Saturday, May 22, 2004

அதிர்ஷ்டக்கார ஆளுங்கப்பா!

டெண்டுல்கர் கடைசி ஓவரை மட்டும் என் பையன் விளையாடுவான்னு சொல்லிட்டு ஜகா வாங்குறாருன்னு வெச்சுக்கோங்க! அவரோட வாரிசும் ·பீல்டுல இறங்கி, வர்ற ஸ்லோ பாலை சமாளிக்க மட்டையை ஏக்குதப்பாய் வைக்க, பந்து பவுண்டரிக்கு பறந்து போய் சிக்ஸரானா எப்படியிருக்கும்?! வேணாம்... இந்த கற்பனை. நிசமாவே ஒரு சீன் காட்டுறேன் பார்த்துக்கோங்கோ! தாத்தா, அப்பா, மாமா, மச்சான், எல்லோரும் கட்சியில முக்கியமான புள்ளிங்க. குங்குமம் ஆபிசுல பேருக்கு பொறுப்புல இருக்குறச்ச ஓரே ஒரு எலெக்ஷன்ல நின்னு ஓரேயடியா உசரத்துக்கு போவோன்னு இந்த பேரன் நினைச்சிருக்க மாட்டார்!
இப்போ இந்தியாவின் இன்னொரு IT முகம். மெயில் ஜடி கிடைச்சா அனுப்பி வைங்கப்பா! வேலைக்கு அப்ளிகேஷன் போட்டு வைக்கணும்!

மரம் வெட்டின பாவத்தை கழுவ மரம் நட்டு வெச்சு ஹெல்த் பத்தி கிளாஸ் எடுத்தவர் இப்போ நிஜமாவே ஹெல்த் மினிஸ்டர்! இதுவரைக்கும் எந்த பதவியிலும் இல்லாம நேரடியா கேபினட் மினிஸ்டராயிட்டார். சிகரெட், சினிமாவுல மட்டும் பிடிக்கக்கூடாதுன்னு சொல்லாம பொது விடங்களிலும் ஸ்டிரிக்டா ஆர்டர் போட்டா நல்லாயிருக்கும். கூடவே மதுவிலக்கு பத்தி கொஞ்சம் லெக்சர் கொடுத்தா தேவலை. சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வெச்சுகிட்டு ஊரை சுத்தும் உருப்படாத விசிலடிச்சான் குஞ்சான்கள் இனிமே Health பத்திரமா பார்த்துக்கறது நல்லது. எதையும் செய்ய துணிஞ்ச அப்பா இருக்கிறச்ச இந்த சின்ன அய்யாவுக்கு என்ன கவலை?

தன்மானப் பேரவைன்னு ஒண்ணு ஆரம்பிச்சு தனி ஆவர்த்தனம் நடத்த முடியாமல் தவிச்சுப் போய் நின்னுக்கிட்டிருந்தவரின் மீது அன்னையின் அருட்பார்வை பட, இப்போது காமர்ஸ் மினிஸ்டர். இனிமே கட்சியை கலைச்சுட்டு காங்கிரஸோடு சேர்ந்துடுவாரான்னு சின்ன புள்ளையாட்டம் கேட்டுப்புடாதீங்க! என்ன செய்வார்; எப்ப செய்வார்னு யாருக்குமே தெரியாது. ஆனா செய்ய வேண்டிய நேரத்துல கரெக்டா எல்லாத்தையும் செஞ்சுடுவார். (பழக்க தோஷம் அவ்வளவு சீக்கிரம் போய்டுமா?) ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம். காங்கிரஸ் தலைமையில் தமிழ்நாட்டுல மூணாவது அணின்னு கீறல் விழுந்த ரெக்கார்டை அவ்வளவு சீக்கிரம் திரும்ப ஆரம்பிக்கமாட்டார்!

தடா கேஸ், விடுதலைப்புலிகள் ஆதரவுன்னு ராஜீவ் படுகொலைக்கு பின்னாடி ஆள் ஆட்ரஸே இல்லாம இருந்த அம்மா, இன்னிக்கு சொற்பமான பெண் மத்திய அமைச்சர்களில் ஒருத்தர். விடுதலைப்புலிகள் பத்தி பேசறது 'கூட்டணி தர்ம'த்துக்கு இடைஞ்சலான விஷயங்கிற சின்ன மேட்டர் கூடவா காங்கிரஸ்க்கு தெரியாது?

அம்மா கட்சி வேட்பாளரை அறிவிச்சதுமே அந்த 'மில்க் மேன்' எப்படியும் ஜெயிச்சுடுவாருன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க! அய்யா கட்சி சார்பா அவர் ஜெயிச்சதுமே அவர்தான் மினிஸ்ட்ருன்னு எல்லோரும் சொல்லிட்டாங்க! எந்தக் கூட்டணி எப்ப ஆட்சிக்கு வந்தாலும் நம்மவர் மினிஸ்டராயிடுவாரு!

எப்படியோ அதிர்ஷ்டக்கார ஆளுங்களுக்கு வாழ்த்து சொல்லி வைப்போம்! நிறைய பேர் அப்பாவிங்க லிஸ்டுல இருக்காங்க... இருந்தாலும் எனக்கு பிடிச்ச அப்பாவி.... ஏகே மூர்த்திதான்! ஹி...ஹி!

Friday, May 21, 2004

எதுவும் நிரந்தரமில்லை!

'காலப் போக்கில் ஒவ்வொன்றும் மாறுகிறது என்ற விஞ்ஞான உண்மையை வேதாந்த உண்மையாக இந்துக்கள் எப்போதே சொல்லிவிட்டார்கள். 'மாறும் வரை பொறுத்திரு' என்பதே இந்து மதத்தின் உபதேசம். வெறுப்பை வளர்ப்பவனும் என்றோ ஒரு நாள் பக்குவம் பெறுவான், அதுவரை அவனை நாம் சகிப்போம் என்பதே இந்து மதத்தின் சாரம். இந்து மதத்தின் சிறப்பியல்புகளை நான் விவரித்துக்கொண்டு போகும்போது வேறு மதங்களுக்கு அந்த சிறப்பில்லை என்று கருதக்கூடாது. நான் ஒர் இந்து என்ற முறையில் எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகின்றேன். அவை பிற மதங்களில் இருக்கலாம் நான் மறுக்கவில்லை. 'சாதாரண மனிதன் தன் அறியாமையால் தன் மதமே பெரியதன்று எண்ணி ஆராவாரம் செய்கிறான். உண்மை ஞானம் உதித்துவிட்டால், பிற மதங்களை அரவணைக்கிறான்' என்கிறார் பரமஹம்சர். உண்மை ஞானம் எனக்கு இன்னும் உதிக்கவில்லை. அது உதிக்கும் முன்னாலேயே எல்லா மதங்களையும் நேசிக்கும் அறிவை நான் பரமஹம்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்து மதத்தின் மேன்மையை நான் குறிப்பிடும் போதெல்லாம், பிற மதங்களில் அவை இல்லை என்று சொல்வதாகக் கருதக்கூடாது. 'என் மனைவி அழகானவள்' என்று சொன்னால் 'அவன் மனைவி கோரமானவள்' என்று அர்த்தமல்ல'

- கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமத'த்திலிருந்து...

கண்ணதாசனால் ஏசு காவியத்தையும் எழுத முடியும்; இந்து மதத்தின் அருமை பெருமைகளை பற்றியும் ஏழுத முடியும் என்பது அசாதாரணமான விஷயம். வெறும் சினிமா பாடலாசிரியராகவே இருந்துவிடாமல் வேறு தளங்களிலும் புயலென புகுந்து புறப்பட்ட கண்ணதாசனின் பன்முகத்தன்மை சிலிர்க்க வைக்கிறது. கண்ணதாசனுக்கு பிறகு வந்து வைரமுத்து அவ்வப்போது சில ஆச்சரியங்களை நிகழ்த்துகிறார். சினிமா தவிர விகடனில் வந்து அசத்துவதோடு நின்று விடுகிறார் வாலி.

புதிய தலைமுறை பாடலாசிரியர்களோ சினிமா உலகத்தை தாண்டி வர முயற்சிப்பதேயில்லை. சினிமாவில் கூட ஒரே பந்தில் சிக்ஸர் அடித்த மு.மேத்தாவுக்கு கிடைத்த மாதிரியான வாய்ப்புகள் (உ.ம் 'வேலைக்காரன்') மற்ற பாடலாசிரியர்களுக்கு கிடைப்பதும் இல்லை. இப்போதெல்லாம் ஒரு படத்துக்கு நாலைந்து கவிஞர்கள் பாட்டெழுதுகிறார்கள். இளையராஜாவுக்கு பின்னர் இசையமைப்பாளர்களும் பாட்டெழுதுவதில் போட்டிக்கு வந்துவிட்டார்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தரமான கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தாராம் முன்னாள் கம்யூனிஸ்ட் பழனிபாரதி! பொழப்புக்காகத்தான் பாட்டெழுதுகிறேன்னு காளிதாசன் வெளிப்படையாக சொன்னாலும் லட்சியம் எதையும் வெறும் பேச்சளவுக்காவது வெச்சுக்கக் கூடாதா? கபிலனும் தாமரையும் நம்பிக்கையளித்தாலும் தொடர்ச்சியான படைப்புகளை தருவதில்லையே!

எது எப்படியோ, வாலிக்கும் வைரமுத்துவுக்கும் சரியான வாரிசுகள் இதுவரைக்கும் வரவில்லை. அதைத்தான் நம்பவே முடியவில்லை!

Tuesday, May 18, 2004

பொது சவால் சட்டம்?!

பொது சிவில் சட்டத்தை 1937க்கு முன்னாலே கொண்டு வந்திருந்தால் இன்றைக்கு அது ஒரு சர்ச்சையான விஷயமாக இருந்திருக்காது என்பது சில பேரின் கருத்து. பொது சிவில் சட்டம் என்றவுடன் அது முஸ்லீம் மக்களுக்கு எதிரான விஷயம் என்கிற கருத்து மீடியாவில் அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் மற்ற சிறுபான்மை மதத்தினர் வாய்திறக்காமல் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

மதம் என்பது வெறும் கேட்பாடு மட்டுமல்ல சடங்ககுகளும் அதன் உள்ளடக்கம்தான். கோட்பாடுகளை ஏற்கும்போது சடங்குகளையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. மத வித்தியாசமின்றி எல்லா சடங்குகளையும் விமர்சிக்கும் துணிச்சல் இன்று யாருக்குமில்லை. மத கோட்பாடுகளைப் பற்றி நாம் விமர்சிக்க வேண்டாம். மூட நம்பிக்கையை ஏன் நம்மால் விமர்சிக்கமுடியவில்லை? ஒரு மதவாதியாக இருந்துகொண்டே தனது மதத்தின் மூட நம்பிக்கைகளை விமர்சிக்கவே முடியாதா? நம்பிக்கை குறைந்து கொண்டேதான் வருகிறது. தனது மதத்தில் இருக்கும் ஓட்டைகளை விமர்சித்த மகாத்மா காந்திஜியையே விமர்சனம் செய்து தாளித்து விட்ட நாடு இது.

இந்து மதத்தில்தான் அதிகமான மூட நம்பிக்கைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் பெண்ணுரிமை சம்பந்தபட்டவற்றில் இஸ்லாம் தான் இந்த விஷயத்தில் முன்னுக்கு நிற்கிறது. எல்லா மதத்திலுமே சடங்குகள் பெண்ணுக்கு எதிராகவே இருக்கின்றன என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு மாதர் சங்கங்களும் மூடி மறைத்துவிடுகின்றன. அப்படியே எதிர்ப்பவர்களும் தலாக் விவாகரத்து முறையை மட்டும்தான் கண்டிக்கிறார்கள். உண்மையில் தலாக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சமுதாய பெரியவர்கள் முன்னிலையில் சொன்னால் மட்டுமே இது சாத்தியம். தலாக் சொல்ல விரும்பும் தம்பதிகளுக்கு இடையே பெற்றோர்கள் சமரசம் செய்து வைத்தாக வேண்டும் என்பதும் ஒரு கட்டாயம். இன்னொரு விஷயம் முஸ்லீம் ஆண்டுகள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'தலாக்' என்னும் வார்த்தைப் பதம்தான் எல்லோருக்கும் பரிச்சயம். முஸ்லீம் பெண்கள் விவாகரத்து பெற உபயோகிக்கும் 'ரகுலரி' பற்றி சுத்தமாக யாருக்கும் தெரிவதில்லை.

சரி, பொது சிவில் சட்டம் எப்போது சாத்தியப்படும்? அது தேவைதானா? சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அது 2037க்கு மேலும் தொடரக்கூடும் என்பதுதான் வேடிக்கை.