Monday, March 14, 2005

ரஜினி - சகாப்தமா?

கிட்டதட்ட தலைப்பிரசவம் போலத்தான். வாழ்க்கையில் எப்போதும் இருந்திராத டென்ஷன் இப்போது. சந்தோஷத்தையும் கலக்கத்தையும் சரிவிகிதமாக கலந்து கொடுத்த அந்த நாளை என்றுமே மறக்க முடியாது. ஆறு தொகுதிகளில் அடிவாங்கி ஒதுங்கியிருந்த காலம். உடனே கிளம்பி ஆபிஸ் வரும்படி பா. ராகவனிடமிருந்து போன். நேராகவே விஷயத்துக்கு வந்துவிட்டார். ஒரு புத்தகம் எழுதி தரவேண்டும். அதுவும் ரஜினியைப் பற்றி.

'ஸார்.. நெஜமாத்தான் சொல்றீங்களா...?'

'ஆமாய்யா.. நீதான் எழுதணும்'

'புத்தகம் எழுதறதுங்கிறது சாதாரண விஷயமா.. என்னால அது முடியுமா ஸார்?'

'நீதான் எழுதுறே...இன்னிக்கே வேலையை ஆரம்பிக்குறே'

'ஸார்.. ரஜினியை பத்தி நான் எழுதுனா எத்தனை பேர் ஒத்துப்பாங்க?!'

'உன்னால முடியும். உள்ளதை உள்ளபடி அப்படியே எழுது. நிச்சயம் நல்லா வரும்'

'ரஜினியை பத்தி அதிகமா எங்கேயும் நான் கமெண்ட் அடிச்சது இல்லை. முகமூடி போட்டுக்கிட்டு கூட. அதான் கரெக்டா வருமான்னு பயமா இருக்குது. சரி, ரஜினின்னு சொன்னா எதைப்பத்தி எழுதறது?'

'சிம்பிள். கண்டக்டரா இருந்த சிவாஜிராவ் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி... சூப்பர் ஸ்டாரா வந்தப்புறம் எப்படி அதை தக்க வெச்சுக்கிட்டார்... அரசியலுக்குள்ள வராமலே மீடியாவுல பரபரப்பான ஆசாமியாவே இருக்கிறது... இனிமே ரஜினி என்ன பண்ணலாம்... எடுத்துக்கிட்ட விஷயத்தை கச்சிதமா கட் அண்ட் ரைட்டா சொல்லிடணும்'

'நான் ரஜினியோட ரசிகன்ங்கிறது தெரியாத ஆளே கிடையாது...நடுநிலைமையில நின்னு என்னால எழுதமுடியுமா?'

'நிச்சயமா. ரஜினிகிட்ட நம்பிக்கை இருக்குதோ இல்லையோ ராம்கி கிட்ட எனக்கு நிறைய இருக்கு'

பா.ராகவன் என்மேல் வைத்த நம்பிக்கையை பேஸ்மெண்ட்டாக வைத்துதான் பிள்ளையார் சுழி போட்டேன். எவையெல்லாம் வரவேண்டும் என்பதை முடிவு செய்யவே ஒரு மாத காலமானது. இரண்டே மாதத்தில் முடிந்தாலும் திருப்தியே வரவில்லை. ரஜினியை பற்றிய விஷயங்கள் சாதாரண மக்களுக்கு நிறையவே தெரிந்திருக்கின்றன. ரஜினியின் சினிமா வெற்றிகள் பற்றி ஏற்கனவே எல்லோரும் சொல்லியிருப்பதையே திரும்பவும் சொல்லத் தேவையில்லை என்று முடிவு செய்தேன். பெங்களூரில் கண்டக்டராக இருந்தது, சினிமா சான்ஸ் தேடி சென்னையில் அலைந்தது போன்ற தெரிந்த விஷயங்களை கூட புதுவிதமான பார்வையில் சொல்ல வேண்டியிருந்தது.

Image hosted by Photobucket.com

சினிமா சூப்பர் ஸ்டாராக இருந்த அதே நேரத்தில் தனிமனித வாழ்க்கையையும் சீராக வைத்திருந்தததையும், ரசிகர்களிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் அவர்களின் அன்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பதற்கான காரணங்கள் பற்றியும் கூடுதலாக சில பிரத்யேக விஷயங்களை தந்திருந்தாலும் புத்தகத்தின் மையக்கருத்தாக அலசப்பட்டிருப்பது ரஜினி எடுத்த அரசியல் முடிவுகளும் அதற்கான பின்னணிகளும்தான்.

தொண்ணூறுகளில் ஆரம்பித்த ரஜினியின் அரசியல் (?) வாழ்க்கை ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்னமும் 'அரசியலுக்கு வருவாரா?' என்கிற கேள்விக்கு விடை தெரியாமலே தொக்கி நிற்கிறது. ஊர் விட்டு ஊர் வந்து மொழி தெரியாத ஊரில், அதுவும் செல்வாக்குள்ள சினிமாத்துறையில் முன்னணிக்கு வந்து, அதையே முப்பது வருடங்களாக தக்க வைத்திருப்பதை விவரமாக சொல்லும் புத்தகம், இனி ரஜினி என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு கருத்துக்கணிப்பின் அடிப்படையில் ஆலோசனையாக சொல்வதோடு முடிகிறது.

எல்லாமுமாக இருந்த பா.ராகவன், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை சொன்ன பத்ரி சேஷாத்ரி, நேரிலும் மின்னஞ்சலிலும் ஊக்கப்படுத்திய இணைய நண்பர்கள், கிழக்கு பதிப்பக ஊழியர்கள், பிரத்யேக தகவல்களை தேடிக்கொடுத்து ஒத்துழைப்பு தந்த எங்களது இணையத்தள நண்பர்களான ஷாஜகான், ராஜா, ராஜேஷ், நடராஜ், விஷயத்தை கேள்விப்பட்டு வாழ்த்திய பத்திரிக்கையுலக பிரம்மாக்கள் என நன்றி தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் பெரிது.

காட்டமான விமர்சனங்களோ, அதிகப்படியான புகழுரைகளோ இல்லாமல் உள்ளது உள்ளபடியே திருப்தியோடு வந்திருக்கும் புத்தகம், ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பிடிக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. அந்த நம்பிக்கையைக் கொடுத்த ஆண்டவனுக்கும் நான் நன்றி சொல்லியாகவேண்டும்.

ரஜினி 'சந்திரமுகி' வரை வந்துவிட்டார். நான் இப்போதுதான் அபூர்வ ராகங்களில் அடியெடுத்து வைக்கிறேன். வாழ்த்துக்களை மட்டுமல்ல பாராட்டுக்களையும் பெற்றாகவேண்டும். பார்க்கலாம்!