Saturday, January 29, 2005

காந்தி அஞ்சலி




'...தங்களுடைய மகள் சுலோசனாவின் மரணம் பற்றிய செய்தியை அறிந்தேன். நான் உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும் என்பது தெரியவில்லை. மரணம் ஒரு உண்மையான நண்பன். நமது அறியாமையானாலேயே மரணத்தினால் நமக்கு துக்கம் ஏற்படுகிறது. சுலோசனாவின் ஆன்மா நேற்று இருந்தது, இன்று இருக்கிறது, நாளையும் இருக்கும். உடல் இறந்துதான் தீரவேண்டும். சுலோசனா தன்னுடைய குறைகளைத்தான் தன்னுடன் எடுத்து சென்றிருக்கிறாள்; நல்ல விஷயங்களை இங்கேயே விட்டு சென்றிருக்கிறான். அதையெல்லாம் நாம் மறக்கக்கூடாது. நம்முடைய கடமைகள் இனிமேல்தான் ஆரம்பமாகின்றன. கடமையை நிறைவேற்றுவதில் இன்னும் உறுதியுடன் செயலில் இறங்கவேண்டும்...'

சென்னையை சேர்ந்த தனது நண்பருக்கு 29.01.1948 அன்று இரவு காந்திஜி எழுதிய கடிதத்திலிருந்து... (ஹரிஜன், 22.02.1948)

(30.01.2005 - மகாத்மா காந்திஜியின் 57வது நினைவுநாள்)

Thursday, January 27, 2005

மயிலாடுதுறையின் அறிவகம்

மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி போகும் சாலையில் கொத்த தெரு பெரிய மாரியப்மமன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்தில் கொஞ்சம் உள்ளடங்கியே இருக்கிறது அறிவகம். தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்துறையினால் நிர்வகிக்கப்படும் மனவளர்ச்சி குன்றிய, காது கேளாத, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம். 90களில் நான் பள்ளி வாழ்க்கையில் இருக்கும்போது ஆரம்பிக்கப்பட்ட காப்பகம். நாற்பது குழந்தைகளோடு ஆரம்பித்த இந்த காப்பகத்தில் இப்போது இருப்பதோ நூற்றி இருபது குழந்தைகள்.



ஏற்கனவே நான்கு பெட்ஷீட்கள் வைத்திருக்கும் மீனவ குடும்பங்களுக்கு கூடுதலாக ஒரு பெட்ஷீட்டை கொடுப்பதற்கு பதிலாக நிஜமாகவே கஷ்டப்படும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என்ற நண்பர்களின் ஐடியா பற்றி தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு தகவல் கிடைத்தது. பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரையோர மீனவர் குப்பங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் மூன்று பேர் இந்த அன்பகத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக வந்தது அந்த செய்தி. நிர்வாகியை தொடர்பு கொண்டு கேட்டபோது தகவலை உறுதி செய்தார்.



காப்பகம் இருக்கும் பகுதியின் கவுன்சிலர், குடும்ப நண்பர். படித்துவிட்டு சிவனே என்று பெட்டிக்கடை நடத்தி வந்தவரை அரசியலுக்கு இழுத்து வந்து கட்சி சார்பில்லாமல் சுயேச்சையாக நிற்க வைத்து, மக்கள் இரண்டு முறை வெற்றிக்கனியையும் கையில் கொடுத்துவிட்டார்கள். காப்பகத்திற்கு உதவிகள் கிடைக்காமல் இருந்த காலத்திலெல்லாம் கவுன்சிலர்தான் ஆதரவளித்து வந்ததாக சொல்கிறார்கள். காப்பகத்தோடு தொடர்புடையவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பொருட்களை கொடுப்பதே நல்லது என்று நினைத்து அவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டோம்.



காணும் இடமெல்லாம் செடி, கொடிகளை வளர்த்து காப்பகத்தையே பச்சை பச்சையாக வைத்திருக்கிறார்கள். மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் வாகன இரைச்சல்களின் பாதிப்பு குறைவாக இருக்கிறது. தங்குமிடம், பள்ளிக்கூடம், உணவுக்கூடம் என்று எல்லாவற்றிற்கும் தனித்தனியாக கட்டிடங்கள் கட்டிவைத்து அழகான தமிழ்ப் பெயரையும் சூட்டியிருக்கிறார்கள். ஏரியாவை ஒரு ரவுண்டு போய்விட்டு வந்துவிடலாம் என்று நினைத்து முதலில் சாப்பாடு கூடத்திற்கு சென்றோம். யாரோ ஒரு ஸ்பான்ஸர் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது பெயரையும் குடும்பத்தினரது பெயர்களையும் தங்களால் முடிந்தவரைக்கும் முயற்சி செய்து கோரஸாக உச்சரித்து தங்களது நன்றியை தெரிவித்துவிட்டு குழந்தைகள் அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள்.



·பார்மாலிட்டிக்காக யாரையாவது ஒருத்தரை நிற்க வைத்து பெட்ஷீட்டை கொடுத்து ·போட்டோ எடுத்துக்கொள்வதை இதுவரை முடிந்தவரைக்கும் தவிர்த்து வந்தேன். ஆனால் இங்கே முடியவில்லை. நிர்வாகியின் வற்புறுத்தல் தாங்க முடியாமல் கூட வந்த நண்பரையும் கவுன்சிலரையும் பொருட்களை கொடுக்கச் சொல்லிவிட்டு காமிராவை கையிலெடுத்துக் கொண்டேன். சுனாமியால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தையை கூப்பிட்டு பெட்ஷிட்டை வாங்கச் சொல்லிவிட்டார் காப்பக நிர்வாகி. பழைய துணிகளையே பார்த்தும் வாங்கியும் பழக்கப்பட்டு போன காப்பக குழந்தைகளுக்கு கண்ணை பறிக்கும் கலரிலிருந்த பெட்ஷிட்கள் ரொம்பவே கவர்ந்துவிட்டன. காப்பகத்திற்குள்ளேயே எம்ப்ராய்டரி செய்வதற்கான சாதனங்கள் இருக்கின்றன. பெட்ஷீட்களை வாங்கிய கையோடு நான்கு பெண்கள் சேர்ந்து உட்கார்ந்து பெயர்களை எழுதும் எம்ப்ராய்டரி வேலைகளையும் ஆரம்பித்துவிட்டார்கள்.



கட்டுமரங்கள் கிடைத்து வசிப்பதற்கு தனியாக வீடும் கிடைத்துவிட்டால் மீனவர்களின் வாழ்க்கை பழையபடி இயல்புக்கு திரும்பிவிடும். இதுபோன்ற ஆதரவற்ற மனநலம் காப்பகங்களின் நிலைமையோ எப்போதும் இப்படித்தான். ஆனாலும் சுனாமிக்கு பின்னர் மீனவர் குப்பங்களுக்கு மட்டும் என்றில்லாமல் எல்லா ஆதரவற்ற காப்பகங்களுக்குமே நிதியுதவியிலிருந்து நிவாரணப் பொருட்கள் வரை கிடைக்க ஆரம்பித்துவிட்டன. இது உண்மையிலேயே ஆறுதலான விஷயம்தான். நாங்கள் போன நாளன்று கூட UNICEFலிருந்து அதிகாரிகள் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். எப்படியும் இந்த காது கேளாதா, வாய் பேசாத ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்னும் ஒரு வருஷத்துக்கு தேவையான பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். இனி அடுத்த வருஷத்தை பற்றித்தான் அவர்களுக்கு கவலை!

Wednesday, January 26, 2005

சுனாமி பாடம்

தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு அரசு கட்டிக்கொடுத்திருக்கும் குடியிருப்புகளில்தான் தற்போதைக்கு வாசம். இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது. கடலுக்குள் சென்று மீன் பிடிக்க ஏனோ தயக்கமிருக்கிறது. வேளாவேளைக்கு தேவையான அரிசி, பருப்புகள் அரசாங்க குடோன்களிலிருந்து அன்றாடம் கிடைத்துவிடுகிறது. ஐந்து வருஷத்திற்கொரு முறை வரும் அரசியல்வாதியும் எப்போதாவது வரும் அதிகாரியும் இப்போது அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு குப்பத்திலும் புதிதாக ஒரு காவல் நிலையம். நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் வரும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நவீன நாட்டாண்மை அலுவலகங்களாக சிறப்பாகவே செயல்படுகின்றன.



இடம் - மேலமூவர்க்கரை மீனவர்குப்பம், சீர்காழி

யுவ கேந்திரா அமைப்பிலிருந்து சிலர் குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் குறைகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். என்ன வேண்டும் என்கிற கேள்விக்கு திணறல்தான் பதிலாக வருகிறது. ஆனாலும் என்ன கொண்டு வந்து கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறார்கள். உயிரிழந்த குடும்பத்தவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் ஒரு லட்சம் கொடுக்கிறது என்பதால் தப்பி வந்தவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும் கடலோரத்திலிருக்கும் மீனவர்களுக்கு மட்டுமே ஐந்தாயிரம் ரூபாய் என்பதால் மீனவர் குப்பத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வசிப்பவர்களுக்கு ஒரு சின்ன வருத்தமும்... ஆக, ஆங்காங்கே வருத்தங்கள் இருக்கத்தான் செய்கின்றன. (ஆண்டவனால் கூட திருப்திப்படுத்த முடியாத பிறவின்னா அது மனுஷன்தான்னு எங்கேயோ படித்த ஞாபம். அதை இங்கே வந்து இடிப்பதற்கு...மன்னிக்கவும்!)

சுனாமி பற்றி முழுமையாக யாருக்கும் தெரியாமலிருப்பதுதான் வேதனையான விஷயம். ஏதோ காத்து, கருப்பு எங்களை துரத்திக்கிட்டு வந்துச்சு என்கிற ரீதியில்தான் அவர்களது பேச்சு இருக்கிறது. ஆறுதல் சொல்ல வருகிறவர்களும் சரி, நிவாரணப்பொருட்களை சுமந்து வருபவர்களும் சரி சுனாமி அலைகள் பற்றி விஞ்ஞானப்பூர்வமாக எடுத்துச்சொல்ல வேண்டும் என்று யாருக்குமே தோணவில்லை. போனவாரம் சுனாமி அலைகள் வரும் காரணம் பற்றி விபரமாக விவரித்த திண்ணை கட்டுரையை பல பிரதிகளாக எடுத்துக்கொண்டு போய் விளக்கி சொன்னால் கொஞ்சாமாவது புரிந்து கொள்வார்களா என்பதை பற்றித்தான் தற்போது யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதற்கு முதலில் நிவாரணப் பொருட்களை ஏற்றிவரும் லாரிகளை முற்றிலுமாக தடை செய்யவேண்டும். அடுத்த என்ன லாரி வரும் என்று ஆவலாக காத்திருப்வர்களிடம் என்ன சொன்னாலும் எடுபடாது.

அடுத்த ஆண்டு முதல் சுனாமி அலைகள் பற்றிய குறிப்பு எல்லா வகுப்பு பாடப்புத்தகங்களிலும் இடம்பெறும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. குழந்தைகளுக்கு ஓகே. பெரியவர்களுக்கு? பிரம்மகுமாரிகள் சங்கம் போல பெரிய பெரிய படங்களில் சுனாமி அலைகள் வருவதன் காரணம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவற்றை மீனவர்கள் குடியிருப்புகள் பக்கம் கிளாஸ் எடுப்பது நல்லது. நிவாரணப் பொருட்களை சேகரித்து கொண்டு வந்து இங்கே கொட்டுவதை விட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயங்களில் இறங்கலாம். இல்லாவிட்டால், 'திரும்பவும் 26ஆம் தேதி சுனாமி வரும்னு பேப்பர்ல போட்டிருக்கானே.. வருமா ஸார்'ங்கிற விசாரணைக்கு பதில் சொல்ல முடியாமல் முழிச்சுட்டு நிற்கவேண்டியதுதான்!