Sunday, August 06, 2006

நிலைக்கண்ணாடி

ஜன்னலுக்கு வெளியே சோடியம் லைட்டுகளின் மஞ்சள் வெளிச்சத்தில் நேரம் போனது தெரியவில்லை. சிஸ்டம் நேரத்தை 2:30 AM காட்டியது. கிழக்கு பதிப்பகத்தின் எடிட்டோரியல் அறை. 'கடைசியா ஒரு தடவை படிச்சு முடிச்சுடு... மார்னிங் பிரிண்டுக்கு அனுப்பிச்சாகணும்'. படுக்கப்போகும்போது பாரா சொல்லிவிட்டு போனது ஞாபகத்துக்கு வந்தது. வேகமாக ஸ்க்ரோல் பாரை நகர்த்த ஆரம்பித்தேன். 'ஐயோ... ஸார்...சேப்டர் டைட்டில் போடவேயில்லையே!'

பத்ரி கெட்அப்பில் கால்மேல் கால்போட்டு கண்மூடி தரையில் கிடந்த பாரா நிமிர்ந்து உட்கார்ந்தார். உதவிக்கு வந்தது எடிட்டோரியல் பட்டாளம்.

'தேவுடா... தேவுடா.. டைட்டில் ஒண்ணு சொல்லுடா!'

'ஒரு சேஞ்சுக்கு மத்த கிழக்கு புத்தகங்களோட டைட்டிலையே சாப்டர் டைட்டிலா வெச்சுட்டா என்ன ஸார்?'

'கோயிஞ்சாமி... நல்ல ஐடியாடா! ராம்கி, ஒவ்வொரு சாப்டர்லேயும் வர்ற விஷயத்தை அப்படியே படிச்சுட்டே வா... நாம டைட்டில் சொல்லிட்டே வரலாம்.'

படிக்கப் படிக்க, டைட்டில்ஸ் பறந்து வந்தது. மிஸ்டர் தன்னம்பிக்கை, நாடகமல்ல வாழ்க்கை, காலம் உங்கள் காலடியில், வேதபுரத்து வியாபாரிகள், நிலமெல்லாம் ரத்தம், ஆளப்பிறந்தவர் நீங்கள், அழிவிலிருந்து வாழ்வுக்கு, டமால் டுமீல், மார்க்கெட்டிங் மாயாஜாலம்...

'ஸார்... இதுல கல்லக்குடி ஆர்ப்பாட்டம். எதுக்காக, எப்படி நடந்ததுன்னு சொல்றோம்... இதனால் திமுகவுக்கு கிடைச்ச லாபம், அரசியல் மாற்றங்கள் பற்றி ஒரு சின்ன அலசல்'

Photobucket - Video and Image Hosting

ஏதோதோ டைட்டிலுக்கு பின்னர் கடைசியாக முடிவானது. 'சப்தமா? சகாப்தமா?'

'அத்தியாயத் தலைப்புகள் அனைத்தும் கிழக்கு பதிப்பகத்தின் வேறு சில நூல்களின் தலைப்புகளாக அமைந்துவிட்டது தற்செயல் அல்ல'. கடைசியாய் மறக்காமல் வந்த அந்த அடிக்குறிப்புக்கு இன்ஸ்டண்ட் வரவேற்பு. அந்த நடுநிசி நேரத்தில் மு.க புத்தகத்துக்கு கிடைத்த முதல் கைதட்டல்!

கடந்த ஒரு மாதத்தில் புத்தகத்திற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் எதிர்பாராதது என்றுதான் சொல்லவேண்டும். வலைப்பூக்களில் தமிழினி முத்துவும், அலுவலக சகா லக்ஷமணனும் ஒரே மூச்சில் புத்தகத்தை படித்துவிட்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள். காரைக்குடி கவிஞர் வழக்கம்போல் தொலைபேசியில் நிறை குறைகளை அலசினார். அலுங்காமல் குலுங்காமல் ஒரு மெயில் தட்டிவிட்டதும் புத்தகங்களை அனுப்ப ஏற்பாடு செய்து கொடுத்த எனிஇண்டியன் ஹரன்பிரசன்னாவுக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்.

எலெக்ஷனுக்கு பின்னர் அரசியல் நிலைமைகள் மாறிவிட்டதால் புத்தகம் வெளிவருவதற்குள் நகவெட்டிக்கு வேலையில்லாமல் போய்விட்டது. நெய்வேலி புத்தக கண்காட்சிக்கு எடுத்துப்போகும்போது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலேயே பத்து புத்தகம் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கிழக்கு சேல்ஸ் நண்பர்கள் சேதி சொன்னார்கள். 'நல்ல பேக்கேஜ். நிச்சயம் சூப்பர் ஹிட்டா வரும்'. பத்ரியின் வாக்கு ஒருவழியாக பலித்துவிட்டது.

கருணாநிதி பற்றி புத்தகம் எழுதியிருப்பதை வீட்டிலேயே ஆச்சரியமாகத்தான் பார்க்கிறார்கள். ஏதோ எழுதறானேன்னு பார்த்தா இப்போ அரசியல் பண்றானோன்னு சந்தேகப்பட்டிருப்பார்கள். எல்லோரும் அரசாங்கத்துக்கு ஊழியம் பார்க்கும் பரம்பரை. எலெக்ஷன் நேரத்தில் பூத் அதிகாரியாகவே இருந்து பழக்கப்பட்டுப்போனவர்கள். வீட்டில் அரசியல் பேசுவது யாருக்கும் பிடிக்காது. அதுவும் பாட்டிக்கு கருணாநிதியை பிடிக்கவே பிடிக்காது. அவளைப் பொறுத்தவரை பிடித்தவர்கள் லிஸ்ட் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினியோடு முடிந்துவிடும். நல்லத்துக்குடி செல்லியம்மன் கோவிலைத் தாண்டி எல்லேராமின் பெருமாள் கோயில் வழியாக எலெக்ஷன் பூத்துக்கு அழைத்துப்போய் வண்டியிலிருந்து இறக்கிவிடும்போதுதான் காதோரமாய் வந்து கிசுகிசுவென்று கேட்பாள். 'யாருக்குடா தம்பி ஓட்டு போடறது?'

பாட்டி என்னை விட்டுப்போய் இன்றோடு ஒரு வருஷமாகிறது. பேரன், பத்திரிக்கைகளுக்கு எழுதிக்கொண்டிருப்பதில் பாட்டிக்கு நிறைய பெருமை. ஒரு வேளை தாத்தாவின் ஞாபகம் வந்திருக்கலாம். என் நிலைக்கண்ணாடியில் தாத்தாவின் முகம்! ஐம்பதுகளில் தருமபுர ஆதீனத்தில் வெறும் கணக்குப்பிள்ளையாக இருந்த தாத்தாவிடம் மல்லுக்கட்டி சந்நிதானத்துடன் பேசச்சொல்லி அச்சாபீஸ் வேலை பார்க்கச்சொன்னவள் பாட்டிதான். நான்கே மாதத்தில் தாத்தா ஒரு அச்சகத்துக்கு நிறுவனர் ஆனார். பின்னாளில் சைவ சித்தாந்த நூல்களை அச்சிடுவதில் மும்முரமாக இருந்த தருமபுரம் ஞானசம்பந்தர் பிரஸ் உருவான கதை இதுதான். இவ்வளவுக்கும் பாட்டிக்கு எழுதப் படிக்க தெரியாது...கடைசிவரைக்கும்!

நேற்றைய நினைவுகள் - நாளைய எதிர்பார்ப்புகள்