Friday, February 04, 2005

எழுத்தறிவிக்கும் இன்னொரு காவி

கேள்வி தப்பா இருந்தா பதிலும் தப்பாத்தான் இருக்கும். தப்பான கேள்விக்கு சரியான பதில் இருக்கவே முடியாது. ஒரு தப்பான கேள்விக்கு சரியான ஓரே பதில், கேள்வி தப்புன்னு சொல்றதுதான். தப்பான கேள்விக்கு மண்டையை உடைச்சு பதில் தேட நினைச்சா கிடைக்கிற பதில் சரியா இருக்கவே இருக்காது - கொஞ்சம் விசுத்தனமாக இருந்தாலும் கடவுள் பற்றிய விளக்கங்களெல்லாம் ரமண மகரிஷியின் மொழிகளுக்கு கோனார் நோட்ஸ் போட்டது போல கொஞ்சம் சுவராசியமாக இருக்கும். 'Where is God?' என்று கேட்பதை விட 'What is God?' என்று கேட்கணும்னு சொல்லி பகவான், சிருஷ்டி, ஜகத், வித்யா, என வார்த்தைகளை கோர்த்து ஆங்கிலத்தில் விளக்கிக்கொண்டே போவார். கொஞ்சம் டயர்டாகும் நேரத்தில் நிமர்ந்து உட்கார வைப்பதற்காக நடுநடுவே ஒரு ஜோக்.



சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆஷ்ரமம், ரிஷிகேஷில் இருக்கிறது. வருஷாவருஷம் சென்னையில் நடக்கும் சொற்பொழிவின் கடைசிநாளான இன்று, எனக்கு பொறந்த நாள் என்பதால் ஆசி வாங்க கரெக்டான நேரத்துக்கு போய்விட்டேன். ஒரு வாரமாய் தினமும் இரண்டு மணி நேரம் வேதங்களின் மகிமை பற்றி அவர் ஆங்கிலத்தில் பேசுவதை கேட்க வந்த மெத்தப்படித்த கூட்டத்தால் காமராஜ் ஹால் நிரம்பி வழிகிறது. வயது வித்தியாசமின்றி தரையில் உட்கார்ந்தெல்லாம் பேச்சை கவனிக்கிறார்கள். 1999ஆம் வருஷம் புனேவில் கேட்டதற்கும் சென்னையில் கலைஞர் அரெஸ்ட் போது இதே காமராஜ் ஹாலில் கேட்டதற்கும் வித்தியாசம் காட்டாத அதே வியாக்யானங்களும் விவரிப்புகளும். இந்து மதம், கிறிஸ்து மதம் என்றெல்லாம் வித்தியாசம் காட்டாமல் மூட நம்பிக்கைகளை பற்றி விவரிக்கும்போது கொஞ்சம் எள்ளல்.



ஓகே. அதெல்லாம் இருக்கட்டும். நான் எழுத வந்த விஷயமே வேறு. குன்றக்குடி அடிகளாருக்கும் அறிவியலுக்கும் உள்ள சம்பந்தம்தான் தயானந்த சரஸ்வதிக்கும் கல்விக்கும். ஆர்ஷ வித்யா குருகுலம் என்கிற பெயரில் வேதகாலத்து நெறிமுறைகளையும் வாழ்க்கை முறைகளையும் வலியுறுத்தும் கல்விக்கூடங்களை நாடு முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறார்.
இதன் தலைமையகம் கோயம்புத்தூர் பக்கத்தில் ஆனைகட்டி. 1997ஆம் வருஷம் 'தி ஆஷ்ரம்' ஸ்கூல் ஆண்டுவிழாவில் பேசும்வரை, சுவாமி தயானந்த சரஸ்வதியை வெறும் காவி கட்டினசாமியாராகத்தான் நினைத்திருந்தேன். வேதகால கல்விமுறையை இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும் சாத்தியமான விஷயம்; அதுவே இந்தியாவின் ஆன்மா மாதிரியான விஷயம் என்றெல்லாம் அவர் பேசும்போது கேட்க நன்றாகத்தான் இருந்தது.

மெக்காலேவின் கல்விமுறைக்கு குட்பை சொல்லிவிட்டு வேதகாலத்து கல்விமுறையை திரும்பவும் வரவேற்பதில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது பிஜேபி ஆட்சியிலேயே தெரிந்துவிட்டது. இந்துத்வா, காவி கடப்பாரை முத்திரை, குருகுல கல்வி முறைக்கு இருக்கும்வரை சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஆர்ஷ வித்யா குருகுலம் அசராமல்
காவிச் சாயத்தை பூசிக்கொள்ளாமல் தனது பணியை தொடர்கிறது. ஆனைகட்டியை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் பக்கத்தில் மஞ்சக்குடி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட குருகுலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். குருகுல கல்வியாக இருந்தாலும் நான்கு குழந்தைகளுக்கு ஒரு கம்ப்பூட்டர் என்கிற வீதத்தில் நவீன கல்விமுறைக்கு கொஞ்சமும் குறையாத தரம்.



ஆர்ஷ வித்யா, கல்விப்பணியோடு நின்றுவிடாமல் சமூகப்பணியையும் செய்துவருகிறது. ஆனைகட்டியை சுற்றியிருக்கும் அறுபது குக்கிராமங்களை தத்தெடுத்து எல்லா கிராமங்களுக்கும் சாலைவசதி, பள்ளிக்கூடங்கள், மின்விளக்குகள், கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்திருக்கிறது. சுனாமி பாதிப்பின் போது நாகப்பட்டினம் பக்கத்திலிருக்கும் செறுதூர்
கிராமத்தை தத்தெடுத்து மீனவர்களுக்கு குடியிருப்புகளையும் படகுகளையும் ஏற்பாடு செய்து தந்திருப்பதுடன் சென்னை கோவளம் பக்கத்தில் ஒரு குக்கிராமத்தையும் தத்தெடுத்திருக்கிறது.



கம்மிங் பேக் டு த பாயிண்ட். நாடு முழுவதும் இருக்கும் 614 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு இடத்திலாவது ஆதரவற்ற குழந்தைகளுக்கான குருகுலத்தை ஆரம்பிப்பது என்கிற நோக்கத்துடன் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையில் வேளச்சேரி பக்கமும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்திலும் ஆர்ஷ வித்யா குருகுலங்கள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கென்று பதினோரு பேர் கொண்டு கமிட்டி அமைக்கப்பட்டு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அந்த பதினொரு பேர் கமிட்டியில் ஒரே ஒரு வி.வி.ஐ.பி. அது யாருன்னு சொல்லியே ஆகணுமா? 'எலி'யை பிடிச்சுட்டு அப்படியே வலது புறமா மேலேறி எட்டிப் பாருங்க... தாடியை தடவிட்டு சிவனேன்னு உட்கார்ந்திருப்பாரு!