Saturday, May 15, 2004

சுத்தமான இலக்கியம்?!

வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' ஒரு மசாலா சினிமா என்கிற மாதிரி ஜெயமோகன் கொஞ்ச நாளைக்கு முன்பு தீம்தரிகிடவில் சொல்லியிருந்தது பத்தி எலெக்ஷன் நேரத்து டென்ஷனில் எழுத மறந்துவிட்டேன். நல்ல இலக்கியம் என்பது வெகுஜன ரசிகர்களால் படித்து, புரிந்து, ரசிக்க முடியாத லட்சணத்தில் இருக்கவேண்டும் என்பதை யார் சொல்லி வைத்தார்களோ தெரியவில்லை! ஜே.பி. சாணக்கியாவின் 'படித்துறை' பத்தி ஜெயமோகன் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள எனக்கு ரொம்ப ஆசை.

எந்த ஒரு படைப்பாளியையும் எல்லோரும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என்று யதார்த்தமாய் பேசும் ஜெயமோகன், வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தை சிறந்த நாவல்களில் ஒன்று என்று சொல்வதற்காக வல்லிக்கண்ணனை வம்புக்கு இழுப்பது முரண்பாடு. எந்த துறையாக இருந்தாலும் அனுபவமிக்கவர்கள், தற்கால படைப்புகளின் தரம் குறித்து திருப்தி இல்லையென்றாலும் கூட புதிதாக வரும் படைப்பாளர்களை பாராட்டி அங்கீகாரம் தருவதுதான் நடைமுறை. ஜம்பதுகளிலிருந்து எழுதி வரும் வல்லிக்கண்ணனும் தி.க.சியும் அதே நடைமுறைகளை பின்பற்றுவதில் ஜெயமோகன் குறை காண்பதுதான் புரியவில்லை.

கள்ளிக்காட்டு இதிகாசம், வெகுஜன இதழான ஆனந்த விகடனில் வெளியாகிக்கொண்டிருக்கும் காலத்தில் தனக்கு சாகித்ய அகாதமி கிடைக்கும் என்று வைரமுத்து நம்பியிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால், ஜெயமோகன் சொல்லியிருக்கும் அளவுகோல்களுக்கு ஏற்றவாறு இட்டு நிரப்பி அவார்டு வாங்குமளவுக்கு வைரமுத்துவுக்கு செல்வாக்கிருக்கிறது. வெகுசிலர் மட்டுமே வாசிக்கிறார்கள் என்பது தமிழிலிருக்கும் அவல நிலை என்று சொல்லி தட்டிக்கழிக்க முடியாது. இலக்கியத்தரமுள்ள படைப்புகளை சற்று மாற்றி வெகுஜன ஊடகங்களில் எழுதும்போது அவார்டு கிடைக்காமல் போனாலும் சொல்ல வந்த கருத்துக்கள் சேர வேண்டிய இடத்தை போய்ச் சேரும். தரமான இலக்கியப் படைப்புகள் வெகுஜன பத்திரிக்கைகளில் வருவதற்கு வாய்ப்பில்லை என்கிற கருத்தை தகர்த்தெறிந்திருக்கும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாச'த்தையும் எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்தை'யும் வரவேற்காமலிருப்பதுதான் தமிழ் இலக்கியத்துக்கு நாம் செய்யும் கேடு என்பது என்னுடைய தாழ்வான அபிப்பிராயம்.