Friday, June 03, 2005

பச்சைத்தமிழனும் பலான சங்கதிகளும்

'உங்கள் மனதில் புதைந்திருக்கும் ஆழமான சோகம் எது?'

'இன்னும் தூங்குகிறானே எங்கள் தமிழன்!'

82 வயதை நெருங்கும் கலைஞரிடம் 82 கேள்வி கேட்ட குமுதத்திற்கு கிடைத்த பதில் இது. தமிழன் பற்றி கலைஞர் என்ன சொல்ல வருகிறார் என்பது இருபது வருஷங்களாய் யாருக்கும் புரிவதில்லை. தமிழன் தூங்குவது போலவும் தோன்றவில்லை. தமிழ்நாட்டிலிருந்து தப்பித்து ஓடி டாலர்களை எண்ணிக்கொண்டிருக்கிறான். உள்ளூர் தமிழனும் அப்படியொன்றும் தூங்கிக்கொண்டிருப்பதாக தெரியவில்லை. பனகல் பார்க் பக்கம் ரோட்டோரமாய் ரவுண்டு வரும் பிச்சைக்காரனால் கூட ஒரு நாளைக்கு 200 ரூபாய் தேற்ற முடிகிறது. அப்படியே தூங்கிக்கொண்டிருந்தாலும் எழுந்தவுடன் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி கலைஞர் என்றும் சொல்வதில்லை. உண்மையான தமிழன் என்பவன் தமிழ்நாட்டு தமிழனா, இலங்கைத் தமிழனா, வெளிநாடு வாழ் தமிழனா என்பது பற்றியும் யாரும் ஆராய்வதில்லை. தமிழ்நாட்டில் அவல் கிடைக்காத அரசியல்வாதிகளுக்கு 'தமிழன்' என்கிற வார்த்தைப் பிரயோகம்தான் பெரிய வரப்பிரசாதம். எதிரி இல்லாத இருட்டு அறையில் குருட்டாம்போக்கில் வாளை சுழற்றுவது போலத்தான் தமிழனை பற்றி வருத்தப்படுவதும்.

Image hosted by Photobucket.com


பச்சை (புல்வெளியில்) தமிழனும் சில பலான சங்கதிகளும்
இடம் - மகாபலிபுரம் பீச்சாங்கரை கோயில் பீச்சாங்கை பக்கம்

உடன்பிறவா சகோதரர்களான ராமதாசு, திருமாவளவனின் தமிழ்ப் பித்து, எலெக்ஷன் வரைதான் என்பது ஊரறிந்த உண்மை. சம்பந்தப்பட்டவர்களின் தமிழ்ப்பற்றை விமர்சித்தால் சிலருக்கு ஜாதிப்பற்று பொங்கிவழியும் அபாயமிருப்பதால் விட்டுவிடலாம். தமிழன் என்றாலே கலைஞர் தவிர ஞாபகத்திற்கு வருவது வைகோவும், விஜயகாந்தும்தான். இரண்டு பேருமே காமெடியன்கள் என்றாலும் மதுரைக்கார தமிழனிடம் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும். சாம்பிளுக்கு ஒன்று. 'எம்.ஜி.ஆர், அம்மாவை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினார். அதற்கு அப்புறம் மேலே வந்தது எல்லாம் அம்மாவோட திறமைதான். ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விட்டுவிடுங்கள். இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்படவேண்டியவை'. புரட்சி அம்மா பத்தி இந்த புரட்சி தமிழன் சொல்லியிருப்பது. பத்து வருஷத்துக்கு முந்தி நடந்ததையெல்லாம் மறக்க தமிழனுக்கு தேவை செலக்டியா அம்னீஷியா!

கரை வேஷ்டி, பவுடர் பார்ட்டிங்கதான் இப்படி இருக்குதே... பேனாவும் கையுமாக அலையும் தமிழன் எப்படியிருக்கிறான்னு கேட்குறீங்களா? அப்போ 'அரசியல் ஞானி' ஞாநி என்ன சொல்றார்னு பார்க்கலாம். ஞாநியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு, அரசியலுக்கு வரவிருக்கும் விஜயகாந்தை தன் கூட்டணி பக்கம் இழக்க முடியுமா என்று கலைஞர் முயற்சி செய்வதாக சொல்வதுதான். இராம. நாராயணன் மூலமாக விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு இழுக்கிறாராம். நீங்கள் இல்லாவிட்டால், வேறு கவர்ச்சியான ஆள் என்னுடன் வரத்தயாராக இருக்கிறார் என்கிற செய்தியை பா.ம.கவுக்கு சொல்வதும் கலைஞரின் நோக்கமாம்.

நீதி - உலகம் கோயிந்தசாமிக்களால் ஆனது.