Saturday, April 29, 2006

கொடுத்து வைத்தவர்கள்

ஜனவரி 6. இரவு பத்தரை மணி. சர்ரென்று வந்து நிற்கும் வெவ்வேறு கார்களிலிருந்து கிட்டதட்ட மாறுவேஷத்தில் இறங்கி விறுவிறுவென்று வி.ஐ.பி லாபியில் புகுந்து நடையை கட்டுகிறார்கள். அடுத்த பத்தாவது நிமிடத்தில் இன்னொரு கோஷ்டி வந்து ஜோதியில் ஐக்கியமாகிறது. மலேஷியன் பிளைட் எம்ஹெச் 181 இவர்களை சுமந்தபடி கோலாம்பூர் நோக்கி பறக்கிறது. கோலாம்பூரில் இறங்கியதும் ஏர்போர்ட்டில் எதிர்கொண்டு அழைக்கும் தமிழ் பேசும் சில போராளிகளுடன் ஒரு கிளிக்!

Photobucket - Video and Image Hosting

போட்டோவில் சிக்கியவர்கள் ராமதாசு, திருமாவளவன், கோ.க. மணி! கோலாம்பூரில் தடபுடலாக வரவேற்பு கொடுத்தது விடுதலைப்புலிகளாம். என்ன காரணத்தினாலோ திடீரென்று மீட்டிங் ரத்தாகி பாங்காக் பறக்கிறார்கள். ஒரே நாள் மீட்டிங்தான். அடுத்த நாளே மீனம்பாக்கத்தில் வந்து இறங்கி பொங்கல் கொண்டாட ஊருக்கு விரைகிறார்கள். தமிழ் மீடியா இந்த திடீர் விசிட் பற்றி மூன்று மாதமாக மூச்சுவிடவில்லை. எழுத நினைத்த ஒரு ரிப்போர்ட்டருக்கு சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மேலிடத்திலிருந்தே அன்புக்கட்டளை! ஏசியன் டிரிபியூன் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தினர்கள் தட்சிணை வாங்குவதாக கிழித்துப்போட்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஆண்டன் பாலசிங்கத்தையும் கொஞ்சம் அசிங்கப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வாய் திறக்கவில்லை என்பதுதான் வேடிக்கை!

தெருச்சண்டை ரேஞ்சுக்கு கழக வாரிசுகள் கத்திக்கொண்டிருக்கும் வேளையில் உள்கூட்டணி போட்டு கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் இருவர். ராமதாசு திருமாவளவன் பற்றி பேசுவதில்லை; திருமாவளவன் ராமதாசு பற்றி பேசுவதில்லை. அரசியல் நாகரிகம் புல்லரிக்க வைக்கிறது. விடுதலைப்புலிகளோடு தொடர்பு என்று சொல்லி கருணாநிதியை ஒரங்கட்டி வைத்தார்கள். பின்னர் வை.கோ வந்து வசமாக மாட்டிக்கொண்டார். காங்கிரஸ் கட்சி தனக்கும் இது சம்பந்தமே இல்லை என்கிற ரேஞ்சிலேயே இன்னும் பேசி வருகிறது. நிஜமாகவே புலிகளுடம் இன்னமும் தொடர்பு வைத்திருப்பவர்களை பற்றிப் பேச்சே இல்லை. திருமாவளவன், பிரபாகரனை சந்தித்ததாகவே சொல்லப்படுகிறது. இலங்கைத்தமிழர்களுக்கும் பேராளிக்குழுக்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று திருவாய் மலர்ந்தருளிய அம்மாதான் தமிழ்நாட்டை புலிகளிடமிருந்து காப்பாற்றினார் என்று பஜனை செய்கிறது இன்னொரு கோஷ்டி. இலங்கைப்பிரச்னை காவிரி பிரச்னை மாதிரி. உணர்ச்சிப்பூர்வமாக பேச மட்டுமே உதவும். எலெக்ஷன் நேரத்தில் வேலைக்கு ஆகாது.

Photobucket - Video and Image Hosting

போன வருஷம் பிரஸ்ஸெல்ஸில் தமிழகத்திற்கும் பிரபாகரன்தான் தலைவர் என்று சொன்ன அதே திருமாவளவன்தான் இன்றைக்கு புரட்சித்தலைவி புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். இது எலெக்ஷன் வரைக்கும்தான். எலெக்ஷன் முடிந்ததும் தம்பிக்கு திரும்பவும் வவுனியா காடு ஞாபகத்துக்கு வரும். திருமாவளவன் பேசியதை ஸ்ரீகாந்த் மீனாட்சி விவரமாக எழுதியிருந்தார். தமிழ்நாட்டில் ஒரே ஒரு பத்திரிக்கை மட்டும் இது பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. திருமாவளவனிடம் இன்னொரு பத்திரிக்கை நிருபர் இது பற்றி கேள்வி கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில். 'அங்கே பேசியதை பத்தியெல்லாம் இங்கே எதுக்கு எழுதி பிரச்னையை கிளப்புகிறார்கள்'. நியாயமான கேள்விதான்!

Tuesday, April 25, 2006

ஓரங்கட்டேய் - 10

Image hosting by Photobucket

வணக்கமுங்க. நான் கூட பக்கா கிராமத்துலர்ந்து வந்தவன்தான்... அதாவது சாலிக்கிராமம்!

இப்பல்லாம் எலெக்ஷன்ல நிக்காமலே கெலிச்ச சந்தோஷம் உங்க கிட்ட தெரியுது. அடிக்கடி வாய்விட்டு சிரிக்கிறீங்க! மனுஷன் சந்தோஷமா இருந்தாதான் நல்ல காரியமெல்லாம் செய்ய முடியும். ஏதோ நடத்துங்க... நாலு பேரு திரும்பி பார்க்கணும் அவ்ளோதான்!

எனக்கு நல்லா தெரியுமுங்க...உங்களுக்கு தண்ணி, சிகரெட்னு எந்த கெட்டப் பழக்கமும் இல்லவே இல்லேங்கிறது. அதை வெளிப்படையா சொன்னா உங்க இமேஜ் அப்படியே பூஸ்ட் ஆவுமே.. அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு இந்தப் பழக்கம் இல்லேங்கிறதனால உங்க தம்பிக்களும் அதே மாதிரி இருப்பாங்கல்ல?

அரசியல்னா அது கட்சி அரசியல்தான் உங்களுக்கு இருக்குற தெளிவு யாருக்குமேயில்லை. லஞ்சம் வாங்கிறதும் தப்பு கொடுக்கிறதும் தப்புன்னு டயலாக் பேசறது அசத்தலா இருக்கு. ரசிகர் மன்ற ஷோ நடத்தவும் போஸ்டர் அடிக்க, கட் அவுட் வைக்க நீங்க கொடுக்குற காசு எல்லாத்தையும் லஞ்ச கணக்குல கொண்டு வந்துடப் போறாங்க... கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க!

சினிமாவுல மட்டுமல்லாம மன்ற கூட்டத்திலேயும் ஜாதிக் கட்சி தலைவர்களுக்கு பிரமாதமா பன்ச் வைக்கிறீங்க... அப்படியே கன்டினியூ பண்ணுங்க. தமிழ்நாட்டுல பொறந்து ஸ்ட்ராங்கான ஜாதி பேக்ரவுண்டோட இருக்கும் உங்களை எவனாவது எதிர்த்து பேசிட முடியுமா என்ன?

கலைஞரையும் மூப்பனாரையும் ரொம்ப பிடிக்கும்னு அப்பப்ப சொல்லிட்டு வந்ததுக்கு நல்ல நேரம் நெருங்கிடுச்சு. கலைஞரும் மூப்பனாரும் உருவாக்கின கூட்டணிக்கு அப்பவே ஆதரவு கொடுத்தேன்னு சொல்லி கூட்டணி வாரிசா ஆயிட்டீங்கன்னா சப்போர்ட்டுக்கு சப்போர்ட்டும் ஆச்சு...சரத்குமாரை காலி பண்ணின மாதிரியும் ஆச்சு!

விடுதலைப்புலி மேல உங்களுக்கொரு தனிப்பாசம் இருக்குதுங்கிறது தெரிஞ்ச விசயம்தான். ஆனா, வைகோ கிட்ட மட்டும் கொஞ்சம் தூரமா இருந்துடுங்க.ஒரு உறையில ரெண்டு வாள் இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க... நாயக்கர் ஓட்டை மொத்தமா அள்ளிட்டு வரணும்னா வைகோவை ஒரு விஷயமாவே நினைச்சு அரசியல் பண்ணாம இருக்கிறது நல்லது.

அப்படியே சிவப்பு மல்லி ஞாபகத்துல சிவப்பு சட்டை போட்டுக்கிட்டு கிராமத்து பக்கம் போய் வாய்ஸ் கொடுத்தா, சிவப்பு தோழர்களும் உங்களை சப்போர்ட் பண்ணுவாங்க. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போறதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்க. கடவுள் நம்பிக்கை இல்லைன்னு நீங்க சொல்லிட்டா கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். வீரமணி வேற வெள்ளை சட்டை போட்ட பெரியார்னு பாராட்டி பட்டம் கொடுக்க ரெடியா இருக்காரு!

அம்மாவை பத்தி அதிகமா எதுவும் பேசாம இருக்குறதுல இப்பவே உங்க அரசியல் சாணக்கியம் தெரிஞ்சுடுச்சு. நிச்சயமா நீங்கதான் அடுத்த கலைஞர்... அய்யய்யோ ரொம்ப நாள் எதிர்க்கட்சித் தலைவராவே இருப்பீங்கங்கிற அர்த்தத்துல சொல்லலை!

இத்தனை வருஷமா நாட்டாமை வேலை பார்த்துட்டு வந்தது இப்ப கை கொடுக்கலேன்னாலும் எதிர்காலத்துல கூட்டணியெல்லாம் சேரும்போது ரொம்ப உதவியா இருக்கும். அதனால நாட்டாமை வேலையை எக்காலத்துலேயும் வுட்டுடாதீங்க!

கடைசியா ஒரு விஷயம்...

படத்து ரிசல்ட் பத்தி கவலையே படாம இருக்குறது நல்ல விஷயம். யாரும் முந்திரி காட்டை தேட வேண்டிய அவசியமில்லை. படமே இல்லைன்னா தம்பிங்க வேற வேலை பார்க்க போயிடுவாங்க. மன்றத்து வேலையில மட்டுமே அவங்க கவனம் இருக்கணும்னா வருஷத்துக்கு குறைஞ்சது 3 படமாவது குடுத்தாகணும். கூடவே படம் ரீலிசுக்கு முன்னாடி திறந்த ஜீப்புல தெருமுனையுல நின்னு, படத்துல வர்ற டயலாக்கை எடுத்துட்டீங்கன்னா... நிச்சயம் நீங்க அடுத்த எம்.ஜி.ஆர்தான்!

எம்.ஜி.ஆருக்கு இருந்த ராமாவரம் தோட்டம் மாதிரி உங்ககிட்ட எதுவும் இருக்காது என்கிற நம்பிக்கையுடன்....ஒரு விசிலடிச்சான் குஞ்சு!

ரவுண்ட் அப் - கும்பகோணம்

கோயம்புத்தூர் குண்டுக்கே அசைந்து கொடுக்காத தஞ்சை டெல்டா ஏரியாவில் கும்பகோணம் எப்போதும் தி.மு.கவின் கோட்டைதான். 'கும்பகோணத்து கருணாநிதி' கோ.சி.மணி இன்னும் ·பார்மில் இருக்கும்போது உடன்பிறப்புகளுக்கு தோல்வி பயமேது? இருந்தாலும் எலெக்ஷன் நேரத்தில் ஏரியா டென்ஷனுக்கு காரணம் குடுமி ராமநாதன்! சங்கர மடத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் இருக்கும் ஒரே மெகா பாலம். மகாமக நேரத்தில் அம்மாவுக்கு எஸ்.டி.எஸ், செங்கொட்டையன், பன்னீர் சொம்பு எல்லாமே குடுமியார்தான். அம்மாவே கும்பகோணத்தில் நிற்பதாக நினைத்து உயிரை கொடுத்து உழைக்கிறார்கள் ரா.ராக்கள். வை.கோ கட்சி இங்கே தேடினாலும் கிடைக்காது! தொகுதியில் மண்டையை குடையும் பிரச்னை எதுவுமில்லை என்பதால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என்று பகீர் வாக்குறுதி கொடுத்து களமிறங்கியிருக்கிறார் குடுமியார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு இன்னொரு பாகப்பிரிவினையா? கஷ்டம்டா சாமி!

Image hosting by Photobucket

டெல்டா ஏரியாவின் அரசியலே கோ.சி.மணியின் பாக்கெட்டில்தான். பாத சாரிகள் மட்டுமல்ல மட்டுமல்ல வர்ற பஸ்ஸே அய்யாவுக்கு பணிஞ்சு வணக்கம் சொல்லிட்டுத்தான் போகும். (வூட்டாண்ட ஸ்பீடு பிரேக்கர்பா!) பிராமணர் ஓட்டை குடுமி ராமநாதன் அள்ளிடுவார் என்பதால் கோ.சி.மணி அக்ரஹாரத்து பக்கமே வருவதில்லை. கூட்டணியே இல்லாத நேரத்திலும் ஜெயித்துக்காட்டிய கோ.சி.மணிக்கு இப்போது கூட்டணி எக்ஸ்ட்ரா பலம். முக்கியமாக மூப்பனார் குடும்பம். எப்போதும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் செளராஷ்டிரா ஓட்டுக்களை குறிவைத்து விஜயகாந்த் கட்சி, வேட்பாளரை இறக்கியிருப்பதால் இடியாப்ப ஸாரி ஜாங்கிரி சிக்கல்!

கோ.சி. மணி, கும்பகோணத்தை இந்த முறை மகனுக்கு கொடுத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தாராம். ராமநாதன் நிற்கப்போவது தெரிந்ததும் கலைஞரே கூப்பிட்டு கண்டிப்பாக நிற்கச்சொல்லிவிட்டாராம். 'எலெக்ஷன் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே அண்ணன் கோட்டைக்கு ·பைல் பார்க்க போய்டுவார்' என்கிறார் ஒரு உடன்பிறப்பு. கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அதுதான் உண்மை!

Friday, April 21, 2006

ரவுண்ட் அப் - மயிலாடுதுறை

எலெக்ஷன் வந்தாலே எங்க ஊரு பூங்கா எப்போதும் பிஸியாகத்தான் இருக்கும். இந்த தடவை எல்லோரும் சின்னக்கடைத்தெருவுக்கு ஷிப்டாயிட்டாங்க. எல்லா பெரிசுங்களும் வந்து தலைகாட்டியாச்சு! டென்ஷன் கொஞ்சம் கூட இல்லாம ஏரியா அநியாயத்துக்கு அமைதியா இருக்குது. காங்கிரஸ் சார்பா மணிசங்கர் ஐயரோட பினாமி போட்டிப்போடறாரு. அடுத்த M.P எலெக்ஷனுக்கு இந்தப்பக்கம் வர வேணாம்னு மினிஸ்டர் முடிவே பண்ணிட்டாரோ என்னவோ?! பிரச்சாரத்துக்கு வராம இருந்தா நல்லாயிருக்கும்னு காங்கிரஸ் கட்சிக்காரங்களே சலம்புறாங்க!

Image hosting by Photobucket

அடுத்தவனுக்கு கோஷம் போட்டே பழகிப்போன உடன்பிறப்புகள் வழக்கம்போலவே கொஞ்சம் புலம்பிட்டு எலெக்ஷன் வேலையை பார்க்க ஆரம்பிச்சாச்சு! ரத்தத்தின் ரத்தங்களுக்கும் அதே வருத்தம்தான். ம.தி.மு.க சார்பா மகாலிங்கம் நிக்குறாரு. ஏற்கனவே எம்.பி எலெக்ஷன்ல நின்னு தோத்துப்போனதுல அனுதாப அலை கொஞ்சம் மிச்சமிருக்குது. கொஞ்சம் டீஜென்டான பார்ட்டி! பா.ம.ககாரங்களுக்கும் மகாலிங்கம் மேல ஜாதிப்பாசம். இப்போ இருக்குற எம்.எல்ஏவுக்கு அ.தி.மு.கல சேர்ற பாக்கியம் கிடைக்கலையாம்! என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்களேன்னு வடிவேலு ஸ்டைலில் ·பீல் பண்ணிவிட்டு கட்சியோட அன்புக்கட்டளையை ஏத்துக்கிட்டு வேறு வழியில்லாம பா.ஜ.க சார்பா தனியா நிக்குறாராம். பன்ச் டயலாக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருது!

விஜயகாந்த் சார்பா ஒரு அம்மிணி நிக்கிறாங்க. அஞ்சு வருஷமா அன்னாருக்கு ரசிகையாக இருக்குறாங்களாம்! இதெல்லாம் போதாதுன்னு டி.ராஜேந்தர் வேற. குத்தாலத்துல தி.மு.கவை சப்போர்ட் பண்ணி பேசிட்டு இங்கே வந்து எதிர்த்து பேசி தனக்கு ஓட்டு கேட்பாராம். அப்படியே செம்பொன்னார்கோயில் பக்கம் போய் திரும்பவும் தி.மு.கவை சப்போர்ட் பண்ணுவாராம். சர்க்கஸ்னு இருந்தா கோமாளின்னு யாராவது இருக்கணுமே! பா.ஜ.க பார்ட்டி இப்போ நிம்மதியா இருக்காராம்! என்னதான் ஜாதி கணக்கு போட்டாலும் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யறது எல்லா ஜாதிக்காரங்களும் இருக்குற மயிலாடுதுறை டவுண் மக்கள்தான். யாருக்கும் ஆதரவோ, எதிர்ப்போ இல்லாம நிலைமை சவசவன்னுதான் இருக்குது. வை.கோ கணக்குக்கு பிள்ளையார் சுழி இங்கே ரெடின்னுதான் தோணுது!

Thursday, April 20, 2006

ஓரங்கட்டேய் - 9

Image hosting by Photobucket

1. விஷம் குடிச்சுட்டு தூக்கு மாட்டிக்கப் போன உங்க கட்சி வேட்பாளர் மேல காரை ஏத்துனது அ.தி.மு.காரங்கதானே?

2. வினிதா கூட நீங்க நடிச்ச சின்ன ஜமீன் படத்துக்கு அப்புறம் மதுரை ஆதீனம் வேற படம் ஏதாவது பார்த்தாரா?

3. குற்றாலம் மீட்டிங்கில் நடராசன் கூட ஸ்டோரி டிஸ்கஷனாமே? என்ன படம்? யார் ஹீரோயின்?

4. மூப்பனார் மாதிரி பேசுவீங்களாமே... ஹி..ஹி... உங்க பேச்சுக்கும் சன் டிவியில சப்டைட்டில் போடுவாங்களா?

5. பம்பரம் மாதிரி நீங்க தக்காளி உருட்டி விளையாடுனதை பத்தி சமூக பிரக்ஞையோடு கேட்டா என்ன சொல்லுவீங்க?

6. தமிழ்நாட்டுல 3 கோடி பேர் தேவர்னு சொல்லியிருக்கீங்களாமே... நாயுடு, முதலியார், நாடார், நாயக்கர் இவங்கெல்லாம் ஒரு பத்து பத்து பேர் இருப்பாங்களா?

7. சினிமாவுல கூட பன்ச் டயலாக் பேசாம நடிச்சுட்டீங்களே.. நிஜத்துல அதுவும் தயாநிதி மாறன் மாதிரி பேசறது கஷ்டமாயில்லே?

8. தேவர் காலடி மண்ணேய்ய்ய்யய்யய்ய்ய்ய்ய்ய்ய...ன்னு சிவாஜி மாதிரி இழுத்து பேசத்தெரியுமா?

9. 'நிக்கட்டுமா, போகட்டுமா'ன்னு கேட்டுக்கிட்டே இன்னும் போயஸ்கார்டனுக்கு பக்கத்திலேயே நிற்கிறீங்களாமே? ஆண்டிப்பட்டி (போஸ்டர்) லிஸ்ட்டுல உங்க பேரு இருக்குமா?

Monday, April 17, 2006

ஜக'தைலா'பிரதாபன் - 2

முந்தைய பிரதாப சரித்திரம்


'அய்யா...கொஞ்சம் இருங்க. அவசரப்படாதீங்க! நாம நேரடியா போய் டி.டி.ஆர் பார்க்கிறது அவ்வளவு நல்லா இருக்காது. போன காரியமும் நடக்காது'

'நீ சொல்றதும் கரெட்டுதான். அவரு கண்டுக்கவே மாட்டாரு. அதுவும் எலெக்ஷன் நேரமா இருந்தாக்கூட பரவாயில்லை'

'ஆமா...அவருக்கு தெரிஞ்ச போர்ட்டர் யாராவது இருந்தா புடிங்க.. மொதல்ல'

'யோவ்... அதெல்லாம் யாருக்கு தெரியும். எனக்கு தெரிஞ்சு நம்ம ஜாதிக்காரன் பன்னு ரொட்டிதான் இங்கே போர்ட்டரா இருக்காரு. இந்த ஸ்டேஷன்ல இருக்குற எல்லா டி.டி.ஆர் கூடவும்தான் அவருக்கு பழக்கம் உண்டு. ஆனா, அவரை நம்ப முடியாதே!'

'அப்படி யோசிக்காதீங்கய்யா.. சட்டுபுட்டுன்னு ஏதாவதொரு ஆளைப் புடிக்கணும்'

'இல்லப்பா.. அந்த ஆளு வேணவே வேணாம். யாரு கூட எப்போ டீல் போடுவார்னு தெரியாது. அந்தாளுக்கு இலங்கை, டெல்லின்னு ஏகப்பட்ட ஆளுங்க உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் எல்லாமே அந்தாளுதான். நம்ம பேச்சை கேட்குற ஆளு கிடையாது. நாமளே டி.டி.ஆரை டீல் பண்ணலாம்'

'வேணாம் அய்யா... நேரா போனீங்கன்னா நாமதான் கவுந்துடுவோம். டிரெயின்ல சீட் கிடைக்கலைன்னா பரவாயில்லை...இதயத்துல சீட் கொடுக்குறேன்னு சொல்லி ஏமாத்திப்புடுவாரு'

'அட என்னாங்கடா இது.. நம்ம ஜாதி பயலுங்க ஒருத்தனும் இங்கே ஸ்டேஷன்ல வேலை பார்க்கலையா?'

'கொஞ்சம் பொறுங்கய்யா. முதல்ல இந்த ஜாதி, ஜாதின்னு சொல்றதை நிறுத்துங்கய்யா. டி.டி.ஆருக்கு இதெல்லாம் புடிக்காது. வடமொழி யூஸ் பண்ணாம, சாதின்னு சொன்னாத்தான் சாதிக்க முடியும்னு சொல்ற ஆளு'

'ஓகோ...அப்படியா? நாமளும் சாதிச்சாகணும்! இன்னியிலேர்ந்து பிரிஸ்கிரப்ஷனை தமிழ்ல எழுதப்போறேன்! ஆமா...பிரிஸ்கிரிப்ஷனுக்கு தமிழ்ல என்னான்னு சொல்றது'

'எனக்கும் தெரியலை.. அதான் டி.டி.ஆரை பார்க்கப்போறோமே...அப்பவே கேட்டுக்கிடலாம்'

'சரி இப்போ போர்ட்டருக்கு என்ன பண்ணலாம்? என் சொந்தக்காரன் ஒருத்தன் இருக்கான். போன டி.டி.ஆரை தெரியும்னு சொல்லவான். டில்லி சொஸைட்டியில மெம்பரா இருக்கானே! சரியா வருமா?'

'அய்யோ...வேணாங்கய்யா. டெல்லி பார்ட்டியே வேணாம். டில்லியில பேசிட்டு சொல்றேன்னு சொல்லியே கழுத்தை அறுத்துருவாங்னுங்க. அதுவுமில்லாம போன டி.டி.ஆருக்கு குளோஸ்னா இந்த டி.டிஆருக்கு புடிக்காது. அது இருக்கட்டும். மொதல்ல டி.டி.ஆரை பார்த்தா என்ன பேசணுங்கிறதை முடிவு பண்ணிக்கோங்க.'

'என்னத்தை சொல்றது....இதோ...பாரு எனக்கு சுத்தி வளைச்சு பேசத்தெரியாது. நேரா விஷயத்துக்கு வந்துடுவேன். நம்ம சாதிக்காரனுங்க ஒரு கோடி பேர் இருக்கிறதை மனசுல வெச்சுக்கிட்டு அதுக்கு ஏத்த மாதிரி சீட் போட்டு கொடுக்கணும்...அப்படீன்னு நேரா சொல்லிட வேண்டியதுதான்'

'கெட்டுது கதை. இப்படியெல்லாம் சொன்னா காரியம் நடக்கவே நடக்காது. போன டி.டி.ஆர் இருக்கும்போதே தனியா சீட் கேட்டு மரத்தை வெட்டிப்போட்டு கலாட்டா பண்ணியதை விவரமா சொல்லணும்'

'அதான் அவருக்கு தெரியுமே!'

'அவருக்கு தெரியும்தான். இருந்தாலும் தெரியாத மாதிரிதான் இருப்பாரு. நாமதானே அவர்கிட்ட போய் நிற்கிறோம். நாமதான் விவரமா எடுத்த சொல்லணும்'

'என்னால பணிஞ்சு போய் பேச முடியாது. இருந்தாலும் நம்ம சாதிக்காக கோபத்தை அடக்கிட்டு பேசிப்பார்க்குறேன்.'

'உங்களுக்கு என்ன மவுசு இருக்குதுன்னு கேட்பாரு. அடிச்சுச் சொல்லணும்!'

'என் கண்ட்ரோல்ல 40 லட்சம் ஒட்டு இருக்குது. நான் சொல்ற கட்சிக்குத்தான் என் சாதிக்காரன் ஓட்டுப்போடுவான் அப்படின்னு கரெக்டா சொல்லிடறேன்'

'ஆமாங்கய்யா...அது முக்கியம். தெளிவா எடுத்து சொல்றதுக்கு ஒரு தெரிஞ்ச ஆளு...அதுவும் நம்ம சாதிக்காரனா... அந்த டி.டி.ஆருக்கு நெருக்கமான ஆளாவும் இருந்தா தேவலை'

'ஏன்யா.. நாம ஏன் சேலம் பால் பாண்டியை புடிக்கக்கூடாது?

'கரெக்டுயா.. சரியான ஆளுதான். அவரு சொன்னா இந்த டி.டி.ஆரு மறு பேச்சு பேசவே மாட்டாரு. கட்டாயம் கேட்பாரு. ஆனா பால் பாண்டி நம்ம வழிக்கு வருவாரா?'

'வர வைக்கிறேன்யா...பார்த்துக்கிட்டே இரு. மொதல்ல சேலத்துக்கு போனை போடு. அங்கே இல்லைன்னா செக்ரட்டிரியேட்டுக்கு போட்டு பி.ஏவை புடி. பி.ஏ நம்ம சாதிக்கார பயதான்யா... போடு போனை'

Thursday, April 13, 2006

ஓரங்கட்டேய் - 8

அருள் வாக்கு

'உலகமே ஒரு நாடக மேடை, இதில் இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். நான் மட்டுமே போலித்தனமில்லாமல் இருக்கிறேன்'- பி.பி.சி. தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா in 2004

Image hosting by Photobucket

புது வாக்கு

'ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு'

- ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வி


யக்கோவ்.. மெய்யாலுமே நீ தெகிரிய லெட்சுமிதான்! செம U டெர்ன்மா!

Tuesday, April 11, 2006

ஜக'தைலா'பிரதாபன் - 1

ஒரு லெட்டர் பேட் ஜாதி சங்கம் கூட ஆரம்பிக்க துப்பில்லாம பம்மிட்டிருக்கும் பேக்வோர்ட் கிளாஸ் மக்களுக்கு இந்த மெகா தொடர் சமர்ப்பணம்!

பயணிகள் கவனிக்க! மெண்டல் ஸ்டேஷன் வரை செல்லும் 'சமூக நீதி' எக்ஸ்பிரஸ் நான்காம் பிளாட்பாரத்திலிருந்து புறப்பட தயராக இருக்கிறது.....

'அப்பாடா.. நம்ம சீட் கன்·பார்ம் ஆயிடுச்சு. கடைசி நேரத்துல செம டென்ஷன் பண்ணிட்டானுங்கப்பா'

'போனா போவதுண்ணா... அதான் கன்·பார்ம் ஆயிடுச்சே! இனிமே பிரச்னையே இல்லை'

விஷ்..விஷ்ஷ்ஷ்...

'ஏய்... ஒதுங்கு... ஒதுங்கேய்! அய்யா.. நீங்க வாங்கய்யா! ஏலேய்... ஏந்திரிடோய்... அப்பால போ!'

'ஏன்... நான் எதுக்கு போகணும்? என் சீட்டு கன்·பார்ம் சீட்டு'

'ஏலேய்! யாரைப் பார்த்து என்ன பேச்சு பேசுறே? அய்யா யாரும் தெரியும்லே.... திண்டிவனத்துல வந்து கேட்டுப்பாரு. ஊரே நடுங்கும். எழுந்திரிச்சு துண்டை இடுப்புல கட்டிட்டு போவியா. சும்மா சவுண்டு வுட்டுகிட்டு...'

'ஏய்... மரியாதையா பேசு. நானா வம்புக்கு வந்தேன்?'

'அய்யா.. டாக்டர் அய்யா... பாருங்கய்யா! இந்த பயலுங்க மரியாதையில்லாம பேசுறானுங்க. இவனுங்களை சரிக்கு சமம் நம்ம கூட உட்கார வெச்சதே தப்பு. நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. வெட்டிப் போட்டுடறேன்!'

'த்தே... சும்மாயிரு! இதென்ன மரமா? வெட்டிப்போடறதுக்கு! முட்டாப்பயலே... நாம என்னிக்கு மரத்தை வெட்டி தண்டவாளத்துல போட்டுருக்கோம்? ரயில்வே போலிஸ் லாடம் கட்டிடுவானுங்க! இதுக்குத்தான்...இதுக்குத்தான் நாம மட்டும் போறதுக்குன்னே தனி கோச் கேட்குறேன்... ஒரு பய நான் சொல்றதை கேட்க மாட்டேங்கிறானுங்க..'

'இதெல்லாம் ரொம்ப ஓவர். தனி கோச்சா? யாரு... டாக்டர்? பார்த்தா டாக்டர் மாதிரியே தெரியலியே! பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்குத. இந்த கோச்சுல 31 சீட்டுதான் இருந்துச்சு.. இப்பவாது பரவாயில்ல... 50 இருக்குது.. இருக்கிறதை அட்ஜெஸ்ட் பண்ணிட்டு போவியா..'

'டாக்டரு அய்யா.. இவன் ரொம்ப பேசறான்.. நீங்க மட்டும் தடுக்கலேன்னா...'

'என்னலேய்... ரொம்ப மிரட்டிறீங்க? டெல்லிக்கு ரிப்போர்ட் பண்ணிடுவேன்.நேத்து டூட்டி பார்த்த டி.டி.ஆர் காசு இருக்கிறவனுக்கு ரிசர்வேஸனே கிடையாதுன்னு சொல்லிட்டாரு. ரொம்ப கஷ்டப்பட்டுதான் 31 சீட்டை 50 ஆக்கிட்டு வந்திருக்கோம். எதுக்கு டென்ஷன்? நாமெல்லாம் ஒரே மாதிரிதானே. ஒண்ணா உட்கார்ந்து அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்.

'அதெல்லாம் முடியாது... எங்க ஆளுங்களுக்கு மட்டும் 20 சீட்டு வேணும்.. நீங்கெல்லாம் எந்திரிச்சு வெளியே போங்க...

'நல்ல கதைதான். எங்கேப்பா இருக்காரு டி.டி.ஆர்?'

'ஏலேய்.. என்ன பஞ்சாயத்தா? யார்ரா அந்த டி.டி.ஆர்?'

'அய்யா.. அந்த டி.டி.ஆர் போயிட்டாரு.. புது டி.டி.ஆர் வந்திருக்காராம்'

'எங்க இருக்காரு ராசா... ஆழ்வார்பேட்டையா? கோபாலபுரமா?

Monday, April 10, 2006

அரிசியல்

ஒரு நாப்பது வருஷமா சொல்லிட்டிருக்கிற விஷயந்தான். 'பொற்காலம் தொடரட்டும்'னு போன தடவை சொல்லிட்டு கவுந்துபோனதிலேர்ந்து எல்லோரும் படு உஷார்தான். எலெக்ஷன் நேரத்துல அரிசியை பத்தி பேசலைன்னா இன்னாத்துக்கு ஆவறது? சித்த முன்னாடித்தான் எங்க பேட்டை எம்.எல்.ஏ டி.நகர்ல கூவிட்டிருந்தாரு. அம்மா கொடுக்கிற அரிசி அரை மணி நேரத்துல வெந்துடும்; அய்யா கொடுக்கிற அரிசி வெந்து வர்றதுக்கு அரை நாள் ஆயிடுமாம்! அப்பனை மாதிரி குரலை மட்டும் கொடுத்த அந்த ஆண்டவன் கொஞ்சம் இதையும் கொடுத்திருக்கலாம்!

அரிசி விலை இனிமே குறையவே குறையாதுன்னாங்க அம்மா; ரெண்டு ரூபாய்க்கு திவ்யமா தர்றேன்னார் பெரியவர். பதினைஞ்சு கிலோ அரிசியை வூடு புகுந்து(!) குடுத்துட்டு போவேன்னு கேப்டன் சொல்றாரு. சினிமாவை பார்த்து இந்த ஓட்டு ஓட்டுறவங்களுக்கு அரிசி கிடையவே கிடையாதுன்னு கேப்டன் கண்டிஷனா சொல்லிப்புடணும்!

அரிசி, கலர் டி.வியி கனவுல இருக்கற நேரத்துல இந்த அர்ஜூன் சிங் இப்பிடி பண்ணிட்டாரேன்னு கொஞ்சம் வருத்தம்தான். கட்சிக்காரங்க யாரும் கண்டுக்கலைதான். ஆனா சும்மா சுரண்டி வுட்டாலே அரிப்பெடுத்து காயமாக்கி கட்டுப்போடற நிலைமைக்கு கொண்டு போய்டற நம்மூர்காரங்க இதை விட்டுறவாங்களா? அனுபவத்தை வெச்சு அட்¨வைஸ் பண்ணி வெள்ளைக்கொடி காட்டப்போக அது கருப்புக்கொடியாயிடுச்சு. தேவுடா... தேவுடா.. நமக்கெதுக்கு வம்புடா! சந்திரமுகி ஒரு வருஷம் கம்பிளீட் பண்ணியிருக்குது! இக்கட சூடேண்டி!

Image hosting by Photobucket

யாரும் கண்டுக்கலைன்னு நினைச்சு வை.கோ பேசுற காமெடி சீரியஸா போன மாதிரி இங்கே சீரியஸ் கமெண்ட்டெல்லாம் காமெடியா போவது! ஒரு சீரியஸ் சீரியலும் திடீர்னு காமெடிக்கு தாவி ஒரே களேபரம். பாலசந்தர் - குஷ்பு மேட்டரை விட பரம அதிர்ச்சி! ஏண்ணா, நடிக்கப்போறதா சொன்னதுக்கு பதிலா இலக்கியம் படைக்கப்போறதா சொல்லியிருந்தா இன்னும் பத்துப்பேரு பயந்துருப்பாங்களே!

இவ்ளோ சீரியஸ் மேட்டர் ஓடறச்ச அம்மாஞ்சியா ஒரு கேள்வி. இந்துன்னா யாரு? ரொம்ப முக்கியம்! யாரங்கே... திருட்டு ராஸ்கலையும் திராவிட ராஸ்கலையும் களத்துல இறங்கி ஒரு கை பார்க்க செல்லுங்கோ! ஆளாளுக்கு மாஞ்சு மாஞ்சு கமெண்ட்டாலும் அந்த அருள்வாக்குதான் மனசை அள்ளுது. வேஷ்டி கட்டுன அம்மாவும்; புடவை கட்டின அய்யா பத்தியும் ஒரு பேச்சு நடக்குது. ஆம்பளை புடவை கட்டுனா அது அசிங்கமாம்; அதுவே பொம்பளை வேஷ்டி கட்டுனா அட... சிங்கமாம்! ஆணாதிக்க திமிர் பத்தி அருள்வாக்கு சொன்னதெல்லாம் ஞாபகத்துக்கு வருது!. சரி... சரி பெண்ணுரிமை பத்தி மாங்கு மாங்குன்னு கட்டுரை எழுதிட்டா சரியாப்போச்சு!

அரசியல்ல....ஸாரி எழுத்துல இதெல்லாம் சகஜமப்பா!

Friday, April 07, 2006

கரண்ட் பச்சாவோ

இடித்து தள்ளும் புல்டோசர் ஓரடி கூட நகர்த்த முடியாமல் முடங்கிக்கிடக்கிறது. 'நர்மதா பச்சாவோ' கோஷங்கள் காதை பிளக்கின்றன. இதெல்லாம் ஐந்து வருஷமாக நடக்கிற சங்கதிதான். மத்திய பிரதேச மாநிலத்தின் பெரிய தலைவலி நர்மதா அணைக்கட்டு. டெல்லி என்ன தான் செய்யப்போகிறது எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே கைகட்டி நிற்கிறார்கள். பத்து வருஷத்துக்கு முன்னர்தான் மின்உற்பத்தியை டபுளாக்குவது பற்றியே பேச ஆரம்பித்தார்கள். 2012 மார்ச்சுக்குள் இப்போதைய மின்உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகப்படுத்த வேண்டுமாம். முடியுமா?

என்ஹெச்பிசி (National Hydroelectric Power Corporation) 170 திட்டங்களுடன் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியது. இதில் 162 திட்டங்களுக்கு டெல்லி ஓகே சொன்னது. ஆரம்பத்தில் வழக்கம்போலவே நிதிபற்றாக்குறை. உலகநாடுகள் உதவிக்கு வந்தன. ஸ்வீடன், நார்வே, லண்டன், கனடா, ஜப்பான், ஜெர்மனி நாடுகளில் உள்ள முன்னணி வங்கிகளெல்லாம் என்ஹெச்பிசிக்கு கடன்களை அள்ளிக்கொடுத்தது. கடனாக கிடைத்திருப்பதை கணக்கு பண்ணினால் என்ஹெச்பிசி வசமிருக்கும் உடமைகளை விட பத்து சதவீதம் ஜாஸ்தியாம்!

Image hosting by Photobucket

துட்டு ஓகேதான். வேலை நடக்கிறதா? நர்மதா திட்டத்தையே எடுத்துக்கொள்ளலாம். ஓம்கரேஷ்வர், இந்திரா சாகர் திட்டங்கள் இரண்டும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கிறது. 92 மீட்டர் நீளத்தில் அணைக்கட்டு கட்டுவதால் கிட்டதட்ட 200,000 விவசாயிகளின் வாழ்க்கையை காலியாகிவிடுமாம். போன வருஷம் பெய்த மழையில் கரண்புரா என்கிற கிராமமே தண்ணீரில் காணாமல் போனது. திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே 120 கிராமங்கள் இருக்குமிடம் தெரியவில்லை. மழை பெய்யும் பட்சத்தில் இன்னுமொரு 130 கிராமங்கள் ஜல சமாதிதான். சர்தார் சரோவர், டெஹ்ரி, மகேஷ்வர், ஒம்கரேஷ்வர், போன்ற திட்டங்களுக்கு சமூக பிரக்ஞை உள்ளவர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு. உயிரை விட்டுதான் கரண்ட் வேணுமா என்று கேள்வி கேட்கிறார்கள். பிரச்னையில் பின்னணியில் இருக்கும் சட்ட சிக்கல்களெல்லாம் சத்தியமாக புரியவில்லை! அவ்வப்போது கோஷம் போட்டுக்கொண்டிருந்த நர்மதா பச்சாவோ அந்தோலன் மேதா பட்கர் ஒரு வாரமாக உண்ணாவிரதத்திலும் உட்கார்ந்துவிட்டார். மத்திய கமிட்டி ஒன்று அணைக்கட்டை சுற்றிப்பார்த்துவிட்டு ஆறு மாசம் கழித்து அறிக்கை கொடுக்கலாம்; மேதா பட்கர் இன்னும் பத்து பேரோடு ஏகப்பட்ட தடவை உண்ணாவிரதம் இருக்க நேரிடும்.

ஆரம்பித்த 30 வருஷங்களில் என்ஹெச்பிசியால் எட்டு திட்டங்களை கூட செய்து முடிக்க முடியவில்லை. ஏகப்பட்ட பேங்க் பாலன்ஸ் இருந்தாலும் 2485 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு இன்னும் டிரை பண்ணிக்கொண்டே இருக்கிறார்களாம். பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் படி, இந்தியா 4622 மெகாவாட் மின் உற்பத்தியை கிராஸ் செய்தாக வேண்டும். திட்டம் லேட்டாவதால் ஏகப்பட்ட செலவு. 390 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் டால்ஹாஸ்டி அணைக்கட்டு திட்டம், காஷ்மீரில் இன்னும் ஆரம்ப பணியிலேயே இருந்து வருகிறது. நவம்பர் 1990ல் முடிக்கவேண்டிய திட்டமாம் இது. மார்ச் 2001க்குள் திட்டத்தை முடிப்பதற்கு கெடு வைத்தார்கள். இன்னமும் ஹி..ஹிதான். போட்ட பட்ஜெட்டை விட மூன்று மடங்கு எகிறியிருக்கிறது. இதே போல் பல்லிளித்த கோயல் கேரோ திட்டத்துக்கும் குட்பை சொல்லிவிட்டார்கள். கோயல் கேரோ திட்டம் இன்னும் நடப்பில் உள்ளதாக என்ஹெச்பிசி அறிக்கை சொல்கிறது. பயங்கர குழப்பம். கரண்ட் கட்டாவதிலிருந்து இந்தியாவை யார் காப்பாற்றப்போகிறார்கள்?

Wednesday, April 05, 2006

தி.மு.க

பத்து வருஷத்துக்கு முன்னால் நடந்த விஷயம். காங்கிரஸிலிருந்து வெளியே வந்து மூப்பனார் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதி குங்குமத்தில் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 'எதை மறக்கக்கூடாது? எதை மறக்க வேண்டும்?' கேட்டது நானேதான். கருணாநிதி சொன்ன பதில் 'நன்றி மறக்கக்கூடாது; நன்றி கொன்ற செயலை மறந்து விட வேண்டும்' (குங்குமம், 9.2.96)

Image hosting by Photobucket

ஏதோவொரு குறளை உல்ட்டா பண்ணி பதில் சொல்லியிருக்கிறார் என்று ஒதுக்கிவிட்டு அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது இன்று ஞாபகத்துக்கு வருகிறது. கருணாநிதி சொன்ன பதிலை முழுதாக புரிந்து கொள்ள பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கிறது. கருணாநிதி ஏமாற்றிவிட்டதாக சொன்னவர்களை விட கருணாநிதியை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் பெரிது. கருணாநிதி வெறும் அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் சறுக்கல்களிலிருந்து எழுந்து வந்திருக்க முடியாது. சின்ன வயதில் கிட்டப்பா அங்காடி வாசலில் விக்ஸ் மாத்திரையை முழுங்கிவிட்டு மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் இரண்டு மாசத்துக்கு முன்னால் பேரனை பிடித்தபடி நகர்ந்து வந்து மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசமில்லை. அப்போதெல்லாம் கருணாநிதி ஒரு அரசியல்வாதி; நல்ல பேச்சாளர் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. சின்ன வயதில் 'பொன்னர் சங்கர்' குங்குமத்தில் வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு வாரம் கூட படிக்கப் பொறுமையில்லாமல் பக்கங்களை கடந்தவனுக்கு கருணாநிதியை பற்றியே ஒரு புத்தகம் எழுதவேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. தமிழுக்கு சோதனை!

பா.ரா கூப்பிட்டு சொன்னவுடன் பரபரப்பாக ஆரம்பமானது வேலை. அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச். ரஜினியின் சினிமா சாதனையை ஓரங்கட்டிவிட்டு மத்ததை ஹைலைட்டும் அதே ட்ரீட்மெண்ட்தானா என்கிற கேள்விக்கு பா.ராவிடமிருந்து பளிச்சென்று ஒரு பதில். 'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விவரிக்க நிறைய படிக்க வேண்டியிருந்தது. நிஜமாகவே நுரை தள்ளியது. எழுதியதை விட படிப்பதற்குத்தான் முக்கால்வாசி நேரம் காலியானது. பக்கம் பக்கமாக நிறைய எழுதி தள்ளியிருக்கிறார் மனுஷர். பாதி சுயபுராணம்; மீதி கிண்டல், எள்ளல் எல்லாமே. சில இடங்களில் ஆச்சர்யம்; பல இடங்களில் எரிச்சல்! நாட்டில் நடக்கிற எல்லா விஷயங்களுக்கெல்லாம் அவ்வப்போது கருத்து சொல்லி ஐம்பது வருஷங்களில் கருத்து கந்தசாமியாகியிருக்கிறார் கருணாநிதி. அதிலிருந்து அவர் பேசியிருக்கும் 'அரசியலை' ஒதுக்கி மீதியை எடுத்துக்கொள்ள ரொம்ப யோசிக்க வேண்டியிருந்தது. உடன்பிறப்புக்கான கடிதங்களோடு பழைய முரசொலியையும் தூசிதட்டி பரப்பிக்கொண்டு உட்காரும்போது முறைத்த அந்த சைதாப்பேட்டை தி.மு.க ஆபிஸ் கழக தொண்டரின் அவஸ்தையை தனியாக எழுத வேண்டும். உதவி செய்ய ஓடி வந்தவர்கள் லிஸ்ட் போட்டால் பத்ரியில் ஆரம்பித்து முகமூடி வரை நிறைய பேரை சொல்ல வேண்டியிருக்கும். பெயரை வெளியே சொல்ல வேண்டாம் என்று மறுத்த அந்த பத்திரிக்கையாளருக்கும், எலெக்ஷன் நேரத்திலும் நேரம் ஒதுக்கி விளக்கம் சொன்ன அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் பகிரங்கமாக நன்றி சொல்ல முடியாது. நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து தந்த குத்துராமனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

கருணாநிதியின் சினிமா சாதனையை சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. 60 வருஷத்தில் 60 பிளஸ் படங்களுக்கு கதை வசனம். தமிழ் சினிமாவில் கைதட்டல் வாங்கிய முதல் டெக்னீஷியன் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். முதல் பன்ச் டயலாக் எழுதியதும் கருணாநிதிதான். 'சிலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் பலரை பல காலம் ஏமாற்ற முடியாதம்மா!' ஏகப்பட்ட நாவல், கதைகள் எழுதி குவித்திருக்கிறார். ஒரு பிஸியான அரசியல்வாதியால் இதெல்லாம் முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சங்கதிகள். இன்னமும் அரசியல் முடிவுகளுக்கு கொள்கையை கூப்பிடுவது தமிழ்நாட்டில் கருணாநிதி மட்டும்தான். சொல்வது, செய்வது எல்லாவற்றையும் எழுதி வைத்துவிடுவது இவருக்கு பெரிய பிளஸ். அதுவே சில நேரங்களில் மைனஸ் ஆகிவிடுகிறது. உதாரணத்துக்கு புலிகள் ஆதரவு.

தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதி; சிறந்த நிர்வாகி என்று எப்படி லிஸ்ட் போட்டாலும் டாப் 3 லிஸ்ட்டில் கருணாநிதியை ஒதுக்க முடியாது. மற்றவர்களிடமிருந்து தன்னை பிராண்ட் செய்து கொள்வதில் கருணாநிதியை மிஞ்ச யாராலும் முடியாது. வேலை தேடி இண்டர்வியூக்கு போகும் சாமானியன் கற்றுக்கொள்ள கருணாநிதியிடம் சரக்குகள் ஜாஸ்தி. சாதாரண தொண்டனாய் வாழ்க்கையை ஆரம்பித்த கருணாநிதிதான் இன்று கட்சி; கட்சிதான் கருணாநிதி. எம்.ஜி.ஆர் சொன்னதைப்போல தி.மு.கவின் உண்மையான அர்த்தம் திருவாரூர் முத்துவேலர் கருணாநிதிதான்!

'நம் சரித்திர நாயகர்களை பற்றிய விருப்பு வெறுப்பற்ற முன் தீர்மானங்கள், சாய்வுகள் அற்ற, கட்சி சார்புகள் அற்ற ஆய்வுகள் இருந்ததில்லை; எழுதப்படுவதில்லை. இம்மண்ணில் அதற்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்தந்த கட்சி பிரச்சாரங்களைத்தான் நாம் தெரிந்தவர்களாவோம். தமிழக வரலாறு ராஜாஜி, ஈ.வே.ரா, காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி என்னும் சரித்திர நாயகர்களால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தரப்பானது அல்ல. இது சமூகத்தினால் அவ்வப்போது கட்டமைக்கப்பட்டும் உள்ளது. இருப்பினும் இவர்கள் நாயகர்களானதும் இவர்களும் நம் சிந்தனைகளால், செயல்களால் சமூகத்தை மாற்றியமைத்தும் உள்ளனர். இரண்டும் பரஸ்பர இயக்கம். இது ஆக்குவதும் ஆக்கப்படுவதுமான இயக்கம். இந்த இயக்கத்தின் சரிதம் இவர்களை சார்ந்த கட்சியாளர்களாலோ, எதிர்க்கட்சியாளர்களாலோ நிச்சயம் எழுதப்படக்கூடாது. இவர்களின் எவர் பற்றியும் சார்பற்ற புறநிலைப்பார்வையில் எழுதப்படவேண்டும். அது நிகழவில்லை. வெறும் தூற்றலும் போற்றலுமே நம் மரபாகியுள்ளது. இந்நிலை இந்நாயகர்களுக்கு நாம் நியாயம் செய்ததாகாது' கருணாநிதி பற்றி வெங்கட் சாமிநாதன், ஜூன் 2000.

எலெக்ஷனுக்கு முன்னால் புத்தகம் ரெடியாகிவிடுமாம்! புத்தகத்தின் ஒரு காப்பியை வெங்கட் சாமிநாதனுக்கு அனுப்பியாக வேண்டும்!