Friday, June 18, 2004

மோட்சம்

மறு பிறப்பு, மோட்சம் போன்றவற்றிற்கெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்தாகவேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார் காந்திஜி.

'கடவுளே இல்லையென்றால் மோட்சம் எப்படி இருக்க முடியும் என்று கேட்பது மோட்சத்தை புரிந்து கொள்ள தவறுவதாகும். மோட்சம் என்பதன் பொருளின் ஒரு பகுதியைத்தான் நம்மால் கிரகிக்க முடியும்; மீதியை அனுபவத்தால்தான் அறிய வேண்டும். அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. முடிவற்ற பல்வேறு ஜன்மங்களை எடுப்பதிலிருந்தும் அதன் விளைவான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுதல் என்பது அதன் பொருள். ஆனால், கடவுள் இருக்கிறார் என்பதை மறுப்பது தேவையில்லை.

தமிழோவியத்தில்

Thursday, June 17, 2004

இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்

திங்கட்கிழமை (14.06.2004) ஆம்பூரில் இஸ்லாம் புத்தகத்துக்கு வெளியீட்டு விழா, நீ பேசறீயா என்று பா.ராகவன் கேட்க, ஒரு தைரியத்தில் ஒப்புக்கொண்டேன். புத்தகம் சென்ற புதன்கிழமை என்னிடம்
வந்தது. வெள்ளியிரவுதான் தொட முடிந்தது. 560 பக்கங்கள். குட்டி சைஸ் தலையணை. திங்கட்கிழமை ஆம்பூர் போய்ச் சேரும்வரை படித்துக்கொண்டே இருந்தேன். தேர்வுகளுக்குக் கூட இப்படி படித்திருக்க
மாட்டேன்!!!

ஆனால், அற்புதமான வாசிப்பு. எளிமையான மொழியில், மதரீதியான பிரயோகங்களைப் பெருமளவு குறைத்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், ஒரு முக்கியப் பணியைச் செய்யவே உருவாகியிருக்கிறது.

இஸ்லாம் பற்றி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மத்தியில் உலவும் பல்வேறு தவறான எண்ணங்கள்,கருத்துக்களுக்கு இந்தப் புத்தகம் பதில் சொல்கிறது.

1. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
2. திருக்குர்ஆன் அருளப்பட்ட வேதமா? எழுதப்பட்ட புத்தகமா?
3. இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை. உண்மையா?
4. இஸ்லாம் அடிமைத்தனத்தைப் பேணுகிறது. உண்மையா?
5. இஸ்லாத்தில் கவிதைக்கு இடமில்லை. உண்மையா?

மிகமிக விரிவாக, ஒவ்வொரு கேள்வியை எடுத்துக்கொண்டு, இந்தக் கேள்வி தோன்றியிருக்கக்கூடிய பின்னணி, அதனுடைய டிப்படையின்மை, பொருத்தமின்மை ஆகியவைகளை, திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் துணையோடு தெளிவுபடுத்தியிருக்கிறார், இதன் ஆசிரியரான நாகூர் ரூமி.

இதில் உள்ள தர்க்க நியாயங்களை நீங்கள் படித்துத்ரிந்துகொள்ளுங்கள். நான் சொல்வதைவிட, ரூமி சொல்வதை நீங்கள் படித்தால்தான் அதன் நுட்பங்கள் புரியும். என்னை சிந்திக்கத் தூண்டியது, ரூமியின் உழைப்பு. எத்தனை எத்தனை எத்தனை மேற்கோள்கள், உதாரணங்கள், கருத்துக்கள். எண்ணற்ற நூல்களின் ஆழ்ந்த வாசிப்பே, இந்த நூலை எழுத வைத்திருக்கிறது.

அத்துடன், எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம், தொனி. படிப்பவனை மாற்றிவிடவேண்டும் என்ற துடிப்பெல்லாம் இந்த எழுத்தில் இல்லை. இதுதான் உண்மை. உங்கள் தவறான அபிப்பிராயங்களை இங்கே உரசிப்
பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்தமுறை, "இஸ்லாமிய தீவிரவாதி" எங்கேனும் எழுதும்படியோ படிக்கும்படியோ நேருமானால், அதற்குள் இருக்கும் முரண் சட்டென எனக்கு உறைக்கும். அதற்கு நிச்சயம் நான் ரூமிக்கே நன்றி சொல்வேன்.

இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம்
நாகூர் ரூமி
கிழக்குப் பதிப்பகம்
16 கற்பகாம்பாள் நகர்
மயிலாப்பூர்
சென்னை 4
விலை ரூ.200/-


நன்றி - வெங்கடேஷ், சென்னை

Wednesday, June 16, 2004

அப்துல் கலாமின் ஆத்மா!

தலைவர்கள் என்றாலே அரசியல் தலைவர்கள் என்று அர்த்தம் பண்ணிக்கொள்கிற காலத்தில் ஒரு பெரிய தலைவரால் அரசியல் பேசாமலே இருக்கமுடியுமாங்கிற ஆச்சரியத்தை அடிக்கடி கொடுத்துட்டு வர்றவர் நம்ம ஜனாதிபதி அப்துல் கலாம். லேட்டஸ்டா ஒவ்வொருத்தரும் குறைந்த பட்சம் 5 பேர் படிக்க ஏற்பாடு செஞ்சு கொடுக்கணும்னு சொல்லியிருக்காரு. கூடவே மரம் வளர்க்கவேண்டும், ஆண் பெண் பாகுபாடு கூடாதுன்னும் சொல்லி இதையெல்லாம் செஞ்சாலே நாட்டை கட்டியமைப்பதில் பெரிய ரோல் செஞ்ச மாதிரிதான் சொல்லி உற்சாகப்படுத்துறாரு. ஒவ்வொரு நாளும் குறைந்தது அஞ்சு லட்சம் பேர் வழிபாட்டுத் தலங்களுக்கு போகும் பழக்கமிருப்பதால் அதில் ஒரு 10 சதவீத பேர் இதுமாதிரி செய்ய ஆரம்பித்தாலே போதும். எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும் என்கிறார். இதையெல்லாம் எல்லா வழிபாட்டுத்தலங்களிலும் ஒரு அறிவிப்பாகவே வைக்கவேண்டும் என்கிறார். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதுமாதிரி சிந்திக்க முடியும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டுன்னு அட்வைஸ் பண்றதுக்காவது ஒரு தலைவர் நமக்கு வேண்டுமே! அசத்துறீங்க அப்துல் கலாம் ஸார்!

மகாத்மா காந்திஜியின் ஆத்மா... தமிழோவியத்தில்

Monday, June 14, 2004

தவிக்கும் தலித்தியம்

மறுபடியும் மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சிகளாலும் தீண்டத்தகாத கட்சிகளாகியிருக்கின்றன தலித் கட்சிகள். 1980 முதல் ஜாதியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் அரசியல்வானில் ஆக்ரமித்து வந்தாலும் தலித் கட்சிகளுக்கு மட்டும் தமிழகத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததற்கு தெளிவான காரணங்கள் தென்படாவிட்டாலும் திராவிடக் கட்சிகளின் கருணைப் பார்வை கிட்டாததை முக்கியமான காரணமாக சொல்ல முடியும். எண்பதுகளில் வன்னியர் சங்கமாக தொடங்கப்பட்டு தமிழக அரசியல் வானில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக இன்று பாமக உருவெடுத்திருப்பதற்கு திராவிடக் கட்சிகளுடனான அதன் அணுகுமுறையே காரணம். 1916ல் நீதிக் கட்சியால் தொடங்கப்பட்ட சுய மரியாதை இயக்கம் பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் அரங்கிற்கு கொண்டுவந்தாலும் அடுத்து வந்த 50 ஆண்டுகளில் இனம், மொழி, பொருளாதார விஷயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டதால் ஜாதீய ஏற்றத்தாழ்விற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. திராவிடக் கட்சிகளின் பிராமணீய எதிர்ப்பு என்பது ஜாதி அடிப்படையிலான சமூகத்தை மாற்றுவதற்கு அல்ல; அதிகாரத்தை பிடிப்பதற்கு மட்டும்தான் என்பதை தலித் மக்கள் புரிந்து கொள்வதற்குள் திராவிடக் கட்சிகள் அசைக்க முடியாத சக்தியாக ஆகிவிட்டன.

தொடர்ந்து படிக்க... தவிக்கும் தலித்தியம்.. திசைகள் - ஜூன் 2004