Wednesday, March 17, 2004

புரட்சிப்புயல் தேர்தல் கரையை கடக்குமா?

வைகோவின் ஒன்றரை ஆண்டு சிறைவாசம் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பிரச்சாரகர் என்கிற அந்தஸ்தை கொடுக்கலாம். ஆனால் விடுதலைப்புலிகளுக்கு கொடுக்கப்படும் ஆதரவு பற்றிய விஷயத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த சமரசத்திற்கும் தயாராக இல்லையென்பதை உணர்ந்து கொள்ளும் யதார்த்த அரசியல்வாதியாக அவர் இருக்கிறாரா என்பதுதான் கேள்வி. இலங்கை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படும் ஆதரவு என்பது வேறு; விடுதலைப்புலிகளுக்கு தரப்படும் ஆதரவு என்பதில் கலைஞரே தெளிவாக இருக்கிறார். மேடைப் பேச்சில் கலைஞரின் உண்மையான வாரிசாக இருக்கும் வைகோ, திமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என்று நிச்சயம் நம்பலாம். இந்த தேர்தலில் வலுவான பிரச்சார பீரங்கியாக பரிணமித்திருக்கும் வைகோவை திராவிட பாராம்பரியத்தின் அடுத்த வாரிசாக அடையாளம் காட்டுவதுதான் கலைஞரின் முக்கியமான அரசியல் பணியாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் திமுகவுக்கும் காங்கிரஸ¥க்கும் இருக்கும் பரஸ்பர புரிதல் மற்ற கூட்டணிக் கட்சிளுடன் முக்கியமாக மதிமுகவுடன் காங்கிரஸ¥க்கு இல்லையென்பது வெளிப்படை. தமிழக கட்சிகள், ஜெயலலிதாவின் ஆணவப் போக்கை எதிர்த்து அணி சேர்த்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமைந்திருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றி சமீபத்திய சென்னை விசிட்டில் சோனியா கருத்து எதுவும் தெரிவிக்காததும் வினோதம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, சமீபத்திய பேட்டியில் காங்கிரஸ் திமுகவுடன் மட்டும்தான் உறவு கொண்டுள்ளது; மதிமுகவுடன் அல்ல என்கிறார் (அது என்ன புதுமாதிரியான கூட்டணியோ?!) எனவே, எந்த வகையிலும் மதிமுக - காங்கிரஸ் இடையேயான சுமூகமான உறவு நிலவ வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

கருணாநிதி மீதும் ஜெயலலிதாவின் மீதும் வைத்திருந்ததை விட தான் பல மடங்கு நம்பிக்கை வைத்திருந்த வாஜ்பாயையும் கனத்த இதயத்துடன் கடுமையாக தாக்குவேன் என்னும் வைகோவின் ஆவேசத்தில் நியாயமிருக்கிறது. வாஜ்பாய் தமிழத்தின் நம்பகமான கூட்டாளியை இழந்திருக்கிறார். நாளை பாஜகவுடனான அதிமுகவின் தேனிலவு முறியும் பட்சத்தில் இந்த அதிரடி அரசியல்வாதி வாஜ்பாய்க்கு தோள் கொடுக்கும் நிலையும் வரக்கூடும். அப்போ பொடா நாயகனின் பேச்சை கேட்டு உணர்ச்சிப்பட்ட தொண்டர்களின் நிலைமை...? பாராவின் 'டாலர் தேச'த்தில் வந்த குருஜி கவுண்டமணியாரின் டயலாக்தான்! "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!"