Saturday, July 31, 2004

காந்தீய விழுமியங்கள்

...ஆரிய சமாஜம், இந்து மதத்தின் ஒரு பகுதியென என்னைப்போல ஆரிய சமாஜிகளும் நம்பினால் இந்துக்களை, இந்து தருமங்களை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். சகிப்புதன்மை என்பதை கருத்துக்கள் ஒன்றுபடுவது என்று தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள் சமாஜிகள். சகிப்புத்தன்மைக்கு அதெல்லாம் தேவையில்லை. ஆரிய சமாஜம், தனது சமூக சீர்திருத்த நடவடிகைக்கைகளை துரிதப்படுத்தி தேசிய, மத இயக்கங்களுக்கு உதவ வேண்டும் என்பதால் தான் குறை கூறினேன். ஆரிய சமாஜிகளின் நோக்கத்தை குறுகியதாக வைத்துக்கொள்ளாமல் விசாலாமாக்குவர்களேயானால் ஆரிய சமாஜத்திற்கு எதிர்காலம் மகத்தானதாக இருக்கும்.

தொடர்ந்து படிக்க... தமிழோவியத்தில்

Thursday, July 29, 2004

தலைகீழ் விகிதங்கள்!

பாமர நடையிலும் சரி, பட்டணத்து புரொபசர் நடையும் சரி வெளுத்து வாங்கிறார் இராம.கி வாத்தியார். சாம்பிளுக்கு சில.

"பணம்'னா என்னாண்ணே?"

"என்ன கேள்வி இது இந்த நேரத்துலே? எங்கே பாத்தாலும் இந்த வருசம் மழையே இல்லை, வெள்ளாமை சுத்தறவாப் போச்சுன்னு நான் உக்காந்திருக்கிற நேரத்துலே, நீ¦ என்ன நக்கல் பண்றியா? 'ஏதோ கிடைச்ச வேலையைச் செய்ஞ்சமா, பணத்தைச் சம்பாரிச்சமா, செலவு பண்ணமா'ன்னு இல்லாம இப்படிக் கேள்வி கேட்டு என்னத்தைக் கண்டே? தவிர, இதெல்லாம் இங்கிலீசு படிக்கலைன்னா யாருக்குத் தெரியும்?"

"அண்ணே, அப்படிச் சொல்லாதீக, என்னன்னு தெரியாமலேயே, விளங்காமலேயே, ஒண்ணைப் புழங்கிட்டு இருந்தா, நம்மளை முட்டாப் பயகன்னு சொல்லமாட்டாய்ங்க? அன்னாடம் புழங்குறதுக்கு, இதையெல்லாம் புரிஞ்சுக்குற தேவை இல்லைதான். அதுக்காக இப்படி நெடுகப் புரியாமலே இருந்தா, இந்தக் காலத்திலே குப்பை கொட்ட முடியுமா? நம்மளத் தூக்கிச் சாப்பிட்ற மாட்டாய்ங்க! வாழ்க்கையிலே பொருளாதாரம், பணம்கிறது புரியணும்ணே! எல்லாம் இங்கிலிசுலே படிச்சாத்தான் முடியும்னு நாமளும் சும்மா இருந்துட்டோம்; அப்படி ரொம்ப நாளைக்கு இருக்கப்படாது."

http://www.thinnai.com/pl0520048.html

மானுறுத்தம் என்று சொல்லும் போது, "சில பொருள்கள் நேரடியாக மானுறுத்தத்தில் உள்ளே சேருகின்றன, சில பொருள்கள் நேரடியாகச் சேருவதில்லை" என்று நாம் அறிவோம். இதனால் ஓராண்டின் மானுறுத்தக் கொளுதகையை (manufacturing cost) அல்லது செலவை ஆண்டிற்கான நேரடி மானுறுத்தக் கொளுதகை (annual direct manufacturing cost), நேரிலா மானுறத்தக் கொளுதகை (annual indirect manufacturing cost) என இரண்டு கொளுதகைகளின் கூட்டுத் தொகையாய் பார்க்க வேண்டும்.

ஆண்டின் நேரடி மானுறுத்தக் கொளுதகை என்பது பொருள்களை உருவாக்கும் புதுக்க இயக்கத்தில் (production operation) நேரடியாய் நடக்கும் செலவு. சரி, இதில் ஏதெல்லாம் அடங்கும்? இந்தச் சரவரிசை கொஞ்சம் நீளமானது. கீழே வருவதைப் படிக்குமுன் சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.

முதலில் வருவது, நம் வளாகத்திற்குள் கொண்டுசேர்க்கும் வரையில் ஆகும் போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் சேர்ந்த இயற்பொருட்களுக்கான செலவு (expenses on raw materials till delivery);

Courtesy : http://valavu.blogspot.com

Wednesday, July 28, 2004

டிக்கெட்டோபியா!

சொந்தமாக கார் வைத்திருப்பவர்களுக்கும் நடராஜா சர்வீஸை நம்பியிருப்பவர்களுக்கும் இந்த வியாதி வரவே வராதுன்னு தலையிலடிச்சு சொல்லலாம். பஸ்ஸில் உள்ளே நுழைந்ததும் ஐம்பது ரூபாயை நீட்டினால் கண்டக்டர்  புன்னகையை தொலைப்பார். சிடுசிடு கண்டக்டர் கொடுக்கிற டிக்கெட்டை வாங்கிறதுங்கிறது சத்தியமா ஒரு தனி கலை. சென்னைக்கு வந்த புதுசில் இந்த வித்தை தெரியாமல் டிக்கெட்டை காற்றில் பறக்கவிட்டபோதுதான் பேட்டையின் பிரபல கெட்ட வார்த்தை எனக்கு பரிச்சயமானது. அதற்கப்புறம்தான் நண்பனின் மூடுமந்திரம் வொர்க் அவுட்டானது. 'டிக்கெட்டை எந்த கண்டக்டரும் கையில தரமாட்டான்டா. திணிப்பான். நீதான் சரியாக புடிச்சுக்கணும்'

கண்டக்டர் எச்சில் தடவி மேப் போட்ட டிக்கெட்டை வாங்கி மேல் சட்டை பாக்கெட்டில் வெச்சுக்கறதுதான் நம்ம பழக்கம். நெருக்கியடிக்கிற கூட்டத்தில் இடுப்பையே (சத்தியமா என் இடுப்புதானுங்கோ!) தேட முடியாதபோது பாண்ட் பாக்கெட்டை எங்கே தேடுறது? வாராவாரம் அழுக்குச் சட்டையை தண்ணியில் முக்கி எடுக்கும்போது கொச கொசவென பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், சிவப்பு என சகல வர்ணங்களிலும் சட்டை பாக்கெட்டில் முத்திரை குத்தப்பட்டிருக்கும். ட்ரீட்மெண்ட் குடுக்கிறதுக்கு மிஸ்டர் ரின் இல்லாட்டி மிஸ்டர் வொயிட்தான் வரணும். வந்தாலும் ரொம்ப நேரம் மல்லு கட்டியாகணும். சரி, வாங்குற டிக்கெட்டை எங்கேதான் வெச்சுக்கணும்? இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியாத சங்கதி.

மட்டமான பிரிண்டிங் குவாலிட்டியோட தம்மா துண்டு சீட்டை எவன் கண்டுபிடிச்சதுன்னு எக்குதப்பா கேள்வி கேட்க உங்களுக்கும் தோணும். ஆனா, பஸ்ஸை விட்டு இறங்கினதும் எல்லா மறந்துடும். மறக்காம அந்த டிக்கெட்டை¨யும் எடுத்து கடாசிட்டா பிரச்சினையில்லைதான். ஆனா, யாரு ஞாபகம் வெச்சுக்கிறது? அஞ்சு ரூபா டிக்கெட் வாங்கிட்டு சைதாப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் போனாலே பிரமாதமான சைஸ்ல கெட்டியான கடிதாசியில டிக்கெட் தர்றானுங்க நம்ம லல்லுவோட சிஷ்யனுங்க. ஆனால், நூத்து பத்து ரூவாய்க்கு மாயவரத்துக்கு டிக்கெட் வாங்குனாலும் இந்த மாதிரி மஞ்சள், பச்சை கலர் ஜிங்குசான்னு காத்துல பறக்குற மாதிரி ஒரு டிக்கெட்டை கொடுத்து அதையும் கஷ்டப்பட்டு ஒரு எட்டு மணி நேரமாவது பத்திரமா வெச்சுக்கிறது சாதாரண விஷயமா என்ன? ராத்திரி நேரத்துல அவசரத்துக்கு எங்க இறங்கினாலும் பாக்கெட்டை தொட்டு இருக்குதா இல்லையான்னு பத்திரமா பார்த்துக்கிட்டே இருக்கணும்.  தாம்பரம் வர்றதுக்கு முன்னாடியே எப்பவாது செக்கிங் இன்ஸ்பெக்டருங்க வேற நம்ம கோழி தூக்கத்தை கலைச்சுட்டு இந்த வஸ்து இருக்குதான்னு அதிகாலை நேரத்துலேயும் பொறுப்பா கடமையை கவனிப்பாங்க.

என்னதான் இண்டர்நெட்டு, கம்ப்யூட்டரு, தஸ்சு புஸ்சு இங்கீலசுக்காரங்க வந்தாலும் இதெல்லாம் மாத்த முடியாத சமாச்சாரம்னு நினைச்சு நானும் நொந்துகிட்டு டிக்கெட் வைச்சுக்கிறதுக்கு ஒரு இடத்தை தேடிக்கிட்டேயிருக்கேன். நல்ல இடமா தெரிஞ்சா நீங்களும் எனக்கு சொல்லுங்க பாஸ்!

Monday, July 26, 2004

சிங்கார சென்னை டூ சிங்கப் பெருமாள் கோயில்



மதம் என்பதை வெறும் கோட்பாடாகவோ அல்லது கருத்தியலாகவோ கருதும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இல்லை. மதம் என்றாலே சடங்குகளும் நம்பிக்கைகளும்தான் எல்லோருக்கும் ஞாபகத்துக்கு வருகிறது. ஓட்டு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகளுக்கோ மதம் வெட்கப்பட வேண்டிய விஷயம்.  உண்மையான நாத்திகம், மதத்தின் பெயரால் நடக்கும் சடங்குகளை விமர்சிப்பதாக மட்டுமே இருக்கவேண்டும். அப்படியில்லாவிட்டால் மதத்தை விட நாத்திகம் நலிந்து போய்விட்டதாகத்தான் சொல்ல வேண்டும். மதத்தின் உள்ளார்ந்த தத்துவம் பற்றி நன்றாக புரிந்து வைத்திருப்பவர்களுக்கு கோயில் என்பது மன நிம்மதியை அள்ளித் தரும் ஒரு ஸ்தலம் மட்டுமே. அப்படியொரு நிம்மதி தாம்பரத்திலிருந்து அரை மணி நேரத்தில் சல்லிசாக கிடைப்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சென்னைக்கு திரும்பும் வழியில் சிங்கப் பெருமாள் கோயிலை கடக்கும்போதெல்லாம் அரைத் தூக்கத்தில்தான் இருந்திருக்கிறேன். ஊருக்கு போகும்போதும் அப்படியே. மலைக்கோயில்னு பாரா ஸார் சொன்னதும் மெயின் ரோடிலிருந்து லோக்கல் பஸ், வேன் பிடித்து குறைந்த பட்சம் ரெண்டு வாய்க்கால் ரெண்டு மலையாவது தாண்டிதான் போக வேண்டியிருக்க வேண்டும் என்கிற நினைப்பு பஸ்ஸிலிருந்து இறங்கிய இரண்டாவது நிமிஷத்திலேயே பஸ்பமானது.  

மலையை மறைத்து கோட்டைச்சுவர் கட்டிக்கொண்டு ஜம்மென்று மெயின் ரோட்டுக்கு ரொம்ப பக்கமாகவே  சிம்பிளாக காட்சி தருகிறார் பாடலாத்ரி நரசிம்மர். மலையை குடைந்து கட்டிய கோயில் மாதிரிதான் தெரிகிறது. மெயின் ரோட்டுக்கு பக்கத்திலிருந்தும் கோயில் அநியாயத்துக்கு அமைதியாய் இருக்கிறது. திருவல்லிக்கேணியிலும் மயிலாப்பூரிலும் மணிக்கணக்கில் நின்று நெருக்கியடிக்கும் கூட்டத்தில் நீந்தி சந்நிதிக்கு போய் ஆத்மார்த்த தரிசனமாக இல்லாமல் அவசர சடங்காக செய்யும் விஷயமெல்லாம் சட்டென மனசுக்குள் வந்து போகிறது. கூட்டமும் கூச்சலும் இல்லாமல் சென்னைக்கு வெகு சமீபத்திலிருக்கும் இதுவோ என்னைப்போலவே பலருக்கும் (முக்கியமாக சக கோயிந்தசாமிக்களான சுவடு ஷங்கருக்கும் கிருபா ஷங்கருக்கும்) ஆச்சரியங்களை அள்ளிக் கொடுக்கிறது. 

காலத்தின் கட்டாயம், கோயிலின் உள்தரையை மொசைக்கால் மொழுக வைத்திருக்கிறது. பச்சைமா மலைதான்னு நினைக்கிற மாதிரி எங்கு பார்த்தாலும் சந்நிதிக்குள்ளேயே துளசியின் படையெடுப்பு. பாராவின் உபயத்தால் பிரசாதமாக வந்த தோசையை பிய்க்கும்போதுதான் ஸ்ரீரங்கத்து ஞாபகம் வந்தது.

திருச்சிக்கு போகும்போதெல்லாம் அப்பா ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துக்கொண்டு போவார். ஸ்ரீரங்கம், அப்பா பிறந்து வளர்ந்த ஊர். அப்பாவின் கைப்பிடித்து பிரத்யட்சனம் வந்தால் சக்கரத்தாழ்வார் சந்நிதி வாசலில் தோசை கிடைக்கும். ஆறிப்போய் காய்ந்து இருந்தாலும் தோசையில் கமகம வாசனைக்கு குறைவிருக்காது. தொட்டுக்கொள்ள என்று எதுவும் தேவையே இல்லை. மறக்காமல் ரெண்டு வாங்கி பத்திரமாய் பையில் மடித்து வைத்துக்கொள்ளும் அப்பாவை பார்க்கையில் ஆச்சரியமாய் இருக்கும்.  அம்மா வார்த்த தேசை வேகாமலிருந்தாலே விசிறியடிக்கும் அப்பாவா இது!  இன்றைக்கும் திருச்சிக்கு போகும்போதெல்லாம் ஸ்ரீரங்கத்து தோசைக்கு அப்பா, ஆட்டோகிரா·ப் போட மறப்பதேயில்லை.

சிங்கப் பெருமாள் உறையும் கோயில், சின்னக் கோயில்தான். ஆனால், மலையோடு ஈஷிக்கொண்டிருக்கும் கோயிலும் வித்தியாசமான விஸ்தார பிரகாரமும் மனசை ஈர்க்கிறது. மலைக்கோயில் என்றாலே எனக்கொரு தனி கிரேஸ். எங்க ஊர்ப்பக்கம் இல்லாத சமாச்சாரம் என்பதாலோ என்னவோ!  ஆலமரத்தடி பிள்ளையாரிலிருந்து கெங்கையம்மன் கோயில் வரை எங்கும் நிறைந்திருக்கும் அதே சங்கதி இங்கும் உண்டு.  கல்யாணமாகாதவர்களுக்கும் குழந்தைப் பேறு இல்லாதவர்களும் தொட்டில் கட்டினால் உடனடி பலன் உண்டாம்.  எல்லா செண்டரிலும் எடுபட்டாகணுமேன்னு ஐட்டம் வைக்கும் கமர்ஷியல் மசாலா டைரக்டரின் குயுக்தி!

திரும்பி வரும்போதும் நரசிம்மரின் தேஜஸ் மனசில் நிற்கிறது. பஸ் பிடிச்சு பேட்டைக்கு வந்து தண்ணீர் புடிச்சு துணி துவைச்சாக வேண்டும்!

இச்சுவை தவிர யான்போய்
இந்திரலோ கமாளும்
அச்சுவைப் பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானே!

தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு தொலைநோக்குப் பார்வை ஜாஸ்திதான். இல்லாட்டா சென்னை மாதிரியான இந்திரலோகத்துக்கு போகவே மாட்டேன்னு ஜகா வாங்கியிருக்க மாட்டாரே!