Wednesday, December 26, 2018

நரசிம்மராவ் என்னும் பாதி சிங்கம் – புத்தக விமர்சனம் | ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

இந்தப் புத்தகத்தைக் கிட்டத்தட்ட ஓராண்டாக வைத்திருக்கிறேன். இருமுறை வாசிக்க ஆரம்பித்துச் சில பக்கங்களிலேயே நிறுத்திவிட்டேன். முக்கியமான காரணம், பொதுவாக வாழ்க்கை வரலாறுகள் தரும் இனம் புரியாச் சலிப்பு மற்றும் வறண்ட எழுத்து. அடுத்து, புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை தரும் மலைப்பு. அதோடு, மொழிமாற்ற புத்தகங்களின் மீதான அவநம்பிக்கை.

ஆனால், இந்தப் புத்தகத்தை நான் வாங்கியதே, நான் கண்ட, எனக்குத்தெரிந்த, நான் புரிந்து வைத்திருக்கும் நரசிம்மராவுக்கும், ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட நரசிம்மராவுக்குமான இடைவெளியைத் தெரிந்துகொள்ளவே. அந்த வகையில் வாசித்து முடிக்கையில் இந்தப் புத்தகம் என் எதிர்பார்ப்பை நிறைவேற்றியிருந்தது.


நரசிம்மராவின் இறுதிச்சடங்கிலிருந்து புத்தகம் துவங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் கோர முகத்தையும், நேருவின் இன்றைய பரம்பரையின் கேவலமான முகத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரின், இந்திய முன்னாள் பிரதமரின் சடலத்திற்கு நேரும் அவமானம். டெல்லியில் இறுதிச்சடங்கு செய்யக்கூடாது என சோனியாவின் கண்ணசைவுக்கு இணங்கச் சொல்லப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அஞ்சலிக்குக்கூட அவரது பூத உடலை வைக்க விடாமல், ஹைதராபாத்திற்குத் துரத்திய செயல், இந்திய அரசியலில் மிகக் கேவலமான பக்கங்கள். அதைவிடக் கொடுமையாக, நரசிம்மராவ் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னரே, அவர் இறந்தால் எங்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதாக உத்தேசம் எனக் கேட்கும் அளவிற்கு, மனிதாபிமானம் அற்ற, சீழ்பிடித்த மனநிலையில் சோனியாவும் அவரது சகாக்களும் இருந்ததை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் நான் கல்லூரியில் இருந்தேன். அரசியலின் அரிச்சுவடியைத் தெரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தேன். விரும்பியோ விரும்பாமலோ, கர சேவை, பாபர் மசூதி (சில பத்திரிகைகளில் சர்ச்சைக்குரிய கட்டிடம்) பிரச்சினை, டெல்லி இமாம் புஹாரியின் சவடால்கள், நான் படித்த பல்கலையின் அருகிலிருந்த திண்டுக்கல்லில் நடந்த ஹிந்து முஸ்லீம் மோதல்கள், இந்தியா தங்கத்தை அடகு வைத்த செய்திகள், வாயே பேசாமல் ஒரு பிரதமர், நரசிம்மராவைக் குறித்த கேலிச்சித்திரங்கள் குறித்த செய்திகள் எல்லாம் கண்ணில் படும். ஆனால் இதில் நமக்கு என்ன இருக்கிறது என்ற மிஸ்டர் பொதுஜனமாகத்தான் இருந்தேன்.

ஹிந்து இயக்கங்கள் நடத்திய ஹிந்து விழிப்புணர்வு முகாம்களில் கலந்துகொண்ட காலங்களில் நரசிம்மராவின் திறந்த பொருளாதாரம் கிழக்கிந்திய வாணிப கம்பெனி நம்மை அடிமையாக்கியதைப்போல மீண்டும் நம்மை அடிமையாக்கிவிடும் என ஒரு சொற்பொழிவாளர் விளக்கியதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவை அர்த்தமற்ற பயங்கள் எனப் புரிய வாஜ்பாய் அவர்களின் ஆட்சி வரவேண்டியிருந்தது. குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியிருந்தது. பின்னர்தான் நரசிம்மராவின் முக்கியத்துவம் புரியத் தொடங்கியது.

இடதுசாரிகள் நாட்டில் எந்த வித நல்ல மாற்றத்தையும் நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருந்த காலத்தில் நரசிம்மராவின் பொருளாதாரச் சீர்திருத்த சாதனைகள் எல்லாம் மலைக்க வைப்பவை.

வாயைத்திறந்து பேசுங்க என அப்போதைய எதிர்க்கட்சிகளும், சில ஆளும்கட்சி உறுப்பினர்களும் கதறியிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால், வாயைத்திறந்து பேசிக்கொண்டிருந்தால் பதில் மட்டுமே சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை நரசிம்மராவ் உணர்ந்திருந்தார்.

நரசிம்மராவ் தன் அரசியல் வாழ்க்கையில் சிங்கம், நரி மற்றும் எலியாக இருந்திருக்கிறார் என்பதையும், எந்தெந்தச் சூழலில் எந்தெந்த அவதாரம் எடுத்தார் என்பதையும் மிக விரிவாய்ப் பேசுகிறது இந்நூல். கிட்டதட்ட அரசியல் சாணக்கியராய் நரசிம்மராவ் இருந்தார் என வெற்றுப்புகழாரமாய் இன்றி அவரது சாணக்கியத்தனங்களை நிகழ்வுகள் வாரியாய்ப் பட்டியலிடுகிறது இந்நூல்.

ஜெனிவாவில் பாக்கிஸ்தான் இந்தியாவிற்கு எதிராய் காஷ்மீர் குறித்துக் கொண்டு வரவிருந்த தீர்மானத்திற்குப் பதில் சொல்ல எதிர்க்கட்சியைச் சேர்ந்த அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களை அனுப்பும் அளவு எதிர்க்கட்சியினருடன் நட்புறவு கொண்டிருந்தார், அந்தச் சூழலில் வாஜ்பாய் அவர்களை அனுப்பியது ஒரு ராஜதந்திரம். இப்படியான ஒரு பார்வை, நரசிம்மராவின் அமைச்சரவைத் தேர்வுகளிலும், அரசாங்க அதிகாரிகளின் தேர்விலும் காணக் கிடைக்கிறது.

நம் அனைவருக்கும், குறிப்பாய்ப் பெருவாரியான இந்தியர்களுக்கு பிரதமர் நரசிம்மராவைத்தவிர வேறு எந்த நரசிம்மராவ் குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

உண்மையான நரசிம்மராவ் ஒரு மிகப்பெரும் நிலச்சுவான் தாரர். சிறுவயதிலேயே உருது மற்றும் பாரசீக மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நில உச்ச வரம்புச் சட்டம் வந்ததும் அதை உண்மையாய் நடத்திக்காட்டிய வல்லமையாளர். தன்னிடம் இருந்த 1200 ஏக்கரில் (தத்துப்போனதால் கிடைத்த பெரிய நிலப்பங்கையும் சேர்த்து) அரசு அனுமதித்ததுபோக மீதமுள்ளதை அரசிடமே ஒப்படைக்கும் அளவு நேர்மையாளராக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார். நில உச்சவரம்புச் சட்டத்தின் ஓட்டைகளை அனுபவத்தில் கண்டறிந்து அவற்றை அடைத்து உண்மையான நிலச் சீர்திருத்தத்தை ஆந்திராவில் மேற்கொண்டிருக்கிறார்.

ஆந்திராவின் முதலமைச்சராய் இரு ஆண்டுகள் இருந்தவர். மேலும் பலகாலம் ஆந்திராவில் காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராய் இருந்தவர். உண்மையைச் சொன்னால் பிரதமர் ஆகும்வரை நரசிம்மராவ் என ஒருவர் இருப்பதையே நான் அறிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகம் நரசிம்மராவ் குறித்த மிகப்பெரிய திறப்பைக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அதைவிட முக்கியமாய் இந்தியாவின் மோசமான காலகட்டத்தில் ஆட்சியில் அமர்ந்து, கிடைத்த ஐந்து ஆண்டுகளில் அவர் செய்திருக்கும் சாதனைகள் மலைக்க வைக்கின்றன. பொருளாதாரம், தீவிரவாதம் ஒழிப்பு (பஞ்சாப், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள்), அறிவியல், கல்வி மேம்பாடு, நவோதயா பள்ளிகள் துவக்கம், தொழில்நுட்ப வளர்ச்சியில் அக்கறை, அணுகுண்டு தயாரிக்க ஊக்கம், மன்மோகன் சிங் என்ற பொருளாதாரப் புலியை நமக்களித்தது எனப் பல நல்ல விஷயங்கள் அவர் காலத்தில் நடந்தன. ஆனால் பொருளாதாரப் புலியான மன்மோகன் பிரதமரானதும் என்ன ஆனார் என்பதையும் பார்த்தோம்.

ஒரு சிறுபான்மை அரசு முழுமையாக ஐந்தாண்டுகள் தாக்குப் பிடித்தது மிகப்பெரிய சாதனை. சொந்தக் கட்சியினரே வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவரை எதிர்த்தார்கள். அரசியல் எதிரிகள்/ எதிர்க்கட்சிகள் இன்னொரு புறம். இதற்கு மத்தியில் அடிக்கடி நரசிம்மராவ் ஆட்சிமீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் வென்று, ஆட்சியையும் தக்க வைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தையும் உயர்த்தி, இந்தியா இன்றைக்குப் பொருளாதாரத்திலும், அறிவியலிலும், தொலைத்தொடர்பிலும் நாலுகால் பாய்ச்சலில் ஓடுவதற்கான முதல் அடியை எடுத்துக் கொடுத்தவர் நரசிம்மராவ்.

கிட்டத்தட்ட அந்தரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சைக்கிளும் ஒட்டிக்கொண்டு, இரண்டு கையிலும் தட்டை வைத்துக்கொண்டு இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போய்வரும் சர்க்கஸ் வித்தைக்காரனின் நிலையே நரசிம்மராவுக்கு இருந்தது. ஆனால், அவரது நிதானம், அமுக்குளித்தனம், எதிரிகளைத் தனக்கு சாதகமாய், சூழலைத் தனக்கு சாதகமாய் மாற்றிக்கொள்ளும் திறன், சில அநியாய சமரசங்கள் என ஐந்து ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்திருக்கிறார்.

நரசிம்மராவுக்கு மனைவியுடன், இணைவிக்கு இணையான துணையும் உண்டு என்பது கூடுதல் தகவல். என்.டி.ராமாராவ் போல அந்திமக் காலத்தில் இல்லாமல் அவரது அரசியல் ஆரம்பக் காலத்திலிருந்தே இந்த நெருங்கிய நண்பி இருந்திருக்கிறார்.

சந்திராசாமியுடனான நரசிம்மராவின் உறவு நமக்கே தெரிந்த ஒன்றுதான். ஆனால், நரசிம்மராவ் பிரதமராவதற்கு முன்பு குற்றாலத்தில் இருக்கும் ஒரு மடத்திற்குத் தலைமை தாங்க ஒப்புதல் அளித்து, பொறுப்பை ஏற்கும் தருணத்தில் பிரதமர் ஆனார் என்பது நமக்கெல்லாம் புதிய தகவல்.

பல மொழிகளைச் சரளமாக பேசக்கூடியவர் என்பது மட்டுமே சாதாரண இந்தியனுக்கு நரசிம்மராவின் பெருமைகளில் ஒன்றாய்த் தெரிந்திருக்கிறது. ஆனால், நரசிம்மராவ் எழுத்தாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், கம்ப்யுட்டரில் நிரல் எழுதக்கூடிய அளவு கணினி அறிவைக்கொண்டவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்புத்தகம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

நாட்டின் எந்தப் பகுதியிலிருந்து மக்களவைக்குப் போட்டியிடச் சொன்னாலும் அவரால் எளிதாய்ப் போட்டியிட முடிந்ததற்குக் காரணம், அவரது அசாத்திய மொழிப்புலமை. மன்மோகன் சிங் போலன்றி, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பியாகவே நாடாளுமன்றத்திற்குள் நுழைந்திருக்கிறார். பிரதமரான தொடக்கத்தில் தடுமாறித்தான் போயிருக்கிறார் என்பதையும், தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இஸ்ரேல் உடனான ராஜாங்க உறவுகளை முழுவதுமாக ஆரம்பிக்கும் முன்னர், யாசர் அராபத்தை இந்திய விருந்தாளியாக அழைத்ததும், யாசர் அராஃபத்தையே இந்தியா யாருடன் ராஜாங்க உறவு வைத்துக்கொள்வது என்பதெல்லாம் இந்திய இறையாண்மைக்குட்பட்ட விஷயம் எனச் சொல்ல வைத்ததிலும் இருக்கிறது அவரது சாணக்கியத்தனம்.

அரபுநாடுகளுடனான உறவையும் கெடுத்துக்கொள்ளாமல் வாஷிங்டனுக்கு செல்லும் வழியான இஸ்ரேலின் டெல் அவிவ் உடனும் நட்பு வைத்துக்கொள்ள வழிவகை செய்த பெருமை நரசிம்மராவையே சாரும். மேலும், இஸ்ரேலுடன் நட்பு வைத்தால் இந்திய முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்ற சிந்தனை காங்கிரஸுக்கு இருந்தது எனப் படிக்கையில், காங்கிரஸ் வாக்கு வங்கிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை நாட்டின் வெளியுறவுக்குக் கொடுக்கவில்லை என்பதை மீண்டும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்திய முஸ்லிம்களை இத்தனை மதவெறியர்களாகத்தான் காங்கிரஸ் கருதி வந்திருக்கிறது. இன்றைக்கு இஸ்ரேலும் இந்தியாவும் இவ்வளவு நடப்புணர்வுடன் இருக்க முடிவதற்கு ஒரே காரணம் நரசிம்மராவினுடைய உழைப்பு.

நரசிம்மராவ் அவர்களின் பலமாக இந்தப் புத்தகம் முன் வைப்பது அவரது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும் தன்மையும், உள்ளொடுங்கிய தன்மையும், (இண்ட்ரோவேர்ட்), தாமரை இலை தண்ணீர் போலப் பதவியை நினைத்ததுமே. அவரது அரசியல் காலகட்டத்தில் பலமுறை அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளார். ஆனால், அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதாமல், ஒதுக்கப்பட்ட காலங்களில் புத்தகம் எழுதும் மனநிலைக்குத் தன்னைக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது அவரால். அவரது மகள் சொன்னதாக ஒரு வரி வருகிறது, அவர் ஸ்தித ப்ரக்ஞனாகவே வாழ்ந்தார் என. அதுவே உண்மையாக இருக்கவேண்டும். இன்று நாம் பார்க்கும் அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் போட்டியிட இடம் தரப்படவில்லையெனில் எந்தக் கூச்சமும் இன்றி அடுத்த கட்சிக்கு தாவ அஞ்சுவதில்லை. ஆனால் நரசிம்மராவ் காங்கிரஸ்காரராகவே அரசியலை ஆரம்பித்து காங்கிரஸ்காரராகவே வாழ்ந்து மறைந்தவர்.

குடும்பத்துடன் அவருக்கான ஒட்டுதல் குறைவாகவே இருந்திருக்கிறது. அவரது மூத்த மகனால் பகிரங்கமாகவே விமர்சிக்கப்பட்டிருக்கிறார். அரசியலில் குடும்பத்தைச் சேர்க்காமல் இருந்திருக்கிறார் என்பதும் அவரது புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்றாகக் கொள்ளலாம்.

அரசியலில் அவரைத் துரத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு. ஆனால், அன்றைய அரசியல் சூழலில் நரசிம்மராவுக்குப் பதவியில் இருப்பதைவிடத் தான் முன்னெடுத்த சீர்திருத்தங்களையும், நாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களையும் தொய்வின்றி நடத்தஅதிகாரத்தில் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தே இப்படிப்பட்ட விஷயங்களுக்குத் தலை சாய்த்திருப்பார் என்றே நான் நம்ப விழைகிறேன். ஆனாலும் இந்திய அரசியல் வரலாற்றில் இது மோசமான ஒரு விஷயம் என்பதையும், அதில் நரசிம்ம ராவுக்குப் பங்குண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

சோனியாவை அரசியலில் ஒதுக்கி வைத்த சாமர்த்தியசாலி என்றெல்லாம் மிகையாகப் புகழப்படுவதும் நரசிம்மராவுக்கு வழக்கமாக நடக்கும் ஆதாரமற்ற புகழுரை. ஆனால், உண்மையில் தலைமை சொன்னால் பதவியைத் தூக்கியெறிய அவர் தயாராகவே இருந்தார். காங்கிரசில் உட்கட்சி ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வந்ததில் நரசிம்மராவுக்குப் பங்கிருப்பினும், அது அவரது அரசியல் எதிரிகளுக்குப் பலனளித்ததும், அந்த ஜனநாயகத்தை ஒதுக்கி வைக்கும் சின்ன புத்தியாளராகவும் நரசிம்மராவ் இருந்திருக்கிறார் என்பதையும் புத்தகம் குறிப்பிடத் தவறவில்லை.

நரசிம்மராவின் ஏற்ற இறக்கங்களையும், குடும்ப வாழ்க்கையையும், முடிந்தவரை உண்மைக்கு மிக அருகில் நின்று சொல்ல முயன்றிருக்கிறது இந்தப் புத்தகம். அதற்காக ஏகப்படட உழைப்பைக் கொட்டியிருக்கிறார் புத்தக ஆசிரியர் வினய் சீதாபதி.

ஜெ.ராம்கியின் மொழிமாற்றம் மிக அருமை. தமிழில் நேரடியாக எழுதப்பட்ட புத்தகத்திற்கு சற்றும் குறைவில்லாத மொழியாக்கம். மொழியாக்கத்தில் பிடிவாதம் ஏதும் வைத்துக்கொள்ளாமல் விஷயத்தைச் சிதைக்காமல், வாசிப்பவனுக்கு எளிதாய் இருக்க மெனக்கெட்டிருக்கிறார். அதுவே இந்த மொழிமாற்றப் புத்தகத்தின் பலமாய் நான் கருதுகிறேன். வறண்ட நடையின்றி எழுதப்பட்டிருந்தால் ஒழிய இத்தனை பக்கங்களைத் தாண்டுதல் என்பது எனக்கு இயலாத காரியம். இலகுவாய் வாசிக்கும்படிக்குச் சிறப்பாய் மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார் ராம்கி.

நரசிம்ம ராவ் - இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி.
மூலம் - வினய் சீதாபதி
தமிழில் - ஜெ. ராம்கி
கிழக்கு பதிப்பகம்.
விலை - 400 ரூபாய்