Thursday, February 10, 2005

சத்யா மூவிசும் சந்தியா ராஜகோபாலனும்

மேடு பள்ளம் வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சகட்டு மேனிக்கு விரட்டிக்கொண்டு வரும் தனியார் பஸ்ஸின் குலுக்கல் மாதிரி, குதித்து ஓடும் ஸ்கீரினை நிறுத்தப் போராடிய காலத்திலிருந்தே சந்தியா ராஜகோபாலனை தெரியும். ஒளியும் ஒலியும் அல்லது சித்ரகார் வரும் நேரத்தில் இரைச்சலோடு வெறும் புள்ளிகளாய் வந்து இம்சிக்கும்போதெல்லாம் சுவரேறி ஆண்டெனாவை மெட்ராஸ், கொடைக்கானல் இருக்கும் திசை நோக்கி ராட்டினம் மாதிரி சுழட்டிக்கொண்டே இருப்போம். கைதான் மரத்துப்போகும். எல்லாம் முடிந்து சரியாக எட்டரை மணியானதும் படம் கொஞ்சம் தெளிவாக வர ஆரம்பித்துவிடும். தூர்தர்ஷன் லோகோ ஓடிக்கொண்டிருக்கும் அந்த சின்ன இடைவெளியில் உடன்பிறப்புகளுடன் ஒரு போட்டி. வரப்போவது ஷோபனா ரவியா, பாத்திமா பாபுவா, சந்தியா ராஜகோபாலானா, ஈரோடு தமிழன்பனா, நிஜந்தனா.... செம டென்ஷனாகத்தான் இருக்கும். பெரும்பாலான நாட்கள் என்னுடைய கணிப்பு தவறாகவே இருக்கும். உடன்பிறப்புகள் கிண்டலடிக்கும் அந்த கண நேரத்தில் புடவை டிசைன் பார்த்துவிட்டு அம்மா ஒதுங்கிவிடுவாள். விடாப்பிடியாக அப்பா மட்டும் ரீஜனல் சர்வீஸ் தொடரும்...ஸ்லைடு வரை பார்த்துவிட்டுதான் ஓய்வார். அப்படி இப்படியென்று அதற்குள் பதினைந்து வருஷமா ஆயிடுச்சுன்னு கொஞ்சம் மலைப்பாத்தான் இருக்கிறது.

ஷோபான ரவியிடம் வித்தியாசமான உச்சரிப்பு ஸ்டைல் என்றால் சந்தியா ராஜகோபலானிடம் அலட்டிக்கொள்ளாத ஓரே மாதிரியான தமிழ் உச்சரிப்பு. ஷோபனா ரவி இன்னமும் பொதிகையில் செய்தி வாசிக்கிறார். இவர்களுக்கு பின்னால் வந்த ·பாத்திமா ரவி சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து அம்மா வேஷ ஸ்பெஷலிஸ்டாகி தற்போது தெலுங்கு தேசத்தில் செம பிஸி. அப்போதெல்லாம் குரலை வைத்தே நியூஸ் ரீடரை கண்டுபிடிக்குமளவுக்கு இவர்களுக்கு மக்கள் மனதில் அழுத்தமான இடம் இருந்தது. உச்சரிப்பும் ஸ்பஷ்டமாக இருந்தது. இப்போதெல்லாம் யார் யாரோ வந்து தமிழை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டுத்தான் போகிறார்கள்.

தூர்தர்ஷன் நியூஸ் தவிர குமுதம், விகடன் பேட்டிகளில் மட்டுமே சந்தியாவை பார்க்கமுடியும். ராஜகோபாலன், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வர முயற்சித்திருக்கிறார். இவர்களுக்கு காலேஜ் போகும் வயசில் ஒரு பெண் இருப்பதாக ஆறு வருஷத்திற்கு முன்னால் எங்கேயோ கிசுகிசு படித்த ஞாபகம். இந்நேரம் சந்தியா ராஜகோபாலன் பாட்டியாகி இருப்பார். ரொம்ப வருஷம் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துவிட்டு லேட்டாக சன்டிவிக்கு வந்து, ராஜ் டிவியிலும் கொஞ்சம் காலம் செய்திவாசித்துவிட்டு ஒருவழியாக தற்போதைக்கு அடைக்கலமாகியிருக்கும் இடம் ஜெயாடிவி! உருவத்திலும் சரி, குரலிலும் சரி அம்மணியிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.




'இன்காம் டாக்ஸ் ஆ·பிஸ் பக்கமாத்தானே இருக்கீங்க... என்ன நடக்குதுன்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லுங்க'ன்னு வந்த நச்சரிப்பு தாங்காம கொஞ்சம் முன்னாடியே அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டேன். பிள்ளையார் கோயில் பிராகாரம் மாதிரி ராணி சீதை ஹாலை ஒரு அரைவட்டம் அடிச்சுட்டு ச·பையர் நோக்கி போகும்போதுதான் அந்தக் கூட்டத்தை கவனித்தேன். பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் (யாருன்னு யாருக்கு தெரியும்?!) எழுபது வயது நிறைவை பாராட்டி ஏதோ ஒரு பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டம். கலைஞர், அன்பழகன், மருத்துவர் மாலடிமை (நன்றி ஞாநி!) எல்லாம் வந்திருக்கிறார்களாம். கலைஞரை விட மாலடிமையை பார்க்க ஆர்வமாக இருந்ததால் ஹாலுக்குள் நுழைந்துவிட்டேன். ஒரு நூறு அல்லது நூத்து இருபது பேர் இருப்பார்கள். தம்பி திருமாவளவன் வராததால் மாலடிமை வரவேயில்லை. கலைஞர் பேசிக்கொண்டிருந்தார். நானும் பேராசிரியரும் அந்தக் காலத்தில் தமிழுக்காக.... என்கிற ரீதியில் பேச்சு இருந்ததால் சுவராசியம் தட்டிப்போய் மேடையில் உட்கார்ந்திருந்தவர்களை ஒரு ரவுண்டு உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். ஒளவை நடராஜன், கோட் சூட்டுடன் இருந்த ஒரு உயர்நீதி மன்ற நீதிபதி, கைகூப்பியபடியே பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டிருந்த அந்த மீசைக்கார சேதுராமன் (விழா நாயகர்!) என எல்லோரும் கலகலப்பாக பக்கத்திலிருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருக்க எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அன்பழகனார் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் ஆர்.எம்.வீரப்பன்!

இருபது வருஷமாக இப்படியேதான் இருக்கிறார். எழுபதுகளில் சத்யா மூவிசுக்கு எம்.ஜி.ஆரே மூடுவிழா நடத்திவிட்டார் என்றார்கள். அதற்கு பின்னரும் அதை தூக்கி நிறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்து கோயில்களில் இருக்கும் நுழைவாயில் கல்வெட்டுகளில் இவரது பெயர் தவறாமல் இடம்பெற்றிருக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்களை திரட்டி இன்னொரு கட்சி ஆரம்பிப்பார் என்றார்கள். எதுவும் நடக்கவில்லை. இன்னமும் விடாப்பிடியாக நடத்தி வரும் பெயர் மறந்து போன கட்சியின் கல்லாபெட்டியான ஜெகத்ரட்சகனையும் விடமுடியாமல் மருத்துவர் மாலடிமையோடு சமீபத்திய தேர்தலில் கைகோர்க்கவேண்டியிருந்தது. சென்னையில் அறிவாலயத்தில் உட்கார்ந்து கொண்டு இவர் செய்த பிரச்சாரத்திற்கு 40 தொகுதிகளிலும் பாதிப்பு இருந்தது. தனது லெட்டர்பேட் கட்சிக்கும் எந்த சேதாரம் இல்லை; துட்டுக்கும் பஞ்சமில்லை.

வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கிறதோ இல்லையோ பல பேருக்கு பின்னடைவு இருப்பதில்லை. சத்யா மூவீஸ்காரரோ அல்லது சந்தியா ராஜகோபாலனோ....வருஷங்கள் ஓடினாலும் எதையும் இழக்காமல் பெரிதாக ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்க்கையின் போக்கிலேயே தாமும் ஓடி இன்னும் அப்படியே இருக்கிறார்கள். நம்ம அமீரகத்து ஆசாமி சொல்வது மாதிரி ஜிந்தகி ஐஸே...சல்தா ஹை!