Tuesday, November 22, 2005

துடைப்பக்கட்டை

Image hosted by Photobucket.com

சென்னை: துடைப்பக்கட்டை என்பது தமிழ் கலாசாரத்தின் ஒரு அடையாளம் என்று தமிழ் கலாசார பாதுகாப்பு காவலர் திருமாவளவன் தெரிவித்தார்.

நேற்று கூடிய தமிழ் கலாசார அறிஞர்களின் கூட்டத்தில் குஷ்பு, சுஹாசினி போன்ற நடிகைகளின் முறைகெட்ட செயலை கண்டிக்க கூடிய கூட்டத்தில் திருமாவளவன் இச்செய்தியை தெரிவித்தார். துடைப்பக்கட்டை காட்டி எதிர்ப்பு கூட்டம் நடத்துவது என்பது தமிழ் கலாசாரத்தின் அருமை பெருமைகளை விளக்கும் ஒரு அம்சமாக கொள்ளலாம் என்றும் கூறினார். அப்படிப்பட்ட எதிர்ப்பு கூட்டத்தை நடத்தியது விடுதலைச் சிறுத்தைகளோ அல்லது பாமகவோ அல்ல என்பதையும் உறுதிபட தெரிவித்தார். மேலும் சுஹாசினியின் கருத்தை கருணாநிதிக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டதாகவும் பொருள் கொள்ளலாம் என்றும் கூறினார்.


இதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க எம்பி சரத்குமார், சுஹாசினி தன்னுடைய பிரச்னையை கோர்ட்டில் சந்தித்துக்கொள்வதாக கூறி தன்னை எஸ்எம்எஸ்ஸில் மிரட்டியதாக வருத்தப்பட்டு பேசினார். அதற்கு முன்னதாக எஸ்எம்எஸ்ஸை தமிழில் எப்படி சொல்வது என்பது பற்றிய சுவையான விவாதங்கள் நடந்தன. பின்னர் பேசிய வழக்கறிஞர் அருள்மொழி, சுஹாசினி தன்னுடைய கருத்தை பெங்களூரில் சொல்லியிருந்தால் பிரச்னை வந்திருக்காது என்று கருத்து தெரிவித்தார். கூட்டத்தில் பேசிய கரு. பழனியப்பன் சாலமன் ருஷ்டி என்றொரு எழுத்தாளர் இருப்பதாக ஒரு கூடுதல் தகவலையும் பகிர்ந்துகொண்டார். ஒரு முழு நீள நகைச்சுவை நிகழ்ச்சியை சன் நியூஸ் சானல் ஏற்பாடு செய்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.