Friday, January 09, 2004

ஊருக்குப் போனால் கோயில் குளம்னு எங்காவது போகத் தோணும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரம் "கொ..கொ..கொண்டாட்டம்" பார்த்துவிட்டு ஜில் தண்ணியில் ஜம்னு ஒரு குளியலை போட்டுட்டு டு-வீலரை எடுத்துக்கிட்டு போனா... திரும்பி வர நைட் ஒன்பது ஆகிவிடும். ஆனா இந்த தடவை நண்பர்கள் குழுவை திரட்டி கிளம்புவதற்கு ரொம்பதான் நேரமாயிடுச்சு!

எப்போதும் போல இந்த முறை நேராக திருபுவனம் போய் சரபேஸ்வரை தரிசித்துவிட்டு வெளியே வரும்போதுதான் நண்பர் சொன்னார். "ஏன் நாம ஒப்பிலியப்பன் கோவிலுக்கும் திருநாகேஸ்வரத்துக்கும் போகக்கூடாது ?" நல்ல ஜடியாதான். கும்பகோணம் போகாமலே ஒரு குறுக்கு வழியில் பத்தே நிமிஷத்தில் திருநாகேஸ்வரம்!

திருநாகேஸ்வரத்தை பத்தி சொல்லவே வேணாம். அசுரத் தலையும் நாக உடலும் கொண்ட நவக்கிரக நாயகரான ராகு சிவனை பூஜித்த தலமாம் இது. எல்லா சிவன் கோயிலுக்கும் உரிய லட்சணத்துடன் கூடவே ஒரு கூடுதல் இணைப்பு மாதிரி ராகுவின் சன்னதி. ராகு கால நேரத்தில் இந்த ஏரியா பக்கமே தலைகாட்ட முடியாத கூட்டமிருக்குமாம். சனீஸ்வரருக்கு அடுத்தபடியாக நம்கூட ரொம்ப காலம் இருப்பவர் ராகுதானாம். பிரபலமான ஷேத்திரமாக இருந்தாலும் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் பிரமாதம்னு மெச்சிக்கிற மாதிரி இல்லை. தஞ்சாவூர் கோயில்களுக்கே உரிய மங்கலான வெளிச்சம் கோயிலின் பல பகுதிகளில் இருந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது. முலவர் நாகநாத சுவாமியை வலம் வந்து விட்டு வெளியே வந்தால் தனியாக அம்மன் சன்னதி. கிரிகுஜாம்பிகை அம்பாள் டிரிபிள் ரோலில் லட்சுமி, சரஸ்வதி, பார்வதி என் முன்று வடிவமாகவும் காட்சி தருகிறார்.

இங்கிருந்து கூப்பிடும் தூரத்தில் இருப்பவர்தான் உப்பிலியப்பன்...ஸாரி... ஒப்பிலியப்பன்! நாங்கள் போனது வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் என்பதால் கூட்டத்துக்கும் குறைவில்லை. முர்த்தி சின்னதா இருந்தாலும் கீர்த்தி பெரிசுன்னு சொல்ற மாதிரி சின்ன கோவிலாக இருந்தாலும் பெருமாள் ஏக பிரபலம். சின்ன பாலாஜின்னு செல்லமா கூப்பிட்டுக்கலாம். திருப்பதி போயிட்டு இந்த சின்ன திருப்பதிக்கும் ஒரு விசிட் அடிச்சாத்தான் புண்ணியம்னு யாரும் இன்னுமா Rules frame பண்ணாம இருக்காங்க?!

எட்டடி உயரத்தில் ஒப்பிலியப்பனின் அழகே தனிதான். அப்படியே திருவல்லிக்கேணியில் உறையும் பார்த்தசாரதிக்கு அண்ணன் மாதிரி ஒரு தேஜஸ். அப்படியே வலம் வரும்போது கைநிறைய புளியோதரையை வாங்கிட்டு நடந்தால் சுவரெங்கிலும் ஒப்பிலியப்பனின் புராணம் சித்திரங்களாக வரைந்து தள்ளியிருந்தார்கள். (புளியோதரையில் உப்பில்லேன்னாலும் செம டேஸ்ட்!)

வெளியில் வந்ததும் தான் சொன்னார்கள் இன்னொரு முக்கியமான தலம் இதே ஏரியாவில்தான் இருக்கு என்பதை. அது ஐவர்வாடி என்னுமிடத்தில் பிரத்தியங்கரா தேவி கோவில். அங்கிருந்து ஒரு பத்து நிமிஷம் ஆக்ஸிலேட்ட முடுக்கினால் ஊரை விட்டு ஓதுங்கி அழகான, எளிமையான ஹைடெக்கான கோயில். வாசலிலேயே சிவன் தவமிருக்கும் மெகா சிலை. நாங்கள் போன நேரத்தில் (எட்டு மணி) கோயிலை சாத்திக்கொண்டிருந்தார்கள். மின்னல் வேகத்தில் அம்மனை வலம் வந்தவிட்டு திரும்போதுதான் அர்ச்சகர் ஒரு முக்கியமான information அள்ளி விட்டுக்கொண்டிருந்தார். இங்கே வந்தபின்புதான் 'அம்மா'வுக்கு அரசியலில் சுக்கிர தசை ஆரம்பிச்சுதாம். அமாவாசை அன்னிக்கு கோயிலையே நெருங்க முடியாத அளவுக்கு கூட்டமிருக்குமாம். நாங்க போன நேரத்திலேயே கண்ணாடியை ஏற்றிவிட்டபடி கார்கள் பறந்து கொண்டிருந்தன. எந்த அரசியல் விஜபியோ... என்ன வேண்டுதலோ?!

திரும்பி வரும்போது பல விஷயங்களை பற்றி யோசித்துக்கொண்டே தான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். ரெண்டே கி.மீ இடைவெளியில் எப்படி இத்தனை கோயில்கள்! சின்ன சின்ன, எளிமையான கோயில்களே இவ்வளவு பிரபலமாக இருக்கும்போது கண்ணுக்கு தெரியாத கலை அம்சங்களையும் அதிசியங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு இதே ஏரியாவில் எத்தனை பெரிய கோயில்கள் இருக்கின்றனவோ? இந்த ஏரியாவில் பொறந்து வளர்ந்த நமக்கே நிறைய விஷயம் தெரியலையே... மத்தவங்களுக்கு எப்படி இந்த கோயில்களை பத்தி தெரியப்போவது....

கூட வந்த நண்பரிடம் என்னுடைய ஆச்சரியத்தை வெளிக்காட்டிய போது வந்த பதில்,

'ஏதோ வந்தோமோ பார்த்தோமோ சாமியை கூப்பிட்டுட்டு போனோமோன்னு இருக்கணும். இல்லாட்டி நமக்கும் காவி சுத்தி கையில் ஒரு சூலாயுதத்தையும் கொடுத்துட்டு ஆர்.எஸ்.எஸ் ஆளுங்கன்னு சொல்லிடுவானுங்க!'

No comments:

Post a Comment