Saturday, July 17, 2004

அதெல்லாம் ஒரு காலம்!

 

 
ஒரு கிளாஸ்க்கு நாலு ஜன்னல். ரெண்டு கதவுன்னு விஸ்தாரமா இருக்கும்.  ரெண்டு மூணு தடவை திருடனெல்லாம் வந்து சத்துணவுக் கூடத்துல இருக்குற பிசாத்து அரிசி, எண்ணெயெல்லாம் தூக்கிட்டு போயிருக்கான். மத்தபடி மழை, புயல், வெள்ளம், காத்து எது வந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. வெறும் மொட்டை மாடிதான். அதில் கீத்துக் கொட்டகை எதுவுமில்லை.  தீடீர்னு தீப்பிடிக்க சான்ஸே இல்லை. மாடிப்படிகளில் ஏறுவதற்கே மாணவர்களுக்கு அனுமதியில்லை. வகுப்பறைக்கும், சமையல் கூடத்துக்கும் கிட்டதட்ட நூறடி தூரம். வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் தனித்தனி டாய்லெட். பள்ளிக்கூடத்தை ஓட்டின மாதிரி சின்ன வாய்க்கால். அதில் கொஞ்சமாவது தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கும். வாய்க்காலின் கரையை ஓட்டின மாதிரி எலந்தை மரம். முள் குத்தினாலும் மீறிக்கொண்டு எலந்தை காயை பறிச்சு தின்னுகிட்டே ஒரு வாக் போயிட்டு வர்றதுக்கு ஒரு தோட்டம். அதில் விளையாட்டு நேரத்தில் வேலியடைத்து பயிரிட்ட வெண்டைக்காய், தக்காளி செடிகள். அதையொட்டி பரந்து விரிந்திருக்கும் விஸ்தாரமான இடம், விளையாடுவதற்காக மட்டும். அங்கிருந்தே மாயூரநாத சுவாமியை பார்த்து ஒரு கும்பிடு போட்டுக்கலாம். இப்படியொரு ஸ்கூலை கட்டி வாடகை எதுவும் வாங்காமல் ரொம்ப நாள் தானமாக கொடுத்த தருமபுரம் ஆதினத்துக்கும் நன்றி சொல்லியாகணும்.
இதுதான் நான் படிச்ச ஆரம்ப பள்ளிக் கூடம். இப்போ ஆள் அரவமற்ற இடமாகிவிட்டது. மாயவரத்து மாபியா கும்பலால் இடத்தை கரெக்டா கண்டுபிடிக்க முடியும்னு நினைக்கிறேன்! இப்படியொரு பள்ளிக் கூடத்தில் படிச்சுட்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா ஸ்கூலை டிவியில் பார்க்கவே வயித்தெரிச்சலாகத்தான் இருக்கு!

Wednesday, July 14, 2004

"உண்மை"யின் குரல்

"அந்தப் பொடிப் பையனின் ஒரு நாள் உணவுப் பட்டிய லைக் கேட்டால் தலை சுற்று கிறது. அதிகாலை தேன் கலந்த வெந்நீரில் ஆரம்பித்து இரவு பூரி மசால், மசாலாபால், செவ்வாழைப் பழம் என்று ஒரு நீண்டப் பட்டி யல் இருக்கிறது.

பெற்றோர்களை விட்டு நீங்கி விட்டான் - பந்தம் என்கிற கட்டை அவிழ்த்துக் கொண்டு விட்டான். சந்நியாசம் வாங்கியவன் பெற் றோர்களிடம் எப்படி தங்க முடியும்?

பெற்றோர்களிடம் சமாதானமாகி விட்டது என்று ஒரு செய்தி வெளி வந்து அதன் ஈரப்பசை காய்வதற்குள்ளாகவே இல்லை- இல்லை - அது சுத்த பொய் என்று மற்றொரு செய்தி மறுப்பாக வெளிவருகிறது.

மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? பத்திரிகைகளுக்கு ஒவ்வொரு பருவத்திலும் பரபரப்புத் தீனி தேவைப்படுகிறது. அப்பொழுது தானே அவர்கள் வியாபாரம் போனியாகும். ஒரு பார்ப்பனச் சிறுவன் என்ப தாலே இவ்வளவு முக்கியத்துவம் - பாலசந்நியாசி என்கிற கிரீடம்.

ஆன்மீகம் தவிர்த்து வேறு துறைகளில் இவ்வளவுக் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருந்திருந்தால் என்னென்னவெல்லாம் `சோ’ ராமசாமி கிறுக்கி இருப் பார். `தினமலர்’ எப்படி எல்லாம் தினவெடுத்து எழுதும்!

பார்வதி தேவியார் தங்கக் கரண் டியில் ஞானப்பாலைப் பிழிந்து கொடுத்தார் - அந்தக் கரண்டி இது தான் என்று சோடித்து இருக்க மாட்டார்களா? உப்பு கண்டம் பறி கொடுத்த பழைய பார்ப்பாத்தி போல அவாள் கூட்டம் திருதிருவென்று முழக்கிறது. ஆன்மீகத்தின் பேரால் பெரும் கொள்ளை - பணக்குவிப்பு செய்ய ஒரு மோசமான கூட்டம் இதன் திரைமறைவில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

பொடியனின் பெற்றோர்களும் இந்தக் குற்றச்சாட்டை வைக்கின்றனர். தன் மகன் உயிருக்கு ஆபத்து என்று புலம்புகின்றனர். இதில் யாருக்குப் பங்கு என்பதில் ஏற்பட்ட மோதலால்தான் இவ்வளவு தூரம் கதை நாறிப் போய் விட்டது போலும்! இந்தப் போட்டி மட்டும் இல்லாமல் போயிருந்தால், அடேயப்பா, இதற்குள் பொடியன் பரணிதரன்பற்றி புதுப் புது தலப்புராணங்கள் எழுதப் பட்டு இருக்கும். ஆன்மீகம், சாமியார் கதை என்றாலே குத்தலாக மக்கள் பேசும் ஒரு நிலை ஏற்பட்டு விட்டது.

நியாயமாக காவல்துறை மூலம் இதன் பின்னணியைக் கண்டு பிடித்து புரட்டல்காரர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும் கடமையை அரசு செய்திருக்க வேண்டும். பக்திக்குப் பக்தவத்சலத்தையே தோற்கடிக்கும் அரசு அல்லவா நடந்து கொண்டிருக்கிறது - அதனிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா?"


வெறுமனே அசை போட்டுக்கிட்டிருந்த வாய்க்கு அவல் கிடைச்சா சும்மா விடுமா? மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் பிரமாதமாக முடிச்சு போட உண்மையால் மட்டுமே முடியும். சரி இதெல்லாம் கிடக்கட்டும். ஆளுங்கட்சியிடமிருந்து வல்லம் இடத்தை காப்பாத்திக்க சுயமரியாதைச் சிங்கம் வீரமணி அய்யா கலைஞர் காதுல ஏதோ கிசுகிசுக்குறாரே... அதான் மேட்டரு!

Tuesday, July 13, 2004

தென்னிந்திய மோகம் - I

தென்னாப்பிரிக்க தமிழர்கள்தான் காந்திஜியை அசத்தினார்கள் என்றால் இந்தியாவிலிருக்கும் தமிழர்களும் காந்திஜியை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. இந்தியாவிற்கு வந்த பின்பு பம்பாயில் சில காலம் இருந்துவிட்டு பூனா வந்தவர், அதற்கு பின்னர் போக நினைத்த இடம் சென்னைதான்.

சென்னைக்கு வந்த காந்திஜி தனக்கு இப்படியொரு கூட்டம் கூடுமென்று எதிர்பார்க்கவில்லை. தனது பிரசங்கத்தை அச்சிட்டு கையோடு எடுத்து வந்திருந்தார். தான் அந்த பிரசங்கத்தை வாசித்து காட்டும்போதும் மக்கள் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக கேட்டுக்கொண்டதாகவும் போகும்போது மறக்காமல் பச்சைத் துண்டில் அச்சடித்த பிரசுரத்தை காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போனதாகவும் காந்திஜி சொல்கிறார். அப்போதே 10,000 பிரதிகள் விற்பனையானதாம்! ஆங்கிலத்தில் பிரசங்கம் செய்த காந்திஜிக்கு, இந்தியாவிலேயே ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருப்பது சென்னையில்தான் என்கிற நினைப்பையும் தந்தது அந்த பிரசங்க கூட்டம்தான்

காந்தீய விழுமியங்கள் : தென்னிந்திய மோகம் - I

Sunday, July 11, 2004

ஆங்!

திருதிருவென முழித்து 'ஆங்' சொல்லும் அரசியல்வாதி, பெரிய உதடுகளுடன் பல்லிளிக்கும் மூப்பனார், கருப்புக் கண்ணாடியையும் மீறி கலைஞரின் கண்களில் தெரியும் சாணக்கியம், ஆந்தையின் முகத்தை ஞாபகப்படுத்தும் ஜெயலலலிதா என உதயனின் கார்ட்டூன்கள் குபீர் சிரிப்புக்கு உத்திரவாதம். உதயம் மறைந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டதை நம்பவே முடியவில்லை. 1995 இறுதிகளிலிருந்து 1996 எலெக்ஷன் முடியும் வரை தினமணி தலையங்கத்தின் எதிர்ப்புறம் மூலையில் உதயனின் ராஜ்ஜியம் உச்சியிலிருந்தது. ஜெயலலிதா அரசின் அராஜகங்களை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள் வரிசையில் சுப்ரமணியம் சுவாமி, ரஜினி, சோ வரிசையில் உதயனும் உண்டு. உதயனுக்கு அப்புறம்தான் மூப்பனாரையெல்லாம் வரிசையிலேயே சேர்க்கவேண்டும். தேர்தலுக்கு பின்னரும் மத்தியில் நடந்து கூத்துக்களை கார்ட்டூனாக்கி பரபரப்புடன் பக்கங்களை திருப்ப வைத்த உதயன் என்ன காரணத்தினாலோ தினமணியை விட்டுவிட்டு நக்கீரனிடம் சேர்ந்துவிட்டார். கொஞ்ச காலம் உதயனின் கார்ட்டூனுக்காகவே நான் நக்கீரன் வாங்கும்படி நேர்ந்தது. மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மறக்காமல் ஓவியர் அரஸ் கூட்டம் கூட்டியிருந்த செய்தி சமீபத்தில் என்னை நெகிழ வைத்தது. தகவல் கிடைத்திருந்தால் ஆபிசுக்கு லீவு போட்டுவிட்டாவது வந்து சேர்ந்திருப்பேன். தற்போது உதயனின் தினமணி கார்ட்டூன்களை நக்கீரன் கோபால் வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறாராம். ஆனால், வீரப்பனை அரக்கனாக காட்டிய உதயனின் தினமணி கார்ட்டூன் தொகுப்பில் இருக்க உத்திரவாதமில்லை!