பஸ்ஸை விட்டு இறங்கியதும் பயமுறுத்தும் அதே செம்பழுப்புநிற கட்டிடங்கள். பரபரப்பான போக்குவரத்து. தஞ்சையிலிருந்து தூங்கிக்கொண்டே வருபவனை தட்டியெழுப்பும் அந்த பிருந்தாவன ஸ்டாப்பின் பேர் சொன்ன டிரா·பிக் குடை மிஸ்ஸிங். பத்துவருஷத்தில் பிருந்தாவனத்தின் தெருக்கள் குறுகிப்போய்விட்ட மாதிரி பிரமை.
இருபது வருஷத்துக்கு முன்னால் காமராஜபுரம் போக முப்பது ரூபாய் கேட்ட குதிரை வண்டிக்காரனோடு சண்டைபோட்டு நடத்தியே அழைத்துக்கொண்டு போன அப்பா, இப்போது இருபது ரூபாய் சொன்ன ஆட்டோக்காரனிடம் மறுப்பேதும் சொல்லாமல் ஏறி உட்கார்ந்தார். குதிரை லாயத்தில் எந்த குதிரை வண்டிக்காரனும் இல்லை.
'அட்டன்பரோவோட காந்தி படத்துல நடிச்சவருக்கு இன்னிக்கு என்ன ஆயிடுச்சாம்...' காந்தி நினைவு நாளில் கதர் குல்லா அரசியல்வாதி பக்கத்திலிருக்கும் இன்னொரு அரசியல்வாதியிடம் கேட்பது மாதிரியான மதனின் கார்ட்டூனை பார்க்க நேர்ந்தது புதுக்கோட்டை அத்தை வீட்டில்தான். (1984?) சம்மருக்கு அத்தை வீட்டுக்கு வந்தால் வருஷம் பூராவும் வந்த ஆனந்தவிகடனை எனக்காகவே மூட்டை கட்டி வைத்திருப்பாள் அத்தை. மெகா ஜோக்கையே அட்டையாக்கி ஆ.வி வந்துகொண்டிருந்த காலம் அது. காமராஜபுரம் இருபதாம் வீதியும் இருபத்தொன்றாம் சந்திக்கும் இடத்திலிருக்கும் கொப்புனியப்பன் கோவில் வாசலில் உட்கார்ந்து ஆ.வி படித்து சிரிப்பதும் கஷ்டமான எழுத்து நடையிலிருக்கும் கோபல்லபுரத்து மக்களை மேம்போக்காக மேய்வதும்தான் மே மாதங்களின் தினசரி நிகழ்ச்சி.
காமராஜபுரம் இருபத்தொன்றாம் வீதியில் விழுந்து புரளாத இடமே கிடையாது. கிரிக்கெட், கபடி என உச்சிவெய்யில் நேரத்திலும் விடாப்பிடியாக நின்று சட்டையில் செம்மண்ணை பூசிக்கொண்டு வானம் செம்மண் நிறத்துக்கு மாறும் நேரத்தில்தான் வீட்டுக்குள்ளேயே பிரவேசம். பட்டம் விடாத நாளில்லை; விட்ட பட்டம் எதுவும் வானில் பறந்ததுமில்லை. பட்டத்தை பிடித்துக்காண்டு மூச்சிரைக்க ஓடினால்தான் ஆறடி உயரத்துக்காவது பறக்க ஆரம்பிக்கும்.
சொக்க வைக்கும் அழகுடன் புவனேஸ்வரி. அந்த சுகந்த வாசம் மூக்கை துளைக்க வலம் வரும்போதெல்லாம் மனசில் நிம்மதி+பரவசம். அந்த கெண்டை முடி தாடி சாமியார் வானின்று வாழ்த்த ஆரம்பித்துவிட்டார். போன வருஷம்தான் கோயிலை முற்றிலுமாக மாற்றி கட்டியிருக்கிறார்கள். பத்ரகாளியும், தட்சிணாமூர்த்தியும் புதிதாக தரிசனம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
முப்பது அடி ஆழமிருந்த வாரி இன்று மூன்று அடிக்குக் கூட இல்லை. பட்டம் விட்டு விளையாடிய இடங்களெல்லாம் முட்புதர்களாகியிருக்கின்றன. 'தம்பிக்கு எந்த ஊரு' பார்த்த சரவணா தியேட்டர் இப்போது ஊர் விட்டு ஊர் செல்லும் தூரத்திலெல்லாம் இல்லை. புதுக்கோட்டைக்கு மட்டும் நான் அடிக்கடி போவதே இல்லை. இருபது வருஷத்துக்கு முந்தைய ஞாபகங்களால் நான் கட்டியிருக்கும் மனக்கோட்டை சரிந்துவிடும் என்பதுதான் முக்கியமான காரணமாக இருக்க முடியும்.