Tuesday, May 02, 2017

அடாலஜ் படிக்கிணறு


வலம், மார்ச் 2017 இதழில் வெளியான கட்டுரை...


ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...

-நா. முத்துக்குமார்

வங்கக்கடலில் புயல் மையம் கொண்டால் மாயவரத்தில் மழை வரும். பெருமழைக் காலங்களில் கொல்லைப்புறத்துக் கிணறு மழை நீரால் நிரம்பி வழியும். இரும்புச் சகடையும் கயிறும் இல்லாமல் தண்ணீரை மொண்டு, தரையில் விடுவது மழைக்காலங்களில் எங்களுக்குப் பிடித்தமான மெகா விளையாட்டு. கோடைக்காலங்களில் கிணறு வேறுவிதமாகக் காட்சியளிக்கும். கிணற்றடியில் பல்லாங்குழி விளையாடுவது கோடையின் வெம்மையைக் குறைக்கும். கவிஞர் முத்துக்குமாரின் கவிதையைப்போல் தூர் வாருவது வருடாந்திர உற்சவம். முத்தாட்சியம்மன் கோயில் தெரு டவுசர் பையன்களுக்கு அம்பிகாவை போஸ்டரில் பார்ப்பதைவிடக் கிறங்கடிக்கும் இன்னொரு விஷயமும் உண்டு. தூர் வாரும் சட்டி மேலே தூக்கிக் கொண்டு வரும் விளையாட்டுப் பொருட்களை வேடிக்கை பார்ப்பதுதான்.

பின்னாளில் ஓமலூரில் நண்பர் வீட்டுத் தோட்டத்தில் பிரமாண்டமான கிணற்றைப் பார்க்க முடிந்தது. மாயவரத்துக் கிணறுகளைவிட நூறு மடங்கு பெரியதாக இருந்தது. கிணறுகளில் தண்ணீர் இருக்கவேண்டியது அவசியமில்லை என்பதை தர்மபுரி, செங்கல்பட்டு மாவட்டத்துக் கிணறுகளிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. படிக்கட்டு வசதியெல்லாம் இருந்தும், கிணற்றின் பிரமாண்டம் பயமுறுத்தியதால் உள்ளே இறங்குவதற்குத் தைரியமில்லை.

கிணறுகள், எண்பதுகளோடு இறந்து போய்விட்ட ஒரு பொற்காலத்தின் மிச்சம். அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன், குஜராத் செல்லும் வரை.
குர்ஜரி யாத்ரா என்று பெயரிட்டிருந்தாலும் நதியைத் தேடி ஒரு நெடும்பயணம் (ஜனவரி 2014ல் சென்ற பயணம்) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் பாரம்பரியக் குழுவின் சார்பில் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் நகரங்களான தோலவீரா, லோத்தல் போன்ற இடங்களில் உள்ள நீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு முறைகளைப் பற்றி அறிந்து கொள்வதுதான் பயணத்தின் நோக்கம்.

டெல்டாவில் கிணறுகள் இருப்பதும், அதில் 365 நாட்களும் போதுமான தண்ணீர் இருப்பதும் ஆச்சரியமான விஷயமல்ல. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை நிறத்தையே பார்க்கமுடியாத ஒரு உப்புப் பாலைவனமான கட்ச் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான கிணறுகள் உண்டு என்கிற செய்திதான் ஆச்சரியமளித்தது.

5ம் நூற்றாண்டு தொடங்கி 15 ம் நூற்றாண்டு வரை கட்ச் வளைகுடாவை உள்ளடக்கிய குஜராத்தில் படிக்கிணறுகளே பிரதான நீர் ஆதாரமாக இருந்திருக்கின்றன. லோத்தல், தோலவீரா செல்வதற்கு முன்னர், மழை நீர் சேகரிப்பில் முக்கியமானதாகவும் குஜராத்தின் கலை, கலாசார அங்கமாகவும் உள்ள படிக்கிணறுகளைப் பார்வையிட முடிவு செய்திருந்தோம்.
குஜராத் படிக்கிணறுகளில் முக்கியமானது ராணி கி வாவ். ஆனால், ராணி கி வாவின் பிரமாண்டத்தை உள்வாங்கிக்கொள்வதற்கு முன்னர் அதைவிட அளவில் சிறியதும், நீண்ட காலமாக அறியப்பட்டதுமான ஓர் இடத்தை முதலில் பார்த்தாகவேண்டும். அதுதான் அடாலஜ்.

அகமதாபாத்திலிருந்து அரைமணி நேரப் பயணம். புதிதாகக் கட்டப்பட்டுள்ள நர்மதா கால்வாயைக் கடந்து, காந்தி நகர் சாலையில் பயணித்தால் அடாலஜ் என்னும் கிராமத்திற்கு வந்துவிடலாம். தொலைவிலிருந்து பார்க்கும்போது நாயக்கர் காலத்து மண்டபங்களை ஞாபகப்படுத்தும். அருகே செல்லும்போதுதான் ஓர் அற்புதத்தின் தரிசனம் நிகழும்.
ஐந்து அடுக்கு மாடிகளைப் போல், ஐந்து அடுக்கு தரைத்தளங்களைக் கொண்டிருக்கிறது அடாலஜ் படிக்கிணறு. படிப்படியாக இறங்கிச்சென்று தண்ணீர் எடுக்கும்படியான அமைப்பு. ஒவ்வொரு தளத்திலும் காணப்படும் சிற்பம் மற்றும் தூண் வேலைப்பாடுகள் கண்களைக் கவருகின்றன. கடைசி படிக்கட்டில் நின்று, அடாலஜின் உயரத்தைப் பார்க்கும்போது அதன் பிரமாண்டம் புரியும்.

ஓர் அரிய கலைப் பொக்கிஷத்தைத் தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு வழிபாட்டுக்குரிய கோவிலுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிடப் பலமடங்கு அதிக முக்கியத்துவம், சாமானியர்கள் புழங்கும் கிணற்றுக்குக் கொடுத்திருப்பதன் உயர்வான எண்ணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

குஜராத் வரலாற்றுப் புத்தகத்தில் அடாலஜ் படிக்கிணறுக்கு சர்வ நிச்சயமாக ஒரு பக்கம் உண்டு. வகேலாவின் மன்னனாக இருந்த வீரசிம்மாவின் மனைவி ராணி ரூடாபாய், தன்னுடைய கணவனின் நினைவாகக் கட்டி முடித்ததுதான் இந்தப் படிக்கிணறு. அடாலஜ் என்றால் ‘சொர்க்கத்தின் ஆறு’ என்று அர்த்தம்.
11ம் நூற்றாண்டில் வீரசிம்மாவில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, ரூடாபாயால் வெற்றிகரமாகக் கட்டி முடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மொத்த செலவு 7 லட்சம் டான்கஸ். (டான்கஸ் – இஸ்லாமிய ஆட்சியில் கூலி. 7 லட்சம் டான்கஸ் என்பது தோராயமாக ஐந்து லட்ச ரூபாய்க்குக் கூடுதலாக மதிப்புடையது.) அடாலஜின் முதல் தளத்தின் இரண்டாவது அடுக்கில் தென்படும் கிழக்கு நோக்கிய கல்வெட்டு வரலாற்றுக்குச் சாட்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருதத்தில்,தேவநகரி பாணியில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டு, ரூடாபாய் பற்றிக் குறிப்பிடுகிறது.

குஜராத்தின் பெரும்பாலான பகுதிகள் முஸ்லிம்களால் ஆளப்பட்டபோது, வகேலா மட்டும் தனித்து ஆளப்பட்டு வந்திருக்கிறது. சுல்தான் மெஸ்முத் பெகடா மற்றும் வீரசிம்மாவுக்கு இடையேயான யுத்தத்தில் வீரசிம்மா கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. வீரசிம்மாவின் மறைவுக்குப் பின்னர் சுல்தான், ரூடாபாய் தன்னை மணந்துகொள்ளக் கட்டாயப்படுத்தினான். ரூடாபாயும் சம்மதித்தாள். அதற்கு முன்னதாக, வீரசிம்மாவால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாமல் இருந்த அடாலஜ் படிக்கிணற்றைக் கட்டி முடித்த பின்னரே திருமணம் செய்து கொள்ளமுடியும் என்று நிபந்தனை விதிக்கிறாள். சுல்தானும் ஒப்புக்கொள்கிறான்.

திட்டமிட்டபடி, படிக்கிணறு கட்டி முடிக்கப்படுகிறது. இந்து / முஸ்லிம் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை உள்வாங்கிக்கொண்டு அடாலஜ், முக்கியமான கலாசாரச் சின்னமாக எழுப்பப்பட்டது. ரூடாபாய் அதில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. அப்படியெல்லாம் இல்லை என்று மறுக்கிறது இன்னொரு தரப்பு.

குஜராத் போன்ற வறண்ட மாநிலங்களில் மழை நீரைச் சேமிக்கவும், சேமித்ததைக் குடிப்பதற்குப் பயன்படுத்தவும் படிக்கிணறுகள்தான் உதவியிருக்கின்றன. அரச குடும்பத்தினர் மட்டுமல்ல, சாதாரணக் குடியானவர்களும் குடிநீர்த் தேவைகளுக்குப் படிக்கிணற்றையே நம்பியிருந்தார்கள். தண்ணீர்த் தேவைக்காக மட்டுமல்லாமல் மக்கள் கூடும் இடமாகவும், வழிபாட்டு இடமாகவும், பயணம் மேற்கொள்பவர்கள் தங்குமிடமாகவும் இருந்திருக்கிறது படிக்கிணறு.

பெரு மழைக்காலங்களில் கிணறு நிரம்பி, முதல் தளத்திலேயே தண்ணீர் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. தண்ணீர் குறையும்போது, அடுத்தடுத்த தளங்களுக்கு இறங்கிச்சென்றாக வேண்டும். 16ம் நூற்றாண்டு வரை, இப்பகுதியில் 700 படிக்கிணறுகள் இருந்திருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட படிக்கிணறுகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன. இன்னும் சில படிக்கிணறுகள் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன.
தெற்கு வடக்காக நீண்டிருக்கும் அடாலஜ் படிக்கிணற்றை நாம் மூன்று வழிகளில் அணுக முடியும். தென்புறம் உள்ள மூன்று நுழைவாயில்கள் ஏதேனும் ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்து, ஒவ்வொரு தளமாக இறங்கி, படிகளைக் கடந்தால், முடிவில் கிணற்றை அடைந்துவிடலாம். படிக்கிணற்றின் மொத்த நீளம் 75.3 மீட்டர். அகலம் 10 மீட்டர் இருக்கலாம்.
நுழைவாயில் எண்கோண வடிவைப் பெற்றிருக்கிறது. மூன்று நுழைவாயில்களையும் இணைக்கும் மண்டபமாக இருக்கிறது. எண்கோண வடிவிலான தளத்தை, 16 தூண்களும் தாங்கி நிற்கின்றன.
நுழைவாயிலின் கிழக்கிலும் மேற்கிலும் S வடிவ மாடம் உண்டு. மாடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் இலை மற்றும் சுருள் வடிவப் பட்டைகளால் நிரப்பப்பட்டுள்ளன. பெரிய பட்டை வடிவ உத்தரங்களில் விலங்குகளே பிரதானமாகத் தென்படுகின்றன. சண்டையிடும் யானை, குதிரையை அடக்கும் மனிதன் என விதவிதமான பாணிகளில் சிற்பங்களைப் பார்க்கமுடிகிறது.

நுழைவாயிலைத் தாண்டி வந்தால் அடுத்தடுத்து இரண்டு தளங்களைப் பார்க்கமுடியும். குடா என்னும் தளங்களைச் சிறிதும் பெரிதுமான தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. முதலிரண்டு கூடங்களில் தூண்கள் மூன்று வரிசைகளில் காணப்படுகின்றன. மூன்றாவது கூடமான இறுதிக்கட்டத்தில் தூண்கள் நான்கு வரிசைகளில் அமைந்துள்ளன.
 தூண்களின் அடித்தளம் சிறியதாக இருந்தாலும், மேல்நோக்கி நீளும்போது வேலைப்பாட்டுடன் கூடிய பெரிய தூண்களாகக் காட்சியளிக்கின்றன. தொங்கும் இலை அல்லது கழுத்தில் தொங்கும் மணிமாலை போன்ற வேலைப்பாடுகளுடன் சின்னஞ்சிறிய வளைவுகளும் முன்வரிசைத் தூண்களில் குறிப்பிடும்படியாக உள்ளன.

ஒவ்வொரு தளத்தின் முகப்பிலும், சிற்பங்களின் தொகுதியைப் பார்க்கமுடியும். இரண்டாவது தளத்தின் கிழக்குப்பகுதியில் நவக்கிரகங்களைப் பார்க்கலாம். இருபுறமும் பணியாள் சகிதம் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் அரசன், தயிர் கடையும் மனிதன், பைரவர், நடனமாடுபவர்கள், இசை விற்பன்னர்கள், நுழைவாயிலில் பார்த்தது போல் யானை, குதிரை, கஜ சர்டுலா, சக்தி வடிவங்கள், நாணயங்கள், கீர்த்தி முகங்களுக்கும் குறைச்சலில்லை.

ஒவ்வொரு தளத்திற்கு மேலும் ஒரு மேல்தளம் உண்டு. அவற்றை ஒரே அளவிலான உயரங்கள் கொண்ட தூண்கள் தாங்கிப்பிடிக்கின்றன. மேல்தளத்திற்குச் செல்ல சரியான வழியில்லை. ஒரு பாதம் அளவு சுற்றுப்பட்டை மீது கால் வைத்துத்தான் மேல்தளத்திற்குச் செல்லமுடியும்.
மேல்தளத்தின் இருபுறமும் அலங்காரமான மாடங்கள் உண்டு. பெரிய அளவிலான சிற்பங்கள் நல்ல வேலைப்பாட்டுடன் கூடிய மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் இறைவடிவங்கள், குறிப்பாகச் சக்தி வடிவங்கள் தென்படுகின்றன. குஜராத் முழுவதும் சக்தி வடிவங்களைப் பார்க்கமுடியும். சிங்கம், குதிரை போன்ற சக்தியின் வாகனங்களும் சக்தி வடிவங்களாகப் போற்றப்படுகின்றன.

ஒரு சிங்கம் தன்னுடைய முதுகில் திரிசூலத்தைச் சுமந்து செல்கிறது. இன்னொரு மாடத்தில் வெறும் சிங்கத்தை மட்டும் பார்க்கமுடியும். பாய்ந்து செல்லத் தயாராக நிற்கும் குதிரையைச் சுற்றிப் பூக்களும், நாணயங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மூன்று குடங்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு மூன்று வரிசைகளில் வைக்கப்பட்டுள்ளன. 9 குடும்பங்கள் உள்ளடக்கிய இந்த அமைப்பும் ஒரு சக்தி வடிவமாகக் கருதப்படுகிறது. இன்னொரு மாடத்தில் மூன்று சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒரு குடம் தொங்கிக்கொண்டிருக்கிறது. இலைகளும், அதன் காம்புகளும் இணைந்த ஒரு புதுவிதமான வடிவத்தை இன்னொரு இடத்தில் பார்க்கமுடிந்தது.

அடாலஜ் படிக்கிணற்றின் முக்கியமான அம்சம், கடைசிப் பகுதியான எண்கோண வடிவ அமைப்புதான். 9 மீட்டர் அளவுள்ள சதுரங்கள் இணைந்து ஒரு எண்கோண வடிவை ஏற்படுத்துகின்றன. அவற்றை 12 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன. ராஜசேனகா, வேதிகா, அசனபட்டா, காக்சாசனா என நான்கு தளங்கள் இணைந்து, இப்படியொரு உருளை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.

கிணற்றின் விட்டம் 7 மீட்டர். கீழிருந்து மேலே பார்க்கமுடியும். மேலிருந்து கீழே பார்க்கத் தற்போது அனுமதி இல்லை. கிணற்றில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. அவற்றைச் சுற்றி வேலைப்பாடுகள் கொண்ட பட்டையும் காணப்படுகிறது.
நீர், ஆவியாகிவிடுவதைத் தடுப்பதற்கே இப்படிச் சிக்கலான அடுக்குத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 6 டிகிரி சாய்வில் உள்ள எண்கோண அமைப்பின் ஊடாகச் சூரிய ஒளியானது ஒரு நாளில் அதிகபட்சமாக ஆறு நிமிடங்களே ஊடுருவ முடியும்.

 ஒவ்வொரு உத்திரத்தின் மையப்பகுதியிலும் நிறையச் சிறு உருவ அமைப்புகளைப் படிக்கிணறு முழுவதும் காண முடியும். புகைப்படத்துக்குள் உள்ள ஓவியம் போல் சற்று சதுர வடிவமான அமைப்பில் உட்கார வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பிள்ளையார், ஹனுமான் தவிர அதிகமாக நம்மைக் கவருவது கீர்த்திமுகம்தான்.

யானைகளின் சிற்பத் தொகுதி, நல்ல வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான யானைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. மரங்களைப் பிடுங்கி, தும்பிக்கையில் ஏந்தியபடி நிற்கின்றன. சில இடங்களில் யானைகள் போர்க்கள ஆடை அணிந்து, போருக்குத் தயாராக மிடுக்குடன் தென்படுகின்றன.

விலங்குகளின் தொகுதியில் ஒரு சில விசித்திரமான விலங்குகளும் உண்டு. பாதி யானை, பாதி சிங்கம், நடுவே மனிதன். தன்னுடைய கூரிய அலகுகளால் இலைகளைப் பறித்துக்கொண்டிருக்கும் கொக்குகள். மழைக்காலங்களில் கிணறு நிறைந்து தண்ணீரின் அளவு உத்திரத்தை எட்டும்போது மண்ணாலான கொக்குகள், நிஜமான தண்ணீரில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்.
கட்ச் வளைகுடாவில் கோடைக்கு மறுபெயர் கொடுமை. இமயமலையின் பனி போல், கட்ச் பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை நிற உப்பளங்களை மட்டுமே பார்க்கமுடியும். கிணறுகள், கட்ச் வளைகுடா பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்த வகையில் படிக்கிணறுகளை வழிபாட்டுக்குரிய இடங்களாகக் கருதுவதில் எந்தத் தவறுமில்லை.

இனி, ஓ காதல் கண்மணி. அடாலஜின் மேல்தளத்திலிருந்து கல்லெறியும் நாயகனை, தரைத்தளத்திலிருந்து நாயகி நிமிர்ந்து பார்ப்பதை க்ளோஸ்-அப் காட்சியாக காமிரா விழுங்குகிறது. மணிரத்னத்தின் மற்ற படங்களில் வருவது போலவே, மும்பையிலிருந்து அடாலஜ் வரை துரத்தி வரும் நாயகன், சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் காதலைத் தெரிவிக்கிறான். அடலாஜ் வரை வந்துவிட்டு, ஒரே ஒரு காட்சி மட்டுமே வைத்த பி.சி.ஸ்ரீராம் மீது கோபம்தான் வருகிறது. அடாலஜை மட்டுமல்ல, ஒட்டுமொத்த குஜராத்தையும் பி.சி.ஸ்ரீராமின் காமிரா போல் ஒரேவிதமாகத்தான் பார்க்கிறார்கள். அப்படித்தான் பழக்கப்பட்டிருக்கிறோம்.

http://www.valamonline.in/2017/03/blog-post_44.html