2003 - முகங்கள்
இந்தியா - ஒரு பக்கம் வெள்ளம், இனனொரு பக்கம் கடுமையான வறட்சி. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு இடத்தில் தேர்தல், கூட்டணி மாற்றங்கள், வாஜ்பாய்க்கும் சந்திர பாபு நாயுடுக்கும் உடம்பு சுகவீனமென்றால் ஏறி இறங்கும் பங்குச் சந்தையையும், சர்ச்சையோடு விருது வாங்கும் கலைஞர்களையும், தில்லு முல்லு வேலைகளிலேயே பொழுதைக் கழிக்கும் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளோடு ஏமாற்றங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து கொண்டு அடுத்ததொரு சிறிய வெற்றியை நோக்கி நடைபோடுகிறது இந்த தேசம். போன வருஷம் வெறுப்பை கக்கும் பிளவுபட்ட பூமியாக இருந்த தேசம் இன்று ஒரு ஆராக்கியமான சுழலுக்கு வர ஆரம்பித்து இருப்பது உண்மை. மக்களின் அதிருப்தி ஒரே அலைவரிசையில் இருப்பதையும் புரிந்த கொள்ள முடிந்த வருஷம் இது.
சதாம் - ஒரு சர்வாதிகாரி சத்தம் போடாமல் சரணடையும் காட்சி அந்த பதுங்கு குழிக்கு கூட ஆச்சரியத்தை தந்திருக்கும். தேடிக் கண்டுபிடித்த அமெரிக்க வீரர்களை இவ்வாண்டின் சிறந்த மனிதர்களாக பீற்றிக்கொள்ளும் அமெரிக்காவுக்கு பின்லேடனை பற்றி தெரிந்திருந்தாலும் வீரப்பனை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இனியாவது சதாம் மறைத்து வைத்திருக்கும் (உண்மையிலேயே அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்) ஆயுதங்களை தேட ஆரம்பித்தால் சரி. எது எப்படியிருந்தாலும் சதாமின் கதை இனி 'கதம்...கதம்' தான்
ஈரான் - எதிரி நாட்டுக்கு கூட நேரக்கூடாத பெரிய சோகம் நிகழ்ந்த இடம். ஆப்கானிதானில் குண்டுகள் பறந்த போதும், ஈராக்கில் புரட்சி வெடித்தபோதும் அமைதி காத்த தேசம் இன்று நிலநடுக்க கோரத்தால் உலகத்தின் கவனத்தை திருப்பியிருக்கிறது. இந்த மெகா குஜராத் கோரத்தை எல்லா இந்தியனாலும் உணரமுடியும்.
ரஜினி - அடுத்த படத்தை பத்தி பேசுவார்னு நினைச்சு நகத்தை கடிச்சுக்கிட்டு உட்கார்த்தா கண்ணில் படுறவங்களையெல்லாம் பாராட்டி தள்ளி பல பேரை பெரிய ஆளாக்கியவர். படமே பண்ணலைன்னாலும் மாஸ் குறையவே குறையாதுங்கிறதை 'சாமி' விழாவை நேர்ல பார்த்தவங்களுக்குதான் தெரியும். எப்படியோ இந்த வருஷமும் தலைவரை நேர்ல பார்த்தது என்னைப் பொறுத்த வரைக்கும் பெரிய கின்னஸ் ரிக்கார்டுதான்
சந்திரபாபு நாயுடு - பக்கத்து மாநிலத்தின் முதல்வரா இருந்தாலும் திருப்பதி குண்டுவெடிப்பு பார்த்து மனசு பதறிப்போனதென்னவோ நிஜம். முன்கூட்டியே சட்டசபையை கலைத்த ஆர்வ கோளாறு கழுத்தை நெரிக்காமலிருந்தால் சரி. மத்த மாநிலங்கள் மாதிரி ஆளுங்கட்சிக்கு மக்கள் ஆப்பு வைக்க நினைச்சா ஆந்திராவை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது!
கருணாநிதி - ஒரு வருஷத்துக்கும் மேலாக கூட்டணியை முறித்துக்கொள்ள எவ்வளவோ வாய்ப்பு கிடைத்தும் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கிற மாதிரி சம்பந்தமே இல்லாத நேரத்தில் ஆபரேஷனை நடத்தி முடித்தது சரியா தப்பாங்கிறது தேர்தல் நேரத்தில்தான் தெரியும். ஜெயமோகனுக்கு பதிலடி கொடுத்தே ஆகணும்னு கலைஞருக்கு ஐடியா கொடுத்த அந்த அதிபுத்திசாலியை (கலைஞரின் நிஜமான எதிரியை) பார்த்தே ஆகணும்னு எனக்கொரு ஆசை!
ஜெயலலிதா - அதீத தன்னம்பிக்கைக்கு தான் மிகப்பெரிய உதாரணம்னு நிருபிச்சுட்டு வருபவர். மழை நீர் சேகரிப்பு திட்டம் ஜெவுக்கு ஜே போட வைத்தது. போன தடவை கோர்ட்டை பத்தி கவலையே படாதவர், இந்த தடவை கருப்புச்சட்டைகாரர்களுக்கெல்லாம் (வீரமணி கோஷ்டிகளுக்கும்தான்!) சரியான வேலை கொடுத்திட்டிருக்கார். இன்னும் இரண்டு வருஷம் போயகணுமேன்னு எல்லோரையும் அங்கலாய்க்க வைச்சுட்டிருப்பவர். 'இந்தியாவுக்கு வழிகாட்டு தாயே'ன்னு சொல்ற அதிமுக போஸ்டர்களை பார்த்து அதிகமாக மிரளுபவர்கள் மத்திய அரசு ஊழியர்கள்தானாம்!
ஞாநி - நடுவுல நின்னு போன 'தீம்தரிகிட'வை திரும்பவும் ஆரம்பித்து எல்லாவிதமான விமர்சனங்களுக்கும் இடமளித்தவர். கருணாநிதி-ஜெயமோகன் சர்ச்சையில் இலக்கிய உலகமே இரண்டாக பிளவுபட்டு நின்றபோது உண்மையோடு கூட்டணி போட்டு முன்றாவது அணி அமைத்தவர். கரடுமுடான குரலுக்கு சொந்தக்கார இந்த 'ஞானி'க்கு எல்லா பிரச்சினைகளிலும் ஒரு தெளிவான பார்வை இருப்பது ஆச்சரியமான விஷயம்.
மாலன் - இணையத்தமிழர்கள் ஓட்டுப்போட்டால் பெரும்பான்மையான ஆதரவில் ஜெயிக்க வாய்ப்பிருக்கும் ஒரே தமிழர் இவராகத்தான் இருக்கு முடியும். வியாபார நோக்கமில்லாத திசைகளில் இவரது இலக்கிய ஆர்வம், வலைப்பூக்களுக்கெல்லாம் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. பாரதிக்கு மின் மண்டபம் வைத்து பல
பேரை பாரதி தாசன்களாக்குவார் என்று நம்புவோமாக!
டிராவிட் - இந்தியாவின் (ஒரே?!) பெருஞ்சுவர். ஒன் டே ஆட்டமோ, டெஸ்ட் ஆட்டமோ கடைசி வரைக்கும் போராடும் குணத்தால் இந்த ஆண்டு கிரிக்கெட்டின் நம்பர் ஒன் இடத்துக்கு வந்திருக்கிறார். கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணணுக்கு சுக்கிர தசையாம். தஞ்சை மண்ணோடு சம்பந்தப்பட்டவர்ங்கிற விஷயம் வேறு கிர்ரடிக்குது.
சுஜாதா - 'பாய்ஸ்' பத்தி எல்லோரும் 'வாய்ஸ்' கொடுத்தாலும் எழுத்தாளர் சுஜாதாவின் வசீகரம் கொடி கட்டி பறந்தது இந்த வருஷம்தான். ஒரே நேரத்தில் ரஜினி படத்திலும் கமல் படத்திலும் நடிக்கிற மாதிரி குமுதத்திலும் ஆனந்த விகடனிலும் இவரது கைவண்ணம் இன்னமும் தொடர்கிறது. 'சீரங்கத்து தேவதைகள்' ஒவ்வொரு வாரமும் பல பேரை சீரங்கத்துக்கு அனுப்பி வைத்து அமர்க்களப்படுத்தியது. பதினைந்து வருஷத்துக்கு பிறகு திரும்பவும் ஆரம்பித்த 'ஏன் எதற்கு எப்படி'யில் கஷ்டப்பட்டு 3 கேள்விக்கு பதில் வாங்கியது எனக்கு பெருமையான விஷயம்.
எஸ். ராமகிருஷ்ணன் - 'பாபா'வுக்கு பின்புலமாய் இருந்து இலக்கிய வட்டத்தில் வாங்கி கட்டிக் கொண்டாலும் 'உப பாண்டவம்' முலம் உச்சிக்குப் போனவர். ஆனந்த விகடனை வாங்கியதும் நான் புரட்டுவது இவரின் 'துணையெழுத்து'க்குத்தான். ஒவ்வொரு வாரமும் இவரின் மனசை பிசைய வைக்கும் எழுத்துக்கு நான் அடிமை.
வலைப்பூக்கள்- வெறுமனே தமிழ் வலைப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்த தமிழ் ஆர்வலர்களுக்கு சரியான தீனி. நாமளும் எழுதித்தள்ளுவதற்கு இடம் இருக்கேன்னு எனக்கும் ஒரு சந்தோஷம். ஆனா, மேட்டர்தான் அப்பப்ப மாட்ட மாட்டேங்குதேன்னு ஒரு வருத்தம்.
வாஜ்பாய் - எம்.ஜி.ஆரை படுத்துக்கிட்டே ஜெயித்தவர்னு சொல்வாங்க. ஆனா நம்ம வாஜ்பாய் பறந்துக்கிட்டே ஜெயிச்சவர். மோடி ஸ்டைல் குஜராத் வெற்றிக்கு அப்புறம் பிஜேபியை காவி கோஷ்டிகளிடமிருந்து காப்பாத்துவது என்பது சாதாரண விஷயமல்லதான். விதவிதமான் பிரச்சினைகளுடன் கலப்பட கூட்டணியாக இருக்கும் கட்சிகளை இந்த வருஷமும் வெற்றிகரமாக சமாளித்த முதியவர். இந்தியாவின் நம்பர் ஒன் அரசியல் தலைவர் அடுத்த வருஷமும் அசத்துவாரா
பாலா - சத்தம் போடாம வணிக ரீதியா ஒரு கலைப்படம் தரமுடியும்னு நிருபிச்சவர். இனிமே கதைதான் எல்லாம், Heroworship வேலைக்கு ஆவாதுன்னு வாய் கிழிய கத்திட்டிருக்காம அதே பிரபல கதாநாயகர்களை வெச்சு டைரக்டர் படம் தந்து தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் முகமானவர். கொஞ்சம் மனரீதியிலான மேட்டர்களை குறைச்சுக்கிட்டா நல்லாயிருக்கும்!
சூர்யா - ஆளாளுக்கு super star சர்ச்சையில் இருந்தாலும் தனி பாதையில் வெரைட்டி ரோல்களில் வெளுத்து வாங்கியவர். 'சாமி' விழாவில் தன்னாலும் பிரமாதமாக பேசமுடியும்னு அப்ளாஸ் வாங்கிக்கொண்டவர். எப்போ இல்லற ஜோதியில் ஐக்கியமாவாரோ?!
வடிவேலு - 'வின்னர்', 'காதல் கிறுக்கன்'னு இந்த வருஷம் டபுள் செஞ்சுரி அடித்து விவேகமானவர்களையெல்லாம் ஓரங்கட்டியவர்.
யாருக்கும் அட்வைஸ் பண்ணாத ஸ்டைல் இப்போதைக்கு எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. ஆனா இன்னும் நிலைச்சு இருக்க பண்ண வேண்டியது நிறைய இருக்கு
ஊர்வசி - பொம்பளை யூகி சேதுன்னு சொன்னாலே போதும். ராத்திரி பத்து மணிக்கு விதவிதமான கெட்டப்பில் வந்து பயமுறுத்தினாலும் தினமும் புன்னகைக்க வைக்கறது பெரிய விஷயம்தான். மனோரமா, கோவை சரளாவின் இடைவெளியை சினிமாவில் இவரால் நிரப்ப முடியும்னு எனக்கொரு நம்பிக்கை.
மாநில அரசு ஊழியர் - இவ்வாண்டின் அப்பாவி நம்பர் 1 நிச்சயம் இவராகத்தான் இருக்க முடியும். பிள்ளையார் பிடிக்கப்போய் அது பேயாக முடிந்த சோகக்கதையை இந்தியாவுக்கே தெரியும். வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக இவர்களது கைவண்ணம் இருக்கும்னு எல்லோரும் சொல்றாங்க. ஆனா, எனக்கு நம்பிக்கையில்லை. ஏன்னா, தமிழ் நாட்டு மக்களை பத்தி எனக்கு நல்லா தெரியும்!