Friday, July 01, 2005

பொறுவாசகம்

சிவன் கோயிலில் சாயரட்சை நேரத்தில் பஞ்சமுக ஆரத்தி எடுப்பதற்கு முன்னால் அந்த பண்டிதர் பாடும் தமிழிசை பாட்டுக்கு நடுவே வெஸ்டர்ன் மியூசிக் வந்தால் எப்படியிருக்கும்? இளையராஜாவின் திருவாசகத்தில் அந்த ப்யூஷன்தான். வெஸ்டர்ன் கிர்ர்ர்ர்ர்ர் லூலூவுக்கு நடுவே ராஜாவின் குரலில் தேனூறும் திருவாசகம். ஒரு வழியாக புலி வந்தே விட்டது. நெருக்கடியடிக்கும் கூட்டத்தில் நீச்சலடித்துக்கொண்டிருந்தது மியூசிக் அகாடமி. வண்டியை பார்க் பண்ணவே நாலு தெரு தாண்ட வேண்டியிருந்தது. அரசியல், ஆன்மீகம், சினிமான்னு ஏகப்பட்ட பிரபலங்கள் வந்திருந்தாலும் அரசியல் முகங்களுக்குத்தான் மெஜாரிட்டி. வை.கோ, பீட்டர் அல்·போன்ஸ் தவிர என்.ராம், பாரதிராஜாவையெல்லாம் அரசியல் லிஸ்ட்டுல சேர்த்துக்கிட்டா தப்பில்லையே! டெல்லியிலிருந்து பறந்து வந்து சிம்பிளான ஆங்கிலத்தில் புரியும்படி பேசினார் ஜெய்பால் ரெட்டி. அடுத்து பேச வந்த எந்த தமிழனும் ஜெய்பால் ரெட்டி அளவுக்கு இளையராஜாவை புகழ்ந்து தள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் திருவாசகத்துக்கு தோள் கொடுத்திருப்பவர்களில் நிறைய பேர் கிறிஸ்தவர்கள் என்பது நெஞ்சைத் தொட்ட விஷயம்.

மேடையிலேயே கமலும் பாரதிராஜாவும் ஓரங்கட்டிக்கொண்டார்கள். விழா முடியும் வரை ரஜினியோடு இளையராஜா பேசிக்கொண்டே.......இருந்தார். அதே மாதிரி வைகோவும் என். ராமும். பாவம், பாலமுரளி கிருஷ்ணாவுக்கு சரியான கம்பெனி கிடைக்கவில்லை. நடுவில் மாட்டிக்கொண்டு அவஸ்தையாய் உட்கார்ந்திருந்தார். வைகோவுக்கு நடைபயண அனுபவம் இன்னும் மறக்கவில்லை. அடிக்கடி மேடையிலேயே நடைபயின்று கொண்டிருந்தார். ரஜினியும் கமலும் தமிழ் சினிமாவின் இரட்டைக்குழல் துப்பாக்கின்னு பீட்டர் சொன்னதை மறுத்த கமல் நாங்க ரெண்டு பேரும் ரெட்டை மாடுகள் மாதிரின்னு சொன்னார். தொடர்ந்து விளக்க வந்த பாரதிராஜா ரெண்டு பேரும் அசோக சக்கரத்திலிருக்கும் சிங்கங்கள் என்றார். (அட..அட விடுங்கப்பா, திருவாசக விழாவுக்கு வந்தா திட்டம் போட்டு தனிக்கச்சேரி நடத்துறீங்களேன்னு யாராவது சொல்லக்கூடாதா?) இரண்டையும் இணைக்கும் சக்கரம் இளையராஜா என்பதையும் மேலிருக்கும் மகுடங்கள் தன்னைப்போன்ற இயக்குநர்கள் என்பதும் பின்னிணைப்பு. நாளைக்கு 'சிங்கங்கள் காலடியில் சிக்கியிருக்குது தமிழ் சினிமா'ன்னும் சொல்வார், சினி·பீல்டுல பிரச்னை வந்தா! (காலடியில் இருந்த தண்ணீர் பாட்டிலை தேட கமல் கொஞ்சம் கஷ்டப்பட்டது தனி கொசுறு)

Image hosted by Photobucket.com

கஷ்டப்பட்டு வாங்குற சம்பளத்தை பொண்டாட்டிக்கிட்ட கொடுக்கிறதும் ஒண்ணுதான்; திருப்பதி உண்டியலில் போடறதும் ஒண்ணுதான்னு ரஜினி போட்ட ரிலாக்ஸ் குண்டில் அரங்கம் கொஞ்சம் கலகல. ரஜினிக்கு பிடிச்ச மேடை பேச்சாளர் வைகோவாம். (நோ கமெண்ட்ஸ்!) வை.கோ பேசறதை நேர்ல பார்க்க சான்ஸ் கிடைச்சுருக்குன்னு சொல்லி எதிர்பார்ப்பை எகிற வைக்க, வை.கோ மைக்கை பிடிச்சதும் காமிரா ரஜினியையும் வைட் ஆங்கிளில் படம் பிடிக்க ஆரம்பித்தது. வை.கோவின் பரபரப்பான ஆன்மீகப்பேச்சும் ரஜினியின் படபட ரியாக்ஷனையும் காமிரா சுட்டுத்தள்ளி வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து விசிலை அள்ளிக்கொண்டது. 'நீங்க ஏன் அரசியலில் இருக்கணும்'னு வைகோவிடம் இளையராஜா கேட்டதில் தப்பேயில்லை. தனக்கு இன்னென்ன விஷயம் தெரியுங்கிறதை வை.கோ அரசியல் கலக்காம பேசி தான் அரசியல்வாதி மட்டுமல்ல என்பதை ஆடியன்ஸ்க்கு சொன்னாரோ இல்லையோ ரஜினி புரிஞ்சுக்கணுங்கிற மாதிரிதான் பேச்சு இருந்தது. கடைசியாக, பேச்சு எப்படி இருந்தது என்பதை ரஜினியிடம் கேட்டு கமெண்ட்ஸ் வாங்கவும் மறக்கவில்லை. விழாவுக்கு வைரமுத்து வராதது பெரிய குறை. பா.விஜய்யை பாராட்ட போய்விட்டாரோ என்று நினைத்தால் அதுவுமில்லை.

மனுஷனுக்கு தேவை சந்தோஷமோ, கஷ்டமோ இல்லை. அமைதிதான்னு ரஜினி சொன்னதை வழிமொழிந்து பேச்சை ஆரம்பித்த ராஜா வழக்கம்போல தனது ஸ்டைலில் தொடர்ந்தார். கொஞ்சம் வெடிகுண்டு + சப்பைக்கட்டு, கொஞ்சம் சுயபுராண ஆன்மீக அனுபவங்கள், இசை பத்தின விளக்கங்கள், ஒரு நாலு வரி பாடல்...இளையராஜாவின் ஆன்மீகம் இன்னும் பக்திமார்க்கத்தில் மட்டுமே இருக்கிறது. சாம்பிளுக்கு ஒரு வெடிகுண்டு. 'கமலுக்கு கடவுள் மேல நம்பிக்கை கிடையாது; கடவுளுக்கும் கமல் நம்பித்தான் ஆகணுங்கிற அவசியம் கிடையாது'

நடுநடுவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறேன் பேர்வழின்னு பிளேடை கழுத்தில் வைக்காத குறையாக இம்சைப்படுத்திய ஆசாமி உச்சகட்டமாய் ஒரு பாடலையும் பாட ஆரம்பித்து கூட்டத்தை கலைக்க வைக்க பிரயத்தனப்பட்டார். இளையராஜாவுக்காக யாகூ குழுமம் நடத்துபவரையும் மேடையில் கூப்பிட்டு வெச்சு கெளரவித்தார்கள். (ம்... நமக்கும் ஒரு காலம் வரும்!) நன்றி சொல்லுகிறேன் பேர்வழின்னு வந்த ஒரு பாதிரியாரோ சொந்தக்கதை சோகக்கதையையெல்லாம் அள்ளிவிட்டு, போகும்போது மறக்காம பிரசங்க நோட்டீஸ் வாங்கிக்கவும் சொன்னார். திருவாசகத்தை பத்தி எல்லோரும் திருவாய் மலர்ந்தருளுவதை கேட்கவும் கொஞ்சம் பொறுவாசகம் வேண்டும். நதிநீர் இணைப்பு பற்றி வை.கோவும் ரஜினியும் ஸ்டெப் எடுக்கவேண்டும்னு பாதிரியார் சொன்னதை அரசியல் பேச்சுன்னு இளையராஜா சொன்னதும் செம பாலிடிக்ஸ்தான்! இதே விழாவை நேரு ஸ்டேடியத்தில் கலைஞரையோ, ஜெயலலிதாவையோ கூப்பிட்டு எம்.எஸ்வியிலிருந்து வித்யாசாகர் வரை, டி.எம்.எஸ் முதல் தேவன் வரை, வாலியிலிருந்து யுகபாரதி வரை, கே.பாலசந்தர் முதல் பாலா வரை எல்லோரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டிய விழா, அனுபவமில்லாதவர்களின் அரென்ச்மெண்ட்டில் சொதப்பலாகிவிட்டது. ரஜினி வந்த பரபரப்பில் கூட்டம் திமிலோகப்பட்டு, மியூசிக் அகாடமியின் வாசல் கண்ணாடி உடைந்து, பால்கனி நிரம்பி வழிந்து, லோக்கல் போலீஸ் உள்ளே வந்து 'தள்ளு முள்ளு' நடத்தினாலும் 'இதெல்லாம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்'ங்கிற மாதிரி நடந்துகிட்டவங்க விழாவை ஏற்பாடு பண்ணினவங்கதான். அது சரி, நமக்கு மட்டும் என்ன சம்பந்தமாம்? வந்தோமோ நம்ம ஆளை பார்த்தோமா.. நடையை கட்டுனோமான்னுதானே இருந்தோம். இதெப்படி இருக்கு?

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com