Friday, January 16, 2004

கண்டேன் ரஜினியை!

இரண்டு நாட்களாக தேவதைககள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.

வள்ளி படம் பார்த்துவிட்டு நான் எழுதிய கருத்தை பாராட்டி மனிதன் பட போட்டோவில் கையெழுத்துடன் வந்த பதில் கடிதம்தான் பத்தாவது பரீட்சையில் வகுப்பில் முதலாவதாக வந்த சந்தோஷத்தை விட அதிகமாக நான் சந்தோஷப்பட்ட நேரங்கள்.

95ன் இறுதியில் தியானம் பற்றி நான் கேட்டிருந்த கேள்விக்கு தூர்தர்ஷனில் ரஜினி சொன்ன பதிலால் அன்றிரவு என் தூக்கம் போனது. சந்ததோஷத்தில் நான் பேச முடியாமல் திணறியதை இன்றும் என் நண்பர்கள் சொல்லி சிரிப்பார்கள். அடுத்த நாள் காலேஜில் புரஃபோசர் என்னை தட்டிக் கொடுத்த போது காலேஜூக்கே ஹிரோ ஆன மாதிரி நினைப்பு. அன்னிக்க ஆரம்பிச்ச கிறுக்கல்கள்தான் இன்னிக்கும் தொடருது....

இதே போகி தினம், 2001. படையப்பாவுக்காக விருதை வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த ரஜினியை கலைஞருடன் சேர்த்து 4 அடி தூரத்தில் முதல் முதலாக நான் பார்த்த பிரமிப்பை ஊர் வந்து சேரும் வரை மறக்க முடியவில்லை. அதற்கப்புறம் எவ்வளவோ விழாக்கள், எவ்வளவோ சந்தர்ப்பங்கள், தலைவரின் தரிசனம் தாராளமாய் கிடைத்தது.

அதே போகி தினம், 2004. இம்முறை காந்தப்புயலின் உரசலில் சந்தோஷத்தின் உச்சிக்கே போனேன். ரொம்பவும் நெருக்கமாக பார்த்த பிரமிப்பில் நாக்கு பின்னிக் கொள்ள பேச்சு வரவில்லை. வெளியில் வரும்போது முதல் ஆளாய் கைகொடுத்துவிட்டு Happy pongal sir என்ற சுருதி குறைந்த குரலுக்கு 'ஹேப்பி பொங்கல்...எல்லார்க்கும்...எல்லார்க்கும்' தனக்கே உரிய ஸ்டைலில் மின்னல் வேகத்தில் ஒரு பதில். ஏற்கனவே ரெடியாக எடுத்து வைத்திருந்த விசிடிங் கார்டை (இந்த நேரம் பார்த்துதான் நம்ம கையில் ஒண்ணுமே இருக்காது) கொடுத்தவுடன் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டார். அலைமோதிய கூட்டமும் ஆளுக்கொரு பொருளை கொடுத்தது. கூட்ட நெரிசல் தங்கமுடியாமல் என்னை உரசியபோது மனசில் சந்தோஷ மத்தாப்புகள். டக்கென்று அவரின் இடது கையை பற்றிக் கொண்டேன். கூட வந்த செக்யூரிட்டி பிரிக்கும் வரை கையை அவரும் உதறவில்லை. நானும் விடவில்லை. மின்னல் போல எல்லாமே சில வினாடிகளில்...

அவர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்னைத் தவிர. எப்போதுமில்லாமல் கூட்ட நெரிசலை தவிர்க்க பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜந்து மணிக்கே அரங்கம் நிரம்பி வழிந்தது. இரண்டு மணி நேரமும் ரஜினியை நின்று கொண்டே ரசிப்பதற்காக எனது சீட்டையே தியாகம் செய்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு மனைவி மற்றும் மைத்துனர் சகிதம் உள்ளே நுழைந்தவர் பார்வையாளர்களுக்கு பொதுவாய் ஒரு கும்பிடு போட்டுவிட்டு இல. கணேசனுக்கு கை கொடுத்துவிட்டு அமைதியாக உட்கார்ந்து விட்டார். தமிழக அரசியலையே புரட்டி போட்ட கடந்த வருட சம்பவங்களோடு கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் குறை சொன்ன சோவின் பேச்சுக்கு எவ்வித ரியாக்ஷனும் காட்டாமல் அதே சமயத்தில் சோ
பாராட்டியபோதெல்லாம் மறக்காமல் ஆடியன்ஸ§ட்ன் சேர்ந்து கைதட்டினார். அருகிலிருந்த யாரிடமும் பேசாமல் நிகழ்ச்சியை கூர்ந்து கவனித்தவர்,ரொம்பும் ரிலாக்ஸாகத்தான் இருந்தார். மேக்கப்பில்லாத முகத்தில் மெல்லிய திருநீறு. டை அடித்த மீசையுடன் அதே பழுப்பு கலர் குர்தாவில் பூசினாற் போல தெரிந்தார்.

பாபாவில் நல்ல அரசியில்வாதியாக வந்து கிளைமாக்ஸில் இறந்து போகிறமாதிரி நடித்தவரை இந்த கூட்டத்திலும் பார்க்க முடிந்தது. போன வாரம் தி.நகரில் நடந்த தமிழ் இலக்கியம் 2004 விழாவுக்கும் வந்திருந்து ரொம்ப நேரம் எனக்கு முன்வரிசையில்தான் அமர்ந்திருந்தார். பெயர் சரிவர தெரியாமல் பேசுவதற்கு தயக்கமாக இருந்ததால் ஒரு புன்னகையுடன் வந்துவிட்டேன்.

நிகழ்ச்சியின் நடுவே பார்வையாளர்கள் பக்கத்திலிருந்து நல்ல பூஸ்ட்டில் இருந்த ஒரு ஆசாமி திடீரென்று எழுந்து விஜபி வரிசைக்கு போய் இல.கணேசனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ரஜினியை பார்த்து பெரிய கும்பிடு போட்டார். பின்னர் கையை உயர்த்தி ஆகாயத்தை காட்டி ஏதோ சொல்ல, ஆடியன்ஸ் பக்கத்திலிருந்து பயங்கர எதிர்ப்புக்குரல்கள். அதை சோ டைமிங்காய் சமாளித்ததுதான் டாப்!

'போனா போறார் வுட்றோங்கோ... பாதிக்கப்பட்ட தமிழக அரசு ஊழியர்னு நினைக்கிறேன்'