Monday, May 30, 2005

சோனியா - நோ சைலன்ஸ் ப்ளீஸ்!

எந்தவித எதிர்ப்புமில்லாமல் எதிர்பார்த்த மாதிரியே மூன்றாவது முறையாக தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் டெல்லி அம்மா. கட்சிக்காரர்களுக்கு சந்தோஷமான விஷயம். பிரதமருக்கும் சோனியாவுக்கும் ஏகப்பட்ட பிரச்னை என்றெல்லாம் மீடியா கதறினாலும் பெரிய அளவில் புகை ஏதும் வராமலிருப்பதே பெரிய சாதனைதான். ஆனால், இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சியின் தலைவி இப்படி அநியாயத்திற்கு எல்லா விஷயத்திலும் வாய்மூடி நிற்பதுதான் நெருடலான விஷயம்.

பீகாரில் தேர்தலே வேண்டாம் என்று சொன்னதையெல்லாம் காதில் வாங்காமல் அவசரப்பட்டு தேர்தலை நடத்தி, நாலு மாதம் இழுத்தடித்து ஒரு வழியாக சட்டசபையை கலைத்த நேரத்தில் சோனியா வாய்திறக்கவேயில்லை. லால்லுதான் பேசுகிறார்; பேசிக்கொண்டே இருக்கிறார்.

இருள்நீக்கி சுப்ரமணியனை சிறையலடித்த விவகாரத்தை தமிழ்நாட்டு கட்சிகளெல்லாம் அவரவர்களுக்கு சாதகமாக திசை திருப்ப டெல்லி அம்மாவிடமிருந்து வந்தது ஒரு கமெண்ட். நோ கமெண்ட்ஸாம்!

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசாவை மறுத்தபோது பிரதமரின் மனசாட்சி முந்திக்கொண்டு பேசியது. சோனியாவிடமிருந்து ரியாக்ஷனே வரவில்லை.

அரசியலுக்கு வந்த நாள் முதல் ராகுல், சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் முலாயம்சிங்கை பிடிபிடியென்று பிடிக்கிறார். ஆண்டனியோ என்றெல்லாம் சொல்லி அலற வைத்த நம்மூர் அம்மாவை பத்தி சோனியாவோ அல்லது சோனியாவின் வாரிசுகளோ கண்டுகொள்வதேயில்லை.

பத்துவருடத்திற்கும் மேலாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்த கருணாகரன், ஒரு வழியாக தனியாக கட்சி ஆரம்பித்து காங்கிரஸ்காரர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்க ஆரம்பித்தும் சோனியாவிடமிருந்து எந்த ரியாக்ஷனும் இதுவரை இல்லை. கருணாகரனும் அவரது மகனும் இன்னும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களாகத்தான் இருக்கிறார்கள்.

சிலர் பேசாமலிருப்பது நல்லது; சிலர் பேசியே ஆகவேண்டியிருக்கிறது. சோனியா இரண்டாவது ரகம். நாட்டின் மிகப்பெரிய கட்சியை நிர்வகிப்பவர் அரசியல் பிரச்னைகளுக்கு தன்னுடைய கருத்தை சொல்லாமலிருப்பதும் மீடியா அதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருப்பதும் ????????

Image hosted by Photobucket.com

கொசுறு. பத்தடிக்கு ஒரு கட் அவுட், கொடி, தோரணம் என்று மூன்று கி.மீ தூரத்திற்கு கிழக்கு கடற்கரைச் சாலையே அல்லோகலப்பட்டிருந்தது. பெண்ணினத்து போராளியே, காஞ்சித் தலைவியே என்றெல்லாம் ஜெயந்தி நடராஜனை விளிக்கும் பேனர்கள். தமிழ் நாட்டின் ஒரு ராஜ்ய சபா எம்பி தன்னுடைய மயிலாப்பூர் வீட்டிலிருந்து கிளம்பி அடையாறு, திருவான்மியூர் வழியாக இ.சி.ஆர் ரோட்டுக்கு வருவதற்கே லட்சக்கணக்கில் செலவாகியிருக்கிறது. ஜெயந்தி நடராஜன் கட்சி ஆபிஸ்க்கு வருவதே மீடியாவில் செய்தியாகிவிடுகிறது. அவ்வப்போது என்டிடிவி, ஸ்டார் நியூஸ் பக்கம் போனால் அம்மாவை கருத்து கந்தசாமியாக பார்க்கலாம். ம்.. என்னவோ திட்டமிருக்கு! அரசியலில் எல்லோரையும் அரள வைப்பது அம்மாக்கள்தானே!