Friday, May 12, 2006

செய்திகள் வாசிப்பது...

'உங்கள் பொன்னான, மணியான, முத்தான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் எங்கள்....' டயலாக் இல்லை; தொங்கும் தோரணம், அலறும் ஆட்டோ எதுவுமேயில்லை. அமைதியான தேர்தலும் அதிகபட்ச வாக்குப்பதிவும் அதிசயம் என்றால் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்திகளிலும் நிறைய ஆச்சர்யம். 'செங்குட்டுவன் ஒன்றரை லட்சம் ஓட்டில் முன்னணியில் இருக்கிறார்' என்கிற ரேடியோ செய்தியை கேட்டே பழக்கப்பட்டவனுக்கு ஆயிரம் ஓட்டு, அம்பது ஓட்டு என்று வித்தியாசத்தை அடுக்கும்போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஓட்டுப்போடாத குற்றவுணர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் கருத்து சொல்லியே ஆகணும்னு நினைச்ச பிறகு ஆசை வெட்கமறியாது!

இந்த தேர்தலில் நிறைய ஹீரோக்கள். கருணாநிதியில் ஆரம்பித்து கலர் டி.வி வரை. ஜெயலலிதாவும் இந்த லிஸ்ட்டில் உண்டு. எட்டாயிரம் ஓட்டில் ஆரம்பித்து பதினாலு ஓட்டு வரை கஞ்சத்தனமாய் கைப்பற்றி கரை சேர்ந்திருக்கும் திராவிட பெரிசுகளை பார்க்கும்போது ஆண்டிப்பட்டியில் அம்மாவின் குவார்ட்டர் செஞ்சுரி பெரிய விஷயம். இந்த தேர்தலிலும் காமெடியன்களுக்கு பஞ்சமில்லை. அதற்காக கிண்டலடிக்க தேவையில்லை. காமெடியன்கள் என்று நாம் நினைக்கும் பலரும் வில்லன் வேஷத்தை மறைக்க காமெடி வேஷம் போட்டவர்கள்தான். தேர்தல் முடிவுகளால் அவர்களுக்கு பாதிப்பே இல்லை. அதையெல்லாம் அலசிப்பார்த்தால் கடைசியில் காமெடியன்கள் நாம்தான் என்கிற உண்மை உலகத்துக்கு தெரியவரும்.

Photobucket - Video and Image Hosting

வை.கோ நிச்சயமாய் ஜீரோ இல்லை; ஹீரோதான். வரப்போகும் மூன்று வருஷத்துக்குள் அதை நிரூபிப்பார். பத்து வருஷத்துக்கு முன்னர் தனியாக நின்று டெபாசிட்டை பறிகொடுத்த வை.கோவுக்கும் ராமதாசுக்கும் விஜயகாந்தின் வெற்றி எரிச்சலாகத்தான் இருக்கும். வன்னியர்களின் கோட்டையாக சொல்லப்படும் ஏரியாவிலேயே கால் வைத்து எட்டி உதைத்திருக்கும் விஜயகாந்தின் ஆம்பிளைத்தனத்தை ஆளாளுக்கு சிலாகிக்கிறார்கள்! அதை விட முக்கியமான ஒரு விஷயமிருக்கிறது. தன்னுடைய ஜாதியின் பெயரைச்சொல்லி ஓட்டுக்கேட்காமல் இருந்ததுதான். விருத்தாச்சலத்தில் விஜயகாந்தை விடாமல் துரத்திச் போய் கிண்டலடித்து ஜாதியின் பெயரைச்சொல்லி தெனாவட்டாக ஓட்டுக்கேட்ட பா.ம.கவுக்கு எதிராக மக்கள் பொங்கியெழுந்திருப்பது அந்த பதினெட்டாயிரம் வாக்குகளில் தெரிகிறது. ஜீன்ஸ், டீஷர்ட் போட்டு தமிழை பாதுகாத்த, சினிமா சான்ஸ் கிடைக்காத சில தமிழ் அறிஞர்களின் முகத்தில் கரி. நமக்கெதுக்கு இந்த வம்பு? விஜயகாந்தின் அசெம்ப்ளி எண்ட்ரி பத்தி மதன் போடப்போகும் கார்ட்டூனை கெஸ் பண்ண ஆரம்பிக்கலாம்!

விருத்தாச்சலவாசிகளுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல சென்னைவாசிகள். தி.மு.க கோட்டையில் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக அலையே அடித்திருக்கிறது. ·பதர் சயீத் கூட ஜெயித்திருக்கிறார் என்பது முக்கியம். சென்னையில் அம்மா இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்யவில்லை என்பது ரொம்ப முக்கியம். சைதாப்பேட்டை எதிர்பார்த்ததுதான். சங்கத்து ஆளுங்களை காணாம முழிக்கும் கட்டத்துரையை விட காமெடியான விஷயம் இங்கே நடந்தது. கூட்டிக்கழித்து பார்த்தால் சென்னைவாசிகளின் அந்தர் பல்டிக்கு இரண்டே காரணம்தான் இருக்க முடியும். ஒன்று தயாநிதி மாறன். இன்னொன்று செட்டப் பாக்ஸ்!

கொஞ்சம் அடக்கி வாசிச்சுருக்கலாமோன்னு டெல்லி கணக்குப்பிள்ளை இந்நேரம் நினைக்க ஆரம்பிச்சுருப்பார். 'இரண்டு ரூபாய்க்கு அரிசி தரமுடியுமா? இலவசமாக கலர் டி.வி தரமுடியுமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.. நான் சொல்கிறேன்....அது சாத்தியம்' என்று நிதானமாக சர்ட்டிபிகேட் கொடுத்ததை யார் மறப்பார்கள்? கொஞ்ச நாளைக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை பார்க்கலாம். இல்லாட்டி இப்படியொரு பன்ச் டயலாக் விடலாம்! 'நான் சாத்தியம் என்றுதான் சொன்னேனே தவிர சத்தியம் என்று சொல்லவில்லை!'

திருமா திரும்பவும் வெறுமா ஆகியிருக்கிறார். விஜயகாந்தை நினைத்து பல்லை கடித்துக்கொண்டிருப்பார். தமிழ்நாட்டில் காயடிக்கப்படாத வயசுப்பசங்க கூட்டம் கம்மிதான். தியாகி அவார்டு இருந்தால் கார்த்திக்குக்கு ஸாரி மு. கார்த்திக் தேவருக்கு கொடுத்துவிடலாம்! தேவர் ஓட்டை பிரித்த இனக்கோடாரி என்கிற பட்டம் கிடைக்கலாம். பா.ம.க என்கிற பலூனுக்கு யாரும் பஞ்சர் பார்க்காமலேயே காத்து இறங்க ஆரம்பிச்சுட்டதை சொல்லத் தேவையில்லை. மெதுவா ஒரு ஜாதி சங்கத்தை ஆரம்பிச்சு அப்படியே கட்சியா மாத்தி ஆட்சியை புடிக்கிறோமோ இல்லையோ டெல்லியில மினிஸ்டர் ஆயிடலாம்னு நினைக்கிறவங்க இப்போதைக்கு பதுங்கிக்கிறது உத்தமம்! இதுதான் தேர்தல் 2006 சொல்லும் மெகா செய்தி!