஆரம்பித்த இந்த காப்பகத்தில் இப்போது இருப்பதோ நூற்றி இருபது குழந்தைகள்.



ஏற்கனவே நான்கு பெட்ஷீட்கள் வைத்திருக்கும் மீனவ குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு பெட்ஷீட்டை கொடுப்பதற்கு பதிலாக நிஜமாகவே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற நண்பர்களின் ஐடியா பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு தகவல் கிடைத்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரையோர மீனவர் குப்பங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் மூன்று பேர் இந்த அன்பகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்தது அந்த செய்தி. நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது தகவலை உறுதி செய்தார்.



காப்பகம் இருக்கும் பகுதியின் கவுன்சிலர், குடும்ப நண்பர். படித்துவிட்டு சிவனே என்று பெட்டிக்கடை நடத்தி வந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாக நிற்க வைத்து, மக்கள் இரண்டு முறை வெற்றிக்கனியையும் கையில் கொடுத்துவிட்டார்கள். காப்பகத்திற்கு உதவிகள் கிடைக்காமல் இருந்த காலத்திலெல்லாம் கவுன்சிலர்தான் ஆதரவளித்து வந்ததாக சொல்கிறார்கள். காப்பகத்தோடு தொடர்புடையவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பொருட்களை கொடுப்பதே நல்லது என்று நினைத்து அவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம்.



காணும் இடமெல்லாம் செடி, கொடிகளை வளர்த்து காப்பகத்தையே பச்சை பச்சையாக வைத்திருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் வாகன இரைச்சல்களின் பாதிப்பு குறைவாக இருக்கிறது. தங்குமிடம், பள்ளிக்கூடம், உணவுக்கூடம் என்று எல்லாவற்றிற்கும் தனித்தனியாக கட்டிடங்கள் கட்டிவைத்து அழகான தமிழ்ப் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். ஏரியாவை ஒரு ரவுண்டு போய்விட்டு வந்துவிடலாம் என்று நினைத்து முதலில் சாப்பாடு கூடத்திற்கு சென்றோம். யாரோ ஒரு ஸ்பான்ஸர் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது பெயரையும் குடும்பத்தினரது பெயர்களையும் தங்களால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்து கோரஸாக உச்சரித்து தங்களது நன்றியை தெரிவித்துவிட்டு குழந்தைகள் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.



·பார்மாலிட்டிக்காக யாரையாவது ஒருத்தரை நிற்க வைத்து பெட்ஷீட்டை கொடுத்து ·போட்டோ எடுத்துக்கொள்வதை இதுவரை முடிந்தவரைக்கும் தவிர்த்து வந்தேன். ஆனால் இங்கே முடியவில்லை. நிர்வாகியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் கூட வந்த நண்பரையும் கவுன்சிலரையும் பொருட்களை கொடுக்கச் சொல்லிவிட்டு காமிராவை கையிலெடுத்துக் கொண்டேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை கூப்பிட்டு பெட்ஷிட்டை வாங்கச் சொல்லிவிட்டார் காப்பக நிர்வாகி. பழைய துணிகளையே பார்த்தும் வாங்கியும் பழக்கப்பட்டு போன காப்பக குழந்தைகளுக்கு கண்ணை பறிக்கும் கலரிலிருந்த பெட்ஷிட்கள் ரொம்பவே கவர்ந்துவிட்டன. காப்பகத்திற்குள்ளேயே எம்ப்ராய்டரி செய்வதற்கான சாதனங்கள் இருக்கின்றன. பெட்ஷீட்களை வாங்கிய கையோடு நான்கு பெண்கள் சேர்ந்து உட்கார்ந்து பெயர்களை எழுதும் எம்ப்ராய்டரி வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.



கட்டுமரங்கள் கிடைத்து வசிப்பதற்கு தனியாக வீடும் கிடைத்துவிட்டால் மீனவர்களின் வாழ்க்கை பழையபடி இயல்புக்கு திரும்பிவிடும். இதுபோன்ற ஆதரவற்ற மனநலம் காப்பகங்களின் நிலைமையோ எப்போதும் இப்படித்தான். ஆனாலும் சுனாமிக்கு பின்னர் மீனவர் குப்பங்களுக்கு மட்டும் என்றில்லாமல் எல்லா ஆதரவற்ற காப்பகங்களுக்குமே நிதியுதவியிலிருந்து நிவாரணப் பொருட்கள் வரை கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இது உண்மையிலேயே ஆறுதலான விஷயம்தான். நாங்கள் போன நாளன்று கூட UNICEFலிருந்து அதிகாரிகள் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இந்த காது கேளாதா, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு தேவையான பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். இனி அடுத்த வருஷத்தை பற்றித்தான் அவர்களுக்கு கவலை!

Wednesday, January 26, 2005

சுனாமி பாடம்

தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அரசு கட்டிக்கொடுத்திருக்கும் குடியிருப்புகளில்தான் தற்போதைக்கு வாசம். இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்க ஏனோ தயக்கமிருக்கிறது. வேளாவேளைக்கு தேவையான அரிசி, பருப்புகள் அரசாங்க குடோன்களிலிருந்து அன்றாடம் கிடைத்துவிடுகிறது. ஐந்து வருஷத்திற்கொரு முறை வரும் அரசியல்வாதியும் எப்போதாவது வரும் அதிகாரியும் இப்போது அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குப்பத்திலும் புதிதாக ஒரு காவல் நிலையம். நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் வரும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நவீன நாட்டாண்மை அலுவலகங்களாக சிறப்பாகவே செயல்படுகின்றன.



இடம் - மேலமூவர்க்கரை மீனவர்குப்பம், சீர்காழி

யுவ கேந்திரா அமைப்பிலிருந்து சிலர் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் குறைகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். என்ன வேண்டும் என்கிற கேள்விக்கு திணறல்தான் பதிலாக வருகிறது. ஆனாலும் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஒரு லட்சம் கொடுக்கிறது என்பதால் தப்பி வந்தவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும் கடலோரத்திலிருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் என்பதால் மீனவர் குப்பத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வசிப்பவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும்... ஆக, ஆங்காங்கே வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. (ஆண்டவனால் கூட திருப்திப்படுத்த முடியாத பிறவின்னா அது மனுஷன்தான்னு எங்கேயோ படித்த ஞாபம். அதை இங்கே வந்து இடிப்பதற்கு...மன்னிக்கவும்!)

சுனாமி பற்றி முழுமையாக யாருக்கும் தெரியாமலிருப்பதுதான் வேதனையான விஷயம். ஏதோ காத்து, கருப்பு எங்களை துரத்திக்கிட்டு வந்துச்சு என்கிற ரீதியில்தான் அவர்களது பேச்சு இருக்கிறது. ஆறுதல் சொல்ல வருகிறவர்களும் சரி, நிவாரணப்பொருட்களை சுமந்து வருபவர்களும் சரி சுனாமி அலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்று யாருக்குமே தோணவில்லை. போனவாரம் சுனாமி அலைகள் வரும் காரணம் பற்றி விபரமாக விவரித்த திண்ணை கட்டுரையை பல பிரதிகளாக எடுத்துக்கொண்டு போய் விளக்கி சொன்னால் கொஞ்சாமாவது புரிந்து கொள்வார்களா என்பதை பற்றித்தான் தற்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். அடுத்த என்ன லாரி வரும் என்று ஆவலாக காத்திருப்வர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடாது.

அடுத்த ஆண்டு முதல் சுனாமி அலைகள் பற்றிய குறிப்பு எல்லா வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஓகே. பெரியவர்களுக்கு? பிரம்மகுமாரிகள் சங்கம் போல பெரிய பெரிய படங்களில் சுனாமி அலைகள் வருவதன் காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை மீனவர்கள் குடியிருப்புகள் பக்கம் கிளாஸ் எடுப்பது நல்லது. நிவாரணப் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து இங்கே கொட்டுவதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் இறங்கலாம். இல்லாவிட்டால், 'திரும்பவும் 26ஆம் தேதி சுனாமி வரும்னு பேப்பர்ல போட்டிருக்கானே.. வருமா ஸார்'ங்கிற விசாரணைக்கு பதில் சொல்ல முடியாமல் முழிச்சுட்டு நிற்கவேண்டியதுதான்!

Saturday, January 22, 2005

கூக்குரல்


'பீகாரை மாற்றுகிற வல்லமை தேர்தலுக்கு கிடையாது. ஜனநாயகம் என்கிற பெயரில் வளர்ந்தவிட்ட வக்கிரங்களை எல்லாம் பீகாரில் ஒழித்துக்கட்ட, பல 'உரிமை'களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற நெருக்கடி நிலை பிரகடனம் தேவை. தேர்தல் மூலம் பீகாரில் மாற்றம் ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பது- கான்ஸரை குணப்படுத்த, அஜீரண மாத்திரை சாப்பிடுவது போலத்தான்'

- சோ, துக்ளக் தலையங்கம்

'பெரியாரிஸ்ட்டுகள் வர்க்க பிரச்சினைகளில் அக்கறை காட்டாதது போல, இடதுசாரிகள் சாதியத்திலும் பகுத்தறிவிலும் அக்கறை காட்டவில்லை'

- ஞாநி, தீம்தரிகிட சங்கரபுராணம்

'இருபது வருட யுத்தம் அறுபதாயிரம் உயிர்களை பலிவாங்கியது; இருபது நிமிஷ சுனாமி தாக்குதலோ முப்பதாயிரம் உயிர்களை பலிவாங்கியிருக்கிறது. நம்மால் அடுத்தவருக்கு ஏற்படுத்தும் பாதிப்பை விட இயற்கையால் அதிகமான பாதிப்பை நொடிப்பொழுதில் ஏற்படுத்த முடிந்திருக்கிறது'

- இலங்கை அதிபரின் செய்தி தொடர்பாளர்

'லஞ்சம் வாங்கி சொத்துக் குவிப்பது வீணானது. அதை அனுபவப் பூர்வமாக நீங்கள் உணர வேண்டும். லஞ்சம் வாங்குவோர் பலருடைய குடும்பத்தை பார்த்துவிட்டேன். அவர்களுடைய வாழ்க்கையில் சத்தியமாக சந்தோஷம் இல்லை'

- லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.ஜி.பி பெரியசாமி




'ஒகே, ஓகே.. அதெல்லாம் இருக்கட்டும்... புத்தக கண்காட்சிக்கு போனியே.... என்னவெல்லாம் வாங்குனே'

'அட, இதானே வேண்டாங்கிறது, இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா என்னத்தை சொல்றது'

'பாதி நாள் புத்தக கண்காட்சியில இருந்தியே, அதான் நிறையா வாங்குனியோன்னு நினைச்சு தப்பா கேட்டுட்டேன்'

'ம்.. வாங்குனேன்.. மாலனோட சொல்லாத சொல், இரா.முருகனோட சைக்கிள்முனி, சுதாங்கனோட சுட்டாச்சு சுட்டாச்சு...'

'ப்பூ.. அவ்ளோதானா...'

'என்ன இப்படி கேட்டுட்ட... கையெழுத்துப் பிரதியா வாங்கியிருக்கேன். அதான்.. அவங்கவங்க கையெழுத்து போட்டு...'

'சரி, சரி...அப்புறம் என்னத்தை வாங்குனே...'

'வாஸ்ந்தியோட இந்தியா டுடே கட்டுரைங்க... ஒரு இங்கிலீபுஷ் டிக்ஸனரி அப்புறம் பத்ரி சொல்லியிருந்த தமிழ்நடைக் கையேடு, அப்புறம் ஒரு காந்தி புஸ்தகம்'

'அவ்ளோதானா...'

'இன்னும் நிறைய வாங்கணும்னு நினைச்சேன். எஸ். ராமகிருஷ்ணன் புஸ்தகம் கொஞ்சம், ஹரியண்ணாவோட அனுமன், முத்துராமனோட சதுரங்க சிப்பாய்கள்...'

'ஏன்... வாங்கலையா...'

'ஆட்டோகிரா·ப்போடதான் வாங்கணும்னு நினைச்சேன். ஹரியண்ணா ஆளையே காணோம். முத்துராமன், அசோகமித்திரன் கூட பிஸியா இருந்தாரு. எஸ். ராமகிருஷ்ணன் புஸ்தகம் வாங்கலாம்னா ஆபீஸ்ல லோன் போட்டுத்தான் வாங்கணும் போலிருக்கு!'

'அப்புறம்...'

'கிருபாஷங்கரு ஐஸ்கிரீம், ·பேண்டா, மசால்தோசை, பேல் பூரி வாங்கி கொடுத்தான். பத்ரியை நாலு கடைக்கு அழைச்சுட்டு போய் புக் வாங்க வெச்சு அவரு பர்ஸை காலி பண்ணேன்...'

'அப்புறம்...'

'என்ன அப்புறம் அப்புறம்னு நச நசன்னு கேட்டு தொல்லை பண்றே... இவ்ளோ கேட்குறியே...நீ என்னதான் வாங்கிட்டு வந்தே...'

'ஹி...ஹி... அதான் நீ வாங்கியிருக்கியே...அப்புறம் நான் எதுக்கு....'

Monday, January 17, 2005

காமேஸ்வர கடற்கரை...

பொங்கல் திருநாள். வழக்கமான விசேஷங்கள் எதுவுமில்லை இந்த வருஷம். காலை பதினோரு மணிக்குத்தான் உள்ளூர் நண்பர் ஒருவர் தொலைபேசினார். காமேஸ்வரம் என்கிற கடற்கரை கிராமத்தில் தனக்கு ஒரு நண்பர் இருப்பதாகவும் அந்தப்பகுதியில் சில உதவிகள் தேவைப்படுவதாகவும் சொன்னார். முதல்நாள் போகியன்று சாயந்திரம்தான் சீர்காழி பகுதிகளுக்கு 220 தரைவிரிப்புகளை அனுப்பி வைத்திருந்தேன். நேரிடையாக மக்களுக்கு விநியோகிப்பதில் நிறைய சிக்கல் இருக்கிறது. சிவில் சப்ளை குடோனுக்கு சென்று கொடுத்தால் அரசுத் தரப்பில் அவர்களே தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகித்துவிடுகிறார்கள். அதற்கு சீர்காழி தாண்டி எருக்கூர் வரை சென்று கொடுத்துவிட்டு வரவேண்டும். அங்கே கொண்டுபோய் கொடுப்பதை விட முடிந்தவரை நேரடியாக விநியோகிப்பதே நல்லது என்று அரசுப்பணியிலிருக்கும் நண்பர் ஆலோசனை சொன்னார். எதிர்பாராமல் வந்த அரிசி மூட்டைகளை சர்வ சுதந்திரமாக உலா வரும் எலிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கூடுதல் பொறுப்பும் வந்து சேர்ந்துவிட்டது.



நண்பரிடமிருந்து தகவல் வந்ததும் ரெடியாகிவிட்டேன். ராமேஸ்வரம் தெரியும், அதென்ன காமேஸ்வரம் என்று ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். நாகையிலிருக்கும் அறுசுவை பாபுவை தொடர்பு கொண்டேன். காலையில்தான் சென்னையிலிருந்து திரும்பியதாகவும் அவர் வசிக்கும் பகுதிகளில் பெரிய அளவில் உதவிகள் எதுவும் தேவைப்படாது என்று சொல்லிவிட்டார். சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் காமேஸ்வர யாத்திரைக்கு ரெடியானேன். மற்ற நண்பர்களுக்கு தகவல் சொல்லி வாகன வசதிக்கு ஏற்பாடு செய்து, பேக்கிங்கை காரில் ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையிலிருந்து கிளம்பவே நாலு மணியாகிவிட்டது. நாகப்பட்டினம் போகவேண்டியதில்லை என்பதால் திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்வது என முடிவானது.



காமேஸ்வரம், வேளாங்கண்ணி - கோடியக்கரை மெயின்ரோட்டில் சரியாக ஏழாவது கி.மீட்டரில் இருக்கிறது. மெயின் ரோட்டிலேயே இடதுபுறமாக அரதப்பழசாக இருக்கும் காமேஸ்வர காலனி போர்டு இருட்டி விட்டதால் கண்ணில் படவேயில்லை. கொஞ்சநேர அலைக்கழிப்புகளுக்கு பின்னர் போர்டை கண்டுபிடித்து அங்கிருந்து 2 கி.மீ உள்ளே சென்று நண்பர் வீட்டை அடைந்தோம். அன்புத்துரை என்னும் அந்த நண்பர் தலைஞாயிறு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை செய்பவர். கல்யாண வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்பது போல தடபுடலாக வரவேற்று ஏரியா பக்கம் அழைத்து சென்றார். தரைவிரிப்பை விட அரிசி மூட்டைகளுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைத்தது.



பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெள்ளந்தியாக இருந்தார்கள். ஆனால் பலர் பிரமாதமாக பேசினார்கள். கிளி பேச்சு போல ஒரு வார்த்தை பிசகாமல் தங்களது கஷ்டத்தை திரும்ப திரும்ப சொன்னார்கள். சுனாமி அனுபவத்தை விவரிக்கும்போது 'காதலிக்க நேரமில்லை' நாகேஷ் டச்சிங். நண்பரிடம் விசாரித்ததற்கு ஆரம்ப கட்ட நிவாரணமான ஐந்தாயிரம் ரூபாய் போனவாரமே வந்துவிட்டது என்றும் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அரசே இந்தியன் வங்கியில் எல்லோருக்கும் கணக்கு ஆரம்பித்து லட்சரூபாய் நிவாரண தொகையை செக்காக வழங்கிவிட்டது என்று தெரிவித்தார்.



காமேஸ்வரம் மீனவர் காலனி, பூம்புகாரின் வாணகிரி கிராமத்தை ஞாபகப்படுத்தியது. ஆனால் குடியிருப்புகள் கடலிலிருந்து ஐந்நூறு அடி தள்ளியே இருக்கின்றன. இருட்டிவிட்டதால் படங்களை எடுப்பதற்குள் எனது டப்பா காமிரா படுத்தி எடுத்துவிட்டது. தரைவிரிப்புகளையும் அரிசியையும் விநியோகித்துவிட்டு கடற்கரைக்கு கிளம்பும்போதே இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது.



கடல் வழக்கத்தை விட தற்போது இருநூறு அடி உள்ளே தள்ளி இருப்பதாக உள்ளூர்வாசிகள் சொன்னார்கள். வேளாங்கண்ணியில் இறந்தவர்களில் எட்டு பிணங்கள் இங்கே வந்து ஒதுங்கியதாக சொன்னார்கள். கடற்கரையோரமாக ஒரு கட்டிடம் சுக்குநூறாக உடைந்து கிடந்து. லட்சக்கணக்கான செலவில் கட்டப்பட்ட மீன்பிடி சேகரிப்புக் கூடமாம். 'திறமையான' ஒரு கட்டிட காண்டிராக்டரின் கைவண்ணம்!



சுனாமி பயங்கரத்திற்கு பின்னர் கடற்கரை பக்கம் யாருமே வருவதில்லை என்பதற்கு அடையாளமாக காலடித்தடமே படாத கடற்கரை மணல்வெளிகள். நண்பர் ஒருவர் டார்ச் அடித்து காட்டினார். நண்பரின் செருப்பின் மீதேறி ஒரு நண்டு குடுகுடுவென்று ஓடிய காட்சியும் காமிராவில் சிக்கியது.



பக்கத்திலேயே ஒரு சவுக்கைமர காடு. காட்டின் நடுவே எசுகுபிசகாய் சிக்கியிருக்கும் ஒரு பெரிய போட். எழுபதுகளில் வந்த சினிமாக்களில் கடத்தல்கார ஹீரோ காட்டுக்குள் ஒளித்து வைத்த மாதிரி இருந்தது. இன்னொரு பக்கம் கரையோரமிருக்கும் அத்தனை செடிகொடிகளும் தரையில் சாய்ந்து கிடக்கின்றன. இலைகளெல்லாம் பட்டுப்போய் அது கலவர பூமிதான் என்பதை பளிச்சென்று காட்டுகின்றன. இருட்டில் டார்ச் அடித்து பார்ப்பதால் கூடுதலாக பயங்காட்டுகின்றன.

உள்ளுர் நண்பர் சுட்டிக்காட்டிய இடத்தில் பார்த்தால் நான்கு அடி ஆழத்தில் வரிசையாக இருபது அடிக்கு ஒரு பள்ளம். சுனாமி அலைகள் மேலேழும்பி லேண்ட் ஆன இடமாம். நான்கு அடி ஆழத்தை ஏற்படுத்த வல்ல அலைகளென்றால் அதன் வீச்சு எப்படி இருந்திருக்கும்?



திரும்பி காரை நோக்கி நடக்கும்போது இன்னொரு நண்பர் சுட்டிக்¡ட்டிய இடத்தில் குப்பையாக எதையோ குவித்து வைத்திருந்தார்கள். மார்கழி மாசத்து குளிரில் ராத்திரி பத்து மணிக்கு உப்புக்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தபோது அவர் சொன்ன விஷயம் உடம்பை கொஞ்சம் உலுக்கிப்போட்டது

'இங்க தான் ஏழு பிணத்தை ஒன்ணா போட்டு புதைச்சாங்க...'




காருக்குள் வந்தபின்பும் பேஸ்தடிச்சு போயிருந்தவனிடம் காமிராவை பிடுங்கி என்னையும் ஒரு க்ளிக்கினார் நண்பர். திரும்பி வேளாங்கண்ணி முக்கூட்டு ரோட்டிற்கு வரும்போது மணி ராத்திரி பதினோரு மணி. உள்ளே இரண்டே கி.மீ தூரத்தில் சர்ச். சர்ச் பக்கம் சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசைதான். ஆனால் அர்த்த ராத்திரியில் போனால் என்ன இருக்கப்போகிறது என்பதால் அரைமனதோடு மயிலாடுதுறை திரும்ப தயாரானோம்.



ஒரு டீ குடித்துவிட்டு சுற்றுவட்டாரத்தை நோட்டமிட்டபோது பெரிதாக இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது போல தெரியவில்லை. வழக்கம்போல் பயணிகள் மூட்டை முடிச்சுகளோடு வந்து இறங்கியபடிதான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை சர்ச் நிர்வாகம் தத்தெடுத்துக் கொண்டது போலவே எல்லா உதவிகளையும் முன்னின்று செய்வதாக சொன்னார் கடைக்காரர். மக்களிடம் அநாவசியாக பீதி ஏற்பட்டிருக்கிறது என்று ஆதங்கத்தோடு அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். படுத்துப்போன கடை வியாபாரம்தான் அவரை பேச வைக்கிறது.

பிரச்னையே இதுதான். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா உதவிகளும் கிடைத்துவிடுகிறது. கடற்கரையிலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்துகொண்டு சுனாமியால் மறைமுகமாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் மத்தியில் விரக்த ஜாஸ்தி. இது தவிர அந்தந்த ஏரியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கவனித்துவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட்டில் இடம்பெற்றுவிடலாம். யார் யாருக்கு நிவாரணங்கள் கொடுப்பது பற்றிய பஞ்சாயத்து நடக்கிறது. சில இடங்களில் பிரச்னை முற்றி மோதலாக வெடிக்கிறது. வழக்கம்போல் பஞ்சாயத்து பண்ண வருபவர்கள்... வேறு யார்... நம்மூர் கரை வேஷ்டிகள்தான்!

சேவை செய்ய வந்திருக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் ஸ்டார் ஹோட்டல்களில் தங்கியிருக்கின்றன. கோட் சூட் போட்டுக்கொண்டு பத்துபேர் புடை சூழ நிற்பவர்களிடமிருந்து நான்கு மீனவர்கள் உதவி பெறுவது போல் வரும் படங்களால் பத்திரிக்கையின் ஆறாவது பக்கம் நிறைகிறது. பள்ளிக்கூடங்கள் சொற்ப மாணவர்களுடன் செயல்பட ஆரம்பித்துவிட்டன. கட்டுமரங்களை கைவசம் வைத்திருக்கும் மீனவர்களும் கடலை நோக்கி படகை செலுத்த ஆரம்பித்துவிட்டனர். சுனாமிக்காக கடலோரத்தில் பாதுகாப்பு அரண் வைக்கப்போகிறார்களாமேன்னு பேச்சை ஆரம்பித்தால் லேசான புன்னகை வருகிறது. கிண்டலா, விரக்தியா தெரியவில்லை. முட்டி மோதித்தான் உதவிப்பொருட்களை வாங்கவேண்டிய அவசியம் யாருக்குமில்லை. ஆற அமர இருந்த இடத்திற்கே வந்து கொடுத்துவிட்டு செல்கிறார்கள். யாருக்கும் சுனாமி எதனால் வந்தது, எதிர்காலத்தில் எப்படியெல்லாம் தடுப்பது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லை. 'அகப்பட்டதை சுருட்டுடா'ங்கிற தத்துவம்தான் இங்கே டாலடிக்கிறது.

இன்னொரு சுனாமி வரும்வரை இதுதான் இயல்பு வாழ்க்கை!

Sunday, January 16, 2005

எத்தனை காலம்தான்...

'போதும்' என்கிற வார்த்தையே தமிழில் இல்லையோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது எனக்கு. ஐந்தாயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் வந்து இறங்கியதும் யாருக்கும் தலைகால் புரியவில்லை. உதவி செய்யும் மனப்பான்மை மக்களுக்கு ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயம்தான். அதே நேரத்தில் உதவியை நேரே வந்து செய்பவர்கள் அடுத்த முறை உதவி செய்வதற்கு யோசிக்கத்தான் செய்வார்கள். நடந்து முடிந்த கதையை பற்றி பயனில்லை. எல்லோருக்கும் எல்லாமும் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்பதோடு விஷயத்தை விட்டுவிடலாம்.



இணைய நண்பர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த 1740 தரைவிரிப்புகளில் 550 விநியோகம் செய்தாகிவிட்டது. எஞ்சியவற்றை அடுத்த வாரம்தான் விநியோகம் செய்தாகவேண்டும். நேரடியாக விநியோகம் செய்வதை அரசுத் தரப்பில் கடுமையாக கண்காணிக்கிறார்கள். அரசாங்க குடோன்களில் கொண்டு போய் தரைவிரிப்பை கொடுப்பதிலும் பயன் இருக்காது. சம்பந்தப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து தலைவரையோ அல்லது தெரிந்த நண்பர்கள் யாராவது இருந்தால் அவர்களை தொடர்பு கொண்டு அவசியம் இருந்தால் மட்டுமே விநியோகிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். போக்குவரத்து செலவும் அதிகமாகிவிட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு ஏழு ரூபாய் கேட்கிறார்கள்.

பணத்தையும், பொருட்களையும் அள்ளிவிட்டு இலவசம் என்கிற பெயரில் நடக்கும் எம்.ஜி.ஆர்த்தனம் நிறுத்தப்பட்டாகவேண்டும். சன் டிவி, ஜெயா டிவி, தினமலர் போன்று மீடியாவை கைக்குள் வைத்துக்கொண்டு ஒருதலைபட்சமாக செயல்படுவர்களை புறக்கணிக்கவேண்டும். திரும்ப திரும்ப உணர்வு சுரண்டல் வேலையை செய்துவருபவர்களை பார்த்து உணர்ச்சிவசப்படாமல் நாம் முதலில் இருந்தாகவேண்டும்.

இப்போதைக்கு தேவையானது விஷய தானம் தான். முக்கியமாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளை சமாளிக்க என்னென்ன உத்திகளையெல்லாம் கையாளுகிறார்கள் என்பதை பற்றி விவாதிப்பதும் அத்தகைய திட்ட வரையறைகளை இந்தியாவுக்கு தெரியப்படுத்துவதும்தான் முக்கியமான வேலை. சுனாமி எச்சரிக்கை மையங்களுக்குதான் இப்போது தேவை வந்திருக்கிறது. இது தவிர வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான விஷயங்களை பற்றி பேசுவதும் எழுதுவதும்தான் நல்லது. மற்ற விஷயங்களை சென்னை திரும்பியதும் விபரமாக எழுதுகிறேன்.

- நொந்து போன ராம்கி, மயிலாடுதுறையிலிருந்து....

Sunday, January 09, 2005

சென்னை புத்தக கண்காட்சி - ரவுண்ட் அப்

சொற்ப சென்னைவாசிகள் வேடிக்கைப் பார்க்க வி.ஐ.பிக்கள் சில பேர் மேடையேறி, தமிழில் படிக்கும் பழக்கம் குறைந்து போய் வருவதாக வருத்தப்பட்டு வழக்கம் போல் சென்னை புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார்கள். நுழைவு வாயிலுக்கு பக்கத்திலேயே உணவு விடுதியை (அதாங்க, கேண்டீன்) வைச்சதுக்கு காரணம் தெரியலை. புத்தகங்களை புரட்டிக்கொண்டிருக்கும்போது இயற்கை உந்துதல் வந்தால், கண்காட்சியை விட்டு வெளியேறி தராளமான தண்ணீர் வசதியுடன் புதிதாக கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகளுக்கு போய்வர வசதி உண்டு. ஆனால், திரும்ப உள்ளே வரும்போது புதுசா டிக்கெட் எடுக்கச் சொல்வார்கள்!

ஆரம்பித்து இரண்டு நாட்களாகிவிட்டன. இன்னம் மக்களின் டிரெண்ட் தெரியவில்லை. நான் பார்த்தவரைக்கும் அதிகமாக விற்பனையாகும் புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் சுஜாதாவின் புது படைப்புகள், எஸ். ராமகிருஷ்ணனின் உலக சினிமா, பா.ராகவனின் டாலர் தேசம், சோம. வள்ளியப்பனின் அள்ள அள்ளப் பணம் சுதாங்கனின் சுட்டாச்சு அப்புறம் சில தன்னம்பிக்கை புத்தகங்கள். உலக சினிமா பத்தி மலையாள மனோரமா ரேஞ்சுக்கு ஒரு புத்தகம் எஸ். ராமகிருஷ்ணனிடமிருந்து. மிரட்டியிருக்கிறார். கண்காட்சிக்கு வர்ற சினிமாக்காரங்களெல்லாம் மறக்காம அள்ளிக்கிறாங்க.

இந்த வருஷம் இதுவரைக்கும் நான் வாங்கின புத்தகங்கள்.... எஸ்.ராமகிருஷ்ணனின் துணையெழுத்து, இரா.முருகனின் சைக்கிள் முனி, சுதாங்கனின் சுட்டாச்சு, சுட்டாச்சு. இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்கணும். முக்கியமா சோவின் படைப்புகள் ஏ¦ழுட்டு வாங்கியே ஆகணும். போன வருஷம் கண்ணதாசனின் படைப்புகள் ஒரு தொகுப்பாக வாங்கி இன்னும் புரட்டி பார்க்காமல் வைத்திருக்கிறேன்.

இதுவரைக்கும் 6,7 ஸ்டாலுக்குள் மட்டுமே போய் வந்திருக்கிறேன். பெரியார் பற்றிய புத்தகங்கள் நிறையவே கிடைக்கின்றன. இருபது வருஷத்துக்கு முந்தியே வீரமணி எழுதின 'சங்கராச்சாரி யார்' புத்தகம் அமோகமாக விற்பனையாகிறது. பக்கத்து ஸ்டாலில் ஜெயந்திரர் தெய்வீக மொழிகள்!

முதல் நாளில் பரபரப்பாக விற்பனையான ஜெயகாந்தனின் ஹர ஹர சங்கர இரண்டாவது நாளில் மூச்சு வாங்கியது. ஒரு சிறுகதையை வாய்ப்பாடு சைஸில் அச்சிட்டு யாரும் பிரித்து பார்க்க முடியாத வகையில் பின்னிட்டு நாவல்னு நாமகாரணம் சூட்டி விற்பனை செய்தார்கள். எத்தனை காலம்தான்....!

ரமணரில் ஆரம்பித்து குமுதம், விகடனில் எழுதிக்கொண்டிருக்கும் லேட்டஸ்ட் சாமியார்கள் வரை எல்லோருக்கும் தனித்தனி ஸ்டால் உண்டு. சம்பந்தப்பட்ட சாமியார் புகழ் பாடும் புத்தகங்கள், சிடிக்கள், படங்களும் உண்டு.

புத்தகமெல்லாம் இருக்கட்டும். கேண்டீனில் அருமையான மெறுமெறு சமோசா. கண்ணுக்கு முன்னாலேயே ஹைடெக்காக பொரித்து தருகிறார்கள். சாப்பிடுவதை விட பார்ப்பதற்கு சுகமாக இருக்கிறது. ஒவ்வொரு ஏரியாவிலும் கூல்டிரிங், டீ, காபி, ஐஸ்கிரீம், பாப்கார்ன் கடைகள். புத்தகங்களை விட தரமாகவே இருக்கின்றன!

Wednesday, January 05, 2005

சினிமா 2004

இந்த வருஷம் சிறந்த படம்னு நான் எதையாவது சொல்லி வைச்சா என் மனசாட்சியே 'சுனாமி' மாதிரி என்னை சுக்குநூறாக்கிடும். எந்த படத்தையும் தியேட்டரிலோ, திருட்டு விசிடியிலோ பார்க்காததால் நமக்கெல்லாம் அந்த தகுதியில்லை. ஆனாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் டிவியில் மொழி வித்தியாசம் பார்க்காமல் ரிமோட்டை போட்டு உருட்டிக்கொண்டே இருப்பேன். முக்கியமாக மதன்ஸ் திரைப்பார்வை, சூர்யா டிவியில் வரும் சினிமா விமர்சனம், ஞாயிறு காலையில் வரும் தெலுங்கு சினிமா டாப் டென். இதெல்லாமே கொஞ்சமாவது சினிமாவை பற்றி தெரிந்து கொள்ள வைத்தது. எங்கே போனாலும், யார் சினிமா பற்றி பேசினாலும் காதை தீட்டி வெச்சுக்கிட்டு கம்முன்னு இருந்துடுவேன்!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த வருஷம் பரபரப்பை அள்ளிக்கொண்டு போனவர் கமல்ஹாசன் என்றுதான் நினைக்கிறேன். சீரியஸ் சினிமா ரசிகர்களுக்காக விருமாண்டி, கமர்ஷியலுக்காக வசூல்ராஜான்னு இந்த வயசிலும் அவர் கொடி பறக்குது! இந்த வருஷம் நான் அதிகமாக முணுமுணுத்த சினிமா பாடல் ரமேஷ் விநாயகத்தின் குரலில் 'விழிகளின் அருகினில் வானம்'. வாவ்! ரசித்த காமெடியாக 'கல்யாண ராமனாக' வடிவேலு, பார்த்திபனிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படும் காமெடி டிராக்கை சொல்லாம். இப்போ, லேட்டஸ்டா 'காதல்' படத்தில் ஒரு பொடிசு, டயலாக் டெலிவரியிலேயே அசத்தியிருக்கிறது.

லேட்டஸ்டாக விஜய் கூட ஆடி, அசைந்து மாளிகை கடை லிஸ்ட் போட்ட கர்ணம் மல்லேஸ்வரியின் சிஸ்டர் கணக்காக இருக்கும் ஒரு கவர்ச்சிப்புயல்தான் கன்னடத்தில் 'மன்தராசா'ன்னு மாத்தாடி ஒரு ஆட்டம் போட்டிருக்காக.... ஜெமினி டிவி பக்கம் ரிமோட்டை திரும்பும்போது எப்படியும் சிக்கும். பயப்படாம பாருங்க! 'முத்துவை' ஸீன் பை ஸீன் சுட்டுப்போட்டு கன்னடத்தில் ரவிச்சந்திரன் ஒரு ஹிட் கொடுத்துருக்காரு. வேடிக்கையா இருக்குது! தெலுங்கு சினிமாவை பொறுத்தவரைக்கும் இந்த வருஷம் கஷ்டகாலம். சிரஞ்சீவிகாரு மட்டும் கஷ்டப்பட்டு ரெண்டு ஹிட் கொடுத்து தன்னை காப்பாத்திக்கிட்டாரு.

வழக்கம் போல அசத்திக்கொண்டிருப்பவர்கள் மலையாளத்துக்காரர்கள்தான். மோகன்லால், மம்முட்டி பெரிசுங்க எல்லாம் இந்த வருஷம் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பதாக செய்தி. இன்னொரு பக்கம் '4 த ஆர்மி' எடுத்து ஒரு சின்ன பசங்க கூட்டம் வேறு கலக்கிட்டிருக்கு. இன்னொரு ஆச்சரியமான விஷயம். நம்மூரு பக்கம் வந்து போணியாகாத சின்னத்திரை 'ஜோ' ஷர்மிலிதான் அங்கே முன்னணி நட்சத்திரமாம்! (இதெல்லாம் ரொம்ப தேவையான்னு நீங்க நினைக்கிறதுக்குள்ள அடுத்த மேட்டருக்கு தாவிடறேன்!)

கொஞ்ச நாள் முன்னாடிதான் அந்த படத்தோடு திரை விமர்சனத்தை சூர்யா டிவியில் பார்த்தேன். கமலின் இயக்கத்தில் வந்திருக்கும் 'பெருமழைக்காலம்'. படம் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு திரும்பி விட்டது என்பது வேறு விஷயம். கொஞ்ச நாட்களாக மலையாள திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் 'மீசை மாதவன்' திலீப் - காவ்யா மாதவன் ஜோடி பவர்·புல் பாத்திரத்தில் எதிரும் புதிருமாக. கூடவே மீரா ஜாஸ்மீன் வேறு.

கதை ரொம்ப சிம்பிள். ஒரு வளைகுடா நாட்டில் வசிக்கும் திலீப், ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் வினீத்தின் சாவுக்கு காரணமாகி தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறார். அதிலிருந்து தப்பிக்க ஓரே வழி செத்துப்போன வினீத்தின் மனைவி காவ்யா மாதவனிடமிருந்து ஒரு மன்னிப்புக் கடிதம்.

திலீப்-மீரா ஜாஸ்மின் ஜோடியோ இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள். வினீத்தும் காவ்யா மாதவனும் பக்கா பிராமின் குடும்பம். காவ்யா மாதவனை எப்படி சம்மதிக்க வைத்து மீரா ஜாஸ்மீன் மன்னிப்புக் கடிதத்தை பெற்று தனது கணவரை தூக்கு தண்டனையிலிருந்து மீட்கிறார் என்பதுதான் கதை. காவ்யா, மீரா என இரு கதாநாயகிகளை மையப்படுத்தியிருக்கிறார்கள்.



உள்ளூரில் டீச்சராக வேலைபார்த்துக்கொண்டு வெளிநாட்டிலிருக்கும் கணவரை நினைத்துக்கொண்டே காலத்தை ஓட்டும் வெயிட்டான ரோல் காவ்யா மாதவனுக்கு. டிபிகல் கேரள பெண்மணியாக அசத்தியிருக்கிறார். வெள்ளைச்சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு நெற்றியை சுருக்கிக் கொண்டு கலகல காவ்யா மாதவனா இது என்று ஆச்சர்யப்படுத்துகிறார்.

படத்தின் பெரிய பலம் காமிராமேன். படம் முழுவதும் பசு¨மையான மரங்களினூடே மெல்லியதாக மழை பெய்து கொண்.....டே இருக்கிறது! பாத்திரங்கள் பேசும்போதெல்லாம் பின்னணியில் மெல்லியதாய், இழையோடும் மழைத்துளிகள்.....இதைத்தான் ரம்மியம் என்று சொல்வாங்களோ?!

Tuesday, January 04, 2005

தரங்கம்பாடி கடற்கரையோரம்...

கையில் ஜெப மாலை ஏந்தி கண் மூடி கிறிஸ்துவ சகோதரர்கள் சொல்லும் பிரார்த்தனை ஸ்லோகங்கள் அலைகளின் இரைச்சலில் காதில் விழுவில்லை. ஆனால், பிரார்த்தனைக்கான காரணம் புரிகிறது. கடல் அலைகள் கரைத்தாலும் இன்னமும் கரையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயிலை பார்க்கும்போது பழைய ஞாபகமெல்லாம் வருகிறது. அனந்தமங்கலம் ஆஞ்சனேயரை தரிசித்துவிட்டு கடற்கரையோரமாகவே காலார நடந்து தரங்கம்பாடி வரும்போது, தாகமெடுத்து உப்பு தண்ணீர் குடித்த அந்த மீனவர் குப்பம் இப்போது இல்லை.







ஆஜானுபாகுவாய் கடற்கரையோரமாய் உயர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற தரங்கம்பாடி கோட்டையில் தற்போது எலி கூட இருக்க நினைக்காது என்று சொல்லலாம். வருஷக்கணக்காக புயலையும் மழையையும் பார்த்த சலித்த கோட்டைக்கு சுனாமியெல்லாம் சும்மா. சுனாமியின் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல அமைதியாகவே இருக்கிறது. கோட்டையை கட்டியவரின் கல்லறையாக சொல்லப்படும் அந்த நினைவுச்சின்னமும் கூட!




இந்த முறை டூவீலரிலேயே புறப்பட்டுவிட்டோம். காரைக்கால் பகுதியிலிருக்கும் மீனவர் குப்பங்களுக்கு போய்வர டூவீலர்தான் செளகரியம். பத்ரியின் மற்றும் எனது ரூம்மேட்டின் உதவியால் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த இரண்டாயிரம் சோப் மற்றும் இரண்டாயிரம் தேங்காய் எண்ணெய் சாஷேக்களை 300 எண்ணிக்கையில் தனித்தனியாக பிரித்து வண்டியில் ஏற்றிக்கொண்டோம். ஆக்கூரை தாண்டியதுமே நாகப்பட்டினத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த மீட்பு நடவடிக்கையினரின் வேனிலிருந்தவர்கள் சொல்லித்தான் ஏரியாவில் எண்ணெய், சோப் வகையறாக்களுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரிந்தது. சடலங்களை கையாள்பவர்களுக்கு தேவையாக இருக்குமென்று அவர்கள் சொன்னதன் பேரில் ஒரு முப்பது சாஷேக்களை தனியாக கட்டி கொடுத்துவிட்டோம்.

காரைக்கால் நெடுஞ்சாலைக்கு பக்கமாகவே இருக்கிறது அந்த தோரண வாயில். கடலிலிருந்து சரியாக அரை கி.மீ தூரத்திலிருக்கும் தோரண வாயிலில்தான் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனவாம். கோட்டையை சுற்றிலும் ஏராளமான கிறிஸ்துவ கல்வி நிலையங்கள். ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள். அப்படியொரு பயிற்சி பள்ளியில்தான் தரங்கம்பாடி மீனவர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். தரங்கம்பாடியை பொறுத்தவரை மீனவர் குப்பங்களின் எண்ணிக்கை குறைவுதான்.



முகாமுக்கு நான் போய் சேரும்போது யாரோ ஒரு முக்கியஸ்தர், சிஸ்டரிடம் உதவிகள் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். தேங்காய் எண்ணெயும், குளியல் சோப்பும் கொண்டு வந்திருப்பதை தெரிவித்ததுடன் நம்மை காத்திருக்க சொல்லிவிட்டு போனார். அரைமணி நேரம் கழித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது கையாலேயே குளியல் சோப்புகளை கொடுக்கச் சொன்னவரை மறுத்துவிட்டு அவரையே கொடுக்க சொன்னோம். எஞ்சியிருந்த குளியல் சோப்புகளையும் இன்னொரு முறை விநியோகித்துவிட்டு வேறு ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதாக சொல்லி நமது செல் நம்பரையும் வாங்கி வைத்துக்கொண்டார்.



நாகை செல்லும் ரோட்டிலிருந்து இடது பக்கம் திரும்பி பொறையார் நோக்கி பயணம். கடலை நோக்கி மாலையை சுழற்றிப் போடும் ராஜீவ் காந்தியின் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மூட்டை மூட்டையாக... வேறென்ன.... உதவியாக வந்து குவிந்த பழைய துணிகள்தான். பொறையாரில் மட்டும் மூன்று அகதிகள் முகாம்கள். எல்லா முகாமிலும் நாம் எடுத்துக்கொண்டு வந்த பொருட்களை வாங்க தயங்கினார்கள். அரசாங்க உத்தரவாம். தரங்கம்பாடியில் சனிக்கிழமையன்று கர்நாடகத்திலிருந்து வந்த உதவி வேனை சிலர் தங்களது பகுதிக்கு கடத்திக்கொண்டு போய் சூறையாடிய சம்பவத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. தனியார் கொண்டு வரும் எந்தப் பொருட்களானாலும் ரெவின்யூ ஆபிஸ் மூலம் அரசாங்க கிடங்கிற்கு எடுத்துச்சென்று சகல விபரங்களையும் ஒரு ரெஜிஸ்தரின் எழுதிவிட்டு நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பி விடுகிறார்கள். மயிலாடுதுறை பஞ்சாயத்து ஆபிஸில் வேலை பார்க்கும் நண்பரை தொலைபேசியில் உதவிக்கு அழைத்ததும் எத்தனை பேர் பொறையார் ஏரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற விபரம் நமக்கு கிடைத்துவிட்டது. அதற்கேற்றபடி கொண்டு வந்த பொருட்களை பிரித்து கொடுத்து ·பார்மலாட்டீஸ் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பும்போதே மதியம் ஒன்றரை மணியாகிவிட்டது.

அங்கிருந்து சந்தரபாடி கிராமம். தரங்கம்பாடி, காரைக்கால் வட்டாரத்திலேயே அதிக பாதிப்புக்குள்ளான கிராமம். டூவீலரிலேயே கிராமத்துக்கு உள்ளே வரமுடியாது நிலை. வேன், கார் பற்றி கேட்கவே வேண்டாம்! ஊருக்கள் நுழைவதற்கு அரை மீட்டர் தூரத்திலேயே விளைச்சல் நிலத்தில் ஒரு படகு நிற்கிறது. சந்திரபாடி கிராமத்தின் அமைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடா, பாண்டிச்சேரியா என்று குழம்பும் அளவுக்கு நில அமைப்பு. காரைக்கால் எல்லையோரமாகவே பயணித்து தமிழ்நாட்டிற்கு வந்து, பின்னர் காரைக்கால் அதற்கு பின்னர் தமிழ்நாடு... ஒருவழியாக தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்பதை கிராமத்திலிருந்தவர்தான் உறுதிப்படுத்தினார். தீப்பெட்டியை நெருக்கமாக அடுக்கி வைத்த மாதிரி சின்ன சின்ன குடிசைகள், கடற்கரையிலிருந்து ஐம்பதே அடி தூரத்தில்!

நாம் போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் மூன்று சடலங்களை தோண்டி எடுத்தார்களாம். ஆங்காங்கே குப்பைகளை போட்டு எரித்துக்கொண்டிருந்தார்கள். கடலோரமாக ஓரிடத்தில் மட்டும் அதிகமான குப்பைகளை போட்டு எரித்துக் கொண்டிருந்தார்கள். 'குப்பையை எரிச்சா இவ்ளோ நாத்தமாடா வரும்'னு நண்பரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே கிராமத்து ஆசாமி குறுக்கிட்டார். 'அதெல்லாம் எடுத்த பொணமுங்க!'




ஊர் முழுவதும் மருந்து தெளித்து வைத்திருக்கிறார்கள். சந்திரபாடியின் பிரசிடெண்ட் சுறுசுறுப்பான இளைஞர். ஊருக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் பெரிய கும்பிடாக போட்டு வருவேற்கிறார். எங்கிருந்து வந்திருக்கிறோம் என்கிற விபரங்களையெல்லாம் கேட்டுவிட்டு அவரது செல் நம்பரையும் கொடுக்கிறார். நாம் கேட்பதற்குள்ளாகவே அவரே சொல்லிவிடுகிறார். 'இப்போதைக்கு எல்லாம் கிடைக்கிறது ஸார். பத்து பதினைஞ்ச நாள் கழிச்சுத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை' பெரும்பாலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் ஊருக்குள் வந்து உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். ஊருக்குள் வந்து உதவிகள் செய்பவர்களுக்காகவே சின்ன கிடங்கு மாதிரி ஒரு ஸ்கூலை வைத்திருக்கிறார்கள். மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஒலு கோஷ்டியினர் புதுப் புடவைகளையும், புது பிளாஸ்டிக் குடங்களையும் மக்களுக்கு விநியோகித்துவிட்டு செயற்கையாக ஒரு போஸ் கொடுத்து அதை காமிராவால் கவர் செய்து கொண்டிருந்ததை பார்த்து வேடிக்கையாகவும் இருந்தது; வேதனையாகவும் இருந்தது.




அங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் காரைக்கால் பீச். கடற்கரைக்கு போவதற்கு காரைக்கால் - நாகை மெயின் ரோட்டிலிருந்து அரை கி.மீ பயணம் செய்ய வேண்டும். மெயின் ரோட்டிலிருந்து திரும்பும்போதே ஒரு பெரிய படகு தலைக்குப்புற கிடக்கிறது. தார் சாலையையும் ஒரு கை பார்த்து ரோட்டோரத்திலிருக்கும் கைப்பிடிச் சுவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு தான் போயிருக்கிறது சுனாமி அலைகள். லைட் ஹவுஸில் டூட்டி பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேன்தான் விபரமாக சொன்னார். காரைக்கால் பீச்சிலிருந்து மட்டும் இருபது சடலங்களை மீட்டிருக்கிறார்களாம். அவற்றில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் வந்தவர்களும் காராத்தே பயிற்சி பெற வந்த குட்டீஸ்களும்தான். இரண்டு பொடியன்களை காப்பாற்ற முயற்சி செய்து இரும்பு தூண் தடுத்ததால் தலையில் அடிப்பட்ட கராத்தே பயிற்சியாளர் தற்போது நாகை பொது மருத்துவமனையில்.



வெறிச்சோடி கிடக்கிறது காரைக்கால் பீச். இன்னமும் கடற்கரையோரமாக நடக்க தயங்கும் மக்களுக்கு மத்தியில் ஓரே ஒரு மாடு மட்டும் ஆடாமல், அசையாமல் படுத்துக்கிடக்கிறது. சுண்டல் ஸ்டால்களும், சர்பத் ஸ்டால்களும் சகட்டு மேனிக்கு நொறுங்கி கிடக்கின்றன. காரைக்கால் பீச்சில் யாரும் சங்குகளையும் கிளிஞ்சல்களையும் பார்க்க முடியாது. ஆனால், தற்போது ஏதோதோ வடிவங்களில் கிளிஞ்சல்கள் வாரிக்கிடக்கின்றன. கடற்கரையோரமாக புயல் எச்சரிக்கை மையம் பத்தடி உயர காம்பவுண்டு சுவருக்குள் பத்திரமாக இருக்கிறது. ஆனால், காம்பவுண்டு வளாகத்தினுள் ஒரு படகு ஒன்று தலைகுப்புற கிடப்பதை வைத்து தாக்கிய சுனாமி அலைகளின் உயரத்தை யூகிக்க முடிகிறது.



கையிலிருந்த 200 சோப்களை காரைக்கால் நகரத்திற்குள்ளேயே இருந்த முகாமில் சேர்ப்பித்தோம். கட்டுமரங்கள் கொடுத்தாலே போதும், நாங்கள் எப்படியாவது பிழைச்சுப்போம்னு நிறைய மீனவர்கள் சொல்வதை கேட்க முடிந்தது. ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்து ஊர் விட்டு ஊர் வந்து உதவிகள் வழங்கிடும் தன்னார்வலர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் கிளாஸ் எடுத்தாகவேண்டும்.




நிறைய பேர் முகாம்களில் போடும் சாப்பாடு பிடிக்காமல் பக்கத்திலிருக்கும் மெஸ்களுக்கு போய் நான் வெஜ் ஐட்டங்களை ஒரு வெட்டு வெட்டுகிறார்கள். 'ஆயிரம் கஷ்டம் வந்தாலும் அலட்டிக்காம சாப்புடுறானே'ன்னு கூட வந்த நண்பர் பொருமித் தள்ளினார். 'உண்மையிலேயே பாதிக்கப்பட்டவனா இருந்தா சோறு, தண்ணி கூட உள்ளே போவாது...இவனெல்லாம் கருப்பா அலை வருதுன்னு சொன்னவுடனேயே காசு கிடைக்குமேன்னு ஓடி வந்து உட்கார்ந்துகிட்டவனுங்க'ன்னு இன்னொரு நண்பர் கமெண்ட் அடித்தார். எனக்குதான் ஒண்ணும் புரியலை!



தமிழக அரசின் நடவடிக்கைகளில் கடந்த மூன்று நாட்களாகவே அசுர வேகமிருப்பதை சம்பந்தப்பட்ட ஏரியாவிலிருப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அரசு இயந்திரத்தையெல்லாம் ஒழுங்குப்படுத்தி ஞாயிறு அன்றே களத்தில் இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தினந்தோறும் வரும் அதிரடி அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் அஸ்திரங்கள்தான். இந்த ஆடு புலி ஆட்டம், அறிவுப்பூர்வமாக அமைந்தால் தமிழ்நாட்டின் கஜானா காப்பாற்றப்படும். ஆனாலும் சுனாமி அலைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னைப் பொறுத்தவரையில் உதவி மனப்பான்மை தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது; அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கூட்டமும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் லயன்ஸ், ரோட்டரி கிளப், ஆர்.எஸ்.எஸ், கிறிஸ்துவ திருச்சபை படை தவிர வேறெந்த அரசியல் அமைப்பும் இல்லை. கழகங்களை காணவில்லை. சின்ன விஷயத்துக்கெல்லாம் கொடி பிடிக்கும் கம்யூனிஸ தோழர்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதியினர் இல்லையென்பதாலோ ஜாதிக் கட்சிகளும் களத்தில் இல்லை. கஷ்டம் என்று வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், ரசிகர் மன்றங்களை நம்பாமல் இருப்பதுதான் நல்லது.

இரண்டு நாட்களாக எத்தனையோ பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போயிருந்தாலும் சந்திரபாடியை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. சுனாமி சோகத்தை அப்படியே முகத்தில் அறைவது மாதிரியான குப்பத்து காட்சிகள். வாழ்க்கையை தொலைத்த கிராமத்து மக்கள். உதவிகளை பெற்றுக்கொள்வதில் அவசரம் காட்டியோ வேறு ஏதாவது கிடைக்குமா என்கிற ஆர்வமோ இல்லாத இறுக்கமான முகங்கள். இரண்டு குழந்தைகளையும் மடியில் படுக்க வைத்துக்கொண்டு வழியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் மனைவியை சுனாமிக்கு பலி கொடுத்த கணவன். எந்த தகப்பனுக்கும் நேரக்கூடாத சோகம். இப்போதைக்கு அவர்களுக்கு நாம் தர வேண்டியது உதவிகள் அல்ல; ஆறுதல்தான்.

Sunday, January 02, 2005

பூம்புகார் பகுதி காட்சிகள்


குப்பை மேடாகியிருக்கும் குடிசைகள் இருந்த பகுதி


சிதைந்த கட்டிடங்கள்


கரையோரம் ஒதுங்கும் சடலத்திற்காக மெடிக்கல் டீம்


புதிதாக வந்திருக்கும் மின்சார போஸ்ட்


இழப்பை பற்றி விசாரிக்கும் வெளிநாட்டு பயணி


கடல் மணல் கருமணலாக


களையிழந்த காவிபூம்பட்டினம்


மரக்காணத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் படகு


மேலையூர் முகாமில் குழந்தைகளின் பொழுதுபோக்கு


புத்தம் புது துணிகளையும் வாங்குவதற்கு ஆளில்லை


புதிதாக உருவாகி வரும் மீனவ குப்பங்கள்


உடையாத பழைய கட்டிடம்


சாப்பிட்டுப் போக சொன்ன பாட்டி, மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன்


கரையோரம் ஒதுங்கியிருக்கும் சர்டிபிகேட்ஸ்


ஆர்ப்பரிக்கும் அலை


அடையாளம் தெரியாமல் போன புதுக்குப்பம்


உதவிக்கு வந்த துணிமணிகள் வாணகிரியின் தெருக்களில்