Wednesday, April 21, 2021

கொரானா 2.0

இது இரண்டாவது அலை அல்ல, சுனாமி! 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த தொற்று, 5 மாதங்கள் கழித்து தொட்ட உச்சத்தை 2021ல் ஒரே மாதத்தில் எட்டிப் பிடித்திருக்கிறோம். சுற்றமும் நட்பும் வட்டாரத்தில் நிறைய பேர் கொரானாவின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறார்கள். இவர்களில் பலர் கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் பணியில் தீவிரமாக இருந்தவர்கள். நலம் பெற வேண்டுவோம்!

ஒரே நாளில் கொரானா தொற்று, தமிழ்நாட்டில் எட்டாயிரத்தை எட்டியிருக்கிறது. அடுத்து வரும் பத்து நாட்களுக்கு தினமும் குறைந்தது ஐந்தாயிரம் எண்ணிக்கை வரக்கூடும். டைம் லைனோ வேறு உலகத்தில் இருக்கிறது. 

எப்போதோ நடந்த கொடியங்குளம் கலவரத்திற்கு இப்போது போஸ்ட் மார்ட்டம் செய்கிறார்கள். கூடவே, நிஜமான தமிழ்ப் புத்தாண்டு எதுவென்று ஆராய்ச்சி நடக்கிறது. இதைச் சொன்னால் நியாயப்படுத்துவார்கள் அல்லது திட்டுவார்கள். இரண்டில் ஒன்று, எதுவாக இருந்தாலும் நன்று!

இன்று கொரானா நோயாளிகளின் எண்ணிக்கை : சீனா - 299;  இந்தியா - 15 லட்சத்து அறுபத்து... உலகளவில் நமக்கு இரண்டாவது இடம். சீனாவுக்கு 94வது இடம். #India is shinning, not shining!

கும்பமேளா, கொரானா மேளா!

இன்று ஒரே நாளில் 2.34 லட்சம் கொரனா நோயாளிகள். ஆக, வார இறுதிக்குள் 20 லட்சத்தை கடந்து விடுவோம். கும்ப மேளா காணும் ஹரித்துவாரில் ஒவ்வொரு நாளும் 2000 பேருக்கு புதிதாக கொரானா தொற்று பரவுகிறது. 

2020ல் டெல்லி தப்லீக் மாநாடு, 2021ல் ஹரித்துவார் கும்பமேளா என்றெல்லாம் ஒப்பிடவேண்டாம் என்கிறார், உத்தரகாண்ட் முதல்வர். டெல்லி மாநாடு போல் அல்லாமல் கும்பமேளா திறந்தவெளியில் நடப்பதால் கொரானா வரவே வராது என்பது அன்னாரின் ஆழ்ந்த நம்பிக்கை!

முந்தாநாள் 8000+; நேற்று 9000+ இன்று பத்தாயிரத்தை கடந்துவிட வாய்ப்புண்டு. சென்னை மாநகரம் & சுற்றியுள்ள மாவட்டங்கள் தவிர கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மாநகரங்களை உள்ளடக்கிய இடங்களில்தான் ஆட்டம் ஜாஸ்தி. 

கர்நாடகாவில் தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு  அதிகம். நேற்று வரை 17000+ இன்று இருபதாயிரத்தை தொடுவார்கள். கேரளா, தமிழ்நாட்டை விட அதிகமென்றாலும் கர்நாடகாவை விட குறைவு. தெலுங்கு தேசம் இரண்டும் இன்னும் தமிழ்நாட்டை மிஞ்சவில்லை. 

ஆகவே,  திராவிட மாடலுக்கும் மாநிலங்களின் சுகாதாரத்துறை வளர்ச்சிக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை என்று தீர்ப்பு எழுதிவிடலாம். தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம்!

பெரும்பாலான ஆங்கில, இந்தி தொலைக்காட்சிகளில் நேற்று அமித்ஷாவின் பேட்டி; இன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோடியின் பேச்சு. இரண்டிலும் புதிதாக ஒன்றுமில்லை! நாடு முழுவதும் பொதுமுடக்கம், இனி வரும் 10 நாட்களுக்கு சாத்தியமில்லை என்பது மட்டும் தெரிகிறது

இரண்டாவது அலை, 60வது நாளை கடந்திருக்கிறது. நம்மூர் தேர்தல் களேபரத்தில் நிறைய பேர் கண்டுகொள்ளவில்லை. ஆரம்பம் முதல் மஹாராஷ்டிரா மட்டும்தான் தாக்கத்தைக் காட்டிய கண்ணாடியாக இருந்தது. 

இதுதான் உச்சம் என்றால் ஜூன் முதல் வாரத்திற்குள் மெல்லத் தரை இறங்கி தப்பித்து விடலாம். இன்னும் உச்சம் தொடுமென்றால்... 🙁