பூமி ஒரு சுற்று சுற்றியிருப்பதை நம்பவே முடியவில்லை. வாணகிரி ஊராட்சி அலுவலக கட்டிடத்தை ஒட்டி தரிசாக கிடந்த இடங்களில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்திருக்கின்றன. பீச் ஓரமாய் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் இப்போது மொட்டை மாடிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றன. மீனவ குடிசைகள் இருந்த இடமெல்லாம் படகுகளை நிறுத்தி வைக்கும் ஷெட்டாக மாறியிருக்கிறது. பூம்புகாருக்கு 4 கி.மீ முன்னால் இருக்கும் அந்த மெகா பாலத்தின் கட்டுமான வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்னும் பழைய பரபரப்பு மிச்சமிருக்கிறது. கலைக்கூடத்தை ஓட்டியிருக்கும் அந்த அரங்கத்தில் ஆடுகள் தூங்கிக்கொண்டிருக்கின்றன. ரோட்டில் போகிறவர்களையெல்லாம் சப்பாத்தி சாப்பிட கூப்பிட்ட அந்த சர்தார்ஜியின் முகம் ஞாபகத்துக்கு வருகிறது. ஏதோ ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பழைய போர்டு உடைந்து ஓரமாய் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் குடிக்க சரியான தண்ணீர் கூட கிடைத்திராத பூம்புகாரில் இன்று கிடைக்காதது எதுவுமில்லை. மீனவ சமுதாயத்தை மட்டுமல்லாமல் கடலோர கிராமங்களின் முகவரியை மட்டுமல்ல முகத்தையும் சுனாமி மாற்றியிருக்கிறது. ஏகப்பட்ட அரசியல் ஈகோ பிரச்னைகளுக்கும் நடுவேயும் பல நல்ல விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. நல்லதோ, கெட்டதோ இன்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிறது.
ஒரு வருஷமாய் இன்னும் கிடைக்காத விஷயம் ஒன்று உண்டு. 'சுனாமி'ன்னா பெருசா அலை துரத்திட்டு வரும் என்பது மட்டும் தெரிந்திருக்கிறது. எதனால் வரும், வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருப்பவர்கள் ரொம்ப குறைவு. ஓரே மாதத்தில் பள்ளிக்கூடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன. ஆனால், பள்ளிக்கூட பாடங்களில் சுனாமி பற்றிய செய்திகள் இன்னும் சொல்லப்படவில்லை. மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது தொண்டு நிறுவனங்களோ மக்களுக்கு இலவசங்களை இறக்குமதி செய்வதில் காட்டிய ஆர்வத்தை நாலு பேரை உட்கார வைத்து சுனாமின்னா இதுதான் என்று சொல்ல முயற்சிக்கவேயில்லை. உதவிக்கு வந்த மகளில் சுய உதவி குழுக்களினால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. ஒரு அனுதாப அலையே வருமளவுக்கு அடுத்தவரிடம் பேசுவது எப்படி என்பதில் விவரமாக இருக்கும் மிஸ்டர் பொது ஜனத்துக்கும் சுனாமி பற்றி தெரிந்து கொள்ள நேரமில்லை. அடிக்கடி அந்தப்பக்கமாய் சென்று வந்தாலும் ஒரு பவர் பாயிண்ட் பிரசெண்டேஷன் கொடுக்கமளவுக்கு நமக்கும் நேரமில்லையே என்கிற மனசாட்சியின் குரலை உதாசீனப்படுத்திவிட்டுதான் மேற்கொண்டு தட்டச்ச வேண்டியிருக்கிறது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. சுனாமியோ, வெள்ளமோ எது வந்தாலும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு அப்படியே இருந்துதான் ஆகவேண்டும். எது நடந்தாலும் மாற்றம் இருந்துகொண்டேதான் இருக்கும். ஆனால் ஆதாரத்தையே அசைத்துப்பார்க்கும் மெகா மாற்றம் வரும் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. பாதை குழப்பமாக இருந்தாலும் செய்தி தெளிவாகத்தான் இருக்கிறது.