Saturday, May 29, 2004

டாப் 20 படங்கள்

சினிமா நடிகருக்கு தீவிர ரசிகரா இருந்தாலும் சினிமாவை பத்தி மூச்சே விட மாட்டேங்கிறீங்களேன்னு 2,3 விசாரிப்புகள். (ஓழுங்கா தெரிஞ்சாத்தானே மூச்சு விட முடியும்!) நான் பார்த்து, ஏதோ ஒரு காரணத்துனால எனக்கு பிடிச்ச படங்களை மட்டுமே இங்கே லிஸ்ட்டியிருக்கேன்! ஜம்முனு உட்கார்ந்துகிட்டு கால் மேல கால் போட்டு நான் சொல்ற மாதிரி நினைச்சுகிட்டு படிச்சுத் தொலைங்க!

20. கலங்கரை விளக்கம்

எம்.ஜி.ஆர் நடித்து நான் பார்த்த மூணு படங்களில் இதுவும் ஒண்ணு. திரில்லர் சப்ஜெக்ட். சரோஜாதேவியை தேடி அலையும் கச்சிதமான கேரக்டர் டாக்டர். எம்ஜிஆருக்கு. (நிஜமாவே படத்துல டாக்டர்தான்!) சோகமான பாடலை கூட ஜாலியாக பாடி நடிக்க எம்ஜிஆரால் மட்டுமே முடியும். நெருடவே இல்லை. உம் 'காற்று வாங்கப் போனேன்'. படத்தின் இன்னொரு பாடலில் கூட லேசான சோக டச்சிங் / 'பொன்னெழில் பூத்தது புதுவானில்'. அப்போதெல்லாம் பாரதிதாசன் பாடல்களை சினிமாவில் வைச்சே ஆகணும்னு எம்ஜிஆருக்கு ஒரு ஆர்வமாம்! இங்கே ஒரு 'சங்கே முழுங்கு'. படத்தை விட பாடல்களும், பாடல் காட்சிகளும்தான் டாப்!

19. டார்லிங் டார்லிங் டார்லிங்

எத்தனையோ படங்களை சர்வசாதாரணமாக எடுத்து மெகா வெற்றி பெற்ற பாக்யராஜ் கஷ்டப்பட்டு செஞ்ச படம் எடுபடாமல் போனது இண்டஸ்டிரிக்கே ஒரு ஷாக்தான். இந்த காலத்து 'அழகி', 'ஆட்டோகிராப்' கதையையெல்லாம் அப்பவே அழகா சொல்லியிருக்கார். அப்பாவியா வந்து பாட்டு பாடி, கராத்தே சண்டை போட்டாலும் பொருத்தமான வேஷம் பாக்யராஜ் ஸாருக்கு. சின்ன வயசு காதலை நியாயப்படுத்தாம கண்டிச்சு ஒரு டயலாக் வைச்சிருந்திருக்கலாம்.

18. வருஷம் 16

பிறந்த ஊருக்கு ஒரு ஜாலியான ·பேமிலி டிரிப் போன திருப்தி. தாத்தா, மாமா, சித்தப்பாட என உறவுகள் உரசிக் கொண்டு சுகிர்த்த அனுபவம். தமிழ் சினிமாவின் 'ஹம் ஆப்கே ஹை கெளன்'. பீம்சிங்கின் காலத்து படத்தையும் எந்தவித திருப்பமுமில்லாமல் இதமாக சொல்ல பாசிலுக்கு தெரிந்திருக்கிறது. 'பழமுதிர்ச்சோலை' பாடல் மட்டுமல்லாமல் டூயட் பாட்டு கூட சந்தோஷ மூடுக்கு உத்திரவாதம் தரும்.

17. இதயம்

இந்தப் படம் வரும்போது தமிழ் சினிமா டிரெண்ட் எப்படியிருந்துச்சுன்னு எல்லோருக்கும் தெரியும். மோகன் காலத்துக்கு பின்னாடி காதலை மையப்படுத்தி வர்ற சீசஸனை இது ஆரம்பிச்சு வைச்சப்ப, நான் பதினோராம் கிளாஸ் படிச்சுட்டிருந்தேன். திரைக்கதை கொஞ்சம் குழப்பினாலும் படம் முழுவதும் வர்ற இசையும் காதலைச் சொல்ல இயக்குநர் கையாண்ட டீஸெண்டான யுக்தியும் என்னவோ....என்னவோ... பிடிச்சிருக்கு!

16. கர்ணன்

அந்தக் காலத்து 'ஷங்கர்' படம். அதாவது பிரம்மாண்டம்! மகாபாரதத்தை நல்லா படிச்சு தெரிஞ்சுகிட்டது இந்தப் படத்தை பார்த்த பின்னாடிதான். அதனால், இன்னிக்கு வரைக்கும் கர்ணன் வில்லன்களோட கூடாரத்துல இருந்தாலும் நம்மளைப் பொறுத்த வரையில் ஹீரோதான். எம்.எஸ்வி இசையில் கண்ணதாசனின் பாடலில் சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரம் காட்டிய பாடல்கள்தான், படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

15. ஜானி

ஹீரோ, டபுள் ஆக்ட் என்றாலே கதையை சினிமா டிக்கெட்டின் பின்புறத்தில் எழுதிவிடலாம். இதிலும் அப்படித்தான். வழக்கமான ஆள்மாறாட்டமாக இருந்தாலும் ட்ரீட்மெண்ட் வித்தியாசமாக இருக்கும். மறக்கவே முடியாத கிளைமாக்ஸ். இளையராஜாவும் தன் பங்குக்கு வெறும் பெண்குரலை வைத்தே எல்லா பாட்டையும் கம்போஸ் பண்ணி அசத்தியிருப்பார்.

14. தளபதி

ஏகப்பட்ட கிளைக் கதைகள் இருந்ததால் குமுதத்தால் 'தொளபதி' என விமர்சிக்கப்பட்டது. ரஜினி படங்களில் டெக்னிக்கல் சங்கதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட ஆரம்பித்தது தளபதிக்கு பின்னர்தான். எளிமையான காஸ்ட்யூம், ஆர்ப்பாட்டமான இசை, அசத்தலான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு என தமிழ் சினிமாவுக்கே ஒரு 'ஷோலே' இது.

13. பூவிழி வாசலிலே

ஒரு குழந்தையையும் குடிகாரனையும் வைத்துக் கொண்டு ஒரு ஆக்ஷன் திரில்லரை படு அமைதியாக எடுக்க பாசிலை விட்டால் வேறு யாருமில்லை. திடுக்கிடும் திருப்பங்களுக்கும், ஒட்டாத காட்சிகளுக்கும் 'நோ' சொல்லிவிட்டு இளைய ராஜாவின் இசையை படம் முழுவதும் இழைய விட்டு அசத்தியிருப்பார்கள். ஜேசுதாஸ் குரலில் வரும் இரண்டு சோகப் பாடல்களும் மாஸ்டர் பீஸ்.

12. ஒரு தலை ராகம்

எங்க ஊர்க்காரர் எடுத்த இந்த காதல் காவியத்தை இன்னிக்கு வரைக்கும் ரசிக்க முடியவில்லை. காரணம், 'இதான் நம்ம காலேஜ், இதான் தருமபுரம் கோயிலு. இதான் நம்ம தெருவு'ன்னு வர்ற கமெண்ட்ஸ்தான். என்னதான் இருந்தாலும். 25 வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊர் எப்படியிருந்ததுங்கிறதை இதைப் பார்த்தாலே தெரிஞ்சுக்க முடியும்.

11. மகாநதி

'ஜெண்டில் மேனு'க்கு அப்புறம் ரஜினி படங்கள் தவிர வேறதையும் பார்த்ததில்லை, மகாநதியை தவிர. அதுவும் சமீபத்தில்தான் டிவியில் மகாநதியை பார்த்தேன். கமல் ஒரு பெரிய நடிகர் என்பதெல்லாம் உலகத்துக்கே தெரியும். ஆனா, எனக்கு புடிச்ச விஷயம் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானி என்பதே. மகனிடம் தெரியும் அந்நியத்தனம், மகளை மீட்டெடுக்கும் போது அவரிடம் வரும் கேவலும் மனதை உலுக்கி போட்ட விஷயம். படத்தில் வரும் திருவிடைமருதூர் ஏரியா காட்சிகள் எனக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.


மத்த '10' பத்தி நாளைக்கு பார்ப்போம்!