Thursday, February 26, 2004

ரகசியமாய்....

சமீபத்தில் வெளியான புகான் கமிக்ஷனின் அறிக்கை அரசியல் ரீதியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ¥க்கு வெற்றிதான் என்பதில் சந்தேகமில்லை. ஆயுதங்கள் வாங்கியதில் எவ்வித முறைகேடுகளும் இல்லையென்று ஓரேயடியாக ஆளுங்கட்சி மறுத்ததாலும் எதிர்க்கட்சிகள் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னும் தனிநபர் தாக்குதலோடு நிறுத்திக் கொண்டதாலும் இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான குளறுபடிகளை தீர விசாரிக்க யாருக்கும் அக்கறையில்லை என்கிற அவநம்பிக்கைதான் இன்று மிஞ்சி நின்றது.

ஆயதங்கள் வாங்குவதில் ஆயிரெத்தெட்டு விவகாரங்கள் இருப்பது பற்றிய பயங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உதாரணத்துக்கு போபார்ஸ் வழக்கு. ராஜீவ் விடுவிக்கப்பட்டதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என்ற காங்கிரஸின் நினைப்பில் மண். சிபிஜ மேல்முறையீடு செய்வதால் தேர்தல் நேரத்தில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுக்கு நல்லதொரு வாய்ப்பு. போபர்ஸ் சர்ச்சை இன்னும் எத்தனை தேர்தலில் முன்வைக்கப்படுகிறதோ என்கிற மலைப்பு மக்களுக்கு.

நம்முர் நிலைமை இப்படியென்றால் பக்கத்து வீட்டு நிலைமையே ரொம்ப மோசம். பாகிஸ்தானில் பிரதமரின் அறிவியல் ஆலோசகர் என்னும் உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு நிழலக தாதா போன்று நடந்து கொண்ட விஞ்ஞானியை பாகிஸ்தானிய மக்கள் மன்னிக்கும் காட்சியை விட அணு ஆயுத பீதியை கிளப்ப காரணமாகிவிட்ட பாகிஸ்தான் அரசை மட்டும் அமெரிக்கா வழக்கம் போலவே கண்டும் காணாமலிருப்பதுதான் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்.