Wednesday, April 05, 2006

தி.மு.க

பத்து வருஷத்துக்கு முன்னால் நடந்த விஷயம். காங்கிரஸிலிருந்து வெளியே வந்து மூப்பனார் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கப்போவதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதி குங்குமத்தில் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார். 'எதை மறக்கக்கூடாது? எதை மறக்க வேண்டும்?' கேட்டது நானேதான். கருணாநிதி சொன்ன பதில் 'நன்றி மறக்கக்கூடாது; நன்றி கொன்ற செயலை மறந்து விட வேண்டும்' (குங்குமம், 9.2.96)

Image hosting by Photobucket

ஏதோவொரு குறளை உல்ட்டா பண்ணி பதில் சொல்லியிருக்கிறார் என்று ஒதுக்கிவிட்டு அடுத்து என்ன கேள்வி கேட்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது இன்று ஞாபகத்துக்கு வருகிறது. கருணாநிதி சொன்ன பதிலை முழுதாக புரிந்து கொள்ள பத்து வருஷம் தேவைப்பட்டிருக்கிறது. கருணாநிதி ஏமாற்றிவிட்டதாக சொன்னவர்களை விட கருணாநிதியை ஏமாற்றியவர்களின் லிஸ்ட் பெரிது. கருணாநிதி வெறும் அரசியல்வாதியாக மட்டும் இருந்திருந்தால் சறுக்கல்களிலிருந்து எழுந்து வந்திருக்க முடியாது. சின்ன வயதில் கிட்டப்பா அங்காடி வாசலில் விக்ஸ் மாத்திரையை முழுங்கிவிட்டு மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் இரண்டு மாசத்துக்கு முன்னால் பேரனை பிடித்தபடி நகர்ந்து வந்து மைக்கை பிடித்த கருணாநிதிக்கும் பெரிய வித்தியாசமில்லை. அப்போதெல்லாம் கருணாநிதி ஒரு அரசியல்வாதி; நல்ல பேச்சாளர் என்பதை தவிர வேறு எதுவும் தெரியாது. சின்ன வயதில் 'பொன்னர் சங்கர்' குங்குமத்தில் வந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு வாரம் கூட படிக்கப் பொறுமையில்லாமல் பக்கங்களை கடந்தவனுக்கு கருணாநிதியை பற்றியே ஒரு புத்தகம் எழுதவேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. தமிழுக்கு சோதனை!

பா.ரா கூப்பிட்டு சொன்னவுடன் பரபரப்பாக ஆரம்பமானது வேலை. அடுக்குமொழி வசனம், இலக்கியம், லெமூரியா கண்டம், சுயமாரியாதை, கழகம், சமூக நீதி லொட்டு லொசுக்கையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இருபது பிளஸ் வயசுக்காரங்களுக்கு கருணாநிதி என்கிற தனிநபரின் வாழ்க்கையை சொல்வது என்பதுதான் முதலில் போட்ட ஸ்கெட்ச். ரஜினியின் சினிமா சாதனையை ஓரங்கட்டிவிட்டு மத்ததை ஹைலைட்டும் அதே ட்ரீட்மெண்ட்தானா என்கிற கேள்விக்கு பா.ராவிடமிருந்து பளிச்சென்று ஒரு பதில். 'பயோகிரா·பியோட பின்னணியில் தமிழ்நாட்டின் ஐம்பது வருஷத்து அரசியல் இருந்தாகணும்'

கருணாநிதியின் திருக்குவளை வாழ்க்கையில் ஆரம்பித்து திமிறும் கூட்டணிக்கட்சிகளை இழுத்து பிடித்துக்கொண்டு தேர்தல்களத்தில் நிற்கும் தற்போதைய நிலை வரை எல்லாவற்றையும் விவரிக்க நிறைய படிக்க வேண்டியிருந்தது. நிஜமாகவே நுரை தள்ளியது. எழுதியதை விட படிப்பதற்குத்தான் முக்கால்வாசி நேரம் காலியானது. பக்கம் பக்கமாக நிறைய எழுதி தள்ளியிருக்கிறார் மனுஷர். பாதி சுயபுராணம்; மீதி கிண்டல், எள்ளல் எல்லாமே. சில இடங்களில் ஆச்சர்யம்; பல இடங்களில் எரிச்சல்! நாட்டில் நடக்கிற எல்லா விஷயங்களுக்கெல்லாம் அவ்வப்போது கருத்து சொல்லி ஐம்பது வருஷங்களில் கருத்து கந்தசாமியாகியிருக்கிறார் கருணாநிதி. அதிலிருந்து அவர் பேசியிருக்கும் 'அரசியலை' ஒதுக்கி மீதியை எடுத்துக்கொள்ள ரொம்ப யோசிக்க வேண்டியிருந்தது. உடன்பிறப்புக்கான கடிதங்களோடு பழைய முரசொலியையும் தூசிதட்டி பரப்பிக்கொண்டு உட்காரும்போது முறைத்த அந்த சைதாப்பேட்டை தி.மு.க ஆபிஸ் கழக தொண்டரின் அவஸ்தையை தனியாக எழுத வேண்டும். உதவி செய்ய ஓடி வந்தவர்கள் லிஸ்ட் போட்டால் பத்ரியில் ஆரம்பித்து முகமூடி வரை நிறைய பேரை சொல்ல வேண்டியிருக்கும். பெயரை வெளியே சொல்ல வேண்டாம் என்று மறுத்த அந்த பத்திரிக்கையாளருக்கும், எலெக்ஷன் நேரத்திலும் நேரம் ஒதுக்கி விளக்கம் சொன்ன அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் பகிரங்கமாக நன்றி சொல்ல முடியாது. நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து தந்த குத்துராமனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!

கருணாநிதியின் சினிமா சாதனையை சாதாரணமாக சொல்லிவிடமுடியாது. 60 வருஷத்தில் 60 பிளஸ் படங்களுக்கு கதை வசனம். தமிழ் சினிமாவில் கைதட்டல் வாங்கிய முதல் டெக்னீஷியன் கருணாநிதியாகத்தான் இருக்க முடியும். முதல் பன்ச் டயலாக் எழுதியதும் கருணாநிதிதான். 'சிலரை சில காலம் ஏமாற்றலாம்; ஆனால் பலரை பல காலம் ஏமாற்ற முடியாதம்மா!' ஏகப்பட்ட நாவல், கதைகள் எழுதி குவித்திருக்கிறார். ஒரு பிஸியான அரசியல்வாதியால் இதெல்லாம் முடியுமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சங்கதிகள். இன்னமும் அரசியல் முடிவுகளுக்கு கொள்கையை கூப்பிடுவது தமிழ்நாட்டில் கருணாநிதி மட்டும்தான். சொல்வது, செய்வது எல்லாவற்றையும் எழுதி வைத்துவிடுவது இவருக்கு பெரிய பிளஸ். அதுவே சில நேரங்களில் மைனஸ் ஆகிவிடுகிறது. உதாரணத்துக்கு புலிகள் ஆதரவு.

தமிழ்நாட்டின் சிறந்த அரசியல்வாதி; சிறந்த நிர்வாகி என்று எப்படி லிஸ்ட் போட்டாலும் டாப் 3 லிஸ்ட்டில் கருணாநிதியை ஒதுக்க முடியாது. மற்றவர்களிடமிருந்து தன்னை பிராண்ட் செய்து கொள்வதில் கருணாநிதியை மிஞ்ச யாராலும் முடியாது. வேலை தேடி இண்டர்வியூக்கு போகும் சாமானியன் கற்றுக்கொள்ள கருணாநிதியிடம் சரக்குகள் ஜாஸ்தி. சாதாரண தொண்டனாய் வாழ்க்கையை ஆரம்பித்த கருணாநிதிதான் இன்று கட்சி; கட்சிதான் கருணாநிதி. எம்.ஜி.ஆர் சொன்னதைப்போல தி.மு.கவின் உண்மையான அர்த்தம் திருவாரூர் முத்துவேலர் கருணாநிதிதான்!

'நம் சரித்திர நாயகர்களை பற்றிய விருப்பு வெறுப்பற்ற முன் தீர்மானங்கள், சாய்வுகள் அற்ற, கட்சி சார்புகள் அற்ற ஆய்வுகள் இருந்ததில்லை; எழுதப்படுவதில்லை. இம்மண்ணில் அதற்கு இடமில்லாமல் போய்விட்டது. அந்தந்த கட்சி பிரச்சாரங்களைத்தான் நாம் தெரிந்தவர்களாவோம். தமிழக வரலாறு ராஜாஜி, ஈ.வே.ரா, காமராஜ், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி என்னும் சரித்திர நாயகர்களால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு தரப்பானது அல்ல. இது சமூகத்தினால் அவ்வப்போது கட்டமைக்கப்பட்டும் உள்ளது. இருப்பினும் இவர்கள் நாயகர்களானதும் இவர்களும் நம் சிந்தனைகளால், செயல்களால் சமூகத்தை மாற்றியமைத்தும் உள்ளனர். இரண்டும் பரஸ்பர இயக்கம். இது ஆக்குவதும் ஆக்கப்படுவதுமான இயக்கம். இந்த இயக்கத்தின் சரிதம் இவர்களை சார்ந்த கட்சியாளர்களாலோ, எதிர்க்கட்சியாளர்களாலோ நிச்சயம் எழுதப்படக்கூடாது. இவர்களின் எவர் பற்றியும் சார்பற்ற புறநிலைப்பார்வையில் எழுதப்படவேண்டும். அது நிகழவில்லை. வெறும் தூற்றலும் போற்றலுமே நம் மரபாகியுள்ளது. இந்நிலை இந்நாயகர்களுக்கு நாம் நியாயம் செய்ததாகாது' கருணாநிதி பற்றி வெங்கட் சாமிநாதன், ஜூன் 2000.

எலெக்ஷனுக்கு முன்னால் புத்தகம் ரெடியாகிவிடுமாம்! புத்தகத்தின் ஒரு காப்பியை வெங்கட் சாமிநாதனுக்கு அனுப்பியாக வேண்டும்!