Tuesday, January 04, 2005

தரங்கம்பாடி கடற்கரையோரம்...

கையில் ஜெப மாலை ஏந்தி கண் மூடி கிறிஸ்துவ சகோதரர்கள் சொல்லும் பிரார்த்தனை ஸ்லோகங்கள் அலைகளின் இரைச்சலில் காதில் விழுவில்லை. ஆனால், பிரார்த்தனைக்கான காரணம் புரிகிறது. கடல் அலைகள் கரைத்தாலும் இன்னமும் கரையோடு ஒட்டிக்கொண்டிருக்கும் தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயிலை பார்க்கும்போது பழைய ஞாபகமெல்லாம் வருகிறது. அனந்தமங்கலம் ஆஞ்சனேயரை தரிசித்துவிட்டு கடற்கரையோரமாகவே காலார நடந்து தரங்கம்பாடி வரும்போது, தாகமெடுத்து உப்பு தண்ணீர் குடித்த அந்த மீனவர் குப்பம் இப்போது இல்லை.







ஆஜானுபாகுவாய் கடற்கரையோரமாய் உயர்ந்திருக்கும் பிரசித்தி பெற்ற தரங்கம்பாடி கோட்டையில் தற்போது எலி கூட இருக்க நினைக்காது என்று சொல்லலாம். வருஷக்கணக்காக புயலையும் மழையையும் பார்த்த சலித்த கோட்டைக்கு சுனாமியெல்லாம் சும்மா. சுனாமியின் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல அமைதியாகவே இருக்கிறது. கோட்டையை கட்டியவரின் கல்லறையாக சொல்லப்படும் அந்த நினைவுச்சின்னமும் கூட!




இந்த முறை டூவீலரிலேயே புறப்பட்டுவிட்டோம். காரைக்கால் பகுதியிலிருக்கும் மீனவர் குப்பங்களுக்கு போய்வர டூவீலர்தான் செளகரியம். பத்ரியின் மற்றும் எனது ரூம்மேட்டின் உதவியால் சென்னையிலிருந்து கொண்டு வந்திருந்த இரண்டாயிரம் சோப் மற்றும் இரண்டாயிரம் தேங்காய் எண்ணெய் சாஷேக்களை 300 எண்ணிக்கையில் தனித்தனியாக பிரித்து வண்டியில் ஏற்றிக்கொண்டோம். ஆக்கூரை தாண்டியதுமே நாகப்பட்டினத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்த மீட்பு நடவடிக்கையினரின் வேனிலிருந்தவர்கள் சொல்லித்தான் ஏரியாவில் எண்ணெய், சோப் வகையறாக்களுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரிந்தது. சடலங்களை கையாள்பவர்களுக்கு தேவையாக இருக்குமென்று அவர்கள் சொன்னதன் பேரில் ஒரு முப்பது சாஷேக்களை தனியாக கட்டி கொடுத்துவிட்டோம்.

காரைக்கால் நெடுஞ்சாலைக்கு பக்கமாகவே இருக்கிறது அந்த தோரண வாயில். கடலிலிருந்து சரியாக அரை கி.மீ தூரத்திலிருக்கும் தோரண வாயிலில்தான் அதிகமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனவாம். கோட்டையை சுற்றிலும் ஏராளமான கிறிஸ்துவ கல்வி நிலையங்கள். ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள். அப்படியொரு பயிற்சி பள்ளியில்தான் தரங்கம்பாடி மீனவர்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். தரங்கம்பாடியை பொறுத்தவரை மீனவர் குப்பங்களின் எண்ணிக்கை குறைவுதான்.



முகாமுக்கு நான் போய் சேரும்போது யாரோ ஒரு முக்கியஸ்தர், சிஸ்டரிடம் உதவிகள் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தார். தேங்காய் எண்ணெயும், குளியல் சோப்பும் கொண்டு வந்திருப்பதை தெரிவித்ததுடன் நம்மை காத்திருக்க சொல்லிவிட்டு போனார். அரைமணி நேரம் கழித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நமது கையாலேயே குளியல் சோப்புகளை கொடுக்கச் சொன்னவரை மறுத்துவிட்டு அவரையே கொடுக்க சொன்னோம். எஞ்சியிருந்த குளியல் சோப்புகளையும் இன்னொரு முறை விநியோகித்துவிட்டு வேறு ஏதாவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதாக சொல்லி நமது செல் நம்பரையும் வாங்கி வைத்துக்கொண்டார்.



நாகை செல்லும் ரோட்டிலிருந்து இடது பக்கம் திரும்பி பொறையார் நோக்கி பயணம். கடலை நோக்கி மாலையை சுழற்றிப் போடும் ராஜீவ் காந்தியின் சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மூட்டை மூட்டையாக... வேறென்ன.... உதவியாக வந்து குவிந்த பழைய துணிகள்தான். பொறையாரில் மட்டும் மூன்று அகதிகள் முகாம்கள். எல்லா முகாமிலும் நாம் எடுத்துக்கொண்டு வந்த பொருட்களை வாங்க தயங்கினார்கள். அரசாங்க உத்தரவாம். தரங்கம்பாடியில் சனிக்கிழமையன்று கர்நாடகத்திலிருந்து வந்த உதவி வேனை சிலர் தங்களது பகுதிக்கு கடத்திக்கொண்டு போய் சூறையாடிய சம்பவத்திற்கு பின்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது. தனியார் கொண்டு வரும் எந்தப் பொருட்களானாலும் ரெவின்யூ ஆபிஸ் மூலம் அரசாங்க கிடங்கிற்கு எடுத்துச்சென்று சகல விபரங்களையும் ஒரு ரெஜிஸ்தரின் எழுதிவிட்டு நம்மிடம் கையெழுத்தும் வாங்கிக்கொண்டு அனுப்பி விடுகிறார்கள். மயிலாடுதுறை பஞ்சாயத்து ஆபிஸில் வேலை பார்க்கும் நண்பரை தொலைபேசியில் உதவிக்கு அழைத்ததும் எத்தனை பேர் பொறையார் ஏரியாவில் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற விபரம் நமக்கு கிடைத்துவிட்டது. அதற்கேற்றபடி கொண்டு வந்த பொருட்களை பிரித்து கொடுத்து ·பார்மலாட்டீஸ் எல்லாவற்றையும் முடித்துவிட்டு கிளம்பும்போதே மதியம் ஒன்றரை மணியாகிவிட்டது.

அங்கிருந்து சந்தரபாடி கிராமம். தரங்கம்பாடி, காரைக்கால் வட்டாரத்திலேயே அதிக பாதிப்புக்குள்ளான கிராமம். டூவீலரிலேயே கிராமத்துக்கு உள்ளே வரமுடியாது நிலை. வேன், கார் பற்றி கேட்கவே வேண்டாம்! ஊருக்கள் நுழைவதற்கு அரை மீட்டர் தூரத்திலேயே விளைச்சல் நிலத்தில் ஒரு படகு நிற்கிறது. சந்திரபாடி கிராமத்தின் அமைப்பே கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது. தமிழ்நாடா, பாண்டிச்சேரியா என்று குழம்பும் அளவுக்கு நில அமைப்பு. காரைக்கால் எல்லையோரமாகவே பயணித்து தமிழ்நாட்டிற்கு வந்து, பின்னர் காரைக்கால் அதற்கு பின்னர் தமிழ்நாடு... ஒருவழியாக தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்பதை கிராமத்திலிருந்தவர்தான் உறுதிப்படுத்தினார். தீப்பெட்டியை நெருக்கமாக அடுக்கி வைத்த மாதிரி சின்ன சின்ன குடிசைகள், கடற்கரையிலிருந்து ஐம்பதே அடி தூரத்தில்!

நாம் போய்ச் சேருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் மூன்று சடலங்களை தோண்டி எடுத்தார்களாம். ஆங்காங்கே குப்பைகளை போட்டு எரித்துக்கொண்டிருந்தார்கள். கடலோரமாக ஓரிடத்தில் மட்டும் அதிகமான குப்பைகளை போட்டு எரித்துக் கொண்டிருந்தார்கள். 'குப்பையை எரிச்சா இவ்ளோ நாத்தமாடா வரும்'னு நண்பரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதே கிராமத்து ஆசாமி குறுக்கிட்டார். 'அதெல்லாம் எடுத்த பொணமுங்க!'




ஊர் முழுவதும் மருந்து தெளித்து வைத்திருக்கிறார்கள். சந்திரபாடியின் பிரசிடெண்ட் சுறுசுறுப்பான இளைஞர். ஊருக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் பெரிய கும்பிடாக போட்டு வருவேற்கிறார். எங்கிருந்து வந்திருக்கிறோம் என்கிற விபரங்களையெல்லாம் கேட்டுவிட்டு அவரது செல் நம்பரையும் கொடுக்கிறார். நாம் கேட்பதற்குள்ளாகவே அவரே சொல்லிவிடுகிறார். 'இப்போதைக்கு எல்லாம் கிடைக்கிறது ஸார். பத்து பதினைஞ்ச நாள் கழிச்சுத்தான் என்ன பண்றதுன்னு தெரியலை' பெரும்பாலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும் ஊருக்குள் வந்து உட்கார்ந்திருப்பதையே விரும்புகிறார்கள். ஊருக்குள் வந்து உதவிகள் செய்பவர்களுக்காகவே சின்ன கிடங்கு மாதிரி ஒரு ஸ்கூலை வைத்திருக்கிறார்கள். மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஒலு கோஷ்டியினர் புதுப் புடவைகளையும், புது பிளாஸ்டிக் குடங்களையும் மக்களுக்கு விநியோகித்துவிட்டு செயற்கையாக ஒரு போஸ் கொடுத்து அதை காமிராவால் கவர் செய்து கொண்டிருந்ததை பார்த்து வேடிக்கையாகவும் இருந்தது; வேதனையாகவும் இருந்தது.




அங்கிருந்து நான்கு கி.மீ தூரத்தில் காரைக்கால் பீச். கடற்கரைக்கு போவதற்கு காரைக்கால் - நாகை மெயின் ரோட்டிலிருந்து அரை கி.மீ பயணம் செய்ய வேண்டும். மெயின் ரோட்டிலிருந்து திரும்பும்போதே ஒரு பெரிய படகு தலைக்குப்புற கிடக்கிறது. தார் சாலையையும் ஒரு கை பார்த்து ரோட்டோரத்திலிருக்கும் கைப்பிடிச் சுவர்களையெல்லாம் வீழ்த்திவிட்டு தான் போயிருக்கிறது சுனாமி அலைகள். லைட் ஹவுஸில் டூட்டி பார்த்துக்கொண்டிருந்த வாட்ச்மேன்தான் விபரமாக சொன்னார். காரைக்கால் பீச்சிலிருந்து மட்டும் இருபது சடலங்களை மீட்டிருக்கிறார்களாம். அவற்றில் பெரும்பாலானவர்கள் வாக்கிங் வந்தவர்களும் காராத்தே பயிற்சி பெற வந்த குட்டீஸ்களும்தான். இரண்டு பொடியன்களை காப்பாற்ற முயற்சி செய்து இரும்பு தூண் தடுத்ததால் தலையில் அடிப்பட்ட கராத்தே பயிற்சியாளர் தற்போது நாகை பொது மருத்துவமனையில்.



வெறிச்சோடி கிடக்கிறது காரைக்கால் பீச். இன்னமும் கடற்கரையோரமாக நடக்க தயங்கும் மக்களுக்கு மத்தியில் ஓரே ஒரு மாடு மட்டும் ஆடாமல், அசையாமல் படுத்துக்கிடக்கிறது. சுண்டல் ஸ்டால்களும், சர்பத் ஸ்டால்களும் சகட்டு மேனிக்கு நொறுங்கி கிடக்கின்றன. காரைக்கால் பீச்சில் யாரும் சங்குகளையும் கிளிஞ்சல்களையும் பார்க்க முடியாது. ஆனால், தற்போது ஏதோதோ வடிவங்களில் கிளிஞ்சல்கள் வாரிக்கிடக்கின்றன. கடற்கரையோரமாக புயல் எச்சரிக்கை மையம் பத்தடி உயர காம்பவுண்டு சுவருக்குள் பத்திரமாக இருக்கிறது. ஆனால், காம்பவுண்டு வளாகத்தினுள் ஒரு படகு ஒன்று தலைகுப்புற கிடப்பதை வைத்து தாக்கிய சுனாமி அலைகளின் உயரத்தை யூகிக்க முடிகிறது.



கையிலிருந்த 200 சோப்களை காரைக்கால் நகரத்திற்குள்ளேயே இருந்த முகாமில் சேர்ப்பித்தோம். கட்டுமரங்கள் கொடுத்தாலே போதும், நாங்கள் எப்படியாவது பிழைச்சுப்போம்னு நிறைய மீனவர்கள் சொல்வதை கேட்க முடிந்தது. ஆயிரம், இரண்டாயிரம் செலவு செய்து ஊர் விட்டு ஊர் வந்து உதவிகள் வழங்கிடும் தன்னார்வலர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வது எப்படி என்று இவர்களுக்கெல்லாம் கிளாஸ் எடுத்தாகவேண்டும்.




நிறைய பேர் முகாம்களில் போடும் சாப்பாடு பிடிக்காமல் பக்கத்திலிருக்கும் மெஸ்களுக்கு போய் நான் வெஜ் ஐட்டங்களை ஒரு வெட்டு வெட்டுகிறார்கள். 'ஆயிரம் கஷ்டம் வந்தாலும் அலட்டிக்காம சாப்புடுறானே'ன்னு கூட வந்த நண்பர் பொருமித் தள்ளினார். 'உண்மையிலேயே பாதிக்கப்பட்டவனா இருந்தா சோறு, தண்ணி கூட உள்ளே போவாது...இவனெல்லாம் கருப்பா அலை வருதுன்னு சொன்னவுடனேயே காசு கிடைக்குமேன்னு ஓடி வந்து உட்கார்ந்துகிட்டவனுங்க'ன்னு இன்னொரு நண்பர் கமெண்ட் அடித்தார். எனக்குதான் ஒண்ணும் புரியலை!



தமிழக அரசின் நடவடிக்கைகளில் கடந்த மூன்று நாட்களாகவே அசுர வேகமிருப்பதை சம்பந்தப்பட்ட ஏரியாவிலிருப்பவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அரசு இயந்திரத்தையெல்லாம் ஒழுங்குப்படுத்தி ஞாயிறு அன்றே களத்தில் இறங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தினந்தோறும் வரும் அதிரடி அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் அஸ்திரங்கள்தான். இந்த ஆடு புலி ஆட்டம், அறிவுப்பூர்வமாக அமைந்தால் தமிழ்நாட்டின் கஜானா காப்பாற்றப்படும். ஆனாலும் சுனாமி அலைகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. என்னைப் பொறுத்தவரையில் உதவி மனப்பான்மை தமிழ்நாட்டில் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது; அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கூட்டமும் இருக்கிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் லயன்ஸ், ரோட்டரி கிளப், ஆர்.எஸ்.எஸ், கிறிஸ்துவ திருச்சபை படை தவிர வேறெந்த அரசியல் அமைப்பும் இல்லை. கழகங்களை காணவில்லை. சின்ன விஷயத்துக்கெல்லாம் கொடி பிடிக்கும் கம்யூனிஸ தோழர்கள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஜாதியினர் இல்லையென்பதாலோ ஜாதிக் கட்சிகளும் களத்தில் இல்லை. கஷ்டம் என்று வந்தால் தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகள், ஜாதி அமைப்புகள், ரசிகர் மன்றங்களை நம்பாமல் இருப்பதுதான் நல்லது.

இரண்டு நாட்களாக எத்தனையோ பாதிக்கப்பட்ட இடங்களுக்கு போயிருந்தாலும் சந்திரபாடியை மட்டும் என்னால் மறக்கவே முடியாது. சுனாமி சோகத்தை அப்படியே முகத்தில் அறைவது மாதிரியான குப்பத்து காட்சிகள். வாழ்க்கையை தொலைத்த கிராமத்து மக்கள். உதவிகளை பெற்றுக்கொள்வதில் அவசரம் காட்டியோ வேறு ஏதாவது கிடைக்குமா என்கிற ஆர்வமோ இல்லாத இறுக்கமான முகங்கள். இரண்டு குழந்தைகளையும் மடியில் படுக்க வைத்துக்கொண்டு வழியும் கண்ணீரை துடைக்கக் கூட தோன்றாமல் மனைவியை சுனாமிக்கு பலி கொடுத்த கணவன். எந்த தகப்பனுக்கும் நேரக்கூடாத சோகம். இப்போதைக்கு அவர்களுக்கு நாம் தர வேண்டியது உதவிகள் அல்ல; ஆறுதல்தான்.