Wednesday, August 16, 2006

இடைவேளை

Photobucket - Video and Image Hosting

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினிலே யினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்கை
வசமாவது விரைவில் வேண்டும்
தனமு மின்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திடவேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்கவேண்டும்
மண் பயனுறவேண்டும்
வானகமிங்கு தென்படவேண்டும்
உண்மை நின்றிடவேண்டும்
ஒம் ஒம் ஒம் ஓம்.

Thursday, August 10, 2006

சத்தம் போடாதே

படு பிஸியாக புதுப்படத்து வேலைகளில் இருக்கிறார் இயக்குநர் வஸந்த். நடுவே குறும்படம், டி.வி சீரியல் டிஸ்கஷன் வேறு. சத்தமே போடாமல் வளர்ந்து வரும் வஸந்தின் 'சத்தம் போடாதே' படம்தான் கோடம்பாக்கத்தில் 'சிவாஜி'க்கு அடுத்து ஹாட் டாபிக். ஒரு சாயங்கால வேளையில் டி.நகரின் பரபரப்பான டிரா·பிக் சத்த பின்னணியில் வஸந்திடம் பேசியபோது...

நிறைய ஹிட் கொடுத்துட்டு பரபரப்பா வந்துட்டேருந்தீங்க... திடீர்னு ஒரு இடைவெளி. நடுவுல என்னதான் ஆச்சு?

அந்த இடைவெளி நேச்சுரல்தான். ஒரு விஷயத்தை ஆடியன்ஸ்க்கு சொல்லி ஆகணும்னு நான் முடிவு பண்ற வரைக்கும் அந்த இடைவெளி இருக்கத்தான் செய்யும். என்னுடைய எல்லா படத்துக்கும் நானே கதை திரைக்கதை எழுதறேன். எனக்கு பிடிச்சிருந்தாத்தான் பண்ணுவேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எண்ணிக்கையை விட குவாலிட்டிதான் முக்கியம். பரபரப்பா படம் பண்ற ஆளு நான் கிடையாது.

'சத்தம் போடாதே'ங்கிறது எதைப்பத்தி?

சின்னச் சின்ன சந்தோஷங்களோட இருக்குற ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி வந்தா என்ன ஆகும். அதை எப்படி தாங்கிக்கிட்டு அதிலேர்ந்து வெளியே வர்றாங்கங்கிறதை சொல்லியிருக்கேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை படம் இந்த ரகம் அந்த ரகம்னு பிரிச்சுப் பார்த்து மக்கள் ரசிக்கிறதில்லை. எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஜனரஞ்சகமா இருக்கணும். சத்தம் போடாதே அந்த ரகம்தான். பாதிப்படம் முடிஞ்சுப்போச்சு. தீபாவளியை ஒட்டி ரீலீஸ் பண்ணலாம்னு ஐடியா.

Photobucket - Video and Image Hosting


நிறைய படத்துல ஹீரோயினை மையப்படுத்தியே எடுத்திருக்கீங்க. இப்போ அது மாதிரி டி.வியிலதான் பண்ண முடியும். இந்தப்படத்துல எப்படி?

கே.பி ஸார் நிறைய ஹீரோயின் சப்ஜெக்ட் எடுத்து அதுல ஜெயித்தும் காட்டியிருக்கார். என்னோட எல்லா படத்துலேயும் அப்படி கிடையாது. ஆசை, நேருக்கு நேர் எல்லாம் ஹீரோ பத்தின படங்கள்தான். ஹீரோயின்களை மையப்படுத்தி சப்ஜெக்ட் இருக்கணும்னு திட்டம் எதுவும் கிடையாது. என்னுடைய ஹீரோயின்கள் மரத்தைச் சுத்தி பாட்டுப்பாட மாட்டாங்க. அவ்வளவுதான். இந்தப் படமும் அப்படித்தான்.

நம்மைச்சுற்றி நடக்கிற நம்மை பாதிக்கிற விஷயங்களை சினிமாவுல அதுவும் தமிழ் சினிமாவுல பார்க்க முடியறதில்லை. மலையாளத்துல நிறைய பண்றாங்க. இந்தியில கூட பண்றாங்க. ஆனா தமிழ்ல குறைச்சல். உதாரணத்துக்கு சுனாமி.

சுனாமி சோகத்திலிருந்து வெளியே வர்றாம இருக்கிறவனை கூப்பிட்டு சினிமாவுலேயும் சுனாமியை காட்டினா நல்லா இருக்காதே. இன்னும் பத்து வருஷம் கழிச்சு பண்ணினாக்கூட பரவாயில்லை. சுனாமி மாதிரியான பேரழிவுகளை சினிமாவுல பண்றதில் நிறைய சிக்கல் இருக்கு. அது பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சந்தோஷமான சமாச்சாரங்களைத்தான் மக்கள் ரசிப்பாங்க. அவங்களோட தினசரி வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட சோகம் இருக்குது. தேவைப்படற கொஞ்சூண்டு சோகமும் டி.வியில கிடைச்சுடறது. மக்கள் தியேட்டருக்கு வர்றதே கொஞ்ச நேரமாவது சந்தோஷமா இருக்கத்தான்.

ஆனா உங்க எல்லா படத்துலேயும் மெலிதா ஒரு சோகம் இருந்துட்டுத்தான் இருக்குதே. ஜாலியா படம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது முடிவு பண்ணியிருக்கீங்களா?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் ஒரே மாதிரிதான் பண்றேன். மனித உறவுகளுக்குள்ளே இருக்கிற சிக்கல்களை அப்படியே சொல்லணும்தான் நினைக்கிறேன். கேளடி கண்மணிக்கு அப்புறம் எனக்கு நிறைய பாராட்டு கிடைச்சது ரிதம் படத்துலதான். காரணம் உறவுகளை மென்மையா சொன்னதுக்குத்தான். முக்கியமா ஹீரோவோட அப்பா அம்மா கேரக்டர்கள். உறவுகளுக்கு இடையே இருக்கிற சிக்கலை சொல்லும்போது அது சோகத்தையும் கூடவே இழுத்துக்கிட்டுத்தான் வரும். சோகமில்லாம வாழ்க்கையில்லை. காமெடி படம் பண்ணனும் எனக்கும் ஆசை இருக்கு. அப்படி நினைச்சுத்தான் 'பூவெல்லாம் கேட்டுப்பார்' பண்ணினேன். அவ்வளவுதான் என்னால பண்ண முடியும். ஒரு வேளை நல்லா வந்திருந்தா கண்டினியூ பண்ணியிருப்பேன்.

கே.பியோட பேர் செல்லும் பிள்ளையாக உங்களைத்தான் சொல்றாங்க. உங்களை அவர்கிட்டேர்ந்து வித்தியாசப்படுத்துறது எது?

சந்தோஷமா இருக்கு. ஆனா, என்னுடைய படத்துல ஒரு ஷாட் கூட அவருடையது மாதிரி இருக்காது. அவரை அப்படியே காப்பியடிக்கிறதுங்கிறது வேற. நான் நிச்சயமா அவரை காப்பியடிக்கமாட்டேன். அவரை மாதிரி படம் எடுக்க அவரே இருக்கும்போது நான் எதுக்கு? முதல் படம் எடுக்கும்போதே இந்த முடிவோடத்தான் ஆரம்பிச்சேன்.

திடீர்னு சினிமாவுலேர்ந்து டி.விக்கு போனதுக்கு என்னதான் காரணம்? நடுநடுவே டாக்குமெண்டரி, குறும்படம்னு வேற பிஸியா இருக்கீங்க...

விஜய் டி.வில வர்ற தொடர் என்னோட தயாரிப்பு மட்டும்தான். டி.விங்கிற வேற மீடியம். அதுக்கு இப்போதைக்கு நான் போறதா இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் நிறைய வெரைட்டி பண்ணனும். பத்திரிக்கைன்னு எடுத்துக்கிட்டா சினிமா பத்திரிக்கை, இலக்கியப் பத்திரிக்கை, அரசியல் பத்திரிக்கைன்னு எல்லாத்தையும் படிக்கிற மாதிரிதான். மனித உறவுகளை பாதிக்கிற சின்ன சின்ன பிரச்னைகளை ஏதாவதொரு வடிவத்துல ஈஸியா குடுக்கணும். பிளாட்பாரத்துல இருக்கிறவனோட வாழ்க்கையை படமாக்கணும்னு ரொம்ப ஆள் ஆசைப்பட்டு அப்படியே லைட்டிங் கூட இல்லாம நேச்சுரலா 'இடம்'னு ஒரு குறும்படம் பண்ணிணேன். ஜெயகாந்தன் பண்ணின மாதிரி அசோகமித்திரனோட தண்ணீர் கதையை ஒரு பேரலல் சினிமா மாதிரி பண்ணணும்னு ஆசை. ஆனா, என்எ·படிசி கிட்டேர்ந்து இன்னும் அப்ரூவல் கிடைக்கலை.

இந்திய அளவில் தென்னிந்திய சினிமாவுக்கு சரியான முக்கியத்துவம் இல்லைன்னு மம்மூட்டி சொல்லியிருக்கார். நீங்களும் ஜூர்ரில இருந்திருக்கீங்க. அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?

நான் ஜூர்ரியா இருந்த அனுபவத்துல சொல்றேன். யாரும் எந்த ரெக்கமண்டேஷனுக்கும் என்கிட்டே வரலை. எல்லாமே ஒழுங்கத்தான் நடந்தது. படங்களை செலக்ட் பண்றதுக்கு எங்களுக்கு முழு சுதந்திரம் இருந்தது. போன தடவை கொடுத்த பதினெட்டு அவார்டுல கிட்டதட்ட ஒன்பது அவார்டு தென்னிந்திய சினிமாவுக்கு அதுவும் மலையாள சினிமாவுக்குத்தான் போனது. தேசிய அளவுல சிறந்த படமா கமலோட பெருமழைக்காலம்தான் தேர்வானது. தமிழுக்குத்தான் கம்மியா நாலு அவார்டு கிடைச்சது.

பொதுவாவே தேசிய அளவில் மீடியாவுல இந்திப்படங்களை மட்டும்தானே கவனிக்கிறாங்க. ஒரு இந்திப்படம் ஆரம்பிக்கிறதிலேர்ந்து படம் ரிலீஸாவறது வரை டி.வி, பத்திரிக்கையெல்லாம் அதை முன்னிலைப்படுத்தறாங்களே.. நம்ம படங்களை யாரும் கண்டுக்க மாட்டாங்கங்கிறது உண்மைதானே?

அவங்களோட மார்க்கெட் பெரிசு. என்னதான் இருந்தாலும் நாம ரீஜினல்தானே. நம்முடைய பட்ஜெட்டுக்கு நிறைய லாபம் வருதே தவிர அவங்க அளவுக்கு நாம பணத்தை இன்வெஸ்ட் பண்றதில்லையே. அவங்க 200, 300 கோடி வியாபாரம் பண்றாங்க. நமக்கு 100 கோடியே அதிகம். அவங்க 2000 கோடி பிரிண்ட் போடறங்க. இங்கே சந்திரமுகி மாதிரியான பெரிய படத்துக்கே 300 பிரிண்ட்தான் போடறோம். இங்கே லாபம்தான் அதிகம். பிரிண்ட் கம்மிதான்.

முன்பெல்லாம் உங்க படத்து டைட்டில் சின்னதா, எளிமையா இருக்கும். இப்போ உங்க டைட்டில் ஒரு முழ நீளத்துக்கு இருக்குதே..

சினிமாவுல டைட்டில் ரொம்ப முக்கியமான விஷயம். அது சப்ஜெக்டை பொறுத்து இருக்கணும். ஒரு ஜாலியா ரொமாண்டிக் ஸ்டோரியா இருந்ததால 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே'ன்னு வெச்சேன். சத்தம் போடாதே ¨ட்டில் கூட ஒரு மிரட்டல் வேணுங்கிறதுக்காகத்தான் வெச்சுருக்கேன்.

சினிமா பரபரப்புக்கு நடுவேயும் பான்யன் மாதிரியான அமைப்புக்கு உதவி செய்யறீங்க. திடீர்னு ஐக்கியான்னு மனவளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்காக புரோகிராம் பண்றீங்க. அரசியலுக்கு வர்றீங்களோ?

அரசியலா? இதென்ன வம்பா போச்சு? எந்த விளம்பரமும் இல்லாம பண்றதுதான் சேவை. அவங்க நடத்துற நிகழ்ச்சிக்கு என்னால முடிஞ்சதை செய்யறேன். அவ்வளவுதான். இதெல்லாம் காலேஜ் படிக்கிறப்பவே ஆரம்பிச்சதுதான். வீடு வீடா போய் பழைய இந்து பேப்பரை கலெக்ட் பண்ணுவோம். இதைத்தான் 'மனதில் உறுதி வேண்டும்' படத்துல டைரக்டர் ஒரு ஸீனாகவே வெச்சார். ரிதத்துல ரமேஷ் அர்விந்த் சொல்ற மாதிரி
இதையெல்லாம் சமூக சேவைன்னு சொல்றது பெரிய வார்த்தை. சொல்லிக்க கூச்சமா இருக்குது. அதுக்காக அரசியலுக்கு வர்றதுன்னா ஐயோ சாமி.. ஆளை விடுங்க!

இப்போ டைரக்டரெல்லாம் ஹீரோ ஆகற சீஸன். தாடியை எடுத்துட்டு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு ஹீரோ ஆகிற ஐடியாவெல்லாம் உண்டா?

டைரக்டரா இருக்கிறதுல கிடைக்கிற திருப்தி எனக்கு எதுலேயும் இல்லை. லேட்டஸ்டா அப்படியொரு சான்ஸ் வந்தது. கேரக்டர் ரோலும் வந்தது. பட் எனக்கு இஷ்டமில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் ரொம்ப அழகா இருக்குறவங்க நடிக்கிறதுதான் நல்லா இருக்கும்!

6.7.2006 கல்கி இதழுக்காக எடுத்த பேட்டியிலிருந்து...

Sunday, August 06, 2006

நிலைக்கண்ணாடி

ஜன்னலுக்கு வெளியே சோடியம் லைட்டுகளின் மஞ்சள் வெளிச்சத்தில் நேரம் போனது தெரியவில்லை. சிஸ்டம் நேரத்தை 2:30 AM காட்டியது. கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டோரியல் அறை. 'கடைசியா ஒரு தடவை படிச்சு முடிச்சுடு... மார்னிங் பிரிண்டுக்கு அனுப்பிச்சாகணும்'. படுக்கப்போகும்போது பாரா சொல்லிவிட்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. வேகமாக ஸ்க்ரோல் பாரை நகர்த்த ஆரம்பித்தேன். 'ஐயோ... ஸார்...சேப்டர் டைட்டில் போடவேயில்லையே!'

பத்ரி கெட்அப்பில் கால்மேல் கால்போட்டு கண்மூடி தரையில் கிடந்த பாரா நிமிர்ந்து உட்கார்ந்தார். உதவிக்கு வந்தது எடிட்டோரியல் பட்டாளம்.

'தேவுடா... தேவுடா.. டைட்டில் ஒண்ணு சொல்லுடா!'

'ஒரு சேஞ்சுக்கு மத்த கிழக்கு புத்தகங்களோட டைட்டிலையே சாப்டர் டைட்டிலா வெச்சுட்டா என்ன ஸார்?'

'கோயிஞ்சாமி... நல்ல ஐடியாடா! ராம்கி, ஒவ்வொரு சாப்டர்லேயும் வர்ற விஷயத்தை அப்படியே படிச்சுட்டே வா... நாம டைட்டில் சொல்லிட்டே வரலாம்.'

படிக்கப் படிக்க, டைட்டில்ஸ் பறந்து வந்தது. மிஸ்டர் தன்னம்பிக்கை, நாடகமல்ல வாழ்க்கை, காலம் உங்கள் காலடியில், வேதபுரத்து வியாபாரிகள், நிலமெல்லாம் ரத்தம், ஆளப்பிறந்தவர் நீங்கள், அழிவிலிருந்து வாழ்வுக்கு, டமால் டுமீல், மார்க்கெட்டிங் மாயாஜாலம்...

'ஸார்... இதுல கல்லக்குடி ஆர்ப்பாட்டம். எதுக்காக, எப்படி நடந்ததுன்னு சொல்றோம்... இதனால் திமுகவுக்கு கிடைச்ச லாபம், அரசியல் மாற்றங்கள் பற்றி ஒரு சின்ன அலசல்'

Photobucket - Video and Image Hosting

ஏதோதோ டைட்டிலுக்கு பின்னர் கடைசியாக முடிவானது. 'சப்தமா? சகாப்தமா?'

'அத்தியாயத் தலைப்புகள் அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வேறு சில நூல்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டது தற்செயல் அல்ல'. கடைசியாய் மறக்காமல் வந்த அந்த அடிக்குறிப்புக்கு இன்ஸ்டண்ட் வரவேற்பு. அந்த நடுநிசி நேரத்தில் மு.க புத்தகத்துக்கு கிடைத்த முதல் கைதட்டல்!

கடந்த ஒரு மாதத்தில் புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் எதிர்பாராதது என்றுதான் சொல்லவேண்டும். வலைப்பூக்களில் தமிழினி முத்துவும், அலுவலக சகா லக்ஷமணனும் ஒரே மூச்சில் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள். காரைக்குடி கவிஞர் வழக்கம்போல் தொலைபேசியில் நிறை குறைகளை அலசினார். அலுங்காமல் குலுங்காமல் ஒரு மெயில் தட்டிவிட்டதும் புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்த எனிஇண்டியன் ஹரன்பிரசன்னாவுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்.

எலெக்ஷனுக்கு பின்னர் அரசியல் நிலைமைகள் மாறிவிட்டதால் புத்தகம் வெளிவருவதற்குள் நகவெட்டிக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு எடுத்துப்போகும்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே பத்து புத்தகம் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கிழக்கு சேல்ஸ் நண்பர்கள் சேதி சொன்னார்கள். 'நல்ல பேக்கேஜ். நிச்சயம் சூப்பர் ஹிட்டா வரும்'. பத்ரியின் வாக்கு ஒருவழியாக பலித்துவிட்டது.

கருணாநிதி பற்றி புத்தகம் எழுதியிருப்பதை வீட்டிலேயே ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ எழுதறானேன்னு பார்த்தா இப்போ அரசியல் பண்றானோன்னு சந்தேகப்பட்டிருப்பார்கள். எல்லோரும் அரசாங்கத்துக்கு ஊழியம் பார்க்கும் பரம்பரை. எலெக்ஷன் நேரத்தில் பூத் அதிகாரியாகவே இருந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். வீட்டில் அரசியல் பேசுவது யாருக்கும் பிடிக்காது. அதுவும் பாட்டிக்கு கருணாநிதியை பிடிக்கவே பிடிக்காது. அவளைப் பொறுத்தவரை பிடித்தவர்கள் லிஸ்ட் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினியோடு முடிந்துவிடும். நல்லத்துக்குடி செல்லியம்மன் கோவிலைத் தாண்டி எல்லேராமின் பெருமாள் கோயில் வழியாக எலெக்ஷன் பூத்துக்கு அழைத்துப்போய் வண்டியிலிருந்து இறக்கிவிடும்போதுதான் காதோரமாய் வந்து கிசுகிசுவென்று கேட்பாள். 'யாருக்குடா தம்பி ஓட்டு போடறது?'

பாட்டி என்னை விட்டுப்போய் இன்றோடு ஒரு வருஷமாகிறது. பேரன், பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டிருப்பதில் பாட்டிக்கு நிறைய பெருமை. ஒரு வேளை தாத்தாவின் ஞாபகம் வந்திருக்கலாம். என் நிலைக்கண்ணாடியில் தாத்தாவின் முகம்! ஐம்பதுகளில் தருமபுர ஆதீனத்தில் வெறும் கணக்குப்பிள்ளையாக இருந்த தாத்தாவிடம் மல்லுக்கட்டி சந்நிதானத்துடன் பேசச்சொல்லி அச்சாபீஸ் வேலை பார்க்கச்சொன்னவள் பாட்டிதான். நான்கே மாதத்தில் தாத்தா ஒரு அச்சகத்துக்கு நிறுவனர் ஆனார். பின்னாளில் சைவ சித்தாந்த நூல்களை அச்சிடுவதில் மும்முரமாக இருந்த தருமபுரம் ஞானசம்பந்தர் பிரஸ் உருவான கதை இதுதான். இவ்வளவுக்கும் பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது...கடைசிவரைக்கும்!

நேற்றைய நினைவுகள் - நாளைய எதிர்பார்ப்புகள்