Wednesday, April 14, 2004

யாருக்கு ஓட்டு?

இரண்டு நாளில் ஏகப்பட்ட விசாரிப்புகள். யாருக்கு ஓட்டு போடப்போறேன்னு! நம்ம ஒருத்தன் ஓட்டு மாத்தி போடறதனால என்ன பெரிய தலைகீழ் மாற்றம் வந்துடப்போவுதுன்னு நினைச்சாலும் நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமுமில்லை. மயிலாடுதுறையை பொறுத்தவரை இன்னமும் அரசியல் தெரியாத மணிசங்கருக்கே என் ஓட்டு! தொகுதியை துபாய் ஆக்குறேன்னு சொன்னது என்னாச்சுங்கிறார் என்னுடைய எம்சிஏ கிளாஸ்மேட் சுவாமிநாதன்! தொகுதியை துபாய் மாதிரி பாலைவனமா ஆக்கிடாம இருந்தாரே அதுக்குத்தான் என் ஓட்டு! எம்.பி தொகுதி நிதியின் மூலம் எங்க தெருவுக்கு வந்திருக்கும் தார் ரோட்டின் வாசனை கூட காற்றில் கரைந்து போகாத நிலையில், மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து சிந்தித்து நான் எடுத்திருக்கும் முடிவு இது.

அடுத்த தேர்தலில் ரிசர்வ் தொகுதி அந்தஸ்து பெற்று ஜாதி மூலாம் பூசப் போகிற மயிலாடுதுறை தொகுதிக்கு அய்யர் எம்பியாக வருவதுதான் நல்லது என்று....நான் நினைக்கிறேன்! நதிநீர் பங்கீடு பிரச்சினையில் பிரதமரின் இயலாமைதான் காரணம்னு சமீபத்தில் சொல்லி ஜோக்கடித்தாலும் காவிரி பிரச்சினை பற்றி இரண்டு முறை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார். இதே மற்றவர்களாக இருக்கும் பட்சத்தில் போயஸ் கார்டனுக்கோ அறிவாலயத்துக்கோ 'செல்'லடித்து பேசலாமா வேண்டாமான்னு பர்மிஷன் கேட்டுக்கொண்டிருப்பார்கள். கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேசும் துணிச்சல் இல்லாவிட்டாலும் பிரச்சினையை நாசூக்காக இங்கிலீஷிலும் இந்தியிலும் பேச இவரைப் போல் ஒரு ஆசாமி காவிரி டெல்டா மாவட்டத்துக்கு தேவை. 1998ல் சுயேட்சையாக நிற்கும்போது காவிரி பிரச்சினையில் பேச்சு வார்த்தை ஒன்றுதான் வழி என்று வெளிப்படையாக பேசியது மட்டுமல்லாமல் பல உபயோகமான திட்டங்களை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்திருக்கிறார். அதற்கு பிந்தைய தேர்தல்களில் 'கூட்டணி தர்மம்' பேச விடாமல் தடுத்தாலும் மனிதர் கட்சிசார்பற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட விஷயமுள்ள ஆசாமி.

எப்படியும் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகிவிட்டது. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து ஆக்டிவ்வாக செயல்படும் திறமையுள்ள இவரை தேர்ந்தெடுப்பதுதான் சரியான முடிவாக இருக்கும். ஆகவே, மறுபடியும் என் ஒட்டு மணிக்குரலுக்கே!

சரி, மற்ற தொகுதிகளைச் சேர்ந்தவனாக நானிருந்தால் என்ன செய்வேன்?

முதலில் ஜாதி & வன்முறை அரசியல் என்று இரட்டைக் குதிரைகள் பூட்டி சவாரி நடத்தும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கிருஷ்ணசாமி கட்சிக்கு நோ சொல்லிவிடலாம்.

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தாலும் மத்தியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு முடிவுகள் இருக்கப் போவது உறுதி. மாநிலக் கட்சிகளுக்கு பதிலாக தேசியக் கட்சிகளை ஆதரிக்கும் பட்சத்தில் குழப்பமாவது கொஞ்சம் குறையும். எனவே பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நமது ஆதரவை கொடுத்து விடலாம்.

பாஜகவுடன் காங்கிரஸ் மோதும் நீலகிரி தொகுதியில் பாஜகவுக்கே ஆதரவு கொடுக்கலாம். (பிரபுவை விட மதன் குறுகிய காலத்தில் அதிகமாகவே சாதித்திருக்கிறார்!) பாஜகவுடன் கம்யூனிஸ்ட் மோதும் நாகர் கோயில் தொகுதியில் கம்யூனிஸ்ட் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் மீது நல்ல அபிப்பிராயமில்லை. மதிமுக சார்பாக போட்டியிடும் நான்கு வேட்பாளர்களில் இரண்டு பேர் மட்டுமே நல்ல தேர்வு.

திமுகவோடு அதிமுக மோதும் 14 தொகுதிகளில்தான் உண்மையான குழப்பம். தஞ்சை பழனிமாணிக்கம், நாகை விஜயன், தென் சென்னை டி.ஆர். பாலு போன்றவர்களுக்கு டபுள் யெஸ் சொல்லலாம்! ஜாதி அரசியலின் நீட்சியான ராதிகா செல்விக்கும் வாரிசு அரசியலுக்கு வாரிசான தயாநிதி மாறனுக்கும் நோ சொல்லிவிடலாம். கட்சியை பார்க்காமல் வேட்பாளரின் தகுதியை பார்க்கும் முறை இந்த தேர்தலில் பரீட்சித்து பார்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. முக்கியமாக வேட்பாளர்களுக்கு குறைந்த பட்சம் ஆங்கிலம் அல்லது இந்தி பேச தெரிந்திருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கலாம். 60 லட்சம் பணம் கட்டி போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு மத்தியில் எளிமையான அதிமுக வேட்பாளர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதிமுக வேட்பாளரின் நம்பகத்தன்மையை விட திமுக வேட்பாளருக்கு மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையும் ஜாஸ்தி. கூட்டிக் கழித்து பார்க்கும்போது மக்கள் ஒரு முடிவுக்கு வருவது அப்படியன்றும் சிரமமான காரியமாக....எனக்கு தோன்றவில்லை!