Friday, February 25, 2005

பா.கே.ப சுட்டது

பார்த்தது

சுனாமியும் வருமானவரித்துறையும் ஒண்ணுதான். எப்போ, எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது....வருமான வரி ஆபிஸை நாம தட்டினா மகிழ்ச்சி; அவங்க தட்டினா அதிர்ச்சின்னு கபிலன் புல்லரிக்க வெச்சுட்டிருந்தார். இடம் - இன்கம் டாக்ஸ் ஆபிஸ். யுகபாரதி, நா.முத்துக்குமார், கபிலன் என மும்மூர்த்திகள் கலந்து கொள்ளும் கவியரங்கம். உலகத்துலேயே சின்சியரா வேலை பார்க்குறவங்கன்னு கபிலன் கொடுத்த சர்டிபிகேட் யாருக்குமே கிண்டலா தெரியலை. முப்பத்திரண்டு சங்கதியும் மொத்தமா வெளியே தெரியற மாதிரி ஒரே வழிசல், பார்வையாளர்கள் வரிசையிலிருந்து. நுங்கம்பாக்கம் ஹைவே பக்கம் போனாலே கார் கொஞ்சம் குலுங்கித்தான் போகுதாம்... உன் சமையலறையில் உப்பா சர்க்கரையான்னு கேட்டவரிடமிருந்து இப்படியரு அச்சுப் பிச்சுத்தனமான உளறல். பாவம் தமிழ் சினிமா!


கேட்டது

போனவாரம் நடந்த பொதுக்குழுவில் ஒரு அதிமுக பிரமுகர், ஆட்சியெல்லாம் நல்லாத்தான் நடத்துறீங்க...அப்படியே உங்க பிள்ளைங்களையும் கொஞ்சம் 'கவனி'யுங்கன்னு சொல்லி ஒரு கோரிக்கை வைக்க, அம்மா கொஞ்சம் அப்செட். கட்சிக்காரங்களுக்கு எதுவும் செய்யலைன்னு சொல்ல முடியாது... எதை எப்போ செய்யணும்னு எனக்கு தெரியும்னு சொல்லி ஒரு சமாளிபிகேஷன் போட்ட கையோடு நிறுத்தாம 'திமுகவை பாருங்க... ஆட்சியில இருந்தாலும் இல்லேன்னாலும் தலைமை என்ன சொல்லுதோ அதை செஞ்சு முடிக்கிறாங்க... அதுமாதிரி நீங்களும் நடந்துக்கணும்'னு அம்மாகிட்டேர்ந்து ஓரே அட்வைஸ் மயமாம். ஆட்சியில இருக்கும்போதே இப்படி இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்குதே, எலெக்ஷன்ல மட்டும் தோத்துப் போனா அதிமுக ஆசாமிங்க அட்ரஸ் இல்லாம போய்டுவாங்கன்னு அம்மாவே ஒத்துக்கிட்ட மாதிரி ஆயிடுச்சே!


படித்தது

கருணாநிதியின் விஷம ஏடு பட்டியலில் துக்ளக் இருப்பது போல ஜெயலலிதாவிடம் எதுவுமில்லை; அவரைப் பொறுத்தவரை கல்யாண பத்திரிக்கை தவிர மத்தது எல்லாமே விஷமம்தான் - இந்த வார துக்ளக்கில் சோ சொல்லியிருக்கிறதைப் பார்த்தா சாட்டையை சொடுக்கிட்ட மாதிரிதான் தெரியுது. ஆனா, தர்மபுரி பஸ் எரிப்பு தாமதாவதில் உள்நோக்கம் இருக்குறதா நாலு வருஷம் கழிச்சு அய்யாவுக்கு இப்போதான் தெரிஞ்சுருக்கு. மூணு வருஷமா மூன்றாவது அணியைப் பத்தி மூச்சு விடாதவர் இப்போ தமிழ்நாட்டுல கூட்டணி ஆட்சி வந்தா நல்லா இருக்கும்னு சொல்றார். எலெக்ஷன் வரைக்கும் எதைப்பத்தியும் இவர் பேசாம இருந்தா அதைவிட நல்லா இருக்கும்!

சுட்டது


Tuesday, February 22, 2005

சுண்டுவிரலும் டொயோட்டோ காரும்

ராத்திரி நேரத்தில் நள்ளிரவு தாண்டி எ·ப் எம் கேட்பவர்களுக்கு இது ரொம்பவே பரிச்சயம். நேரம் ஆக ஆக வெறும் பாட்டை மட்டும் ஒட விட்டுவிட்டு தொகுப்பாளர் தூங்கப் போய்விடுவார். கே. பாலசந்தருக்கும் அப்படியொரு அலுப்பு வந்ததால் எம்.எஸ்.வி - கண்ணதாசன் கூட்டணியின் கையில் லகானை கொடுத்துவிட்டு பதுங்கிப் போய்ட்டாரோ என்கிற சந்தேகம்தான், படத்தைப் பார்க்கும்போது வரும்.

வெளிநாட்டில் படம்பிடித்தது என்றாலே திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பித்தான் வைத்திருப்பார்கள் என்கிற இலக்கணத்திற்கு இதுவும் தப்பவில்லை. ஆஸ்தான 'கதா' நாயகன் அனந்து இருந்தும் அதே கதைதான். சிங்கப்பூர், மலேசியாவை சுத்திச் சுத்தி படம்பிடித்திருக்கிறார்கள். இருபது நிமிஷத்திற்கு ஒரு பாட்டு வருவதால் நமக்கும் ஏதோ வெளிநாட்டு கச்சேரிக்கு வந்த ·பீலிங்க்ஸ். சிங்கப்பூர் மியூசிக் சபா நுழைவாயிலையும் பிரசாத் ஸ்டுடியோ உள்ளரங்கத்தையும் இணைக்கும் எடிட்டிங் வித்தைக்கு ஒளிப்பதிவாளரும், கண்டினியூட்டி பார்த்த அசிஸ்டெண்ட் டைரக்டருக்கும் ஒரு சபாஷ் சொல்லியாகவேண்டும்.

புதுமை இயக்குநர் என்று பெயர் வாங்கியிருந்தும் புதுமையே இல்லாத கே.பியின் படம். இளைஞர்களுக்கான படம் என்றதும் ஏதாவது நல்ல விஷயத்தை சொல்லுவார் என்று நினைத்தால் பாட்டையும் கூத்தையும் காட்டி ஏமாற்றியிருக்கிறார். தனது இரண்டு சிஷ்ய கோடிகளையும் செமத்தியாக வேலை வாங்கியிருக்கிறார். நடிப்பில் அல்ல... சிங்கப்பூர் தெருக்களில் அலைய வைத்து!
இயக்கம் - கே. பாலச்சந்தர்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்கள் - கண்ணதாசன்
நடிப்பு - கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயப்ரதா
படம் வெளியான ஆண்டு - 1979


படு பொருத்தமான கேரக்டரில் கமல்ஹாசன். கையில் மைக் சகிதம் காதலியாகிவிட்ட ரசிகையை நினைத்து ரெண்டு ரீலுக்கு ஒரு தடவை ஒரு பாட்டையும் மூணு ரீலுக்கு ஒரு தடவை தன்னுடைய சட்டையையும் அவிழ்த்து விட்டுக்கொண்டே இருக்கிறார். சினிமாவில் வரும் மேடைப்பாடகனுக்கே உரிய இலக்கணத்தை மீறிவிடவில்லை. ஒவ்வொரு தடவையும் ஹீரோயின் ஏமாற்றிவிட்டு போகும்போது அநாயசமாக வருகிறது நடிப்பு. ஹீரோயின் செய்யும் குழப்பத்தில் மாட்டிக்கொண்டு அடிவாங்கி அவஸ்தைப்பட்டு தன்னையும் குழப்பி நம்மையும் குழப்பி... கிளைமாக்ஸ் வரை எழுந்திரிக்க விடவேயில்லை!

டைட்டிலிலேயே 'தில்'லாக இளைஞர்களுக்கான இன்னிசை மழை என்று டைட்டில் போட்டுவிட்டுதான் ஆரம்பிப்பதால் படும் நெடுக மெல்லிசை மன்னரின் அதிரடி இசை. கூட்டணி கோரஸான 'யாதும் ஊரே' பாட்டாகட்டும் மெலடியான 'பாரதி கண்ணம்மா'வாகட்டும் கண்ணதாசன் - எம்.எஸ்வியின் கூட்டணியின் கடைசி மாஸ்டர் பீஸ் (?) களைகட்டியிருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்....', 'நம்ம ஊரு சிங்காரி' என ஆல் டைம் அசத்தலில் படத்தின் குறையெல்லாம் இசை வெள்ளத்தில் ஓரங்கட்டேய்!

குழப்பத்தையே குத்தகைக்கு எடுத்த மாதிரி கதாநாயகி 'சாயனோரா' ஜெயப்ரதா. அநியாயத்துக்கு கான்வென்டில் படிக்கிற குழந்தை மாதிரி இருக்கிறார். எதற்காக அந்த வில்லன் கோஷ்டி அவரை துரத்தி, துரத்தி வருகிறதுங்கிற காரணத்தை ஓரே வரியில் டயலாக்காய் கிளைமாக்ஸில் சொல்லும்போது நமக்கும் அதே ஸ்டைலில் தலையை ஆட்டத்தான் தோன்றுகிறது!

குறுந்தாடியுடன் ஜொள்ளு பார்ட்டியாக வலம் வரும் ரஜினியின் காமெடி, படத்துக்கு மிகப்பெரிய பலம். காஸெட்டில் வரும் அன்பரே..... குரலை படித்துவிட்டு உற்சாகத்தில் காலை உயர்த்தி அந்தரத்தில் பரபரக்க வைக்கும் வேகமும் அட்ரஸ் புரியாமல் அலைந்து திரிந்து அப்பாவி முகம் காட்டும் சோகமும்.... அட! சிகரெட் தூக்கி போடும் ஸ்டைலையும் சென்டிமெண்டாக, உருப்படியாக உபயோகப்படுத்தி டொயோட்டா காரை விட சுண்டுவிரலே முக்கியம்னு யதார்த்தத்தை சுவராசியமாக சொல்லத் தெரிந்த டைரக்டரின் பலமான காட்சியமைப்பில் கர்ச்சீப் திருடுவது போலவே காமெடி நடிப்பிலும் நம்மை திருடிவிடுகிறார்.

படத்தில் வரும் எல்லா கேரக்டர்களுமே எதாவது ஒரு வகையில் மனதில் சம்மணமிட்டு உட்கார்ந்துவிடுகின்றன. சின்ன ரோலில் வந்தாலும் கீதா, பூர்ணம் விஸ்வநாதன், எஸ்.வீ.சேகர் என் எல்லோருமே ரசிக்க வைக்கிறார்கள். உருண்ட விழிகளை படபடவென்று மூடித்திறந்து பகபகவென்று சிரித்து பயமுறுத்தி, ரஜினி வாய்பிளப்பது மாதிரியே நம்மையும் அசத்தலான நடிப்பில் அள்ளிக்கொள்கிறார் ஜெயசுதா. ரஜினியின் வழிசல், ஜெயசுதாவின் கடிஜோக்குகளுக்கு நடுவே காமிரா கவர் பண்ணும் சுவர் சித்திரங்கள் கவிதை ரகம். குடிபோதையில் மனைவியின் போட்டோவையெல்லாம் கிழித்துப் போட்டுவிட்டு ராத்திரி பூராவும் பாத்ரூம் பக்கெட்டில் கால்வைத்து ரணகளம் பண்ணும் 'மாமா' நடிகரும் மனசில் நிற்கிறார்.

கே.பியின் டச் இல்லாத படமென்றாலும் கே.பியின் சிஷ்ய பிள்ளைகள் கலக்கியிருக்கிறார்கள். கமலையும் ரஜினியையும் தனித்தனியாக நடிக்கவைத்து, திறமையாக வேலை வாங்கிய இயக்குநர் கே.பிக்கு இந்த படம் இனிக்க வைக்கும் நினைப்பாக இருக்காது. ·பாக்ஸ் ஆபிஸில் படத்தின் ரிஸல்ட் எப்படி? பாஸா? ·பெயிலா? படத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் நிச்சயம் ஹீரோயின் மாதிரி தலையை ஆட்டிக் காட்டுவார்கள்... யாருக்கு தெரியும்? சிவ சம்போ!

Thursday, February 17, 2005

கண் பேசும் வார்த்தைகள்

மாயவரத்தில் வெங்கட்ராமன் டாக்டரை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அதுவும் திவான்பகதூர் தி.அரங்கச்சாரியார் தேசீய மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்களுக்கு அந்த குள்ளமான, குண்டான உருவமும் கீச்சு குரலையும் மறக்கவே முடியாது. சின்னவயதில் உடம்பெல்லாம் ஊதிப்போய் புசுபுசுவென்று என்ன வியாதியென்றே தெரியாமலிருந்த எனக்கு ஏதோதோ ட்ரீட்மெண்ட் கொடுத்து இந்த நிமிஷம் வரை உயிரோடு இருக்க காரணமாக இருக்கிறவர். எந்த வியாதிக்கும் ஊசியை கையிலெடுக்காத டாக்டர்; ஆனால் சாதாரண காய்ச்சலுக்கே கூடை நிறைய மாத்திரையை எழுதிக்கொடுத்து பர்ஸை காலி பண்ணுகிறவர். ஸ்கூலுக்கு டோனேஷன் கொடுக்க வசதியில்லாதவர்களுக்கு பிரிஸ்கிரிப்ஷன் பின்னாடி அவர் கிறுக்கி எழுதி தருவது நேஷனல் ஹைஸ்கூல் அக்கெளண்டடுக்கு நன்றாக புரியும். கிளினிக், ஸ்கூல் தவிர அவ்வப்போது லயன்ஸ் கிளப் அலுவலகத்திலும் அன்னாரை நான் பார்த்ததுண்டு.நிறைய பேருக்கு தெரிந்த நல்ல டாக்டர்தான். ஆனால் தெரியாத விஷயம், முப்பது கண் பார்வையற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர் நடத்தும் காப்பகம்தான். புதுத்தெருவிலிருக்கும் தருமபுர ஆதினத்தின் கட்டடித்தில்தான் காப்பகம் இருக்கிறது. முப்பது பேருக்கும் கண்பார்வை சரிவர தெரியாது என்பதை தவிர பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்கிற ஒற்றுமையும் உண்டு. ஆறு வயதில் ஆரம்பித்து பதினெட்டு வயது வரை விதவிதமான பையன்கள். எல்லோரும் தவறாமல் ஸ்கூலுக்கு போய் படிக்கிறார்கள். போட்டிருக்கும் துணியிலிருந்து படிக்கும் ·பெரயில் எழுத்து புத்தகம் வரை எல்லாமே டாக்டரின் சொந்தப் பணம்தான். முப்பது பெட்ஷீட்களை கொண்டு போய் கொடுப்பதற்காக இரண்டு முறை அலைந்து டாக்டரிடம் பர்மிஷன் வாங்க வேண்டியிருந்தது. எதைக் கொடுத்தாலும், யார் கொடுத்தாலும் வாங்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு.காலை எட்டரை மணிக்கே இவர்களின் ஊர்வலம் ஆரம்பமாகிவிடுகிறது. ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக்கொண்டு வரிசையாக தெருவில் நடக்க ஆரம்பிக்கின்றனர். புதுத்தெரு, மாயூரநாதர் கீழ வீதி வழியாக நேஷனல் ஹைஸ்கூல். திரும்பவும் சாயந்திரம் ஒருவர் கையை இன்னொருவர் பிடித்தபடி மீண்டும் காப்பகம். ஆதரவற்ற குழந்தைகளை வைத்துக்கொண்டு காப்பகம் நடத்துவது இன்னொரு பிழைக்கும் வழியாகிவிட்ட காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல், யாரிடமும் கையேந்தாமல் தனியரு மனிதராக காப்பகம் நடத்துவதற்கு நிறைய மனது வேண்டும். அக்கம்பக்கத்து மக்களும் தங்களது பிறந்தநாள், திருமணநாளன்று இந்த கண்பார்வையற்ற சிறுவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு விடாப்பிடியாக டாக்டரிடம் அலைந்து பர்மிஷன் வாங்குவது ஆச்சரியமாக இருக்கிறது.கண்பார்வையற்றவர்களெல்லாம் சென்னையில்தான் அதிகமாக இருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ரொம்பநாளாக உண்டு. எலெக்டிரிக் டிரெயின், பஸ்ஸ்டாப் என நிறைய இடங்களில் தட்டுத் தடுமாறும் இவர்களை சென்னையில்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. மூன்றில் இரண்டு பேராவது உதவி செய்ய ஓடி வருகிறார்கள். எதற்காக கஷ்டப்பட்டு பஸ் பிடித்து, ரயில் ஏறி அலைகிறார்களோ என்று சில சமயங்களில் கேட்கத் தோன்றும். நிறைய பேர் இப்போதெல்லாம் பிச்சையெடுக்கப் போவதில்லை என்பது ஆறுதலான விஷயம். கைவசம் ஏதாவது ஒரு தொழில் இருக்கிறது. அதேபோல பார்வையற்றவர்களை பார்க்கும்போது உச் கொட்டுவர்களெல்லாம் குறைந்திருக்கிறார்கள். அவர்களும் நம்மை மாதிரிதானே என்கிற மனப்பக்குவம் வந்துவிட்டதா அல்லது இரக்க மனப்பான்மையே போய்விட்டதா.. புரியவில்லை!டாக்டரின் காப்பகத்திலிருந்து போது பழைய ஞாபகம். என்னோடு ஒன்பதாம் கிளாஸில் கொஞ்ச நாள் படித்த அந்த கண்தெரியாத நண்பருக்கு இந்த உதவிகளெல்லாம் கிடைத்திருந்தால் படிப்பை தொடர்ந்திருப்பார். அபாரமான ஞாபக சக்தி. சக மாணவன் பாடத்தை படிக்க படிக்க கிரகித்துக்கொள்ளும் மூளை. செலவு செய்ய ஆளில்லாத காரணத்தால் படிப்பு பாதியிலேயே நின்று போனது. இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் மோசமான நிலையில் இருக்க மாட்டார். எஸ்டிடி பூத்தில் உட்கார்ந்திருக்கும் பார்வையற்றவர்களை பார்க்கும்போதெல்லாம் அவர் ஞாபகம்தான் வரும். அப்படியே எங்கேயாவது உட்கார்ந்திருந்தால் கூட நாமாக பார்த்து அடையாளம் கண்டுகொண்டால்தானே உண்டு. உலகம் ரொம்ப சின்னதுதான். என்றைக்காவது ஒருநாள் என் கண்ணில் மாட்டாமலா போய்விடுவார்?

Monday, February 14, 2005

அ.மி - அரை செஞ்சுரி

கடந்த பத்தாண்டுகளாகத்தான் நான் பேட்டி காணக்கூடியவனாக நினைக்கப்பட்டிருக்கிறேன். பேட்டி காண வருபவர்கள் ஒருவர் தவறாமல் அவர் காணும் பேட்டி மிகவும் வித்தியாசமானது என்றுதான் சொல்வார். ஆனால் ஓரே மாதிரிக் கேள்விகள். அல்லது ஓரே மாதிரிப் பதில்களைப் பெறக்கூடும் கேள்விகள். உண்மையில் இந்தப் பேட்டிகளில் பேட்டி காணப்படுபவரை விட பேட்டி காண்பவரின் நோக்கம்தான் நன்கு வெளிப்படுகிறது. ஆரம்பத்தில் அச்சில் என்னுடைய பேட்டிகளைக் கண்டு நான் திகைத்துப் போயிருக்கிறேன். இப்போது பதில்களை எழுதிக் கொடுத்துவிடுவது அதனால்தான்.

- அசோகமித்திரன். நன்றி - நவீன விருட்சம்எழுத்துலகில் அரை செஞ்சுரி அடித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்தில் மட்டுமல்ல பேச்சிலும் தன்னடக்கம்தான். என் மனைவி இதையெல்லாம் பார்த்தால் என்ன இது என்று அற்பமாக பார்ப்பாரே என்பதை முகபாவத்துடன் அவர் சொன்ன விதம் காலாகாலத்துக்கும் மறக்காது. அந்த நகைச்சுவையும், அலங்காரமில்லாமல் உள்ளதை உள்ளபடியே சொல்லும் நடையும் வாசகர்களை மட்டுமல்ல ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களையும் கவர்ந்திருக்கிறது. அசோகமித்திரன் நிச்சயம் ரைட்டர்ஸ் ரைட்டர்தான்!

ஏகப்பட்ட இரைச்சலின் பின்னணியில் அசோகமித்திரனை படிக்க வைத்ததும், அவரது முகத்துக்கு நேராக காமிரா ஆங்கிள் வைத்து சினிமாத்தனம் காட்டியதும் அம்ஷன்குமாரின் குறும்படம் கொடுத்த எரிச்சல். அசோகமித்தரன் கையெழுத்துப் போடும் ஸ்டைலிலேயே டைட்டிலை அமைத்தது வித்தியாசமான ஐடியா. ஆடியன்ஸ் எல்லோரும் குறும்படத்தை கவனித்துக்கொண்டிருந்த நேரத்தில் துறுதுறவென்று இருந்த தனது பேரனை கட்டுக்குள்க் கொண்டுவருவதிலேயே அசோகமித்திரன் சிரத்தையாக இருந்தார்.

அசோகமித்திரனின் எழுத்துநடையிலேயே ஒரு மினி லெக்சர் கொடுத்து அசத்தியது சுந்தர ராமசாமி! இலக்கிய உலகத்தில் அபூர்வமான நேரம் அது. சு.ராவின் ஸ்டைலான எள்ளல் கொஞ்சம் தூக்கலாக இருந்தது என்கிற முணுமுணுப்புகளை ஒதுக்கிவிடலாம். எத்தனையோ முறை கமல்ஹாசன் என்கிற படைப்பாளியை பாராட்டியிருந்தாலும் பரஸ்பரம் ரஜினி என்கிற படைப்பாளியை பாராட்ட கமல்ஹாசனுக்கு இருக்கிற தயக்கத்தையெல்லாம் பார்க்கும்போது இதெல்லாம் ச்சும்மா!

அவசரமாக பேசினாலும் ஆழமாக பேசியது பால்சக்கரியா. மலையாளிகளை விட தமிழ்நாட்டுக்காரங்க எவ்வளவோ மேல் என்கிற ரீதியில் அவர் எழுதியிருந்த காலச்சுவடு கட்டுரைதான் ஞாபகத்துக்கு வந்தது. அசோகமித்திரனின் 'தண்ணீர்' பற்றி அழகான ஆங்கிலத்தில் பேசினார். அடிக்கடி சென்னை தண்ணீரை விரும்பி வாங்கி குடித்தார்....அபூர்வ பிறவி!

அசோகமித்திரன் டீ மட்டும்தான் சாப்பிடுவார்; சுந்தர ராமசாமி காபி மட்டுமே சாப்பிடுவார் என்கிற அதிமுக்கிய பிரத்யேக தகவ¦ல்லாம் கைவசமுண்டு. எழுதினால் அடிக்க ஆள்வரும் என்பதால் எஸ்கேப்பாகிவிடுகிறேன். நேரமில்லாததால் ஞானக்கூத்தனின் கவிதைக்கான பொழிப்புரை கிடைக்கவில்லை. மேடையிலிருந்த பரபரப்பில் கவிஞர் வைத்தீஸ்வரனின் பேச்சையும் கவனிக்க முடியவில்லை. ஆறு மாதங்களாக தேடிக்கொண்டிருந்த அழகிய சிங்கர் வசமாக என்னிடம் மாட்டிக்கொண்டார். நிறைய இணைய தலைமுறையை பார்த்தில் வந்த ஆச்சர்யம் அவரது முகத்தில் மிச்சமிருந்தது. கூடிய சீக்கிரம் இணைய தலைமுறைக்கு நவீன விருட்சமும் வழிகொடுக்கும் என்று நம்பலாம்.

பாராட்டு விழா நடக்கும் நாளில் அசோகமித்திரன் பற்றி 'கதாவிலாச'த்தில் வந்தது, நம்மைப் போலவே எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் ஆச்சர்யம்தானாம். உருவத்திலும் பேச்சிலும் படு இளமையாக இருக்கிறார் பிரபஞ்சன். இரா.முருகன், வெங்கடேஷ், சோம. வள்ளியப்பன் தலைமையில் இணைய நண்பர்கள் ஒருபக்கம். வழக்கம்போல பிரகாஷ்ஜி, சுரேஷ்ஜி, சித்ரன், சுவடு ஷங்கர் எல்லோரும் ஆஜர். புதிதாக அறிமுகமான டோண்டு ராகவனையும் உருப்படாதது நாராயணணையும் (என்ன தலைப்பைய்யா அது?) நேரில் பார்த்தது கூடுதல் போனஸ். எதிர்பார்த்திருந்த முக்கியமான இணைய நண்பர்களை காணவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு கிழக்கு பதிப்பகத்தில் அர்ச்சனை ஒன்று காத்திருக்கிறது என்பதை முன்கூட்டியே அறியத்தருகிறேன்.

நிகழ்ச்சி ஆரம்பித்து கவிஞர் வைத்தீஸ்வரன் எல்லோரையும் வரவேற்றுப் பேசியதும் ஒரு பத்துப் பேர் பின் வரிசையில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். அடுத்துப் பேச வந்தது காலச்சுவடின் கர்த்தா. திடீர் விருந்தினர்கள், சு.ராவின் பேச்சிற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் காட்டி உற்சாகம் குறையாமல் பார்த்துக்கொண்டார்கள். சு.ரா பேசி முடித்து மேடையை விட்டு கீழிறங்கி உட்கார்ந்து கொண்டதும் பின்வரிசையே காலியாகிவிட்டது. டயமாயிடுச்சுன்னு கிளம்பிட்டாங்களோ என்னவே?!

கொசுறு - எளக்கியத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லைன்னு இன்னும் யாராவது சொல்லிட்டு இருக்காங்களா?!

Thursday, February 10, 2005

சத்யா மூவிசும் சந்தியா ராஜகோபாலனும்

மேடு பள்ளம் வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு விரட்டிக்கொண்டு வரும் தனியார் பஸ்ஸின் குலுக்கல் மாதிரி, குதித்து ஓடும் ஸ்கீரினை நிறுத்தப் போராடிய காலத்திலிருந்தே சந்தியா ராஜகோபாலனை தெரியும். ஒளியும் ஒலியும் அல்லது சித்ரகார் வரும் நேரத்தில் இரைச்சலோடு வெறும் புள்ளிகளாய் வந்து இம்சிக்கும்போதெல்லாம் சுவரேறி ஆண்டெனாவை மெட்ராஸ், கொடைக்கானல் இருக்கும் திசை நோக்கி ராட்டினம் மாதிரி சுழட்டிக்கொண்டே இருப்போம். கைதான் மரத்துப்போகும். எல்லாம் முடிந்து சரியாக எட்டரை மணியானதும் படம் கொஞ்சம் தெளிவாக வர ஆரம்பித்துவிடும். தூர்தர்ஷன் லோகோ ஓடிக்கொண்டிருக்கும் அந்த சின்ன இடைவெளியில் உடன்பிறப்புகளுடன் ஒரு போட்டி. வரப்போவது ஷோபனா ரவியா, பாத்திமா பாபுவா, சந்தியா ராஜகோபாலானா, ஈரோடு தமிழன்பனா, நிஜந்தனா.... செம டென்ஷனாகத்தான் இருக்கும். பெரும்பாலான நாட்கள் என்னுடைய கணிப்பு தவறாகவே இருக்கும். உடன்பிறப்புகள் கிண்டலடிக்கும் அந்த கண நேரத்தில் புடவை டிசைன் பார்த்துவிட்டு அம்மா ஒதுங்கிவிடுவாள். விடாப்பிடியாக அப்பா மட்டும் ரீஜனல் சர்வீஸ் தொடரும்...ஸ்லைடு வரை பார்த்துவிட்டுதான் ஓய்வார். அப்படி இப்படியென்று அதற்குள் பதினைந்து வருஷமா ஆயிடுச்சுன்னு கொஞ்சம் மலைப்பாத்தான் இருக்கிறது.

ஷோபான ரவியிடம் வித்தியாசமான உச்சரிப்பு ஸ்டைல் என்றால் சந்தியா ராஜகோபலானிடம் அலட்டிக்கொள்ளாத ஓரே மாதிரியான தமிழ் உச்சரிப்பு. ஷோபனா ரவி இன்னமும் பொதிகையில் செய்தி வாசிக்கிறார். இவர்களுக்கு பின்னால் வந்த ·பாத்திமா ரவி சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து அம்மா வேஷ ஸ்பெஷலிஸ்டாகி தற்போது தெலுங்கு தேசத்தில் செம பிஸி. அப்போதெல்லாம் குரலை வைத்தே நியூஸ் ரீடரை கண்டுபிடிக்குமளவுக்கு இவர்களுக்கு மக்கள் மனதில் அழுத்தமான இடம் இருந்தது. உச்சரிப்பும் ஸ்பஷ்டமாக இருந்தது. இப்போதெல்லாம் யார் யாரோ வந்து தமிழை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டுத்தான் போகிறார்கள்.

தூர்தர்ஷன் நியூஸ் தவிர குமுதம், விகடன் பேட்டிகளில் மட்டுமே சந்தியாவை பார்க்கமுடியும். ராஜகோபாலன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வர முயற்சித்திருக்கிறார். இவர்களுக்கு காலேஜ் போகும் வயசில் ஒரு பெண் இருப்பதாக ஆறு வருஷத்திற்கு முன்னால் எங்கேயோ கிசுகிசு படித்த ஞாபகம். இந்நேரம் சந்தியா ராஜகோபாலன் பாட்டியாகி இருப்பார். ரொம்ப வருஷம் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துவிட்டு லேட்டாக சன்டிவிக்கு வந்து, ராஜ் டிவியிலும் கொஞ்சம் காலம் செய்திவாசித்துவிட்டு ஒருவழியாக தற்போதைக்கு அடைக்கலமாகியிருக்கும் இடம் ஜெயாடிவி! உருவத்திலும் சரி, குரலிலும் சரி அம்மணியிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.
'இன்காம் டாக்ஸ் ஆ·பிஸ் பக்கமாத்தானே இருக்கீங்க... என்ன நடக்குதுன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க'ன்னு வந்த நச்சரிப்பு தாங்காம கொஞ்சம் முன்னாடியே அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். பிள்ளையார் கோயில் பிராகாரம் மாதிரி ராணி சீதை ஹாலை ஒரு அரைவட்டம் அடிச்சுட்டு ச·பையர் நோக்கி போகும்போதுதான் அந்தக் கூட்டத்தை கவனித்தேன். பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (யாருன்னு யாருக்கு தெரியும்?!) எழுபது வயது நிறைவை பாராட்டி ஏதோ ஒரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். கலைஞர், அன்பழகன், மருத்துவர் மாலடிமை (நன்றி ஞாநி!) எல்லாம் வந்திருக்கிறார்களாம். கலைஞரை விட மாலடிமையை பார்க்க ஆர்வமாக இருந்ததால் ஹாலுக்குள் நுழைந்துவிட்டேன். ஒரு நூறு அல்லது நூத்து இருபது பேர் இருப்பார்கள். தம்பி திருமாவளவன் வராததால் மாலடிமை வரவேயில்லை. கலைஞர் பேசிக்கொண்டிருந்தார். நானும் பேராசிரியரும் அந்தக் காலத்தில் தமிழுக்காக.... என்கிற ரீதியில் பேச்சு இருந்ததால் சுவராசியம் தட்டிப்போய் மேடையில் உட்கார்ந்திருந்தவர்களை ஒரு ரவுண்டு உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். ஒளவை நடராஜன், கோட் சூட்டுடன் இருந்த ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி, கைகூப்பியபடியே பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டிருந்த அந்த மீசைக்கார சேதுராமன் (விழா நாயகர்!) என எல்லோரும் கலகலப்பாக பக்கத்திலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அன்பழகனார் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் ஆர்.எம்.வீரப்பன்!

இருபது வருஷமாக இப்படியேதான் இருக்கிறார். எழுபதுகளில் சத்யா மூவிசுக்கு எம்.ஜி.ஆரே மூடுவிழா நடத்திவிட்டார் என்றார்கள். அதற்கு பின்னரும் அதை தூக்கி நிறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்து கோயில்களில் இருக்கும் நுழைவாயில் கல்வெட்டுகளில் இவரது பெயர் தவறாமல் இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்களை திரட்டி இன்னொரு கட்சி ஆரம்பிப்பார் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. இன்னமும் விடாப்பிடியாக நடத்தி வரும் பெயர் மறந்து போன கட்சியின் கல்லாபெட்டியான ஜெகத்ரட்சகனையும் விடமுடியாமல் மருத்துவர் மாலடிமையோடு சமீபத்திய தேர்தலில் கைகோர்க்கவேண்டியிருந்தது. சென்னையில் அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு இவர் செய்த பிரச்சாரத்திற்கு 40 தொகுதிகளிலும் பாதிப்பு இருந்தது. தனது லெட்டர்பேட் கட்சிக்கும் எந்த சேதாரம் இல்லை; துட்டுக்கும் பஞ்சமில்லை.

வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ பல பேருக்கு பின்னடைவு இருப்பதில்லை. சத்யா மூவீஸ்காரரோ அல்லது சந்தியா ராஜகோபாலனோ....வருஷங்கள் ஓடினாலும் எதையும் இழக்காமல் பெரிதாக ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்க்கையின் போக்கிலேயே தாமும் ஓடி இன்னும் அப்படியே இருக்கிறார்கள். நம்ம அமீரகத்து ஆசாமி சொல்வது மாதிரி ஜிந்தகி ஐஸே...சல்தா ஹை!

Monday, February 07, 2005

திரும்பிப் பார்க்கிறேன்

உதவி செய்வதையே கடமையாக நினைத்து சுனாமி துயர் துடைக்க ஓடோடி வந்தவர்களுக்கு நன்றி சொல்லும் தொனியில் எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. நேரில் பார்க்கும் மனிதர்களே நம்மீது நம்பிக்கை வைக்காத காலத்தில் நேரடியாக அறிமுகம் ஆகாவிட்டாலும் என்மீது நம்பிக்கை வைத்து, வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை நிவாரண நிதியாக அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தவும் மறந்துவிடாத இணைய அன்பு உள்ளங்களுக்கு நன்றி சொல்வது அவர்களை கெளரவப்படுத்தும் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. சுனாமிக்காக போய்வந்த பகுதிகளை பற்றியே இன்னும் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அதையெல்லாம் எழுத மறந்தாலும் பரவாயில்லை; உதவிகரமாக இருந்தவர்கள் பற்றி எழுதாமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவு. இதை தயவு செய்து யாரும் 'நன்றி'யாக எடுத்துக்கொள்ளவேண்டாம். 'திரும்பி பார்க்கிறேன்' என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்!சுனாமி வந்த சென்னை மாநகரத்தின் அந்த கறுப்பு ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்தே என்னுடைய செல்பேசி...பிஸி. சுனாமியில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய லாபம், நண்பர் வட்டாரம் நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய அளவில் விரிவடைந்ததுதான்.

பத்ரி சேஷாத்ரி - மனிதர் அநியாயத்துக்கு ஆல்ரவுண்டராக இருக்கிறார். சுனாமி பாதிப்புக்குள்ளான நேரத்தில் லேப்டாப்பையும் செல்போனையும் கீழே வைக்கவில்லை. இந்தியா என்றில்லாம் இலங்கை, இந்தோனேஷியா சுனாமி தாக்குதல் பற்றியெல்லாம் சொல்லி பெரிய அளவில் நிவாரணப் பணிகளைச் செய்தவர். மணிக்கொரு தரம் போன் செய்து நிலைமையை கேட்டு சில ஆலோசனைகளையும் சொன்னவர்.

பி.கே.சிவகுமார் - ஒரு சாயங்கால நேரத்தில் செல்போனில் தொடர்பு கொண்டு 30 பெட்ஷீட்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக சொன்னவர், மணிக்கொரு தரம் தொலைபேசி சொன்ன பெட்ஷீட்களின் எண்ணிக்கை பங்கு சந்தை மாதிரி தாறுமாறாக எகிறியது. விடியற்காலையில் பிகேஎஸ் சொன்ன கடைசி ஸ்கோர் 1740. இதையெல்லாம் ஓரே நாளில் ஏற்பாடு செய்ததுமில்லாமல் கரூரிலிருக்கும் தன்னுடைய உறவினரையும் தொடர்பு கொண்டு ஆர்டர் கொடுத்து என்னுடைய வேலையையும் எளிதாக்கி இருந்தார். பி.கே.எஸ்ஸோடு கைகோர்த்த நண்பர்கள் குழுவில் நமது இணைய நண்பர்களான அருண் வைத்தியநாதன், கணேஷ் சந்திரா, காசி, மெய்யப்பன், நரேன், பரிமேலழகர், ஸ்ரீகாந்த், சுந்தர் பசுபதி, வாசன், வெங்கட் என எல்லோரும் அடக்கம். ஒரு லட்சத்து எண்பதாயிரம் பெறுமானமுள்ள பெட்ஷிட்கள், 10000 மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் என இணைய நண்பர்களின் சுனாமி நிவாரண நிதி இதுவரை இரண்டு லட்சத்தை தாண்டியிருக்கிறது.

உஷா ராமச்சந்திரன் - பாதிப்புகள் பற்றி விபரம் கேட்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்ட நாளிலிருந்து கேவிஆர் கல்யாண ரிஷப்ஷன் வரை சுனாமி பற்றி பேசும்போதெல்லாம் ஆர்வம் காட்டியவர். உஷா என்றாலே ஊக்கம் என்பது புது இணைய மொழி. இதை பின்னூட்டங்களில்லாத வலைப்பூக்கள் நிச்சயம் வழிமொழியும்.

ரோஸா வஸந்த் - சுனாமி நிவாரணப் பணிகளை வெறும் விவாதங்களோடு நிறுத்திவிடாமல் அதை ஒருங்கிணைத்து நிரந்தரமாக ஒரு விவாதக்களத்தை ஏற்படுத்தியதுடன் எங்கேயோ ஜப்பானிலிருந்து கொண்டு சுனாமி பற்றிய விபரங்களை கேட்டு இன்றும் தனிமடலில் தொடர்பு கொண்டு விசாரிக்கும் வித்தியாசமான ஜீவன்.

ராஜேஸ்வரன் - மயிலாடுதுறை நகரத்தின் முக்கியமான காண்டிராக்டர். ரஜினி மன்ற பொறுப்பாளர். சொந்த வேலையையெல்லாம் விட்டுவிட்டு ஆட்களை கூட்டிக்கொண்டு என்கூடவே இருந்து சுனாமி நிவாரணப்பொருட்களை பிரித்து, அடுக்கி, ஏற்றி... என எல்லா வேலைகளையும் இரவு பகல் பாராமல் செய்தவர்.

முருகையன் - என்னுடைய சைதாப்பேட்டை ரூம்மேட். நிவாரணப் பொருட்களுக்கு கொஞ்சம் தேவையிருக்கிறது. எடுத்துக்கொண்டு வரமுடியுமா என்கிற எஸ்எம்எஸ் செய்திக்கே ஏக சுறுசுறுப்பு காட்டி பெட்டியும் மூட்டையுமாக மயிலாடுதுறை பஸ்ஸ்டாண்டில் வந்திறங்கி நிவாரணப்பணிகளில் உதவி செய்தவர். நண்பர்களை ஒழுங்குபடுத்தி தரங்கம்பாடி, காரைக்கால் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக செல்ல உதவிகரகமாக இருந்தவர்.

தியாகராஜன் - மயிலாடுதுறை பஞ்சாயத்து ஆபிஸில் பொறுப்பான உத்தியோகம். சுனாமி நேரத்தில் 24 மணி நேர அரசுப்பணி. நாகை மாவட்டத்தில் எந்தந்த இடங்களில் என்ன மாதிரியான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை வானிலை அறிவிப்பு மாதிரி எனக்கு தெரிவித்துக்கொண்டிருந்தவர். கிடைக்கும் ஓய்வு நேரங்களில் என்னுடன் இணைந்து, மீட்பு பணியிலிருக்கும் தனது நண்பர்களை அறிமுகப்படுத்தி வைத்து சரியானவர்களுக்கு பொருட்கள் சென்று சேர மூலகர்த்தாவாய் இருந்தவர்.

அண்ணாத்துரை - காமேஸ்வர கடலோரமாக வீடு. தலைஞாயிறு பஞ்சாயத்து அலுவலகத்தில் பணி. சுனாமி தாக்குதலுக்கு பின்னரும் ஊரைவிட்டு போய்விடாமல் அங்கேயே இருந்து நிவாரணங்களை செய்து வருபவர். யார் நிஜமாகவே பாதிக்கப்பட்டவர், யாரெல்லாம் நம்மை ஏமாற்றுகிறவர்கள் என்பதையெல்லாம் எடுத்து சொல்லி 'நாட்டு நடப்பை' நம்மிடம் விளக்கியவர்.

தேங்காய் எண்ணெய், சோப், பாய்கள் வாங்கி விநியோகம் செய்யவும் கரூரிலிருந்து பெட்ஷீட்களை எடுத்துக்கொண்டு வந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கவும் நிதியளித்து உதவியவர்களிடமிருந்த ஓரே ஒற்றுமை. 'தேவைப்பட்டா.. சொல்லுங்க... அனுப்பி வைக்கிறேன்' என்று சொன்னதுதான்.

நிவாரண நிதி கொடுத்தவர்கள்:-

என்னுடைய கல்லூரித் தோழி திருமதி ஹேமலதா
எங்க ஊர் மாயவரத்தான்
யளனகபக மரத்தடி கண்ணன்
தோழி உஷா ராமச்சந்திரன்
கொள்ளிடம் வாஸன் பிள்ளை
என்றென்றும் அன்புடன் பாலாஜி
பெயர் வெளியிட விருப்பமில்லாத ஒருவர்
பத்ரி சேஷாத்ரி
சிங்கை ஜெயந்தி சங்கர்
சோமு குமார்

ஆரம்பத்தில் பழைய துணிகள் தேவைப்பட்டதால் நண்பர்களோடு களமிறங்கியிருந்தேன். 24 மணி நேரத்திற்குள் சைதாப்பேட்டை ரூமுக்குள் இருக்க இடமில்லாமல் ஆகிவிட்டது. தான் வேலை பார்க்கும் மகளிர் கல்லூரியிலிருந்து பழைய துணிகளை சேகரித்து ஒரு ஆட்டோவில் அனுப்பிவிட்டார் எனது கல்லூரித் தோழி ஹேமலதா. சென்னையிலிருக்கும் அமெரிக்க நண்பர் சுரேஷின் மனைவி ஷார்மிளாவோ இன்னொரு காரில் மூட்டை மூட்¨யாக துணிகளை அனுப்பிவைத்துவிட்டார். இதையெல்லாம் எடுத்து, பிரித்து பார்ஸல் சர்வீஸ் மூலம் ஊருக்கு அனுப்பி வைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

தத்தெடுப்பது குறித்து ஆர்வத்துடன் தனிமடல் அனுப்பிய எம்.கே.குமார், அவ்வப்போது நாகை பகுதி செய்திகளை தெரிவித்துக்கொண்டிருந்த அறுசுவை பாபு, இணையத்தளத்தில் சுனாமி நிவாரண நிதி குவிந்து கொண்டிருந்த நேரத்தில் எனக்கு லீவு கொடுத்து என்னுடைய பணிகளில் 'ரஜினி முலாம்' வந்துவிடக்கூடாது என்கிற வைராக்கியத்திற்கு துணை நின்று, தூர நின்று வேடிக்கை பார்த்த wwww.rajinifans.com நண்பர்கள்.....

தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை விசாரித்து ஆலோசனைகளையும் சொன்னவர்களின் லிஸ்ட் பெரிது. கவிஞர் வைத்தீஸ்வரன், தளபதி சத்தியநாராயணா, சி·பி வெங்கடேஷ், எஸ்.கே, ஐகாரஸ் பிரகாஷ், என்றென்றும் அன்புடன் பாலாஜி, பொயட் ராஜ்குமார், ஆசாத், கிரிதரன், சுரேஷ் கண்ணன், திருமலை, எல்லே ராம், அமெரிக்காவிலிருந்து பரி, அருண் வைத்தியநாதன், மூக்கு சுந்தர் பாங்காங்கிலிருந்து மாயவரத்தான், பெங்களூரிலிருந்து ஷைலஜா, கணேஷ். தனிமடலிலும் இணைய விவாத மேடையிலும் என்னை ஊக்கப்படுத்திய இணைய நண்பர்கள்....

எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் வந்த விசாரிப்புகளும், ஊக்கங்களும்...

90களில் வாசிக்க ஆரம்பித்த என் தலைமுறையினர்களுக்கு மாலன், சுதாங்கன், இரா.முருகன், பாரா, வெங்கடேஷ் போன்ற எழுத்துலக பிரம்மாக்களை பார்ப்பதும் அவர்களோடு உரையாடுவதுமே பெரிய விஷயம். சாதாரண வாசகனான என்னை ஏதோ இருபது வருஷம் பழகிய நண்பர் ஸ்தானத்தில் வைத்து சுனாமி சமயத்தில் அடிக்கடி செல்பேசி, ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்னது....

ஊருக்கு வந்தும் கொஞ்ச நேரம் கூட வீட்டில் இருக்கமாட்டேங்கிறானே என்றெல்லாம் புலம்பாத அம்மா, பெட்ஷீட் மூட்டைகளை போர்வை, தரைவிரிப்பு என்று வகைவாரியாக பிரித்தெடுக்கும் வேலையில் என் நண்பர்களோடு தானும் சேர்ந்து கொண்டு உதவியதுடன் நோட்டும் கையுமாக அலைந்து பெட்ஷிட் கையிருப்பு பற்றி கமெண்ட்ரி கொடுத்த அப்பா, பரீட்சைக்கு படிக்கும் நேரத்திலும் உதவிக்கு வந்த உடன்பிறப்புகள்...

சோகமயமான சுனாமி நேரத்திலும் என்னை பரவசப்படுத்திய தருணங்கள் இவை.

Friday, February 04, 2005

எழுத்தறிவிக்கும் இன்னொரு காவி

கேள்வி தப்பா இருந்தா பதிலும் தப்பாத்தான் இருக்கும். தப்பான கேள்விக்கு சரியான பதில் இருக்கவே முடியாது. ஒரு தப்பான கேள்விக்கு சரியான ஓரே பதில், கேள்வி தப்புன்னு சொல்றதுதான். தப்பான கேள்விக்கு மண்டையை உடைச்சு பதில் தேட நினைச்சா கிடைக்கிற பதில் சரியா இருக்கவே இருக்காது - கொஞ்சம் விசுத்தனமாக இருந்தாலும் கடவுள் பற்றிய விளக்கங்களெல்லாம் ரமண மகரிஷியின் மொழிகளுக்கு கோனார் நோட்ஸ் போட்டது போல கொஞ்சம் சுவராசியமாக இருக்கும். 'Where is God?' என்று கேட்பதை விட 'What is God?' என்று கேட்கணும்னு சொல்லி பகவான், சிருஷ்டி, ஜகத், வித்யா, என வார்த்தைகளை கோர்த்து ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டே போவார். கொஞ்சம் டயர்டாகும் நேரத்தில் நிமர்ந்து உட்கார வைப்பதற்காக நடுநடுவே ஒரு ஜோக்.சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆஷ்ரமம், ரிஷிகேஷில் இருக்கிறது. வருஷாவருஷம் சென்னையில் நடக்கும் சொற்பொழிவின் கடைசிநாளான இன்று, எனக்கு பொறந்த நாள் என்பதால் ஆசி வாங்க கரெக்டான நேரத்துக்கு போய்விட்டேன். ஒரு வாரமாய் தினமும் இரண்டு மணி நேரம் வேதங்களின் மகிமை பற்றி அவர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க வந்த மெத்தப்படித்த கூட்டத்தால் காமராஜ் ஹால் நிரம்பி வழிகிறது. வயது வித்தியாசமின்றி தரையில் உட்கார்ந்தெல்லாம் பேச்சை கவனிக்கிறார்கள். 1999ஆம் வருஷம் புனேவில் கேட்டதற்கும் சென்னையில் கலைஞர் அரெஸ்ட் போது இதே காமராஜ் ஹாலில் கேட்டதற்கும் வித்தியாசம் காட்டாத அதே வியாக்யானங்களும் விவரிப்புகளும். இந்து மதம், கிறிஸ்து மதம் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாமல் மூட நம்பிக்கைகளை பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் எள்ளல்.ஓகே. அதெல்லாம் இருக்கட்டும். நான் எழுத வந்த விஷயமே வேறு. குன்றக்குடி அடிகளாருக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்பந்தம்தான் தயானந்த சரஸ்வதிக்கும் கல்விக்கும். ஆர்ஷ வித்யா குருகுலம் என்கிற பெயரில் வேதகாலத்து நெறிமுறைகளையும் வாழ்க்கை முறைகளையும் வலியுறுத்தும் கல்விக்கூடங்களை நாடு முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறார்.
இதன் தலைமையகம் கோயம்புத்தூர் பக்கத்தில் ஆனைகட்டி. 1997ஆம் வருஷம் 'தி ஆஷ்ரம்' ஸ்கூல் ஆண்டுவிழாவில் பேசும்வரை, சுவாமி தயானந்த சரஸ்வதியை வெறும் காவி கட்டினசாமியாராகத்தான் நினைத்திருந்தேன். வேதகால கல்விமுறையை இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் சாத்தியமான விஷயம்; அதுவே இந்தியாவின் ஆன்மா மாதிரியான விஷயம் என்றெல்லாம் அவர் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருந்தது.

மெக்காலேவின் கல்விமுறைக்கு குட்பை சொல்லிவிட்டு வேதகாலத்து கல்விமுறையை திரும்பவும் வரவேற்பதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது பிஜேபி ஆட்சியிலேயே தெரிந்துவிட்டது. இந்துத்வா, காவி கடப்பாரை முத்திரை, குருகுல கல்வி முறைக்கு இருக்கும்வரை சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஆர்ஷ வித்யா குருகுலம் அசராமல்
காவிச் சாயத்தை பூசிக்கொள்ளாமல் தனது பணியை தொடர்கிறது. ஆனைகட்டியை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் பக்கத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குருகுல கல்வியாக இருந்தாலும் நான்கு குழந்தைகளுக்கு ஒரு கம்ப்பூட்டர் என்கிற வீதத்தில் நவீன கல்விமுறைக்கு கொஞ்சமும் குறையாத தரம்.ஆர்ஷ வித்யா, கல்விப்பணியோடு நின்றுவிடாமல் சமூகப்பணியையும் செய்துவருகிறது. ஆனைகட்டியை சுற்றியிருக்கும் அறுபது குக்கிராமங்களை தத்தெடுத்து எல்லா கிராமங்களுக்கும் சாலைவசதி, பள்ளிக்கூடங்கள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. சுனாமி பாதிப்பின் போது நாகப்பட்டினம் பக்கத்திலிருக்கும் செறுதூர்
கிராமத்தை தத்தெடுத்து மீனவர்களுக்கு குடியிருப்புகளையும் படகுகளையும் ஏற்பாடு செய்து தந்திருப்பதுடன் சென்னை கோவளம் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறது.கம்மிங் பேக் டு த பாயிண்ட். நாடு முழுவதும் இருக்கும் 614 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது ஆதரவற்ற குழந்தைகளுக்கான குருகுலத்தை ஆரம்பிப்பது என்கிற நோக்கத்துடன் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையில் வேளச்சேரி பக்கமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் ஆர்ஷ வித்யா குருகுலங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கென்று பதினோரு பேர் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பதினொரு பேர் கமிட்டியில் ஒரே ஒரு வி.வி.ஐ.பி. அது யாருன்னு சொல்லியே ஆகணுமா? 'எலி'யை பிடிச்சுட்டு அப்படியே வலது புறமா மேலேறி எட்டிப் பாருங்க... தாடியை தடவிட்டு சிவனேன்னு உட்கார்ந்திருப்பாரு!