திரும்பவும் அதே பிளாட்பாரத்து வாசம். மூட்டை முடிச்சுகளுடன் கடலோரவாசிகள் சாரை சாரையாக நடக்க ஆரம்பித்துவிட்டனர். ஏதோ ஒரு சர்ச்சில் பதினொரு மணி அடிக்கும் சப்தம். தூங்கி வழியும் கண்களோடு குழந்தைகள் அப்படியே போர்வையை இழுத்து சுற்றிக்கொண்டு கூடவே நடந்து வருகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன் பார்த்த காட்சியெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது.
டி.வி நியூஸ் பார்த்துவிட்டு வேளாங்கண்ணியில் கடற்கரையோரமாக குடியிருக்கும் நண்பரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். லைன் கிடைக்கவில்லை. மயிலாடுதுறை நண்பர்களிடம் நிலைமையை விசாரித்துவிட்டு மெரீனாவை அடையும்போது மணி 11.10 p.m அதற்குள் சுவடு ஷங்கர், நாராயணன், பிரசன்னா என அடுத்தடுத்து ·போன் கால்கள். மெரீனாவில் கடல் வழக்கம்போல் அமைதியாக இருந்தது. குடித்துவிட்டு நல்ல தூக்கத்திலிருப்பவர்களை சிரமப்பட்டு எழுப்பிக்கொண்டிருந்தனர் சிலர். 'அதெல்லாம் திரும்ப வராதுங்க'ன்னு தூக்கம் தடைபட்ட எரிச்சலில் சொல்லிக்கொண்டிருந்தார் ஒரு ·பிளாட்பாரவாசி.
11.30 p.m போலீஸ் ரோந்து வாகனங்கள் மைக்செட் வைத்து மக்களை மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டிருந்தனர். சுறுசுறுப்பாக எழுந்து போக யாருக்கும் மனது வரவில்லை. நிறையபேர் வேடிக்கை பார்ப்பதற்காகவே நிற்கிறார்கள். ஆங்காங்கே காமிராவும் கையுமாக நிருபர்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டனர். 'பாஸ்.. நம்மளையும் கொஞ்சம் புடிங்க... காலைல பேப்பர்ல வந்துடும்ல'
துணை மேயர் வந்து ஏதோ ஒரு டி.விக்கு பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறதாம்! 12.10 a.m சுனாமி அபாயம் தற்சமயத்துக்கு இருக்காது என்று ரிமோட்டும் கையுமாக உட்கார்ந்திருந்த சுவடு ஷங்கர் தொலைபேசியதும் கொஞ்சம் நிம்மதி. பத்து நிமிஷத்தில் பீச்சை விட்டு கிளம்பிவிட்டேன். வழியெங்கும் ரோந்து செல்லும் போலீஸ் வேனும், ·ப்ளாட்பாரங்களில் ஆயாசத்துடன் அமர்ந்திருக்கும் மக்களும், ·ப்ளாஷ் மின்னிடும் காமிராக்களும். தூக்கம் வராத இன்னொரு நீண்ட இரவாகத்தான் நேற்றிரவு இருந்திருக்கும். சுனாமி தாக்குதல் இல்லையென்கிற நல்ல செய்தியோடு பொழுது விடிந்திருப்பது ஆறுதலான விஷயம்.