Thursday, March 31, 2005

வந்தாச்சு... வந்தாச்சு!

அருள் வாக்கு

"உலகத்துல எப்பவும் சந்தோஷமா இருக்கிறவங்க மூணு பேர். ஞானி, குழந்தை, பைத்தியக்காரன். ஞானி எல்லாத்தையும் அறிந்தவர். குழந்தை எதையும் அறியாதவர். பைத்தியக்காரன், எதுவும் அறியாது; எதுவும் புரியாது"

ரஜினியும் அரசியலும்

...ரஜினியை பற்றி விமர்சிப்பவர்கள் அவரது கொள்கைகளையோ அல்லது அவரது செயல்பாடுகளையோ விமர்சிப்பதில்லை. அரசியல் ரீதியாக அவர் முடிவு எதுவும் எடுக்காததுதான் விமர்சனங்களின் கருப்பொருளாக இருந்து வருகிறது. உண்மையில் மீடியாவினர் ரஜினியை புகழவும் விமர்சிக்கவும் எடுத்துக் கொண்ட நேரத்தில் ஒரு பத்து சதவீதத்தை கூட ரஜினி ஆக்கபூர்வமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவாதித்ததில்லை. ரஜினி அரசியலுக்கு வராதது பற்றி விமர்சிப்பவர்கள் எல்லோரும் அரசியலை வேடிக்கை பார்ப்பவர்கள்தான். நாளை ரஜினியே அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவர்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடியுமே தவிர ரஜினியுடன் இணைந்து களமிறங்க முடியாது. இதில் மீடியாக்கள் மட்டுமல்ல சில ரஜினி ரசிகர்களும் அடக்கம்தான்.

ரஜினியும் ஆன்மீகமும்

...ரஜினி சொல்லும் ஆன்மீகமெல்லாம் பாமர மக்களுக்கு புரியும் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், அவர் சொல்லும் நிலையாமை தத்துவங்களை மக்கள் ரசிக்கிறார்கள். 'எவ்வளவு நாட்களுக்கு எங்கெங்கே நீ உன் கர்மாவை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நேரத்தை உன் விருப்பப்படி மாற்ற முடியாது. உன்னுடைய கடமைகளை உதறித்தள்ள உனக்கு உரிமை கிடையாது. காலம் வரும்போதுதான் உன்னால் எதுவும் செய்ய முடியும்' என்ற ரமண மகரிஷியின் நல்வாக்கை படித்த பின்பு ரஜினி மனதில் தோன்றிய டயலாக்தான், 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காம இருக்கிறது கிடைக்காது' ஆன்மீகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். மதங்கள் மக்களை குழப்புவதால் தன்னை ஆன்மீகவாதியாக காட்டிக் கொள்வதில்தான் தனக்கு இஷ்டமிருப்பதாக சொல்கிறார்

ரஜினியும் சினிமாவும்

...பேண்ட் பாக்கெட்டிலிருக்கும் பெரிய கத்தியை எடுக்கிறார். வில்லன் கோஷ்டி வியர்த்துப் போய் பார்க்கிறது. கையிலெடுத்த கத்தியை அப்படியே அந்தரத்தில் சுழல விடுகிறார். முன் பெஞ்சிலிருப்பவர்களிலிருந்து பால்கனியிலிருப்பவர்கள் வரை வித்தியாசம் காட்டாமல் கைதட்டுகிறார்கள். இது சாத்தியமா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ரஜினி படங்களில் எப்போதுமே நோ லாஜிக்... ஒன்லி மேஜிக்! ரஜினியின் பெரும்பாலான படங்கள் வணிகரீதியில் அபத்தமான மசாலா களஞ்சியங்களாக இருந்தாலும் கமர்ஷியல் கட்டாயங்கள் எதுவுமில்லாமல் ரஜினி என்கிற தனிநபரை முன்னிலைப்படுத்துவதாகவே இருக்கும். பொதுவாக ரஜினி பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கி படத்தின் தரம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.


ரஜினி : சப்தமா? சகாப்தமா?

விலை : ரூபாய் 50/-

கிழக்கு பதிப்பகம்
16, கற்பகாம்பாள் நகர்,
மயிலாப்பூர், சென்னை - 4.
தொலைபேசி - 52009601/02/03
www.kamadenu.com