Tuesday, March 01, 2005

வெளிறிப்போன வெங்காயம்

ஆலுவும் லல்லுவும் இல்லாம பீகாரே கிடையாதுன்னு பீகாரிகள் பெருமையா சொல்லிக்கிற விஷயம். லல்லுவின் உருவத்திற்கும் பேச்சையும் பார்க்கும்போது உருளைக்கிழங்கோடு ஒப்பிடுவதில் தப்பில்லை. உருளைக்கிழங்கும் வெங்காயமும் இல்லாத வடஇந்திய சமயலறைகளே கிடையாது என்பது உண்மைதான். ஆனால் வெற்று மிரட்டல், ஆணவம், அதிகார போதை விஷயத்தில் லல்லு நம்ம அம்மாவோட பெரியண்ணன். அந்த வகையில் உருளைக்கிழங்கை விட உரிக்க உரிக்க ஒண்ணுமேயில்லாமல் போகும் வெங்காயத்தோடு லல்லுவை ஒப்பிடுவதுதான் சரி.

எண்பதுகளின் இறுதியில் ஆரம்பித்த லல்லுவின் தர்பார் இன்று முடிவுக்கு வரும் காலம் நெருங்கியிருக்கிறது என்று சொல்லலாமா வேண்டாமா என்கிற தயக்கம் மிச்சமிருக்கிறது. ஆனாலும் அரசியல் அரங்கில் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதே லல்லுவுக்கு பெரிய தோல்விதான். ஒரு பொம்மை முதல்வரால் பத்தாண்டுகாலமாக பீகார், இந்திய அரசியலின் அசிங்கமான முகத்துக்கு சொந்தமான இடமாகியிருக்கிறது. பீகாரை ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிநடத்திச்செல்வதாக லாந்தர் விளக்கை தூக்கிக்காட்டி வாய்ஜாலம் நடத்தியதை பீகாரிகள் சீரியஸாகவும் மற்றவர்கள் ஜோக்காகவும் எடுத்துக்கொண்டார்கள்.

பிரச்னை, பீகார் அரசியல்வாதிகளிடம் மட்டுமில்லை. அரசுத்தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகமாக வருவது பீகார் மாநிலத்திலிருந்துதான். அரசுப் பதவிகளுக்கான போட்டித்தேர்வுகளை சளைக்காமல் எழுதித்தள்ளும் மாணவர்கள் அதிகமாக இருக்கும் இடம். ஏறக்குறைய எல்லா மாநிலத்திலும் ஒரு பீகாரி உயர் பதவியிலிருப்பார். மலையாளிகளும் தமிழர்களும் வெளிநாடுகளுக்கு அதிகமாக புலம் பெயர்ந்தவர்கள் என்றால் இந்தியாவுக்குள்ளேயே அதிகமாக புலம் பெயர்ந்து வாழ்பவர்களாக பீகாரிகளை சொல்லலாம். பேச்சில் பீகாரிகளை யாராலும் வெல்ல முடியாது என்பது எனது கணிப்பு. வாய்ப்புக் கிடைத்தால் பேசிக்கொண்டே இருப்பார்கள். லல்லுவை சர்வ சாதாரணமாக கிண்டலடிப்பார்கள். பீகாரின் ஜாதி அரசியல், கிரைம் ஸ்டேட் என்றெல்லாம் பேசுவார்கள்; ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். படித்தவர்களெல்லாம் வேலை கிடைத்ததும் ஒதுங்கிப்போய் சுயநலமிகளாய் நடந்து கொள்கிறார்கள். பீகாரின் பெரிய பிரச்னையே இதுதான்.

எல்லோரும் எதிர்பார்த்த மாதிரி மதச்சார்பின்மை கோஷம் போட ஆரம்பித்திருக்கிறார் லல்லு. இல்லாத எதிரியை இருப்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு வெற்று சவடால்கள் விடுவதில் லல்லுவோடு யாரால் போட்டிபோட முடியும். கோத்ரா ரயிலில் நடந்தது விபத்து என்பதில் ஆரம்பித்து முஸ்லீம் பெண்களுக்கு தனி சலுகைகள் என்று லல்லு அடித்த கூத்து சொல்லி மாளாது. ராப்ரிதேவியை பெண்ணினத்தின் பிரதிநிதியாக அடையாளம் காட்டுவது கூட அவமான விஷயமென்பதை மகளிர் அமைப்புகளும் உணர்ந்து கொண்டு விட்டன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஒரு மாநில கட்சி தனியாக பிரிந்து நின்று தேர்தலை சந்திப்பதும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் திரும்பவும் கூடி குலாவுவதும் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது இந்த தேர்தலில்தான். ஆட்சி அதிகாரத்தை கொடுத்த காங்கிரஸோடு லல்லு முறுக்கிக்கொண்டார். அதற்காக மத்திய அரசிலிருந்து விலகியிருந்து காங்கிரஸை எதிர்ப்பார் என்று எதிர்பார்க்க முடியுமா? பீகாரின் வெங்காயம் இப்போதைக்கு வெளிறிப்போயிருக்கிறது.



முரண்பாடான நிலையை மறைத்த காங்கிரஸிற்கு மரண அடி கிடைத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்னரே இப்படிப்பட்ட இழுபறி வரும் என்றுதான் ஜனாதிபதி ஆட்சிக்கு பாஸ்வான் சிபாரிசு பண்ணினார். இந்த நிமிஷம் வரைக்கும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் பீகாரின் புது கிங் மேக்கர். பாஜகவின் ஆதரவோடு ஆட்சிக்கு வருவது பாஸ்வானின் அரசியல் வாழ்க்கைக்கு ஆகாது. இருண்டு கிடக்கும் பீகாரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த துணைநிற்பதுதான் புது கிங் மேக்கரின் வேலையாக இருக்கவேண்டும். இந்த பீகாரிக்காவது மனசாட்சி இருக்கிறதா என்பது இன்னும் நாலு நாளில் தெரிந்துவிடும்!