Thursday, March 31, 2005

வந்தாச்சு... வந்தாச்சு!

அருள் வாக்கு

"உலகத்துல எப்பவும் சந்தோஷமா இருக்கிறவங்க மூணு பேர். ஞானி, குழந்தை, பைத்தியக்காரன். ஞானி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதவர். பைத்தியக்காரன், எதுவும் அறியாது; எதுவும் புரியாது"

ரஜினியும் அரசியலும்

...ரஜினியை பற்றி விமர்சிப்பவர்கள் அவரது கொள்கைகளையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ விமர்சிப்பதில்லை. அரசியல் ரீதியாக அவர் முடிவு எதுவும் எடுக்காததுதான் விமர்சனங்களின் கருப்பொருளாக இருந்து வருகிறது. உண்மையில் மீடியாவினர் ரஜினியை புகழவும் விமர்சிக்கவும் எடுத்துக் கொண்ட நேரத்தில் ஒரு பத்து சதவீதத்தை கூட ரஜினி ஆக்கபூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவாதித்ததில்லை. ரஜினி அரசியலுக்கு வராதது பற்றி விமர்சிப்பவர்கள் எல்லோரும் அரசியலை வேடிக்கை பார்ப்பவர்கள்தான். நாளை ரஜினியே அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியுமே தவிர ரஜினியுடன் இணைந்து களமிறங்க முடியாது. இதில் மீடியாக்கள் மட்டுமல்ல சில ரஜினி ரசிகர்களும் அடக்கம்தான்.

ரஜினியும் ஆன்மீகமும்

...ரஜினி சொல்லும் ஆன்மீகமெல்லாம் பாமர மக்களுக்கு புரியும் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், அவர் சொல்லும் நிலையாமை தத்துவங்களை மக்கள் ரசிக்கிறார்கள். 'எவ்வளவு நாட்களுக்கு எங்கெங்கே நீ உன் கர்மாவை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நேரத்தை உன் விருப்பப்படி மாற்ற முடியாது. உன்னுடைய கடமைகளை உதறித்தள்ள உனக்கு உரிமை கிடையாது. காலம் வரும்போதுதான் உன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற ரமண மகரிஷியின் நல்வாக்கை படித்த பின்பு ரஜினி மனதில் தோன்றிய டயலாக்தான், 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது' ஆன்மீகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். மதங்கள் மக்களை குழப்புவதால் தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக் கொள்வதில்தான் தனக்கு இஷ்டமிருப்பதாக சொல்கிறார்

ரஜினியும் சினிமாவும்

...பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் பெரிய கத்தியை எடுக்கிறார். வில்லன் கோஷ்டி வியர்த்துப் போய் பார்க்கிறது. கையிலெடுத்த கத்தியை அப்படியே அந்தரத்தில் சுழல விடுகிறார். முன் பெஞ்சிலிருப்பவர்களிலிருந்து பால்கனியிலிருப்பவர்கள் வரை வித்தியாசம் காட்டாமல் கைதட்டுகிறார்கள். இது சாத்தியமா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ரஜினி படங்களில் எப்போதுமே நோ லாஜிக்... ஒன்லி மேஜிக்! ரஜினியின் பெரும்பாலான படங்கள் வணிகரீதியில் அபத்தமான மசாலா களஞ்சியங்களாக இருந்தாலும் கமர்ஷியல் கட்டாயங்கள் எதுவுமில்லாமல் ரஜினி என்கிற தனிநபரை முன்னிலைப்படுத்துவதாகவே இருக்கும். பொதுவாக ரஜினி பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கி படத்தின் தரம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.


ரஜினி : சப்தமா? சகாப்தமா?

விலை : ரூபாய் 50/-

கிழக்கு பதிப்பகம்
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 4.
தொலைபேசி - 52009601/02/03
www.kamadenu.com

Tuesday, March 29, 2005

மறுபடியும் சுனாமி!

திரும்பவும் அதே பிளாட்பாரத்து வாசம். மூட்டை முடிச்சுகளுடன் கடலோரவாசிகள் சாரை சாரையாக நடக்க ஆரம்பித்துவிட்டனர். ஏதோ ஒரு சர்ச்சில் பதினொரு மணி அடிக்கும் சப்தம். தூங்கி வழியும் கண்களோடு குழந்தைகள் அப்படியே போர்வையை இழுத்து சுற்றிக்கொண்டு கூடவே நடந்து வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த காட்சியெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது.

Image hosted by Photobucket.com

டி.வி நியூஸ் பார்த்துவிட்டு வேளாங்கண்ணியில் கடற்கரையோரமாக குடியிருக்கும் நண்பரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். லைன் கிடைக்கவில்லை. மயிலாடுதுறை நண்பர்களிடம் நிலைமையை விசாரித்துவிட்டு மெரீனாவை அடையும்போது மணி 11.10 p.m அதற்குள் சுவடு ஷங்கர், நாராயணன், பிரசன்னா என அடுத்தடுத்து ·போன் கால்கள். மெரீனாவில் கடல் வழக்கம்போல் அமைதியாக இருந்தது. குடித்துவிட்டு நல்ல தூக்கத்திலிருப்பவர்களை சிரமப்பட்டு எழுப்பிக்கொண்டிருந்தனர் சிலர். 'அதெல்லாம் திரும்ப வராதுங்க'ன்னு தூக்கம் தடைபட்ட எரிச்சலில் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு ·பிளாட்பாரவாசி.

Image hosted by Photobucket.com

11.30 p.m போலீஸ் ரோந்து வாகனங்கள் மைக்செட் வைத்து மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர். சுறுசுறுப்பாக எழுந்து போக யாருக்கும் மனது வரவில்லை. நிறையபேர் வேடிக்கை பார்ப்பதற்காகவே நிற்கிறார்கள். ஆங்காங்கே காமிராவும் கையுமாக நிருபர்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டனர். 'பாஸ்.. நம்மளையும் கொஞ்சம் புடிங்க... காலைல பேப்பர்ல வந்துடும்ல'

Image hosted by Photobucket.com

துணை மேயர் வந்து ஏதோ ஒரு டி.விக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறதாம்! 12.10 a.m சுனாமி அபாயம் தற்சமயத்துக்கு இருக்காது என்று ரிமோட்டும் கையுமாக உட்கார்ந்திருந்த சுவடு ஷங்கர் தொலைபேசியதும் கொஞ்சம் நிம்மதி. பத்து நிமிஷத்தில் பீச்சை விட்டு கிளம்பிவிட்டேன். வழியெங்கும் ரோந்து செல்லும் போலீஸ் வேனும், ·ப்ளாட்பாரங்களில் ஆயாசத்துடன் அமர்ந்திருக்கும் மக்களும், ·ப்ளாஷ் மின்னிடும் காமிராக்களும். தூக்கம் வராத இன்னொரு நீண்ட இரவாகத்தான் நேற்றிரவு இருந்திருக்கும். சுனாமி தாக்குதல் இல்லையென்கிற நல்ல செய்தியோடு பொழுது விடிந்திருப்பது ஆறுதலான விஷயம்.

Image hosted by Photobucket.com

Saturday, March 26, 2005

சுட்டாச்சு...நிஜமாவே சுட்டாச்சு

தெருவில் திடீரென்று ஒலிபெருக்கி அலறியது. அறையை விட்டு வெளியே அவர்கள் ஓடி வந்தார்கள். வரிசையாக கார்களும் ஜீப்புகளும் ஊர்ந்து கொண்டிருந்தன. சுற்றிலும் மக்கள் கூட்டம். கருப்பு சிவப்புக்கொடிகளை ஏந்திய மக்கள். அறிவிப்பு இப்போது தெளிவாகக் கேட்டது.

'புரட்சி நடிகர் மருத்துவ மனையில் நலமாக இருக்கிறார். உயிருக்கு அபாயம் இல்லை. வெற்றியையே வாடிக்கை ஆக்கிய வேந்தர் பெருமகன் வாழ்க! எமனை வென்ற எங்கள் வீரர் வாழ்க! அண்ணா வாழ்க! என்றும் வெல்லும் எங்கள் திமுக! உங்கள் திமுக!'

'என்ன ஆச்சு எம்ஜியாருக்கு? ஹார்ட் அட்டாக்கா?'

'கூட்டத்தில கேட்டா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு கதை சொல்லுவான். இரு, நான் சீனியரை போன் பண்ணிக் கேக்கறேன்'

சில நிமிடங்களில் ஜூனியர் வந்துவிட்டான்.

'ராதா சுட்டுட்டாராம். கழுத்துல காயம்'

'எந்த ராதா? எம்கேயா? எம்மாரா?'

'எம்கே ஏன் சுடப்போறாரு? எம்மார்தான்'

'ஷ¥ட்டிங் போதா'

'என்னடா கேக்கற?'

'ஷ¥ட்டிங் நடக்கறப்பவான்னு கேட்டேன்'

'அவரோட வீட்டுக்குப் போய் சுட்டுருக்காரு. தன்னையும் சுட்டுண்டாராம். சிரிக்காதே. எம்ஜியாருக்கு ஏதாவது ஆச்சுன்னா கிரிக்கெட் மேச் கோவிந்தா. தெரிஞ்சிக்கோ'

Image hosted by Photobucket.com

எம்ஜியார் சம்பவம் பட்டணத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எம்ஜியாரின் ரசிகர்களுக்கு அவரை ஒரு சாதாரண குண்டு துளைத்துவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. தெருச்சுவர்களெல்லாம் அவர்தான். கழுத்தை கட்டு மூடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பனின் சீனியர் ராதாவுக்கு தெரிந்தவராம். ராதா பழியை ரிவால்வர் மீது போடுகிறாராம். 'என்னடா துப்பாக்கி இது. அவரும் சாகல்லை. நானும் உயிரோட இருக்கேன்' என்று பார்க்கிறவர்களிடம் எல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

இது 'சுட்டாச்சு சுட்டாச்சு'லிருந்து சுட்ட மேட்டருன்னு நெனைச்சு மாங்கு மாங்குன்னு படிச்சவங்களுக்கு... சோ.. ஸ்வீட்! பிடிச்சுக்கோங்க....அரை கிலோ அல்வா! சுட்டது, 'புலிநகக்கொன்றை'யிலிருந்து. அஞ்சு நாள் முந்தியே எல்லோருக்கும் அல்வா குடுத்து ரெக்கார்ட் பிரேக் பண்ணணும்னு நினைச்சேன், முடிச்சேன்! எல்லாரும் கூட்டணி போட்டு வூடு கட்றதுக்குள்ள வுடு ஜூட்!

Monday, March 21, 2005

மொட்டை மாடி குச்சி

தூரத்தே தெரியும் பெரிய கோயில் கோபுரத்தை நோக்கி சாய்ந்து நிற்பது போல தோன்றினாலும் இன்னும் உறுதியாகத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த பச்சை வண்ணம் காணாமல் போய் பழுப்பு வண்ணம் வந்திருக்கிறது. மழையோ, புயலோ எது வந்தாலும் தாங்கிக்கொண்டு நாட்களைக் கடத்துகிறது. கடுமையான வெய்யிலில் வாடி வதங்கிய காலமும் உண்டு. ஆனாலும் நிலை குலைந்து சாய்ந்துவிடாமல் விடாப்பிடியாக இன்னும் நின்று கொண்டே இருக்கிறது.

Image hosted by Photobucket.com

சூரியனின் உதித்த நேரத்திலிருந்தே டியூட்டி ஆரம்பித்துவிடுகிறது. காக்கை, குருவிகள் இளைப்பாறி விட்டு இரை தேட உதவியாய் இருந்தாக வேண்டும். ஒரு காலத்தில் ஆண்டெனாவை ஏந்திக்கொண்டிருந்தது. காலப்போக்கில் கூரையை சுமந்து, பின்னர் துணிகளை காயவைக்கும் கொடிகளை இணைக்கும் வேலையை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஒரு காலத்தில் நான் கிறுக்கிய அபத்தமான கவிதைகளையெல்லாம் பக்கத்தில் நின்று பொறுமையுடன் படித்துக்கொண்டிருந்தவை. மொட்டை மாடியில் மல்லாக்கப் படுத்து நட்சத்திரங்களை எண்ணியபோதெல்லாம் எட்டிப்பார்த்தவை. இரைச்சலோடு வரும் பிபிசி தமிழோசையை கேட்க இரவுப்பொழுதுகளில் கம்பீரமாக எனக்கு துணை நின்றவை. சுற்றிலும் காய்ந்து போன நிலங்களை மட்டுமே கண்டு கொண்டிருந்தவைகளுக்கு இப்போது கண்ணில் தட்டுப்படுவதெல்லாம் தன்னுடைய உயரத்துக்கு சமமான கட்டிடங்கள். கூரையை தாங்கிக்கொண்டிருந்த காலமெல்லாம் போய் இப்போது தன்னை யாராவது தாங்கிக்கொள்வார்களா என்று கெஞ்சுவது போல தோற்றம். கடந்து போகும் பிணங்களையும், புது அழுகுரல் எழுந்து அடங்கும் வீடுகளையும் பார்த்தபடி இன்னும் அமைதியாகத்தான் நிற்கிறது.

மொட்டை மாடியின் குச்சிகள் இப்போதெல்லாம் என்னோடு பேச ஆரம்பித்துவிடுகின்றன, குறிப்பாக தூக்கம் வராத பேட்டை இரவுகளில். 'அடிக்கடி ஊருக்கு வந்துவிட்டுப் போய்ட்டு இருக்கியே.... மொட்டை மாடிக்கும் வந்து என் கூடவே கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போனாலென்ன' என்று கேட்பது போல பிரமை. பக்கத்தில் படுத்து ரிமோட்டை உருட்டிக்கொண்டிருக்கும் பேட்டை நண்பரிடம் பிரமைகளை பகிர்ந்துகொண்டால் புருவத்தை நெறித்து வித்தியாசமாக முறைக்கிறார். அடுத்த முறை போனால் மறக்காமல் மொட்டை மாடிக் குச்சிகளை கீழிறக்கி இளைப்பாற வைத்தாக வேண்டும். காக்கைகளின் கஷ்டத்தை நினைத்துப்பார்த்தால் குச்சிகளை காப்பாற்ற முடியாது. முடிந்தால், குச்சிகளின் மேல் சாய்ந்து வானம் பார்த்து இன்னொரு கவிதை எழுதவேண்டும்.

Monday, March 14, 2005

ரஜினி - சகாப்தமா?

கிட்டதட்ட தலைப்பிரசவம் போலத்தான். வாழ்க்கையில் எப்போதும் இருந்திராத டென்ஷன் இப்போது. சந்தோஷத்தையும் கலக்கத்தையும் சரிவிகிதமாக கலந்து கொடுத்த அந்த நாளை என்றுமே மறக்க முடியாது. ஆறு தொகுதிகளில் அடிவாங்கி ஒதுங்கியிருந்த காலம். உடனே கிளம்பி ஆபிஸ் வரும்படி பா. ராகவனிடமிருந்து போன். நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார். ஒரு புத்தகம் எழுதி தரவேண்டும். அதுவும் ரஜினியைப் பற்றி.

'ஸார்.. நெஜமாத்தான் சொல்றீங்களா...?'

'ஆமாய்யா.. நீதான் எழுதணும்'

'புத்தகம் எழுதறதுங்கிறது சாதாரண விஷயமா.. என்னால அது முடியுமா ஸார்?'

'நீதான் எழுதுறே...இன்னிக்கே வேலையை ஆரம்பிக்குறே'

'ஸார்.. ரஜினியை பத்தி நான் எழுதுனா எத்தனை பேர் ஒத்துப்பாங்க?!'

'உன்னால முடியும். உள்ளதை உள்ளபடி அப்படியே எழுது. நிச்சயம் நல்லா வரும்'

'ரஜினியை பத்தி அதிகமா எங்கேயும் நான் கமெண்ட் அடிச்சது இல்லை. முகமூடி போட்டுக்கிட்டு கூட. அதான் கரெக்டா வருமான்னு பயமா இருக்குது. சரி, ரஜினின்னு சொன்னா எதைப்பத்தி எழுதறது?'

'சிம்பிள். கண்டக்டரா இருந்த சிவாஜிராவ் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி... சூப்பர் ஸ்டாரா வந்தப்புறம் எப்படி அதை தக்க வெச்சுக்கிட்டார்... அரசியலுக்குள்ள வராமலே மீடியாவுல பரபரப்பான ஆசாமியாவே இருக்கிறது... இனிமே ரஜினி என்ன பண்ணலாம்... எடுத்துக்கிட்ட விஷயத்தை கச்சிதமா கட் அண்ட் ரைட்டா சொல்லிடணும்'

'நான் ரஜினியோட ரசிகன்ங்கிறது தெரியாத ஆளே கிடையாது...நடுநிலைமையில நின்னு என்னால எழுதமுடியுமா?'

'நிச்சயமா. ரஜினிகிட்ட நம்பிக்கை இருக்குதோ இல்லையோ ராம்கி கிட்ட எனக்கு நிறைய இருக்கு'

பா.ராகவன் என்மேல் வைத்த நம்பிக்கையை பேஸ்மெண்ட்டாக வைத்துதான் பிள்ளையார் சுழி போட்டேன். எவையெல்லாம் வரவேண்டும் என்பதை முடிவு செய்யவே ஒரு மாத காலமானது. இரண்டே மாதத்தில் முடிந்தாலும் திருப்தியே வரவில்லை. ரஜினியை பற்றிய விஷயங்கள் சாதாரண மக்களுக்கு நிறையவே தெரிந்திருக்கின்றன. ரஜினியின் சினிமா வெற்றிகள் பற்றி ஏற்கனவே எல்லோரும் சொல்லியிருப்பதையே திரும்பவும் சொல்லத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். பெங்களூரில் கண்டக்டராக இருந்தது, சினிமா சான்ஸ் தேடி சென்னையில் அலைந்தது போன்ற தெரிந்த விஷயங்களை கூட புதுவிதமான பார்வையில் சொல்ல வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்த அதே நேரத்தில் தனிமனித வாழ்க்கையையும் சீராக வைத்திருந்தததையும், ரசிகர்களிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் அவர்களின் அன்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் கூடுதலாக சில பிரத்யேக விஷயங்களை தந்திருந்தாலும் புத்தகத்தின் மையக்கருத்தாக அலசப்பட்டிருப்பது ரஜினி எடுத்த அரசியல் முடிவுகளும் அதற்கான பின்னணிகளும்தான்.

தொண்ணூறுகளில் ஆரம்பித்த ரஜினியின் அரசியல் (?) வாழ்க்கை ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்னமும் 'அரசியலுக்கு வருவாரா?' என்கிற கேள்விக்கு விடை தெரியாமலே தொக்கி நிற்கிறது. ஊர் விட்டு ஊர் வந்து மொழி தெரியாத ஊரில், அதுவும் செல்வாக்குள்ள சினிமாத்துறையில் முன்னணிக்கு வந்து, அதையே முப்பது வருடங்களாக தக்க வைத்திருப்பதை விவரமாக சொல்லும் புத்தகம், இனி ரஜினி என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஆலோசனையாக சொல்வதோடு முடிகிறது.

எல்லாமுமாக இருந்த பா.ராகவன், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்ன பத்ரி சேஷாத்ரி, நேரிலும் மின்னஞ்சலிலும் ஊக்கப்படுத்திய இணைய நண்பர்கள், கிழக்கு பதிப்பக ஊழியர்கள், பிரத்யேக தகவல்களை தேடிக்கொடுத்து ஒத்துழைப்பு தந்த எங்களது இணையத்தள நண்பர்களான ஷாஜகான், ராஜா, ராஜேஷ், நடராஜ், விஷயத்தை கேள்விப்பட்டு வாழ்த்திய பத்திரிக்கையுலக பிரம்மாக்கள் என நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் பெரிது.

காட்டமான விமர்சனங்களோ, அதிகப்படியான புகழுரைகளோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே திருப்தியோடு வந்திருக்கும் புத்தகம், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுத்த ஆண்டவனுக்கும் நான் நன்றி சொல்லியாகவேண்டும்.

ரஜினி 'சந்திரமுகி' வரை வந்துவிட்டார். நான் இப்போதுதான் அபூர்வ ராகங்களில் அடியெடுத்து வைக்கிறேன். வாழ்த்துக்களை மட்டுமல்ல பாராட்டுக்களையும் பெற்றாகவேண்டும். பார்க்கலாம்!

Friday, March 11, 2005

முதல்வன்

தி.நகர். கண்ணதாசன் சிலை பக்கத்தில் ஒரு சாலையோரப் பூங்கா. பரபரப்பான பத்து மணி காலையில் தொப்பை தெரியும் டி-ஷர்ட்டும் பத்ரி பேடன்ட் வாங்கி வைத்திருக்கும் ஷார்ட்ஸ் சகிதம் குனிந்த தலை நிமிராமல் அந்தச் சின்ன பூங்காவை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது ஒரு உருவம். வாக்கிங்! நெற்றியிலிருந்து வழிந்து ஓடும் வியர்வையை துடைக்க நிமிரும் போதுதான் அடையாளம் தெரிகிறது. அட நம்ம ர·பி பெர்னார்ட்!

Image hosted by Photobucket.com

தமிழ்நாட்டின் எந்த மூலையில் என்ன நிகழ்ந்தாலும் காமிரா, மைக் புடை சூழ ஒரு கும்பல் வந்துவிடுகிறது. தாறுமாறாக கேள்வி கேட்கிறார்கள். வரும் கும்பலில் சில சுடிதார்களும் உண்டு. எப்பேர்ப்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும் மூக்கை இடிப்பது போல மைக்கை நீட்டி மடக்கும் இவர்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் எடுத்த கவரேஜ் எல்லாமே டிவியில் வராது. இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா... பத்து வருஷங்களுக்கு முன்பு மீடியா இப்படியா இருந்தது? தொண்டைக்குழியையும் கிராஸ் செய்துவிட்ட கேள்வியை பிரசவிக்க யாருக்கும் தில் இருக்காது. லஜ்ஜையே இல்லாமல் கேள்வி கேட்டால் வீட்டுக்கு ஆட்டோ வருமா அல்லது கூட்டத்திலிருந்து தப்பித்து வெளியே போக முடியுமா என்று ஏகப்பட்ட குழப்ப ரேகை முகத்தில் குடியிருக்கும். அப்படிப்பட்ட இறுக்கமான நேரத்தில் அழுத்தம் திருத்தமாக வாதம் செய்ய வந்தாரய்யா ஒரு ஆள். அரசியல்வாதிகள் அவ்வப்போது சொல்லியிருந்த 'அருள்வாக்கை'யெல்லாம் ஞாபகப்படுத்தி காமிராவுக்கு முன்னால் வழிய வைத்த ர·பி பெர்னார்டின் வருகை பல அரசியல்வாதிகளின் தூக்கத்தை தொலைத்தது உண்மைதான்.

ஒரு காலத்தில் எப்படி இருந்தவர்? இன்றைக்கு 'உள்ளது உள்ளபடி' என்கிற பெயரில் அம்மா ஆட்சியின் சாதனை டாக்குமெண்ட்ரிக்கு காம்பியர் பண்ணிக்கொண்டு இருக்கிறார். இது தவிர லெட்டர் பேட் கட்சித் தலைவர்களை கூப்பிட்டு ஜெயா டிவி ஆபிஸில் உட்கார வைத்து பட்ஜெட் பற்றி விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார். சன் டிவிக்கொரு வீரபாண்டியன் போல ஜெயா டிவிக்கு ர·பி பெர்னார்ட். ஓரே சவசவ!

இப்போதெல்லாம் ரிமோட்டுக்கு வேலை ஜாஸ்தியாகிவிட்டது.. புதுமையான விஷயமெல்லாம் சின்னத்திரையில்தான் சாத்தியம் என்று சொன்னவர்களை காணவில்லை. டி.வி என்றாலே சீரியல்தான் என்கிற அர்த்தம் வந்துவிட்டது. போனவாரம் முன்னணியிலிருக்கும் ஒரு டி.வி சீரியலில் காமெடி காட்சிகள் அதிகமாக இருந்ததால் ரேட்டிங்கில் படுத்துவிட்டதாம். தேவுடா..தேவுடா! டி.வி பக்கமும் சூடுடா! ர·பி பெர்னார்ட் போன்ற வித்தியாசமான, விவரமான ஆசாமிகளையெல்லாம் காலம் நிஜமாகவே காணாமலடித்துவிட்டது.

Tuesday, March 08, 2005

லேடீஸ் ஒன்லி

பெண்கள் தினம்: பெண்கள் நினைப்பது என்ன?

தென்மண்டல ஐ.ஜி. ராஜேந்திரனின் மனைவி ரோகிணி:

ஆண்குழந்தைகளுக்கு மட்டும் சில பெற்றோர் சலுகைகள் கூடுதலாக தருவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு சமுதாயமோ, ஆசிரியர்களோ கற்று தருவதை விட தாய்தான் கற்றுத் தரவேண்டும். அடிப்படை விஷயங்களை தாயிடமிருந்து கற்றுக் கொண்டால் தான் வெளியில் உள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்ப பெண்கள் நடந்து கொள்ள முடியும். டி.வி., தொடர்கள் முழுவதும் பெண்கள் அழுவதைத் தான்காட்டுகிறது. இவர்களுடன் சண்டை போடுவதை விட தொடர்களை தவிர்த்தால் நிறைய விஷயங்களை உருப்படியாக செய்யலாம்.

வக்கீல் பரிமளா:

சட்டத்தில் பெண்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில்லை. சமுதாயத்தில் பெண்குழந்தைகளுக்கு நிறைய பாலியல் கொடுமைகள் நடந்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களை தாய் கற்று கொடுப்பதன் மூலமே பெண் குழந்தைகள் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பு உணர்வோடு பழக முடியும். பெண் குழந்தைகளை பாசத்தின் காரணமாக உறவுக்கார ஆண்களிடம் விட்டுச் செல்வதோ, பழக விடுவதோ தவறு. அத்தகைய சூழ்நிலையில் பெண்குழந்தைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தாய்தான் கற்றுக் கொடுக்க வேண்டும்.

மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராஜாமணி மனைவி ராணி:

வீட்டிலிருந்து தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வேலைக்கு செல்லும் போது, பயணத்தின் போது என எந்த இடத்திலும் எந்த சூழ்நிலையிலும் நம்மைத் தற்காத்து கொள்ளும் மனவலிமை வேண்டும். நிறைய படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் என எந்த பெண்ணாக இருந்தாலும் கணவனையே முழுமையாக சார்ந்திராமல் சுயமாக இருக்க கற்று கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளை மற்றவர்களிடம் கேட்டு பெற வேண்டியதில்லை.

செருப்பு தைக்கும் தொழிலாளி பொன்னம்மா:

யார் என்ன பண்றாங்கன்னு எங்களுக்கு தெரியாது. பெண்கள் தினம் கொண்டாடுறது எல்லாம் சும்மா பேச்சுக்கு தான் சரியா வரும். நிஜத்துல ஒத்துவராது. இன்னைக்கு 10ஜோடி செருப்பு தைச்சா தான் எங்க பொழப்பு ஓடும். எங்ககிட்ட எந்த மாற்றமும் இல்லை. நிறைய பொம்பளைங்க தைரியமா வெளியே போய் வேலைபார்க்கறாங்க. அதுவரைக்கும் எங்களுக்கு சந்தோஷம் தான்

நன்றி - தினமலர்


Image hosted by Photobucket.com"பெண்ணின் அத்தனை பட்டுணர்வுகளுக்கும் நங்கூரமாக இருப்பது அவள் உடல்தான். அவள் பட்டுணர்வுடன் இணைந்துள்ள உடலை அவள் எழுத வேண்டியிருக்கிறது. அதில் ஏற்றப்பட்டிருக்கும் மொழியை உடைக்க வேண்டியிருக்கிறது. ............ அவள் அங்கங்களுக்கு அவள் நேரடியான, மறைமுகமற்ற, முகத்தில் அறையும் உருவத்தை தரவேண்டியிருக்கிறது. அந்த நேரடியான உணர்வுடன் நேரெதில் உடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஒரு சரித்திர நிகழ்வு, வெளிப்பாட்டின் ஒரு பகுதி. இதில் அழைப்புக்குரல் கேட்பவர்களுக்குச் செவியில் கோளாறு போலும்"

- அம்பை, பிப்ரவரி மாத காலச்சுவடில் (சென்ஸார் செய்யப்பட்டுள்ளது)


மார்ச் 8, உலக பெண்கள் தினம் என்பது எல்லோருக்கும் தெரியும். 1911 ஆம் வருஷத்திலிருந்துதான் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பது கொஞ்ச பேருக்குத்தான் தெரியும். மார்ச் எட்டாம்தேதிக்கு இன்னபிற விசேஷங்களும் உண்டு. கோள்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன என்பதை கெப்ளர் கண்டுபிடித்த நாள் (1618). இண்டாம் உலகப்போரின்போது மார்ச் 8ஆம்தேதியன்றுதான் ஜப்பானின் கை ஓங்கியது. ரங்கூன், பர்மா பகுதிகளை பிடித்தது. (1942), சோவியத் யூனியன் முதல் முதலாக தான் தன்னிடம் அணு ஆயுதம் இருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. (1950), சூயஸ் கால்வாயை எகிப்து போக்குவரத்திற்காக திறந்தது இதே நாளில்தான் (1957) மாக்ஸ் கோனார்டு எட்டுநாளில் உலகத்தை சுற்றி சாதனையை முடித்த நாள் (1961), வியட்நாமில் அமெரிக்கப் படைகள் காலடி வைத்த நாள் (1965)

Saturday, March 05, 2005

தேவுடா... தேவுடா!டாப் 1

சக்தியெல்லாம் ஒன்று
சேர்ந்தாலே ...
சொர்க்கம் வரும் இந்த
மண் மேலே

உன்னைப் பற்றி யாரு
என்ன சொன்னால் என்ன
இந்தக் காதில் வாங்கி அதை
அந்தக் காதில் தள்ளு!

மேகம் மிதித்தாலும்
காகம் பறந்தாலும்
ஆகாயம்தான் அழுக்காக
ஆகாதுன்னு சொல்லு...

நன்றி - வாலி


டாப் 2

ஆறு மனமே ஆறு இங்கே
அனைத்தும் அறிந்தது யாரு
அறிவைத் திறந்து பாரு - அதில்
இல்லாததை சேரு

நன்றி - பா.விஜய்


டாப் 3

ஏத்தி விட்டத மறந்தாக்கா - அந்த
நன்றி என்னும் வார்த்தைக்கொரு
அர்த்தமில்லை
காத்திலிருந்து தலையாட்டி - நீ
நூலுக்குத்தான் நன்றி சொல்லு

பாஞ்சி பாயுற பட்டம் - இது
பட்டைய கெளப்புற பட்டம்
இது சூப்பர்ஸ்டாரு பட்டம்

நன்றி - நா. முத்துக்குமார்


டாப் 4

உன்னால் நானழகு
என்னால் நீயழகு
நம்மால் யாவும் அழகே

நன்றி - யுகபாரதி

டாப் 5

உள்ளம் தெம்பாக வை
எண்ணம் உயர்வாக வை
வாழும் காலமெல்லாம்
மண்ணில் மரியாதை வை

கண் இமைக்கும் நொடியில்..
அட எதுவும் நடக்கும்
இது எனக்கு தெரியும்
நாளை
இது உனக்கும் புரியும்

நன்றி - கபிலன்

Tuesday, March 01, 2005

வெளிறிப்போன வெங்காயம்

ஆலுவும் லல்லுவும் இல்லாம பீகாரே கிடையாதுன்னு பீகாரிகள் பெருமையா சொல்லிக்கிற விஷயம். லல்லுவின் உருவத்திற்கும் பேச்சையும் பார்க்கும்போது உருளைக்கிழங்கோடு ஒப்பிடுவதில் தப்பில்லை. உருளைக்கிழங்கும் வெங்காயமும் இல்லாத வடஇந்திய சமயலறைகளே கிடையாது என்பது உண்மைதான். ஆனால் வெற்று மிரட்டல், ஆணவம், அதிகார போதை விஷயத்தில் லல்லு நம்ம அம்மாவோட பெரியண்ணன். அந்த வகையில் உருளைக்கிழங்கை விட உரிக்க உரிக்க ஒண்ணுமேயில்லாமல் போகும் வெங்காயத்தோடு லல்லுவை ஒப்பிடுவதுதான் சரி.

எண்பதுகளின் இறுதியில் ஆரம்பித்த லல்லுவின் தர்பார் இன்று முடிவுக்கு வரும் காலம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கம் மிச்சமிருக்கிறது. ஆனாலும் அரசியல் அரங்கில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதே லல்லுவுக்கு பெரிய தோல்விதான். ஒரு பொம்மை முதல்வரால் பத்தாண்டுகாலமாக பீகார், இந்திய அரசியலின் அசிங்கமான முகத்துக்கு சொந்தமான இடமாகியிருக்கிறது. பீகாரை ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிநடத்திச்செல்வதாக லாந்தர் விளக்கை தூக்கிக்காட்டி வாய்ஜாலம் நடத்தியதை பீகாரிகள் சீரியஸாகவும் மற்றவர்கள் ஜோக்காகவும் எடுத்துக்கொண்டார்கள்.

பிரச்னை, பீகார் அரசியல்வாதிகளிடம் மட்டுமில்லை. அரசுத்தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வருவது பீகார் மாநிலத்திலிருந்துதான். அரசுப் பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளை சளைக்காமல் எழுதித்தள்ளும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடம். ஏறக்குறைய எல்லா மாநிலத்திலும் ஒரு பீகாரி உயர் பதவியிலிருப்பார். மலையாளிகளும் தமிழர்களும் வெளிநாடுகளுக்கு அதிகமாக புலம் பெயர்ந்தவர்கள் என்றால் இந்தியாவுக்குள்ளேயே அதிகமாக புலம் பெயர்ந்து வாழ்பவர்களாக பீகாரிகளை சொல்லலாம். பேச்சில் பீகாரிகளை யாராலும் வெல்ல முடியாது என்பது எனது கணிப்பு. வாய்ப்புக் கிடைத்தால் பேசிக்கொண்டே இருப்பார்கள். லல்லுவை சர்வ சாதாரணமாக கிண்டலடிப்பார்கள். பீகாரின் ஜாதி அரசியல், கிரைம் ஸ்டேட் என்றெல்லாம் பேசுவார்கள்; ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். படித்தவர்களெல்லாம் வேலை கிடைத்ததும் ஒதுங்கிப்போய் சுயநலமிகளாய் நடந்து கொள்கிறார்கள். பீகாரின் பெரிய பிரச்னையே இதுதான்.

எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி மதச்சார்பின்மை கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார் லல்லு. இல்லாத எதிரியை இருப்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு வெற்று சவடால்கள் விடுவதில் லல்லுவோடு யாரால் போட்டிபோட முடியும். கோத்ரா ரயிலில் நடந்தது விபத்து என்பதில் ஆரம்பித்து முஸ்லீம் பெண்களுக்கு தனி சலுகைகள் என்று லல்லு அடித்த கூத்து சொல்லி மாளாது. ராப்ரிதேவியை பெண்ணினத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்டுவது கூட அவமான விஷயமென்பதை மகளிர் அமைப்புகளும் உணர்ந்து கொண்டு விட்டன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மாநில கட்சி தனியாக பிரிந்து நின்று தேர்தலை சந்திப்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திரும்பவும் கூடி குலாவுவதும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது இந்த தேர்தலில்தான். ஆட்சி அதிகாரத்தை கொடுத்த காங்கிரஸோடு லல்லு முறுக்கிக்கொண்டார். அதற்காக மத்திய அரசிலிருந்து விலகியிருந்து காங்கிரஸை எதிர்ப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? பீகாரின் வெங்காயம் இப்போதைக்கு வெளிறிப்போயிருக்கிறது.முரண்பாடான நிலையை மறைத்த காங்கிரஸிற்கு மரண அடி கிடைத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே இப்படிப்பட்ட இழுபறி வரும் என்றுதான் ஜனாதிபதி ஆட்சிக்கு பாஸ்வான் சிபாரிசு பண்ணினார். இந்த நிமிஷம் வரைக்கும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் பீகாரின் புது கிங் மேக்கர். பாஜகவின் ஆதரவோடு ஆட்சிக்கு வருவது பாஸ்வானின் அரசியல் வாழ்க்கைக்கு ஆகாது. இருண்டு கிடக்கும் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த துணைநிற்பதுதான் புது கிங் மேக்கரின் வேலையாக இருக்கவேண்டும். இந்த பீகாரிக்காவது மனசாட்சி இருக்கிறதா என்பது இன்னும் நாலு நாளில் தெரிந்துவிடும்!