கல்யாண சந்தையில் செலவழிப்பதுதான் கெளரவம் என்கிற விதியை யாரும் மாற்றமுடியவில்லை என்று 'சிந்திக்க ஒரு நொடி'யில் ஸ்ரீரங்கம் சொன்ன செய்தியாக 'இந்தியா டுடே'வில் வருத்தப்பட்டிருந்தார் வாஸந்தி. சடங்குகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவதும் வயதானாலும் வரதட்சணை வாங்குவதற்கு தடையில்லை என்பதும் கல்யாணம் என்கிற புனிதமான சங்கதியை கேலிக்கூத்தாக்குகின்றன. வீடியோ எடுப்பது போன்ற ஆடம்பரங்களே வேண்டாமே என்ற வாஸந்தியின் ஆதங்கத்தை முழுமையாக பின்பற்ற முடியாவிட்டாலும் ஒரளவு பின்பற்ற முயற்சி செய்வதில் தப்பில்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். அக்னி வளர்ப்பது, தாலி கட்டுவது போன்றவற்றையும் தவிர்க்கலாமே என்று பிராமண வகுப்பை சேர்ந்த வாஸந்தியால் சொல்ல முடியாது என்று கருப்புச்சட்டைக்காரர்களின் 'உண்மை' இதழ் கிண்டலடித்திருக்கிறது. எனக்கு தெரிந்து பலமுறை வாஸந்தி இந்தியா டுடேவில் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்களை கண்டித்திருக்கிறார். அப்பொதெல்லாம் வாஸந்தியை பாராட்டி ஒரு வார்த்தை எழுதியது கிடையாது 'உண்மை'. தமிழ்நாட்டில் பிராமண வகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு முடநம்பிக்கைகளை பற்றி எழுதவும் பேசவும் தகுதியில்லை என்கிற முடநம்பிக்கை ரொம்ப காலமாகவே இருந்து வருகிறது. எனக்கு 'பிராமண வகுப்பைச் சேர்ந்தவள்' என்கிற அடையாளம் ஒரு சிலுவை மாதிரின்னு ஒரு பேட்டியில் வாஸந்தி சொல்லியிருந்ததில் மறைந்திருக்கும் சோகத்தை இப்போதுதான் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
- ஜெ. ரஜினி ராம்கி