Tuesday, April 25, 2006

ரவுண்ட் அப் - கும்பகோணம்

கோயம்புத்தூர் குண்டுக்கே அசைந்து கொடுக்காத தஞ்சை டெல்டா ஏரியாவில் கும்பகோணம் எப்போதும் தி.மு.கவின் கோட்டைதான். 'கும்பகோணத்து கருணாநிதி' கோ.சி.மணி இன்னும் ·பார்மில் இருக்கும்போது உடன்பிறப்புகளுக்கு தோல்வி பயமேது? இருந்தாலும் எலெக்ஷன் நேரத்தில் ஏரியா டென்ஷனுக்கு காரணம் குடுமி ராமநாதன்! சங்கர மடத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் இருக்கும் ஒரே மெகா பாலம். மகாமக நேரத்தில் அம்மாவுக்கு எஸ்.டி.எஸ், செங்கொட்டையன், பன்னீர் சொம்பு எல்லாமே குடுமியார்தான். அம்மாவே கும்பகோணத்தில் நிற்பதாக நினைத்து உயிரை கொடுத்து உழைக்கிறார்கள் ரா.ராக்கள். வை.கோ கட்சி இங்கே தேடினாலும் கிடைக்காது! தொகுதியில் மண்டையை குடையும் பிரச்னை எதுவுமில்லை என்பதால் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்குவேன் என்று பகீர் வாக்குறுதி கொடுத்து களமிறங்கியிருக்கிறார் குடுமியார். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்துக்கு இன்னொரு பாகப்பிரிவினையா? கஷ்டம்டா சாமி!

Image hosting by Photobucket

டெல்டா ஏரியாவின் அரசியலே கோ.சி.மணியின் பாக்கெட்டில்தான். பாத சாரிகள் மட்டுமல்ல மட்டுமல்ல வர்ற பஸ்ஸே அய்யாவுக்கு பணிஞ்சு வணக்கம் சொல்லிட்டுத்தான் போகும். (வூட்டாண்ட ஸ்பீடு பிரேக்கர்பா!) பிராமணர் ஓட்டை குடுமி ராமநாதன் அள்ளிடுவார் என்பதால் கோ.சி.மணி அக்ரஹாரத்து பக்கமே வருவதில்லை. கூட்டணியே இல்லாத நேரத்திலும் ஜெயித்துக்காட்டிய கோ.சி.மணிக்கு இப்போது கூட்டணி எக்ஸ்ட்ரா பலம். முக்கியமாக மூப்பனார் குடும்பம். எப்போதும் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் செளராஷ்டிரா ஓட்டுக்களை குறிவைத்து விஜயகாந்த் கட்சி, வேட்பாளரை இறக்கியிருப்பதால் இடியாப்ப ஸாரி ஜாங்கிரி சிக்கல்!

கோ.சி. மணி, கும்பகோணத்தை இந்த முறை மகனுக்கு கொடுத்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தாராம். ராமநாதன் நிற்கப்போவது தெரிந்ததும் கலைஞரே கூப்பிட்டு கண்டிப்பாக நிற்கச்சொல்லிவிட்டாராம். 'எலெக்ஷன் ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே அண்ணன் கோட்டைக்கு ·பைல் பார்க்க போய்டுவார்' என்கிறார் ஒரு உடன்பிறப்பு. கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அதுதான் உண்மை!