Wednesday, December 24, 2003

மகாநதி - 'மெகா'நதி
ரொம்ப நாளாகவே ஒரு முழுமையான யதார்த்த சினிமா பார்க்கணும்னு ஆசை. அதுவும் ஒரு பத்து வருஷமா எல்லோரும் சிலாகிக்கும் 'மகாநதி'யை பொறுமையா உட்கார்ந்து பார்க்கணும்னு ஒரு பெரிய ஆசை. நேத்து ரொம்ப லேட்டா டிவி பொட்டிக்கு முன்னாடி உட்காரும்போது கமல் பாடிக்கொண்டிருந்தார். தஞ்சாவூர் சம்பந்தபட்ட கட்சிகளை நான் மிஸ் பண்ணிட்டதா நண்பர் சொல்லிட்டிருந்தார். பாட்டின் நடுவே கைகளை ஏதோ பண்ணி டிவி திரையில் பூதாகரமான பிம்பங்களை வரவழைத்துக்கொண்டிருந்தார். கதைப்படி கமலுக்கு மந்திரம் தந்திரமெல்லாம் தெரியுமான்னு நண்பரிடம் கேட்டேன். 'எனக்கு தெரியாது'ன்னு சொல்லிட்டார். ஆரம்பத்திலேயே ஏதாவது குறை சொல்ல ஆரம்பிச்சிடுவியேன்னு ஒரு குட்டு வேற!

சிட்பண்ட், கல்கத்தா சிவப்பு விளக்கு பகுதி, மத்திய சிறைன்னு மெகா விஷயங்களை மிகைப்படுத்தாமல் இயல்பாக காட்டியிருந்தது நிஜமாவே சபாஷ் போடவைத்தது. அப்பா மகள் உறவை எனக்கு தெரிஞ்சு யாரும் சரியா சினிமாவில் காட்டியதில்லை. சிவாஜியின் 'அன்புள்ள அப்பா' கூட செயற்கையான செல்லு £லாய்டுதான். கல்கத்தா விடுதியில் மகளை தூக்கிக்கொண்டு கமல் அழும்போது நெஞ்சை அடைத்தது. பொண்ணை பெத்த அப்பாக்களோடு அக்கா, தங்கச்சியோட பிறந்தவர்களும் உடைஞ்சு போற மாதிரியான உணர்வு.

ஒவ்வொரு பிள்ளையையும் கண்டுபிடிச்சதும் கமலும் சுகன்யாவும் மரத்தை சுத்தி வராத குறை. நல்லா சுண்ட காய்ச்சி பாதாம் பருப்பு போட்ட பாலில் ஒரு சொட்டு ரீகல் விட்ட மாதிரி அந்த மு....த்தக்காட்சி கதைக்கு தேவையான விஷயம்தான் சொல்லி தயவு செய்து நியாயப்படுத்தி விடாதீங்கோ!

படத்தை பார்த்தும்தான் ரொம்ப வருஷமாவே கமல் பேசிக்கிட்டே.......இருக்குறது தெரியுது. சிம்பிளா முடிக்க வேண்டிய டயலாக்கெல்லாம் கூட்ஸ் வண்டி கணக்கா மாறிப்போய் கடைசியில் சொல்ல வந்த விஷயம் புரியாமலே போய்விடுகிறது. (மன்னிக்கவும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டும்!) நிஜ வாழ்க்கையிலும் இதே கதை தொடருவதால் ஜாதிக்கட்சி தலைவர்களெல்லாம் பெரிய ஆளாகிவிடுகிறார்கள். (விருமாண்டி படத்தை பத்தி பேசுவதைவிட படத்துக்கு வந்த தடைகளை பத்திதான் கமல் அதிகமா பேசுறாராமே?!)

நதிகள்தான் கலாசார பரிமாற்றத்திற்கு காரணகார்த்தாக்கள். இந்த மகாநதி முலமா கமல் சொல்லியிருப்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்க வாய்ப்பிருக்கும் விஷயம். வழக்கம் போலவே 'அசத்தலான நடிப்பு, அருமையான படம்'னு சொல்லிட்டு மகாநதியை மறந்து போவது பச்சை துரோகம். இதுவரைக்கும் எனக்கு பிடிச்ச கமல் படம் உன்னால் முடியும் தம்பின்னு சொல்லிட்டிருந்தேன். இனிமே இதுதான்!

படம் முடிஞ்சதும் படத்தோட டைரக்டர் யாருன்னு நண்பனிடம் கேட்டேன். 'நீ தமிழ் நாட்டுலதான் இருக்கியா அல்லது வேற லோகத்துலயா'ன்னு கேட்டு சிரிச்சதுதான் புரியலை. ரஜினி படத்தை தவிர மத்த படத்தை பத்தி தெரிஞ்சுக்காம இருந்தது தப்புதான்?!

- ஜெ. ரஜினி ராம்கி